Friday, June 20, 2025

காலடியின் பிரசித்தமும் நண்பன் வீட்டு உபநயன விழாவும்…

பஹ்ரைன் நண்பன் CA Maheshkumar Narayan னின் சீமந்த புத்திரன் அரஜுனுக்கு காலடியில் உபநயனம். கோவை மருதமலை முருகனை தரிசித்துவிட்டு உடனே காலடி வந்து சேர்ந்தேன். முதல் முறை எனது காலடி பயணம்.
ஆதிசங்கரரின் பிறப்பிடமான காலடி கேரள மாநிலம் பாலக்காட்டிலிருத்து 110 கிமீ தூரம் தான். பூர்ணா நதிக்கரையில் உள்ள அழகிய கிராமம். இங்கு ஆதிசங்கரருக்கு கோயில் எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்களும், புனித யாத்ரீகர்களும் வந்து செல்கின்றனர். முன்பொரு முறை ஆதிசங்கரரின் தாயார் நதியில் நீராடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழ, சிறுவனான ஆதிசங்கரர் பயந்து போய் கிருஷ்ணரை வேண்ட, கிருஷ்ணர், 'சங்கரா! நீ கால் வைத்த இடத்தில் ஒரு நதி பாயும்' என்று கூறி விட்டு மறைய, ஆதிசங்கரரின் தோட்டத்தின் அருகிலிருந்து ஒரு நதி பாயத்தொடங்கியதாக கூறப்படுகிறது. அது தான் பூர்ணா நதியாகும். அதன்பிறகு ஆதிசங்கரர் கிருஷ்ணருக்காக சிறிய கோயில் ஒன்றை கட்டி, அங்கு அச்சுதாஷ்டகத்தை பாராயணம் செய்யத் தொடங்கினார். பிறகு கோயில்களும் ஆஸ்ரமங்களும் வேதபாடசாலைகளும் காலடியைச்சுற்றி தோன்றின.
இப்ப உபநயனம்..
சிருங்கேரி மடத்தில் 2 நாள் விழா. ஆதிசங்கரர் கோயில், கிருஷ்ணர் கோயில் இரண்டும் அதே வளாகத்தில் இருப்பதால் அங்கே போயிருந்தோம். அழகிய சிறுவனாக குருவாயூரப்பன் காட்சியளித்தார். மங்களூர் ஓடுகள் மற்றும் கேரள மரத்தினால் செய்த பழங்கால கோயில். சுற்றிலும் அடர்ந்த மரங்கள்.
அங்கேயே இரண்டு மூன்று மண்டபங்கள். சதாபிஷேகம், சஷ்டியப்தபூர்த்தி, உபநயனம் என விழாக்களும் நடக்கின்றன. அங்கே அவர்களே நமக்காக சமைக்கிறார்கள். காலை டிபன், மதிய சாப்பாடு, நடுவே காபி, மாலை டிபன், இரவு உணவு என வந்தருந்த சுமார் 50 உறவினர்கள் மத்தியில் நாங்களும் CA Maragathavalli யும்.
நண்பனின் அப்பா மற்றும் அம்மா Gomathy Narayan இருவரின் அன்பு உபசரிப்பு, இரு பெரும் கோவில்கள், கோயிலுக்கு வந்திருந்த வேதபாடசாலை மாணவர்கள், சலசலத்து ஓடும் பூர்ணா நதி என அந்த இடத்திற்கே ரம்மியமான சூழல்.
சிறுவன் அர்ஜுன் துறுதுறுவென இருப்பான். பொதுவாகவே why is he doing that? என்பது போன்ற ஏதாவது கேள்விகளை அப்பாவிடம் கேட்டு துளைத்து தன் சந்தேகங்களை தீர்த்துக்கொள்பவன். உபநயன விழா அவனுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது தெரிந்தது.
கர்ப்ப காலத்தையும் கூட்டி எட்டாவது வயதில் பிராமணர் உபநயனம் செய்துகொள்ள வேண்டிய காலம் ஆகும். அப்படியாகப்பட்ட பால்யத்திலே அலாதி புத்திசாலித்தனமும், தெய்வ பக்தி பற்றிய விபரங்கள் தெரிந்த அர்ஜுன் போன்ற சிறுவர்கள் மந்திரங்களை ஸ்பஷ்டமாக உச்சரிக்க முடியும். க்ஷத்ரியர்கள் பண்ணிரண்டு வயது வரையும் வைஸ்யர்கள் பதினாறு வயது வரையும் உபநயனம் செய்யலாம்.
உபநயனம் செய்து கொண்ட சிறுவன் அர்ஜுன், விசுவாமித்திர மஹரிஷி அருளிய காயத்திரி மந்திரத்தை தன் பெற்றோர் முன்னிலையில் ஓதி, பிரம்மோபதேசம் வழங்கப்பட்டு தனது பிரம்மச்சரியத்தினை ஏற்றான். நாளும் மூன்றுவேளை சந்தியாவந்தனம் என கதிரவனுக்கு அதிகாலை, காலை மற்றும் மாலை நேரங்களில் வழிபாடு செய்து காயத்திரி மந்திரம் செபிக்க வேண்டும் என சாஸ்திரிகளால் அறிவுறுத்தப்பட்டான்.
