Tuesday, June 2, 2015

தன்னு மன்னுவை மணக்கிறார்(ஹிந்தி).. (Tannu weds Mannu- returns)


கடந்த பத்து நாட்களாக இந்த படத்தை பார்த்துவிடவேண்டுமென மனைவி உஷா சொல்லிக்கொண்டே இருந்தாலும், நேற்று தான் நேரம் கிடைத்தது. க்வின் படத்திற்குப்பிறகு அவள் கங்கனா ரனவத்தின் விசிறி. மதிய சாப்பாட்டிற்குப்பிறகு சின்னவனை சல்மானியா பகுதியில் டியூஷனுக்கு இறக்கிவிட்டபின் நாங்கள் 'தனா மால்' சினிப்ளெக்ஸ் உள்ளே போனபோது தியேட்டரில் எங்களையும் சேர்த்து மொத்தமே பத்து பேர் தான். இனி படம்...
லண்டனில் காதல் திருமணம் செய்துகொண்ட தன்னு(கங்கனா)வும் மன்னு(மாதவன்)வும் நான்கே வருடங்களில் தங்கள் உறவில் விரிசல் ஏற்பட உள்ளூர் மனநோய் மருத்துவரிடம் போய் முறையிட்டு, அங்கேயும் சத்தமாக சண்டையும் போட்டு, கங்கனா அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, முடிவில் மாதவன் காச்மூச்சென கத்த, அவருக்குத்தான் பிரச்னையென குண்டுக்கட்டாக அவரை தூக்கிக்கொண்டுபோய் அங்கேயே அனுமதிக்கப்படுகிறார். உடனே கங்கனா இந்தியா வந்து விவாகரத்து நோட்டீஸ் கொடுக்க வழக்கறிஞரை நாடுகிறார்.
ஆரம்பித்து பத்தே நிமிடத்தில் இவ்வளவு களேபரமும் நடக்க, படம் சூடு பிடிக்கிறது. கணவன் மனைவி சண்டையென்றால் அப்படியே ஒன்றிப்போய் தான் படம் பார்க்கிறார்கள் ஜனங்கள். படம் பார்ப்பவர்கள் முகத்தில் தான் என்னவொரு மலர்ச்சி! படம் முழுவதும் தியேட்டரில் ஒரே சிரிப்பலை.. அவ்வளவு காமெடி.
கதையின் சம்பவங்கள் பெரும்பாலும் லக்னௌ, கான்பூர் மற்றும் டெல்லி போன்ற இடங்களில். குறுகிய சந்துக்குள் மிகப்பெரிய வீடுகள். சைக்கிள், டோங்கா மற்றும் சேத்தக் ஸ்கூட்டர்கள், மொட்டை மாடியில் சார்ப்பாய்(கயிற்றுக்கட்டில்), மோடா வகையராக்கள், சுடிதார் அணிந்து மாடியில் பட்டம் விடும் இளம் பெண்கள், முக்காடிட்ட வயதான தாதி மற்றும் மௌசிகள், பழைய கங்கா ஜமுனா படம் திலிப் குமார், கண்ஹையா லால் போல சைடு பாக்கெட், வி-கட் பனியன் முன்ஷி மற்றும் பெருசுகள். திரையில் நம் கண் முன் அப்படியே வட இந்தியா...
1977 முதல் 80 வரை பட்டப்படிப்புக்காக நான் அலகாபாத்தில் என் மூத்த சகோதரி வீட்டிலிருந்தேன். அலகாபாத்திலிருந்து வாரனாசி, லக்னௌ, கான்பூர் நாங்கள் அடிக்கடி போகுமிடங்கள். கங்கனா விவாகரத்துக்காக கச்சேரி (கோர்ட்) பகுதி சென்றபோது அந்த சீனில் நான் படத்தோடு ஒன்றி அப்படியே 1979க்குப்போய்விட்டேன் என்பது உண்மை.
அலகாபாத் கச்சேரி வளாகத்திற்குள் நான் நிறைய முறை போனதுண்டு. நிறைய வக்கீல்கள் க்ளையன்ட்டுகளுக்காக திறந்தவெளியில் உட்கார்ந்திருக்க..பான்வாலாக்கள், சாய்வாலாக்கள் சுற்றி வர வியாபாரம் களைகட்டும். ப்ரெட்டை கடலைமாவில் முக்கியெடுத்து சுடச்சுட பஜியா ஒரு பக்கம், மீட்டா திக்கா சட்னியுடன் சமோசா கச்சோரி, காலா நமக் தண்ணீர் கலந்த பானி பூரி, கட்டித்தயிருடன் ஜிலேபி, இந்தப்பக்கம் பன்னீர் தெளித்த டன்டா பெனாரஸ் லஸ்ஸி, வேகவைத்த உ.கிழங்கை மசித்து சூடான கல்லில் தட்டி வஞ்சனையில்லாமல் நெய்யை கொட்டி வறுத்த ஆலு டிக்கியாவை ஆல இலையில் வைத்து பிசைந்து அதன் மேலே இம்லி கா ரஸ், தஹி, சாட் பொடிகளை தூவி மரக்குச்சி ஸ்பூனை நட்டு அவன் கொடுப்பதை வாங்க கூட்டமோ கூட்டம்..
இங்கும் அங்கும் ஓடும் நோட்டரி பப்ளிக்குகள்..உள்ளே நடக்கும் நீதிபதியின் விசாரனையோ வேடிக்கையாக இருக்கும். ஒருமுறை கோர்ட்டுக்கு ஏதோ ஒரு ஜோலியாக வந்து நானும் என் மாமாவும் உள்ளே போய் நீதி விசாரணையை வேடிக்கை பார்த்தோம். 'கணம் கோர்ட்டார் அவர்களே' போன்ற சினிமா டைப் வசனங்களோ, நடந்துகொண்டே சரட்டென செந்தாமரை மாதிரி ஸ்டைலாக திரும்பி 'ஆகவே மை லார்ட்' என முடிக்கும் லாயர்களோ கிடையாது. அதெல்லாம் சினிமாவில் மட்டுமே..பப்ளிக் பிராசிகியூட்டர் வாய் கொள்ளாத அளவு பான் போட்டுக்கொண்டு எச்சில் வழியாமலிருக்க தலையை கொஞ்சம் உயர்த்தியபடி பேசி, விசாரனையின் நடுவே அந்தப்பக்கம் போய் சுவற்று மூலையில் துப்பி விட்டு வருவார். சில லாயர்கள் விசாரனையின் நடுவே பொட்டலத்தை திறந்து 'பான்'ஐ ஆசையுடன் வாய்க்குள் தினிப்பதுடன் எதிரே உள்ள நீதிபதிக்கே கொடுப்பதுமுண்டு. நீதிபதியும் அங்கே அவ்வளவு உயரத்திலெல்லாம் உட்கார்ந்திருந்திருக்க மாட்டார்..ஆமாம்.
மன்னிக்கவும்.. அலகாபாத் கோர்ட் வளாகம் மாதிரியே இப்படத்திலும் இருப்பதால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நம் கதையையும் புகுத்தி விட்டேன்.
சரி..,படத்துக்கு வருவோம். இதற்குள் மாதவனும் லண்டனிலிருந்து வருகிறார். கணவன் மனைவி தனித்தனியாக வாழ்கிறார்கள். ஒருநாள்
மாதவன் அசப்பில் கங்கனா சாயலில் (இரட்டை வேடம்) இருக்கும் ஒரு விளையாட்டு வீராங்கனையை (குஸும்) சந்திக்கிறார். காதல் கொண்டு இருவரும் மணந்துகொள்ள முடிவு செய்கிறார்கள். பாப் முடி மற்றும் லேசாக தெற்றுப்பல்லுடன் வரும் குஸும் (கங்கனா-2) பஞ்சாபி போன்ற ஹரியான்வி மொழியில் பேசி அசத்துகிறார். ஆண் போல அசைந்து நடந்து கலக்குகிறார். கொஞ்சம் முரட்டு சுபாவமும் கூட. 'வோ தேக் கபூத்தர்...' ( அங்க பார் புறா..) என அவர் சொல்ல, எதிரே இருப்பவர் முகத்தை அந்தப்பக்கம் திருப்பியதும் ஒரே அப்பு...இந்த 'வோ தேக் கபூத்தர்' காலர் டியூனாகி வட இந்தியாவை கலக்குகிறதாம்.
