Sunday, April 22, 2018

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்...


க்வீன்ஸ் நெக்லெஸ் எனப்படும் பம்பாய் மரைன் டிரைவ் பகுதி முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வசித்த இடம். சர்ச்கேட் ஸ்டேஷனிலிருந்து பொடி நடையாய் அந்த பகுதி வந்து பெரிய அடுக்குமாடி கட்டிடம் முன் நின்றேன்.
பழங்கால ஒட்டிஸ் லிஃப்ட்டின் இரும்புக்கதவுகளை கிர்ரீச்சென இழுத்து மூடிய மராட்டிய லிஃப்ட் கிழவர் என்னை பார்க்க நான் 'தீஸ்ரா மாலா' என்றேன்.
மூன்றாவது தளத்தின் ஒரு ஃப்ளாட்டில் வயதான பெண்மணியொருவர் 'ஆவ் ஷிரிதர்பாய்..' என வரவேற்றார். அவர் திருமதி. ஸ்மிதாபென் மெர்ச்சன்ட்...அவரது கண்ணசைவை ஏற்று மராட்டிய பாயி (வேலைக்காரி) என் முன் குளிர்ந்த நீரை வைத்தார்.
"ஷிரிதர்பாய்! உன்னைப்பற்றி ஜதின்பாய் நிறைய சொன்னார்.."என அவர் பேச ஆரம்பிக்க என் கவனம் எதிரே இருந்த தேநீர் மற்றும் பிஸ்கோத்தை..
90 களில் நாரிமன் பாய்ன்ட்டில் நிதி மற்றும் பங்குகள் சார்ந்த எங்கள் குழுமத்தின் ஆடிட்டர் ஜதின் ஷராஃப் தனக்கு தெரிந்த பணக்கார குஜராத்தி குடும்பத்தாரின் பங்குகள் சம்மந்தப்பட்ட கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்ள ஒரு இளம் CA தேவையென்றும், 'பார்ட் டைம் ஜாப்..நல்ல சம்பளம்' என்றும் சொல்லி என்னை இங்கே அனுப்பினார். 2000 சதுரடிக்கு மேலிருக்கும் அந்த ஃப்ளாட்டில் பழங்கால விலை உயர்ந்த சோஃபாக்கள். செந்தில் டவுசர் அணிந்த 3 வேலைக்காரர்கள். சமையலறையில் கடி மற்றும் தால்கிச்சடி வாசனை மூக்கை துளைக்க ‘நல்ல சாப்பாடு கெடைக்கும் போலிருக்கே!’ என நான் யோசித்துக்...
'ச்சாய் டண்டா ஹோஜாய்கா ஷிரிதர்பாய்..!' திடுக்கென திரும்பி எதிரில் நின்ற திருமதி.மெர்ச்சன்ட்டை பார்த்தேன். சுருக்கமில்லாமல் இஸ்திரி போட்ட பண்டரிபாய் வெள்ளை உடை. 65 வயது இருக்கலாம். இடுப்பில் பெரிய சாவிக்கொத்து. சர்க்கரை வியாதி மற்றும் மூட்டு வலி நிச்சயம் அவருக்கு உண்டென சூடம் அணைத்து சத்தியம் செய்வேன்.
ஆடையை ஊதி விலக்கி அருமையான குஜராத்தி மசாலா டீயை உறிஞ்சியபடியே கண்ணை உயர்த்தினேன். பண்டரிபாய் இப்போதைக்கு பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை. கணவர் கட்டாவ் மில்ஸில் நிறைய சம்பாதித்தாராம். இருக்கட்டும்! அந்தக்காலத்தில் குறைந்த விலையில் நல்ல பங்குகளை வாங்கிப் போட்டாராம். போடட்டும்! சில வருடங்களுக்கு முன் பக்கெட்டை உதைத்தாராம். போய்ட்டாரா! அப்பறம்? அவருக்குப்பின் அவரது முதலீட்டை தன் இரு பெண்களுடன் இந்தம்மா பார்த்துக்கொள்கிறாராம். சந்தோஷம்! மொறுமொறுப்பான உப்பு பிஸ்கெட்... வாய் ஓரத்தை துடைத்துக்கொண்டு அசுவாரசியமாக அவர் கதையை நான் கேட்டுக்கொண்டிருக்க, வாசல் கதவு மணியடித்து தபால்காரர் கொண்டுவந்த அன்றைய தபாலில் நிறைய டிவிடென்டு வாரன்ட்டுகள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பங்குகள் வாங்கி விற்கும் டீல் ஸ்லிப்புகள், போனஸ் அறிவிப்புகள், மாதாந்திர வங்கி ஸ்டேட்மெண்டுகள் என எல்லா கோப்புகளையும் மராட்டிய வேலைக்காரி என் முன் மலை போல் குவித்து விட, 'என்னது! இவ்ளோ வேலையா!' என மலைத்து கோப்புகளுக்கு அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தால்...புண்ணியவதி.. ஒரு தட்டில் ஏலக்காய் பொடி தூவிய பளபளக்கும் சிவப்பு வர்ண ஜிலேபி மற்றும் கமகமவென வாசனையுடன் சூடான கச்சோரி..நாக்கில் ஜலம் ஊர 'நாளைக்கே வேலையை ஆரம்பிச்சுடலாங்க' என அறிவித்தேன்.
