Thursday, August 25, 2016

மகாதேவன்

'கொலைமா மதயானையை நம்பலாம்...
கொல்லும் வேங்கை புலியையும் நம்பலாம்..
ஆனா... ஸ்வாமி....யம்மா...
சேலை கட்டிய மாதரை நம்பினா..
தந்தனா பாட்டு பாடனும்
துந்தனா தாளம் போடனும்..'
சந்திரபாபு, ரத்னமாலா பாடும் இந்த மகாதேவி பட நகைச்சுவைப்பாடலை நண்பன்
இடம்: கொவான்டி ரோடு..செம்பூர் ஸ்டேஷனிலிருந்து பத்து கட்டிடங்களை அடுத்து 'திருமூர்த்தி' யில் இருந்த எங்கள் ஃப்ளாட்.. இது 1989 இல்..
மகாதேவன் உபயத்தில், ஒரே மாதத்தில் சுமார் ஐம்பது தடவைக்கு மேல் கேட்டு ரசித்திருப்போம்.
கத்தார் வேலையை விட்டு விட்டு அப்போது தான் பம்பாய்க்கு வந்தவன் மகாதேவன். பெட்டியில் ஷாம்ப்பூ, சாக்ஸ், சென்ட், நெயில் கட்டர், Fa சோப்பு.. நண்பன் சந்துரு (Balasubramaniam Chandrasekaran ) மூலம் அறிமுகமாகி என்னுடன் சேர்ந்துகொண்டான். சந்துருவும் தக்கலை பத்து (பத்மநாபன்)வுக்கும் பக்கத்து ரோட்டில் ஜாகை. நண்பன் கணபதிக்கும் (Ganapathi Subramanian) மகாதேவனுடன் நல்ல பழக்கம். கத்தார் சூட்கேசை திறந்து சுமார் ஐம்பது, அறுபது கேசட்டுகளை வெளியே எடுத்த மகாதேவனை வியப்புடன் பார்ப்பேன். நிறைய சந்திரபாபு பாடல்கள் வைத்திருந்தான். மாலை ஆபிஸ் முடிந்து அறைக்கு வந்ததும் கேசட் போட்டால் இரவு பன்னிரண்டு மணி வரை ஓடும். கலைக்கோயில், இதயக்கமலம், காட்டுரோஜா என எக்கச்சக்கமான படப்பாடல்கள்.
சராசரிக்கும் சற்றே குறைவான உருவம், முன் வழுக்கை ஆரம்பம், அளவான மீசை, கொஞ்சம் மென்மையான வசீகரமான கீச்சுக்குரல், தொந்தி தொப்பை என்றில்லாமல் சிக்கென சிறிய உடலமைப்பு. உரக்க சிரிக்காமலே ஜோக் அடிப்பது, ஆரவாரமில்லாமல் அமைதியாக பேசினாலும் மணிக்கணக்கில் அரட்டை, 'வெர்ச்சுவலி' என்கிற வார்த்தையை அடிக்கடி பிரயோகிப்பவன். காசு விஷயத்தில் கெட்டியாக இல்லை.. 'இருப்பா! நாங்குடுக்கறேன்!' என்ற தாராள மனசு, பெண்களுக்கு அதிக மரியாதை, அலுவலகத்தில் பாஸுடன் நல்ல உறவு, சலிக்காமல் மாலை லேட்டாக உட்கார்ந்து வேலையை முடிக்கும் நேர்த்தி..அவன் ஒரு இளம் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்.. சி.ஏ.வுக்குப்பிறகு வேறெந்த ஃபைனான்ஸ் சம்பந்தப்பட்ட படிப்புகள் படிப்பதிலும் பிரயோஜனமில்லை என நம்புபவன். என்னை விட 3 வயது பெரியவன். கூடப் பிறந்தவர்கள் ஏழு பேர். மற்றொரு சகோதரர் ஒருவரும் சி.ஏ.
ஞாயிறன்று காலை 7 மணிக்கு அவசரமாக ஆட்டோ பிடித்து காட்கோபர் பகுதியில் நவீன நீச்சல் குளம் ஒன்றில் நாங்கள் நீச்சல் பழகும்போது எங்களுடன் வந்து நீச்சல் சொல்லிக்கொடுப்பான். இரண்டு மணி நேரம் தண்ணீரில் கொட்டமடித்த பின் அங்கேயே கான்டீனில், தண்ணீர் சொட்டச்சொட்ட ஜட்டியுடன் சூடாக இட்லி சாப்பிட்டு பத்து மணிக்கு மேல் அறைக்கு திரும்புவோம்.