மாதவன் இந்த மாதிரி ரோல்கள் எப்போதுமே அட்டகாசமாக நடிப்பார். படத்தில் நடுநடுவே தான் வருகிறார். நடிக்கிறார். அழுகிறார். இன்னமும் இளமையுடன் அழகாக இருக்கிறார். சொல்வதற்கும் இதற்கு மேல் ஒன்றுமில்லை.
படம் முழுக்க கங்கனா.. கங்கனா...கங்கனா தான்.நடிப்பில் அம்மனி பிச்சு உதறுகிறார். படு ஸ்டைலாக டான்ஸ் ஆடுகிறார். அசால்ட்டாக வசனம் பேசுகிறார். முனுக்கென்றால் மூக்கை சிந்தி அழகாக நடிக்கிறார். நண்பனின் கையிலிருந்து மாஞ்சா நூலை சடக்கென பறித்து மேலே இன்னொரு பத்தங்கை( பட்டம்) அறுத்து விடுகிறார். நேரம் கிடைக்கும்போது தண்ணியும் அடிக்கிறார். உரித்துப்போட்ட வாழை மட்டை மாதிரி படு ஒல்லி.. சைஸ் ஜீரோவில் புடவையுடனும், அத்லெட்டாக ஜீன்ஸ் டி-ஷர்ட்டுடனும் அசத்துகிறார். ஜெயம் ரவியுடன் தமிழில் தாம்தூம் படத்தில் பனங்கிழங்கு மாதிரி ஒல்லி பிச்சானாக வந்த இவரா இப்படி பட்டையை கிளப்புகிறார்?
படம் சக்கை போடு போடுகிறது. சுனிதி சௌஹானின் 'மூவ் ஆன்' பாடல் பஹ்ரைன் ரேடியோ எஃப். எம்.இல் தினம் இரண்டு முறை. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் சிறந்த வசனங்கள். வட இந்தியாவின் சுத்தமான ஹிந்தியில் நிறைய நகைச்சுவை வசனங்கள். நடுநடுவே ஹிந்தி கெட்ட வார்த்தைகளையும் கங்கனா சொல்லத்தவறவில்லை.
30 கோடி பட்ஜெட் படம் முதல் வாரத்திலேயே 90 கோடி வசூலை தாண்டி, இன்றோடு ஒன்பது நாட்களில் 100 கோடியையும் தாண்டியதாம்.
கடைசி சீன் மிகவும் அருமை. தன்னுவும் மன்னுவும் ஒன்று சேர்கிறார்களா என்பது நீங்களே தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியது. அவசரமாக டி.வி.டி வாங்க கடைக்கு ஓடாமல் தியேட்டரில் இரண்டரை மணி நேரம் சிரித்துக்கொண்டே பார்த்தால் மனசு லேசாவது நிச்சயம்...
கங்கனாவுக்கு இதிலும் அவார்டு கிட்டுமாம்...

திருசெந்துரை ராமமூர்த்தி சங்கர்

காலை சுமார் பன்னிரெண்டு மணிக்கு Ramakrishnan Venkataraman(முரளி) யிடமிருந்து குறுஞ்செய்தி.. 'அல் கோபாரிலிருந்து பஹ்ரைன் வந்திருக்கிறேன்.. லஞ்சுக்கு போலாமே'யென. கூடவே நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar உம் தொலைபேசியில் லஞ்ச் சாப்பிட அழைத்தார். முரளி சங்கரின் மைத்துனர். ஆப்பிரிக்காவிலிருந்து சமீபத்தில் சவுதிக்கு மாற்றிக்கொண்டு வந்தவர்.சங்கருக்கு பிடித்த சரவணபவனில் மதியம் சந்திப்பதாக முடிவானது.
அவரது குடும்பம் மற்றும் நண்பர் சங்கர் குடும்பத்துடன் சென்ற வெள்ளியன்று ஒரு நாள் முழுவதும் இனிமையாக கழித்தது மறக்க முடியாத அனுபவம்.
சரவணபவன் க்விக் லஞ்ச், பாயசம், ஐஸ்க்ரீம் முடித்து, நேராக சங்கர் வீட்டுக்கு போய் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அரட்டையடித்தபின் சங்கரின் மனைவி கல்பனா கொடுத்த அருமையான ஃபில்டர் காபி குடித்தபின், மாலை ப்ராம்கோ கோவிலுக்கு போவதாக முடிவானது.
ப்ராம்கோ எனப்படும் கற்பாறை உடைக்கும் தொழிற்சாலையில் தான் அந்த அம்மன் கோவில் உள்ளது. சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் வசிக்கும் லேபர் குவார்ட்டர்ஸ் நடுவே உள்ள கோவிலை தினமும் பராமரிப்பது கம்பெனி தொழிலாளர்கள் தான். நகரத்திலிருந்து 20 கிமீ தள்ளி எண்ணெய்க்கிணறுகள் உள்ள பாலைவனப்பகுதியில் கோவில் இருந்தாலும், செவ்வாய், வெள்ளியன்று அங்கே போனால் குர்த்தா பைஜாமாவுடன் பாதி பஹ்ரைன்வாசிகளை பார்க்கலாம்.
ஹார்மோனியம், தபலா, டோலக் சகிதம் அமர்க்களமாக ஹனுமான் சாலிஸா மற்றும் ராம், ஷிவ் சங்கர் பஜன்கள் பாடுவார்கள். கணேஷ், சாய்பாபா, ஷிவ், காளி மாதா, தேவி, ராம் லக்ஷ்மன், ஐயப்பா, பஜ்ரங் விக்கிரகங்கள், சிவலிங்கம் என களை கட்டும் கோவில். நெற்றியில் செங்குத்தாக திலகமிட்டு, கையில் பூஜாரி கட்டிவிடும் கயிறுடன் கப்பர்சிங் மாதிரி வெளியே வருவோம்.
கோவிலுக்கு வெளியே வந்ததும் சீக்கியர்களின் குருத்வாரா. அங்கு குரு க்ரந்த் சாஹிப் மற்றும் தசம் க்ரந்த் படித்து பஜன் நடக்கும். தலையை மறைக்க நமக்கு சிறு துண்டும் நெய் வாசனையுடன் லட்டு பிரசாதம் கொடுப்பார்கள்.
கோவிலுக்கு வெளியே தரையில் சுமார் 600, 700 பக்தர்களை உட்கார வைத்து சப்பாத்தி, சன்னா, கீ சாவல் (நெய் அரிசி) , மசாலா சாய் என வயிறு முட்ட மகா பிரசாதம் சாப்பிட்டு திரும்ப 20 கிமீ. தொலைவிற்கு வண்டி ஒட்டி வரும்போது தூக்கம் சொழட்டியடிக்கும்.
அன்று எங்களுக்கு மினி பிரசாதம் (சன்னா, ரோஸ்மில்க்) தான் கிடைத்தது. கோவிலை முடித்துவிட்டு எல்லோரும் எங்கள் இல்லத்திற்கு போனோம். சங்கரின் சுவாரசியமான இளம்பிராய தகவல்களை அவரது சகோதரி மாதங்கி பகிர்ந்துகொண்டார்.
நண்பர் முரளி மாதங்கி தம்பதிகளுக்கு அன்று திருமணநாள் என்பதால் கேக் வெட்டி, செல்ஃபி எடுத்து இரவு உணவு முடித்து எங்கள் அரட்டை கச்சேரி ஆரம்பம்..
சங்கருடன் அரட்டையென்றால் வேறென்ன! திருச்சி பற்றிய பேச்சு தான்....
மைக்கேல் ஐஸ்க்ரீம் கடையிலிருந்து நான்கு கடை தள்ளி ஜகந்நாதன் புக் டெப்போ வீட்டாரின் பையன் (எனது சி.ஏ. நண்பன்) அலாஷியஸ்,Aloysius James
அவனது பெரியம்மா( செல்லா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள்) சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி பிரின்சிபாலாக இருந்தது,
வக்கீல் விருத்தாசலம் ரெட்டியார் பையன் பரணி (குப்புசாமி டீச்சரிடம் டியூஷன்),
என்னுடன் கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்திட்ட ஶ்ரீரங்கம் ராகவேந்திரா நகர் காமாட்சிநாதன்,
ஆடிட்டர்கள் சந்தானம், செல்வராஜ், கிருஷ்ணசாமி ஜகந்நாதன், ஜி.பி(GB), குமார்ராஜ்...
