Sunday, April 2, 2017

நேத்து ராத்திரி.. யம்மா!


சென்ற விடுமுறையின் போது ஒரு நாள் மதியம் மூன்று மணிக்கு காரில் என் சகோதரி குடும்பத்தாருடன் விராலிமலை கிளம்பினோம். சுப்ரமணியபுரத்திலிருந்து கிளம்பி டோல்கேட்டில் பெட்ரோல் போட்டு சர்க்யூட் ஹவுஸ் காலனி கடந்தபோது மனம் குதூகலமானது. 80களில் பல வருடங்கள் அந்த காலனியில் குடியிருந்தவர்கள் நாங்கள்.
உடனே சடாரென வண்டியை காலனிக்குள் திருப்பினேன். 'டேய் ஶ்ரீதர்! என்னாச்சு!' என என் சகோதரி கேட்க, '35 வருஷம் கழிச்சு இங்க வர்றோமே.. நாம இருந்த ஃப்ளாட்ட பாக்கலாம்' என அந்த பழைய கட்டிடம் முன் வண்டியை நிறுத்தி கீழே இறங்கினேன். நாளை நமதே எம்ஜியார் மாதிரி அந்த இடிந்த கட்டிடத்தை அப்படியே சுற்றிப்பார்க்க, உடனே ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்....
1981... நான் சி.ஏ சேர்ந்த புதிது. தென்னூரிலிருந்து அப்போது தான் அங்கே குடிபெயர்ந்தோம். அரசு குடியிருப்பு காலனி அது. பெரும்பாலும் தாலுகா ஆபிஸ், மாவட்ட கருவூலம், கமர்ஷியல் டாக்ஸ் போன்ற துறைகளின் அலுவலர்கள். நான், என் தம்பி ரவி ( Vijay Raghavan ), கீழ் வீட்டில் BE படித்துக்கொண்டிருந்த 2 பையன்கள், ACTO பையன் ஶ்ரீனிவாசன் என எங்கள் நண்பர் குழாம். லுங்கியை கனுக்காலுக்கு சற்று மேலே உயர்த்திக்கட்டி காலனியைச்சுற்றி வலம் வருவோம்.
அன்றாட பிரச்சனைகளை தீர்க்க காலனி குடியிருப்போர் நலச்சங்கம் இருந்தது. அதன் தலைவர் ரெவென்யூ இஸ்பெக்டர் குமாரசாமி. செயலாளர் புத்தூர் பெரியாஸ்பத்திரி கம்பௌண்டர் தணிகாசலம். அடுத்த வருடம் தலைவராவதற்கு துடித்தவர். பொருளாளர், விளையாட்டு செயலாளர் போன்ற இன்னபிற பதவிகளுடன் சங்கம் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
தினமும் மாடியில் தொட்டிகளில் தண்ணீர் திறந்து விடுவது, பன்றிகளை விரட்டுவது, பூங்கா பராமரிப்பு, ரோடு ரிப்பேர், இரவில் திருட்டு போன்ற பிரச்சனைகளை விவாதிக்க சங்கத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு போவோம். பாதி நேரம் வாக்குவாதம்.. கூச்சல் தான்.
'நல்ல தண்ணியே வர்றதில்ல.. இதுக்கு ஒரு வழி பண்ணனும்' என செக்ரடரி எடுத்துறைக்க, உடனே தலைவர் 'குடி தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்பார்.
'கழிவுநீர் பைப் ஒடஞ்சி பில்டிங்கை சுத்தி தண்ணி தேங்கிக்கெடக்குது' என தாலுகா ஆபிஸ் கண்ணபிரான் சொன்னதும் தலைவர் உடனே 'கழிவு நீர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்பார்.
'அடிக்கடி பவர்கட் ஆகுதே'- குடிநீர் வாரியம் பக்தவத்சலம்
'மின் வெட்டை சரிசெய்ய ஒரு கரண்ட் கட் குழு அமைத்து நடவடிக்கை எடுப்போம்.'
செக்ரடரி சூடானார்.. 'எல்லாத்துக்கும் குழு அமைச்சிட்டா பிரச்னை தீர்த்துடுமா? இனி குழு அமைக்க பக்கத்து செங்குளம் காலனில இருந்து தான் ஆளுங்கள கூட்டிக்கிட்டு வரனும்'
'இத்தனை குழு தேவையா இல்லயானு முடிவு செய்ய ஒரு தனி குழு அமைக்கனும் தலிவரே!' என யாரோ அங்கலாய்த்து, கூட்டம் கொல்லென சிரிக்க, கோபத்தில் தலைவர் முகம் நடுங்கியது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்.
ஒருநாள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக இருந்து காலனியில் எங்கே நடந்தது எனத்தெரியவில்லை. அன்று மதியம் பாலக்கரை வழியாக போய்க்கொண்டிருந்த போது, கொளத்தூர் பிரியாணி ஹோட்டலிலிருந்து சங்க நிர்வாகிகள் சீரகம் மென்றபடி வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.
