Sunday, November 12, 2017

Ayyampillai

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் திருச்சியில் நான், Ganapathi Subramanian மற்றும் இந்த நண்பன் மூவரும் ஒரே பார்ட்னர்ஷிப் firm இல் ஆர்டிகிள்ஸ் செய்தோம். கணபதி தான் இவனை எனக்கு அப்போது அறிமுகப்படுத்தியவன்.
மாநிறம்.. ஆறடி உயரம்.. பெரிய்ய்ய்யய பெல்பாட்டம் பாண்ட், ஒருதலை ராகம் சங்கர் மாதிரி ஸ்டெப் கட்..சதா ஜோக்கடித்துக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் வேலை செய்பவன்.
கரூர், சேத்தியாதோப்பு, புதுக்கோட்டை, காரைக்குடி என பல இடங்களில் இவனுடன் ஆடிட் போகும்போதெல்லாம் ஆடிட், வயிறார சாப்பாடு, நைட் ஷோ சினிமா என இவனுடன் இனிமையாக கழித்த பொழுதுகள் பல.
நிறைய சுவாரசியமான சம்பவங்களை பாங்க்
ஆடிட்டில் நாங்கள் கண்டதுண்டு. ஒருவர் அக்ரிகல்ச்சர் லோன் அப்ளை செய்வார். அவருக்கு மூன்று பேர் கியாரண்டி கொடுப்பார்கள். அடுத்த அப்ளிகேஷனை பார்த்தால் கியாரண்டி கொடுத்தவர் லோன் கேட்க, மீதி மூன்று நண்பர்கள் கியாரண்டி. இப்படி ஒரே குடும்பத்தவர்கள் லோன் வாங்குவது தெரிய வந்தது. சில வியாபாரங்களின் முதலீடுகளுக்கு பார்ட்னர்கள் தங்கள் source காண்பிப்பதற்காக சுமார் 25 உறவினர்களிடமிருந்து தலா பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக லோன் வாங்கியதாக கணக்கு காண்பிப்பதை பார்ப்போம். SIDCO லோனுக்கு இல்லாத கம்பெனிக்கு, வாங்காத மெஷினுக்கு டெப்ரிசியேஷன் ஸ்டேட்மென்ட் பார்த்து மலைத்துப்போவோம்.
சேலம் அருகே ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் இவன். விவசாய குடும்பம். அப்பா ஏதோ உடையார். ஆனால் நிச்சயம் முயற்சி உடையார். அதனால் தான் பையனை வெற்றிகரமாக ஆடிட்டர் ஆக்கினார்.
திருச்சி முருகன் தியேட்டர் அருகே ஒரு மேன்ஷனில் தங்கிக்கொண்டு சி. ஏ. படித்துக்கொண்டிருந்த இவன் படிப்பில் படு சூரன். குறிப்பாக Accountancy மற்றும் taxation சப்ஜெக்ட்டிகளில் fundamental இல் இவனை அடிச்சுக்க முடியாது. நிறைய எனக்கு சொல்லித்தந்திருக்கிறான்.
பின்னர் ஆண்டார் தெருவுக்கு ஜாகையை மாற்றிக்கொண்டவுடன் அங்கே அவனுடைய அறையில் கம்பைன்ட் ஸ்டடீஸ் சில மாதங்கள் செய்தோம்.
திருச்சியில் பிஷப் ஹீபர் ஸ்கூலில் சி.ஏ. பரிட்சை நடக்கும். திருச்சி, சென்னை போன்ற சென்டர்களில் எழுதினால் பாஸ் செய்வது கஷ்டம் என்று ஆராய்ச்சி செய்து சேலம், பெங்களூர் போன்ற சென்டர்களில் எழுதினால் பாஸ் செய்வது சுலபம் என முடிவெடுத்து நிறைய நண்பர்கள் பரிட்சை சமயத்தில் திருச்சியை விட்டு கிளம்பிவிடுவார்கள். இவனும் சேலம் போனான் என நினைக்கிறேன். நண்பர்கள் Subramanian RajaseharanNavendan NatesanArunmozhi Murugesan எல்லோரும் சேலத்தில் பரிட்சை முடித்து ஏற்காடு போவோம்.
நான் ஆற அமர சி.ஏ பாஸ் செய்ய இவன் மற்ற நண்பர்கள் மற்றும் கணபதியுடன் சட்டு புட்டென பாஸ் செய்தவன். கையோடு சேலத்தில் உடனே பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தான்.
கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக அபுதாபியில் தனது சொந்த ஆடிட் firm நடத்திக் கொண்டிருக்கும் இவனை வேலை நிமித்தம் நான் அபுதாபி போகும்போதெல்லாம் பார்ப்பதுண்டு. தனக்குக்கீழ் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நல்ல சம்பளமும் கொடுத்துக்கொண்டு வெற்றிகரமாக இயங்குகிறான்.
வளைகுடா நாடுகளில் இப்படி தனியாக சி.ஏ. ப்ராக்டிஸ் செய்து சஸ்டெயின் செய்வது மிகவும் கஷ்டமே. அதுவும் வெற்றிகரமாக. நல்ல வேலை வாய்ப்புக்கள் வந்துகொண்டும் இருந்தன இவனுக்கு.
சென்ற வருடம் நான் இரண்டு நாட்கள் அபுதாபி போயிருந்தபோது இவனிடமிருந்து போன் 'வீட்டுக்கு வற்ரியா மாப்ள!' என. 'இல்லப்பா! ஒரே ஜலதோஷம். ஹோட்டல்லயே தால் ரைஸ் சாப்ட்டுக்கறேன்' என்று சொன்ன என்னை இடைமறித்து, 'வீட்டுக்கு போய்ட்டிருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்துல ரெடியா இரு.. உன் ஜலதோஷத்தை சரி பண்றேன்' என்று சொல்லிவிட்டான். மனைவி ஊருக்கு போயிருந்ததால் வீட்டில் தனது அசிஸ்டென்ட்களுடன் தங்கியிருந்தான்.
அபுதாபி நகருக்கு வெளியே 'யஷ் தீவு' என்ற இடத்தில் நான் தங்கியிருந்தேன். காரில் என்னை ஏற்றிக்கொண்டவுடன் வீட்டிற்கு போன் செய்து 'ஹலோ! சேகர்.. குக்கர்ல ரைஸ் வச்சிட்டு புளிய கறைங்க!' என்றான். . நல்ல டிராஃபிக். அடுத்த அரை மணியில் போன் வந்தது.
'சார் புளி ஊறிடுச்சு'.
'சின்ன சைனீஸ் பூண்டு தோலோட நசுக்குங்க, பொறவு அதை புளித்தண்ணில போட்டு கேஸை பத்த வைங்க'
'ஆச்சு சார்'
'மிளகு பத்து பதினைஞ்சு, சீரகம் ஒரு ஸ்பூன் நல்லா தட்டி போடுங்க'
அபுதாபி நகரில் நுழைந்தோம். போன்..
'சார் புளி கொதிக்குது'
'மல்லி கட்டு ஃப்ரிட்ஜில இருக்கு.. அதுல காவாசிய தண்ணில கழுவிட்டு பொடியா நறுக்கி போடுங்க..
'ஆச்சு சார்'
'அப்பறம் அந்த அலமாரில மோகன்லால் படம் போட்ட டப்பாவுல இருந்து மொளகாப்பொடி அரை ஸ்பூன் போடுங்க'
'பாடாவதியாச்சே சார்'
'தெரியும் நானும் அவர் படம் அதிகம் பாக்கறதில்ல'
'ஐயோ சார்! நா மொளகா பொடியச்சொன்னேன்'
'இருக்கட்டும்.. 'மேளம்' ரசப்பொடி ஒரு ஸ்பூன், 'ஈஸ்ட்மேன்'மஞ்சத்தூள் அரை ஸ்பூன், நாலு வர மிளகாய் போடுங்க'
'சார்! மொளகாப்பொடிதான் போட்டாச்சே! கூட வர மொளகாயுமா?'
'ஆமா'
'பத்தி பதினைஞ்சு மிளகு வேற போடச்சொல்லியிருக்கீங்களே!'
'சொல்றத செய்ங்க'
'ஆச்சு சார்'
'கருவேப்பிலை குச்சியோட மூனு செடி அப்பிடியே போடுங்க'
'அது உள்ளாற போகாமெ நட்டுகிட்டு நிக்குமே!'
'நிக்கட்டும்.. சாலெம் ஸ்ட்ரீட் தாண்டிட்டேன். அரை ஸ்பூன் எண்ணையில கடுகு, உ. பருப்பு தாளிச்சு போடுங்க. மேல திரும்பவும் பெருங்காயம் போடுங்க. உப்பு நான் வந்து போட்டுக்கறேன். நல்லா கொதிக்கனும்'
'இன்னும் எவ்ளோ நேரம் கொதிக்கனும் சார்'
'நா வற்ர வரைக்கும்'
'நீங்க எப்ப வருவீங்க?'
'ரசம் நல்லா கொதிக்கற வரைக்கும்'
ஒருவழியாக (உண்மையிலேயே ஒன்வே டிராஃபிக் தாண்டி தான்) அவன் வீட்டில் நுழையும்போது என் கைக்குட்டை முழுவதும் ஈரமாக...
ஏற்கனவே பெரிய தட்டில் போட்டு வைத்திருந்த சூடான சாதத்தில் அசிஸ்டென்ட் சேகர் மண்டிபோட்டிருந்தபடி ரசத்தை மண்டியோடு தட்டில் கொட்டினான்.
அடுத்த பதினைந்து நிமிடம் மிளகு கார மணத்துடன் சுடச்சுட ரச சாதத்தை ஏதோ ஒரு தொவையலுடன், எதிரே பாண்டியராஜன் படம் பார்த்துக்கொண்டே நண்பனுடன் சாப்பிட்டு முடித்தேன் மூக்கில் ஜலம் ஒழுக.. அதுவும் இரண்டு ரவுண்டு ரசஞ்சாதம்.
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஹோட்டலில் இறக்கி விட்ட நண்பனை கட்டிக்கொண்டு 'ரசஞ்சாதம் செம்ம மாப்ள!' என விடை பெற்றுக்கொண்டேன்.
மறுநாள் காலை எழும்போது ஜலதோஷம் இருந்த இடம் தெரியவில்லை..
என் வயது தான் இவனுக்கு. தாத்தாவாகி ஒரு வருடத்திற்கு மேலாகிறது.
Ayyampillai Ponnusamy ...!
சட்டென வரைந்த ஓவியத்துடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்ளே!