சி.ஏ. ராங்க் வாங்கிய சதாசிவம், அவன் தங்கையை காதலித்து திருமணம் செய்துகொண்ட சுரேஷ், (திருமணத்திற்கு முன் அமெரிக்கா போகும்போதும் வரும்போதும் பம்பாயில் எங்கள் செட்டாநகர் ஃப்ளாட்டில் தங்கும் சுரேஷ் எங்களுக்கு அமெரிக்க சாக்ஸ் வாங்கி வருவான்)
எனது ரூம்மேட் ரங்கு என்கிற பாஷ்யம் ரங்கநாதன்(அம்மா மண்டபம்),
ரங்குவிற்கு தெரியாமலேயே அவனது பெரியம்மா பெண்ணை சி.ஏ. படிக்கும்போதே காதலித்த ஶ்ரீரங்கம் முரளி,
க்ராஃபோர்ட் (கிராப்பட்டி) லிருந்து தினமும் ஸ்கூல் ( St. Joseph's) வரும் என் க்ளாஸ்மேட் ரங்க பிரசாத்,
கூடவே வரும் குட்டி குட்டியாக அவனது சகோதரர்கள் பார்த்தசாரதி Ananthasayanam Thiruvenkatachary (இவர் தற்போது திருச்சி BHEL இல் பொது மேளாளர்),
 மற்றும்
மறந்து போன சிலபல பழைய அக்ரஹாரம் நண்பர்கள்,
'உங்களுக்கு இவனைத்தெரியுமா.. அவனைத்தெரியுமா'வென விசாரிக்கப்பட்ட மதுரா லாட்ஜ் பக்கம், பட்டர்வொர்த் ரோடு, ஆண்டா ஸ்ட்ரீட் நண்பர்கள்,
காசு வாங்காமல் ஊசி போடும் கிலேதார் தெருவில் ஆசுபத்திரி நடத்தும் எனது மைத்துனர் டாக்டர் மனோகர்,
ஒரு நாளைக்கு மூன்று படம் பார்க்கும் சங்கர் நண்பர்கள்,
நந்திகோவில் தெரு ஆடிட்டர் முகுந்தன் ஆபிஸ் நண்பர்கள்,
ஆடிட்டர் முத்துகிருஷ்ணன் (செல்வம் ஹோட்டல் அதிபர்) அலுவலக நண்பர்கள்,
மன்னார்புரம் நால்ரோடு லாட்ஜில் தங்கி வில்ஸ் ஃபில்டரை மூன்றாக வெட்டி (சிக்கனமாம்) புகைத்தபடி ஐ.சி.டபுள்யு.ஏ பாடம் சொல்லிக்கொடுத்த மார்ட்டின்,
வெறும் முந்தைய வருட விடைத்தாள்கள் கொண்டு அவர் என்னை இன்டர் பாஸ் செய்ய வைத்தது,
அக்கவுன்ட்ஸ் டியூஷன் எடுத்த ஜமால் முகமது பேராசிரியர் சுபான்கான்,
செயின்ட் ஜோசப்ஸ், நேஷனல், இ.ஆர். மேநிலைல்பள்ளி நண்பர்கள்,
சுந்தர் நகர் மற்றும் திருச்செந்துரை அக்ரஹார நாட்கள்,
நண்பர் Thiagarajan Arumugam உம் Saravanan Natarajanஉம் உறவினர்கள் போன்ற தகவல்கள்,
நண்பர்கள் Rajagopalan Trichy (கோபுலி) மற்றும் Ranganathan Kothandaraman பற்றி கொஞ்சம்,
வளைகுடா நாடுகளிலேயே ப்ளஸ் 2 வரை படித்து திடீரென சென்னை வந்திறங்கி சமாளிக்கும் எனது மற்றும் சங்கரின் பையன்கள்,
முரளியின் ERHS மற்றும் புட்டபர்த்தி கல்லூரி நாட்கள்,
எனது அலகாபாத் பல்கலைக்கழக பட்டப்படிப்பு நாட்கள், வருடம் முழுவதும் ஸ்ட்ரைக் நடத்தும் அலகாபாத் மாணவர்கள்,
பம்பாயில் சி.ஏ ஃபைனல் பரிட்சை படித்து ஃபெயிலாகி பாஸ் ஆன அனுபவங்கள்....
இரவு சுமார் 11.30 மணியளவில் வேறுவழியின்றி விடைபெற்றுக்கொண்ட முரளி, சங்கர் குடும்பத்தினரை அனுப்ப மனமில்லாமல் அனுப்பிவிட்டு திருச்சி நினைவுகளை அசைபோட்டவாறே சுஜாதாவின் 'ஶ்ரீரங்கத்து தேவதைகள்' ( பெண் வேஷம், திண்ணா, பேப்பரில் பேர்) படித்துக்கொண்டே 12.30 க்கு மேல் அப்படியே உறங்கிப்போனேன்....

ஓவியர் நடனம்

கல்கி, சாவி பத்திரிக்கையென்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ஓவியர் நடனம் அவர்களின் கார்ட்டூன்கள் தான். வாராவாரம் தி.ம.கதிர், சாவி, குங்குமம், குமுதம் மற்றும் விகடன் படிக்கும் குடும்பம் எங்களுடையது. 60 களிலிருந்து படித்து வருகிறோம்.
ஸிம்ஹா, ஶ்ரீதர், கோபுலு, லதா, உமாபதி, மாயா போ
ன்ற பழம்பெரும் ஓவியர்கள் வரிசையில் இருப்பவர்...
இவரது வண்ண ஓவியங்களையோ, ம்யூரல் எனப்படும் சுவர் ஓவியங்களையோ நான் பார்த்ததே இல்லை.
கல்கியிலும் சாவியிலும் கோடுகளினால் வரையப்பட்ட இவரது கார்ட்டூன்கள் அக்காலத்தில் மிக பிரபலம். 'கடுகு'வின் நகைச்சுவை கட்டுரைகளுக்கும், ஜோக் துணுக்குகளுக்கும் இவர் வரைந்த படங்கள் ஏராளம்.
குறும்புக்கார வாண்டுகள், வயதான தாத்தாக்கள், மாமிகள் என் இவர் தனித்துவம் வாய்ந்த ஓவியங்கள் இவருடையது. மூக்கில் சரிந்திருக்கும் கண்ணாடி, காது மடல்களில் உள்ள முடி, வயதானவர்களின் தூக்கி வாரிய பாதி வழுக்கை முடி, கால்சராய் போட்ட சின்ன பசங்கள், பொடி போட்டே விடைத்துப்போன மூக்குடன் உள்ள முகங்கள், கைகளில் உள்ள மயிர்... என மிக நுனுக்கமான சமாசாரங்களையும் விடாமல் வரைந்தவர்.
கோபுலு அவர்கள் கார்ட்டூன்களில் பொதுவாக தனது காரெக்டர்களை தலை முதல் கால் முழுமையாக வரைந்திருப்பாரெனில், நடனம் அவர்கள் அப்படியல்ல.. ஓரிரண்டு கோடுகளை சுண்டியிழுத்து பாதியில் விட்டுவிட்டாலும் ஓவியம் உயிரோட்டத்துடன் ப்ரமாதமாக இருக்கும்.
உதாரணமாக:
தவழும் வேட்டி(இரண்டே கோடுகள்)...
சின்ன பையன்களின் டயர் வண்டி& குச்சி..
வெட்கப்படும் மருமகள்(நெற்றியில் சுருள்முடியுடன்)...
வெற்றுடம்பு மாப்பிள்ளை(பனியனுக்குப்பின்னால் நெஞ்சில் ரோமம்)...
ஈசி சேரில் பேப்பர் படிக்கும் தாத்தா( தலைக்குப்பின்னால் ஓரிரண்டு கோடுகளில் ஈசி சேர்)...
கருப்பு கோட்டு வக்கீல்கள், நீதிபதி...எதிரே ஓரிரண்டு கட்டங்களுக்குள் (கூண்டு) கைகட்டிய குற்றவாளி...
மடிசார் கட்டிய பாட்டியின் ஒரு தோள்பக்கம் முந்தானை வரைவதில்லாமல் மறு தோளில் பின்பக்கமிருந்து ஒட்டிக்கொண்டிருக்கும் புடவைத்தலைப்பை ஒரே வரியில் வரைந்து அசத்துவார்...
முதல்வன் படத்தில் அர்ஜுனின் அப்பாவாக நடித்தாரென்பதும், முதன்முதலில் இவரை பத்திரிக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தியது எழுத்தாளர் தி.ஜா. அவர்கள் என்பதும் இன்று தான் நான் தெரிந்துகொண்ட கூடுதல் தகவல்கள்.
நேற்று அமரரானார்....
