Sunday, April 22, 2018

எது உன்னுடையதோ..2014 மீள்

அந்த பதிவாளர் அலுவலகம் திருச்சி நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முன்கூட்டியே போனில் சொல்லி வைத்திருந்ததால் கம்பெனி பிரதிநிதி (க.பி) என்னையும் மனைவி Usharani Sridhar ஐயும் காலை எங்கள் வீட்டிலிருந்து தன் இன்டிகா காரில் ஏற்றிக்கொண்டார்.
நிலம் தொடர்பான பதிவு செய்ய நாங்கள் அங்கு சென்றதும் பத்திரம் எழுதும் கடை முன் கார் நிற்க, க.பி மட்டும் உள்ளே ஓடினார். "ஒன்னும் பெரிய வேலை இல்ல சார். அக்ரிமென்ட் கம்ப்யூட்டர்ல ரெடியா இருக்கு. ஆயிர்ருவாய்க்கு பத்திரத்தாள் வாங்கி அதுல ப்ரின்ட் எடுக்கனும்" என சொல்லி ஓடிய க.பி.க்கு சுமார் 25 வயது தான் இருக்கும். மாதத்தில் முக்காவாசி நாட்கள் தமிழ்நாட்டின் பல பாகங்களுக்கு வாடிக்கையாளர்களை கூட்டிச்சென்று அவர்கள் கம்பெனி மூலம் வாங்கிய நிலத்தை அந்தந்த மாவட்ட/ஊர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுப்பது அவர் வேலை. அவரே 'செல்லர்' மற்றும் ‘கம்பெனி இயக்குநர்’ என கையொப்பமிடுவார்.
பதிவு செய்ய முன்கூட்டியே எல்லா செலவுகளுக்கும் சேர்த்து கனிசமான தொகையை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்கள். நமக்கு அதிகம் வேலையில்லை. இளநீர் சாப்பிட்டுக்கொண்டே (பைசா அவர் குடுத்துட்டார்) அவர்கள் கை காட்டுமிடத்தில் கையொப்பமிடவேண்டும். எல்லாம் முடிந்தபின் திருச்சி பஸ் ஸ்டாண்டில் பெரிய ஓட்டல் ஒன்றில் மதிய சாப்பாடு வாங்கிக்கொடுத்து வாழைப்பழம் பீடாவுடன் நம்மை வீட்டில் ட்ராப் செய்துவிடுவார்கள்.
"பதிவு செஞ்சவுடன ஒரு வில்லங்கம் எடுக்கனுமே" என தயங்கி கேட்கும் நம்மிடம் "இன்னும் 10 நாள்ல சிஸ்டத்துல ஏத்திடுவாங்க.. அப்பறமா நீங்க ஆன்லைன்ல போட்டு வில்லங்கம் எடுத்துறலாம்" என டக்கென பதில் வரும்.
"ஏம்ம்பா..நெலத்தை சுத்தி காம்பவுன்டு செவுரெடுத்து இரும்பு கேட் போட்டு கேட்டான்ட 'இந்த நிலம் இன்னாருக்கு சொந்தம்..மீறி உள்ளே வருபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'னு போர்டு வைக்கனுமே என வெள்ளந்தியாக கேட்ட நம்மிடம் அவர் "சார் நான் ரிஜிஸ்ட்ரேஷன் டீம். அதெல்லாம் மார்க்கெட்டிங் டீம் பாத்துப்பாங்க" என சொல்லிவிட்டு '10 கிலோமீட்டருக்கு சுத்திலும் வெறும் நெலந்தான் இருக்கு.. கல்லு நட்டதே பெருசு.. இவுருக்கு காம்பவுன்டு செவுராம்" என அவர் முனுமுனுத்தது நம் காதில் லேசாக விழுந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அந்த பக்கம் திரும்பிக்கொண்டோம் .
பக்கத்தில் இன்னொரு இளைஞர். அவரும் கஸ்டமராம். கத்தார் பார்ட்டி. சம்பிரதாயத்துக்கு அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தேன் தமிழில். வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே பதில் சொன்ன அவர் பிசியாக தினமணி படித்துக்கொண்டிருந்தார். இதற்குள் பத்திரங்கள் ரெடி செய்து நம்மிடம் வந்தார்கள். எல்லா பக்கங்களிலும் கருப்பு மையில் கையொப்பமாம். போட்டோம்.