'மொதல்ல என் மகள்கள் இருவரையும் நீ பார்ப்பது அவசியம்' என அவர் சொல்ல, மறுநாள் அவரது தாட்டியான இரு பெண்கள் முன் நான். பம்பாயின் பெட்டர் ரோடு, அல்டாமவுண்டு ரோடு போன்ற பகுதியில் குடியிருக்கும் மேல்தட்டு வர்க்கத்தினர். பெண்கள் இருவருமே SV ரங்காராவின் தங்கைகள் போல ஆறடி உயரம். பக்கத்தில் தவக்களை மாதிரி நான் அவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருக்க தங்கள் குடும்பத்தின் பங்கு வர்த்தகம் பற்றி விளக்கினார்கள்.
திருமதி.மெர்ச்சன்ட்டுக்கு ஒரே பையன் மற்றும் அந்த இரண்டு பெண்கள். பையன் சிங்கப்பூரில் தொழில். இரண்டு பெண்களுடன் அம்மா பங்கு வர்த்தகம். அடியாத்தி! அம்மா கையெழுத்தை அவர் முன்னால் பெண்களே அசால்ட்டாக போடுகிறார்கள். பங்குசந்தை பற்றிய விபரங்கள் விரல்நுனியில் அவர்கள் வைத்திருந்தாலும் அதன் கணக்கு வழக்குகள், அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது, வருடாந்திர ரிட்டர்ன்கள் போன்ற சமாச்சாரங்கள் எதுவும் தெரியவில்லை. அதனால் தான் நம்ம வண்டி ஓடுகிறது! பார்க்க முரட்டு ஷாஃபி இனாம்தார் மாதிரி அவர்களது கணவர்கள் இருவரும் வழக்கறிஞர்களாம். பணபலம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. தவிர அரசு,வங்கிகள்,போலீசில் செல்வாக்கு.
அதிகம் பேசாமல் சம்பளத்தை அலட்சியமாக ஒத்துக்கொண்டார்கள். 'என்ன இன்னைக்கி சாப்பிட/குடிக்க ஒன்னையும் காணோமே' என கண்கள் மராட்டிய வேலைக்காரியை தேட...மவராசி..ஒரு தட்டில் எண்ணை சொட்டச்சொட்ட மேத்தி தேப்லா , வறுத்த மூங்தால், ஆம்ரஸ்(மாம்பழச்சாறு).. என கொண்டு வந்து வைக்க, 'அம்மா! நீங்க சம்பளமே தராம மூணு வேள சோறு மட்டும் போட்டா போதும்' என சொல்ல வேண்டும் போல் இருந்தது.
ஒருநாள் திருமதி.மெர்ச்சண்ட் என்னிடம் 'ஷிரிதர்பாய்... எங்கள் மகனுக்கு உதவியாக சிங்காப்ப்பூர் (சிங்கப்பூர் அல்ல) அலுவலகத்தைப்பார்த்துக்கொள்ள ஒரு CA தேவைப்படுகிறது. யாராவது இருந்தால் சொல்லேன்!' என கேட்க, நான் சற்று யோசித்து 'நானே போகலாமா' என கேட்டதும் அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. 'ஆஹா.. எங்களுக்கு உன்னைத்தான் சிங்கப்பூர் அனுப்ப ஆசை... நீ ஒப்புக்கொள்வாயா என கொஞ்சம் யோசித்தோம்' என்றனர் பெண்கள்.
