Saturday, March 1, 2014

பாம்பே டு இந்தோர்

1986 இல் நான் பம்பாய் வந்த ஓரிரு வருடங்களில் நண்பன் கணபதி வேறு வேலை கிடைத்து இந்தோர் போன கையோடு என்னையும் பாம்பெயிலிருந்து இழுத்துக்கொண்டான். சிறிய அழகான நகரம் மத்திய பிரதேஷின் இந்தோர். பம்பாய் மாதிரி எல்லா மாநிலத்தவர்களும் அங்கு வசிப்பதால் 'மினி பம்பாய்' என்றும் சொல்கிறார்கள்.

கணபதியின் நண்பர் ஆனந்த ராவ் என்பவர் என்னை அங்கு வேலையில் சேர்த்து விட்டவர். கம்பெனி செக்ரட்டரியாக ப்ராக்டீஸ் செய்பவர். அந்த நகரத்தை சுற்றியுள்ள தேவாஸ், ரத்லம் போன்ற இடங்களில் நிறைய தொழிற்சாலைகளுக்கு வங்கிக்கடன் வாங்கி தருவதில் இருந்து நிதி சம்மந்தப்பட்ட ஆலோசனை எல்லாம் அவர் தான். கொட்டோ கொட்டேன்று பணம் கொட்டியது. மனுஷன் எப்பவும் சிடு சிடு தான். சுமார் 60 வயதான அவருக்கு வயதுக்கு மீறிய முதிர்ந்த படு ஒடிசலான தோற்றம். பில் கிளிண்டன் மற்றும் மைக்கேல் ஷூமாக்கர் இருவரையும் கூட்டி ஆவேரெஜ் ஆக்கி அந்த உருவத்தையும் கால் பங்கு சுருக்கி தாவாங்கட்டையை சுத்தியலால் ரெண்டு தட்டு தட்டி கரிய வர்ணம் பூசினால் ஆனந்த் ராவ் ரெடி.

அரை மணிக்கு ஒருதரம் சிகரெட்டை வெளியே எடுத்து அதை செங்குத்தாக நிறுத்தி டப்பாவில் தட்டி இடது உதட்டில் சொருகி பத்த வைத்து ஸ்டைலாக அவர் இழுத்தபோது இரு கன்னங்களும் )( மாதிரி ஓட்டிக்கொண்டன.  அடுத்து ஆனந்த் ராவ் இரும ஆரம்பித்தார். கல்லாப்பெட்டியை திறந்து சில்லறையைத்தேடி மூடும் சப்தத்துடன் அவர் இருமி, அடுத்து அந்த கோழையை முழுங்கியும் தொலைத்தார். பனித்த கண்களை துடைத்துக்கொண்டார். ரன்பீர் கபூர் ஸ்டைலான அடி வயிற்றுக்கும் கீழே இறக்கி பாண்ட் போடுவதை ஆனந்த் ராவ் அப்போதே ஆரம்பித்து விட்டார். ஆனால் இவர் கொஞ்சம் ஓவர். முழங்கால் அரித்தால் பாண்ட் வழியாக சொறிந்துகொள்ளும் அளவுக்கு கீழே இறக்கம். இவ்வளவு ஒல்லியா என வியந்தவண்னம் என் கண்கள் அவரது பின் பக்கம் போனபோது கூடுவாஞ்சேரி பக்கம் விற்கும் இரு காலி மனைகள் நினைவுக்கு வந்தது..

இன்டர்வியூ அவரது வீட்டில் தான். பெரிய சாலமான வீடு. சாப்பிட எதுவெனும் கொடுப்பார்களோ என யோசித்துக்கொண்டிருக்கும்போது அறையில் திடீரென கமகமவென சோப்பு வாசனை. ப்ரெஷாக அழகான பெண் காபி கொண்டு வந்து வைத்தாள். என்னையும் கணபதியையும் ஏறெடுத்துகூட பார்க்கவில்லை. அட... ஆனந்த் ராவ் மூஞ்சிக்கி இவ்வள அழகான பெண்ணா?..’.  எனது ரியாக்‌ஷனை ஆனந்த் ராவ் கவனித்துக்கொண்டு, பேசுவதை உடனே நிறுத்தி, காபி கோப்பையை பார்த்தவுடன் சோப்பு வாசனை உள்ளே போய் விட்டது. என்னை அவருக்கு அறவே பிடிக்கவில்லை போலும்.

 'என்னாயா.. CA வா? கம்பெனி லாவெல்லாம் ஒழுங்கா தெரியுமா' என எகத்தாளமாக கேட்டார். "caveat emptor பத்தி சொல்லு பாக்கலாம்" என கேட்டுவிட்டு நம்மை கூர்ந்து பார்த்தார். "யோவ்.. படிக்கிற காலத்திலேயே இதெல்லாம் நமக்கு மண்டக்குள்ள ஏறாது.. இப்பப்போய் கேக்கறீயே..!" என அவரை சபித்துக்கொண்டே "ஹாங்.. ம்ம்..when the buyer buys something.." என இழுத்தேன். அதற்க்குள் அவர் "wait…wait.. ..no kite-flying ..OK?" .."உனக்கெல்லாம் யாருய்யா வேல குடுப்பா?  இரு.. ஒரு எரநூறு கொறைச்சே கொடுக்கச்சொல்றேன்" என சொல்லி கம்பெனிக்கு அனுப்பினார்.  

