Friday, June 20, 2025

திடீர் இசை நிகழ்ச்சி

 பையனின் கல்யாணத்திற்கு முதல் தினம் வரவேற்பு நிகழ்ச்சி. இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு நண்பர்களை வரவேற்றுக்கொண்டும், மேடைக்கு ஓடி மணமக்கள் மற்றும் நண்பர்களுடன் புகைப்படத்திற்காக நின்றுகொண்டும் இருந்த பால்ய நண்பன் Ganapathi Subramanian திடீரென என்னை அழைத்தான்.

‘ஶ்ரீதரா! உனக்கு Santhosh Subramanian ஐ தெரியுமில்லையா?’ மேடம் Subhasree Thanikachalam அவர்கள் இயக்கும் QFR (Quarantine From Reality) நிகழ்ச்சியில் பாடும் பாடகர்களில் ஒருவர் சந்தோஷ். அற்புதமாக பாடக்கூடியவர். குறிப்பாக திரு. TM சௌந்தர்ராஜன் அவர்கள் பாடிய பாடல்களை சந்தோஷ் அபாரமாக பாடுவார். அவரது ‘எங்கே நிம்மதி’ பாடலைக்கேட்டு மலைத்துப்போனவர்களில் நானும் ஒருவன். உடனே அவரது ஓவியத்தை வரைந்து அவரைப்பற்றியும் முகநூலில் எழுதியிருந்தேன். அதற்குப்பின் என் இனிய நண்பரானார் சந்தோஷ்.
‘சந்தோஷ் என் ஃப்ரெண்டு தாம்ப்பா! என்ன விஷயம்?’ என கேட்டேன். ‘ஒன்னுமில்லே.. நாளை மறுநாள் சென்னைல ரிசப்ஷன் வச்சிருக்கோம்ல! கச்சேரி, ஆர்ககெஸ்ட்ரான்னு ஒன்னும் வைக்கலே. இப்ப திடீர்னு தோனிச்சு, ஏதாவது கன்செர்ட் வச்சுக்கலாமான்னு. ஆனா டயம் வேற ஷார்ட். உன் ஃபரெண்ட் சந்தோஷ் ஒரு ப்ரொக்ராம் குடுப்பாரா?’ என கணபதி கேட்ட மறு நிமிடம் சந்தோஷுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். மறுநாள் எனது மற்றொரு நண்பர் கணேஷ் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சந்தோஷின் ஆர்க்கெஸ்ட்ரா தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால் அதில் கொஞ்சம் பிஸியாக இருப்பதாக சந்தோஷ் பதில் அனுப்பியிருந்தார். மேலும் நம் நிகழ்ச்சிக்கு பக்க வாத்திய கலைஞர்கள் வேறு கிடைக்க வேண்டும். ‘ஶ்ரீதர்! நாளைக்கு காலைல சொல்லட்டுமா?’ எனக்கேட்டு சந்தோஷிடமிருந்து போன்.
மறுநாள் கணபதி இல்லத்திருமணம் கோவையில் இனிதே நடந்து முடிந்தது. நண்பகல் வரை சந்தோஷிடமிருந்து போன் இல்லை. முகூர்த்தம், மதிய உணவு முடிந்து ரயிலில் சென்னையும் வந்துவிட்டோம். சந்தோஷிடமிருந்து போன். ‘சார்! தபலாக்காரர் மட்டும் கிடைக்கலை. மோர்சிங், வயலின், மிருதங்கம் தயார்’
முதலில் கர்நாடக சங்கீதம். சில கீர்த்தனைகள். அப்புறம் திரையிசை பக்திப்பாடல்கள் பாடுவதாக சந்தோஷ் ஒப்புக்கொண்டார். தபலாக்காரர் மட்டும் கிடைக்கவில்லையென்றார்.
எனக்கு தபலா அவசியம் தேவை எனப்பட்டது. குறிப்பாக ‘சிந்தனை செய் மனமே’, ‘கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்’ போன்ற பாடல்களுக்கு மிருதங்கம் வைத்து சமாளிப்பது இயலாது. மேலேயிருந்து பார்க்கும் TMS அவர்களுக்கே பிடிக்காது.
மாலை சந்தோஷிடமிருந்து போன். தபலாவும் கிடைத்து விட்டதாம்.
மறுநாள் மாலை 7 மணியளவில் வரவேற்பு நிகழ்ச்சியில் சந்தோஷ் அவர்களைப்பற்றி ஓரிரு நிமிடங்கள் பேசி வந்திருந்தவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்திய பின் கச்சேரியை ஆரம்பிக்க வைத்தது என் வேலை.
இது போன்ற கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க நம் மக்களுக்கு எங்கே நேரம்? ‘கஜவதனா..’என ஆரம்பித்த சந்தோஷ் அடுத்தடுத்து வரிசையாக ‘ஶ்ரீனிவாச திருவேங்கடமுடையான்..’ என பாட ஆரம்பித்தார். மக்கள் வழக்கம் போல உச்ச ஸ்தாயியில் அரட்டை.. அஹ்ஹஹ்ஹா என சிரித்து நண்பர்களை கட்டிப்பிடித்து பேசிக்கொண்டும், டைனிங் ஹாலுக்கு போவதுமாக இருக்க கணீரென திரையிசை பக்திப்பாடல்களை பாட ஆரம்பித்தார் சந்தோஷ்.
‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ …. ‘யார் தருவார் இந்த அரியாசனம்’ ‘சிந்தனை செய் மனமே’ என சந்தோஷ் ஆரம்பிக்கவும் மக்கள் சட்டென மௌனம் காத்து, பேச்சை நிறுத்தி ஆர்வமுடன் ரசிக்க ஆரம்பித்தார்கள். புகைப்படங்கள் மற்றும் வீடியோ. சந்தோஷ் நம்மை பல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச்சென்றார்.
‘சட்டென மைக்கை எடுத்தேன். ‘நண்பர்களே! பாடல்களை ரசிப்பதல்லாமல் நீங்கள் விரும்பும் பாடல்கள் எதுவாக இருந்தாலும் கேளுங்களேன். சந்தோஷ் பாடுவார்’ என அறிவிக்க வரிசையாக, on public demand இல் ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’, ‘முல்லை மலர் மேலே’, ‘முத்துக்களோ கண்கள்’ என மக்கள் கேட்டு TMS பாடல்களை தலையசைத்து ரசித்து கேட்டார்கள்.
கடைசியில் அவரது கையெழுத்துப்பாடலான (signature song) மனிதருள் மாணிக்கம் படத்தின் ‘I will sing for you’ வை பாடி நிகழ்ச்சியை இனிதே முடித்தார் சந்தோஷ். இன்னிசை அடைமழை தான் அன்று மாலை.
வெறும் 48மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாசம், நான்கைந்து போன் கால்கள், ஏழெட்டு வாட்சப் குறுஞ்செய்திகள்… அவ்வளவே! சட்டென ஏற்பாடான இனிய நிகழ்ச்சி இது. முதன்முதலில் சந்திக்கும் எனது முகநூல் நண்பர், பட்டயக்கணக்காளர் (CA), தனியே தனது சீ.ஏ ப்ராக்டிஸை சென்னையில் நடத்தும் நண்பர் சந்தோஷ் சுப்ரமணியனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

No comments:

Post a Comment