Sunday, November 12, 2017

புத்தூர் அக்ரஹாரம்...


திருச்சி புத்தூர் ஸ்ரீனிவாசன் எனது தம்பி விஜயராகவனின் (Vijay Raghavan) பள்ளித்தோழன் (நேஷனல் ஹை ஸ்கூல்).. பாதி நேரம் என் தம்பி அவன் வீட்டிலோ அல்லது அவனுடன் பக்கத்தில் இருக்கும் அருணா தியேட்டரில் இருப்பான்.
புத்தூர் போஸ்ட் ஆபிசை ஒட்டி இடதுபுறம் வாழை இலை, வா.தண்டு, கொடிக்கா வெத்திலை விற்பவர்களுக்கு நடுவே குறுகலான ரோட்டில் நுழைந்தால் சிறிது தூரத்தில் இருபுறம் சுமார் 50 குடித்தனங்களே கொண்ட சின்ன அக்ரஹாரத்தில் 17ஆம் நெம்பர் வீட்டில் ஶ்ரீனிக்கு ஜாகை. எல்லாமே அகண்ட பட்டாசாலை கொண்ட வீடுகள். ஈரமான வாசலை அடுத்து கருங்கல்லால் கட்டப்பட்ட விசாலமான தின்னை, தூண்கள், ரேழி மற்றும் பெரிய கதவுகள் கொண்ட வீடு. கீற்றுப்பந்தல் அல்லது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி காரை பூசப்பட்டு சீராக வேயப்பட்ட மண் ஓடுகள் கொண்ட கூரைகள். கூரைக்குப்பின்னால் இரண்டு அடுக்கு மாடி (படம் பார்க்க)
70 களில் என நினைக்கிறேன்... காலை 6 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு போனால் வாசலில் அங்கங்கே ராலே, ஹெல்குலிஸ் சைக்கிள்கள். வேட்டி, கைலி சகிதம் கையில் காகிதங்களுடன் பத்து பதினைந்து பேர் காத்திருப்பர்.
டானென்று மணி 7 அடிக்க, உதவியாளர் வாசலிலிருக்கும் கருப்பு பெஞ்சை துடைத்து வீட்டினுள்ளே பார்வையை செலுத்த...
"கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்....".
ஓங்கிய குரலில் பாடியபடி நெற்றியில் பெரிய திருமண்ணுடன் ஶ்ரீனிவாசனின் தாத்தா வெளியே வருவார். கிராம முன்சீப்பு அல்லது கர்ணம் என்று ஞாபகம். அப்போதெல்லாம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) போன்ற பதவிகள் இல்லை.
சிறுகாலைப்பொழுதில் ஸ்நானஞ்செய்து பூசை முடித்து வரும் அவரின் மாலியக் கோலமும், மனத்தைப் புத்துணர்வு ஏற்படுத்திப் பொலிவுறச் செய்து அவர் தினம் பாடும் ஆழ்வார்தம் பாசுரங்களும் கேட்க இனிமை. பாசுரங்களை பாடிப் பரப்பும் பசனைக் குழுக்களிலிலும் அவர் இருப்பதால் கீர்த்தி பெற்ற குரல் அவருடையது.
உதவியாளர் நம்மை ஒவ்வொருவராக அழைத்து நாம் கேட்கும் ஜாதி சான்றிதழ் மற்றும் முகவரி சான்றிதழ்களை வித்தியாசமான தமிழில் எழுதுவார். பெருவாரியாக ஹ, ஶ்ரீ,க்ஷ ௺, ௲ போன்ற எழுத்துக்கள்.. 'ஹ'வை சர்ரென இடது பக்கம் இழுப்பார். 'ட'னாவை சர்ரென வலது பக்கம் நீட்டி இழுத்து அதன் முனையில் சுழி போட்டு 'டி' ஆக்குவார்.
