Monday, June 1, 2015

ஜெர்மனி...

ஒன்றரை வருடம் முன்பு பணி நிமித்தம் ஜெர்மனி செல்ல வேண்டியிருந்தது. நம் பஹ்ரைன் நண்பர் ஷ்யாமின் மனைவி பத்மாவின் சகோதரி ராஜி அங்கே வசிப்பதால் உடனே ஜெர்மனிக்கு போன் போட்டு நான் வருவதையும் சொல்லி விட்டார் பத்மா.
ஜெர்மனியின் டஸ்ஸெல்டார்ஃப் (dusseldorf) விமான நிலையத்தில் இறங்கினேன். நினைவிருக்கிறதா? சென்ற வாரம் அந்த நகரை நோக்கிப்பறந்த விமானத்தின் விமானிதான், தானும் தற்கொலை செய்து கொண்டு 149 சக பயணிகளையும் அநியாயமாக கொன்றான்.
சென்னை, பம்பாய் விமான நிலையங்களைப்போல் பிரம்மாண்டமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் அமைதியாக இருந்தது டஸ்ஸெல்டார்ஃப் விமான நிலையம்.. பாஸ்போர்ட் கன்ட்ரோல் சோதனையில் 'என்ன விஷயமா இங்க வந்தீங்க?' போன்ற சம்பிரதாயமான கேள்விகளுக்குப்பின் பெட்டிகளை எடுக்க ட்ராலியை தேடினேன். அதற்கு 2 யுரோக்கள் என்பதால் இஷ்டத்திற்கு அங்கங்கே ட்ராலிகளை பார்க்க முடியவில்லை. வெளியே வந்து டாக்ஸி பிடித்து கொலோன் (cologne) நகரில் நான் தங்கும் விடுதியின் விலாசத்தை ஓட்டுனர் GPSஇல் பதித்து திரை யில் தோன்றிய சாலை வரைபடம் பார்த்து வண்டி ஓட்டினார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலான பயணம் அது. புதிய இடம். ஜெர்மன் பாஷை தெரியாது. துருக்கிய நாட்டு கிருத்துவனான ஓட்டுனருக்கு ஓரளவு தான் ஆங்கிலம் தெரிந்தது. . வழி நெடுகிலும் மரங்களும், ஆலைகளும் தான். ஜெர்மனி தாதுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மோட்டார் வாகனங்கள் தயாரிப்பிலும் முன்னனி. பணக்கார நாடுகள் வரிசையில் ஐரோப்பாவில் முதலிடமும் உலகளவில் இரண்டாவது இடத்தையும் வகிக்கிறதாம். மாலை சுமார் 6 மணிக்கு விடுதி போய்ச்சேர்ந்தேன்.
வரவேற்பறையில் ஸ்டெஃபி கிராஃப் மாதிரி பெண்ணொருத்தி இருந்தாள். ' நீங்க தான் சீத்தாபதி ஸ்ரீதரா?' என வரவேற்று ஓரிரு நிமிடங்களில் அறையை எனக்கு ஒதுக்கி கொடுத்தாள். 'பெட்டிய மேல அனுப்சிடுங்க' என்ற என்னை வினோதமாக பார்த்து 'பெட்டிய நீங்களே தான் அண்ணே எடுத்துக்கனும்' என புன்னகையுடன் சொல்ல நானே லிஃப்ட்டில் கொண்டு சென்றேன்.
பயணத்திற்கு சில நாட்கள் முன் வலையில் (booking.com) புகுந்து ஜெர்மானிய விடுதிகள் அறை ஒன்றை புக் செய்த மறு நிமிடம் 'டொய்ங்' என்று கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்துவிட்டது 'உன் க்ரெடிட் கார்டில் இத்தினி பைசா ஸ்வாஹா' என. 'நோ ரீஃபன்டு' வேறெயாம். பொதுவாக ஐரோப்பா விடுதிகளில் அறை வாடகை மிக அதிகம்.அதே காசுக்கு வளைகுடா நாடுகளில் நான்கு நட்சத்திர விடுதியில் தங்கலாம்.
பால்கனியுடன் கூடிய சிறிய அறை. உள்ளே நுழைந்ததும் ஒரு சிங்க், குளிர்சாதனப்பெட்டி, இஸ்திரி பெட்டி, மற்றும் மேசை நாற்காலி. மேசையின் மேல் ஒரு வரைப்படம். அதில் 'திடீர்னு இங்க நெருப்பு பத்திக்கிச்சுன்னா எந்தப் பக்கம் ஓடனும், படிக்கட்டு எங்க இருக்கு, இப்ப நீ எங்க இருக்க..' போன்ற விபரங்கள்.