அடுத்த சில நாட்களில் சிங்கப்பூரில் இருந்து என் தற்காலிக வேலை பெர்மிட்டுடன் அவரது பையன் யோகேஷ் மெர்ச்சண்ட் வந்தார். கண்களுக்கு கீழே பைகளுடன், கட்டையாக குண்டாக, அறையில் பாதியை அவரே ஆக்கிரமித்திருந்தார். . பம்பாயில் இவர்களது வங்கிகள் சம்மந்தப்பட்ட வேலைகளை பார்த்துக்கொள்ளும் அவரது நண்பன் துஷார்பாயும் கூட இருந்தான். ஒல்லி வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரியிருந்த துஷார்பாயின் பார்வையில் போக்கடாத்தனமே அதிகம் தெரிந்தது. சதா பான்பராக், குட்கா மென்ற பிஜேபி பற்கள்.
இருவரும் அன்று மாலை கொலாபா பகுதியில் ஒரு க்ளப்புக்கு என்னை கூட்டிப்போனார்கள். ரிசப்ஷனில் இருந்த ரிஜிஸ்தரில் யோகேஷ்பாயும், 'பான்பராக்'கும் வேறு பெயர்களை எழுத, நான் மட்டும் அழகாக ‘சீதாபதி ஶ்ரீதர்’ என முட்டை முட்டையாக எழுதியதை பார்த்து விட்டு 'தேக்கோ ஶ்ரீதர்பாய்! அடுத்தமுறை நீ வேற பேர்ல கையெழுத்த போடனும்..தெர்தா?' என காதில் கிசுகிசுக்க, 'ஹாங்! அதெப்படி! நா எதுக்கு வேற பேர்ல கையெழுத்து போடணும்? ' என உச்ச ஸ்தாயியில் கேட்ட என்னை சட்டென கோழியைப்போல அமுக்கி உள்ளே இருட்டுக்குள் இழுத்துக்கொண்டார்கள்.
உள்ளே... சீமைச்சாராய வாடை, புகைமண்டலம், அதிரும் இசை, கண்ணாடி கோப்பைகள் உரசும் க்ளிங் சத்தம். ‘அதிசய உலகம்.. ரகசிய இதயம்’ க்ளப் டான்ஸுக்கேற்ற சூழல். மேற்கத்திய இசைக்கு நம்மையறியாமல் தலை ஆடியது. தொழிலதிபர்கள் மற்றும் பங்குத்தரகர்கள் கலைந்த தலையும் காட்டன் சட்டையுமாய் மது, சிகரெட் சகிதம் தங்கள் வர்த்தகம் பற்றி சம்பாஷித்துக்கொண்டிருந்தனர். அந்த பப்(b)பில் உயரமான ஸ்டூலின் படியில் ஏறி அவர்களுடன் நானும் உட்கார்ந்தபோது தான் கவனித்தேன், யோகேஷ்பாயின் இரண்டு பின்புறங்களின் பாதி மட்டும் தான் ஸ்டூலில் உட்கார முடிந்தது. தவிர க்ளீவேஜுடன் அவன் ஜட்டி வேறு அந்த இருட்டிலும் தெரிந்து தொலைத்தது. 'ப்ளக்'கென பாட்டிலின் கார்க்கை அனாயசமாக அகற்றி மேற்படி வஸ்துவை அவன் சிந்தாதாமல் கோப்பையின் பக்கவாட்டு சுவற்றில் சரித்து, நுரை வர விடாது மட்டத்தை உயர்த்தும் இலகுவான ஸ்டைலை ஆச்சரியமாக பார்த்தேன். தப்புத்தண்டாவைக்கூட தடியன்.. எவ்ளோ திருத்தமா செய்றான்! ஆரஞ்சு பழச்சாறு மட்டும் போதும் என்ற என்னை ‘அடச்சீ’ என எகத்தாளமாக பார்த்து சம்பிரதாயமாக சில கேள்விகள் கேட்டுவிட்டு முந்திரியை அள்ளி வாயில் போட்டு 'சூ கபர் ச்சே' இருவரும் குடியில் மூழ்கி திளைத்தனர்.
