Sunday, November 12, 2017

எலி

'Hey! there is a rat in my room' கத்தியபடி ஓடி வந்தான் பெரியவன். மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் எலும்பு முறிவுடன் அதிர்ஷ்ட வசமாக தப்பி, ஓய்வெடுக்க பெங்களூரிலிருந்து பஹ்ரைன் வந்திருக்கிறான்.
'கரெக்ட்! நேத்திக்கி ஏதோ குறுக்கே ஓடுன மாதிரி இருந்தது. அப்ப நம்ம வீட்ல எலி இருக்கு போல'- மனைவி உஷாவும் சொல்ல..
வாட்ச்மேன் சஹதேவ்வை அழைத்தோம். பகல் வாட்ச்மேன் அவன். ஆபத்பாந்தவன் மாதிரி எல்லாவற்றுக்கும் பதட்டமில்லாமல் ஓடி வருவான். காஸ் சிலிண்டர் வாங்கி வைப்பது, பூ பறித்து கொடுப்பது, டியூப்லைட், ஷவர் மாற்றுவது போக மற்ற நேரங்களில் கைப்பேசி, கைராலி, ஏசியாநெட் தான்.
நேரே உள்ளே வந்து வந்து கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்தான். 'ஒந்நும் காணுந்நில்லா! ராத்திரி பொறத்தே வரும்.. பின்னே நோக்காம்' என நகர்ந்தான்.
பெரியவன் அதற்குள் ஒரு அட்டை டப்பாவை கொண்டு வந்து கட்டிலுக்கு கீழே வைத்தான். டப்பாவின் மூடியை இரண்டு பக்கமும் உட்பக்கம் சரிந்த மாதிரி மடக்கி வைத்து, உள்ளே ஏதோ பதார்த்தத்தை வைத்து, எலி டப்பாவின் மேற்பரப்பில் ஏறினால் சரிந்து உள்ளே விழும் ஆனால் வெளியே வர முடியாது என விளக்கமும் அளிக்க அவனை 'அடப்போடா!' என எ(ல்)லி.. சாரி.. எள்ளி நகையாடினோம்.
பொதுவாக எலியை மசால்வடை வைத்து தானே எலிப்பொறியில் பிடிப்பார்கள்!. 70 களில் திருச்சி தென்னூர் பென்ஷனர் கார தெருவில் எங்கள் வீட்டில் எலிகள் நடமாட்டம் அதிகம். அதுவும் பெருச்சாளிகள். கம்பளி மாதிரி தோல். கிச்சன் கதவை மூடிக்கொண்டு கையில் கம்புடன் அப்பா உள்ளே எலியை டமார் டமார் என அடிக்க அண்டா குண்டா தேக்சா எல்லாம் உருளும் சத்தம். பெரிய அடுக்களை அது. பத்து பெண்கள் வட்டமாக கும்மியடித்து ஆடலாம். அதனால் எலி அப்பாவை கபடி ஆட வைக்கும். கதவை லேசாக திறந்து நானும் என் தம்பியும் உள்ளே புகுந்த சில நிமிடங்களில் மறுபடியும் டமார் டமார் சத்தம். அது எலிக்கல்ல. எங்களுக்கு. அடி வாங்கிய படி வெளியே ஓடி வருவோம்.
மூலக்கொல்லை தெரு மளிகைக்கடை கணேசன் எலியை தேங்கா சில்லு வைத்து பொறியில் பிடிப்பான். உடனே கவனமாக கோணிப்பையின் வாயில் எலிப்பொறியை நுழைத்து சாக்கிரதையாக எலியை கொட்டி, பட்டாபிராம பிள்ளை தெருவே அதிர ரோட்டில் சாத்தி, பின் செத்த எலியை கடாசுவான். உண்மையிலே அவன் கில்லாடி! ரிஎலி!
பொதுவாக எல்லா எலிகளும் நைட் டூட்டி தான் பார்க்கும். அதனால் எலிதாக... ச்சீ... எளிதாக நம் கண்ணில் படுவதில்லை. வயல்வெளிகளில் எலிகள் வளை கட்டிக்கொண்டு குடியிருக்கும். இரவில் இரை தேடும் எலிகள் பகலில் பகைவர்களிடமிருந்து பாதுகொள்ள வளையை திறக்காமல் மண்ணால் அடைத்து வைத்திருக்குமாம். எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது உயிர் தப்ப வளையிலிருந்து மேல் பக்கமாக மண்ணை திறந்துகொண்டு ஓடி பிழைத்துக் கொள்ளுமாம். (தகவல்: வளையிலிருந்து.. மன்னிக்க.. வலையில் இருந்து!)
மாலை எங்கள் ஆபிஸ்பாய் லத்தீஃப் எலிப்பொறி கொண்டு வர, பெரியவன் அதை எடுத்து பார்த்தான். இரும்புப்பொறி. கூர்மையான முட்களால் மாட்டும் எலி உடனே இரத்தம் சிந்தி செத்துப்போகும். எலியைக்கொன்று விடும் எலிப்பொறியெல்லாம் வேண்டாமென அவன் சொல்லிவிட, லத்தீஃப் உடனே மரப்பெட்டி பொறியை கொண்டு வந்து வைத்துவிட்டுப்போனான். பிடித்தவுடன் அதை உயிருடன் வெளியே விட்டுவிட வேண்டுமாம். பெரியவன் தீர்க்கமாக சொன்னான்.
