Tuesday, July 9, 2013

2nd Class waiting room..

2nd க்ளாஸ் வெயிட்டிங் ரூம்....
அலகாபாத் யுனிவர்சிடியில் B.Sc தேர்வுகள் முடிந்து ஒரு மாத விடுமுறையை திருச்சியில் கழித்த பின் மீண்டும் பிரயாணம். மதராஸ் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் கங்கா காவேரி எக்ஸ்ப்ரஸ் 18 பெட்டிகளை இழுத்துக்கொண்டு மெதுவாக கிளம்பியது. இது 79இல்..
நிறைய மிலிட்டரிக்காரர்களும், காசி யாத்திரை செல்பவர்களும் செய்யும் 36 மணி நேர பயணம். ப்ராட்கேஜ் என்பதால் பெரிய ரயில் பெட்டிகள்.
'உங்க பெர்த் நெம்பர் அறுபதா? அப்ப நீங்க மேலே போயிடுவீங்களா?' என காலங்கார்த்தாலே அமங்கலமாக கேட்பவர்களை மண்டையில் நறுக்கென குட்டலாம் போலிருக்கும்.
சீட்டில் உட்கார்ந்திருப்பவர்கள் திடீரென 'டொய்ங்' என ஒரே நேரத்தில் காலைத்தூக்கினாrல் யாரோ பிரகஸ்பதி அத்தப்பக்கம் தண்ணீரை கீழே கொட்டிவிட்டான் என அர்த்தம்.
இட்லி சாப்பிட்ட கையோடு இரண்டு பெர்த்துக்கு நடுவே புடவையால் குழந்தைக்கு தூளி கட்டிவிட்டு, ஓடும் ரயிலின் ஜன்னலுக்கு வெளியே நீட்டி யாரோ ஒரு பெண் கையைக்கழுவ, அடுத்த ஜன்னலிலிருத்து 'எய்.. யாருங்க அது' என சத்தம் கேட்கும்.
ஸ்டேஷன்களுக்கிடையே ரெயிலில் வரும் பட்டானி பொறிகடலை, பஜ்ஜி என கண்டதை வாங்கி சாப்பிட்டு முழு வயிற்றை நிரப்பிக்கொண்ட சிலர், அடுத்த ஸ்டேஷனில் சுடச்சுட உப்புமா சாப்பிடுபவர்களை பார்த்து பொறாமையுடன் 'நல்லா இருக்குங்களா?' என கேட்பது சகஜம்.
'வண்டி ஒரு மண்ணேரம் லேட்டு.. இடார்ஸி தாண்டினதும் மேக்கப் பண்ணீருவான்' என ஆருடம் சொல்லும் கணவான்கள் சிலர்.
சீட்டிலிருந்து ஒரொரு கம்பியாக பிடித்து மெதுவாக போன பெருசுகள் டாய்லட் கதவைத்திறந்து பார்த்து படாரென மூடிவிட்டு ஒரொரு கம்பியாக பிடித்து திரும்பி வந்து உட்கார்ந்ததும் '’ராஸ்கல்!.. போய்ட்டு தண்ணி ஊத்த மாட்டானுங்க!' என திட்ட, எதிர் சீட்டுக்காரர் ஜன்னல் பக்கம் திரும்பிக்கொள்வார். போனதே அந்த எதிர்சீட்டுக்காரராகத்தான் இருக்கும்.
தலை வாறும் சீப்பு விட்டு சுற்றினால் மட்டுமே ஓடும் ஃபேன்கள், கடகடவென அதிர்ந்து தண்ணீரை நம் மேலே பீச்சி அடிக்கும் வாஷ்பேசின் குழாய்கள், குறுக்கே முட்டு கொடுத்தால் மட்டுமே கீழே இறங்காத கண்ணாடி ஜன்னல்கள், எப்படி உட்கார்ந்து போனாலும் எட்டாத தொலைவில் குழாய் பொருத்தப்பட்ட டாய்லெட்கள்..இதெல்லாம் இல்லாமல் ரயில் பயணமா?