“சிங்காப்பூழ் இன்னொம் ஒழு மாசத்துக்குழ்ள போக தயாழா இழ்ழுக்கனு”மாம்!
மறுநாள் ஒரு அரசுடமை வங்கிக்கு வரச்சொன்னார்கள். தாயார், பையன், இரு மகள்கள், பான்பராக் பிஜேபி எல்லோரும் வங்கி மேலாளர் முன் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்ததும் பம்பாயின் பிரபல கணினி கம்பெனி அதிபர் உள்ளே நுழைந்தார். பையன் சி.பூரிலிருந்து ரஷ்யாவிற்கு கனினிகள், அதன் உதிரி பாகங்களான PC board என ஏற்றுமதி செய்ய உதவுவது தரகு நிறுவனமான சகோதரிகளின் இந்தியக்கம்பெனி. வங்கி LC அல்லது refinance மூலம் முழு பணத்தை ரஷ்யர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தரம் குறைந்த அல்லது ஒப்புக்கொண்டதைவிட குறைவாக பொருட்களை ஏற்றுமதி செய்வது, பிரச்னை வந்தால் 'ஷாஃபி இனாம்தார்' கணவர்கள் மூலம் வழக்குகளை சந்திப்பது. பல லட்ச ரூபாய் பரிவர்த்தனைகள். வங்கி மேலாளர், கணினி நிறுவனம், சகோதரனின் சி.பூர் மற்றும் சகோதரிகளின் இந்திய நிறுவனங்கள் எல்லோருமே சுருட்டிய பணத்தின் பெனிஃபிஷியரிகள். இதெல்லாமே இஸ்திரி பண்டரிபாய் ஆசியுடன்..
' டாகுமென்ட்கள் ரெடி செய்யப்போவது யார்?’ என கணினி MD கேட்டு எல்லோரும் என்னை கைகாட்ட, அடக்கமாக SV சுப்பையா மாதிரி நான் தானுங்க என கழுத்தை முன்னே நீட்டிய என்னை ‘இவனா?’ என விஷ ஜந்துவை பார்ப்பதுபோல் அவர் பார்க்க, கழுத்தை பின்னே இழுத்துக்கொண்டேன். அடுத்து வங்கி மேலாளர் காட்டிய தஸ்தாவேஜுக்களில் சகோதரிகள் கிடுகிடுவென கையொப்பமிட, கணினி MD டையை தளர்த்தி கையை நீட்ட, வங்கி மேலாளர் பாக்கெட்டில் கைகளை விட்டு பேண்ட்டை ஜிகுஜிகுவென மேலே இழுத்துக்கொண்டு அவர் கையை பிடித்து குலுக்கினார்.
பயம் லேசாக பற்றிக்கொள்ள, மறுநாள் பான்பராக் ஆசாமி துஷார்பாயை தனியே தள்ளிக்கொண்டு போய் மெதுவாக கேட்டேன் 'என்னடா நடக்குது? இதெல்லாம் என்னா யாவாரம்ப்பா?' என.
துஷார்பாய் கொஞ்சம் உஷார்பாய். முதலில் ஏதோ பூசி மெழிகினான். அப்புறம் 'அரே ஷிரிதர்பாய்! சப் காலா தந்தா ஹை.' என நாசூக்காக சொல்லிவிட்டு குட்கா பொட்டலத்தை கிழித்தான். 'பின்னே எதுக்குடா அவங்கூட வெத்திலை போட்டுக்கிட்டு சுத்தறே?' என கேட்ட கேள்விக்கு அந்தப்பக்கம் திரும்பி பொளிச்சென எச்சிலைத்துப்பிவிட்டு, அதனால் தான் வேலையை விடப்போவதாக சொன்னான்.
எனக்கு பயம் அடிவயிற்றில் இறங்க உடனே கழிவறை போகவேண்டும் போலிருந்தது. சாதாரணமாக திருச்சி NSB ரோட்டில் எதிரே போலீஸ்காரர் வந்தாலே ரோட்டை க்ராஸ் செய்யும் ஆசாமி நான். அடுத்து என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்த ஜதின்பாய்க்கு போன் செய்தேன். 'உன்னை பங்கு வர்த்தக வேலைக்கு part time மட்டும் தானே போகச்சொன்னேன்? ஏன் சி.பூர் வேலையை ஒப்புக்கொண்டாய்? அவர்கள்மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன' என அவர் சொன்னபோது எனக்கு தலையைச்சுற்றியது.