அடுத்ததாக வாட்ச்மேன் சஹதேவ் மனாமாவிலிருத்து ஏதோ பசை உருண்டை கொண்டு வந்தான். அது தான் எலியை பிடிக்குமாம். ஒரு பிளாஸ்டிக் தட்டில் அந்த பசையை வைக்க, திரும்ப அதை பிய்த்து எடுக்க முடியவில்லை. கட்டிலுக்கடியில் அதை தள்ளினான். குனிந்து கட்டிலின் அடிப்பாகம் பார்த்தேன். பெரியவன் வைத்த அட்டை டப்பா, லத்தீஃப் வைத்த எலிப்பொறி மற்றும் சஹதேவ்வின் பசை உருண்டை என அந்த இடமே திருச்சி சத்திரம் பஸ்டாண்டு மாதிரி இருந்தது.
அந்த பசை எலியை ஈர்க்குமாம். எலி வந்து அந்த வஸ்துவை ருசி பார்க்கும்போது அதன் காலோ உடலோ பசையில் பச்சக்கென ஒட்டிக்கொள்ளுமாம். ஆனால் எலி சாகாதாம்.
பொதுவாக எலி சுவற்றை ஒட்டி தான் ஓடுமாம். அறையின் குறுக்கே ஓடாதாம். அங்கங்கே துணி வைத்து தடுத்திருந்தான் பையன்.
ஆச்சு.. டெய்(எ)லி பையன் ரூமுக்கு போகும்போதெல்லாம் நானோ, மனைவி உஷாவோ குனிந்து கட்டிலுக்கடியில் பார்ப்போம். இரண்டு நாட்களாகியும் எலி வந்த பாடில்லை. இரவில் மட்டும் கரக் கரக் சத்தம் வருவதாக பெரியவன் சொல்லிக்கொண்டிருந்தான். மரப்பொறியிலும் அட்டை டப்பாவிலும் எலிக்கான பண்டத்தையும் மாற்றினான்.
நேற்று ஆபிஸ் முடிந்து வீட்டின் வாசலில் காரை நிறுத்தும்போது சஹதேவ் அந்த பசைத்தட்டுடன் 'எலி'கன்ட்டாக வெளியே வந்தான். பசையுடன் ஒட்டி படுத்தவாக்கில் எலி.
'எலி கிட்டி...' முகம் நிறைய சந்தோஷம் அவனுக்கு.
'அய்யய்யோ செத்து கித்து போய்டலையே'- பயம் எனக்கு. பெரியவன் வேறு கண்டிப்பாக சொல்லியிருந்தான் எலியை உயிரோடு தான் பிடிக்க வேண்டுமென.
'அல்ல.. மரிச்சிட்டில்லா.. ஜீவனுண்டு'- சஹதேவ் எலியை விரலால் தட்டினான்.
மிகவும் சின்ன எலி..பார்க்க அழகாக துறுதுறுவென இருந்தது. அழகான உருண்டை கண்கள். பிங்க் நிற குட்டிக்கால்கள். வயிற்றுப்பகுதியும் பிங்க் நிறம். கொஞ்சம் சோர்ந்திருந்தது. ஆனால் இன்ட்(எ)லிஜென்ட்! . உடம்பில் மொசமொசவென அதிகம் அடர்த்தியில்லாத ரோமம்.
பெரியவன் ஆசையாக அதை தொட்டுப்பார்க்க, எலி பயத்துடன் துள்ளியது லேசாக கீச் கீச் சத்தத்துடன். பசையை தட்டிலிருந்து எடுப்பதே கஷ்டமாக இருந்தது. பசை உருண்டையை கட்டிப்பிடித்தபடி எலி பரிதாபமாக படுத்துக்கிடந்தது.
'என்னப்பா சஹதேவ்? இப்ப எப்பிடி எலியை பசையிலிருந்து பிரிச்சி எடுப்பே?' என கேட்டேன். பெரியவன் முகத்திலும் கவலை.
'ஒந்நுந்செய்யாம் பற்றில்லா சாரே'- சஹதேவ் ரூமில் சென்ற வாரம் எட்டு இடத்தில் பசையுடன் எலிகளை பிடித்தானாம். 'ஈ எலிய தூக்கிக்களையனும்' என்றவனை தடுத்து..
'ஐயோ! பாவம்பா! வேணாம். பசையை அப்பிடியே எலி உடம்புல இருந்து பிச்சு எடுக்க முடியாதா' - பெரியவன் சோகத்துடன் கேட்டான்.
'அல்ல.. எலியிண்ட தோலும் வரும்'- கேட்கவே பகீரென்றது.
அந்த சின்ன எலி கண்களை பெரிதாக திறந்துகொண்டு ஒருக்களித்து படுத்து கிடக்க வயிறு மட்டும் சீராக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது.
'பேடிச்சுப்போயி!'- சொல்லிக்கொண்டே எலியுடன் கிளம்பிப்போன சஹதேவ் நேராக குப்பைத்தொட்டியில் அந்த குட்டி எலியை உயிரோடு தூக்கியெறிந்தான்.
எலிப்பொறி மரப்பெட்டியை லத்தீஃப் திரும்ப எடுத்துக்கொண்டு போனான்.
சட்டென வீட்டில் ஒரு வித மௌனம் நிலவியது. எலியின் அழகான முகம் அப்பப்ப வந்து போனது.
பி.கு 1: இன்று காலை பெரியவன் அறையில் அவன் வைத்திருந்த அட்டை டப்பா அப்படியே இருந்தது. ஆனால் கவிழ்த்து வைத்திருந்தான். எலி வந்தாலும் இனி மாட்டாதாம்.
பி.கு 2: அநியாயமாக சின்ன எலி ஒன்றை கொன்றதற்கு பிராயச்சித்தமாக, ஓரிரு மணி நேரம் உட்கார்ந்து எலியின் பென்சில் ஓவியம் ஒன்று இதோ!..

No comments:

Post a Comment