Rajashekar

80களில் CA ஆர்டிகிள்ஸ் செய்துகொண்டருந்த சமயம்.. ஆடிட்டரின் பார்ட்னரான திருச்சி செல்வம் ஹோட்டல் அதிபர் மற்றும் ஆடிட்டர் முத்துகிருஷ்ணனிடம் CA படித்துக்கொண்டிருந்தவன் இவன். வெளியூர் பாங்க் ஆடிட்களுக்கு சேர்ந்து போவோம். பாலக்கரை பிரபாத் தியேட்டர் சமீபம் தான் ஆபிஸ். சட்டென ஏதோ ஒரு ஈர்ப்பு. நல்ல நண்பர்களானோம். 

ரோட்டில் நடந்துபோகும்போது பெண்களே இவனை சைட் அடிக்கும் அளவிற்கு சுந்தரன். நல்ல உயரம், ஒருதலை ராகம் ரவீந்தர் மாதிரி சுருட்டை முடி, லதா தம்பி ராஜ்குமார் மாதிரி கண்கள், முதுகில் டக்கு பிடித்த சட்டையை சிங்காரதோப்பு ஜோதிஸ் டெய்லரிடமே தைப்பான். மலைவாசல் அருகே மார்கரெட் சலூனில் சவரம் மற்றும் ரோலிங் கோம்பில் சிகையலங்காரம், உடலை ஒட்டிய ஸ்கின் ஃபிட் பாண்ட்டை நடுவயிற்றுக்கும் சற்று மேல் வரை போட்டு, முழுக்கை சட்டையை இன்செய்து, ஜிப்பை திறந்து கை விட்டு சட்டையை இன்னும் கீழே இழுத்து விட்டுக்கொண்டு, பாட்டா மொக்காசினோ ஸ்லிப்ஆன் ஷூவுடன் வாழ்வே மாயம் (முதற்பகுதி) கமல் போல சோஃபீஸ் கார்னர் பக்கம் நடந்தால் பஸ்ஸுக்கு காத்திருக்கும் ஹோலிக்ராஸ் பெண்கள் கண்ணை கசக்கும் சாக்கில் இவனை ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அதை நீ பாத்தியா என கேட்பவர்களுக்கு..! பொறாமையுடன் கூட நடந்தவன் நானாயிற்றே! நேஷனல் காலேஜ் மியூசிக் டீமில் காங்கோ ட்ரம்ஸ் வாசிப்பவன்.

மேலபுலிவார்ட்ரோடு ஆதிகுடி காபி க்ளப் தாண்டி ஜாஃபர்ஷா தெருவில் நுழைந்து வைரக்கற்கள் விற்கும் சேட்டு கடைகளை கடந்து குறுக்கே சடாரென ஓரிரு சந்துகளில் திரும்பினால் இவனது வீடு. அப்பா கஸ்டம்ஸ் சூப்பரின்டென்டன்ட். துல்லியமாக மீசையை ட்ரிம் செய்து யூனிஃபார்முடன் ஜீப்பில் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார். மற்ற நேரங்களில் முன்டா பனியன் கட்டம் போட்ட கைலியுடன் அதிகம் பேசாமல் சோபாவில் சரிந்திருப்பார். CA படிக்கும் பையனிடம் ரொம்ப மரியாதை, செலவுக்கு கேட்கும்போதெல்லாம் பணம் தாராளமாக கொடுப்பார்.

இவனது வீட்டு மொட்டை மாடி கீத்துக்கொட்டகையில் கயிற்றுக்கட்டில் முழுக்க கனமான புத்தகங்கள் பரத்தி நாங்கள் மூன்று நான்கு பேர் சேர்ந்து படிப்போம். 'ஆமா..நீ இது வரைக்கும் எத்தினி பேத்தோட கம்பைன்ட் ஸ்டடீஸ் போட்ருக்க?' என நண்பர் Balasubramanian AKஒரு முறை என்னை கேட்டது நினைவுக்கு வருகிறது. மொட்டை மாடியில் படிப்பா! பாதி நேரம் பேச்சு தான். 'டேய் என்னோட பேண்ட் ஒன்னு டைட் ஆயிடுச்சு உனக்கு சரியா இருக்குமா' என இவன் கேட்டது தான் தாமதம், அர்த்த ராத்திரியில் உடனே ட்ரையல் பார்ப்போம்.

தினமும் நண்பர்கள் சந்திப்பு, சினிமா, கோவில் என சேர்ந்து சுற்றுவோம். காக்கிசட்டை, முதல் மரியாதை, நெற்றிக்கண் , நீங்கள் கேட்டவை போன்ற படங்கள் வந்திருந்த சமயம். சட்டென முடிவெடுத்து மாரிஸ் மைனர், சிப்பி, காவேரி தியேட்டர்களுக்கு படையெடுத்து ஓடுவோம். தடுக்கி விழுந்தால் ஹோட்டலில் ட்ரீட். சேர்ந்து ஃபெயில் ஆனாலும் சீ.ஏ பரிட்சை ரிசல்ட் அன்று நண்பர்கள் கூடி அடுத்த அட்டெம்ப்ட் எப்படி படிக்க ஆரம்பிப்பது என முடிவு செய்து அதற்கும் ஹோட்டலில் ட்ரீட். CA எக்ஸாம் அப்ளிகேஷன் ஃபார்ம் பூர்த்தி செய்ய எல்லோரும் கூடி அதற்கும் ட்ரீட். செவ்வாயன்று கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில், வியாழன் மாலை ஶ்ரீரங்கம் ராகவேந்திரா மடம் என எங்கள் பக்தி பரவசத்திற்கு காரணம் சொல்லத்தேவையில்லை. வயசு!

ஒரு வழியாக பாஸ் ஆகி, எல்லோரும் வெவ்வேறு ஊர்களில் வேலையில் அமர்ந்தாலும் வருடமொருமுறை சந்திப்பது வழக்கம். இவனைப்பார்க்க பம்பாயிலிருந்து ஆம்னி பஸ்ஸில் பெங்களூர் வந்திறங்கியவுடன் ஏதோ ஒரு சாகர் உடுப்பி ஓட்டலில் கேசரி, தோசை, கூர்க் காபி சாப்பிட்டு 'ப்ரிகேட் ரோட் ஹோகி' என மூன்று நாட்கள் ஆட்டோவில் சுற்றி ஸ்டோன்வாஷ் சட்டையெல்லாம் வாங்கித்தருவான். சில வருடங்களில் 'மீனம்மா... மீனம்மா..கண்கள் மீனம்மா' ஆர்க்கெஸ்ட்ரா பாடலுடன் மதுரையில் நடந்த இவனது திருமணத்தில் அதே நண்பர் குழாமோடு கலந்துகொண்டோம்.

பிறகு இவன் திருப்பூரில் இந்தியாவின் தலைசிறந்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றில் 25 வருடங்களுக்கு மேலாக இருந்து, CFA மற்றும் MBA படிப்புகளுடன் இன்று அந்நிறுவனத்தின் Group COO & CFO வாக இருக்கிறான். மற்ற CA நண்பர்கள் Ayyampillai Ponnusamy,Hidayathulla M. AliArunmozhi Murugesan, குமார்,Navendan Natesan CT Subu எல்லோரும் சிங்கப்பூர், அபுதாபி, துபாய், பஹ்ரைன் என பறந்துவிட்டோம்.

சில வருடங்களுக்கு முன் சென்னையில் இவனை சந்திக்க எனக்கு ரொம்ப ஆச்சரியம். மூத்தவன் டாக்டராகி விட்டாலும் அதே இளமையுடன் இருக்கிறான்.

இன்று பிறந்தநாள் காணும் நண்பன்Subramanian Rajaseharanக்கு பென்சில் ஓவியத்துடன் வாழ்த்துக்கள். 

இனுமு கொறடு

(இவ்வார குங்குமம் மின் இதழில் வெளிவந்த எனது முதல் சிறுகதை. ஓவியம் எனதல்ல.. குங்குமம் வெளியிட்டது)