மேற்படி சான்றிதழ்களில் ஶ்ரீனியின் தாத்தா நீண்ட நிப் கொண்ட பேனாவை மைப்புட்டியில் தொட்டு அவரும் சர்ர்ரென ரெண்டிழுப்பு இழுத்து கையொப்பமிடுவார். அதற்கு நாம் கொடுக்கும் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய்க்கு அவரே ரெவன்யூ ஸ்டாம்ப் கொடுத்து விடுவார். எக்ஸ்ட்ரா எதுவும் வெட்டவேண்டியதில்லை.
கூட்டம் கலைந்ததும் உள்ளே போய் உடை மாற்றிக்கொண்டு குதிரை வண்டியிலோ அல்லது கன்றுக்குட்டிக்கு சற்றே மூத்த இளம் மாடு பூட்டிய ரேக்ளா வண்டியில் வெளியே கிளம்பி போய் விடுவார். வண்டி சென்ற சில நிமிடங்கள் கழித்து கூட சாணமும் புல்லும் கலந்த இனிய மணம் காற்றில் வீசும்.
அமைதியான, சாணம் தெளித்து கோலமிட்ட, பனி விழும் மார்கழி மாத காலை வேளை. ரம்மியமான சூழல். மனசே லேசாகுங்க! ஆனால் தலை நிமிர்ந்து சுவர்களை மட்டும் பார்க்கக்கூடாது. காரணம்.. அந்த தெருவின் இரு புற சுவர்களிலும் எப்போதும் கரிய வண்ணத்தில் கிறுக்கல்கள். 'கடவுள் இல்லை.. இல்லவே இல்லை... கடவுளை நம்புகிறவன் முட்டாள்' போன்ற வாசகங்கள்.
'பக்கத்துல உறையூர் பாண்ட மங்கலத்துல இருந்து 7, 8 பேரோட ஒருத்தன் வருவான். எப்ப வருவானுங்கன்னே தெரியாது. ராத்திரி 12 மணிக்கு மேல நாம அசந்து தூங்கரச்சே, இல்லன்னா வெள்ளன 4 மணிக்கு முன்ன வந்து கண்டத எழுதிட்டு ஒடீடுவானுங்க. நாம போய் தட்டி கேட்டா அடிக்க வருவான்.. ஆயி அம்மாவ திட்டுவான்'. ஶ்ரீனிவாசன் சலித்துக்கொண்டான்.
'அவனுங்களுக்கு ஒரு நாள் வச்சிருக்கம்!' சொல்லும்போதே ஸ்ரீநிவாசன் முகத்தில் கோபம். அந்த 'ஒரு நாளும்' வந்தது. திடகார்த்தமான அக்ராஹாரத்து இளைஞர்கள் 7, 8 பேர் மொட்டை மாடியில் முதல் நாள் இரவு மறைந்து கொண்டார்கள். சிலர் திண்ணையை ஒட்டியுள்ள சந்தில் ஒளிந்து கொள்ள, எதிர்பார்த்தபடியே அன்று இரவு 2 மணிக்கு அந்த கூட்டம் வந்து மீண்டும் சுவர்களில் எழுத ஆரம்பித்தார்கள். அடுத்த நிமிடம் மாடியில் இருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. கூட்டம் நிலை குலைந்தது. சந்தில் ஒளிந்திருந்த இளைஞர்கள் வெளியே ஓடி வந்து அவர்களை நையப்புடைத்தார்கள். கல்லடி பட்டு அடி வாங்கிய கூட்டம் அலறிக்கொண்டு ஓடியது.
அதற்குப்பின் அந்த சுவர்களில் எந்த இழிவு வாசகங்களும் இல்லாமல் வெறும் 'நாமிருவர்.. நமக்கிருவர்' மற்றும் 'அளவான குடும்பம்..வளமான வாழ்வு' மட்டும் தான்.
'இந்த அக்ரஹாரத்துல இருக்கறவாள்ளாம் நெறைய நிலம் வச்சிருக்கறவங்க. இந்த எளம் வயசுப்பசங்க வயலு வரப்புல எறங்குனா கிட்டத்தட்ட 12 மணி நேரம் அலுக்காமெ வேல செய்வானுங்க. அடிதடின்னு எறங்குனா ஆளையே அலாக்கா தூக்கி வீசீடுவானுங்க. நாங்க பயந்துக்கிட்டு இருந்ததெல்லாம் அந்தக்காலம்..' சொல்லும்போதே ஸ்ரீனிவாசனின் முகத்தில் பெருமிதம்.
