1991...பம்பாய் நாரிமன் பாய்ன்டில் பங்கு வர்த்தக குஜராத்தி கம்பெனி ஒன்றில் நான்கு வருடங்கள் பணியாற்றியபின் ஒரு கப்பல் சேவை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த புதிது. வேலை பிடிக்கவில்லை. மறுபடியும் பங்குச்சந்தைக்கே போக முயற்சித்த போது மூத்த சகோதரன் மூலம் டெல்லி பங்கு வர்த்தக நிறுவனமொன்றின் பம்பாய் கிளையில் சேர இன்டர்வியூ அழைப்பு வந்தது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து டாக்சி பிடித்து கால்காஜி பகுதியில் பல்அடுக்கு மாடி கட்டிட வளாகத்தில் நுழைந்தேன். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட CAக்கள் அங்கே. மூத்த CA கர்க் (Gurg) என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். சம்பளம் நிறைய கொடுப்பவர்களாம். 'ஷேர் டிரேடிங் பண்ண எங்க மாஸ்டர்ஜி வெறும் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்டுகளை மட்டுமே எடுப்பார். நல்ல டிரெய்னிங் கொடுப்பார்கள். தத்தி மாதிரியோ, இல்ல சும்மா ஓபி அடித்தாலோ தூக்கிடுவார்' என எச்சரிக்கை செய்துகொண்டிருக்கும்போதே பாலு மகேந்திரா தொப்பியுடன் ஒருவர் வந்தார். மாஸ்டர்ஜியின் புள்ளயாம். உ.கிழங்கு சிப்ஸ் பொட்டலத்தை திறந்து வாயில் திணித்து அரைத்துக்கொண்டே என்னை சில கேள்விகள் கேட்டார். அறை முழுக்க சிப்ஸ் வாசனை. மதியம் மாஸ்டர்ஜியை பார்க்க கூட்டிப்போவதாகவும் சொன்னார். யார் இந்த மாஸ்டர்ஜி? எல்லோரும் அவரைப்பற்றியே பேசுகிறார்கள்!
மதியம் டில்லி புறநகர் பகுதியில் ஒரு பெரிய வீட்டின் முன் வண்டி நிற்க, உள்ளே நுழைந்தோம். 'அதோ.. அந்த ரூமுக்குள் போ.. மாஸ்டர்ஜி இருக்கார்' என சொல்லிவிட்டு பாலு மகேந்திரா தொப்பி பக்கத்து ரூமுக்குள் ஓடினார். அவ்வளவு பயம். பெரிய டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்த மாஸ்டர்ஜிக்கு சுமார் 70 வயதிருக்கும். உயரம் குறைவாக ஒடிசலான தேகம். படிய வாரிய வழுக்கையில்லா எல்.கே. அத்வானி முகம். நுனி உதட்டில் சீரான செவ்வக வடிவில் ஒட்ட வைத்த மாதிரி நரை மீசை. அந்தினியூன்டு தேகத்துக்கு தகுந்த மாதிரி கச்சிதமான சி.பி.ஐ சஃபாரி சூட். தாடையையும் கழுத்தையும் குறுக்கே இனைக்கும் பை போன்ற தொங்கு சதை..
'உன் அண்ணா எங்களுக்கு நல்ல பழக்கம்.. கப்பல் சேவை நிறுவனத்தில் என்ன வேலை செய்கிறாய்?' .. எகத்தாளமும் தோரணையும் சம விகிதாச்சாரத்தில் கலந்து ஹிந்தியில் கேள்விகளை என் முன்னே விட்டெறிந்து என் கண்களை ஊடுருவி பார்த்தார். உள்ளுக்குள் 'யப்பா! அத்வானி மாஸ்டர்ஜி பெரிய பணக்கார்ரா இருப்பார் போலருக்கே!' என உத்திரத்தை பார்த்தவன்னம் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். பக்கத்தில் 'துர்கா கோட்டே' மாதிரி இடமிருந்து வலமாக கழுத்தைச்சுற்றி புடவைத்தலைப்பால் முக்காடு போட்ட அவரது மார்வாடி மனைவி, வேற்று கிரகத்து மனிதனை பார்ப்பது போல் என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.
'இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தக தரகு நிறுவனங்களில் ஒன்று எங்களுடையது. எல்லாம் இன்ஸ்ட்டிடியூட் கஸ்டமர்கள் தான். தனி நபர்களுடன் பரிவர்த்தனை கிடையாது. எல்லா வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகளும் எங்கள் கஸ்டமர்கள். பங்குகள் பரிவர்த்தனை தினமும் லட்சக்கணக்கில் நடக்கும். ஈக்விட்டி ட்ரேடிங் மட்டுமல்லாது மணி மார்க்கெட், பாண்டுகள் என எல்லா வியாபாரங்களுமுண்டு. என் பையன் உனக்கு டிரெயினிங் கொடுப்பார்' என மிரட்டும் ராமதாஸ் குரலில் (பா.ம.க அல்ல.. நடிகர் ராமதாஸ்)அவர் பாட்டுக்கு விளக்கிக்கொண்டிருக்கும்போதே எதிரே மேசையில் பளபளவென நெய்யில் மின்னும் கோதுமை ரொட்டி, மல்லியிலை தூவிய ஏதோ வட இந்திய சப்ஜி, சற்று நேரம் முன்னே நெய் ஜீரகம் தாளித்த தால் தட்கா, ஆலுகோபி..
நாக்கில் எச்சில் ஊறியது. நல்ல பசி..'மதிய சாப்பாட்டுடன் நேர்க்காணல் வைக்கும்போது மொதல்ல சோத்த போடக்கூடாதா! 'பங்கு பரிவர்த்தனை சமாசாரத்தை அப்பறமேட்டுக்கு வச்சிக்கலாமே' என சொல்லலாம் போல இருந்தது. அத்வானி மாமா அப்போதைக்கு விட்ட பாடில்லை.
'ஒரு நிறுவனம் முன்னேற நாம் என்னென்ன செய்யனும்' என அவர் கேட்க என் மைண்ட் வாய்ஸ்: நேரா நேரத்துக்கு சாப்பிடனும். சாப்பாட்டுக்கு நடுவே ஆபிஸ் வேலை பார்க்க கூடாது.. சுறுக்கமா பேசனும்!
மனிதர் அத்தோடு விடவில்லை. 'அடுத்த பத்து வருடத்தில் நம் நிறுவனத்தை எப்படி கொண்டுபோவோம் தெரியுமா'.. (அடுத்த பத்து நிமிசத்துல தால் ரொட்டி, புவ்வா எல்லாம் ஆறிப்போய் தொலைஞ்சிடுமேய்யா!.. உனக்கு பசிக்கவே பசிக்காதா!') உள்ளுக்குள் அவரை சபித்தபடி வெளியே களங்கமில்லாத சிரிப்பை உதிர்த்து வைத்தேன். கிச்சன் பக்கம் 'பூஊவ்வ்வ்வ்' என மிக்ஸியில் மாங்கோ லஸ்ஸி தயாராகிக்கொண்டிருந்தது.
எங்கே போனார் பாலு மகேந்திரா தொப்பி பையன்! கண்கள் அவரை தேடிக்கொண்டிருக்கும்போதே அடுத்த ரூமிலிருந்து பயந்துகொண்டே எட்டிப்பார்த்த பையனை ஓரக்கண்ணால் பார்த்த அத்வானி மாமா 'ஆஜாவ்!' என அழைக்க, 'ஆ! மாட்டிக்கொண்டோமே!' என்பது போல வந்து எதிரில் அமர்ந்தார் பையன்.
அலுவலக சம்பந்தமான ஏதோ பரிவர்த்தனை செஞ்சிட்டியா என அப்பா கேட்க பரிதாபமாக விழித்தார் பையன். உதட்டோரத்தில் சிப்ஸ் ஒட்டிக்கொண்டிருந்தது. (பாவி! வீட்லயும் சிப்ஸா!). முகத்தில் சலனமோ கோபமோ வெளிக்காட்டாமல் 'என்ன செய்யப்போறே? ஆர்டர் வாங்கினாயே!' என அப்பா கேட்க, 'கல் மார்க்கெட்மே கரீதேங்கே' (நாளை மார்க்கெட்டில் அந்த பங்குகளை வாங்கலாம்) என பவ்யமாக பதில் வர, 'ஏக் படா தாலா பி லேலோ!' (ஒரு பெரிய பூட்டையும் சேர்த்து வாங்கு!) என்ற அப்பாவின் குரலில் கிருத்துருவம் தெரிந்தது. சங்கடத்துடன் நான் நெளிய, கிச்சனில் மிக்ஸி சத்தம் நின்று அம்மாவும் வெளியே எட்டி பார்த்தார். மாஸ்டர்ஜி கண்டிப்பானவர் போல. இப்பசத்திக்கி வயத்துக்கு அங்கே சோறு இல்லையென்பது ஊர்ஜிதம்.
