Sunday, November 12, 2017

RBI மாமி மெஸ்...


1987.. செம்பூர் ரயிலடியிலிருந்து பத்தே கட்டிடங்கள் தள்ளி ரோட்டோர கேலா, சிக்கூ வண்டிகள் கடந்து கொவாண்டி ரோட்டில் பெயின்ட் உதிர்ந்த கொஞ்சம் பழைய 'திருமூர்த்தி பில்டிங்'கில் தான் எனக்கு ஜாகை. சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட். ஆனால் கிச்சன் நமக்கு இல்லை. வீட்டு ஓனர் மாமி தன் வீட்டு சாமான்களை கிச்சனில் வைத்து பூட்டி வைத்திருந்ததால் சமைக்க முடியாது. முதன்முதலில் வேலைக்கு பம்பாய் வந்த புதிது. சொற்ப சம்பளம். சிக்கனமாக இருக்க வேண்டி மெஸ்ஸில் தான் சாப்பிட முடியும்.
காலை செம்பூரில் ரயில் பிடித்து குர்லா மற்றும் தாதரில் ரயில் மாறி மாடுங்கா கன்செர்னில் எட்டு மணி வாக்கில் நுழைந்து என்னைப்போல ஏழெட்டு பேருடன் வாழை இலை முன் அமர்ந்தால் சுடச்சுட சாதத்தில் சேனை விழுது-தேங்காய்-மிளகு அறச்சு விட்ட திக்கான குழம்பும் ஒரு கூட்டும், சற்றே புளித்த மோரும்.. திவ்யமான சாப்பாடு. அப்பத்திக்கி வயிறு நிரம்பி விடும். ஆனால் அங்கிருந்து வெஸ்டர்ன் ரயில்வே வந்து பாம்பே சென்ட்ரல், கிராண்ட் ரோடு அடுத்து சர்னி ரோட்டில் இறங்கி ஆபிஸ் போய்ச்சேரும்போது லேசாக பசி எடுக்க ஆரம்பிக்கும். சாப்பாட்டு விஷயத்தில் என்னை 'பக்கி.. பக்கி' என அம்மா திட்டுவது அவ்வப்போது நினைவுக்கு வரும்.
ஞாயிறன்று சயான் மணிஸில் உ.கி கறி, வெ.சாம்பார் சாப்பாட்டுக்காக மெஸ் வாசலில் வரிசையில் அரை மணி நேரம் தேவுடு காக்க தயங்கியதேயில்லை. சில சமயம் அவசரத்திற்கு செம்பூர் ஜீவன் மெஸ்ஸே உத்தமம். நெய் தெளித்த ரெண்டு சுக்கா சப்பாத்தி, சின்ன தட்டில் அரிசி, சற்றும் அலுக்காத (மெஸ் நடத்தும் ஷெட்டிக்கு) குந்துரு சப்ஜி (கோவைக்காய் பொறியல்), லேசா கிருஷ்ணாயில் வாசனையோடு தால் எல்லாம் சேர்த்து வெறும் நாலு ரூபாய்க்கு. சினிமா பார்த்து விட்டு லேட்டாக வந்தால் திருநெல்வேலி அண்ணாச்சி ரோட்டுக்கடை இட்லி தோசை பரோட்டா தான்.
அப்போது தான் RBI மாமி மெஸ் பற்றி கேள்விப்பட்டோம். சக நண்பன், பார்க்(BARC)கில் வேலை செய்யும் தக்கலை பத்மநாபன் மற்றும் கம்பெனி செக்ரடரி சந்துரு (Balasubramaniam Chandrasekaran) மூலம் மாமி மெஸ்ஸில் சேர்ந்தேன். அதென்ன RBI மாமி? கொஞ்சம் இருங்க..
காலை 8 மணிக்கு கிளம்பி, ரயிலை பிடிக்க எதிரே கூட்டமாக வரும் தேவ்ளேக்கர், ஜோஷி, தேஷ்பாண்டேக்களை தாண்டி, கட்டிங் சாய் கடைகள், உ.பி பை(h)ய்யாக்களின் மாருதி சைஸ் இஸ்திரி (பெட்டி) கடை, தேவி மந்திர், தொளதொள காக்கி ட்ரவுசர் வெள்ளை சட்டை RSS தாத்தாக்களை கடந்து தெருக்கோடியில் RBI குவார்ட்டர்ஸுக்குள் நுழைவோம். எல்லாம் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட்கள். அங்கே தான் மாமி மெஸ் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதான் RBI மெஸ் மாமியென நாமகரணம்.
