Friday, June 20, 2025

நவீன்

 திருச்சி தைலா முதலி ஜவுளியை ஒட்டியுள்ள கிலேதார் தெரு. மெயின் கார்ட் கேட்டிலிருந்து டவுன் ஸ்டேஷனுக்கு சுறுக்கமாக போக சிங்காரதோப்பு வழியாக தலை தெறிக்க சைக்கிள்களும் ஆட்டோக்களும் பெரிய கடை தெருவுக்குள் புக படாரென இடது புறம் ஒடித்து உடனே வலது புறம் கிலேதார் தெருவில் திரும்புவார்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த தெருவின் கடைசியில் பாபு ரோடு சந்திக்கும் இடத்தில் சகாய மாதா பில்டிங்கில் அந்த பழைய லாட்ஜ்.

அந்த இரண்டடுக்கு கட்டிடத்தில் கல்லூரி மாணவர்கள், சி ஏ படிக்கும் மாணவர்கள், வேலைக்கு போகும் பிரம்மச்சாரிகள் தங்கியிருப்பர். பெரும்பாலும் வெளியூர்க்காரர்கள். மாடியிலிருந்து எதிரே டீக்கடையை பார்த்து கைதட்டி சமிக்ஞை செய்தால் அடுத்த சில நிமிடங்களில் டீயும் பன்னும் எடுத்துக்கொண்டு பையன் ஓடி வருவான். சற்று தள்ளி முருகன் தியேட்டர். சரக்கு வண்டி டிரைவர்கள், ஆட்டோக்காரர்கள் பெரிய மார்க்கெட் வண்டிக்காரர்கள் எல்லோரும் அங்கே படம் பார்க்க வருவதுண்டு. எப்போதும் பழைய படங்கள் தான். தெய்வத்தாய், எங்க வீட்டுப் பிள்ளை, ஜெகன் மோகினி, ஜம்பு என ஏதாவது ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். தியேட்டர் வாசலில் புழுதியுடன் சினிமா பாட்டு புத்தகங்கள் விற்பனை.
பக்கத்தில் மெஸ். 15க்கு 20 அடி அறையில் வாழை இலை நடுவே மலைபோல் அரிசியை குவித்து நடுவில் பள்ளம் தோண்டி சாம்பார் கூட்டு பொரியல் என வெட்டும் பிரம்மச்சாரிகள். பக்கத்து இலையில் மட்டன் மற்றும் ஆம்லெட். மெஸ்ஸை கடக்கும்போது பாபு ரோட்டில் சாம்பாருடன் கலந்த மீன் பொரியல் வாசனையால் செஞ்சோசஃப்ஸ் குப்புசாமி சாரிடம் கணித டியூஷன் படிக்க வரும் மாணவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு சந்துக்குள் நுழைவார்கள்.
எதற்காக இவ்வளவு பில்டப்பு? அந்த விடுதியில் தங்கியிருந்தது எனது CA நண்பன் நவீன் (Navendan Natesan ) மணிரத்தினத்தைப்போல் ரத்தினச் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் தான் பேசுவான். அவனுக்கு தஞ்சாவூர் ஒரத்தநாடு பக்கம்.
கரப்பான் பூச்சி, தவளையை வெட்டி பிஎஸ்சி சுவாலஜி ஜமால் முகமது கல்லூரியில் படித்தவன் சீஏ படிப்பை தேர்வு செய்தான். பக்கத்தில் தான் அவனது அபீசும். தலையை உயர்த்தி வாரி பட்டை மீசை சீராக ட்ரிம் செய்து, பெரும்பாலும் வெள்ளை அல்லது லைட் கலரில் கோடு போட்ட முழுக்கை சட்டையை இன் செய்து பாட்டா ஷூவுடன் படிக்கும்போதே ஆடிட்டர் போல மிடுக்காக நடப்பான் நவீன்.