நான் வேலையில் சேர்ந்த கம்பெனி நகரை விட்டு சுமார் 30 கி.மீ. தொலைவில் பீதாம்பூர் என்றவூரில்.. ஒரு பிஸ்கட் தயாரிக்கும் கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் ஆபீசர் வேலை.  கம்பெனியின் MDக்கு 35 வயதுதான் இருக்கும். அவரது அம்மா ம.பி.மாநில தொழில்துறை செயலர். மகனுக்கு எல்லா உதவிகளும் செய்து கம்பெனி ஆரம்பித்து, பொது மக்களின் பங்குகளுடன்  நிறைய பணம் திரட்டி, கொஞ்சம் சுருட்டி... MDக்கு டெக்னிக்கல் ஆலோசனை என்ற பெயரில் சிலர் தரம் குறைவான மெஷின்களை வாங்க வைத்து தத்தம் கமிஷன்களை வாங்கிக்கொண்டு அபேஸ்..

வேலையில் சேர்ந்து முதல் மூன்று மாசம் சம்பளமே கிடைக்கவில்லை.. "எல்லாம் சேர்த்து வைத்து பின்னால் கொடுப்பார்கள் தானே?" என விகல்பமாக கேட்ட என்னை அக்கவுண்டன்ட் பண்டாரி ஏளனமாக பார்த்து "ஊக்கும்.. பின்னால் தான் கொடுப்பார்கள்" என பின்புறத்தை எட்டி உதைக்கிற மாதிரி சைகை செய்தான். சம்பள தினம் வருவதாக தெரியவில்லை. ஒரு நாள் MD எல்லோரையும் கூப்பிட்டார். ஆவலுடன் ஓடினோம். முதலில் ஆபீஸ் பையனிடம் "தும்கோ அபி கித்னா பைசா  ச்சாஹியே?" என கேட்டதும் அந்த படுபாவி.. " ஹமாரா போஜனாலயாமே அஸ்ஸி ருப்பியா ஜமா கரேகா தோ கானா மிலேகா” ….என்ற அவன் முன் அஸ்ஸியை விட்டெறிந்த பின்  MD என்னைப்பார்த்தார். "பாவிகளா! அவனுக்காவது போஜனாலயா பாக்கி... எனக்கு தங்கற ஆலயாவுக்கே 3 மாத வாடகை பாக்கி" என கெஞ்சி அட்வான்ஸ் ஆயிரத்தை அவரிடம் கறந்தேன்.

பாக்டரி செயல்படும் லட்சனம் இன்னும் கேவலம். நாலைந்து வகை பிஸ்கட்டுகள் உற்பத்தி செய்து ம.பிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்புகிறார்கள். ப்ரொடக்‌ஷன் மானேஜருக்கு 4 மாத சம்பள பாக்கி. ஆந்திராக்காரன் வேறு. காட்டமாக இருந்தான். கமிஷன் வாங்கிக்கொண்டு நம் தலையில் கட்டப்பட்ட க்ரீம் பிஸ்கட் மெஷின் கிட்டத்தட்ட தையல் மெஷின் சப்தத்துடன் இயங்கியது. முதலில் கீழ் பக்க பிஸ்கட், கன்வேயரில் மெதுவாக நகர்ந்து வந்து நடுவே நிற்க மேலிருந்து 'ப்ளக்'கென கொஞ்சம் க்ரீம் கெட்டி சட்னி மாதிரி அந்தபிஸ்கட்டின் மேல் உட்காரும். அடுத்து இன்னொரு பிஸ்கட் மேலிருந்து வந்து க்ரீம் மேல் வைக்கப்பட்டு வலது பக்கம் நகர்ந்து 10 பிஸ்கட்டுகள் சேர்ந்த பின் பேக் செய்யப்படும். இதெல்லாம் ஒரு நல்ல மெஷினில் நடக்க வேண்டிய சமாசாரங்கள். ஆனால் அங்கு நடப்பது வேறு. நடுவே வந்து நிற்க வேண்டிய பிஸ்கட் தயங்கியவாறு வந்து கொஞ்சம் முன்னாடியே நின்றுவிட, மேலிருந்து கொட்டப்படும் க்ரீம் வாழையிலையில் வைக்கப்படும் தொக்கு மாதிரி பச்சக்கென்று கன்வேயரில் வந்து உட்காரும். உடனே மேல் பிஸ்கட் அதன்மேல் உட்கார,சற்று தள்ளி தனியாக யோசனை செய்துகொண்டிருந்த பிஸ்கட் திடீரென நடுவே வர, அந்த கலவையின் மேல் மறுபடியும் க்ரீம் விழ, அடுத்த சில நிமிடங்களில் அந்த இடமே ஏதோ குழந்தை கக்கா போன மாதிரி இருக்கும். உருப்படுமா அந்த கம்பெனி?

பிஸ்கட் தயாரிக்க தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் விஜிடபிள்  கீ(ghee). இது மூன்றும் கொள்முதல் செய்து 6 மாத பாக்கி வைத்ததால் சப்ளையர்கள் தினமும் வந்து என்னை சரமாரியாக திட்டுவார்கள். ஒருவருடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. திரும்பவும் பாம்பே போக தீர்மானித்தேன். 



இதற்குள் கணபதியும் பாம்பே போய் விட்டான். அங்கே CIFCO க்ரூப் என்ற பெரிய கம்பெனியில் சீனியர் வைஸ் ப்ரெஸிடென்ட் பட்டாபி என்பவர் இருக்கிறாராம். அவர் நாம் ஆனந்த் ராவின் நண்பர் என உபரி தகவலையும் கணபதி கொடுக்க, அந்த கம்பெனியில் சேர ப்ளான் செய்தேன். ஆனந்த் ராவுக்கு நம்மை கண்டாலே பிடிக்காதே!. அவருக்கு தெரியாமல் அவர் பேரையே சொல்லி CIFCO பட்டாபியிடம் சேர்ந்தது தனி கதை.. அது அப்புறம்..        

No comments:

Post a Comment