'பேசாமெ நானே அவருக்கு ரெண்டாங்கல்யாணம் பண்ணியே வச்சிருக்கலாம். இப்புடு நா பொட்டு தாரம் (தாலி) போயிந்தி!' ..
கதறி அழும் சின்ன அம்மம்மா முன் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தோம்.
அம்மாவின் சித்தி அவள். அடுக்களையிலேயே கிடப்பவள். சமையல், பாத்திரம் அலம்புவது, துணி துவைப்பது, மாவாட்டுவது, மாடியில் வடாம் பிழிவது என எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வாள். எங்கள் பாட்டி(அம்மம்மா)யின் தங்கையான அவளுக்கு வேறு யாரும் கிடையாது. நாகப்பட்டினம் புகை வண்டி நிலையத்தில் வேலையில் இருந்த கணவர் அப்பாய் மாரடைப்பால் இளம் வயதிலேயே இறந்துவிட, சின்ன அம்மம்மா தன் அக்காவுடன் சேர்ந்து கடைசிவரை இருந்துவிட்டாள். 1980இல் காசநோயால் மடிந்து போனவள்.
காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் அவளுக்கு நாள் முழுக்க ஓய்வு ஒழிச்சலே கிடையாது. வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு க்ரைப் வாட்டர் கொடுப்பது, குடல் இறங்கிவிட்டால் விளக்கெண்ணெயில் வயிற்றை நீவி சரிசெய்துவிடுவது எல்லாம் அவள் தான். பிறந்த குழந்தைகளை அவளுக்கு மட்டுமே குளிப்பாட்டத்தெரியும். மனையில் உட்கார்ந்து முழங்கால் வரை புடவையை இழுத்துவிட்டுக்கொண்டு குழந்தையை காலில் குப்புற படுக்க வைத்து தண்ணீர் விடுவது, கடைசியில் குதிக்கால்களை பிடித்து தலைகீழாக குழந்தையை தூக்கி உதறுவது, நெஞ்சு சளி அடைத்து அவஸ்தைப்படும் குழந்தையின் வாயில் தன் வாயை வைத்து ஊதி சளியை மூக்கு வழியே வெளியே எடுப்பது போன்ற சாகசங்கள் செய்தவள்.
காலை விறகடுப்பில் இட்லி வெந்து கொண்டிருக்க சடசடவென அம்மியில் தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாயை அவள் அரைக்கும்போதே சட்னி மணம் ஊரையே தூக்க, கருவேப்பிலை தாளித்துக்கொட்டுவது காற்றில் பறந்து நம் மூக்கை துளைக்கும். சாயங்கால வேளையில் குழந்தைகள் பசியென்று அவள் முன் போய் நின்றால் போதும். சட்டென அரிசி மாவை வெந்நீரில் கிண்டி இறக்கி, கை விரல்களால் சிறு கயிறுகளாக உருட்டி அரை இஞ்ச் துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு பால், வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்து, 'ஒரேய் பில்லலா! ஒச்சி கூச்சண்டி!' என அவள் கூவி அழைத்து பட்டாசாலையில் வரிசையாக அலுமினிய தட்டுகளில் ஊற்றி குழந்தைகள் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடும் பால் கொழுக்கட்டை கிட்டக்க பீட்சாவும் பர்கரும் வரவே முடியாது.
தீபாவளி, பொங்கல் விசேஷங்களுக்கு தாத்தா பாட்டி வீட்டில் தான் எல்லோரும் குடும்பத்தினருடன் கூடுவோம். சின்ன அம்மம்மா தான் முன் நின்று பண்டிகையை நடத்துவாள். சக்கரை பொங்கலுக்கு தொட்டுக்கொள்ள அவள் சமைக்கும் கருணைக்கிழங்கு 'காரப்புலுசு' மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு அரிந்து போட்டு தேங்காய் வரமிளகாய் சேர்த்து தாளிதம் செய்த கறி.. அப்பப்பா அவ்வளவு ருசி..
வீட்டு வேலை செய்தே ஓய்ந்துபோன ஒடிசலான தேகம். கண்களில் எப்போதும் தெரியும் அசதி. இருக்கும் நாலைந்து புடவைகளையே மாற்றி மாற்றி கட்டுவாள். சிடுசிடுவென எல்லோரையும் விரட்டிக்கொண்டே இருந்தாலும் தங்கமான மனது. அவள் ஒருநாள் உடம்புக்கு முடியாமல் படுத்துவிட்டாலும் வீடே நாறிவிடும். சித்தியென்றாலும் என் மாமாக்கள், அம்மா எல்லோரும் அவளை அதட்டுவது வழக்கம். ஏதாவது பிரச்னை செய்து அவ்வப்போது வாங்கிக்கட்டிக்கொள்வாள்.
ஒருமுறை பொங்கல் பண்டிகையன்று குழந்தைகளை விரட்டி அவள் ஏதோ சொல்லி என் மாமாக்கள் அவளை உலுப்பியெடுக்க, சமையலறையில் உட்கார்ந்து ஓவென ஒரே அழுகை. 'எல்லாரும் நல்லா திட்டுங்க.. நேனு ஏமி சேஸ்துனு! நாக்கு யொவரு லேது. அனாதை தானே நேனு! அந்த பிச்சாளு அப்பவே அவங்க வீட்டு வேலைக்கு வந்து இருந்துக்கச்சொன்னார்..' என புலம்ப, சின்ன குழந்தைகளான நான் மற்றும் என் அத்தை பெண்கள் அவளை சமாதானம் செய்ய முயன்றதைத்தான் பதிவின் ஆரம்ப வரிகளில் படித்தீர்கள்.
நாகை ரெயில்வேயில் கணவர் அப்பாய்க்கு மேலே இருந்த சூப்பர்வைசர் பிச்சாளுவிடம் சின்ன அம்மம்மாவிற்கு மிகுந்த மரியாதை. பிச்சாளுவை கேட்காமல் எதுவுமே செய்யமாட்டார் கணவர். குழந்தை பாக்கியம் இல்லையென்றால் அம்மாவின் வற்புறுத்தலால் அப்பாய் மறுமணம் செய்துகொள்வதாக முடிவு செய்ய, அழுது புலம்பியபடி உடனே பிச்சாளுவிடம் ஓடினாள் சி. அம்மம்மா. 'ரெண்டே வருஷத்துல குழந்தை இல்லேங்கறதுக்காக இவளை விட்டுட்டு வேறு கல்யாணம் செய்யனூங்கறியே! நீயெல்லாம் மனுசனா' என பிச்சாளு தட்டிக்கேட்டும் அப்பாய் மாறவில்லை. ஒரு நாள் மனைவியை வீட்டை விட்டே வெளியேற்றினார்.
தினமும் சாயங்காலம் தம்பித்துரை பூங்காவிற்கு சின்ன அம்மம்மா போவது வழக்கம். ரயில்வே ஒர்க் ஷாப் விட்டு மாலை பூங்கா பெஞ்சில் உடகார்ந்து காரப்பொறி சாப்பிட வரும் அப்பாயின் காலடியில் கிடந்து 'ரெண்டோ பெல்லி ஒத்து பாவா!' என அவள் கெஞ்சி அழுவது வழக்கமாம். இறுக்கமான முகத்துடன் காரப்பொறியை சாப்பிட்டு விட்டு அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் அப்பாய் போன நாட்கள் பல.
'போரா நுவ்வு! அந்த மகமாயி உன்ன வாரிக்
கிட்டு தான் போவா!' என சாபமிட்டு அவள் வீடு திரும்பினாலும் அடுத்த வாரம் மறுபடியும் அதே பூங்கா போய் கெஞ்சி அழுவாள்.
ஒருநாள் வொர்க்‌ஷாப்பில் இருந்து வெளியே வரும்போது அப்பாய்யின் பையை செக்யூரிடி ஆபிசர் சோதனை செய்து இரும்பு கொறடு ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார்கள். திருட்டுக்குற்றம்.. உடனே தற்காலிக பணி நீக்கம்.
'ஐயய்யோ! ஆய்ன தொங்கவாடு காது.. திருட மாட்டாருங்க.. மனக்கு எந்துக்கு இனுமு கொறடு!' என பிச்சாளு வீட்டில் சின்ன அம்மம்மா அழுது கெஞ்சியும், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 'வெள்ளக்கார துரை கறாரான மனுஷன். இரும்பு கொறடை திருடியது குற்றமாம். நின்ன என்கொயரி பெட்டேரு.. ஆய்னக்கு பணி போயிந்தி' என பிச்சாளு வந்து சொல்ல ஓவென அழுது பிலாக்கனம் பிடித்தாள். அப்புறம் அப்பாய் பூங்கா வருவதும் நின்று போக, வேலை போன கவலையில் கையிலும் காசில்லாமல் பித்து புடித்தவர் போல இருந்தார்.
சில நாட்களில் அப்பாய்க்கு உடம்பு சுகமில்லை என தகவல் வர சின்ன அம்மம்மா அவர் வீட்டிற்கு ஓடினாள். வாசல் கதவு பூட்டியிருக்க, எதிரே ஓடி வந்த பிச்சாளு 'ஆய்னக்கு ரொம்மு நொப்பி (நெஞ்சு வலி).. ஆஸ்பத்ரீலோ உண்ட்டாரு' என சொல்ல அலறியபடி அங்கே ஓடினாள். அதற்குள் எல்லாம் முடிந்து போனது.
'பாழாப்போன ரெண்டாங்கல்யாணம் பண்ற நெனப்பு வந்து.. பணி போயிந்தி.. நா பாவ உசுருனி போயிந்தே! என அழுது அரற்றிய
சின்ன அம்மம்மாவை பிச்சாளுவும் அவரது மனைவியும் சமாதானம் செய்ய முயன்றார்கள்.
அடுத்த சில நாட்களில் ஆபிசில் பிச்சாளு வெள்ளைக்கார துரையை கெஞ்சி அப்பாய்க்கு சேரவேண்டிய பணத்தை வாங்கிக்கொடுத்தபோது சின்ன அம்மம்மா 'நாக்கு ரூப்பாயலு ஒத்து பிச்சாளு! நூவே பெட்டுக்கோ' என சொல்லி புத்திர சம்பத்து உள்ள அவர் கையில் பணத்தை திணித்ததும், மனமில்லாமல் தயங்கியபடி கண்ணீருடன் பிச்சாளு பெற்றுக்கொண்டதும், இருபதே வயதில் இளம் விதவையாக சின்ன அம்மம்மா தன் அக்கா வீட்டிற்கு வந்து சேர்ந்ததும்.. 1930இல் நடந்து முடிந்த சம்பவங்கள்..
நீண்ட பெருமூச்சுடன் தன் கதையை சின்ன அம்மம்மா சொல்லி முடித்தபோது வாக்கிலியில் பொங்கல் பானையின் கீழே இரும்பு அடுப்பு விறகில் நெருப்பு அனைந்து சாம்பல் பூத்திருந்தது. கதையை கேட்டு எதிரே இருந்த என் அத்தை பெண்கள் கோட்டீஸ்வரியும் ரேவதியும் அழுது கொண்டிருந்தார்கள். . இது 1976இல் பொங்கலன்று.
'ச்சே! அப்பாய் தாத்தா சாகாமெ இருந்திருந்தா நீங்க நல்லா இருந்திருப்பீங்கல்ல?' என கோட்டீஸ்வரி கேட்க, மெல்ல விசும்பத்தொடங்கினாள் சின்ன அம்மம்மா.
'நாக்கு காவாலெ.. நேஞ்சேசின தப்புக்கு!' என அவள் கதற எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
'தப்பா? நுவ்வு ஏமி தப்பு சேஸ்திவி?' (நீ என்ன தப்பு செய்தாய்)
'ஆ இனுமு கொறடு...! இரும்பு கொறடை அவர் பையில் போட்டதே நாந்தான்.. ஆ பார்க் பெஞ்சுலோ' பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
'ரெயில்வே வேலை போச்சுன்னா கைல காசில்லாமெ ரெண்டாங்கல்யாணத்தை நிறுத்திடுவார்னு நெனைச்சேன். ஆனா அவரு உசுரையே நிறுத்திட்டேனே!' தலையில் அடித்துக்கொண்டாள்.
அதிர்ச்சியில் உறைந்து போய்..மெதுவாக அவளைக்கேட்டோம்..
'ஆ ரெயில்வே இனுமுக்கொறடு நீக்கு எக்கட தொறக்கிந்தி?' (ரயில்வேக்கு சொந்தமான அந்த இரும்பு கொறடு உனக்கு எங்கே கிடைத்தது?)
மூக்கை சிந்தி முந்தானையை தோளில் போட்ட பின் சன்னமாக பதில் வந்தது..
'பிச்சாளு இன்ட்டிலோ..'
(சீதாபதி ஶ்ரீதர்)
நன்றி.. பத்திரிக்கைக்கு எனது கதையை அனுப்புமாறு ஊக்குவித்த சகோதரி Vedha Gopalan, சகோதரர் Anand Raghav மற்றும் ஏராளமான நண்பர்களுக்கு நன்றி..🙏