குண்டக்கல், நாக்பூர், வார்தா, ஜபல்பூர், சிர்பூர் காகஸ் நகர், இடார்சி என்ற விதவிதமான பெயர்களில் ஊர்கள். நாக்பூரில் பெரிய சந்த்ரா (ஆரஞ்சு), இடார்சியில் மைதாவில் செய்த பூரி-ஆலு சப்ஜி, மட்காவில் தேநீர், ச்சிவ்டா (பொரித்த அவல் கடலை) ... இது போதாதென்று அம்மா கட்டிகொடுத்த புளியோதரை, துவையல், உ. கிழங்கு சிப்ஸ்... இதெல்லாம் சாப்பிட்டுக்கொண்டு 'பர்மா ரமணி' நாவல் படித்துக்கொண்டே அலுப்பு தெரியாமல் பயணம் முடிந்து மூன்றாம் நாள் வாரணாசிக்கு 3 மணி நேர முன்பு அலகாபாத்தில் இறக்கும்போது தலை முடி, மூக்கு முழுக்க கரித்தூள்.
அலகாபாத் ஜங்ஷன் விட்டு வெளியே வந்து 'தர்பாங்கா காலோனி சலோ' என டோங்காவில் ஏறி அமர்ந்தேன். உயர்நீதிமன்றம் தாண்டி மிக அகலமான சிவில் லைன்ஸ் ரோடு. ரோடெங்கும் ராஜ்தூத், எஸ்டி மோட்டார் பைக்குகள், வெஸ்பா, லாம்ப்ரட்டா ஸ்கூட்டர்கள், ஃபியட் கார்கள்.. ரோட்டின் இரு புறமும் அடர்த்தியான மரங்கள்..வங்கிகள், கடைகள், பான்வாலாக்கள், 'சித்சோர்', ‘ஸ்வாமி’ படம் ஓடும் நிரஞ்சன் தியேட்டர், ஆலு டிக்கியா மற்றும் சர்தார்ஜி லஸ்ஸி கடைகள், மண் சட்டியில் நிலக்கரி போட்டு பொறி கடலை விற்கும் பிகாரி ரோட்டுக்கடைகள், .. மிகப்பெரிய ஹனுமார் கோவில்.. வாசலில் நிறைய ஃபூல் மாலா, பேடா கடைகள்..
என் அக்கா திருமணமாகி அங்கே தான் இருந்தாள். மைத்துனர் (என் தாய் மாமா) பத்ரி மாமா 'நைனி'யில் ஒரு மத்திய அரசு பொது நிறுவனத்தில் எஞ்சினீயர். திருச்சி செயின்ட் ஜோசப்ஸில் பி.யு.சி முடித்து REC யில் இஞ்சினியரிங் கிடைக்காததால் பிற்காலத்தில் C.A தான் படித்து முடிப்போம் என தெரியாமல் நான் அலகாபாத் யுனிவர்சிடியில் BSc படித்துக்கொண்டிருந்தேன்..
கம்பெனி கார்டன் வழியாக வரும்போது ஆளறவமற்ற ரோட்டில் அங்கங்கே துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள். திடீரென, நெற்றியில் திலகமும் முதுகில் துப்பாக்கியுடன் புல்லெட்டில் கப்பர் சிங் மாதிரி வரும் கிராம டாகூர்கள் நடுரோட்டில் யாரையாவது படீரென சுட்டு வீழ்த்துவது படு சகஜம். அதனால் தான் போலிஸ் அங்கங்கே. டோங்கா மெதுவாக வீடு வந்து சேர்ந்தது. மறுநாள் பல்கலைக்கழகம் போகவேண்டும்.
அலகாபாத் பல்கலைக்கழகம் மிக பிரம்மாண்டமானது. அப்போதெல்லாம் இந்தியாவில் IAS தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மிக அதிகமானவர்கள் கான்பூர், லக்னௌ மற்றும் அலகாபாத்காரர்கள் தான். ஆங்கிலப்புலமை குறைவாக இருந்தாலும் கணிதம், விஞ்ஞானம் மற்றும் சட்டத்துறைகளில் மிகவும் அறிவு கூர்மையுடையவர்கள் .
