Tuesday, June 2, 2015

தன்னு மன்னுவை மணக்கிறார்(ஹிந்தி).. (Tannu weds Mannu- returns)


கடந்த பத்து நாட்களாக இந்த படத்தை பார்த்துவிடவேண்டுமென மனைவி உஷா சொல்லிக்கொண்டே இருந்தாலும், நேற்று தான் நேரம் கிடைத்தது. க்வின் படத்திற்குப்பிறகு அவள் கங்கனா ரனவத்தின் விசிறி. மதிய சாப்பாட்டிற்குப்பிறகு சின்னவனை சல்மானியா பகுதியில் டியூஷனுக்கு இறக்கிவிட்டபின் நாங்கள் 'தனா மால்' சினிப்ளெக்ஸ் உள்ளே போனபோது தியேட்டரில் எங்களையும் சேர்த்து மொத்தமே பத்து பேர் தான். இனி படம்...
லண்டனில் காதல் திருமணம் செய்துகொண்ட தன்னு(கங்கனா)வும் மன்னு(மாதவன்)வும் நான்கே வருடங்களில் தங்கள் உறவில் விரிசல் ஏற்பட உள்ளூர் மனநோய் மருத்துவரிடம் போய் முறையிட்டு, அங்கேயும் சத்தமாக சண்டையும் போட்டு, கங்கனா அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, முடிவில் மாதவன் காச்மூச்சென கத்த, அவருக்குத்தான் பிரச்னையென குண்டுக்கட்டாக அவரை தூக்கிக்கொண்டுபோய் அங்கேயே அனுமதிக்கப்படுகிறார். உடனே கங்கனா இந்தியா வந்து விவாகரத்து நோட்டீஸ் கொடுக்க வழக்கறிஞரை நாடுகிறார்.
ஆரம்பித்து பத்தே நிமிடத்தில் இவ்வளவு களேபரமும் நடக்க, படம் சூடு பிடிக்கிறது. கணவன் மனைவி சண்டையென்றால் அப்படியே ஒன்றிப்போய் தான் படம் பார்க்கிறார்கள் ஜனங்கள். படம் பார்ப்பவர்கள் முகத்தில் தான் என்னவொரு மலர்ச்சி! படம் முழுவதும் தியேட்டரில் ஒரே சிரிப்பலை.. அவ்வளவு காமெடி.
கதையின் சம்பவங்கள் பெரும்பாலும் லக்னௌ, கான்பூர் மற்றும் டெல்லி போன்ற இடங்களில். குறுகிய சந்துக்குள் மிகப்பெரிய வீடுகள். சைக்கிள், டோங்கா மற்றும் சேத்தக் ஸ்கூட்டர்கள், மொட்டை மாடியில் சார்ப்பாய்(கயிற்றுக்கட்டில்), மோடா வகையராக்கள், சுடிதார் அணிந்து மாடியில் பட்டம் விடும் இளம் பெண்கள், முக்காடிட்ட வயதான தாதி மற்றும் மௌசிகள், பழைய கங்கா ஜமுனா படம் திலிப் குமார், கண்ஹையா லால் போல சைடு பாக்கெட், வி-கட் பனியன் முன்ஷி மற்றும் பெருசுகள். திரையில் நம் கண் முன் அப்படியே வட இந்தியா...
1977 முதல் 80 வரை பட்டப்படிப்புக்காக நான் அலகாபாத்தில் என் மூத்த சகோதரி வீட்டிலிருந்தேன். அலகாபாத்திலிருந்து வாரனாசி, லக்னௌ, கான்பூர் நாங்கள் அடிக்கடி போகுமிடங்கள். கங்கனா விவாகரத்துக்காக கச்சேரி (கோர்ட்) பகுதி சென்றபோது அந்த சீனில் நான் படத்தோடு ஒன்றி அப்படியே 1979க்குப்போய்விட்டேன் என்பது உண்மை.
அலகாபாத் கச்சேரி வளாகத்திற்குள் நான் நிறைய முறை போனதுண்டு. நிறைய வக்கீல்கள் க்ளையன்ட்டுகளுக்காக திறந்தவெளியில் உட்கார்ந்திருக்க..பான்வாலாக்கள், சாய்வாலாக்கள் சுற்றி வர வியாபாரம் களைகட்டும். ப்ரெட்டை கடலைமாவில் முக்கியெடுத்து சுடச்சுட பஜியா ஒரு பக்கம், மீட்டா திக்கா சட்னியுடன் சமோசா கச்சோரி, காலா நமக் தண்ணீர் கலந்த பானி பூரி, கட்டித்தயிருடன் ஜிலேபி, இந்தப்பக்கம் பன்னீர் தெளித்த டன்டா பெனாரஸ் லஸ்ஸி, வேகவைத்த உ.கிழங்கை மசித்து சூடான கல்லில் தட்டி வஞ்சனையில்லாமல் நெய்யை கொட்டி வறுத்த ஆலு டிக்கியாவை ஆல இலையில் வைத்து பிசைந்து அதன் மேலே இம்லி கா ரஸ், தஹி, சாட் பொடிகளை தூவி மரக்குச்சி ஸ்பூனை நட்டு அவன் கொடுப்பதை வாங்க கூட்டமோ கூட்டம்..