உபநயனத்திற்கான சீர் வரிசை பஞ்சபாத்திர உத்திரிணி, வெள்ளி தாம்பாளம், பிரும்மோபதேச பட்டு, பருப்பு தேங்காய், ஆசீர்வாத வேஷ்டி, புடவை, வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள், குங்குமம், சந்தனம் என சகலமும் பரத்தி வைக்கப்பட்டு மண்டபத்திற்கே தெய்வீக அழகு கூடியது.
சிறுவனின் தலையை கீழ்திசை முதல் பிரதக்ஷிணமாக நனைத்தல், ஒவ்வொரு திக்காக தலையை தர்பையால் துடைத்து எறிதல், கேசவ வபநம், ஸ்நானம் செய்வித்தல், சுத்த வஸ்த்திரம் உடுத்தி, சந்தனம் இட்டு, காலலம்பி, ஆசமனம் செய்து அக்ஷதை ஆசீர்வாதம் செய்து அக்னி உபஸ்தானம் என சகல சாங்கியங்களும் சாஸ்திரிகள் முறையாக செய்ததுடன் சிறுவனுக்கும் ‘இது எதனால் செய்கிறோம்’ என ஒவ்வொரு கட்டத்திலும் விளக்கினார். எல்லாவற்றையும் கவனமாக பார்த்துக்கொண்டான் சிறுவன் அர்ஜுன். சின்ன பையனாயற்றே! அவன் கண்களில் அயற்சி தெரிந்தது. உப்பு காரம் இல்லாமல் நெய் பால் சேர்த்த அன்னத்தால் ப்ருஹ்மசாரிகளுடன் போஜனம் செய்விக்க, எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டான் அர்ஜுன்.
‘எல்லா சம்பத்துகளும் கூடியிருக்கட்டும்.. எல்லா மங்களங்களும் கூடியிருக்கட்டும்’ என பத்து வாத்தியார்களின் பவமான மந்திரங்கள் கணீரென ஜபிக்கப்பட, ஹோமங்கள், அந்த பத்து பேருக்கு பாத பூஜைகள், அவர்களின் கூட்டு ஆசீர்வாதம், ரித்விக்குகளுக்கு தட்சினை வழங்கி எல்லா சம்பிரதாயங்களும் வெகு ஜோராக நடந்தன.
சிறுவனுக்கு இடது தோளிலிருந்து வலது இடைவரை தொங்கும்படியும், பிரும்ம முடிச்சு மார்பின் மேல் வரும்படியும் முப்புரி நூல் (பூணூல்) தரிக்கப்பட்டது. பூணூலில் ரோமம் சிக்கினால் பத்து முறை காயத்ரி ஜபம் சொல்லி அலம்ப வேண்டுமாம். பூணூலில் சாவி போன்ற மற்ற பொருள் எதனையும் நம் வசதிக்கு தகுந்தபடி மாட்டினால் அடி விழும்! 😄
பிக்ஷை அரிசியை முதலில் பையனின் தாயார் CA Shribharathi Maheshkumar போட, அடுத்து தாய் தந்தையின் சகோதரிகள் என மடிசாருடன் மற்ற ஸ்த்ரீகளிடமிருந்தும் பிக்ஷையாக
“பவதி பிக்ஷாம் தேஹி” என கேட்டுப்பெறும் பிக்ஷாகரணம் எனும் சம்ஸ்காரம் செய்யப்படுவதே ‘தான்’ என்ற அகங்காரத்தை கட்டுப்படுத்த என்பதை சாஸ்திரிகள் சிறுவனுக்கு விளக்கினார்.
தான் பிறந்த குலம், கோத்திரம் மற்றும் நாமகரணத்தின் போது வைக்கப்பட்ட பெயர் முதலியவற்றைச்சொல்லி தன்னை முறையாக அறிமுகப்படுத்திக்கொண்டு அபிவாதயே சொல்லி பெரியோர்களை நமஸ்கரித்தான் சர்மா என்கிற அர்ஜுன்.
காலை டிபன்..