முதல் மாடியில் ஒரு ஃப்ளாட். சிறிய ஹால். பத்து பதினைந்து பிரம்மச்சாரிகள் சாப்பிட்டுக்கொட்டிருக்க, கிச்சனிலிருந்து எங்கள் தட்டுக்களை எடுத்து அலம்பி ஹாலில் வந்து அமர்வோம். பெரிய பாத்திரத்தில் இட்லி, பக்கத்தில் சாம்பார், சட்னி இருக்க, சர்.. சர் என பாத்திரங்களை தங்கள் பக்கம் இழுத்து இட்லி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.
மாமாவுக்கு ஃபோர்ட் பகுதியில் ரிசர்வ் வங்கியில் சீனியர் ஸ்டெனோக்ராஃபர் ஜோலி. பாலக்காட்டுக்காரர். சிகரெட் வலித்த தடித்த சுண்டு (உதடு). டிட்வாலா ட்ரெயினில் தினமும் 'பத்தா' (சீட்டு) விளையாடும் பார்ட்டி. வீடு வந்து சேர இரவு பத்து மணியாகும். மாதா மாதம் சம்பளம் அவர் கைக்கு வந்தாலும் ஒரு காசு வீட்டிற்கு வராது. அதனால் தான் மாமி மெஸ் நடத்தும் நிலை.மாமி மற்றும் கல்லூரியில் படிக்கும் அவரது பெண் ராஜி அடுக்களையில் தான் இருப்பார்கள். CA படிக்கும் ஒரே பையன் விக்னேஷ் உள்ளே படுக்கையறையில் படித்துக்கொண்டிக்க அந்த வீட்டில் சதா கூட்டமாக இருக்கும்.
சிலர் ஆர்.பி.ஐ. குடியிருப்பு வளாகத்தில் அந்த மெஸ் நடத்தவதை எதிர்த்து புகார் அளித்தும், மாமி வங்கி மேலிடத்தில் போய் அழுது, மாமாவின் செய்கையால் அவர்கள் இரக்கப்பட்டு மெஸ் நடத்த எழுத்தப்படாத அனுமதி கிடைத்தது.
அங்கே சாப்பிடும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகை. பாலக்காடு கொடுந்திரபள்ளி வெங்கடேசன் லோயர் பரேலில் சிந்தி கம்பெனியில் கிரெடிட் கொண்ட்ரோலராக்கும். 'நம்மட அப்ரூவல் இல்லெயெங்கில்.. (இட்லியை சாவகாசமாக முழுங்கி).. சாதனம் ஒந்நும் டெலிவரி செய்யாம்பற்றில்லா.. அறியோ!'.. என அவன் பேச ஆரம்பித்தால் எல்லோரும் தலை தெறிக்க கை அலம்ப ஓடுவார்கள்.
சாத்தபுரம் ராமேந்திரன்(ராமச்சந்திரன்), கவில வாழப்பில் பாலஷ்ணன்(பால கிருஷ்ணன்), சோமட்டா (சோமன் அண்ணா) என விதவிதமான பெயர்கள். கழுத்து எலும்பு துறுத்திக்கொண்டு படு ஒல்லியான பசங்கள். அத்தற ஆள்கார்ரும் ஸ்டெனோ அல்லது அக்கவுண்டன்ட்டுகள். செட்டாநகர் முருகன் கோவிலில் தினமும் நாராயணீயம் படிப்பவர்கள். அதில் ஒருவன் ரொம்ப பயந்த சுபாவம். ஆயாளு வயசுப்பெண்கள் எதிரில் வந்தால், புள்ளி.. வெட்கத்துடன் பட்டந்நு ரோட்டை க்ராஸ் ச்செய்யும்.
