Monday, February 21, 2022

வயிறு பெருகி வருமோ!

 1994.. பஹ்ரைன் ஸ்வாகத் உணவகம்...

குறுகலான சூக் (souq) பகுதியில் மனாமா கிருஷ்ணங்கோயிலுக்கு எதிரே ஸ்வாகத் ரெஸ்டுரன்ட். மொட்டை மாடியில் தண்ணி தொட்டி மேலே ஏறுவது போல குறுகலான படிக்கட்டுகளில் ஏறினால் முதல் தளம். நாலைந்து குடும்பங்கள் பாவ்பாஜி, மிசால் பாவ் சாப்பிட்டுக் கொண்டிருக்க, கன்னட இளைஞன் நம் முன் வைக்கும் வடா பாவ், மசாலா சாய் 250 ஃபில்ஸ் (அப்போதைய இந்திய ரூபாயில் 25 ரூபாய்)
அதே பகுதியில் பிரம்மச்சாரி இளைஞர்கள் படையெடுக்கும் நம்பூதிரி மெஸ். சபரிமலைக்கு மாலை போட்டு காவி உடையில் வேட்டியை மடித்து கட்டி நிற்கும் கடை ஓனர் நம்பூதிரி. அரைத்துவிட்ட சாம்பார், முளகூட்டன், மோர் குழம்பு, கூட்டு, பொறியல் இத்யாதி. திவ்யமான சாப்பாடு. நம்பூதிரி ஒரு தினார் (100 ரூபாய்) வாங்கி சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொள்வார். வாசலில் 555 சிகரெட் பாக்கெட்டை கிழித்து சிகரெட்டுகள் மற்றும் வத்தி குச்சிகளை பரத்தி வைத்திருப்பார். அது இலவசம். குப் குப்பென்று புகை விட்டபடியே கிளம்பும் மக்கள்.
90களில் பஹ்ரைனில் ஒரே தமிழக உணவகம் என்று சொல்லக்கூடிய நஃபூரா ஹோட்டல். மங்கிய ஒளியில் கமகமவென சாம்பார், ரவா தோசை மணம் திருவல்லிக்கேணி சைடோஜியை நினைவூட்டும். கல்லாவில் லட்டு, ஜாங்கிரி, கொழுத்த குலாப் ஜாமூன், மிக்சர் பார்க்கும்போதே வாங்க ஆவல் எழும். எல்லா பழங்களையும் போட்டு பஞ்சாமிர்த சுவையுடன் பழ ஜாம்+ அடை வெள்ளியன்று மட்டும்.
மணாமாவில் மற்றொரு பகுதியில் 50 வருட குஜராத்தி ரெஸ்டாரன்ட். மராமத்து செய்யாமல் இன்னும் பழைய மேசை நாற்காலிகள். எண்ணெயில் புரண்டு படுக்கும் ஆலு சப்ஜி, கடி, பச்சை சட்னி வகைகள், கேரட்/சர்க்கரை/க.மாவு கலந்த ஏதோ ஒரு பதார்த், சன்னா மசாலா, உந்தியா, கேலாபாஜி.. நிமிடத்திற்கொரு தரம் கீ (ghee) சுடச்சுட ஃபுல்க்கா ரொட்டிகள் தட்டில் விழும். 'பினா கீ..' சொன்னால் சுக்கா ரோட்டி. 'ராத்திரிக்கி நானெல்லாம் ஸ்ட்ரிக்ட்டா மூனு சப்பாத்தி தான்' என பீற்றிக்கொள்ளும் ஆசாமிகள் கூட சத்தம் போடாமல் எட்டு ஒன்பது ரொட்டிகளை மொசுக்குவார்கள். 'பஸ் கரோ பையா!' என வெட்கத்துடன் பெண்கள் சொல்ல சொல்ல 'ஏக் ஔர் ரோட்டி லேலோ பெஹன்ஜி!' என கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பார்கள். அடுத்து சூடான மூங்தால் கிச்சடி, அதன் மேல் மொண்டு ஊற்றப்படும் நெய். கடியுடன் கிச்சடி தொண்டையில் வழுக்கிக்கொண்டு இறங்க, சடுதியில் நமக்கு ட்ரைக்ளிசரைடு எகிறும். கல்லாவில் கச்சோரி, டோக்ளா, பாக்கர்வாடி, சேவ், தூத்பேடா, மலாய் பர்ஃபி, ஏலம் தூவிய மஞ்சள் வர்ண ஜிலேபி. பாவிகள்.. அநியாயத்துக்கு நம் பசியை மறுபடியும் தூண்டுவார்கள்.
மைசூர் ரெஸ்ட்ருவண்ட்..