இங்கும் அங்கும் ஓடும் நோட்டரி பப்ளிக்குகள்..உள்ளே நடக்கும் நீதிபதியின் விசாரனையோ வேடிக்கையாக இருக்கும். ஒருமுறை கோர்ட்டுக்கு ஏதோ ஒரு ஜோலியாக வந்து நானும் என் மாமாவும் உள்ளே போய் நீதி விசாரணையை வேடிக்கை பார்த்தோம். 'கணம் கோர்ட்டார் அவர்களே' போன்ற சினிமா டைப் வசனங்களோ, நடந்துகொண்டே சரட்டென செந்தாமரை மாதிரி ஸ்டைலாக திரும்பி 'ஆகவே மை லார்ட்' என முடிக்கும் லாயர்களோ கிடையாது. அதெல்லாம் சினிமாவில் மட்டுமே..பப்ளிக் பிராசிகியூட்டர் வாய் கொள்ளாத அளவு பான் போட்டுக்கொண்டு எச்சில் வழியாமலிருக்க தலையை கொஞ்சம் உயர்த்தியபடி பேசி, விசாரனையின் நடுவே அந்தப்பக்கம் போய் சுவற்று மூலையில் துப்பி விட்டு வருவார். சில லாயர்கள் விசாரனையின் நடுவே பொட்டலத்தை திறந்து 'பான்'ஐ ஆசையுடன் வாய்க்குள் தினிப்பதுடன் எதிரே உள்ள நீதிபதிக்கே கொடுப்பதுமுண்டு. நீதிபதியும் அங்கே அவ்வளவு உயரத்திலெல்லாம் உட்கார்ந்திருந்திருக்க மாட்டார்..ஆமாம்.
மன்னிக்கவும்.. அலகாபாத் கோர்ட் வளாகம் மாதிரியே இப்படத்திலும் இருப்பதால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நம் கதையையும் புகுத்தி விட்டேன்.
சரி..,படத்துக்கு வருவோம். இதற்குள் மாதவனும் லண்டனிலிருந்து வருகிறார். கணவன் மனைவி தனித்தனியாக வாழ்கிறார்கள். ஒருநாள்
மாதவன் அசப்பில் கங்கனா சாயலில் (இரட்டை வேடம்) இருக்கும் ஒரு விளையாட்டு வீராங்கனையை (குஸும்) சந்திக்கிறார். காதல் கொண்டு இருவரும் மணந்துகொள்ள முடிவு செய்கிறார்கள். பாப் முடி மற்றும் லேசாக தெற்றுப்பல்லுடன் வரும் குஸும் (கங்கனா-2) பஞ்சாபி போன்ற ஹரியான்வி மொழியில் பேசி அசத்துகிறார். ஆண் போல அசைந்து நடந்து கலக்குகிறார். கொஞ்சம் முரட்டு சுபாவமும் கூட. 'வோ தேக் கபூத்தர்...' ( அங்க பார் புறா..) என அவர் சொல்ல, எதிரே இருப்பவர் முகத்தை அந்தப்பக்கம் திருப்பியதும் ஒரே அப்பு...இந்த 'வோ தேக் கபூத்தர்' காலர் டியூனாகி வட இந்தியாவை கலக்குகிறதாம்.
மாதவன் இந்த மாதிரி ரோல்கள் எப்போதுமே அட்டகாசமாக நடிப்பார். படத்தில் நடுநடுவே தான் வருகிறார். நடிக்கிறார். அழுகிறார். இன்னமும் இளமையுடன் அழகாக இருக்கிறார். சொல்வதற்கும் இதற்கு மேல் ஒன்றுமில்லை.
படம் முழுக்க கங்கனா.. கங்கனா...கங்கனா தான்.நடிப்பில் அம்மனி பிச்சு உதறுகிறார். படு ஸ்டைலாக டான்ஸ் ஆடுகிறார். அசால்ட்டாக வசனம் பேசுகிறார். முனுக்கென்றால் மூக்கை சிந்தி அழகாக நடிக்கிறார். நண்பனின் கையிலிருந்து மாஞ்சா நூலை சடக்கென பறித்து மேலே இன்னொரு பத்தங்கை( பட்டம்) அறுத்து விடுகிறார். நேரம் கிடைக்கும்போது தண்ணியும் அடிக்கிறார். உரித்துப்போட்ட வாழை மட்டை மாதிரி படு ஒல்லி.. சைஸ் ஜீரோவில் புடவையுடனும், அத்லெட்டாக ஜீன்ஸ் டி-ஷர்ட்டுடனும் அசத்துகிறார். ஜெயம் ரவியுடன் தமிழில் தாம்தூம் படத்தில் பனங்கிழங்கு மாதிரி ஒல்லி பிச்சானாக வந்த இவரா இப்படி பட்டையை கிளப்புகிறார்?
படம் சக்கை போடு போடுகிறது. சுனிதி சௌஹானின் 'மூவ் ஆன்' பாடல் பஹ்ரைன் ரேடியோ எஃப். எம்.இல் தினம் இரண்டு முறை. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் சிறந்த வசனங்கள். வட இந்தியாவின் சுத்தமான ஹிந்தியில் நிறைய நகைச்சுவை வசனங்கள். நடுநடுவே ஹிந்தி கெட்ட வார்த்தைகளையும் கங்கனா சொல்லத்தவறவில்லை.
30 கோடி பட்ஜெட் படம் முதல் வாரத்திலேயே 90 கோடி வசூலை தாண்டி, இன்றோடு ஒன்பது நாட்களில் 100 கோடியையும் தாண்டியதாம்.
கடைசி சீன் மிகவும் அருமை. தன்னுவும் மன்னுவும் ஒன்று சேர்கிறார்களா என்பது நீங்களே தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியது. அவசரமாக டி.வி.டி வாங்க கடைக்கு ஓடாமல் தியேட்டரில் இரண்டரை மணி நேரம் சிரித்துக்கொண்டே பார்த்தால் மனசு லேசாவது நிச்சயம்...
கங்கனாவுக்கு இதிலும் அவார்டு கிட்டுமாம்...

No comments:

Post a Comment