ஏதோ பகுதி நேர வருமானம் மற்றும் நாக்குக்கு பிடித்த குஜராத்தி தின்பண்டங்கள் என ஆரம்பித்த நம் வேலை ஜெயிலில் முடிவதா? நல்ல வேளை ..எங்கோ பெரிய ப்ரச்னையில் மாட்டிக்கொள்ள இருந்தேன். இப்போது என்ன செய்வது?
இவ்வளவு பயம் தேவையா என நண்பர்கள் கேட்டார்கள். 'ஶ்ரீதரா... நீ சி.பூரில் தானே இருக்கப்போகிறாய்... இந்தியாவில் உனக்கு பிரச்னை எதுவும் வராது.. பேசாமல் அந்த வேலையில் சேர்ந்துவிடு' என அட்வைஸ்.
அதிகம் குழம்பிக்கொள்ளாமல் சட்டென முடிவு செய்தேன். பம்பாயிலேயே தப்புத்தண்டா பண்ணாமல் நல்ல வேலையில் இருக்கும்போது பாழாய்ப்போன பார்ட் டைம் மற்றும் சி.பூர் வேலை தேவையா? இந்தியா வரும்போதெல்லாம் வேறு பெயர்களில் கையெழுத்திட வேண்டுமா? என்றாவது மாட்டிக்கொண்டால்?
கைதி உடையில் 'என் அண்ணன்' MGR ஜெயிலில் கல்லுடைத்துப்பாடும் 'கடவுள் ஏன் கல்லானார்.. மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே' பாட்டு நினைவுக்கு வந்தது. எம்ஜியார் வெளிய வந்துடுவாரு.. நாம வருவமா? 'நஹீஈஈ...' என அலறியடித்து ஜிதேந்திரா எழுந்து உட்காரும் இந்தி கெட்டகனவு எனக்கும் வந்தது.
அடுத்த சில நாட்களுக்கு திருமதி.மெர்ச்சன்ட் என் ஆபிசுக்கு செய்யும் எல்லா போன்களையும் தவிர்த்தேன். ஒரு மாதம் கழித்து சி.பூர் தடியன் ஊருக்குப்போனதும், தாயார் மற்றும் சகோதரிகளை நேரில் பார்த்தேன். 'கல்யாணம் முடிவு செய்து விட்டதாலும், என் ஜாதகத்தில் நான் வேலை செய்யும் கம்பெனிக்கு இப்போதைக்கு என்னால் நேரம் சரியில்லை' என ஏதோ ஒரு பொய்யை அவிழ்த்து விட, அவர்களும் பயந்து போய் 'அப்ப சி.பூர் வேலை மட்டுமல்ல, பார்ட் டைம் வேலைக்கும் வரவேண்டாம்' என சொன்ன கையோடு பெரிய வட்டமான தட்டில் குஜராத்தி தாலி பரிமாற, மசாலா லஸ்ஸியை கடைசி சொட்டு விழும் வரை வாயில் கவிழ்த்து விட்டு கிளம்பினேன்.
அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஜில்லென காற்று முகத்தில் வீச, பரவசம்.. நீண்ட மூச்சை இழுத்து விட்டேன். தூரத்தில் மராட்டிய கிழவர் க்றீச்சென இழுத்து மூடும் லிஃப்ட் சத்தம். பம்பாய் முன்னை விட அழகாகத்தெரிந்தது. சர்ச்கேட் ஸ்டேஷனில் ஒரு சாய் வாங்கி மெதுவாக ருசித்துக்குடித்தேன். மனசு லேசானது. அப்பாடா... இனி வேறு பெயர்களில் கையெழுத்து போட வேண்டியதில்லை. உள்ளூரில் தைரியமாக இனி நம் பெயரிலேயே கையெழுத்து போடலாம்!.
ரயில் சீசன் டிக்கெட் பத்திரமாக இருக்கிறதாவென பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து பார்த்தபோது அதில் 'சீதாபதி ஶ்ரீதர்' என்ற பெயரே அழகாக இருந்தது.
கோட்டோவியத்துடன்,
சீதாபதி ஶ்ரீதர்

No comments:

Post a Comment