அடுத்தடுத்த மாதங்களில் இரவில் திருட்டு போன்ற பிரச்னைகள் அதிகமாகி குடியிருப்பவர்கள் அந்த சங்க நிர்வாகிகளை கூப்பிட்டு 'என்ன தான் பண்றீங்க' எனக்கேட்க, தலைவர் 'அப்பிரச்னைக்கு உடனே 'திருட்டு'க்குழு அமைக்கப்படும்' என அறிவிக்க கரகாட்டக்காரன் செந்தில் மேல் பாயும் கவுண்டமணி ( அது தாண்ணே இது!) மாதிரி மக்கள் பொங்கியெழுந்தார்கள்.
அடுத்த வாரம் தலைவர் அமைத்த இரவு ரோந்துக்குழு கையில் டார்ச் மற்றும் தடிகளுடன் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் காலனியை சுற்றி வந்தார்கள். தூரத்தில் வேப்பமரத்தின் பின்னால் புதர் அருகே ஒரு உருவம் தரையில் உட்கார்ந்திருந்தது. 'மாட்னான்டா திருடன்!' என ரோந்துக்குழு சட்டென சுதாரித்து சத்தமில்லாமல் தடியுடன் புதர்ப்பக்கம் பார்த்து உட்கார்ந்திருந்த உருவத்தை மெல்ல நெருங்கி தடியால் படீரென பின் பக்கம் பார்த்து சாத்த, 'ஐயோ டேய்! நான் செக்ரட்டரிடா கபோதி! பாத்ரூம்ல தண்ணி வராமெ வெளிய போய்க்கிட்ருக்கேன்!' என அலற, ஒரே கலாட்டா. 'நா அப்பவே அடிச்சிக்கிட்டேன்.. இத்தினி குழு அமைச்சா ஒரு எழவும் புரியமாட்டேங்குது!' என பின்பக்கம் தேய்த்தபடி செக்ரடரி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
உலகநாதபுரத்தைச்சேர்ந்தவர்கள் தான் அந்த திருட்டு கும்பல் என்றும், ஒருநாள் அவர்கள் ரோந்துக்குழுவை தாக்க முற்படலாமென்றும் பேசிக்கொண்டார்கள்.
அடுத்த வாரம் இரவு ரோந்துக்குழுவை ஊக்குவிக்க தலைவர், செக்ரடரி போன்றோர் ஃப்ளாஸ்க்கில் டீ மற்றும் பிஸ்கட்டுடன் இரவு இரண்டு மணிக்கு வெளியே கிளம்பி ரோந்துக்குழுவை நெருங்க, எதிர் திசையிலிருந்து ஆட்டோவில் தடிகளுடன் மற்றொரு 'குழு' வந்திறங்கியது.
மறுநாள் காலை தலைவர் வீட்டில் ஒரே அமளி. காலனி மக்கள் அங்கே கூடினார்கள். ஹாலில் மூன்று நாற்காலிகளில் தலைவர், செக்ரடரி போன்றோர் வலியால் முனகியபடி உட்கார்ந்திருக்க, அவர்களது மனைவிமார்கள் பின்னால் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.. முதுகில்.
யாரோ 'நேத்து ராத்திரி...' என சொல்ல ஆரம்பிக்க 'யம்மா..!' என அந்த மூன்று பேரும் வலியால் கத்தினார்கள்..
'கொஞ்சம் தள்ளுங்கப்பா.. அந்த ஃபேனைப்போடுங்க!' என சத்தங்கள். தலைவரை அடையாளமே தெரியவில்லை. முகம் அங்கங்கே உருண்டையாக வீங்கி சில கோணத்தில் நாகையா, பக்கவாட்டில் பாலையா மாதிரி தெரிந்தார். உருட்டுக்கட்டை பதிவு தாயக்கட்டம் போல அழகாக முதுகில் தெரிந்தது.
திடீரென 'கு$ப்ள்#உ*€' என ஏதோ சத்தம்.
'தலைவர் என்னமோ சொல்றார்' என யாரோ சொல்ல... 'என்ன சொல்றீங்க தலைவரே?' ...
தலைவர் 'இ@$ள்ப்ஓ.. கள்&@%€ஃ'...' என மறுபடியும் சொல்ல, .. 'அட சரியாகத்தான் சொல்லித்தொலைங்களேன்' என அவரது மனைவி சலித்துக்கொண்டார்.
'கு$ள்$&@.. கி@ட்05?@#%'..
'குளுரடிக்கிதே கிட்ட வா..கிட்ட வா' பாட்டு மாதிரியே இருக்கே'
'அட.. காமெடி பண்ணாம கொஞ்சம் அவர் என்ன சொல்றாருன்னு கேளுங்கையா!'
கஷ்டப்பட்டு நிறுத்தி நிதானமாக சொன்னார் தலைவர்: 'இந்த தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க ஒரு தனி குழு அமைக்கப்படும்'
பாதி பேர் அங்கேயே உருட்டுக்கட்டை தேடினார்கள்..

No comments:

Post a Comment