வேலையில் சேர்ந்து இரண்டு மூன்று வருடங்களே ஆனதால் நிறைய சம்பாதித்து தாராளமாக செலவு செய்ய வேண்டுமென்ற வேட்கை எல்லோருக்கும். காந்திவிலியிலிருக்கும் மகாதேவனின் மாமா பையன் ஒருவன், தனது அலுவலக கணக்கு வழக்குகள் சுமார் 10 வருடங்களாக எழுதப்படாமல் இருந்து இன்கம்டாக்ஸில் இருந்து நோட்டிஸ் வந்துவிட்டதாகவும், அந்த assignmentஐ மகாதேவன் பார்ட் டைம் தொழிலாக எடுத்துக்கொள்ளவும் கெஞ்ச, ஒப்புக்கொண்டான். துணைக்கு நாங்கள் மூன்று பேர்.
ஒரு சனியன்று மாலை சான்டாக்ரூஸ் ஏர்போர்ட் அருகே LB Couriers என்ற கம்பெனி எம்.டி முன் மகாதேவன், நான், சந்துரு, பத்து நால்வரையும் மாமா பையன் உட்கார்த்தி வைக்க, டீயை உறிஞ்சியபடி மகாதேவன் "அடுத்த நாலைந்து வார இறுதிகளில் வந்து வேலை செய்வோம். அக்கவுன்ட்ஸ் ரிஜிஸ்தர்கள் நாங்களே எழுதி, பாலன்ஸ் ஷீட் வரை டைப் செய்து கொடுத்துவிடுவோம். நேரே ஆடிட்டர் கிட்ட நீங்க குடுத்துரலாம். எங்களுக்கு ரூ. எட்டாயிரம் ரூபாய் ஆவும்" என தீர்க்கமாக சொன்னபோது 'எட்டாயிரமா?' என நாங்கள் கத்தி விட்டோம். இன்ப அதிர்ச்சி! 'சும்மா இருங்கடா' என அதட்டிய மகாதேவன் அவர் பக்கம் திரும்பி 'உடனே எங்களுக்கு வேண்டியது ஃபைல் மற்றும் வவுச்சர்' என்றதும் 'என்னாது?' என வடிவேலு கணக்கா எம்.டி. கேட்டார். 'அதெல்லாம் ஒன்னுமேயில்லயே... அதோ அந்த ரூம் முழுக்க உள்ள பேப்பர்கள் தான் பத்து வருஷ ரெக்கார்டுகள்' என காந்தி கை காட்ட எங்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. 'லேடி அசிஸ்டென்ட் கொடுப்பாங்களா?' எனக்கேட்ட என்னையும் பத்துவையும் காந்திக்கு தெரியாமல் முறைத்தான் மகாதேவன்.
அடுத்த நாள் மகாதேவன் செய்த காரியத்தை பார்த்து பிரமித்துப்போனோம். விசாலமாக இருந்த எம்.டி யின் அறையை உடனே ஒழித்து கொடுக்கச்சொன்னான். எட்டாயிரத்துக்கு என்னென்ன வாங்கலாம் என ப்ளான் செய்துகொண்டிருந்த எங்களை கிட்ட அழைத்து, வெறுந்தரையை வருஷவாரியாக பத்து கட்டங்களாக பிரித்து ஒவ்வொரு கட்டத்திலும் வருட எண்களை பேப்பரில் எழுதி வைக்கச்சொன்னான். 'இன்னும் நாலைந்து மணி நேரத்துல பக்கத்து ரூம்ல இருக்கற அத்தனை ரெக்கார்டுகளை இங்க கொண்டாந்து வருஷம் வாரியாக தரையில் பிரித்து வைக்கனும்' என எங்களுக்கு கட்டளையிட்டான். 'மணி இப்பவே பன்னண்டு.. பக்கத்துல கலினாவுல தாலி சாப்ட்டு வந்துடலாமா' என்ற எங்களை அதட்டி வேலையை முடுக்கினான். இரவு ஏழு வாக்கில் ஒரு வழியாக அத்தனை ரெக்கார்டுகளையும் பத்து வருடங்களாக பிரித்து, தரை முழுக்க பரப்பி, அறையை பூட்டி சாவியை வாங்கிக்கொண்டு 'வாங்கடா.. சாப்புடப்போலாம்!' என அவன் கூப்பிட்டபோது மாமா பையன் கண் கலங்கியபடியே காந்திவிலி டிரெயினை பிடிக்க ஓடினான். இப்பவே பாதி வேலை முடித்த மாதிரி.