அடுத்த பதினைந்து நிமிடம் வேலை விஷயமாக என்னிடம் சில கேள்விகள் கேட்டு முடித்துக்கொண்டு 'சரி..கிளம்பு. உனக்கு சாப்பிட நேரமில்லை.. ஃப்ளைட்டுக்கு நேரமாச்சே! மன்னிக்கவும்' என சொல்லி என் எதிரே மாங்கோ லஸ்ஸி மட்டும் வைத்தார்கள். மாஸ்டர்ஜியும் அடுத்த அறைக்கு ஓய்வெடுக்க போனார்.
'பாவி.. அப்பா சொன்ன அந்த ஷேரை வாங்கி தொலைச்சிருக்க கூடாதா! உன்னால லேட் ஆச்சு.. தால் தட்காவும் போச்சு' என பாலு மகேந்திரா தொப்பி பையனை சபித்துக்கொண்டிருக்கும்போதே அவர் ஓடி வந்தார், கையில் சிப்ஸுடன்.. (யோவ்! உங்கப்பா நிறுவனத்தை சிப்ஸ் சாப்பிட்டே இழுத்து மூடப்போறே!)
'தப்பா எடுத்துக்க வேணாம் ஶ்ரீதர்.. அப்பா கண்டிப்பானவர். எல்லாமே கரெக்டா இருக்கனும் அவருக்கு. அந்த கண்டிப்பு இல்லாட்டி இந்த நிறுவனமே இருக்காது'.. ஆள்காட்டி விரலில் ஒட்டியிருந்த மசாலாவை நக்கியபடி சம்பளம் இத்யாதி விபரங்களை சொல்லி உடனே வேலையில் சேர வாழ்த்தியபின் டிரைவரை கூப்பிட, கொலவெறி வேகத்தில் வண்டியை ஓட்டி சரியான நேரத்துக்கு என்னை ஏர்போர்ட்டில் சேர்த்தார் ஜாட் டிரைவர்.
அடுத்த சில நாட்களில் நான் பம்பாய் ஃபோர்ட் பகுதியில் அவர்களது அலுவலகத்தில் சேர்ந்ததும், கை நிறைய சம்பளம் வாங்கியதும், பாலு மகேந்திரா தொப்பி சிறந்த முறையில் எனக்கு வேலை கற்றுக்கொடுத்ததும், பார்க்க சாதாரணமாக இருந்தாலும் அவர் CAயில் அகில இந்திய அளவில் ராங்க் எடுத்தவர் என்று தெரிய வந்ததும், சிறந்த இந்திய ஷேர் புரோக்கர்களில் அவரும் ஒருவர் ஆனார் என்பதும், சதா சிப்ஸ் சாப்பிடும் அவரை மானசீகமாய் கலாய்த்ததை எண்ணி நான் வெட்கித்ததும், உடனே எனக்கு திருமணம் ஆனதும், திடீரென பங்கு மார்க்கெட் சரிந்ததும், அதனால் நிறைய தரகு நிறுவனங்கள் நலிந்து போனதும், அதிலொன்று எங்கள் நிறுவனமும் என்பதும், அவர்கள் பம்பாய் கிளையை மூட முடிவெடுத்ததும், அதனால் எனக்கு வேலை போனதும், தகுந்த இழப்பீடு கொடுக்க டெல்லியிலிருந்து அத்வானி மாஸ்டர்ஜி உத்தரவு போட்டதும், மனைவி பிரசவத்திற்கு ஊருக்கு போனதும், மற்றொரு ஃபார்மஸ்யூடிகல் நிறுவனத்தில் வேலை கிடைத்ததும்... சட்டென நடந்து முடிந்த நிகழ்வுகள் ஆறு மாதத்தில்..
No comments:
Post a Comment