மார்ட்டின் (மீள்)

பெயர்
மார்ட்டின் ஜெரோம். அரியலூர் பக்கம் குலமாணிக்கம் சொந்த ஊர். சட்டென கோபம் வந்தாலும் கையோடு கன்னங்குழி விழ சிரிக்கவும் செய்வார். 80களில் திருச்சி மன்னார்புரம் பவானி லாட்ஜில் தங்கிக்கொண்டு ICWA படித்துக்கொண்டிருந்தார்.
அப்பா கிராமத்தில் நிலபுலன்கள் வைத்துக்கொண்டு மாதாமாதம் பணம் அனுப்ப, இவர் திருச்சியில் சொகுசாக படித்துக்கொண்டிருந்தார். மாநிறத்திற்கும் சற்றே குறைவான சருமம். ஓர வகிடா நடு வகிடா என புரியாத பாக்யராஜ் சிகையலங்காரம். சிங்கப்பூர் கைலி. வெள்ளை பார்டர் போட்ட கலர் பனியன் போடுவார். ஆருயிர் பால்ய நண்பன் கணபதி Ganapathi Subramanian மூலம் பரிச்சயமானவர். 'நம்ம ரூம்புக்கு வாங்க புள்ள! சேந்து படிக்கலாமே' என அவர் கேட்க கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்ய முடிவு செய்தோம்.
ஒருநாள் சைக்கிள் காரியரில் கனமான புத்தகங்கள் எடுத்துக்கொண்டு அவரது லாட்ஜ் ரூமுக்கு போனேன். கயத்து கட்டிலில் ஜமுக்காளம் மற்றும் துவைத்து நாளான தலகானி உறை நெடி. கட்டிலில் உட்கார்ந்ததும் தொபுக்கென உள்ளே போன என்னிடம் 'ஶ்ரீதர்.. எதையுமே ஒழுங்கா ப்ளான் பண்ணி செய்யனும்.. புரிஞ்சுதா?' என அவர் சொல்ல, அந்த காலத்தில் வடிவேலு இருந்திருந்தால் 'ஆஹா..வடிவேலு மாதிரி வில்லங்கம் புடிச்சவர் மாதிரீல்ல இருக்காரு' என நினைத்திருப்பேன். 'சொல்லுங்க மார்ட்டின்.. என்ன செய்யலாம்? அக்கவுன்ட்ஸ் புக் கொணாந்திருக்கேன்' என வெள்ளந்தியாக சொன்ன என்னிடம், 'அந்த அக்கவுன்ட்ஸ் புக்கெ மொத ஓரமா வைய்ங்க புள்ள...மொதல்ல முந்தின அஞ்சு வருச கொஸ்டீன் ஆன்ஸர் எடுத்துப்பாப்பம்' என சொல்லி அலமாரியிலிருந்து சரட்டென பழைய புத்தகங்களை வெளியே எடுத்தார். புத்தகத்தை அவர் தொட்டு சில மாதங்களாவது ஆனதை புத்தகத்திலிருந்து வெளியே தாவிய பாச்சை சொல்லிச்சு. மணி இப்பவே காலை பதினொன்று.
'ஶ்ரீதர்.. ICWAவ சாதாரணமா நெனைச்சுடாதீங்க.. அந்த காஸ்டிங் பேப்பர் இருக்கே.. எப்பிடி படிச்சாலும் ஊத்தீரும்' என சொல்லி அஹ்ஹஹ்ஹாவென அவர் எகத்தாளமாக சிரிக்க நான் உள்ளுக்குள்..'ஏது ஆரம்பமே சரியில்லியே....'.என நினைத்துக்கொண்டேன்.
அடுத்து ' டேய் கிட்டா! காபி கொண்டாடா' என அவர் சத்தம் கொடுக்க சில நிமிடங்களில் பவானி லாட்ஜ் பெயர் பொறித்த டபரா செட்டில் ஒன் பை டூ காபி வந்தது. 'ஶ்ரீதர் காபி சாப்டாவுட்டு நீங்க மார்ஜினல் காஸ்டிங் இதுக்கு முந்தி அவனுங்க #*%$€** (கெட்ட வார்த்தை) எந்தெந்த வருஷம் கேட்டுத்தொலைச்சிருக்கான்னு ஒரு பேப்பர்ல குறிங்க.. நா சுருக்க ஒரு தம்ம முடிச்சிக்கறேன்'னு சொல்லி மேசை டிராயரிலிருந்து பிளேடை எடுத்து வில்ஸ் ஃபில்டரை இரண்டாக வெட்டி ஒன்றை பத்த வைத்து, தமிழ்வாணன் மாதிரி காலை நீட்டி X மாதிரி மேசை மேல் வைத்து மூக்கு வழியாக புகையை விட்டார். ' ம்ஹூம்.. இவுரு விவகாரம் புடிச்சவர் தான்.. மணி இப்பவே பன்னண்டு.
'ஶ்ரீதர்!.. தல கொஞ்சம் கனக்குது.. நான் அப்படியே சரிஞ்சி ஒக்காந்து ஒரு பத்து நிமிசம் தூங்கிட்டு வந்துரவா? இல்ல நீங்க சாப்டு ஒரேடியா சாய்ங்காலம் வரீங்களா? என கேட்டு என் பதிலுக்கு காத்திராமல் இடுப்பிலிருக்கும் லுங்கியை தளர்த்தி இழுத்து சொறுகிக்கொண்டு அவர் தூங்க ஆரம்பிக்க, நான்... (கிழிஞ்சது போ..).
மாலை மார்ட்டின் ரூமுக்கு போனால் ஆளைக்காணோம். வெளியே வந்தால் தூரத்தில் ஆட்டோ ஸ்டான்டில், ஒரு ஆட்டோவின் பின் சீட்டில் அமர்ந்தவன்னம் ஆட்டோக்காரரிடம் பேசிக்கொண்டு 'வாங்க ஶ்ரீதர்.. பாத்திங்களா..நம்ம எபிநேசர் புது வண்டி எடுத்திருக்காப்ள.. இப்பத்தான் மாலை போட்டு வண்டி ரெண்டு நாளா லைன்ல ஓடுது.' என்றார்.
' சரி மார்ட்டின்!.. நாம படிக்க அந்த பளய கொஸ்டீன்ஸ்... என இழுத்தேன். '
'அதுவா.. இந்தா கொஞ்ச நேரத்துல கரூர் தான்தோன்றிமலைல இருந்து நம்ம ஒறவுக்காரப்பையன் ஒருத்தன் வர்றான். அவங்கூட டின்னர எதுத்தாப்ல மிலிட்டரி ஹோட்டல்ல முடிச்சிகிட்டு நாம நைட்டு ஒரு ஒம்பது மணிக்கி ஆரம்பிக்கலாமா?' வென கேட்ட கையோடு அவரே ' வேணாம் ஶ்ரீதர்..படிக்க ஒக்காந்தா சும்மா மூனு நாலு மணி நேரம் கிடு..கிடு..கிடு ன்னு ஒடனும் இல்ல? இல்லன்னா வேஸ்ட்டு. அதனால நாம ஒரேடியா நாளைக்கி காலைல பத்து மணிக்கே ஒக்காரலாம். இன்னிக்கி ஃப்ரெண்டு கூட நைட்ஷோ.. சிம்கோமீட்டர் சத்யால இன்னியோட கடசீ நாள்.. கோழி கூவுது' என இழுத்தார். மகா எரிச்சல் எனக்கு..'கோழி கூவுதா? எக்ஸாம்ல கூவிடும்டி' என உள்ளுக்குள் சலித்துக்கொண்டு வீடு திரும்பினேன்..
