Thursday, July 30, 2015

நான் உன்னை வாழ்த்திப்....


'ஶ்ரீதர்! இவங்களுக்கு 2.10 குருவாயூர புடிக்கனும்.. அவங்களுக்கு மூனு மணிவாக்குல பாண்டிச்சேரிக்கு பஸ். ' என யாரோ சொல்ல நான் அவசரமாக சாப்பிட்டு வண்டியை எடுத்தேன்.
ஒரு மாதம் முன்பு எங்கள் இல்ல (சகோதரி மகள்) நிச்சயதார்த்த விழா தென்னூர் ஹோட்டல் 'ஷான்'இல்.
பஹ்ரைனில் 19 வருடங்களாக இடது கை ஓட்டு (left hand drive) பழக்கமிருந்தாலும் திருச்சியில் மாருதி எர்டிகாவில் வலது கை பக்கம் ஓட்டுவது பெரிய சிரமமாக தெரியவில்லை. பின் சீட்டில் அண்ணி மற்றும் அவரது இரு பெண்கள்..
கொளுத்தும் வெயில்... மணி மதியம் ஒன்னறை. சரியான டிராபிக் வேறு. வண்டியை ஸ்டார்ட் செய்து ஹோட்டலை விட்டு வெளியே வரும்போது எதிரே ஒரு காலத்திலிருந்த மதுரை ஶ்ரீ முனியாண்டி விலாசை காணோம். தற்போது மொபைல் போன் கடை...இடது பக்கம் தென்னூர் வண்டி ஸ்டாண்டையும் காணோம். தென்னூர் ஹைரோடு நல்ல விஸ்தாரமாக்கப்பட்டுள்ளது.திருச்சி முந்தைக்கு இன்னும் அழகாக இருப்பது போல் உணர்ந்தேன். விதவிதமான மாடல்களில் கார்கள்.. ஸ்கூட்டி ஓட்டும் பெண்கள்.. ஸ்கின் ஃபிட் ஜீன்ஸ் பசங்கள்...
சூரியன் எஃப்பெம்மில் சினிமாப்பாடல் ஒன்றின் ஆரம்ப இசை. வயலின்,அக்கார்டியன் மற்றும் புல்லாங்குழல்..ஆஹா! இது ஜெயந்தியுடன் நாகேஷ் சுழன்று ஆடிப்பாடும் 'தாமரைக்கன்னங்கள்' பாட்டாச்சே!... அடாடா...பாடலை ஒலிபரப்பாமல் ஏன் அதற்குள் நிறுத்தி... ஓகே..ஓகே..அந்த இசையமைப்பாளர் பற்றி சில வார்த்தைகள் சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண் அறிவிப்பாளர்..
தில்லை நகர் ஆர்ச் எதிரே அந்தக்காலத்தில் வேலூஸ் காபி இருந்த இடத்தில் இப்போது ஏதோ ஒரு மருந்தகம் இருந்தாலும், சிக்கரி வாசனை இன்னும் வருவது போல இருந்தது. ஆர்ச் முன்னால் வழியை அடைத்துக்கொண்டு ஒரு லாரி..
சரி... பாடலை கொஞ்சம் ரசிக்கலாமென்றால்..
பாம்.. பாம் என பின்னாலிருந்து ஹார்ன் ஒலி..(அட இருங்கப்பா.. நல்ல பாட்டு ஓடிக்கிட்டிருக்கு)
"மழை தூரல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது..
அது உன்னை நனைத்து தெறித்தபோது என்னை நனைத்தது.."
'அஹஹா..ஹா..ஹா..ஹா..ஹா'... என்ன அழகா SPB ஹம்மிங் இழுக்கிறார்! பாடல் முடிந்தும் கூட மனம் அதே பாடலை 'நவக்கிரகம்' போல் சுற்றி வர...
முன்னால் லாரி நகர, பாடலை விட்டு மனம் அகன்று மறுபடியும் ரோட்டுக்கு...