பேஸ்ட் போலவும் இல்லாமல் உப்புமா போல உதிரியாகவும் இல்லாமல், கரண்டியால் ஒரு ஸ்கூப் எடுத்து இலையில் தட்ட, சிறிய பந்து போல விழுந்தது நெய் மின்னும் அஜந்தா கலர் கேசரி. அட! ரொம்ப நல்ல இருக்கே என ரசித்து அடுத்த விள்ளலுக்குப்போனால் கேசரியைக்காணோம். அப்ப முதல் ரவுண்டிலேயே ஸ்வாஹா செய்துவிட்டேன் போல. பூப்போன்ற இட்லி, பொங்கல், தாராளமா பொட்டுக்கடலை சேர்த்த தேங்கா சட்டினி, சாம்பார், கார சட்னி எல்லாமே சில நிமிடங்களில் கபளீகரம் செய்யப்பட்டன. அடுத்தடுத்து வந்த இட்லியையும் பொங்கலையும் கூச்சமின்றி உள்ளே தள்ளி வெல்க்ரோ வேஷ்டியை தளர்த்தி காபிக்கு இடம் கொடுத்தேன்.
மதிய கேரள ‘ச்சாப்பாட்டை’ நெய்ப்போளியுடன் உண்டு, சிலாகித்து முந்தைய பதிவில் ஏற்கனவே எழுதி நண்பர்களை வயிறெரிய விட்டாச்சு போதும். சாப்பிட்டதும் நண்பன் மஹேஷின் பெரியம்மாக்கள், சித்திகள், மாமாக்கள் என எல்லோருடனும் பேசிக்கொண்டிருந்தேன். ‘ஞான் படிச்சது ஃபுல்லா கல்லிடைக்குறிச்சியாக்கும். அது கழிஞ்ஞு கோலேஜ் எர்ணாகுளம்.. பின்னே போம்போல ஜோலி.. ஆச்சு ritayarmendu .. நாங்க இப்போ சயான்ல இருக்கோம் ..’ என யாரோ ஒரு மாமா எங்களிடம் விலாவாரியாக சொல்லிக்கொண்டிருக்க, அவர் பக்கத்திலிருந்த மாமி ‘ஶ்ரீதர்! நீ என்ன பண்றாய்? தாமசம் எங்கே? புள்ளேள் என்ன பண்றா? பெரியவனுக்கு வயசென்ன? பார்த்துண்ட்ருக்கியா? என பத்தே நிமிடத்தில் முழு விசாரனை கமிஷன் அமைத்து முடித்து உடனே தன் தங்கையிடம் எங்களைப்பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார். வெள்ளந்தியான மக்கள். குழந்தைகள் வளைகுடாவிலும் அமெரிக்காவிலும் செட்டிலாகி விட , ஆடம்பரம் படாடோபம் என எதுவும் இல்லாமல் மனம் திறந்து வாத்சல்யத்துடன் பாலக்காட்டு தமிழ் பாஷையில் அவர்கள் பேசுவதை ரசித்தோம் நானும் உஷேயும்.. சாரி! உஷாவும் (Usharani Sridhar)
நகர்ப்புறங்களில், அவசர யுகமான இக்காலத்தில், அடுத்தடுத்த வேரியன்ட்டுகளுடன் நம்முடன் பந்துக்களாக ஐக்கியமாகிப்போன கரோனா யுகத்தில், மண்டபங்கள் கிடைக்காமல் இங்குமங்கும் அல்லாடி, ‘மறுநா மத்தியானம் மூணு மணிக்கு சத்திரம் காலி பண்ணனுமாம்’ என மண்டபம் புக் செய்து, ஃப்ங்ஷன் முடிந்து முடிவதற்குள் பல்லவன் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க ஒடும் மக்கள், ‘மத்தியானம் ஃபினிக்ஸ் மாலுக்கு ஃப்ரெண்ட் ஒருத்தி பாம்பேலர்த்து வர்றா’ என பாதி ஃபங்ஷனில் புடவையிலிருந்து சுடிதாருக்கு மாறி ஓலா பிடிக்க ஓடும் ஸ்த்ரீகள், ‘இங்க முடிச்சுட்டு பம்மல்ல இன்னொரு ஃபங்ஷன் இருக்கு’ என பல்சரில் கிளம்பும் பிசியான சாஸ்திரிகள்… இதெல்லாம் காலடியில் கிடையாது.
சங்கராச்சாரியாருக்கு பத்திரிக்கை வைத்து அநுக்ரஹம் பெற்று, வெண்மணி கிருஷ்ணன் நம்பூதிரிபாத் அவர்களின் ‘விஷ்னு சஹஸ்ரநாமம்’ காதில் இதமாக ஒலித்துக்கொண்டிருக்க, முறையான எல்லா சடங்குகளையும் நிறுத்தி நிதானமாக செய்வித்து, மந்திரங்களையும் அனுஷ்டானங்களையும் சிறுவனுக்கு சொல்லி வைத்து, ப்ரஹ்மச்சரிய வ்ருதத்தை தரிக்கச்செய்து, ஆதிசங்கரர் அவதரித்த காலடி போன்ற க்ஷஏத்ரங்களில், தம் குழந்தைகளுக்கான உபநயன விழாக்களை நடத்திக்கொள்ளுமாறு நண்பர்களை வேண்டிக்கொள்ளும்,
சீதாபதி ஶ்ரீதர்

No comments:

Post a Comment