முன்பொருமுறை தானே வரைந்த இவரது படத்தை இன்று கரிக்கட்டியால் வரைந்து ஆழ்ந்த இரங்கலுடன்....

கெய்ரோ (எகிப்து)...


'கல்யாண செலவப்பத்தி கவலையே படாதீங்க.. பையன் வீட்டுங்காரங்க நாங்க நல்லா நடத்தி தர்றோம்.. பொண்ணுக்கு வேண்டிய சீர் செனத்தி எல்லாம் நல்லாவே செய்வோம். பையனுக்கு சொந்த ஃப்ளாட் இருக்கு' என பையனின் அப்பா அடுக்கிக்கொண்டே போக அந்த வரனை அமுக்கிப்போட பெண் வீட்டார்களுக்குள் கடும் போட்டி. இதெல்லாம் இந்தியாவிலா என மலைக்க வேண்டாம். இது எகிப்து நாட்டில் சார்!. பையன்களுக்கு அங்கு பயங்கர டிமாண்டு. கலியாணமாகாத சௌந்தர்ய ஸ்த்ரீகள் அங்கே நிறையவாம்.
சென்ற வாரம் எங்கள் விற்பனை மேலாளர் ஆஸாமுடன் நான்கு நாட்கள் கெய்ரோ போகும்போது அந்நாட்டவர்களின் திருமணம் பற்றி அவன் சொன்ன தகவல் இது. பொதுவாக அலுவல் நிமித்தம் அவனுடன் நான் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்யும்போது அந்நாட்டின் கலாச்சார பழக்க வழக்கங்களை அழகாக எனக்கு விளக்குவான். லெபனீஸ் நாட்டவன். கோபத்தை இம்மியளவும் காட்டாமல் புன்முறுவலுடன் எதிரிகளை கையாண்டு தடயமில்லாமல் அவர்களை அப்புறப்படுத்தி வெற்றிகாணும் சாதுர்யமிக்கவன். வேலையில் திறமைசாலி. பெய்ரூட் மற்றும் பாரிஸில் வளர்ந்து, படித்து 25 வருடங்கள் வளைகுடா நாடுகளில்( என்னுடன் 8 வருடங்களாக) இருக்கிறான். நேரில் பார்த்த மாதிரியே எல்லா சமாசாரத்தையும் சொல்வான். உங்கிட்ட அப்பிடி சொன்னாங்களா என கேட்டால் வைத்தி நாகேஷ் மாதிரி 'சொல்லலை.. சொல்லுவா' என இழுப்பான்.
கெய்ரோ விமான நிலையத்தில் எங்கள் பெயர்கள் எழுதிய அட்டையுடன் நின்றிருந்த படு உயரமான சுருட்டை முடி அன்பர் எங்களை வரவேற்று வரிசையில் நிற்க விடாமல் பாஸ்போர்ட் கன்ட்ரோல் வேலையை லகுவில் முடித்து காரில் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தார். அந்த சில நிமிட நேரத்தில் மழை பெய்து ஓய்ந்த மாதிரி சடசடவென பேசித்தீர்த்துவிட்டார் மனுஷன்.
அந்த நாட்டுக்காரர்களே அப்படித்தானாம். வளவளவென்று மூச்சு முட்ட எச்சில் தெறிக்க பேசக்கூடியவர்கள். ஆண் பெண் எல்லோருக்கும் சொல்ல வந்ததை சுறுக்க சொல்லவே முடியாதாம். பஹ்ரைனில் எங்கள் ஆபிசில் விசா சம்மந்தப்பட்ட வேலைகளனைத்தும் செய்பவன் ஒரு இஜிப்ஷியன். விசா கிடைக்க ஏன் தாமதம் என்பதை நாம் கேட்டு அவன் பதில் சொல்லும்போது நாம் ஸ்பஷ்டமாக சகஸ்ரநாமம் சொல்ல ஆரம்பிக்கலாம். அவன் பேசும்போது நாம் குறுக்கே பேசினால் தொலைந்தோம். பாதியில் விட்டு விட்டு மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்து நம் வயிற்றில் அமிலத்தை சுரக்க வைப்பான்.
எங்க விட்டேன்? ஹாங்... டாக்சியில் உட்கார வைத்தார்களல்லவா! பெரிய்ய்ய ஊர் கெய்ரோ. வட ஆப்பிரிக்காவில் உள்ள அரபு நாடுகளிலேயே மிகவும் பழமையான நகரம். உயர உயரமான எல்லா கட்டிடங்களும் புழுதி படிந்து...ரோட்டில் எங்கும் டிராஃபிக் சிக்னல்களே இல்லாதது ஆச்சரியம் தான். அதனால் நிறைய மேம்பாலங்கள். பழைய மாடல் கார்கள் ஏராளமாக ஓடிக்கொண்டிருந்தன. ரோடெல்லாம் ஒரே குப்பை. 20 அடுக்கு மாடியிலிருந்து ஜனங்கள் குப்பை மூட்டையை ஜன்னல் வழியாக வீசியெறய சொத்தென நெடுஞ்சாலையில் விழுந்து தெறித்து..ச்சே..முனிசிபாலிடிகாரர்கள் வேலை செய்வதேயில்லையாம்.
ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு அருகே ஸ்டோர் ஒன்றில் நான்கு நாட்களுக்கு தேவையான பேசும் நேரம் மற்றும் இன்டர்நெட் வசதிகளுடன் உள்ளூர் டெலிபோன் சிம் கார்டு வாங்கிக்கொண்டோம். ஹோட்டல் சிப்பந்திகள் நம்மை நெருங்கி 'ஊர் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்து தருகிறோம்' என கேட்டார்கள். எல்லாவற்றுக்கும் அவர்களுக்கு கமிஷன் உண்டே. அஸாம் அவர்களில் பாஸம் என்பவன் கையில் ஓரு இருபது பவுண்டை தினித்து அரபியில் 'நான் தரும் இப்பணத்தில் எங்களை விற்காதே..எங்களுக்கு சேவை செய்... ' ( take this tip and don't sell us.. serve us ) என சொன்னதுதான் தாமதம், உடனே அவன் கிட்டத்தட்ட ஏழெட்டு டாக்ஸிக்காரர்களிடம் பேரம் பேசி அன்று மாலை முழுவதும் மற்றும் மறுநாள் காலை 6 முதல் 11 மணி வரை பிரமிடுகள் மற்றும் ஸ்ஃபிங்ஸ் போன்ற முக்கிய ஸ்தலங்களை சுற்றிப்பார்க்க சிரமமெடுத்து டாக்ஸி ஏற்பாடு செய்தான் (அதாவது மீட்டருக்கு மேல் ஒரு பவுண்டு கூட வாங்காமல் இருக்க)
டாக்சிக்காரர் கமால்(Gamal) உண்டியல் குலுக்கும் பெருஞ்சப்தத்துடன் ஒரு கொலை இருமல் இருமி வண்டியை ஸ்டார்ட் செய்தார். மறுகணம் க்ளக்கென்று தொண்டையிலிருந்து சளியை அப்படியே ரோட்டில் துப்பியதும் என் திருஷ்டியில் பட்டது. இந்தப்பக்கம் சிகரெட் சாம்பலை தட்டி வண்டியை விரட்டினார். ஜென்மத்துக்கும் சீட் பெல்ட் போடுவதில்லையென சங்கல்பம் எடுத்துக்கொண்டவர் போலும். நிமிடத்துக்கொரு முறை சிணுங்கும் கைப்பேசியை அள்ளி எடுத்து ஆசையாய் உச்ச ஸ்தாயியில் பேசிக்கொண்டும், இடது வலது இன்டிகேட்டர் எதுவும் பாவிக்காமல் முழு சாலையும் தன்னுடையதாக கருதி, உரத்த குரலில் ஆஸாமுடன் சம்வாதம் செய்தபடி தலைதெறிக்க வண்டியை ஓட்ட, நான் சீட் நுனியில் சஷ்டி கவசம் முனுமுனுக்க ஆரம்பித்தேன்.
பழங்கால எகிப்திய பொருட்கள் விற்கும் கான்-அல்-கலிலி மார்க்கெட் பகுதிக்குப்போய் 'நோ பார்க்கிங்' பகுதியில் வண்டியை நிறுத்தவும் நேராக எங்களை நோக்கி வந்த போலீஸ்காரர் டாக்சி டிரைவரை குசலம் விசாரித்துவிட்டு 10 பவுண்டுகள் வாங்கிக்கொண்டு நகர்ந்தார். எல்லாமே இயந்திர கதியில் ஒரு மார்க்கமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது அங்கே...லஞ்சம் தலைவிரித்தல்ல.. குத்தாட்டமே போடுகிறதாம்.