இடிந்து விழுவது போல ஒரு பழைய கட்டிடத்தின் ஒரு மூலையில் இந்த உணவகம். தாடி வைத்த முதலாளி அஜய் மங்களூர்க்காரர் கல்லாவில். பக்கத்தில் சர்ச் மாஸ் முடிந்து வரும் கூட்டம் எல்லோருக்கும் தளும்ப தளும்ப சாம்பார் இட்லி, வடா சாம்பார். சீரகம் தெளித்து உளுந்து கலக்காத பச்சரிசி மாவில் வேகவைத்து செய்யப்பட்ட வெள்ளை நிற நீர் தோசை + தேங்காய் சட்னி ஓரிரு மணியில் கதம்.
அதே பகுதியில் சென்ட்ரல் கபே விருந்தாவன் என மேலும் இரண்டு உடுப்பி ஹோட்டல்கள். வறுத்த பிரெட் துண்டுகள் மிதக்க தக்காளி சூப், முந்திரி பாதாம் அரைத்துவிட்டு எல்லா பச்ச காய்கறிகளும் போட்ட பச்சைக்கலரில் விஜிடபிள் ஹரியாலி, தந்தூரி ரோட்டி, பட்டர் நான். எத்தினி ஐட்டம் செய்தாலும் கபளீகரம் செய்ய மக்கள் தயார்.
சற்றுத்தள்ளி ஆஷாஸ் எனப்படும் மற்றொரு ச்சாட் கடை. வடநாட்டு பையாஜி என்று அழைக்கப்படும் மாஸ்டருக்காகவே பாதி கூட்டம் அங்கே. பானி பூரி, பேல் பூரி, வடா பாவ், ரகடா பட்டீஸ் பறக்கும். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கேப்ஸிகம், தக்காளி, வெங்காயம் என எல்லா சமாச்சாரத்தையும் ப்ரெட்டுகளுக்கு நடுவே திணித்து எக்கச்சக்கமாக வெண்ணையை உட்புறம் வெளிப்புறம் தடவி தங்க நிறத்தில் பொறித்து அதை நாலஞ்சு துண்டங்களாக வெட்டி நம் முன் வைக்கப்படும் பாம்பே சாண்ட்விச்+ கெட்ச்சப் அடுத்த சில நிமிடங்களில் ஸ்வாஹா!
மேற்சொன்ன அனைத்து உணவகங்களும் 2000க்கு முன். பின்னர் கௌரி கிருஷ்ணா, சரவண, சங்கீதா பவன்கள் வந்து மினி டிபன் கோம்போ, கொத்து & சில்லி பரோட்டா என ட்ரெண்டை மாற்றி ஜனங்கள் வீட்டிலேயே பிரயோகிக்க ட்ரெட் மில் வாங்க ஆரம்பித்தார்கள்..
ஆச்சு... இப்ப 2020. கோவிட்-19 லாக் டவுன், சமூக இடைவெளி, பகுதி கடையடைப்பு என அரசாங்கம் செவ்வனே தன் பணியை செய்து மக்களை காக்கிறது. கடந்த சில மாதங்களாக மேற்சொன்ன உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியாத நிலை. உட்கார்ந்து சாப்பிடும்போது தெரியும் ருசி பார்சல் டேக் அவேயில் இல்லை. அலுமினிய ஃபாய்லில் ஆறிய மசால் தோசை, சிவாஜியும் வாணிஶ்ரீயும் கட்டிப்பிடுத்துக்கிடப்பது போல இட்லிவடை பொட்டலம். முறுகல் இல்லாத பார்சல் ரவா.
திருச்சி ஆதிகுடியில் நீர் தெளித்த வாழை இலையை உதறி, நடுத்தண்டை க்றக்கென நசுக்கி மடித்த தோசை மேல் சாம்பார் விட்டு கெட்டி சட்னியுடன் சாப்பிட்டு முடித்தவுடன் இலையில் மிஞ்சிய சட்னி கலந்த சாம்பாரை வழித்து நக்கும் சுகம் எங்கே! திருவானைக்காவல் பார்த்த சாரதி விலாசில் ரவா தீர்ந்து போவதற்குள் அவசரமாக இரவு 8 மணிக்கு நுழைந்து சாப்பிட்டவுடன் அதே காரத்துடன் சாப்பிடும் காபி எங்கே! காசு கொடுக்க முடியாமல் ஹோட்டலில் மாவு ஆட்டும் சுகம் எங்கே! (கீழே ஓவியத்தில்)
வசந்த காலம் வருமோ! நிலை மாறுமோ! வயிறு பெருகி வருமோ!

1 comment:

  1. அருமையான வர்ணிப்பது. படிப்பவருக்கு பசி எடுத்தால் நான் ஜவாப்தாரி இல்லை என்று ஒரு disclaimer பட்டிருக்கலாம்!

    ReplyDelete