நெற்றியில் செங்குத்தாக சிவப்பு வர்ண திலகம், உதட்டில் பான் தாம்பூலச்சாயம், சஞ்சீவ் குமார் மாதிரி தோளில் சால்வை…இது அனைத்தும் இருந்தால் அவர் மாணவர் யூனியன் தலைவர் என அர்த்தம். ' நமஷ்கார்... க்யா ஹால் ஹெ.. பந்து ?'...என மாணவர்களுக்குள் குசலம் விசாரிப்புகள். வருடத்தின் முக்காவாசி நாள் ஸ்ட்ரைக்.. பந்த். எல்லா மாணவர்களும் பாதி நேரம் பல்கலை வளாக தேநீர் கடைகளில் கூடியிருப்பார்கள். பிஸ்கூத், பஜியா, கச்சோரி மற்றும் பான் விற்பனை அமோகமாக இருக்கும்.
வெறும் இருபது இருபத்தைந்து முக்கிய கேள்வி பதில்கள் கொண்ட நோட்ஸ் புத்தகங்கள் எல்லா கடைகளிலும் சல்லிசான விலையில் கிடைக்கும். பரிட்சைக்கு ஓரிரு வாரங்கள் முன் அதை வாங்கி படித்தாலே வெற்றி நிச்சயம். அந்த நோட்ஸ் புத்தகங்கள் முன் நம்மூர் கோணார் நோட்ஸெல்லாம் ரொம்ப டஃப்.
பத்ரி மாமாவைப்பற்றி... அலகாபாத் தமிழ் சங்கத்தின் செயலர். திருச்சி சேஷசாயி தொழில் கல்லூரியில் டிப்பளமா படித்தவர். தந்தையுடன் (என் தாத்தா) ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் தெரு, கீழ சித்திரை வீதியில் பல வருடங்கள் குடியிருந்தவர். ஶ்ரீரங்கத்தில் என் மாமாக்கள் அடிக்காத லூட்டி கிடையாது. தாத்தா போஸ்ட் மாஸ்டர். முன்புறம் போஸ்ட் ஆபிஸ் பின்னால் வீடு. மாமா, சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதையில் வரும் சில பாத்திரங்களுடன் நிறைய பொழுதை கழித்தவர். வாலி தன் வீட்டு மொட்டை மாடியில் நடத்தும் டிராமாக்களில் இருந்தவர்.
அலுவலகத்தில் நல்ல பெயர் அவருக்கு. பாஸின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால் கான்பூர், லக்னௌ, புது டெல்லி போன்ற இடங்களுக்கு டெண்டர் உள்ளிட்ட அலுவல் நிமித்தம் மாமாவை அடிக்கடி அனுப்புவார்கள். அரசுத்துறைகளில் அவருக்கு பரிச்சயமான ஆட்கள்… லஞ்ச லாவண்யங்கள் இல்லாமல் சாதுரியமாக பேசி பான் பீடா வாங்கிக்கொடுத்தே நிறைய காரியங்களை சாதித்து முடித்து விடுவார். பல வருடங்கள் அலபாபாத்தில் இருப்பதால் சரளமான ஹிந்தி. பஞ்சாபி கத்ரி, காயஸ்த், பனியா, பெங்காலி என எக்கச்சக்கமான நண்பர்கள். வருடத்திற்கு இரு முறை என்னை பெனாரெஸ் கூட்டிப்போவார்.