புதிதாக வந்த கிருஷ்ண குமார் நம்பூதிரி சாம்பாரை கரண்டியால் கலக்கி கலக்கி பார்க்க, குறும்புக்கார தஞ்சாவூர் பையன்களுக்கு ஒரே சிரிப்பு. 'தம்பி நம்பூதிரி! உன்னோட நம்பிக்கைய பாராட்ரோம். ஆனா நீ எவ்ளோ கலக்குனாலும் சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும்' என வெடிச்சிரிப்பு சிரிக்க, 'ஆமான்டா! நாளைலேர்ந்து பாண்டி பசங்களுக்கு அதுவும் கிடையாது' என மாமியின் சத்தம் கிச்சனிலிருந்து கேட்கும். எப்போதும் கிண்டல், சிரிப்பு தான் அங்கே. இரவு எவ்வளவு லேட்டாக வந்தாலும் மாமி சாப்பாடு வைத்திருப்பார்கள். முகம் சுளிக்காமல் எல்லோரையைம் பார்த்துக்கொள்வார்கள். பேயிங் கெஸ்ட் என நாலு பேர் அங்கேயே தங்கியிருந்தார்கள்.
எல்லோரும் எட்டரை மணிக்குள் அவசரம் அவசரமாக சுவர் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்கள். காரணம் எட்டரை மணிக்கு பிரேமன் வந்து சாப்பிட உட்கார்ந்தால் அப்புறம் மற்றவர்களுக்கு ஒன்றும் மிஞ்சாது. சிவந்த மேனி, நெடுநெடுவென உயரம், திடகார்த்தமாக ஜிம் பாடியுடன் அடர்த்தியான மீசையுடன் மலையாள நாயகன் போல வருவான் பிரேமன். இட்லி பாத்திரத்தை அப்படியே தட்டில் கவிழ்த்து, அட்ய டயத்தில் பத்து பன்னிரண்டு இட்லிகளை கொட்டி, சாம்பார் சட்னியை பாத்திரத்துடன் தட்டில் சாய்த்து, முழு இட்லியை சாம்பாரில் முக்கி, மாயாபஜார் ரங்காராவ் மாதிரி லபக்கென வாயில் போட்டு விழுங்குவான். சி.சி. சோக்ஸி ஆடிட் ஃபர்மில் வேலை செய்யும் இளம் சார்ட்டர்டு அக்கௌண்டன்ட் அவன். யாரிடமும் அதிகம் பேசாமல் சாப்பிட்டவுடன் இடத்தை காலி செய்பவன்.
மதியத்துக்கும் டப்பா கட்டிக்கொண்டு போகும் பேச்சுலர்கள் உண்டு. இரவு சாப்பாடு ஏழு மணியிலிருந்து ஆரம்பம். அறைச்சு விட்ட சாம்பார், ஒரு கூட்டோ பொறியலோ, ரசம், மோரென முழு சாப்பாட்டிற்கு மாத இறுதியில் மாமி வாங்கும் பணம் ரொம்ப சொற்பம். பண்டிகையன்று முளகூட்டல், எரிசேரி, புளிசேரி, ஓலன், மோர்க்குழம்பு, அடப்பிரதமன், பால் பிரதமன் என வெரைட்டியான சாப்பாடு. தனியாக அதற்கு காசெல்லாம் கிடையாது.
இளம் வயசுப்பையன்கள் அங்கேயே உட்கார்ந்து அரட்டை அடிப்பதால் பையன் விக்னேஷுக்கு இதெல்லாம் இஷ்டமில்லை. மாமியின் பெண் ராஜி அடுக்களையிலேயே கிடப்பள். 'இந்த மெஸ்ஸை நீ எப்ப நிறுத்தப்போறாய்?' என அம்மாவிடம் சண்டை போடுவள்.
அடுத்த வருடம் வேலை மாற்றம், தங்குமிடத்தை செட்டாநகருக்கு மாற்றியதால் நாங்கள் மெஸ்ஸில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம். நாரிமன் பாயின்ட் ஆபிசிலிருந்து கிளம்ப லேட்டானால் சில சமயம் நேராக கால்பாதேவியில் பெருமாளை சேவித்து விட்டு பக்கத்தில் குஜராத்தி மெஸ் போவோம். கையிலும் கொஞ்சம் காசு புழங்க ஆரம்பித்த நேரமது. சுடச்சுட ஃபுல்கா ரொட்டிகளை நம் எதிரே பெரிய்ய்ய்ய தட்டில் ஒருவன் போட.. தட்டா அது? சைக்கிளே நிறுத்தலாம். பின்னாலேயே இன்னொருத்தன் வஞ்சனையில்லாமல் நெய்யை சுழட்டி சுழட்டி ஊற்றுவான். அடுத்து எண்ணெய் சொட்ட உந்தியா, பிந்தியா என சப்ஜிகள், பாசுமதி அரிசி வகையரா.. வயிறு முட்டி மூச்சு வாங்க சிரமப்பட்டு எழும்போது ஜீரா சொட்டச்சொட்ட ஜிலேபியை வைப்பான்கள் படுபாவிகள்.