குறுகிய சந்துகளில் ஏராளமான கடைகள். பாப்பிரஸ் எனப்படும் எம்பிராய்டரி போன்ற படங்கள், காபி கோப்பைகள், பாசி மாலைகள், கண்ணாடி சிலைகள், பழைய டைப்ரைட்டர்கள், உபயோகித்த டெலிபோன்கள்...கூவி கூவி நம்மை அழைத்தார்கள்.. விலையைப்பற்றி கேட்டால் மாட்டினோம். நடுவே ஒரு தேநீர் விடுதி... வெளியே சின்ன நாற்காலியில் நாங்கள் அமர, எங்கள் முன் சிறிய சுலைமானி கோப்பையில் கருப்பு டீ.. அதில் ஒரு சிறிய கொத்து புதினா....அருமை.
மற்றபடி சொல்லிக்கறமாதிரி வேறு ஒன்றும் விசேஷமில்லை அந்த மார்க்கெட்டில்.
குஷாரி ரைஸ் எனப்படும் எகிப்திய மஞ்சள் அரிசி, காபூலி சன்னா, தக்காளி விழுது, எள்ளு மற்றும் வறுத்த வெங்காயம் தூவிய அரிசி உணவு சாப்பிட்டு திரும்ப விடுதி வந்து சேர்ந்தோம். சாதாரண வீட்டு உணவுக்கே வாயு உபாதை உள்ள எனக்கு எகிப்திய மஞ்சள் அரிசியும் காபூலிச்சன்னாவும் சேர்த்து வயிற்றில் 'மானாட மயிலாட' நடத்தின.
சில வருடங்களுக்கு முன் எழுந்த புரட்சி, கலவரங்கள், சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றங்கள் அங்கு அமைதியை பறித்துக்கொண்டதற்கு அடையாளமாக அங்கங்கே பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் நம்மை நிற்க வைத்து கையை தூக்கச்சொல்லி கிச்சு கிச்சு மீட்டினார்கள். சுற்றுலாத்துறை முடங்கி, வெளிநாட்டவர்களே வருவது குறைந்து தங்கும் விடுதிகள் பாதி காலியாம்.
மறு நாள் காலை 6.30 க்கு டானென்று கமால் வரவே, டாக்ஸியில் பிரமிடுகள் பார்க்க போனோம். அரபி மற்றும் ஆங்கிலம் பேசும் ஒரு இளைஞனின் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்தோம். அவனே கைடு. மொத்தம் ஏழெட்டு பிரமிடுகள், ஒன்று ராஜா தனக்கு கட்டிக்கொண்டது, ஒன்று அவர் மனைவிக்கு, ஒன்று இரண்டாம் மனைவிக்கு என ஏக காலத்தில் பெண்களையும் பிரமிடுகளையும் கட்டிக்கொண்ட அரச கதையை சுவாரசியமில்லாமல் கேட்டோம்.
பிரமிடுகள் கட்டப்பட்ட சுண்ணாம்பு கற்கள் ஒவ்வொன்றும் இரண்டு மூன்று டன் எடையாம். வெளிநாடுகளிலிருந்து கற்கள், நைல் நதி மூலம் மரங்கள், குதிரைகள் மூலம் பாலை வனப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அவ்வளவு உயர்த்திற்கு கயறுகளால் உயர்த்தப்பட்டு, முப்பத்தைந்தாயிரம் தொழிலாளிகள் மற்றும் பதினைந்தே பொறியாளர்களுடன் இருபது வருடங்களில் கட்டப்பட்ட பிரமிடுகளாம். உயரம் சுமார் 150 அடி. கொஞ்சம் நகர்ந்து அடுத்த பிரமிடுக்கும் அதே மாதிரி கற்கள், மரங்கள், நைல் நதி...என ஆரம்பித்தவனை ' போதுண்டா ராசா.. மொத்தம் ஒம்பது பிரமிடையும் அப்பிடித்தான் கட்டினாங்க இல்லியா' என கேட்டு அவனுக்கும் கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுத்தேன்.
அடுத்து கொஞ்ச தூரத்தில் மிக பிரம்மாண்டமான ஒரே கல்லில் செதுக்கிய மனிதத்தலை மற்றும் சிங்க உடலுடன் கூடிய ஸ்ஃபிங்ஸ். மினி ஃப்ராக்குடன் கமல் பாடும் 'பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்' காக்கிச்சட்டை பாடல் ஞாபகத்துக்கு வந்தது.
சாதாரணமாகவே எகிப்தியர்கள் வளவளவென பேசும்போது, அந்த கைடு கடைசியில் எங்களிடம் பணம் கறக்கும்போது சுறுக்கவா பேசுவான்? அவன் என்னென்னவோ அரபியில் விடாமல் பேசினாலும் ஆஸாம் சாந்தமாக ஓரிரு வார்த்தைகளே சொல்லி அவனை அன்போடு அனுப்பி வைத்தான். 'அப்பிடி என்னதான் அவன் கிட்ட சொன்னே?' என கேட்டேன்..'தொலைச்சுப்புடுவேன் படவா' என்றான். கைடை..
காலை பதினோரு மணிக்கு விடுதி வந்து சேர்ந்தோம். எங்கள் குழுமத்தின் கம்பெனி ஒன்றிற்கு எகிப்திய கால்நடை மருத்துவர் ஒருவரை சமீபத்தில் எங்கள் சேர்மன் பஹ்ரைனில் நேர்க்காணல் செய்து, பிறகு கெய்ரோவில் நான் தங்கியிருந்த விடுதிக்கு அவர் வந்து offer letter வாங்கிக்கொள்வதாக ஏற்பாடு. அந்த vet என்னை போனில் அழைத்தார். சுத்தமாக ஆங்கிலம் தெரியாது அவருக்கு. 'அய்யா.. நான் ஆபிஸ் வேலையா வெளியே போகனும்.. நீங்கள் சாயங்காலம் தானே வருவதாக இருந்தது?' என்பதை நானும் ஓரிரு அரபி வார்த்தைகள் கலந்து முழுக்க ஆங்கிலத்தில் பேச, பதிலுக்கு அவர் ஓரிரு ஆங்கில வார்த்தைகள் கலந்து முழுக்க அரபியில் பேசினார். வீ.பா. கட்டபொம்மன் மற்றும் பராசக்தி வசனங்களை அரபியில் பேசினால் அப்படித்தான் இருக்கும். Lobby, reception போன்ற வார்த்தைகளை அவருக்கு சொல்லி புரியவைப்பதற்குள் எனக்கு தொண்டை வற்றி கண்ணில் நீர் முட்டி, அடுத்த அரை மணிக்குள் அவரே என் முன் வந்து நின்றார்.
என்ன ஆச்சரியம்! சுமார் முப்பதே வயது மதிக்கத்தக்க இளைஞர். ஆங்கிலேயரைப்போன்று சிவந்த நிறம், தூக்கி படிய வாரிய தலைக்கு மெழுகு ஜெல், முழு சவரம் செய்த பச்சை முகத்துடன் சுகந்தம் வீச, ஜியார்ஜியோஅர்மானி சூட்டில் படு ஸ்மார்ட்டாக வந்த அவரா அரபியில் கட்டபொம்மன் வசனம் பேசியவரென வியந்தேன். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு, லெட்டரை வாங்கிக்கொண்ட அவர் மிகவும் சௌஜன்யமாக பேசினார். என்னை தனது விருந்தினராக ஒரு நாள் முழுவதும் கெய்ரோவை சுற்றிக்காட்டி மாலை காசினோ (சூதாட்டம்) மற்றும் பப்புக்கு(pub) அழைத்துப்போவதாக அன்போடு கேட்டுக்கொண்டதை நானும் அன்போடு மறுத்தேன்.
பஹ்ரைனிலிருந்து கிளம்பும்போதே எனது காரியதரிசி, 'ஶ்ரீதர்.. அங்கே லைஃப் ஸ்டைல் கொஞ்சம் வேற மாதிரி... பஹ்ரைன் மாதிரியில்ல... சினிமா தயாரிப்பு ரொம்ப பிரபலம்.. பாப்பிசை கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், மாடலிங், சூதாட்ட காசினோக்கள் போன்ற இரவு வாழ்க்கை க்ஷஏத்ரங்கள் அதிகமென சொல்லியனுப்பியிருந்தது நினைவுக்கு வந்தது.
