சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களுடன் 20, 25 வருடத்திற்கும் மேலாக இணைந்து இசைப்பயணம் மேற்கொள்ளும் வெங்கட்டின் ரசிகன் நான். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இவரது percussion வாசிப்பில் மயங்கிக்கிடக்கறேன். டீவி நிகழ்ச்சிகளில் தபலா என்றால் நினைவுக்கு வருபவர் இவர் தான். 94இல் பஹ்ரைன் வந்த பிறகு தான் இவரை டீவி நிகழ்ச்சிகளில் பார்க்க ஆரம்பித்தேன்.
சப்தஸ்வரங்களில் ஆரம்பித்த இவரின் மேல் எனக்கிருந்த ஈர்ப்பு இம்மியளவும் குறையாமல், இப்போதும் QFR (Quarantine From Reality) நிகழ்ச்சிகளில் அவரது தாள வாசிப்பை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.
ஏராளமான நிகழ்ச்சிகளில் வாசித்திருக்கிறார். SPB போன்ற ஜாம்பவான்கள் மேடையில் பாராட்டும்போதும் கூட வெட்கம் கலந்த குழந்தை போல, வெகுளியான சிறு புன்னகையுடன் கை கூப்புவது மட்டுமே.
மனுஷனுக்கு தெரியாத தாள வாத்தியங்களே இல்லையெனலாம்.
சுபஶ்ரீ அவர்கள் QFRஇல் எந்த பாடல் தேர்வு செய்தாலும் அதில் இவர் வாசித்திருப்பது தபலா, மிருதங்கம், டோல், ரிதம் பேட், தவில், டப், பேங்கூஸ், காங்கோ, உடுக்கை, உருமி, பம்பை, டமாரம் மற்றும் பெயர் தெரியாத வாத்தியங்கள் என பெரிய லிஸ்ட்டே போடலாம். பெயர் தெரியாததால் நான் குறிப்பிடாத மேலும் சில வாத்தியங்கள் விட்டுப்போய் இருக்கலாம். அதிலும் ஒரே பாடல் ட்ராக்கிற்கு தனித்தனியாக இரண்டு, மூன்று வாத்தியக்கருவிகளைக்கூட வாசிக்கிறார்.
வாசிக்கும்போது முகத்தில் எந்தவித அயற்சியோ, கஷ்டமோ காண்பிக்காமல் சிரித்த முகத்துடன் வாசிப்பது இவரது சிறப்பு.
எத்தனையோ பாடல்களில் இவரது தாள வாசப்பை நான் ரசித்தருந்தாலும், QFRஇல் சுபஶ்ரீ அவர்கள் ஒருமுறை 78இல் வெளி வந்த ஹீரோ, ஹீரோயினின் முதல் படம் என சஸ்பென்சோடு சொன்னபோது அது நிச்சயம் ‘ மாஞ்சோலை கிளி தானோ’ தான் என நான் ஊகித்தாலும் ‘ஆஹா! பாட்டில் பல்லவிக்கு முன் அந்த ஆரம்ப தாள இசையை நம்ம வெங்கட் பிச்சி உதறப்போகிறார்!’ என மறுநாள் வரை ஆவலுடன் காத்திருந்தேன். யப்பா! மூன்று தபலா கருவிகளைக்கொண்டு வாசித்து அசத்தி விட்டார்.
No comments:
Post a Comment