அடுத்த சில வாரங்களில் ஒவ்வொரு கட்டத்திலிருந்தும் பாங்க் ஸ்டேட்மென்ட்ஸ், டெபாசிட் ஸ்லிப்கள், செக் கவுன்ட்டர்ஃபாயில்கள் என தேடி எடுத்து, அழகாக ஃபைல் செய்து, கிடைக்காத ரெக்கார்டுகளை வங்கியிலிருந்து வரவழைத்து, பரிவர்த்தனைகளை ரிஜிஸ்டர்களில் எழுதி, பாங்க் ரிகன்ஸிலியேஷன்களையும் எங்களை வைத்து முடித்தான். 'டாலி ஆகலையே! ஒரு பாஞ்சு ரூபா இடிக்கிதே!' என்று தலையை சொரிந்து கொண்டே வந்த எங்களை 'விடுறா! வர்ச்சுவலி படுத்தாதெ! சன்ரியில போட்டுட்டு அடுத்த வருஷத்த ஆரம்பி' என விரட்டினான். எங்க ஆபிஸ்ல கூட இப்பிடி வேலை செஞ்சதில்லை. சும்மாவா! எட்டாயிரம் வருதில்ல!
சொன்னபடி ஐந்தாவது வாரத்தில் Profit & Loss a/c மற்றும் Balance Sheetகளை பத்து வருடங்களுக்கு சமர்ப்பித்து, கிடைத்த எட்டாயிரத்தை சரிசமமாக பிரித்து ஆளுக்கு ரூ.இரண்டாயிரம் கையில் கொடுத்தபோது அவனை கட்டிப்பிடித்துக்கொண்டோம். 'எங்களை விட உனக்கு வேலை ஜாஸ்தி, நீ அதிகமா எடுத்துக்கோ' என்ற எங்கள் கோரிக்கையை 'வர்ச்சுவலி' நிராகரித்தான்.
ஒருநாள் லைகா குழுமத்தில் வேலை கிடைத்து குஜராத்தில் அங்கலேஷ்வர் என்கிற இன்டஸ்ட்ரியல் நகரத்தில் ஃபாக்டரி அக்கவுன்ட்ஸ் மானேஜராக சேர்ந்தான். அப்போது நான் வேலையிலிருந்து கொண்டே சி.ஏ. படித்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி இரவு ரயில் ஏறி பம்பாய் வந்து விடுவான். இஷ்டத்திற்கு எங்களுடன் பம்பாய் முழுவதும் சுற்றியவன். நான் சி.ஏ. பாஸ் செய்த செய்தி கேட்டு மதியத்திற்கு மேல் கிளம்பி பம்பாய் வந்து அன்றிரவே கரோடியா நகரில் தன் செலவில் ட்ரீட் கொடுத்தான்.
லைக்கா ஃபாக்டரியில் அவனுக்கு நல்ல பெயர். சக அலுவலர்களால் 'ஐயர் சாப்' என்று அன்புடன் அழைக்கப்படும் மகாதேவன் அடுத்து பக்கத்தில் பரூச்சில் வேறு வேலை கிடைத்து மாறினான். குஜராத்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான GNFC (குஜராத் நர்மதா ஃபெர்டிலைசர்ஸ் கம்பெனி) யின் வைஸ் பிரெசிடென்ட் (ஃபைனான்ஸ்) மதராசி ஒருவர் பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலானான். மனைவி டாக்டர். உமா படோதா யுனிவர்சிட்டியில் ப்ரொஃபஸர்.
சாப்பிட ஒருநாள் அழைத்திருந்தான். சப்பாத்தியுடன் கூடிய தென்னிந்திய சாப்பாடு. மனைவி குஜராத்திலேயே பிறந்து வளர்ந்த பெண். அவ்வப்போது பிராமண பாஷை எட்டிப்பார்த்தாலும் கணவனிடம் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தார். 'நமக்கு ஹிந்தி வர்ச்சுவலி வராது' என சிரித்தான் மகாதேவன்.