அடுத்த நாள் படிக்க போனால் லாட்ஜ் ரூம் பூட்டியிருந்தது. எங்க போயிருப்பாரென யோசித்தபடி வெளியே வந்து டீக்கடையில் ஒரு 'வாளக்கா பஜ்ஜி',போன்விடா டீ வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த போது கவனித்தேன். தூரத்தில் ஒரு அம்பாசடர் கார்... கிட்ட வரும்போது அதில் முன் பக்கம் பயில்வான் போன்ற டிரைவர் பக்கத்தில் குட்டியூண்டாக மார்ட்டீன். பஜ்ஜி சுற்றிய தந்தி பேப்பரை கசக்கியெறிந்து வாயில் தங்கியிருந்த வாழைக்காய்தோலை துப்பிவிட்டு உற்று பார்த்தேன். பின் சீட்டில் முரட்டு உருவத்துடன் மூன்று பேர். வண்டி நிற்கவில்லை. அன்றைய படிப்பும் கோவிந்தா..
மறுநாள் லாட்ஜ் ரூமில் மார்ட்டீன் இருந்தார்.
'என்னங்க மார்ட்டீன் நேத்திக்கி என்னாச்சு? நம்ப ஏரியா பக்கம் கார்ல சுத்திட்டிருந்தீங்க?'
அதுவா ஶ்ரீதர்.. கார்ல எங்கூட எல்லாரும் மஃப்டில இருந்தாங்க.. முந்தாநாளு மெஸ்ஸுல சாப்ட்டு வெளில வாரேன்.. ரவுடிபசங்க மூனு பேரு என்னைய நிறுத்தி 'யார்ரா நீயி! புதுசா நம்ப ஏரியாவுல?ன்னு விஜாரிச்சதுமில்லாமெ பேசீட்டிருக்கும்போதே பளார்னு ஒருத்தன் அறைஞ்சுட்டான்'
'ஐயய்யோ .. அப்பறம்?'
'அப்பபறமென்ன.. ஊருக்கு தகவல் சொல்லியனுப்ச்சேன்..எங்கப்பாரு உடனே இவங்கள காரோட அனுச்சிட்டாரு..'
'மஃப்டில அவங்கள பாக்க பயம்மா இருந்துச்சே! என்னா பண்ணாங்க?'
'கார்ல ரெண்டு ரவுண்டு சுத்தி வந்து அவனுங்கள தேடி, கனகா வீட்டான்ட முச்சந்தியல புடிச்சிட்டோம். கார்ல ஏத்திகிட்டு நேரா அண்ணா ஸ்டேடியம் பக்கம் போயிட்டோம். அதுல என்னைய அறைஞ்சவன் மாத்தரம் 'ஓ'ன்னு அழுது கெஞ்சுனான். போய்த்தொலையறானுங்கன்னு நாஞ்சொல்ல, டோல்கேட்ல நிறுத்தி மெரட்டிட்டு எறக்கி வுட்டுட்டோம்'
' சரி.. கூட்டிக்கிட்டு போயிருந்தா என்னா பண்ணியிருப்பீங்க?'
' அதுவா.. ஸ்டேஷன்ல அவனுங்கள ஜட்டியோட நாலு நாள் வச்சிருந்து ரத்தம் வெளிய வராமெ சுளுக்கெடுத்து விட்ருப்பாங்க..செத்த நேரம் முன்னே அந்த முக்குல அவனுங்க நின்னுட்டிருந்தானுங்க.. என்னிய பாத்தவுன்னே சலாம் வெக்கிறான்' என சிரித்த மார்ட்டினை நானே கொஞ்சம் கலவரமா பார்த்தேன். நல்ல மனுஷந்தான். ஆனா சண்டைன்னு வந்துட்டா பொல்லாதவனாயிடறார். என்ன! அவர் கூட சேர்ந்து உருப்படியா இன்னும் படிக்க ஆரம்பிக்கவே இல்லியேயென கவலை எனக்கு.
அடுத்த இரண்டு மாதங்கள் இப்படியே.. லாட்ஜ் ரூம் பூட்டியிருக்கும். அல்லது ஓரிரு நாள் படித்தால் அடுத்த நான்கு நாட்களுக்கு 'அப்பத்தாவுக்கு பேதி, அண்ணம்புள்ளைக்கு கட்டி ஒடைஞ்சிருச்சு, ஒன்னுக்கு போனா எரியுது' என காரணங்கள் சொல்லி என்னை திருப்பி அனுப்பி விடுவார். முக்காவாசி நேரம் நானே தனியாக படிக்க வேண்டியதாகிவிட்டது.
நடுவே அவ்வப்போது மார்ட்டீனை பார்க்கும்போது ' மாஞ்சு மாஞ்சு புஸ்தகத்தை படிக்காதீங்க ஶ்ரீதர். அஞ்சு வருசம் பழைய கொஸ்டின் பேப்பர் படிங்க போதும்' என அட்வைஸ்...இருந்தாலும் பயந்துகொண்டு எல்லா புத்தகங்களையும் படித்தேன்.
பரிட்சை ஒரு வாரம் நேஷனல் காலேஜில். நன்றாகவே எழுதினேன். தினம் பரிட்சைக்கு வரும் மார்ட்டீன் கையில் சிகரெட் வாசனையுடன் பழைய விடைத்தாள்கள். சிகப்பு ஜோட்டர் ரீஃபிள் பேனாவில் அன்டர்லைன் செய்யப்பட்ட பக்கங்கள். வழக்கம்போல சட்டைப்பையில் அரை துண்டு வில்ஸ் சிகரெட் . 'ஶ்ரீதர்! சும்மா ஆன்சரை மட்டும் எழுதுனா போறாது. எல்லாருந்தான் எழுதுவான். அங்கங்க நெளிநெளியா அன்டர்லைனும் பண்ணனும். முக்கா பக்கத்துல மொன்னையா நிறுத்தாதீங்க.. முழு பக்கத்துக்கு இழுத்து உட்ருங்க. '.
ரிசல்ட் வரும் முன்பே மார்ட்டீனுக்கு நாக்பூர் NTPC யில் ட்ரெய்னீ அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் வேலைக்கு கடிதம் வந்தது. ICWA இன்டர் முடித்தால் அடுத்த க்ரேடு கிடைக்குமாம்.
ரிசல்ட்டும் வந்தது..
இருவரும் இன்டர் பாசானோம்...
ஆனால் மார்ட்டின் எக்கச்சக்க மார்க்குகளுடன்..