90களில் பஹ்ரைன் வந்த புதிதில் சில பிரம்மச்சாரிகளுடன் தங்கியிருந்த போது தினமும் டீவியில் நாங்கள் எகிப்திய அரபிப்படங்கள் பார்ப்பதுண்டு. கிட்டத்தட்ட யதார்த்தமான இந்தியப்படங்கள் மாதிரி தான். முக்காவாசி படங்களில் நம்மூர் அனுமந்து சாயல் ஹீரோ. அம்மா அப்பா,குழந்தைகள், டூயட், கௌரவம் பட 'அதிசய உலகம் ரகசிய இதயம்' போன்ற க்ளப் டான்ஸ், வில்லன் அடிதடிகளுடன் படம் சுபமாக முடியும். ஆண்கள் பாடும் எல்லா பாப்பிசை பாடல்களும் கிட்டத்தட்ட'அழகிய லைலா..இது அவளது ஸ்டைலா' டைப் .... பெண் பாடகர்கள் பிரசவ வலி வந்தது போல பாடுவார்கள்.
பண்டைய எகிப்திய நாகரிகத்தின் முக்கிய குறியீடு பிரமிடுகள் தான். ரோமப்பேரரசு போன்ற வெளிச்சக்திகளால் ஆளப்பட்ட நாடு. நைல் ஆற்றுப்பள்ளத்தாக்கு பல அபிவிருத்தி திட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. கணிமவளம், கட்டுமானம், எகிப்திய முறை கணிதம், மருத்துவ முறை, வேளாண்மை, நீர்ப்பாசன முறைகள், முதல் கப்பல்கள், தோல் மற்றும் கண்ணாடித் தொழினுட்பம், வங்கிகள், இலக்கிய வகைகள்... இதெல்லாம் இந்த நான்காயிரம் வருடங்களில் உருவாகி சமூக வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் வழிவகுத்தது.
அடுத்த மூன்று நாட்கள் ஆபிஸ் வேலையாக வெளியே சுற்றியதால் நேரம் போனதே தெரியவில்லை. மாலையில் சில மால்கள் சென்று பார்த்தேன்.. விசேஷமாக ஒன்றுமில்லை. இந்திய ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஸ்கூட்டர்கள் சாலைகளில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
உலகிலேயே நீளமான நதியான நைல் நதியின் கார்னிஷ் பகுதிகளில் மக்கள் நடமாட்டமே இல்லை. மக்களின் பயமே காரணமாம். படகு சவாரிக்காக காத்திருந்த 'நைல் க்ரூஸ்' படகு, திருச்சி பஸ் ஸ்டான்டில் விராலி மலை போகும் பஸ் மாதிரி பரிதாபமாக காலி...GPS மூலம் நைல் நதிக்கரை ஓரத்திலேயே ஒரு லெபனீஸ் உணவகத்தை கண்டுபிடித்து அருமையான உணவு சாப்பிட்டு ஹோட்டலுக்கு திரும்பி வந்தோம்.
நாங்கள் பல நாடுகளிலிருந்து நிறைய உணவு சம்மந்தப்பட்ட பொருட்களை பஹ்ரைனுக்கு இறக்குமதி செய்து உள்ளூர் சந்தையில் விற்கிறோம். நாலைந்து நாட்கள் எகிப்திய பயணத்தில் வெற்றிகரமாக நிறுவனத்திற்கு தேவையான பாலாடைக்கட்டி(சீஸ்), போன்ற சில உணவுப்பொருட்களின் விநியோக உரிமை கிடைத்தது.
கடந்த ஐந்து வருடங்களில் நிறைய அரசியல் நிகழ்வுகள். பல ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து மக்களின் புரட்சி வெடித்து, ஆட்சி கவிழ்ந்து, பிறகு சிறிது காலமேயிருந்த முஸ்ரி ஆட்சியும் அகற்றப்பட்டு தற்போது சிசியின் அரசாங்கம்...அமைதியை இழந்து கொஞ்சம் பீதியில் இருக்கிறார்கள் மக்கள். ஏர்போர்ட், மால்கள், விடுதிகள் என எங்கு போனாலும் பாதுகாப்பு சோதனை. ஹமாஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் வேறு.
பஹ்ரைனிலிருந்து கிளம்பும்போதே எங்கள் அலுவலகத்தில் ஜாக்கிரதையாக போய்ட்டு வாவென எச்சரித்து, பொது இடங்களில் நான்கு விரல்களை உயர்த்தி இப்படி🏿 காட்டாதே என சொல்லியனுப்பினார்கள். காட்டினால் என்னாகும்?. கம்பிகளுக்குப்பின்னால் கட்டம்போட்ட சட்டையுடன் நிற்க வேண்டிவருமாம். 'நான்கு விரல்கள்' எதிர்கட்சி சின்னமாம். கெய்ரோ ஏர்போர்ட்டில் தூரத்தில் நிற்கும் ஆஸாமை பார்த்து 'ஹையா! நமக்கு கேட் நம்பர் 4' என ஜாலியாக நான் கையை தூக்கியிருந்தால் இந்த பதிவை நீங்கள் படித்திருக்க முடியாது. முனுக்கென்றால் கோபம் வருகிறது இவர்களுக்கு...
பின்னே இருக்காதா! இராணுவ அணிவகுப்பிலேயே தங்கள் அதிபர் அன்வர் சதாத்தை போட்டுத்தள்ளியவர்களாயிற்றே!

இவளே எங்கள் அன்னை



கிளினிக்கிலிருந்து இரவு பத்து மணிக்கு மேல் வரும் மூத்த பெண்ணுக்காக கவலையுடன் காத்திருப்பாள்.
அடுத்து, கணவன் தனது ஆஸ்பத்திரி மற்றும் கிளினிக்கில் கடைசி நோயாளியை பார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு மேல் வரும் வரை அவருக்கு சாப்பாடு எடுத்து வைத்து விழித்திருப்பாள்.
காலை ஐந்தரை மணிக்கு எழுந்து டிக்காஷனை போட்டு,குளித்து, அவசரம் அவசரமாக சமையலை முடித்து, கணவன் மற்றும் பெண்களை எழுப்பி காபி சப்ளை செய்து, Ellebee(நாய்)க்கு தயிரசாதம் வைத்து, காலை டிபன் எல்லோருக்கும் தயார் செய்து, டப்பாக்கள் கட்டி, அரைகுறையாக தானும் சாப்பிட்டு, காத்திருக்கும் ஆட்டோவில் ஏறி அவசரமாக ஸ்கூலுக்கு ஒடுவாள்.
ஸ்கூலுக்கு ஓடும் முன் மறக்காமல் கீழ் போர்ஷனில் இருக்கும் தன்(என்) அம்மாவிற்கு டிபன் கொண்டு போய் கொடுத்து, அம்மா தரும் டீயையும் அவசரமாக குடித்துவிட்டு ஒடுவாள்.
நடுவே நான் (பஹ்ரைன்), என் தம்பி (மஸ்கட்) அண்ணன் பாம்பேயிலிருந்தும் குடும்ப சகிதம் லீவுக்கு திருச்சி போயிருக்கும்போது எட்டரை மணிக்கு ஸ்கூல் கிளம்பும் முன் எல்லோருக்கும் இரண்டு வகை டிபன், மதிய உணவுக்கு சூப்பர் மோர் குழம்பு, ரைஸ் புலாவ் என வெரைட்டியாக எங்களுக்கு சமைத்து வைத்துவிட்டு ஸ்கூலுக்கு ஓடுவாள் (இரண்டாவது காபியும் கொடுத்துவிட்டு).
எங்கள் மூத்த சகோதரி புற்றுநோயால் சில வருடங்கள் முன் இறக்க, பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவளது பெண்ணை தன் மூன்றாவது பெண்ணாக வளர்த்து எம்.பி.ஏ படிக்க வைத்து, கல்யாணம் செய்து வைத்து( அவளும் பஹ்ரைன்) , அவளது பிரசவத்தையும் பஹ்ரைன் வந்து பார்த்துக்கெண்டவள்.
மாலை ஐந்து மணிக்கு வீடு வந்ததும் மூத்த பெண் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து பணிக்கர் ஜோஸியர் மற்றும் செகண்டு ஒபீனியனுக்கு இன்னொரு ஜோசிரியரிடமும் ஓடி, வரும் வழியே உறையூர் வெக்காளியம்மன் கோவில், அவ்வப்போது மெமோக்ராஃபி, பாப்ஸ்மியர் என பெண்களுக்கே உள்ள பிரச்சினைகளுடன் தனது டாக்டர் கணவரை கூட தொந்திரவு செய்யாமல் ஆஸ்பத்திரிக்கு ஒடுவாள்.