"சார்.. நீங்க கத்தார் பார்ட்டிக்கு சாட்சி கையெழுத்து போடுங்க.. அவுரு உங்களுக்கு சாட்சி கையெழுத்து போடுவார்" என இவர் சொன்னதும் எனக்கு சுள்ளென கோபம் வந்தது. "அதெப்பிடிப்பா? அவர இப்பத்தான் நா பாக்கறேன். எந்த நெலத்த எப்பிடி வாங்கறார்னு எனக்குத்தெரியாம நா எப்பிடி சாட்சிக்கையெழுத்த அவருக்கு போடமுடியும்" என எகிற, அவர் உடனே கூலாக "பரவால்ல சார்.. நம்ம டிரைவர் போடுவார்" என சொல்லவும் தயாராக காத்திருந்த டிரைவர் கிடுகிடுவென சாட்சி கையெழுத்து போட்டார்.
" என்னப்பா! மணி ஒன்ற.. எப்ப முடியும்?" பொறுமையிழந்து கேட்ட என்னிடம் அவர் "மொத்த டாக்குமென்ட்ட ரெடி பண்ணி மேடம் டேபிள்ள வெக்கனும். அவங்க வந்து சுறுக்க ரெண்டு , ரெண்ட்ரைக்குள்ளாற முடிச்சுடுவாங்க" என்றார். பதிவாளர் ஒரு பெண்ணாம்.
இரண்டு மணிக்கு மேடம் வந்ததும் அவர் மேசையைச்சுற்றி யார் யாரோ நின்று கொள்ள எங்களை வெளியே நிற்க வைத்தார்கள். துண்டு பேப்பர்கள் சொறுகி பல ரிஜிஸ்தர்களை அவர் முன் வைக்க அவர் ஏதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.
'இந்த அலுவலகம் கண்காணிப்பு கேமிராவுக்குட்படுத்தப்பட்டுள்ளது' என்ற போர்டை ஆச்சர்யத்துடன் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே "செல்வம் வாங்க சார்!" என குரல் கேட்டதும் கத்தார் பார்ட்டி உள்ளே ஒடினார். குனிந்தவாறு இருந்த பதிவாளர் பெண்மணியின் கண்கள் மட்டும் தன் மூக்குக்கண்ணாடிக்கு மேல் வெளியே வந்து தீர்க்கமாக அவரை பார்த்து ஏதோ கேட்க கத்தார் பார்ட்டி திருப்பதி லட்டு மாதிரி இருந்த தன் மோட்டா மணி பர்ஸிலிருந்து சுமார் 10 க்ரெடிட் கார்டுகளுக்கு நடுவே இருந்த பான் கார்டை வெளியே எடுத்துக்காட்ட கிஷ்ணமூர்த்தி என்ற குமாஸ்தா "இந்தாண்ட வாங்க சார்" என அவரை கூப்பிட்டார். வெள்ளை வேட்டி சட்டையணிந்த கருப்பான கிராமத்து முதியவர் கிஷ்ணமூர்த்தி. கி.ராஜநாராயணன் சாயல். முரட்டுத்தோற்றம்.
அடுத்து நாங்கள். "மேடம் உங்க பான் கார்டெங்க?" என என் மனைவியை கிஷ்ணமூர்த்தி கேட்க கூட வந்திருந்த க.பி. உடனே அவர் காதில் ஏதோ சொல்ல, என் பான் கார்டை மட்டும் பதிவாளர் பெண்மணி பரிசோதித்தார். மேலும் ஆறேழு சிப்பந்திகள் எதற்காக எங்களைச்சுற்றி நிற்கிறார்களென தெரியவில்லை. டொம் டொம் அந்த பிரதேசமே அதிர அவர்கள் சீல் அடிக்க நாங்கள் கோத்ரொஜ் பீரோவை ஒட்டி பவ்யமாக நின்றோம்.
"அங்க நேரா பாருங்க சார்"- கிஷ்ணமூர்த்தி கை காட்ட அந்த திசையில் உள்ள கவுன்டர் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு வெப்கேமிரா நாகப்பாம்பு போல நம்மை படமெடுத்தது. திருப்தியுடன் நான் மனைவியை பார்க்க புடவையை சரி செய்துகொண்டு அவளும் போஸ் கொடுத்தாள்.