அதுசரி...படுக்கை எங்கேயென தேடியபோதுதான் கவனித்தேன், அறையின் மூலையில் ஐந்தே படிகள் கொண்ட மர ஏணியில் ஏறி பரண் மேல் படுக்கையாம். படு செங்குத்தாக இருந்த அந்த ஏணியில் எவ்வளவு சாக்கிரதையாக ஏறினாலும் (இறங்கினாலும்) சறுக்கி தாடை உடைய நிறைய சாத்தியங்கள். கைப்பேசியை முடுக்கி வைஃபை தொடர்புகொள்ள வைஃபையை ஆன் செய்தபோது கவனித்தேன், அவளிடமிருந்து நான்கு மிஸ்டு கால்கள், 'போய்ச்சேர்ந்தியா'...'சாப்ட்டியா' போன்ற குறுஞ்செய்திகள். உடனே அவளிடம் வைபரில் 'நா ஜாக்கிரதையாத்தான் இருக்கேன்'னு நாலைந்து முறை பதில் சொல்லிவிட்டு விடுதியை விட்டு வெளியே வந்தேன்.
கொலோன் நகரின் ஆளரவமற்ற சாலையின் இரு புறமும் மஞ்சள் நிற இலைகளுடன் மரங்கள். மரத்திலிருந்து உதிர்ந்த இலைச்சறுகுகள் ரோட்டில். கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தன. தூரத்தில் ஒரு கியாஸ்க் (kiosk) தெரிய, அங்கே போனேன். செம்பட்டை முடியுடன் லெதர் ஜீன்ஸ்/ஜாக்கெட்டுடன் இருந்த நடுத்தர வயதுப்பெண் எது கேட்டாலும் 'நே' (இல்லை) என பதில். நான் கேட்ட டெலிபோன் சிப் இல்லையா அல்லது அவளுக்கு நான் கேட்டது புரியவில்லையாவென தெரியவில்லை. தேங்க்யூ சொன்னது தான் தாமதம், உடனே முறுவலித்து, அடுத்த நொடி பக்கத்தில் சாம்பல் ட்ரேயில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை தன் உதடுகளால் கவ்வி, பக்பக்கென ரெண்டிழுப்பு இழுத்து, கீழுதட்டை சுழித்து அசோகன் மாதிரி பக்கவாட்டில் புகையை ஊதித்தள்ளி உடையை சரிசெய்துகொண்டாள் அந்த யுவதி. 'நீ எந்த ஊரு' எனவும் என்னை விஜாரித்தாள். அவளுக்கு கூடமாட உதவி செய்ய இருபது வயது மதிக்கத்தக்க சிவந்த இளைஞனும் பக்கத்தில் இருந்தான். அவளுக்கு தம்பியாம். சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் வாயிலும் சிகரெட். நல்ல வூரு!..
கொஞ்ச தூரம் போய் ஒரு அங்காடியில் பழங்கள், யோகர்ட், கிரீப், பான் கேக் போன்றவை வாங்கிய பின் பெரிய வட்ட வடிவ பன் ஒன்று சாப்பிட ஆசையாக இருக்கவே, 'அந்த பன்ல சீஸ் இருக்கா' வென கேட்டேன். 'ஓ இருக்கே... கூடவே பன்றி இறைச்சியும் இருக்கு' என்றார் பெரியவர். 'டூத் பேஸ்ட்ல உப்பா'? ...வெளியே வந்துவிட்டேன்.
திரும்பவும் விடுதிக்கு வரும்போது அந்த சாலைமுழுவதும் பளிச்சென விளக்குகள். வரிசையாக கடைகள் மெதுவாக திறக்க ஆரம்பிக்க ஜெர்மனியின் இரவு வாழ்க்கை ஆரம்பமாகிக்கொண்டிருந்தது. 'அப்போதேகெ' எனப்படும் மருந்தகங்கள், சின்ன சின்ன உணவு மற்றும் சாராயவிடுதிகள்.. லெபனீஸ் துரித உணவகங்கள், சுற்றும் இரும்புக்கம்பியில் சொருகப்பட்டு நெறுப்பில் சுடப்படும்
சிக்கன் கிரில்லர்கள், கபாப் கடைகள், ரோட்டில் மேசையை விரித்து புகை மண்டலத்தின் நடுவே அங்கங்கே பெரிய மொந்தையில் நுரையுடன் பியர் (beer) பருகும் ஜெர்மன் பெருசுகள்..பக்கத்தில் சன்னமான கிளாசில் சிகப்பு வொய்ன் பருகும் கனமான ஆன்ட்டிகள், அடுத்து ஜிகுஜிகு விளக்குகளுடன் 'ஸெக்ஸ் ஷாப்' என்ற பெயர்ப்பலகையில் அவ்வூர்ப்பெண்டிரின் 'ஷேம் ஷேம் பப்பி ஷேம் படங்கள், சின்னச்சின்ன டாக்ஸிகள், ரோட்டோரத்தில் வறுத்த செஸ்ட்நட் விற்கும் வண்டிகள்...சப்தமின்றி திடீரென குறுக்கே ஓடும் ட்ராம்கள், பாதாள ரயில் நிலையங்கள்...