RBI மாமி மெஸ்ஸை சுத்தமாக மறந்து போனோம். ஒருநாள் மாமிக்கு உடம்பு முடியாமல் சீரியசாகி மெஸ்ஸை தற்காலிகமாக நிறுத்தி ஒரு மாதம் பைகுல்லா ஆஸ்பத்திரியில் இருந்ததாக கேள்விப்பட்டோம். அதைக்கேட்டு அத்தற கேரளா பையன்களும் ரொம்ப வருத்தமாம் (மெஸ் இல்லாததால்). ராமேந்திரன், சோமட்டா எல்லோரும் ஜீவன் மெஸ்ஸுக்கு மாற, பிரேமன் ஓரிரு கிலோ குறைந்து விட்டானாம்.
சில வருடங்கள் கழித்து ஒருநாள் செம்பூர் அகோபில மடம் அருகே மாமியின் பையன் விக்னேஷை தற்செயலாக பார்த்தேன்.
' அண்ணா! சௌக்கியமா' என விஜாரித்தான். சி.ஏ பாஸ் செய்து ஜே.எம். பக்‌ஷி கப்பல் சேவை கம்பெனியில் பணியாம்.
அவனுக்கு பின்னால் கைக்குழந்தையுடன் இளம் பெண். அட! அவன் தங்கை ராஜியா இது? மாமி கஷ்டப்பட்டு பெண்ணுக்கும் கலியாணம் செய்து வைத்து விட்டாளே!
'அம்மா அப்பா எப்பிடி இருக்காங்க? மெஸ் எப்பிடி போகுதுப்பா?'
'மெஸ்ஸெல்லாம் பந்து பண்ணியாச்சுண்ணா. அப்பாவால நிக்க முடியல. கழிஞ்ஞ ஆழ்ச்சி அவருக்கு அப்பென்டிசிட்டிஸ் ஓப்பரேஷன். 'பத்தா' வெளையாட்டையும் விட்டூட்டு ரிடையர்மென்ட் வாங்கிண்டாச்சு'
'நின்னுகிட்டே தானே டிரெய்ன்ல பத்தா வெளையாண்டார்! அதான் விதி ஒரேயடியா வெளையாடி அவரை ஒக்கார வச்சிருச்சு. சரி.. பென்ஷன் வர்தா?'
'உம்.. இப்பல்லாம் பென்ஷனையும் அம்மா கிட்ட கொடுத்துடறார்'
கேட்க சந்தோஷமாக இருந்தது. மாமியின் உழைப்பும் நல்ல மனதும் அந்த குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்துவிட்டது.
ராஜி அநியாயத்துக்கு ஒடிசலாக இருந்தாள். ஆனால் குழந்தை நல்ல புஷ்டி.. என்னை பார்த்து கிக்கி என அழகாக சிரித்தது. சட்டென ப்ரீஃப்கேசை திறந்து மாரி பிஸ்கட் ஒன்றை எடுத்து குழந்தையிடம் நீட்....
வெடுக்கென என் கையிலிருந்து பிடுங்கி முழு பிஸ்கட்டையும் லபக்கென வாயில் போட்டுக்கொண்டது.
'பிராந்து.. பிராந்து! மெல்ல சாப்பிடு.. முழு பிஸ்கட்டையும் அப்பிடியே வாயில போட்டுண்டுட்டாய் நீ..!'
செல்லமாக Delhi Ganesh போல குழந்தையை அதட்டினாள் ராஜி.
'குழந்தை பேரென்னம்மா?'
'அஷ்வின்.. அஷ்வின் பிரேமன்'

No comments:

Post a Comment