அடுத்து கட்டைவிரல் பதிவு. நம் கை கட்டை விரலை கிஷ்ண மூர்த்தி இறுக்க பிடித்து மையில் தொட்டு பத்திர தாளில் மாறி மாறி அழுத்த உயிர் போகும் வலி. ரிஜிஸ்ட்ரேஷன் கட்டன ரசீதையும் நம் படமெடுத்த காகிதத்தையும் வெளியே எடுத்து அதில் நாம் கையொப்பமிடவேண்டுமாம்.
பிரின்ட்டர் கக்கிய காகிதத்தை பார்த்தேன். இந்த போட்டோவுல இருக்கற ஆசாமிக்கு கிட்டத்தட்ட நம்ப மொக ஜாடை இருக்கே என நான் வியந்து மறுபடியும் போட்டோவை.. அடச்சீ! அது நம்முடைய போட்டோ தான்! கிட்டத்தட்ட ஒற்றைக்கண் சிவராசு மாதிரி ஆக்கிவிட்டார்கள் பாவிகள்..
அதற்குள் வேறு ஏதோ தவறு நடந்துவிட 'செல்வம்' என்று பிரின்ட் செய்யப்பட்டுள்ள ரசீதை என் முன் நீட்டினார்கள். ‘அய்யா! நா சீதாபதி ஶ்ரீதருங்க!’ என ஏவியெம் ராஜன் மாதிரி பரிதாபமாக சொல்ல ரசீதை கையால் அடித்து பேரை மாற்றி எழுதினார் கிஷ்ணமூர்த்தி. ‘சார்..,பேரு மாறி இருக்கே... அத கைல திருத்தலாமுங்களா? சிஸ்டத்துல மாத்த வேணாமுங்களா?‘ என்ற என்னிடம் "ரசீதுல பேரை விட நம்பரு தான் முக்கியம்...நாங்க பாத்துக்கிடுவம்" ... கிஷ்ணமூர்த்தி லேசாக உஷ்ணமூர்த்தியானார்.
அந்த வெப் கேமிரா, தம்ப் இம்ப்ரெஷன் பார்ட்டிகள் எல்லோரும் அரசாங்க ஊழியர்கள் கிடையாதாம். அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட சர்வீசாம் அது. அதற்கென்ற தனியாக சார்ஜ் கொடுக்கவேண்டுமென கிஷ்ணமூர்த்தி சொல்ல நம் க.பி. மறுபடியும் அவர் காதில் ஏதோ சொல்ல கிஷ்ணமூர்த்தி முகத்தில் மலர்ச்சி. "நீங்க வெளிய இருங்க சார் " என நம்மை அனுப்பிவிட்டார்கள்.
ஒருவழியாக முடிந்து வெளியே வந்தோம். எல்லாமே ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் அங்கு ஓடுகிறது. பதிவாளர் பெண் நம் அடையாள அட்டை, தஸ்தாவேஜுக்களை அலட்சியமாக பார்வையிடுகிறார். நம்பரை சரி பார்க்கிறார். உடனே கிடுகிடுவென கையொப்பமிடுகிறார். நடுவே பிஸ்லேரி அருந்துகிறார். எப்போதாவது ஏதோ கேள்வி கேட்க கிஷ்ணமூர்த்தி போன்றவர்கள் முன்னே பாய்ந்து உடனே பதில். தள்ளி நிற்கும் நமக்கு இனம்புரியாத பயம். தேவையில்லாமல் சுற்றிலும் கூட்டம். 'லீகல் சர்வீஸ் சார்ஜஸ்' என மொத்தமாக நம்மிடம் ஏற்கனவே வசூலித்த பணத்திற்கு விளக்கமெல்லாம் கிடையாது. கேட்டால் வெடுக்கென பதில்.
பதிவாளர் பெண் இருக்கையின் பின்புறம் லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் படங்கள். அந்தப்பக்கம் பெரிய கிருஷ்ணர் படம்... பக்கத்தில் கீதோபதேசம்..மெல்ல வாசித்தேன்...
"எது நடந்தோ அது நன்றாகவே நடந்தது" ( ஆஹா.. அப்ப நிலம் வாங்கியது நல்லது தான்)
அடுத்த சில வரிகளுக்குப்பின்...
" இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது" (ஐயோ! நாராயணா! விசு ஜோக் ஞாபகத்துக்கு வருதே!)
(சீதாபதி ஶ்ரீதர்)
2014 மீள்

No comments:

Post a Comment