அந்தக்கால கலியாணங்களில் தரையில் பந்தி போட்டு பரிமாறுவார்கள். தடுப்புக்கு அந்தப்பக்கம் அசோகா அல்வா கிண்டுவதும் உளுந்து வடை போடுவதையும் நாம் பார்க்கலாம். அனால் இப்போது எல்லாம் மாறி விட்டது. வெள்ளை யூனிபார்ம் அணிந்த 10 பேர் வரிசையாக நின்று நம் இலையில் ஒரொரு ஐட்டமாக வைப்பார்கள். இலையைச்சுற்றி சிரோட்டி பால் வைக்க, அடப்பிரதமன் மற்றும் பலாப்பழ பாயசம் வைக்க பேப்பர் கின்னங்கள், உருண்டையாக பிஸ்லேரி வாட்டர் பாட்டில்கள். LED லைட்டில் இன்ன கேட்டரிங் கம்பெனி என பெயர் ஊர்ந்து செல்லும் சின்ன அட்டையை தோளில் குத்திக்கொண்டு ‘சாப்ட்டீங்களா? வத்த குழம்பு வந்ததா?’ என பரிவுடன் கேட்கும் கேட்டரிங் பெண்கள்.
ஏராளமான நண்பர்களை திருமண விழாக்களில் சந்தித்து கட்டிப்பிடித்து அளவளாவி மகிழ்தலில் ஒரு சுகம் உண்டு.
உறவினர்கள், நண்பர்கள் அல்லாது கொஞ்சம் தெரிந்தவர்கள் என்ற ஒரு பிரிவு உண்டு. அதாவது ரொம்பவும் க்ளோஸ் இல்லை. பார்த்தால் பேசலாம். தூரத்தில் மற்றவர்களுடன் சிரித்துப்பேசிக்கொண்டிருப்பவர், அங்கிருந்தே நம்மை சட்டென பார்த்து விடுவார். ஒரு நொடி நம் கண்ணை நேருக்கு நேர் பார்த்துவிட்டு அந்தப்பக்கம் சம்பாஷனையை தொடர்வார். நாம் விடாமல் அடுத்த 10 நொடிகள் அவரையே பார்த்துக்கொண்டிருந்தால் 100% மறுபடியும் நம்மை திரும்பவும் பார்ப்பார். உடனே முகத்தை வேறு திசையில் திருப்பி ‘நம்பள பாத்துட்டே இருக்கானே!’ என மனதிற்குள் நினைத்துக்கொள்வார்.
அவரது மனைவியும் அதே போலத்தான். ஊஞ்சலின் போது சிகப்பு கலர் சாத உருண்டையை வடக்கு பக்கம் பார்த்து யாரோ ஒரு பாட்டி வீசும்போது, மேலே படாமலிருக்க ஒதுங்கும்போது நம்மை பார்த்து விட்டிருப்பார். பக்கத்துல வரட்டும்.. அப்பறம் பாத்து பேசிக்கலாம் என கௌரி கல்யாணம் பாட ஓடி விடுவார்.
அப்புறம் கூட்டத்தோடு கூட்டமா அட்சதை போட மேடையை நோக்கி நாம் முன்னேறும்போது அகஸ்மாத்தா நம் பக்கத்தில் இருப்பார். ‘ஹலோ! எப்பிடி இருக்கீங்க! பாத்து ரொம்ப நாளாச்சு! என்பார். உடனே நாம் ‘நா உங்கள பாத்தேனே!’ என ஆரம்பிக்கும்போது ‘ஆமா! நானும் உங்கள பாத்தேன். பிசியா யார்ட்டயோ பேசிட்ருந்தீங்க!’ என சமாளித்து விடுவார்.
கல்யாணங்களில் சிலரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கும். பல வருடங்கள் கழித்து டை அடிப்பதை நிறுத்தி இல. கணேசன் சாயல். சட்டென ஞாபகத்திற்கு வராது. கூடவே கல்யாணத்தன்று காலை அவசரமாக முன் தலைக்கு மட்டும் டை அடித்திருக்கும் அவரது மனைவி.. ‘உங்களை நான் மீட் பண்ணியிருக்கேன். நாங்க போன வருஷம் தான் பஹ்ரைன்ல இருந்து இந்தியா திரும்பினோம். நீங்களும் அங்க இருந்தீங்களா?’ என அவர்கள் கேட்டதும் தான் நினைவுக்கு வரும். பஹ்ரைனில் சூட், டையுடன் ஆபிஸ் போய்க்கொண்டும், தினமும் டயட், காலை ஒரு மண்ணேரம் ஜாக்கிங் என இருந்திருப்பவர், இந்தியா வந்ததும் மந்தவெளி, மைலாப்பூர் பக்கம் கோமதி சைவ உணவகத்தில் அடிக்கடி வடை, இட்லி சாப்ட்டு வயிறு மட்டும் ‘தனியே.. தன்னந்தனியே’ என பழுப்பு ஜிப்பாவை விட்டு லேசாக வெளியே வந்திருக்கும்.
‘அது இருக்கட்டும். அவங்க தான் உன்ன பாத்ததும் பேசலைன்னா நீயாவது ஹலோ சொல்லலாமே’ என என்னை கேட்க நினைப்பவர்களுக்கு..
‘நீயும் தான் Ganapathi Subramanian கூட சேந்து ராயர் மெஸ், மாமி டிபன் ஸ்டால் நெய்ப்பொங்கல் சாப்ட்டு லேசா தொப்பையோடத்தானே இருக்கே! போட்டோ எடுக்கும்போது மட்டும் உள்ளுக்க இழுத்துக்கறயே!’ என என்னை கேட்பவர்களுக்கு!
அது வேற டிபார்ட்மென்ட்டு 
No comments:
Post a Comment