ஜெனரல் பஜார் தெரு முகனையில் ஆடிட்டர் கந்தசாமி வீடு இடிக்கப்பட்டு பெரிய கட்டிடம் இப்போது. பட்டாபிராம் பிள்ளைத்தெருவுக்கு முன் ஃபண்டாபீஸ் சந்து அருகே எனக்கு முன்னால் ஒரு மூங்கில் வண்டி திடீரென நிற்க... நான் ப்ரேக் போட்டேன்.. மறுபடியும் டிராபிக் ஜாம்...வலது பக்கம் முன்பு (70 களில்) பழைய லைப்ரரி இருக்கும். ஏ.கே.பட்டுசாமியின் 'கான்ஸ்டபிள் கந்தசாமி' அங்கே படிப்போமே!பக்கத்தில் முந்தி சிவகண்ணு கிளினிக் (இப்ப ஒவ்வாமை ஆசுபத்திரியாம்), மற்றும் திருச்சியின் முதல் ஏசி சலூன் 'சுரேஷ் முடி திருத்தகம்', இந்தப்பக்கம் கோல்டன் காஃபி பார் எல்லாம் இருந்ததே!
" வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்..
வன்ன விழிப்பார்வையெல்லாம் தெய்வீகம்"...
ரேடியோவில் யேசுதாஸின் 'தேன் சிந்தும்' குரல் அந்த பிசுபிசுப்பான வெய்யிலிலும் இதம்.. பாடல் முடிந்து பெண் அறிவிப்பாளர் அந்த இசையமைப்பாளர் பற்றிய சுவாரசியமான தகவல் கொடுத்துக்கொண்டிருக்க...
மூங்கில் வண்டி நகர்ந்து பட்டாபி ராம பிள்ளைத்தெரு நுழைந்தேன்.
பழனியாண்டி டாக்டர் க்ளினிக் .. அடுத்து பெரியார் இவெரா ஹாஸ்டல் இருந்த இடத்தில் வேறு நான்கடுக்கு கட்டிடங்கள்..வலது பக்கம் பாப்புச்செட்டித்தெரு...
( 1973 களில் இரவு 8 மணி வாக்கில் இருட்டில் பாட்டி வீட்டுக்கு பாப்புச்செட்டித்தெரு வழியாக நடந்து போகும்போது 'அவசரமாக' வந்துவிட்டால் சரட்டென ட்ரௌசரை இறக்கி அப்படியே சாக்கடை ஓரத்தில் உட்கார்ந்து விடுவோம்.. துணைக்கு என் தம்பி (Jani Vijay Raghavan ) வேறு. லேசாக வந்த சிரிப்பை டக்கென அடக்கிக்கொண்டேன்... நல்லவேளை.. பின்னால் உட்கார்ந்திருந்த அண்ணி, குழந்தைகள் கவனிக்கவில்லை..
"மாலையிட்டால் அது ஒரு முறை தான் என நினைப்பது பெண்மையன்றோ..
ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவனின் தன்மையன்றோ"
அடடா...அந்த நேரத்தில் சுசிலா,ஜமுனாராணி, சௌகார், ஜெயந்தி, வாலி, எல்லோரையும் விட கே.பியும் அந்த இசையமைப்பாளரும் தான் 'இரு கோடுகளாக' நினைவுக்கு வந்தார்கள்.. என்னவொரு இசை!
வலது பக்கம் பட்நூல் காரத்தெரு...(சௌராஷ்டிரா தெரு).."இவங்க பேசினா ஊசிப்பட்டாசு வெடிக்கற மாதிரியே இருக்குடா..." துவாரகா மாமா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது(1976)...
இடது பக்கம் பெருமாள் கோவில்..
