Friday, June 20, 2025

பிடித்த எண் 25000…


27 வருடங்கள் முன் நான் பம்பாயிலிருந்து பஹ்ரைன் வரக்காரணமானவர் அப்பா. 58 வயதில் ரிடையர் ஆனபோதும் வாடகை வீட்டில் தான் இருந்தார். என் மூத்த சகோதரிக்கு டாக்டர் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைத்தார். குழந்தைகளையும் நல்ல உயர்படிப்புக்கள் படிக்க வைத்தார். பம்பாய் போகிறேன் என்றதும் மறுப்பு சொல்லாமல் அனுப்பி வைத்தார். தென்னூரில் காய்ந்து கிடந்த நான் பம்பாய் வந்ததும் பாகி பாண்ட், கோவார்டிஸ் சாண்டல், முதலை டீ-ஷர்ட், வடாபாவ், எக்சல்ஸியர் தியேட்டரில் பேட்ரிக் ஸ்வேய்ஸின் ‘டர்ட்டி டான்சிங்’ சினிமாக்கள் என நண்பர்கள் சகிதம் ஊதாரித்தனமாக இருந்த நேரம். ஒருநாள் கூட பணம் அனுப்பும்படி கேட்டதில்லை நைனா!
அவரது ஒரே பூர்விக சொத்தான சிறிய வீடு ஒன்று உடுமலைப்பேட்டையில் இருந்தது. அங்கே குடியிருந்தவர் ஒரு அரசியல்வாதி. பரோட்டா கடை வைத்திருந்த அவருக்கு அந்த வீட்டின் மேல் ஒரு கண். பார்க்கும்போதெல்லாம் விலைக்கு கேட்பார். அப்பா ரிடையர் ஆகி திருச்சி சுந்தர் நகர் பக்கம் ஜாகையை மாற்றினார். அங்கே ஒரு கிரௌண்டு நிலத்தில் தனி வீடு ஒன்று விலைக்கு வந்தது. ஜங்ஷன் பக்கம் இரும்புக்கடை வைத்திருந்த பாய் ஒருவர் வீட்டுக்கு சொந்தக்காரர். காஜாநகரில் அவர் வீட்டிற்கு நான் அப்பாவுடன் போய் வீட்டை ரெண்டரை லட்சத்திற்கு விலை பேசி முடித்தோம்.
அதே சமயம் உடுமலைப்பேட்டை பரோட்டாக்கடை வாடகைதாரருக்கும் ரெண்டரை லட்சத்திற்கு எங்கள் பூர்வீக வீட்டை விற்க ஒப்புக்கொண்டு 2 லட்சம் மட்டும் முன் பணமாக பெற்று வீட்டையும் கிரயம் செய்தாயிற்று. ஐம்பதாயிரம் பாக்கி வைத்தார். பத்து வருடங்களுக்கு மேல் அந்த வீட்டில் இருந்தவர் ஏமாற்ற மாட்டார் என நம்பிக்கை அப்பாவுக்கு.
திருச்சி பாய் நாங்கள் கொடுத்த ரெண்டு லட்சம் முன்பணத்தை வாங்கிக்கொண்டு ஐம்பதாயிரம் பாக்கியுடன் வீட்டை கிரயம் செய்து தயார் என சொல்லி விட்டார். அந்த காலத்தில் அவ்வளவு நம்பிக்கை. ஆனால் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. முழு பணம் கொடுத்த பின்பே ரிஜிஸ்தர் செய்யலாம் என சொல்லி விட்டார். ஆக, உடுமலை பேட்டை பாக்கியை அங்கே வாங்கி இங்கே கொடுத்து வீட்டை முடிக்க வேண்டும்.
பரோட்டா கடைக்கார அரசியல்வாதி பாக்கி ஐம்பதாயிரத்தை மெதுவாக இழுத்தடிக்க ஆரம்பித்தார். வீட்டை தன் பேருக்கு மாற்றியபின் மெதுவாக ‘பழைய வீட்டை எனக்கு வித்துட்டீங்க, மண் செவுரு.. முந்தி நானே நெறைய ரிப்பேர் செஞ்சிருக்கேனே’ என புதியதாக காரணங்கள் கொண்டு வந்து அந்த பாக்கி பணத்தை லவட்டிக்கொள்ள அஸ்திவாரம் போடுவது தெரிந்தது.
ஐம்பதினாயிரம் என்பது பெரிய தொகை அப்பாவுக்கு. ஏற்கனவே வங்கிக்கும் வீட்டிற்குமாக அம்மாவின் நகைகளின் போக்குவரத்து உண்டு. தினப்படி கடையில் சாமான் வாங்கும் செலவு, பழமுதிர்ச்சோலை, டவுன் பஸ், டீ, கொத்தனாருக்கு டீ வடை என சகல சிலவுகளும் சிட்டி கோஆபரேடிவ் பாங்க் டைரியில் தினமும் குறித்து வைத்து டோட்டல் போடுபவர். கணக்கில் ஐம்பது பைசா வித்தியாசமிருந்தாலும் மண்டைய பிச்சுக்குவார். ‘கோயில் உண்டயல்ல போட்டதா நெனைச்சுக்கோங்க!’ என அம்மா சொன்னாலும் ‘நூவ்வு கம்மட்ட உண்டு!’ என மறுத்து கணக்கை சரிபார்த்த பின்பே டீ குடிப்பார்.