ஜாபர்ஷா தெருவிலிருந்து ராஜசேகர் Rajaseharan Subramanian , மன்னார் புரத்திலிருந்து நான், காஜாமலை காலனியிலிருந்து குமார், பக்கத்தில் பட்டர்வொர்த் ரோட்டிலிருந்து Ayyampillai Ponnusamy அய்யம்பிள்ளை, அருன்மொழி, சின்னகடை வீதியில் பேப்பர், ஸ்டேஷனரி கடை வைத்திருக்கும் சி.டி.சுப்ரமணியன் எல்லோரும் நவீன் ரூமில் கூடி சிஏ பரிட்சைக்கு சேர்ந்து படிப்போம். எனக்கு அரக்கப்பறக்க புத்தகங்களை பரத்தி படிக்க வேண்டும் அல்லது படிப்பது போல பில்டப் கொடுக்க வேண்டும். நவீன் அப்படியல்ல. கைலியை மடித்துக் கொண்டு அடக்கமாக ஏதாவது ஒரு சப்ஜெக்ட் புக் வைத்துக் கொண்டு படிப்பான். எங்களுக்கு வருவதுபோல் நடுநடுவே டவுட் ஏதும் அவனுக்கு கிடையாது. அதிகம் அரட்டை அடிக்காமல் கவனமாக படிப்பதும் நடுவில் எழுந்து கை தட்டி கீழேயிருந்து டீ வரவழைப்பான். எங்களுக்கு ஒரு வருடம்
சீனியரான Ganapathi Subramanian பம்பாய் போய்விட்டிருந்தான்.
பாதி நேரம் மலைவாசல், என் எஸ் பி ரோடு என நண்பர்கள் நாலைந்து பேருடன் கடைவீதியில் உலாத்துவது அடிக்கடி நடக்கும் சமாச்சாரம். எங்கள் நண்பர்கள் குழாத்தில் முதன்முதலில் இன்டர் பாஸ் செய்தவன் இவன். பாலக்கரை பிரபாத் தியேட்டர் அருகே ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் சையத் சாரிடம் ஃபைனல் பரிட்சைக்கு டியூஷன் தொடங்கினான். அடுத்த சில வருடங்களில் சீஏ பாஸ் செய்து அந்த இளம் வயதிலேயே சிங்காரத்தோப்பில் தனது புதிய பிராக்டிஸை தொடங்கினான். குறுகிய காலத்தில் சிட்கோ லோன், நிறைய இஞ்சினீயரிங் கம்பெனிகள், வங்கிகள், இன்கம்டாக்ஸ் சம்பந்தப்பட்ட கோப்புகள் என ஆபீஸ் அலமாரி முழுவதும் வியாபித்து இருக்க கைநிறைய சம்பாதிக்க ஆரம்பித்தான்.
அடுத்த சில வருடங்களில் சென்னைக்கு மாற்றிக்கொண்டு நுங்கம்பாக்கத்தில் எங்கள் சிஏ இன்ஸ்டிடியூட் எதிரிலேயே புதிய ஆபிஸ் தொடங்கி தனது பிராக்டிசை மேலும் விஸ்தாரமாக்கினான். நான் பாஸ் சீஏ முடித்து் பம்பாய் கிளம்ப, குமாரும் அருண்மொழியும் சிங்கப்பூர் மற்றும் அய்யம்பிள்ளை சேலத்தில் பிரக்டிஸ் ஆரம்பித்து சில வருடங்களில் அபுதாபி பக்கம் வந்து விட்டான். ராஜசேகர் திருப்பூரில் ஒரு பெரிய ஏற்றுமதி கம்பெனியில் CFO மற்றும் COO ஆகி செட்டில் ஆனான். சுப்ரமணி பெங்களூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் Vice President & Chief Dealer ஆனான். நவீனின் குழந்தைகள் மேற்படிப்புக்கு பூனா, ஜெர்மனி என சென்று விட்டார்கள். நாங்கள் வெளிநாடுகளுக்கு போய்விட, இப்பவும் நவீன், ராஜசேகர் தங்கள் குடும்பங்களுடன் ஊட்டி போன்ற வெளியூர் பயணங்கள் போவதும் உண்டு.
சென்ற வருடம் ராஜசேகரின் டாக்டர் பையனின் விமரிசையான திருமணத்தில் நான், ராஜசேகர், அய்யம்பிள்ளை, ரமேஷ் பாபு மற்றும் கணபதி என எல்லா சிஏ நண்பர்களும் சந்தித்து அந்தக்கால திருச்சி வாழ்க்கை பற்றி சிலாகித்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்று நவீனுக்கு 60வது பிறந்த நாள். இன்றும் அதே இளமையுடன் ட்ரிம்மாக உடையணிந்து வெற்றிப் பாதையில் வலம் வரும் நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் பார்த்து வரைந்த ஓவியம் இது. கண்ணு பட போகுது மாப்ளே!

No comments:

Post a Comment