மாஸ்டர்ஜி...


1991...பம்பாய் நாரிமன் பாய்ன்டில் பங்கு வர்த்தக குஜராத்தி கம்பெனி ஒன்றில் நான்கு வருடங்கள் பணியாற்றியபின் ஒரு கப்பல் சேவை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த புதிது. வேலை பிடிக்கவில்லை. மறுபடியும் பங்குச்சந்தைக்கே போக முயற்சித்த போது மூத்த சகோதரன் மூலம் டெல்லி பங்கு வர்த்தக நிறுவனமொன்றின் பம்பாய் கிளையில் சேர இன்டர்வியூ அழைப்பு வந்தது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து டாக்சி பிடித்து கால்காஜி பகுதியில் பல்அடுக்கு மாடி கட்டிட வளாகத்தில் நுழைந்தேன். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட CAக்கள் அங்கே. மூத்த CA கர்க் (Gurg) என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். சம்பளம் நிறைய கொடுப்பவர்களாம். 'ஷேர் டிரேடிங் பண்ண எங்க மாஸ்டர்ஜி வெறும் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்டுகளை மட்டுமே எடுப்பார். நல்ல டிரெய்னிங் கொடுப்பார்கள். தத்தி மாதிரியோ, இல்ல சும்மா ஓபி அடித்தாலோ தூக்கிடுவார்' என எச்சரிக்கை செய்துகொண்டிருக்கும்போதே பாலு மகேந்திரா தொப்பியுடன் ஒருவர் வந்தார். மாஸ்டர்ஜியின் புள்ளயாம். உ.கிழங்கு சிப்ஸ் பொட்டலத்தை திறந்து வாயில் திணித்து அரைத்துக்கொண்டே என்னை சில கேள்விகள் கேட்டார். அறை முழுக்க சிப்ஸ் வாசனை. மதியம் மாஸ்டர்ஜியை பார்க்க கூட்டிப்போவதாகவும் சொன்னார். யார் இந்த மாஸ்டர்ஜி? எல்லோரும் அவரைப்பற்றியே பேசுகிறார்கள்!
மதியம் டில்லி புறநகர் பகுதியில் ஒரு பெரிய வீட்டின் முன் வண்டி நிற்க, உள்ளே நுழைந்தோம். 'அதோ.. அந்த ரூமுக்குள் போ.. மாஸ்டர்ஜி இருக்கார்' என சொல்லிவிட்டு பாலு மகேந்திரா தொப்பி பக்கத்து ரூமுக்குள் ஓடினார். அவ்வளவு பயம். பெரிய டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்த மாஸ்டர்ஜிக்கு சுமார் 70 வயதிருக்கும். உயரம் குறைவாக ஒடிசலான தேகம். படிய வாரிய வழுக்கையில்லா எல்.கே. அத்வானி முகம். நுனி உதட்டில் சீரான செவ்வக வடிவில் ஒட்ட வைத்த மாதிரி நரை மீசை. அந்தினியூன்டு தேகத்துக்கு தகுந்த மாதிரி கச்சிதமான சி.பி.ஐ சஃபாரி சூட். தாடையையும் கழுத்தையும் குறுக்கே இனைக்கும் பை போன்ற தொங்கு சதை..
'உன் அண்ணா எங்களுக்கு நல்ல பழக்கம்.. கப்பல் சேவை நிறுவனத்தில் என்ன வேலை செய்கிறாய்?' .. எகத்தாளமும் தோரணையும் சம விகிதாச்சாரத்தில் கலந்து ஹிந்தியில் கேள்விகளை என் முன்னே விட்டெறிந்து என் கண்களை ஊடுருவி பார்த்தார். உள்ளுக்குள் 'யப்பா! அத்வானி மாஸ்டர்ஜி பெரிய பணக்கார்ரா இருப்பார் போலருக்கே!' என உத்திரத்தை பார்த்தவன்னம் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். பக்கத்தில் 'துர்கா கோட்டே' மாதிரி இடமிருந்து வலமாக கழுத்தைச்சுற்றி புடவைத்தலைப்பால் முக்காடு போட்ட அவரது மார்வாடி மனைவி, வேற்று கிரகத்து மனிதனை பார்ப்பது போல் என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.
'இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தக தரகு நிறுவனங்களில் ஒன்று எங்களுடையது. எல்லாம் இன்ஸ்ட்டிடியூட் கஸ்டமர்கள் தான். தனி நபர்களுடன் பரிவர்த்தனை கிடையாது. எல்லா வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகளும் எங்கள் கஸ்டமர்கள். பங்குகள் பரிவர்த்தனை தினமும் லட்சக்கணக்கில் நடக்கும். ஈக்விட்டி ட்ரேடிங் மட்டுமல்லாது மணி மார்க்கெட், பாண்டுகள் என எல்லா வியாபாரங்களுமுண்டு. என் பையன் உனக்கு டிரெயினிங் கொடுப்பார்' என மிரட்டும் ராமதாஸ் குரலில் (பா.ம.க அல்ல.. நடிகர் ராமதாஸ்)அவர் பாட்டுக்கு விளக்கிக்கொண்டிருக்கும்போதே எதிரே மேசையில் பளபளவென நெய்யில் மின்னும் கோதுமை ரொட்டி, மல்லியிலை தூவிய ஏதோ வட இந்திய சப்ஜி, சற்று நேரம் முன்னே நெய் ஜீரகம் தாளித்த தால் தட்கா, ஆலுகோபி..
நாக்கில் எச்சில் ஊறியது. நல்ல பசி..'மதிய சாப்பாட்டுடன் நேர்க்காணல் வைக்கும்போது மொதல்ல சோத்த போடக்கூடாதா! 'பங்கு பரிவர்த்தனை சமாசாரத்தை அப்பறமேட்டுக்கு வச்சிக்கலாமே' என சொல்லலாம் போல இருந்தது. அத்வானி மாமா அப்போதைக்கு விட்ட பாடில்லை.
'ஒரு நிறுவனம் முன்னேற நாம் என்னென்ன செய்யனும்' என அவர் கேட்க என் மைண்ட் வாய்ஸ்: நேரா நேரத்துக்கு சாப்பிடனும். சாப்பாட்டுக்கு நடுவே ஆபிஸ் வேலை பார்க்க கூடாது.. சுறுக்கமா பேசனும்!
மனிதர் அத்தோடு விடவில்லை. 'அடுத்த பத்து வருடத்தில் நம் நிறுவனத்தை எப்படி கொண்டுபோவோம் தெரியுமா'.. (அடுத்த பத்து நிமிசத்துல தால் ரொட்டி, புவ்வா எல்லாம் ஆறிப்போய் தொலைஞ்சிடுமேய்யா!.. உனக்கு பசிக்கவே பசிக்காதா!') உள்ளுக்குள் அவரை சபித்தபடி வெளியே களங்கமில்லாத சிரிப்பை உதிர்த்து வைத்தேன். கிச்சன் பக்கம் 'பூஊவ்வ்வ்வ்' என மிக்ஸியில் மாங்கோ லஸ்ஸி தயாராகிக்கொண்டிருந்தது.
எங்கே போனார் பாலு மகேந்திரா தொப்பி பையன்! கண்கள் அவரை தேடிக்கொண்டிருக்கும்போதே அடுத்த ரூமிலிருந்து பயந்துகொண்டே எட்டிப்பார்த்த பையனை ஓரக்கண்ணால் பார்த்த அத்வானி மாமா 'ஆஜாவ்!' என அழைக்க, 'ஆ! மாட்டிக்கொண்டோமே!' என்பது போல வந்து எதிரில் அமர்ந்தார் பையன்.
அலுவலக சம்பந்தமான ஏதோ பரிவர்த்தனை செஞ்சிட்டியா என அப்பா கேட்க பரிதாபமாக விழித்தார் பையன். உதட்டோரத்தில் சிப்ஸ் ஒட்டிக்கொண்டிருந்தது. (பாவி! வீட்லயும் சிப்ஸா!). முகத்தில் சலனமோ கோபமோ வெளிக்காட்டாமல் 'என்ன செய்யப்போறே? ஆர்டர் வாங்கினாயே!' என அப்பா கேட்க, 'கல் மார்க்கெட்மே கரீதேங்கே' (நாளை மார்க்கெட்டில் அந்த பங்குகளை வாங்கலாம்) என பவ்யமாக பதில் வர, 'ஏக் படா தாலா பி லேலோ!' (ஒரு பெரிய பூட்டையும் சேர்த்து வாங்கு!) என்ற அப்பாவின் குரலில் கிருத்துருவம் தெரிந்தது. சங்கடத்துடன் நான் நெளிய, கிச்சனில் மிக்ஸி சத்தம் நின்று அம்மாவும் வெளியே எட்டி பார்த்தார். மாஸ்டர்ஜி கண்டிப்பானவர் போல. இப்பசத்திக்கி வயத்துக்கு அங்கே சோறு இல்லையென்பது ஊர்ஜிதம்.
அடுத்த பதினைந்து நிமிடம் வேலை விஷயமாக என்னிடம் சில கேள்விகள் கேட்டு முடித்துக்கொண்டு 'சரி..கிளம்பு. உனக்கு சாப்பிட நேரமில்லை.. ஃப்ளைட்டுக்கு நேரமாச்சே! மன்னிக்கவும்' என சொல்லி என் எதிரே மாங்கோ லஸ்ஸி மட்டும் வைத்தார்கள். மாஸ்டர்ஜியும் அடுத்த அறைக்கு ஓய்வெடுக்க போனார்.
'பாவி.. அப்பா சொன்ன அந்த ஷேரை வாங்கி தொலைச்சிருக்க கூடாதா! உன்னால லேட் ஆச்சு.. தால் தட்காவும் போச்சு' என பாலு மகேந்திரா தொப்பி பையனை சபித்துக்கொண்டிருக்கும்போதே அவர் ஓடி வந்தார், கையில் சிப்ஸுடன்.. (யோவ்! உங்கப்பா நிறுவனத்தை சிப்ஸ் சாப்பிட்டே இழுத்து மூடப்போறே!)
'தப்பா எடுத்துக்க வேணாம் ஶ்ரீதர்.. அப்பா கண்டிப்பானவர். எல்லாமே கரெக்டா இருக்கனும் அவருக்கு. அந்த கண்டிப்பு இல்லாட்டி இந்த நிறுவனமே இருக்காது'.. ஆள்காட்டி விரலில் ஒட்டியிருந்த மசாலாவை நக்கியபடி சம்பளம் இத்யாதி விபரங்களை சொல்லி உடனே வேலையில் சேர வாழ்த்தியபின் டிரைவரை கூப்பிட, கொலவெறி வேகத்தில் வண்டியை ஓட்டி சரியான நேரத்துக்கு என்னை ஏர்போர்ட்டில் சேர்த்தார் ஜாட் டிரைவர்.
அடுத்த சில நாட்களில் நான் பம்பாய் ஃபோர்ட் பகுதியில் அவர்களது அலுவலகத்தில் சேர்ந்ததும், கை நிறைய சம்பளம் வாங்கியதும், பாலு மகேந்திரா தொப்பி சிறந்த முறையில் எனக்கு வேலை கற்றுக்கொடுத்ததும், பார்க்க சாதாரணமாக இருந்தாலும் அவர் CAயில் அகில இந்திய அளவில் ராங்க் எடுத்தவர் என்று தெரிய வந்ததும், சிறந்த இந்திய ஷேர் புரோக்கர்களில் அவரும் ஒருவர் ஆனார் என்பதும், சதா சிப்ஸ் சாப்பிடும் அவரை மானசீகமாய் கலாய்த்ததை எண்ணி நான் வெட்கித்ததும், உடனே எனக்கு திருமணம் ஆனதும், திடீரென பங்கு மார்க்கெட் சரிந்ததும், அதனால் நிறைய தரகு நிறுவனங்கள் நலிந்து போனதும், அதிலொன்று எங்கள் நிறுவனமும் என்பதும், அவர்கள் பம்பாய் கிளையை மூட முடிவெடுத்ததும், அதனால் எனக்கு வேலை போனதும், தகுந்த இழப்பீடு கொடுக்க டெல்லியிலிருந்து அத்வானி மாஸ்டர்ஜி உத்தரவு போட்டதும், மனைவி பிரசவத்திற்கு ஊருக்கு போனதும், மற்றொரு ஃபார்மஸ்யூடிகல் நிறுவனத்தில் வேலை கிடைத்ததும்... சட்டென நடந்து முடிந்த நிகழ்வுகள் ஆறு மாதத்தில்..