பரோட்டா கடைக்காரனுக்காக (இனி என்ன மரியாத!) திருச்சி- உடுமலை பஸ் பயணம், போஸ்ட் கார்ட், இன்லாண்ட் லெட்டர், ட்ரங்க்கால் என அலையாய் அலைந்தார் அப்பா. அடுத்த சில மாதங்களில் 25000 ரொக்கமும் மீதி 25000க்கு காசோலையும் எப்படியோ வாங்கி வந்து விட்டார். பம்பாயிலிருந்த எனக்கு சந்தோஷம்.
காசோலையை வங்கியில் க்ளியரிங்க்கு போட்டு விட்டு, பணம் 25000ஐ இரும்புக்கடை பாய்க்கு கொடுத்து விட்டு வீடு கிரயம் செய்வதற்கான தேதி குறித்து விட்டார். ரிஜிஸ்தர் செய்யுமன்று பாக்கி 25000 ரொக்கமாக கொடுப்பதாகவும் அக்ரீமென்ட்டில் குறிப்பிட்டாயி்ற்று.
அடுத்த 3 நாட்களில் ஒரு மதியம் ரிஜிஸ்த்ரார் அலுவலகம் போகும் முன் காலையில் அந்த பாக்கி 25000ஐ வங்கியிலிருந்து எடுக்கப்போனவருக்கு அதிர்ச்சி. வங்கி கணக்கையே மூடிவிட்டு வெறும் காசோலையை கொடுத்த பரோட்டாக்காரனின் குள்ளநரித்தனம் தெரிய வந்தது. இடிந்து போய் விட்டார் அப்பா. எங்களுக்கும் இதெல்லாம் தெரியப்படுத்தவில்லை.
அடுத்த சில நாட்களில் பம்பாய்க்கு வந்த தபால் மூலம், அம்மா தன் தாலிச்சரடு, நகைகள் எல்லாவற்றையும் அப்பாவிடம் கொடுத்து அவர் கோஆபரேடிவ் வங்கியில் அடகு வைத்து 25000ஐ பாய்க்கு கொடுத்து அதே தேதியில் வீட்டை கிரயம் செய்தார் என்ற விபரங்கள் தெரிந்துகொண்டோம்.
கோ ஆபரேடிவ் சப் ரிஜிஸ்த்ராரான அப்பா கடைசி சில வருடங்கள் டெபுடேஷனில் அதே கோஆபரேடிவ் வங்கியில் இருந்து தான் அக தணிக்கையாளராக (Internal Auditor) ரிடையர் ஆனவர். ரிடையர் ஆன அன்று காலை தான் அக்கா திருமணம். வங்கியிலிருந்து கல்யாண மண்டபத்திற்கு பியூன் மட்டும் வந்து பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டான். அலுவலகத்திலிருந்து யாரும் கல்யாணத்திற்கே வரவில்லை. ‘தானும் சம்பாரிக்காம மத்தவங்களையும் சம்பாரிக்க விடல’ என்ற கோபமாம், முன்பு ஒருமுறை வங்கியில் நடந்த முறைகேடுகள் பற்றி அவர் மேலிடத்திற்கு ரிபோர்ட் எழுதிவிட்டதால்.
அடுத்த சில மாதங்களில் (1994) பஹ்ரைனில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த நண்பன் Ganapathi Subramanian மூலம் வேலை கிடைத்து நானும் பஹ்ரைன் வந்ததும், முதல் இரண்டு மாத சம்பளத்தில் ரூ.25000க்கான ட்ராஃப்ட் எடுத்து திருச்சிக்கு அனுப்பியதும், வங்கியிலிருந்து நகைகள் திருப்பப்பட்டதும், அடுத்த சில வருடங்களில் சகோதரர்களாகிய நாங்கள் அனுப்பும் பணத்தில் அப்பா ரூ25000 வீதம் பத்து பதினைந்து வைப்புநிதி (FD) சான்றிதழ்களை ஜிப் வைத்த GRT நகைக்கடை பேக்கில் பத்திரமாக சேமித்து வைத்திருந்ததும், தன் பென்ஷன் பணம் மற்றும் ஒவ்வொரு வைப்புநிதியையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுமார் ஒன்னரை லட்ச செலவில் மேஸ்த்திரி வைத்து மாடியில் வீடு கட்டிக்கொண்டதும்… கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத, மறக்க முடியாத சம்பவங்கள்.
2011இல் தான் இறப்பதற்கு முன் அம்மா பெயரை வங்கியில் நாமினியாக சேர்த்து விட்டு சுமார் நாலைந்து லட்சத்திற்கு வைப்புநிதி சான்றிதழ்களை அதே GRT பேக்கில் வைத்து விட்டுச்சென்றார், வழக்கம் போல டெபாசிட் ஒவ்வொன்றும் 25000க்கு.
25000 அவருக்கு பிடித்த எண் போலும்.

No comments:

Post a Comment