விஷயத்திற்கு வருகிறேன். அன்று மாமா அவசரமாக கான்பூர் செல்ல வேண்டியிருந்தது. தனது ஜாவா மோட்டார் பைக்கை ரயிலடியில் விட்டு விட்டு தீன் சுகியா எக்ஸ்ப்ரஸ்ஸில் கிளம்பி கான்பூர் போனார்.. பணியை முடித்து மாலை அலகாபாத் திரும்பும் முன் பாசிடமிருந்து போன்.. உடனே டெல்லி போகச்சொல்லி. பணம் கையில் கொஞ்சமாக இருந்ததாலும் அன்றிரவே கிளம்பி காலை 8 மணிக்கு டெல்லி சென்றடைந்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் அவசரமாக 2ஆம் வகுப்பு வெயிட்டிங் ரூம் போய் பெட்டியை ஒரு மூலையில் வைத்து விட்டு சவரம் செய்து கொண்டிருந்தபோது வெள்ளை ஜிப்பாக்காரன் ஒருவன் மாமாவின் பெட்டியையே பார்த்துக்கொண்டிருந்தான். சாந்தினி சௌக் செல்ல வேண்டிய அவசரத்தில் குளிக்கப்போன மாமா 10 நிமிடங்களில் வெளியே வந்தபோது பெட்டி திறந்திருக்க பணப்பையை காணோம். வெள்ளை ஜிப்பாக்காரன் அவசரமாக வெளியேறிக்கொண்டிருந்தான்.
சந்தேகமே இல்லாமல் அவனை நெறுங்கும் முன் அவன் ஓட ஆரம்பிக்க, அடுத்த சில நொடிகளில் மாமா அவனை பிடித்து 'கிதர் ஹை மேரா பைசா?' என கேட்க வெள்ளை ஜிப்பாக்காரன் உச்சஸ்தாயியில் கத்தினான். "சாலே! தும் மத்ராசி லோக் க்யா சமஸ்தா? கூடியிருந்தவர்கள் வெள்ளை ஜிப்பாக்காரனுக்கு சாதகமாக பேச, மாமாவிற்கு அழுகை முட்டத்தொடங்கியது. 'பணத்தை வேறு எங்காவது தொலைத்து விட்டிருப்பாய்... ஒழுங்கா வீடு போய் சேர்'.. என்ற பாணியில் மாமாவை அடிக்காத குறையாக கூட்டம் விரட்டியது. எல்லாம் வெள்ளை ஜிப்பாக்காரன் ஆட்கள் போலும். மாமா எதுவும் சொல்ல முடியாமல் ஸ்டேஷன் படிகளில் ஏறி முதல் பிளாட்பாரத்திற்கு செல்ல அங்கே ஒரே அமளி.
முதல் பிளாட்பார தண்டவாளத்தில் ஒரே கூட்டம். 'யாரோ ஒருவன் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் வந்து இடித்து விட்டது' என்று கூட்டத்தில் யாரோ சொல்ல.. கூட்டத்தை விலக்கி அங்கே எட்டிப்பார்த்தார் மாமா.
தண்டவாளத்திற்கு அப்பால் அதே வெள்ளை ஜிப்பாக்காரன் பாதி மூடிய கண்களுடன் தரையில் உட்கார்ந்திருந்தான் இரண்டு தொடைகளை நீட்டியபடி. தொடைகளுக்குக்கீழ் முழங்கால்கள் இரண்டையும் காணோம்.. கொஞ்சம் தள்ளி வெட்டப்பட்ட முழங்கால் இரண்டும் துண்டுகளாக பக்கத்தில் கிடந்தன. விபத்து நடந்து சில நிமிடங்களே ஆனதால் வெட்டப்பட்ட சதைப்பகுதி இன்னமும் வெள்ளையாக இருக்க ரத்தம் கூட கசிய ஆரம்பிக்கவில்லை.
ஒரு கணம் மாமா விக்கித்து நின்றார். அதே நேரம் வெள்ளை ஜிப்பாக்காரன் கூட்டத்தின் நடுவே தெரிந்த மாமாவின் முகத்தை பார்த்து விட, மறுகணம் அவரை பார்த்து ஏதோ சொல்ல முயன்று கையை தூக்கி காட்டி அப்படியே மயக்கமடைந்தான். அவன் யாரை காட்டுகிறான் என்று எல்லோரும் திரும்பி பார்க்க, மாமா அங்கு இல்லை… 

No comments:

Post a Comment