மார்கழி மாதம் நாலு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு 'கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே'... என சாமி முன் ஈரத்துண்டுடன் அன்றைய பாசுரம் படித்தபின் கால்சராயை மாட்டிக்கொண்டு இந்த பெருமாள் கோவிலுக்குத்தான் சக்கரைபொங்கல் வாங்க ஓடி வருவோம்.. தண்ணீரில் விரல்களை நனைத்து நனைத்து சூடான பொங்கலை தட்டின் ஓரத்திலிருந்து வழித்து குருக்கள் எங்கள் கையில் வைக்கும்போதும் சூடே தெரியாமல் பொங்கலை நக்கி சாப்பிட்ட கையோடு பின் பக்கம் துடைத்துக்கொள்வோம் (1973)..,
கார் புத்தூர் மெயின் ரோடு வந்து, கோர்ட் பக்கம் உய்யகொண்டான் பாலம் மேலேறி வலது பக்கம் பஸ் ஸ்டாண்டு நோக்கி சரிவான ரோட்டில் இறங்கும்போது....
"ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில்...
பெண்ணாக பிறந்துவிட்டாய் நாங்கள் தான் உன் மடியில்..
தனமானம் காப்பவள் நீ..
சன்மானம் யார் தருவார்.."
'மூத்தவள்-பிரமிளா' பாடும் பாடலில் மனம் லயித்து, வலது பக்கம் ஐயப்பன் கோவிலை நோக்கி குனிந்து சேவிக்கும் வழக்கத்தை மறந்து, பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்து 'அரங்கேற்றிய' அந்த இசையமைப்பாளரை நினைத்துக்கொண்டேன். அவரது சாதனைகளை மேலும் அடுக்கிக் கொண்டே போனார் ரேடியோ பெண்.
'பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்'
- சீர்காழியின் குரல் மனசை கொஞ்சம் அழுத்தினாலும், சட்டென நான் மூடை மாற்றிக்கொள்ள, 'நீர்க்குமிழி' மாதிரி சோகம் மறைந்தது... வண்டி வெஸ்ட்ரி ஸ்கூலைத்தாண்டி பஸ் ஸ்டாண்டை நோக்கி...
'நீலக்கண்கள் தாமரை போல் சிவப்பதெப்போது...
நினைவில்லாமல் மார்பிலே மயங்கும்போது..
வார்த்தை ஜாலம் பேச்சிலே வருவதெப்போது..
மங்கையின் மடியிலே புரளும்போது..'
ஆஹா.. ஜெய்சங்கரும் வாணிஶ்ரீயுடன் பாடும் 'புலவர் சொன்னதும் பொய்யே.. பொய்யே' பாட்டாச்சே! ஜெ.ச.க்காக TMS தன் குரலை இளமையாக காட்டி 'ஆயிரம் பொய்'யுடன் ('பொஞ்ஞே...பொஞ்ஞே' என) பாடியதை ரசித்தபடி ஜங்ஷனுக்குள் நுழைந்தேன்..
குருவாயூர் 2.10க்கு வரவில்லை.. 20 நிமிடம் லேட். அண்ணி மற்றும் குழந்தைகளை ப்ளாட்பாரத்தில் விட்டு விட்டு மறுபடியும் காரில் ஏறும்போது....
"இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்...
மெய்யெழுத்துக்களில் ஒலிக்குமந்த மெல்லினம்"
ஜீரா சொட்டும் ஜிலேபி போன்ற ஜேசுதாசின் குரலும் 'நல்ல பெண்மணி'யான ஸ்வர்ணா ( இசையமைப்பாளரின் மனைவி) குரலுடன்....
சூரியன் FM இல் இன்னும் 'இன்றைய இசையமைப்பாளர்' பற்றிய நிகழ்ச்சி....