பார்சிலோனா to பஹ்ரைன்

பொதுவாக எமிரேட்ஸ் விமானப்பயணங்களின் போது தலை முடியை கலைத்து இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கும் பழக்கம் கிடையாது எனக்கு. அதிலும் long-haul பயணங்கள் மிக சுவாரசியமானவை. எதிரே திரையில் சங்கீதம் அல்லது திரைப்படம் பார்த்து பொழுதை கழிக்கலாம். பள்ளிக்கூட நாட்களில் கேட்ட ஆபா, போனியெம் மற்றும் 90களில் ரசித்த ஜார்ஜ் மைக்கேல், மரியா கெர்ரெ, ஸ்டீவி வின்வுட்ஸ், பீஜீஸ் ஆல்பங்களை பல வருடங்கள் கழித்து இப்போது விமானத்தில் கேட்க சந்தோஷமாக இருக்கும்.
80களில் திருச்சி ப்ளாசா தியேட்டரில் என்டர் தி டிராகன் பட இடைவேளையில் மு.கோசு வடை தின்றபடி அர்த்தம் புரியாத (இப்பவுந்தான்) ஆங்கிலப்பாடல்களை முனுமுனுத்தது, NSB ரோடு Sea kings இல் ஐஸ் க்ரீம் சாப்பிட்டபடி by the revers Babylon க்கு காலில் தாளம் போட்டது எல்லாம் விமானத்தில் நினைவுக்கு இப்ப வரும்.
விமானம் சீராக மேலெழும்ப எதிரே இருந்த திரையை முடுக்கினேன். பக்கத்தில் ஒரு சீட் காலியாக இருந்தால் கூட அந்தப்பக்கம் இருக்கும் சீனாக்காரன் இரண்டு சீட்டுக்குள் தன் முழு ஸ்தூல சரீரத்தையும் சுறுக்கி சும்மா நாலைந்து மணி நேரம் அசந்து நித்திரை சுகத்தை அனுபவிக்க, நான் ஏதோ ஒரு பாடாவதி ராஜேஷ் கண்ணா படம் பார்த்து கை கால் குடைச்சல் இன்னும் அதிகமாகி அவஸ்தை பட்டு, கிஷோர் குமாரின் பாடல் என்ற ஒரே காரணத்திற்காக ரா.க.வை மன்னித்த தருணங்கள் கணக்கில் இல. மனோஜ் குமார் படமா! விமானத்திலிருந்து குதிக்கவே நான் தயார்.
இன்று பார்சிலோனாவிலிருந்து மாலை 5 மணிக்கு கிளம்பி டியூனிசியா, மால்டா, லிபியா, எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு மேலே பறந்து துபாய் போய்
பஹ்ரைன் விமானத்தை பிடிக்க வேண்டும். கிட்டத்தட்ட 6200 கிமீ தூரம். இந்த 8 மணி நேரப்பயண வேகத்தில் திருச்சி-சென்னை 8 முறை போய் வந்துவிடலாம்.
பக்கத்தில் மனைவி Usharani Sridhar 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' பார்க்க ஆரம்பித்து அடுத்த பத்தே நிமிடத்தில் 'காமாட்டிப்பாட'த்துக்கு (மலையாளம்) தாவி சில நிமிடங்களில் 'the Mecca Clock Tower- Construction of the world's largest clock and tallest clock tower' எனும் documentaryயை முழுவதும் ரசித்து பார்த்து விட்டு Sudokuவில் இறங்கினாள். அவங்க ரசனையே வேற.
நான் UK Chart No 1 hits எனும் கடந்த 60 வருட பாப் பாடல்களின் வருட வாரியான பட்டியலை திரையில் வருட, எல்விஸ் ப்ரெஸ்லி, ஜாக்ஸன்ஸ், ஸ்டீவி வொன்டர், ஜார்ஜ் பென்சன், பில்லி ஓஷன், எரிக் க்லேப்டன், விட்னி ஹூஸ்டன் (தமிழிசைக்கு தூரத்து உறவாம்) கென்னி ரோஜர்ஸ் பாடல்களை ரசித்துக்கொண்டிருந்த போது திரையில் சுவாரசியமான ஒன்றை கண்டேன்.
அதாவது 1955 முதல் 2016 வரை ஓவ்வொரு track list முன்பும் அவ்வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டிருந்தார்கள். அந்த முக்கிய நிகழ்வுகள் படிக்க ஸ்வாரசியமாக இருந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.. (எல்லா வருடங்களும் அல்ல).
விமானம் துபாய் சென்றடைய இன்னும் மூன்று மணி நேரமிருப்பதால் இப்பதிவை கைப்பேசியில் aeroplane mode சென்று தட்டச்சு செய்வதை பார்த்த விமான பணிப்பெண் (உஸ்பெகிஸ்தான் நாட்டுக்காரியாம்) on air wifi வசதியுண்டென்று உசுப்பேத்தினாள். ஆனால் அதுக்கு தனியாக துட்டாம். முறுவலோடு மறுத்து திரையை தேய்த்தேன்.. இதோ..
1954- இங்கிலாந்து ஓட்டப்பந்தய வீரர் ரோஜர்
பானிஸ்டர் ஒரு மைல் தூரத்தை நான்கு
நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில்
கடந்து சாதனை.
1955- டிஸ்னிலேண்ட் கலிஃபோர்னியாவில்
திறக்கப்பட்டது.
1956- மர்லின் மன்ரோ நாடகாசிரியர் ஆர்தர்
மில்லருடன் நலங்கு💕
1957-ரஷ்யா ஸ்புட்னிக்-1ஐ விண்ணுக்கு
அனுப்பியது.
1958- Gen Charles De Gaulle (CDG) பிரான்சு
நாட்டின் முதல் அதிபராக பதவியேற்பு
1960- பென்ஹருக்கு 11 ஆஸ்கர் விருதுகள்
1961- ஜான் F கென்னடி அமெரிக்காவின் 35வது
அதிபர்
1962- மர்லின் மன்ரோ மூக்கில் பஞ்சு 😩
1963- இனி கென்னடி கன்னடிக்க முடியாது..
கொலை💀
1964- நெல்சன் மன்டேலா சிறையிலடைப்பு
1965- சர் வின்ஸ்டன் சர்ச்சில் மரணம் (ச்சே!
அன்னிக்கி பாத்து ஏன் சர்ச்சுக்கு
போனாருன்னு கேக்கப்படாது.. ஆமா)
1966- ப்ரஷ்னேவ் சோவியத் தலைவரானார்
1967- கேப் டவுனில் டாக்டர் க்ரிஸ்டியன்
பெர்னார்டினின் முதல் இதய மாற்று
அறுவை சிகிச்சை
1968- மர்டின் லூதர் கிங் மரணம் (போயிட்டியே
'ராசா' என பெண்கள் ஒப்பாரி)
1969- ஆம்! ஸ்ட்ராங்காக சந்திரனில் நீல்
ஆம்ஸ்ட்ராங் கால் வைப்பு
1971- ஃபிலிப்ஸ் கம்பெனியின் வீடியோ காசெட்
ரெகார்டர் அறிமுகம் (நன்றிப்பா!
இல்லாட்டி 90கள்ல ஞாயித்துக்கிழமை
பிரம்மச்சாரிங்க நாங்க எல்லோரும்
சேந்து டெக் எடுத்திருக்க முடியாதில்ல!)
1973- நிக்ஸனின் வாட்டர்கேட் ஊழல்
(சிரிச்சிகிட்டே கையை ஆட்டி வேன்ல
ஏறலை இவரு)
1974- பேராசிரியர் 'என்ரோ ரூபிக்'கின் முதல்
ரூபிக் cube அறிமுகம்
1975- The Godfather-IIக்கு ஆஸ்கர்
1976- சில்வெஸ்டர் ஸ்டாலன் 'ராக்கி' படத்தில்
அறிமுகம்
1977- எல்விஸ் ப்ரெஸ்லி சிவலோக பதவி
1978- லூயி ப்ரௌன் முதல் டெஸ்ட் ட்யூப்
குழந்தை
1979- மதர் தெரிசாவுக்கு நோபல் பரிசு
1980- அல்ஃப்ரெட் ஹிட்ச்காக்குக்கு பால்😩
1990- நெல்சன் மண்டேலா விடுதலை ( நேரா
அண்ணா சமாதிக்கு போய் மாலை.. ச்சீ
நம்மூர் ஞாபகத்துல எழுதிட்டேன்)
1995- பேரிங்ஸ் வங்கி திவாலா. நிக் லீசன்
தலைமறைவு ( ஹூம்.. வழக்கை சந்திக்க
தயார்னு அறிக்கை கொடுத்துட்டு
இன்னொவாவில எற தெகிரியம் வேணும்)
2000- ஜார்ஜ் W புஷ் குறைந்த வாக்கு
வித்தியாசத்தில் வெற்றி
2010- ஸ்பெயினுக்கு உலக கால்பந்து கோப்பை
2015- ஆஸ்திரேலியாவிற்கு உலக கோப்பை
2017- ட்ராஃப்கோ பொது மேலாளர் ஶ்ரீதருக்கு
பதவி உயர்வு 🤣🤣
சீதாபதி ஶ்ரீதர்- (துபாய் லௌஞ்ச்சிலிருந்து)

