Friday, June 20, 2025

டோம்பிவிலி ஶ்ரீதர்(சொக்கன்)

 பம்பாயின் புறநகர் பகுதியான காட்கோபரில் பாங்க் ஆப் பரோடா ராஜ்வாடி கிளையில் வேலை செய்துகொண்டிருந்தான் நண்பன் ஶ்ரீதர். நண்பர்கள் மத்தியில் சொக்கன் என அழைக்கப்படுபவன். என் ரூம் மேட் முரளி (Murali Soundarrajan )மற்றும் ரங்கு, ஶ்ரீராம் மூலம் எனக்கு பழக்கம். என் வயதோ அல்லது ஒரு வயது சிறியவன். ஶ்ரீதர், ரங்கு, முரளி எல்லோருக்கும் திருச்சி ஶ்ரீரங்கம். அதில் ஶ்ரீதர் நேதாஜி ரோட்டு கேங் லீடர். நேதாஜீ ரோடில் ஒருத்தர் விடாமல் கலாய்ப்பதில் மன்னன் ! ராஜு எனப்படும் நண்பர் Swaminathan Ramasubramanian (மத்யமர் க்ரூப்)னும் இந்த நேதாஜி கேங்கில் ஒரு மெம்பர். ஶ்ரீதர் அளவிற்கு ராஜு எல்லோரையும் கலாய்த்தாரா தெரியாது. ஶ்ரீதர் பள்ளி நாட்களில் தனக்குக் கிடைச்ச புது சைக்கிளை ரோசக்கார தம்பிக்குத் தராத பாசக்கார அண்ணன்! சரியான லூட்டிப்பேர்வழி.

திருச்சி ஜாலி ஜமாலில் பி.காம் முடித்து பாங்கிங் சர்வீஸ் பரிட்சை எழுதி பாங்க் ஆப் பரோடாவில் வேலை கிடைத்து நண்பரகளை விட்டுவிட்டு முதன் முதலில் ஶ்ரீரங்கத்தை விட்டு கிளம்பி பம்பாய் வந்தவன். சட்டென ஹிந்தி மற்றும் மராட்டி கற்றுக்கொண்டு அப்போதே சரளமாக பேசக்கூடியவன். பின்ன! தூர்தர்ஷன் சமாச்சார் மற்றும் நுக்கட், ஏ ஜோ ஹெ ஜிந்தகி என ஒரு ஹிந்தி சீரியல் விட்டு வைக்க மாட்டான்.
90 அல்லது 91 இருக்கும். அப்போது தான் புதிதாக கல்யாணமானவன். மனைவிக்கு ரயில்வேயில் வேலை. குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக்கொண்டிருந்த இவனுக்கு அடுத்து தங்கைக்கு நல்ல வரன் பார்த்துக்கொண்டிருந்தான். தங்கையும் இவனுடன் தங்கியிருந்தாள்.
அவ்வப்போது செம்பூர் செட்டா நகரில் எங்கள் அறைக்கு வந்து அரட்டை அடுத்துக்கொண்டிருப்பான். அப்ப நம்ம நடுவகிடு ரங்கு விக்ரோலி பகுதியில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான். ஶ்ரீராம் எப்போதும் ரங்குவை ‘களவாணிப்பய’ என விளிப்பது வழக்கம். ICWA மற்றும் ACS முடித்து கம்பனி செகரட்டரி கம் ஃபைனான்ஸ் மேனேஜர் உத்தியோகம். விக்ரோலி கிழக்கில் இறங்கி சமயபுரம் பக்தர் போல ரோட்டோரம் அப்படியே நடந்து, கோத்ரேஜ் காலனியை தாண்டினால் அவனது கம்பெனி வரும்.
நம்ம சொக்கன் ஒரு நாள்
ரங்குவிடம் ‘ரங்கு என் தங்கை டிகிரி முடிச்சட்டு மேற்படிப்பு படிக்கனும். என்ன படிக்கலாம்னு ஒரு ஐடியா குடுக்கறியா?’ என கேட்க ரங்கு (களவாணிப்பய!) கிளம்பிப்போனான். பிரம்மச்சாரி வேற. இளையராஜா காதல் பாடல்கள் கேட்டு ரசிப்பவன். ரோட்டில் எதிரே ஒரு அழகான பெண் வந்தால் ‘என்ன அழகா இருக்கா பாருங்க! நீங்க என்ன நினைக்கிறீங்க ஸ்ரீதர்!’ என காய்ந்து கிடக்கும் எனக்கு தீணி போடுவான். நண்பனின் தங்கைக்கு அட்வைஸ் குடுக்க போனவன், ‘மேற்படிப்பாவது மண்ணாங்கட்டியாவது! என் செக்ரடரி வேலைய விட்டுட்டா. நீங்க ஜாயின் பண்றீங்களா?’ என அவளை தன் செக்ரடரியாக சேர்த்துக்கொண்டான் களவாணிப்பய! அதுபற்றி நாங்கள் ரங்குவை பல நாட்கள் கலாய்த்து கலாய்த்து அவனுக்கு அவள் மேலே நிஜமாகவே காதல் வந்து கல்யாணமும் ஆகி 25 ஆகி விட்டன. 2 பொண்கள்.
பம்பாய் போன இரண்டு மூன்று வருடங்களிலேயே அந்த காலத்திலேயே சமத்தா லோன் போட்டு கிட்டதட்ட 4 லட்சத்துக்கு டோம்பிவிலியில் ஃப்ளாட் வாங்கி, பாலு, மோகன், சுரேஷ், சுதர்சனம், வேதராமன், சேகர் என நண்பர்கள் புடைசூழ மணக்க, மணக்க சமைச்சு சாப்பிட்டுக்கொண்டு, தினமும் அரட்டை, நண்பர்களை கலாய்த்தல், வாரத்திற்கு ஒரு சினிமா ப்ளஸ் மலையாள மெஸ் ஒன்றில் சூப்பரான டிபன் என கும்மாளமாய் குடித்தனம் பண்ணிக்கொண்டு பிறகு தான் கல்யாணமாகி குடும்பஸ்தனானான் ஶ்ரீதர்.
பிறகு நான் பம்பாய் பக்கம் வந்து விட்டேன். ரங்குவுடன் தொடர்பு இருந்தாலும் ஶ்ரீதர் எங்கே இருந்தான் எனத்தெரியவில்லை. பல வருடங்கள் கழித்து மறுபடியும் ஶ்ரீதரின் தொடர்பு கிடைக்க ஃபேஸ்புக்கில் எங்கள் நட்பு தொடர்ந்தது. பூனா பக்கம் இன்னும் பாங்க் ஆஃப் பரோடாவில் இருக்கிறான். இந்த வருடமோ அடுத்த வருடமோ ரிடையர்மென்ட் அவனுக்கு. ஒரே பெண்.
இன்று பிறந்தநாள் காணும் பால்ய நண்பன் Sridharan Rajaraman னின் ஓவியம் வரைந்து, அந்த பழைய பம்பாய் நாட்களை அசை போட்டு வாழ்த்துவதில் என்னவொரு சுகம்!

No comments:

Post a Comment