அடுத்த ஓரிரு வருடங்களில் நான் பஹ்ரைன் வந்துவிட, மகாதேவனுடன் அதிக தொடர்பு இல்லாமல் போனாலும் பஹ்ரைனில் இருக்கும் அவனது அண்ணன் Hariharan Viswanathanஹரியுடன் எனக்கு நல்ல நட்பு. கணபதிக்கும் ஹரி அண்ணா நல்ல நண்பர். எப்போதாவது ஈமெயிலில் மகாதேவனுடன் தொடர்பு இருந்தது. 'பொறந்தாலும், ஆம்பிளையா பொறக்கக்கூடாது' போன்ற சந்திரபாபு பாடல் கேட்கும்போது 'வர்ச்சுவலி' மகாதேவன் நினைவு தான் வரும்.
ஆறு மாதங்களுக்கு முன், பல வருடங்களுக்குப்பிறகு, மகாதேவனின் போன் நம்பரை சந்துரு கொடுக்க உடனே தொடர்பு கொண்டேன். மிகவும் சந்தோஷப்பட்டான். இரவு தொலைபேசியில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். INOX எனும் பன்னாட்டு நிறுவனத்தின் படோதா ஃபாக்டரியின் ஜெனரல் மானேஜர். நல்ல பதவி. ஃபேஸ்புக் அறவே பிடிக்காதாம். 'வெர்ச்சுவலி' டயமே இல்லையாம். ஆஹா அந்த 'வெர்ச்சுவலி'யை இப்பவும் கேட்க இனிமையாக இருந்தது. இன்றும் சந்திரபாபு பாடல்கள் கேட்பதுண்டாம். மகள் அமெரிக்காவில் படிக்கிறாளாம். அடுத்த மாத விடுமுறைக்கு இந்தியா போகும்போது இருவரும் அவசியம் சந்திக்கலாம் எனவும் முடிவானது.
பி.கு: மகாதேவனின் உடலை தண்ணீரிலிருந்து வெளியே எடுக்க ஒரு மணி நேரமானது. நுங்கம்பாக்கம் சம்பவத்தினால் மன அமைதியின்றி தவித்த எனக்கு அடுத்த 10 நாட்களில் கிடைத்த அதிர்ச்சி செய்தி இது. 72 வயது மூத்த சகோதரர் மற்றும் நண்பர்களுடன் படோதா அருகில் நர்மதா ஆற்றின் 'சக்ரதீர்த் ghaat' டில் புனித நீராடும்போது, நண்பனை காப்பாற்ற நீரில் குதித்த, நீச்சல் தெரிந்த, எங்களுக்கு முன்பு நீச்சல் கற்றுக்கொடுத்த, bold personalityயான, அதிகம் பேசாத, மென்மையான, குஜராத்தி சக அலுவலர்களால் அன்போடு 'ஐயர் சாப்' என விளிக்கப்படும், 58 வயதே நிரம்பிய, எங்கள் ஆருயிர் தோழன் மகாதேவன் அந்த நண்பனுடன் சுழலில் சிக்கி சடுதியில் மறைந்தான். அந்த சில நிமிடங்களில் என்னென்ன நினைத்தானோ!
இரண்டு நாட்களாக கணபதியுடனும் சந்துருவுடனும் வெகுநேரம் மகாதேவனுடைய இறப்பைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நீச்சல் தெரிந்தவர்கள் எல்லோரும் மூச்சு பிடித்து டைவ் அடித்து தண்ணீருக்குள் போக முடியுமா? அதற்கென ப்ரத்யேக பயிற்சியெல்லாம் உண்டே! அதிலும் நர்மதா போன்ற மகாநதிகளில்! சொல்வது நமக்கு சுலபம். அந்த நேரத்தில் நண்பனையோ சகோதரனையோ காப்பாற்ற நாமும் அப்படித்தான் செய்திருப்போமோ என்னவோ!
'ஒன்னுமே புரியலே உலகத்திலே.. என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது...' மகாதேவனுக்கு பிடித்த சந்திரபாபு பாடல் இனி எனக்கு பிடிக்காது. அவனுக்கும்!

No comments:

Post a Comment