' என்னடா ஶ்ரீதர்! இவளுக்கு ஸ்கூட்டி வேணுமாமே... பயமாயிருக்கே' என போனில் என்னிடம் கேட்பாள், சென்னையில் தனியாக தங்கிக்கொண்டு ஃபைனல் சி.ஏ. படித்துக்கொண்டிருக்கும் இரண்டாவது பெண் பற்றி பேசும்போது..
கிடைத்த கல்லூரி உதவி பேராசிரியர் பணியை உதறித்தள்ளிவிட்டு எம்.காம்., எம்.எட்., எம். ஃபில் படிப்புடன் ஸ்கூல் உத்தியோகத்தில் உள்ளூரிலேயே இருந்தாள்.(சீதா லட்சுமி ராமசாமி பள்ளி/கல்லூரி)
இவ்வளவு வேலைகளுக்கும் நடுவிலும் பேப்பர் திருத்த பதினைந்து நாட்கள் தஞ்சாவூர் தினமும் போய் வருவாள்..
அம்மாவுக்கு சோடியம் imbalance ஆகி மேலும் சிறுநீர் குழாய் இன்ஃபெக்‌ஷன் (UTI) வந்து உடம்பு முடியாமல் போக, தன்னுடன் வைத்துக்கொண்டு, பாத்ரூமில் மயங்கி விழுந்தவரை தனியாகவே ஹாலுக்கு இழுத்து வந்து பிறகு கணவருக்கு போன் செய்து ரொம்ப கஷ்டப்பட்டவள்....
82 வயதில் கர்ப்பப்பை புற்றுநோயால் வாடிய அம்மாவின் ஆபரேஷனுக்கு கணவரின் உதவியுடன் டாக்டர் ரவி அய்யங்கார், டாக்டர் பூங்கோதை போன்றவர்களிடம் ஓடி அடுத்த ஒரு மாதம் ரேடியேஷன் தெரபி இத்யாதிகளுக்கு தினமும் அலைந்து சிரமப்பட்டு அம்மாவை காப்பாற்றியவள்.
ரேடியேஷன் தெரபி முடிந்ததும் கொல்லுப்பேரன் பிறப்பதை பாட்டி பார்த்துவிட வேண்டுமென அம்மாவை தனியாக பஹ்ரைன் கூட்டி வந்து என் மூத்த சகோதரி மகள் பிரசவத்திற்கு நான்கு மாதங்கள் இருந்து பார்த்தவள்.
திரும்ப ஊருக்கு போய் மறுபடியும் தனியாக வலியால் அம்மா துடிக்க, சத்தம் கேட்டு யாரோ இவள் ஸ்கூலுக்கு போன் செய்து, வீட்டுக்கு ஓடி வந்து அம்மாவை அள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரி ஒடி, இரவு 2 மணிக்கு எங்களுக்கு போன் செய்து 'எல்லாம் வேஸ்ட்டுடா.. வயிறு, லிவரெல்லாம் பரவீடுச்சாம்' என மெதுவாக விசும்பல்...
தன்னை இவ்வளவு அருமையாக பார்த்துக்கொண்ட இவள் மீது உயிரையே வைத்திருந்த எங்கள் அம்மா, ஆஸ்பத்திரியில் இறக்கும் முன் அந்த ஒரு சில நிமிடங்கள் லேசாக புத்தி சுவாதீனமிழந்து
இவளையே கன்னா பின்னாவென திட்டியபடியே கண்ணை மூடியதை அழுதுகொண்டே பொறுமையாக ஏற்றுக்கொண்டவள்..
கோபமென்பது துளிகூட அறியாதவள். பொறுமையா பொறுமை...அவரும் அப்படியே. இரண்டு பெண்களையும் ஒரு வேலையும் செய்ய விடாமல் தானே எல்லாவற்றையும் செய்யக்கூடியவள். டீவி சீரியல், சினிமா என எதுவுமே அறியாதவள்...
கடந்த ஆறேழு வருடங்களில் குடும்பத்திலேற்பட்ட நான்கு இறப்புக்களால் இவள் பட்ட கஷ்டங்கள் சொல்லிலடங்கா.
என்னை விட இரண்டே வயது மூத்த 56 வயதான இவள்( hemalatha ma) , சகோதரர்கள் எங்கள் மூவருக்கும் தாயானவள்..
இனி வாழ்க்கையில் ஒருபோதும் கஷ்டப்படாமல்
இவளை காக்க இறைவனை வேண்டி, அன்னையர் தினமான இன்று எங்கள் அன்னையாக இவளை நினைத்து போற்றுகிறேன்....

அப்பாவின் பிறந்த நாள்



கரூர்,காரைக்குடி,புதுக்கோட்டை,சேத்தியாத்தோப்பு போன்ற ஊர்களுக்கு பாங்க் ஆடிட் போகும்போது காலை 4 மணிக்கு திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் சக CA நண்பர்கள்Ayyampillai Ponnusamy , Subramaniam ChidhambaramArunmozhi MurugesanSubramanian Rajaseharan எல்லோரும் கூடுவோம். அந்த விடிகாலை தனது ஹீரோ மெஜஸ்டிக் மொப்பெட்டில் என்னை ட்ராப் செய்ய அப்பா வருவார்.
'பஸ் ஸ்டாண்டுக்கு கொஞ்சம் முன்னாலேயே ட்ராப் பண்ணுங்க'என அப்பாவிடம் சொல்வேன், நண்பர்கள் அப்பாவை பார்ப்பது பிடிக்காமல்...
'இருக்கட்டும்டா... அங்கல்லாம் ஒரே இருட்டு'என அக்கரையுடன் சொல்பவரை அதட்டி வண்டியை நிறுத்தி செலவுக்கு அவரிடமிருந்து பணத்தையும் பிடுங்கிக்கொண்டு நண்பர்களை பார்க்க பஸ்ஸ்டாண்டுக்குள்ளே ஓடுவேன், திரும்ப அதே இருட்டில் அவர் பத்திரமாக வீடு போய்ச்சேருவாரா என கவலைப்படாமல். வயது அப்படி..
அடுத்த அரை மணியோ ஒரு மணியோ மற்ற எல்லா நண்பர்களுக்காகவும் காத்திருந்து டீ, பிஸ்கட்டெல்லம் சாப்பிட்டு, ஓஹோவென சப்தமாக சிரித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்து, 'ஹலோ...உயிருள்ளவரை உஷா' போடுங்க என கண்டக்டரிடம் சொல்லி, பஸ் ஸ்டாண்டை விட்டு மெதுவாக வெளியே வரும் பஸ்ஸிலிருந்து பார்த்தால், தூரத்தில் எனக்குத்தெரியாமல் இன்னமும் தனது வண்டியுடன் அப்பா ஒரு மணி நேரத்துக்கு மேல் இருட்டில் காத்திருப்பது தெரியும். பஸ் போன பின் அவர் கிளம்புவார். 'ச்சே... அவருக்கும் ஒரு டீ வாங்கி கொடுத்து அனுப்பியிருக்கலாம்' என குற்ற உணர்ச்சி மெல்ல எழுந்தாலும் 'இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ' பாடல் சத்தத்தில் அப்பா என்பவர் சடுதியில் மறக்கப்படுவார்..
சில வருடங்கள் முன் திருச்சியில் எங்கள் வீட்டின் அருகேயுள்ள சலூனுக்கு போய் ' வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து அவருக்கு சவரம், மாசமொரு முறை தலைமுடி வெட்டனும்.. ஒரு வருஷத்துக்கான பணம் இப்பவே கொடுக்கறேன். நாங்க ஊருக்கு போயிட்டா அம்மாவைத்தவிர கூட பாத்துக்க யாருமில்ல' என கெஞ்சாத குறையுடன் கேட்டும் கடைக்காரர் ' வீட்டுக்கெல்லாம் வர மாட்டோம்.. அவரை மெதுவா யாராவது கடைக்கு கூட்டிக்கிட்டு வர்றதா இருந்தா பண்ணுவேன்' என பிடிவாதமாக சொல்லிவிட்டார். கடை எங்கள் வீட்டுக்கு நேர் எதிரே..