திரும்ப விடுதி வந்தவுடன் கொண்டு வந்த பக்ஷ்ணங்களை சாப்பிட்டு முடித்ததும் நல்ல உறக்கம். மறு நாள் காலை தான் கவனித்தேன், கழிவறையில் தண்ணீர்க்குழாயே இல்லை. மூலையில் பேப்பர் ரோல் மட்டுமே இருந்தது. அய்யிய்யே! இதெல்லாம் நமக்கு பழக்கமில்லையே! கையில் நகம் வேறு வெட்டவில்லை. அப்போது தான் மனைவி ஞாபகம் வந்தது, இது மாதிரி ஐரோப்பிய நகரங்களுக்கு போகும்போது எதற்காக அவள் முதல் நாளே நாலைந்து தண்ணீர் பாட்டில்கள் (குறிப்பாக ஒரு லிட்டர் பாட்டில்கள்) வாங்கி விடுவாளென்று. சரி..கழிவறையையே பயன்படுத்தாமல் ஓரிரண்டு நாள் சமாளிக்கலாமாவென யோசித்து, அதுவும் கஷ்டமென்பதால் அந்த ஐடியாவையும் 'துடைத்து எறிந்தேன்'. விடுதியின் இலவச காலை உணவு சாப்பிட்டு டாக்சி பிடித்து ஆபிஸ் வேலையாக ஓடி அடுத்த நான்கு நாட்களும் போனதே தெரியவில்லை.
அன்று மாலை பத்மாவின் சகோதரி ராஜி போன் செய்து தன் பையன் அனூப்புடன் விடுதிக்கு வந்துவிட்டார். வரவேற்பில் நான் பணம் கட்டி முடிக்கும் முன் ராஜியும், அனூப்பும் என் பெட்டிகளை அவர்களே எடுத்து காரில் வைக்க, மிகவும் சங்கோஜமாகிப்போனது எனக்கு.
நேராக டஸ்ஸெல்டார்ஃப் பயணம். நெடுஞ்சாலையில் மற்ற கார்களை சர்சர்ரென்று முந்தி, தன் சிறிய பென்ஸ் காரை அநாயசமாக 120க்கு மேல் ராஜி ஓட்ட, பின்னாலிருந்த அனூப் ஜெர்மன் பாஷையில் அம்மாவுடன் சம்சாரித்துக்கொண்டு வந்தான். உலகின் எந்த நாட்டில் வசித்தாலும் பிள்ளைகள் எதாவது கேட்கும்போது அம்மாவின் பதில் 'முதல்லே நீ ஒழுங்கா படி' தான் போலும். அன்றே என் மனைவியும் பையனும் பஹ்ரைனிலிருந்து வந்திறங்க அவர்களை அழைத்துக்கொண்டு மற்றொரு விடுதில் எங்களை இறக்கி விட்டு ராஜி விடை பெற்றுக்கொண்டார்.
மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் அவரது இனிமையான பாலக்காட்டுத்தமிழை மிகவும் ரசித்தோம். பரதம் மற்றும் பாட்டு கற்றுக்கொடுக்கும் டீச்சர் வேறு. பையன் அனூப் அப்பாவின் கார்பன் காப்பி. பெண்ணுக்கு கலியாணம் முடித்து அவள் இந்தியாவில் இருக்கிறாளாம். அவளையும் உடனே ஸ்கைப்பில் கூப்பிட்டுக்காட்டி எங்களை அறிமுகப்படுத்திய ராஜி ஒரு சகலகலாவல்லி. அவரது உதவியை மறக்க முடியாது.
அடுத்த இரு நாட்கள் கொலோன் கதீட்ரல், ரைன் நதியில் படகு சவாரி, டஸ்ஸெல்டார்ஃப் நகர சுற்றுலா என நிறைய சுற்றினோம். இந்தியர்கள் கொண்டாடும் துர்கா பூஜா வைபவம் பார்த்தோம். ராஜி வீட்டில் இரவு உணவு.. அவர்களது வீடு மிக அருமை. மூன்று தளங்கள். குடியிருந்த கோவில் எம்ஜிஆரை பார்க்கப்போவது போல படிக்கட்டில் இறங்கி தரையின் கீழ் ஒரு தளம். பின் பக்க தோட்டத்தில் ஆப்பிள் மரம் என வித்தியாசமான வீடு.