நேஷனல் கல்லூரியில் தம்பி விஜயராகவனுடன் B.comமுடித்தவுடன் ஸ்ரீனிவாசன் சிறிதுகாலம் வேலை தேடிக்கொண்டிருந்தான். தம்பி MBA முடித்து டாட்டா குழுமத்தில் சில வருடங்கள் இருந்து பின் மஸ்கட்டில் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கிறான். அவ்வப்போது ஸ்ரீனிவாசனைப்பற்றி நிறைய பேசுவோம். வருடமொருமுறை திருச்சி போகும்போது ஸ்ரீனிவாசனை தம்பி பார்க்கத்தவறுவதில்லை.
2 வருடங்கள் முன்பு நானும் ஸ்ரீனிவாசனை திருச்சியில் பார்த்தேன். எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து கிடைத்த மத்திய அரசுப்பணி. கண்டோன்மென்ட் அருகில் அகில இந்திய வானொலியில் 25 வருடங்களாக இருக்கிறான். மழிக்கப்படாத 2 நாள் தாடி, சிகப்புக்கரை ஜரிகை வேட்டியுடன் அதே மலர்ந்த முகம். முன் வழுக்கை லேசாக ஆரம்பம். A.I.R கான்டீன் கூட்டிப்போனான்.
காபியை ஓரம் வைத்துவிட்டு பட்னம் பக்கடாவை புட்டு வாயில் போட்டுக்கொண்டு.. 'மாசம் அம்பத்தஞ்சாயிரம் பக்கம் சம்பளம் வர்றது. வயலூர் போற வழீல சீனிவாசா நகர் தாண்டி இருந்த ஒன்ற க்ரவுண்டு நெலத்தில பெருசா வீடு கட்டிண்டேன். அல்லித்துரை நெலத்துலர்ந்து அரிசி, பருப்பு, வருஷ சாமான் போக்குவரத்து எல்லாம் வந்துடறது. பொண்ணையும் கட்டிக்குடுத்தாச்சு. நாங்க ரெண்டு பேர் தான். இப்பசத்திக்கி இந்த ஸ்கூட்டில தான் சுத்தறேன்.' குடுமியை அவிழ்த்து பின் தலையை லேசாக சொறிந்துகொண்டு, கீழ்த்தாடையை முன்னுக்கிழுத்து ஆ(ற்)றிய காப்பியை கவிழ்த்தான்.
மத்தியக்கிழக்கு நாட்டில் அல்லாடிக்கொண்டிருக்கும் நமக்கு ஸ்ரீனிவாசனை பார்க்க கொஞ்சம் பொறாமை தான். நமக்கு மிகவும் வேண்டிய நண்பன் என்பதால் சந்தோசம் கூட. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போகுமுன் ஸ்ரீநிவாசனுக்கு ஒரு போன் செய்து விட்டு போனால் போதும். அவனது சகோதரர் ரமேஷ் குருக்கள் நம்மை பெருமாள் கிட்டக்க தரிசனம் கிடைக்க வைப்பார். சாமிக்கு சார்த்திய பெரிய மாலை மற்றும் பிரசாதம் எல்லாம் கொடுத்து கூட இருந்து வழியனுப்பி வைப்பார்.