திரும்ப ஹோட்டல் நோக்கி வண்டியை செலுத்தினேன்.. இந்த 40 வருடங்களில் இன்னும் திருச்சி நகரம் அதே பொலிவுடன் இருப்பதை ரசித்தபடி...ஜங்ஷனை விட்டு வெளியே வந்து, வழிவிடு வேல்முருகன் கோவிலை தாண்டும் போது முன்பு இருந்த 'சங்கர் கபே' இப்போது காணோம். காலை 5 மணிக்கு சுடச்சுட இட்லி, கேசரி கிடைக்குமே! பக்கத்தில் ஹோட்டல் ராஜா, அதன் வாசலில் பூக்கடை இப்போதும் இருந்தது.
"ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று...
என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று...
கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதை நெஞ்சம்..
நம் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம்...
பெண்ணல்லவா மனம் போராடுது..
நான் சொல்லியும் ஏன் தடுமாறுது..."
பாடலின் அருமையான வரிகளும், ஈஸ்வரி மற்றும் அடக்கமான ராஜா குரலும்.... சூப்பர் இசையமைப்பு... மனம் 'ரங்கராட்டின'மாக சுற்றியது.. ஈஸ்வரியும் ராஜாவும் சேர்ந்து பாடும் பாடல் இது ஒன்று தானோ!
திருச்சி நகரில் எத்தனையோ மாற்றங்கள் இருந்தாலும் இன்னும் மாறாதது... ஜங்ஷன் ஸ்டேட் பாங்க் எதிரே LIC ஆபிஸ் அருகே இன்னமும் இளநீர் விற்கிறார்கள்.. அடுத்து அந்த வின்சென்ட் பேக்கரி இன்னும்...வேறு பெயரில்.. பக்கத்தில் இன்னமும் கலர்/க்ரஷ்...காளிமார்க் எங்கே... இப்போது பவன்டோ ...
இடது பக்கம் 'பதஞ்சலி' அவசரத்துக்கு பாண்ட் சர்ட் எடுக்க நல்ல இடம்.. செக்யூரிடிக்காரர் நல்ல மரியாதை கொடுக்கிறார்..கொஞ்சம் முன்னே போய் ஹெட் போஸ்ட் ஆபிஸ் சிக்னலில் இடது பக்கம் திரும்பி கன்டோன்மென்ட் ரோட்டை பிடித்தேன்...
FM ரேடியோவில் 'இன்றைய இசையமைப்பாளர்' நிகழ்ச்சியின் கடைசி பகுதி....
'உனக்கென்ன குறைச்சல்.. ல்ல்ல்..ல்ல்ல்ல்..' MSV அழகாக இழுக்க அந்த கடைசி 'ல்'லுடன் சேர்ந்து மெதுவாக இழையும் புல்லாங்குழல்.. ஆஹா..தெய்வீகமான இசை!
"கடந்த காலமோ திரும்புவதில்லை
நிகழ்காலமோ விரும்புவதில்லை
எதிர்காலமோ அரும்புவதில்லை
இதுதானே அறுபதின் நிலை"
"எதையோ தேடும் இதயம்
அதற்கு எண்ணம் தானே பாலம்
என்ற நினைவே இன்று போதும்
தனிமை யாவும் தீரும்.."
தனக்கென ஒரு தனி ஸ்டைலை வைத்துக்கொண்ட அந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னரையே பாட வைத்து அசத்தியிருக்கிறார். கே.பி.யின் பெரும்பாலான படங்கள் இவர் இசையமைத்தது...
ஒரு நாள் மதிய வேளை முழுவதும் சுட்டெறிக்கும் வெய்யிலிலும் சுமார் ஒரு மணி நேரம் என்னை தன் இசையால் கிறங்கடித்து, திருச்சி நகரையும் ரசிக்க வைத்த அந்த (படுபா)வீகுமார் வாழ்க!
அவரது பிறந்த நாள் இன்று...
"பத்துக்கு மேலாடை...
பதினொன்றேயாகும்...
பக்கத்தில் நீ இருந்தால்...
பல கதை உருவாகும்...."
(சீதாபதி ஶ்ரீதர்)

No comments:

Post a Comment