பார்க்கின்சன்ஸ் நோயால் கடைசி ஐந்து வருடம் அவதிப்பட்டு, வாயிலிருந்து சதா எச்சில் ஒழுகி முன் பக்கம் சட்டையைல்லாம் நனைந்து,பேச்சு குளறி, அவர் பேசுவது யாருக்கும் புரியாமல், 'சொல்றத கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்களேன்' என சில முறை சலித்துக்கொண்ட எனக்கு இப்போதும் குற்ற உணர்ச்சியே..
கோ ஆபரேடிவ் சப் ரிஜிஸ்ட்ராராக இருந்த அவரது நேர்மையே நிறைய பேருக்கு சங்கடத்தை கொடுக்க வாழ்நாள் முழுவதும் சோதனை தான். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பந்தாடப்படுவார்..வாடகை வீட்டிலேயே ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தில் ரிடையர் ஆன அதே நாளில் தன் பெண்ணின் (என் அக்கா) திருமணத்தை நடத்த, கோ ஆபரேடிவ் துறை அலுவலர்கள் நிறைய பேர் கோபத்தில் திருமணத்திற்கு வரவில்லை...(மனுஷன் தானும் சம்பாரிக்காம நம்பளையும் சம்பாரிக்க வுடல..)
கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஓடி விட்டது. கடைசி இரண்டு வருடங்கள் பேசுவதற்கு முயற்சிப்பதை விட்டு விட்டு மௌனமாகவே இருந்தார்.ரிடையர் ஆகும் வரை எங்களுக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்தவர் அடுத்த 20 வருடங்கள் எளிமையாகவே இருந்து நாங்கள் மாதாமாதம் அனுப்பும் பணத்தையும் சேர்த்து திரும்ப எங்களுக்கே வைத்துவிட்டுப்போனார்.
அவருக்கு பலமே அம்மா தான்.. அவர் சட்டையில் ஒழுகும் எச்சிலையும், வாயையும் நொடிக்கொருமுறை முகம் கோணாமல் துடைக்கும் அம்மா....
இறைவனுக்கு நன்றி... அவர் 2011இல் இறக்கும் வரை அம்மாவுக்கு எந்த உடல் உபாதை இல்லாமல் அடுத்த இரண்டு வருடங்கள் கழித்தே அழைத்துக்கொண்டதற்கு...
அப்பாவின் பிறந்த நாள் மற்றும் பெற்றோரின் மண நாள் இரண்டும் சேர்ந்து வரும் இந்நாளில் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நிறைய இருப்பினும்.. எகிப்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எனக்கு அப்பா அம்மாவின் அறிய புகைப்படம் அனுப்பிய என் சகோதரி மகள் Srikamya Badrinath க்கு நன்றி....

நாராயணமூர்த்தி

80களில் ஒரு நாள் தன் சகாக்களுடன் அமெரிக்க நியூயார்க் நகர் வோல் ஸ்ட்ரீட் பகுதியில் ஒரு நிறுவனத்தின் அதிபர் முன்னால் இவர் அமர்ந்திருந்தார்.
'எங்க நிறுவனத்தின் ப்ராஜெக்ட்டை முடிச்சுக்குடுக்க முன் வந்ததுக்கு நன்றி..போய்ட்டு வாங்க.. பதில் போடறோம்' நக்கலாக சிரித்தவன்னம் கை கொடுத்தார் அந்த அமெரிக்கர்.ஆறு மாதமாகியும் பதிலில்லை.
மறுபடியும் அமெரிக்க பயணம்... மிகக் குறைந்த எகானமி கட்டனத்தில் பயணம் செய்து, ஒர் இரவுக்கு சுமார் 100 டாலர்கள் விடுதியில் தங்கி, மறுபடியும் அந்த நிறுவனத்துக்கு போனார் இவர்.
" ஆமா.. நீங்க இந்தியாவுல எங்க ப்ராஜெக்ட பண்றப்ப நாங்க தூங்கிகிட்டிருப்போம். மறு நாள் இது விஷயமா நாங்க உங்க கூட பேசனும்னா நீங்க தூங்கிக்கிட்டு இருப்பீங்க.. இதெல்லாம் சரிப்பட்டு வருமா" மறுபடியும் எகத்தாளமாக கேட்ட அந்த அதிபரிடம் இவர் பொறுமையாக விளக்கினார்.
"கொஞ்சம் வித்தியாசமா யோசிங்கப்பு...எங்க ஆட்கள் 24 மணி நேரம் வேலை செய்வாங்க...ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட தகவல்களை வீட்டுக்கு போறதுக்கு முந்தி எங்களுக்கு அனுப்பிட்டு நீங்க நிம்மதியா குறட்டை விட்டு தூங்கப்போங்க.. மறுநாள் காலைல நீங்க ஆபிஸ் வர்றப்ப உங்க டெஸ்க் டாப்புல எங்க ரிப்போர்ட் ரெடியா இருக்கும். அது விஷயமா பேசனும்னா எங்க டீம் லீடர்ஸ் முழுச்சிக்கிட்டிருப்பாங்க.. எப்பூடீ...?"
இவர் கண்களில் தெரியும் ஒளி, அந்த பதிலில் காட்டிய நம்பிக்கை, சேவையின் தரத்தின் மேலுள்ள அக்கறை, கவனத்தையும் உழைப்பையும், அறிவுத்திறனையும் முதலீடாகக்கொண்ட நிறுவனம்.. சில நொடிகளில் அமெரிக்கரின் மனம் மாற, ஒப்பந்தம் கையொப்பமானது.
அடுத்த சில வருடங்களில் அடுக்கடுக்காக நிறைய ப்ராஜெக்ட்டுகள், காளான்கள் போல் முளைத்த கால் சென்ட்டர்கள்.. ஜட்டி தெரியும் ஜீன்ஸ் போட்ட இளைஞர்கள், காதில் வயரை சொறுகிக்கொண்டு, புடைத்த மணி பர்ஸுடன், முதுகில் மடிக்கணினி மூட்டை அல்லது முதுகோடு அப்பிக்கொண்டு இளம் பெண்ணுடன் பல்ஸரில் உறுமியவன்னம், கப் கார்னுக்கு மாறி, பட்டர் நான் மஞ்சூரியன் சுவைத்து, மால்களில் உலவி, சினிப்ளெக்ஸில் உரசி.... அப்பப்பா... இளைஞர்களுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புக்கள்...'ஓ கே கண்மணி' வரை போய் விட்டோம்...
தகவல் தொழில் நுட்பம் ஜினோ மாதிரி பண்மடங்கு உயர்ந்து இந்தியப்பொருளாதாரம் வளர்த்தது இவரது உபயத்தால்..
இவர்..பத்ம விபூஷன் திரு. நாராயணமூர்த்தி. பிரபல இன்ஃபோஸிஸின் நிறுவனர்.
சுமார் ஒரு மணி நேரம் பஹ்ரைன் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்களுடன் கலந்துரையாடினார்.. நிகழ்ச்சியை நடத்திய மூத்த சி.ஏ.திரு. குமார் கிருஷ்ணமூர்த்தி கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நகைச்சுவையுடன் மிகவும் உற்சாகமான எழுச்சியூட்டும் inspirational பதில்கள்.பிரமிக்க வைத்தார்..
நண்பர்கள் Meenakshi Sundaram Hariharan மற்றும் Uday Shanbhagக்கு நன்றி. இவரது ஓவியத்தை கரிக்கட்டியால் வரைந்து மேடையில் இவருக்கு அளிக்கும் வாய்ப்பை கொடுத்தவர்கள்.
மேடையில் அந்த ஓரிரு நிமிடங்களிலேயே ' ஓவியம் அருமை.. எப்படி இவ்வளவு நேர்த்தியா வரைஞ்சிங்க? இதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக்குடுத்தீங்கன்னா பத்திரமா ஊருக்கு கொண்டு போவேன்.' என சொல்லி ஓவியத்தின் நகலில் கையொப்பமிட்டுக்கொடுத்தார்.
இவரை கௌரவிக்கும் சில நிமிடங்கள் முன்பு தான் மனைவிக்கு கார் விபத்து என போன் வந்து, நிகழ்ச்சி முடிந்தபின் ஓடினேன்(அவருக்கு அடியேதுமில்லையென தெரிந்துகொண்ட பின்)
அவசரமாக மனைவியைக்காண காரை ஒட்டும்போது கூட இவரது சுவாரஸ்யமான பேச்சு தான் மனதில் ஓடியது.
எவ்வளவு பெரிய பூதாகாரமான பிரச்சினையாக இருந்தாலும் அதை எளிய முறையில் சந்திக்க அவர் கொடுத்த டிப்ஸ்..
how to eat a big elephant?
by cutting it into small pieces.