Sunday, April 2, 2017

கல்லுக்குழி ராமநாதன்


80களில் திருச்சி டிவியெஸ் டோல்கேட் பகுதி மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் அரசு குடியிருப்பு காலனியில் சுமார் ஏழெட்டு வருடங்கள் குடியிருந்தோம். இரண்டு தளங்கள் உள்ள கட்டிடம் ஓவ்வொன்றிலும் விசாலமான 6 ஃப்ளாட்கள். சுவாரசியமான காலனி வாழ்க்கை. அங்கு பெரும்பாலோர் நடுத்தர வர்க்கத்தினர்.
அடுத்த ஃப்ளாட்டில் தொபேல் தொபேலென பசங்க அடி வாங்கும் சத்தம் இங்கே கேட்கும். பின்புற பால்கனி போனால் 'இந்த வீட்ல என்னை யாரு மதிக்கறாங்க' போன்ற கணவன் மனைவி சண்டை வசனங்கள் அப்பட்டமாக காதில் விழும். பால்கனியிலிருந்து வெளியே கழுத்தை நீட்டினால் மேல் தளத்திலிருந்து சப்பிய மாங்கொட்டை நம் தலையில் விழுவது நிச்சயம். பனியனுடன் பின்பக்க பால்கனியில் அந்த வீட்டுக்காரர் ரொம்ப நேரம் நின்றுகொண்டிருந்தால் வீட்டுக்காரம்மாவுடன் சண்டையென அர்த்தம். அப்படி அவர் நின்றதை ரொம்ப நேரம் பால்கனியில் நின்று கவனித்தது எங்க நைனா என்பது கூடுதல் தகவல்.
பக்கத்தில் செங்குளம் காலனி தாண்டி கல்லுக்குழி. ராகவா காஃபி வொர்க்ஸ், காய்கறி கடைகள், அடுத்து மட்டன் ஸ்டால். மட்டன் ஸ்டால் கொட்டகை மூங்கிலில்தான் ஆங்கிலோ இந்தியன் ஒருவனை ஜட்டியுடன் கட்டிவைத்து மூன்று பேர் அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த பகுதி மாணவி ஒருத்தியை பொன்மலையிலிருந்து சைட் அடிக்க வந்து மாட்டிக்கிட்டானாம். மடப்பய! சாமர்த்தியம் பத்தாது! அடித்து முடித்த பிறகு அவனை எச்சரித்து, கயிற்றை அவிழ்த்து விட்டதும் சர்வசாதரணமாக பக்கத்து கடையில் தம்மடித்துக்கொண்டு (அதே ஜட்டியுடன்) நின்றுகொண்டிருந்தவனை ஆச்சரியமாக பார்ப்போம். அடுத்த வாரம் பொன்மலைப்பட்டி கல்கண்டார் கோட்டையில் அதே பெண்ணுடன் சைக்கிளில் டபுள்ஸ் போய்க்கொண்டிருந்தவனை மனதார வாழ்த்தத்தான் முதலில் நினைத்தோம். ஆனால் சைக்கிளுக்கு காரியர் இல்லாததைக்கண்டு வயிறெரிந்து போன கதை இப்ப எதுக்கு!
இப்ப கல்லுக்குழி ரெயில்வே காலனி... டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட், அரிசிக்கடை, கல்லுக்குழி மாரியம்மன் கோவில் அடுத்து ரெயில்வே காலனி ஆரம்பம். காலனி நடுவே அனுமார் கோவிலை ஒட்டி இரும்பு தடுப்புக்கப்பால் தூரத்தில் ஜங்ஷன் தெரியும். 'பாஆஆஆம்..' என்ற சத்தத்துடன் தடக்..தடக் கென ஓடி மறையும் டீசல்/எலெக்ட்ரிக் இஞ்சின்களுக்கு நடுவே, ஒரு ஓரமாக ஈனஸ்வரத்தில் 'ஊ..உஸ்ஸ்ஸ்க்'கென ஷன்ட்டிங் அடிக்கும் பழைய நீராவி இஞ்சின்களை இனி பச்சை விளக்கு படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
விஷயத்துக்கு வருவோம். கோவிலுக்கு எதிரே ரயில்வே காலனி வீடுகளில் ஒன்று தான் 'கல்லுக்குழி ராமநாதன்' வீடு. ஓவியர் வினு வரைந்த மாதிரி அழகான முகம். கொஞ்சம் சொறுகுன மாதிரி கண்கள். பரந்த நெற்றிக்குப்பின் இளம் வழுக்கை வர ஏக சாத்தியங்கள் உள. நெற்றியில் விபூதி..முகத்தில் மீசையில்லாமல் தாடையில் மட்டும் தேவையில்லாமல் வளர்ந்த தாடி. அவனது பெற்றோர் நாமக்கல்லில் இருக்க, திருச்சியில் அத்தை மாமாவுடன் ரயில்வே குவார்ட்டர்ஸ் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தான். ரயில்வே காலனியில் வரிசையாக ஒரே மாதிரியான வீடுகள். தட்டி போட்ட முன் அறை. மழை நீர் பாசம் பிடித்த ஈர சுவர்கள். சுவற்றில் காரை உதிர்ந்து அங்கங்கே பல்லிளிக்கும் செங்கல். மஞ்சள் சுண்ணாம்படித்து அலிபாபா படம் போல வீட்டுக்கதவில் எண்கள்.
நான், ராமநாதன் மற்றும் ஶ்ரீரங்கம் காமாட்சி ( Venkat Kamatchinathan) மூவரும் ICWA பரிட்சைக்கு கணிதம் சேர்ந்து படித்தோம். அப்போதெல்லாம் CA மற்றும் ICWA படிப்புகளில் கணிதம் தான் மிகவும் கஷ்டமான பேப்பர். CA கும்பல் பூரா அந்த பேப்பருக்கு ஆண்டாதெரு குப்புசாமி சாரிடம் டியூஷன் போவார்கள். 'நானெல்லாம் B.Sc வரைக்கும் மேத்ஸ்ல எப்பவுமே சென்ட்டம் தான்' என பீற்றிக் கொண்டு, CA கணிதத்தில் 30க்கும் குறைவாக வாங்கி சில நாள் பேயறைந்த மாதிரி திரிந்தவர்கள் பலர்.
வீட்டு வாசல் வேப்ப மர நிழலில் வொயர் நாற்காலி போட்டு சாயங்கால வேளையில் அத்தையும் மாமாவும் உட்காந்துகொண்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, நங்கள் உள்ளே முன் கூடத்தில் தரையில் பொஸ்தகங்களை பரப்பிக்கொண்டு படிப்போம்.
விதவிதமான கணக்குகள் போட சுவாரசியமாக இருக்கும். ஒரு ட்ரெப்பீசிய வடிவ தொட்டியின் நீள அகல ஆழம் இவ்வளவு..அதில் நிரம்பியுள்ள தண்ணீர் முழுவதையும் இன்ன அளவுள்ள போவினியால் (சொம்பால்) மொண்டு வெளியே கொட்ட மொத்தம் எத்தனை சொம்புகள் தேவை? (ஒரே சொம்பு போதுமே என கமென்ட் போடுபவர்களுக்கு, அவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்படும் 😁😁).
ராமநாதன் பேப்பர் எதுவும் இல்லாமல் சிமென்டு தரையிலேயே சிலேட்டு குச்சியில் எழுதி கணக்கு போடுவான். அந்த கணக்கு முடிந்ததும் பலப்பத்துடன் பச்சக்கென அந்தப்பக்கம் தாவி, குனிந்து தரையில் அடுத்த கணக்கை ஆரம்பிப்பான். 'ஒரு செவ்வக வடிவ மூடப்பட்ட கூண்டின் ஒரு மூலையில் கயிற்றால் கட்டப்பட்டுள்ள குருவி அக்கூண்டின் எல்லா பகுதிகளுக்கும் பறக்கவேண்டுமாயின் குறைந்த பட்சம் எவ்வளவு நீளமான கயிறு தேவை?' இது மாதிரி அடுத்த இரண்டு மூன்று கணக்குகள் முடிக்கும்போது ராமநாதன் பச்சக் பச்சக்கென இங்கும் அங்கும் குதித்து தரை முழுக்க கிறுக்கல்கள்.
'பாவம்... கஷ்டப்பட்டு படிக்கறான். தரைல எழுதி கணக்கு போட்டுத்தான் அவனுக்கு பழக்கம். அந்த பழக்கம் அவன வுட்டு போகமாட்டேங்குது. எனக்குத்தான் அதை அழிச்சு அலம்ப மனசே இல்லை' யென அத்தை சொல்வார்கள். அடுத்த சில மாதங்களில் நான் பம்பாய் போய்விட்டதும் ராமநாதனுடன் தொடர்பில்லாமல் போய்விட்டது.
அடுத்த லீவில் ஊருக்கு வரும்போது அவசரமாக கல்லுக்குழி போய் ராமநாதனின் வீட்டுக்கதவை தட்டினேன். 'பழைய பேப்பரா? ரெண்டு மாசங்கழிச்சு வா!' என வேறு ஒருத்தர் முறைத்தார். ராமநாதனின் மாமா ஜாகை இப்போ அங்கே இல்லை போல. அப்ப ராமநாதன்? குனிந்து பார்த்தேன். வீட்டுத்தரை சுத்தமாக இருந்தது.
பம்பாயில் நான் செம்பூரில் தங்கியிருந்தேன். CA படிப்புக்கு ஓரளவு நல்ல வேலை. பழைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. காமாட்சிநாதன் மற்றும் ராமநாதனைப்பற்றி தகவல் ஏதுமில்லை. நான் அடிக்கடி மாடுங்கா பகுதியில் சங்கர மடம் அருகே சிவன் கோவிலுக்கு போவதுண்டு. போதுபோகாமல் கோவில் வாசலில் நின்றுகொண்டிருப்போம். ஒருவர் தினமும் புல்லாங்குழல் வாசிப்பதை(யும்)வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.
அப்போது தான் கல்லுக்குழி ராமநாதன் கண்ணில் பட்டான். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து...அழகான மீசை. சீராக வளர்ந்த இரண்டு நாள் தாடி. ஒடிசலாக இருந்த ராமநாதனா இது! இப்ப சட்டை பட்டன்களுக்கிடையே பனியன் தெரியுதே!. அவனும் படிப்பை முடித்துவிட்டு சென்னையிலிருந்து பம்பாயில் புதிய வேலைக்கு வந்திருந்தான். பக்கத்தில் கன்செர்ன் அல்லது சொசைட்டியில் பாஞ்சு நிமிஷம் வரிசையில் காத்திருந்து நாலரை ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி (அவந்தான் கொடுத்தான்) இரவு சாப்பாடு சாப்பிட்டோம். 'வா.. வா.. பக்கத்துல தான் வீடு' என என்னை இழுத்துக்கொண்டு 'ஏவ்' என ஏப்பமிட்டபடி (புளித்த மோர்) நடந்தான்.
கிங்ஸ் சர்க்கிள் சமீபம் 'ஓகே கண்மணி' படத்தில் வருவது மாதிரி பழைய கட்டிடம். பெரிய உயர்ந்த கதவுகள். அங்கே தான் அவன் பேயிங் கெஸ்ட்டாம். வயதான பார்ஸி பெண்மணி நைட்டியுடன் கதவைத்திறக்க உள்ளே தன் ரூமுக்கு அழைத்துக்கொண்டு போனான். அவனுக்கு நாரிமன் பாயின்ட் ரஹேஜா சென்டரில் ஆபிஸ். எனக்கு ரீஜென்ட் சேம்பர்ஸ். ரொம்ப பக்கம் தான். நிறைய நேரம் பேசிவிட்டு, மறுநாள் மதிய உணவு இடைவேளையில் சந்திப்பதாக முடிவு செய்து, விடை பெற்றுக்கொண்டு '8 லிமிடெட்' பிடித்து செம்பூர் வந்து சேர்ந்தேன்.
மறுநாள் மதியம் 1 மணிக்கு அவனது ஆபிஸ் போனேன். 'பெஸ்ட் அன்டு க்ராம்ப்டன்' நிறுவனம். அதில் டெபுடி அக்கவுன்ட்ஸ் மானேஜராம். 'கஷ்டப்பட்டு படிச்சதனால நல்ல வேலைல நீ இருக்கறது ரொம்ப சந்தோஷம்பா' என அவனை வாழ்த்தி, அவனது ஆபிஸ் நம்பரை என் பாக்கெட் டைரியில் குறித்துக்கொண்டேன்.
'உன்னோட ஆபிஸ் நம்பரை சொல்லு' என பேனாவை எடுத்தவன் பேப்பர் ஏதுமில்லாத கிறுக்கல்கள் நிறைந்த சொறசொறப்பான மர மேசையின் மேற் பரப்பில் பச்சக்கென குனிந்து நம்பரை குறித்துக்கொண்டான். நல்ல வேளை தரையில் கார்பெட் போட்டிருந்தார்கள்...