ஜெர்மனியில் எல்லா சௌகரியங்களுடன் இருக்கிறார்களாம். குழந்தைகளின் இலவச பள்ளி, கல்லூரி படிப்பு, வேலை வாய்ப்பு, இலவச மருத்துவம், குறைந்த வட்டியில் வீடு என அரசாங்கத்தின் நிறைய சலுகைகள்.
மறுநாள் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிக் (Zurich) நகருக்கு பயணம். மற்ற நாடுகள் போலில்லாமல் விமான நிலையத்தில் குடியேற்றம் பகுதி வரை ராஜி கூடவே இருந்தார். எங்கே போனாலும் வீச்சு வீச்சென ஜெர்மன் பாஷையில் பொளந்து கட்டும் அவரை வியப்புடன் பார்த்து விடைபெற்றுக்கொண்டோம். 'இந்த நாட்டில் நாங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கோம். அரசாங்கமும் மக்களை நல்லா பாத்துக்கறாங்க, வேளைப்பளு அதிகமில்லை.' என ஜெர்மனிக்கு புகழாரம்.
சென்ற வாரம் சக பிரயாணிகள் 149 பேருடன் விமானத்தை ஆல்ப்ஸ் மலையில் மோதிய அந்த விமானி ஓட்டிய லுஃப்தான்ஸாவின் அதே 'ஜெர்மன் விங்ஸ்' விமானத்தில் தான் நாங்களும் பறந்தோம். விமானம் விழுந்து நொருங்கிய அதே ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேலே எங்களது ஸ்விட்சர்லாந்து பயணம். பின்னால் இப்படி ஒரு துர்சம்பவம் நடக்குமென அப்போது எதிர் பார்த்தோமா?
உலகப்புகழ் வாய்ந்த ஜெர்மன் சர்க்கரை, நாங்கள் பஹ்ரைனில் விநியோகிக்க இறக்குமதி செய்யும் பொருட்களில் ஒன்று. தரகு நிறுவனம் மூலம் இறக்குமதி செய்கிறோம். துபாயில் அலுவலகம் வைத்துக்கொண்டு அடிக்கடி ஜெர்மனி பயணம் செய்யும் அதன் ஜெர்மானிய இயக்குநரிடம் ' நீங்க பேசாம துபாய்ல செட்டில் ஆகலாமே' எனக்கேட்டதற்கு பட்டென அவர் சொன்ன பதில்: 'அடப்போய்யா.. வளைகுடா நாட்ல என்ன இருக்கு? நீங்க வரி கட்டாமெ சம்பாரிச்சு சேத்து வெச்சு என்ன பண்ணுவீங்கன்னு எனக்குத்தெரியாதா? லாரி டிரைவர் ராஜாக்கண்ணு கணக்கா 4 சக்கர வாகனம் ( 4 wheel drive) வாங்கி ஓட்டுவீங்க. வாழ்நாள் முழுக்க உங்க புள்ளைங்களுக்காக கஷ்டப்பட்டு காசு சேத்து வெச்சு ஊருக்கு அனுப்புவீங்க. இந்தியாவுல வீடு, நெலம் வாங்குவீங்க..பேங்க்ல காசு போடுவீங்க. 60 வயசுல ரிட்டையர் ஆகி இந்தியா போனதும் செலவுக்கு பேங்க் பேலன்ஸை தொட மனசு வராது உங்களுக்கு. குழந்தைகளுக்கு மட்டும் ஆடம்பரமா கல்யாணம் பண்ணிட்டு திரும்பவும் மத்த செலவுக்கு காசில்லைன்னு புலம்புவீங்க..நீங்க செஞ்சதையெல்லாம் நாளைக்கி உங்க புள்ளையும் செய்வான். நாங்க அப்பிடி இல்ல. இன்னிக்கி செத்தா நாளைக்கி பீர் இல்ல. சம்பாதிக்கும்போது அவசியத்துக்கு மட்டும் செலவு செய்வோம். அதிகம் சேமிக்க முடியாம அரசாங்கத்துக்கு நிறைய வரி கட்டுவோம். ஆனா ரிடையர் ஆனதுக்கப்பறம் சாகற வரைக்கும் திரும்ப அரசாங்கம் தான் எங்களை பாத்துக்கும்.'
அது சரி.. அப்போ அந்த விமானிக்கு என்ன பிரச்சனை? அப்படியே இருந்தாலும் தன்னுடைய மன உளைச்சலுக்கு மற்ற அப்பாவி 149 பயணிகளை கொன்றவனுக்கு மன்னிப்பே கிடையாது.

2 comments:

  1. சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்.... அருமை

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார்.. சாரி உங்க கமென்ட்டை கவனிக்கலை.. இப்பத்தான் பார்த்தேன்..🙏🙏

    ReplyDelete