விஷயத்துக்கு வருகிறேன்.. சென்ற வருடம் இறந்து போன என் அப்பாவின் பேரிலிருந்து BSNL டெலிபோன் லைனை அம்மா பேருக்கு மாற்ற முயற்சி செய்தேன். ஹெட் போஸ்டாபிஸ் பின்னால் BSNL அலுவலகத்தில் பெண் மேலாளர் ஒருவரை பார்த்தேன். கூட என் 81 வயது அம்மா. Legal heir certificate அது இது என்று ஒரு லிஸ்ட்டே கேட்டார். அப்பாவின் death certificate , ரேஷன் கார்டு எல்லாம் காண்பித்தும் அதன் நகல்களை உடனே அட்டெஸ்ட் செய்து கொண்டுவரும்படி சொன்னார். மணி மாலை நாலு அப்போதே. ஆபிஸ் மூடுமுன் உடனே எங்கே அட்டெஸ்ட் செய்வது?
சட்டென ஸ்ரீனிவாசன் நினைவுக்கு வந்தான். அடுத்த 15 நிமிடங்களில் நான் அம்மாவுடன் ஆட்டோவில் கன்டோன்மென்ட் அகில இந்திய வானொலி வளாகம் போய் சேர்ந்தேன். அதே மலர்ந்த முகத்துடன் ஸ்ரீனிவாசன் வரவேற்றான். 'மாடில ஸ்டேஷன் டைரக்டர்ட்ட போலாம். அவர் அட்டஸ்ட் பண்ணிடுவார்' என கூட்டிப்போனான்.
நிலைய இயக்குனர் பனிவான மனிதர். எங்களை வரவேற்று இருக்கையில் அமரச்சொல்லி, நாம் கொண்டு வந்த தஸ்தாவேஜுக்களை பார்க்க குனிந்தார். தலை முடியும் மீசையும் கடந்த வாரம் பெற்ற கருப்பு வர்ணத்தை லேசாக இழக்க ஆரம்பித்திருந்தன.
'சார்... நான் சொன்னேனில்ல.. பஹ்ரைன்.. என் ப்ரெண்டு.. ' என்ற ஸ்ரீனிவாசனை பேச விடாமல் எல்லா பேப்பர்களிலும் கையொப்பமிட்டார் நி.இ. ஸ்ரீநிவாசனுக்கு அங்கே நல்ல மரியாதை என்பது தெரிந்தது. அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம். வந்த வேலை சுருக்க முடிந்த திருப்தி எனக்கு.
மிகவும் நெருங்கிய நண்பர்களுடன் பேசும்போது லேசாக எமோஷனல் ஆகி விடும் நான் அதன் வெளிப்பாடாக அவர்கள் தோளில் கை வைத்தோ, கைகளை பிடித்துக்கொண்டோ பேசுவது வழக்கம்.
'விஜைய்ய கேட்டதா சொல்லுங்க ஸ்ரீதர்' என்ற ஸ்ரீனிவாசனிடம் 'ரொம்ப சந்தோஷம் ஸ்ரீனி... உங்க வேலை, அலுவலகம், உங்க பாஸ், உள்ளூர் செல்வாக்கு எல்லாம் பார்க்க சந்தோஷமா இருக்கு... இன்னம் அப்பிடியே இருக்கீங்க.. தலைல கூட ஜாஸ்தி நரை இல்ல' என்றேன்.. மிக அடக்கத்துடன் ஸ்ரீனிவாசன் வெட்கம் கலந்து முறுவலித்தான்.
விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது 'ஞாபகம் இருக்கா.. ஸ்ரீனி.? புத்தூர்ல உங்க அக்ரஹாரம் சுவத்தில கிறுக்கினவங்கள கல்லால் அடிச்சி விரட்டுனது இன்னம் நா மறக்கல..' சத்தமாக சிரித்தபடியே அவன் தோளை தட்டிவிட்டு நடக்க எத்தனித்த என்னை இழுத்து நிறுத்திய ஸ்ரீனிவாசன்....
முகத்துக்கு மிக அருகில் வந்து... 'சத்தம் போட்டு சொல்லாதீங்க ஸ்ரீதர்..கல்லடி வாங்கிட்டு ஒடுனவர்(ன்) தான் அந்த ஸ்டேஷன் டைரக்டர் செங்'கல்'வராயன்..!' குறும்புடன் கண்ணடித்தபடி நகர்ந்தான் ஶ்ரீனிவாசன்.

No comments:

Post a Comment