'கல்யாண செலவப்பத்தி கவலையே படாதீங்க.. பையன் வீட்டுங்காரங்க நாங்க நல்லா நடத்தி தர்றோம்.. பொண்ணுக்கு வேண்டிய சீர் செனத்தி எல்லாம் நல்லாவே செய்வோம். பையனுக்கு சொந்த ஃப்ளாட் இருக்கு' என பையனின் அப்பா அடுக்கிக்கொண்டே போக அந்த வரனை அமுக்கிப்போட பெண் வீட்டார்களுக்குள் கடும் போட்டி. இதெல்லாம் இந்தியாவிலா என மலைக்க வேண்டாம். இது எகிப்து நாட்டில் சார்!. பையன்களுக்கு அங்கு பயங்கர டிமாண்டு. கலியாணமாகாத சௌந்தர்ய ஸ்த்ரீகள் அங்கே நிறையவாம்.
சென்ற வாரம் எங்கள் விற்பனை மேலாளர் ஆஸாமுடன் நான்கு நாட்கள் கெய்ரோ போகும்போது அந்நாட்டவர்களின் திருமணம் பற்றி அவன் சொன்ன தகவல் இது. பொதுவாக அலுவல் நிமித்தம் அவனுடன் நான் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்யும்போது அந்நாட்டின் கலாச்சார பழக்க வழக்கங்களை அழகாக எனக்கு விளக்குவான். லெபனீஸ் நாட்டவன். கோபத்தை இம்மியளவும் காட்டாமல் புன்முறுவலுடன் எதிரிகளை கையாண்டு தடயமில்லாமல் அவர்களை அப்புறப்படுத்தி வெற்றிகாணும் சாதுர்யமிக்கவன். வேலையில் திறமைசாலி. பெய்ரூட் மற்றும் பாரிஸில் வளர்ந்து, படித்து 25 வருடங்கள் வளைகுடா நாடுகளில்( என்னுடன் 8 வருடங்களாக) இருக்கிறான். நேரில் பார்த்த மாதிரியே எல்லா சமாசாரத்தையும் சொல்வான். உங்கிட்ட அப்பிடி சொன்னாங்களா என கேட்டால் வைத்தி நாகேஷ் மாதிரி 'சொல்லலை.. சொல்லுவா' என இழுப்பான்.
கெய்ரோ விமான நிலையத்தில் எங்கள் பெயர்கள் எழுதிய அட்டையுடன் நின்றிருந்த படு உயரமான சுருட்டை முடி அன்பர் எங்களை வரவேற்று வரிசையில் நிற்க விடாமல் பாஸ்போர்ட் கன்ட்ரோல் வேலையை லகுவில் முடித்து காரில் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தார். அந்த சில நிமிட நேரத்தில் மழை பெய்து ஓய்ந்த மாதிரி சடசடவென பேசித்தீர்த்துவிட்டார் மனுஷன்.
அந்த நாட்டுக்காரர்களே அப்படித்தானாம். வளவளவென்று மூச்சு முட்ட எச்சில் தெறிக்க பேசக்கூடியவர்கள். ஆண் பெண் எல்லோருக்கும் சொல்ல வந்ததை சுறுக்க சொல்லவே முடியாதாம். பஹ்ரைனில் எங்கள் ஆபிசில் விசா சம்மந்தப்பட்ட வேலைகளனைத்தும் செய்பவன் ஒரு இஜிப்ஷியன். விசா கிடைக்க ஏன் தாமதம் என்பதை நாம் கேட்டு அவன் பதில் சொல்லும்போது நாம் ஸ்பஷ்டமாக சகஸ்ரநாமம் சொல்ல ஆரம்பிக்கலாம். அவன் பேசும்போது நாம் குறுக்கே பேசினால் தொலைந்தோம். பாதியில் விட்டு விட்டு மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்து நம் வயிற்றில் அமிலத்தை சுரக்க வைப்பான்.
எங்க விட்டேன்? ஹாங்... டாக்சியில் உட்கார வைத்தார்களல்லவா! பெரிய்ய்ய ஊர் கெய்ரோ. வட ஆப்பிரிக்காவில் உள்ள அரபு நாடுகளிலேயே மிகவும் பழமையான நகரம். உயர உயரமான எல்லா கட்டிடங்களும் புழுதி படிந்து...ரோட்டில் எங்கும் டிராஃபிக் சிக்னல்களே இல்லாதது ஆச்சரியம் தான். அதனால் நிறைய மேம்பாலங்கள். பழைய மாடல் கார்கள் ஏராளமாக ஓடிக்கொண்டிருந்தன. ரோடெல்லாம் ஒரே குப்பை. 20 அடுக்கு மாடியிலிருந்து ஜனங்கள் குப்பை மூட்டையை ஜன்னல் வழியாக வீசியெறய சொத்தென நெடுஞ்சாலையில் விழுந்து தெறித்து..ச்சே..முனிசிபாலிடிகாரர்கள் வேலை செய்வதேயில்லையாம்.
ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு அருகே ஸ்டோர் ஒன்றில் நான்கு நாட்களுக்கு தேவையான பேசும் நேரம் மற்றும் இன்டர்நெட் வசதிகளுடன் உள்ளூர் டெலிபோன் சிம் கார்டு வாங்கிக்கொண்டோம். ஹோட்டல் சிப்பந்திகள் நம்மை நெருங்கி 'ஊர் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்து தருகிறோம்' என கேட்டார்கள். எல்லாவற்றுக்கும் அவர்களுக்கு கமிஷன் உண்டே. அஸாம் அவர்களில் பாஸம் என்பவன் கையில் ஓரு இருபது பவுண்டை தினித்து அரபியில் 'நான் தரும் இப்பணத்தில் எங்களை விற்காதே..எங்களுக்கு சேவை செய்... ' ( take this tip and don't sell us.. serve us ) என சொன்னதுதான் தாமதம், உடனே அவன் கிட்டத்தட்ட ஏழெட்டு டாக்ஸிக்காரர்களிடம் பேரம் பேசி அன்று மாலை முழுவதும் மற்றும் மறுநாள் காலை 6 முதல் 11 மணி வரை பிரமிடுகள் மற்றும் ஸ்ஃபிங்ஸ் போன்ற முக்கிய ஸ்தலங்களை சுற்றிப்பார்க்க சிரமமெடுத்து டாக்ஸி ஏற்பாடு செய்தான் (அதாவது மீட்டருக்கு மேல் ஒரு பவுண்டு கூட வாங்காமல் இருக்க)
டாக்சிக்காரர் கமால்(Gamal) உண்டியல் குலுக்கும் பெருஞ்சப்தத்துடன் ஒரு கொலை இருமல் இருமி வண்டியை ஸ்டார்ட் செய்தார். மறுகணம் க்ளக்கென்று தொண்டையிலிருந்து சளியை அப்படியே ரோட்டில் துப்பியதும் என் திருஷ்டியில் பட்டது. இந்தப்பக்கம் சிகரெட் சாம்பலை தட்டி வண்டியை விரட்டினார். ஜென்மத்துக்கும் சீட் பெல்ட் போடுவதில்லையென சங்கல்பம் எடுத்துக்கொண்டவர் போலும். நிமிடத்துக்கொரு முறை சிணுங்கும் கைப்பேசியை அள்ளி எடுத்து ஆசையாய் உச்ச ஸ்தாயியில் பேசிக்கொண்டும், இடது வலது இன்டிகேட்டர் எதுவும் பாவிக்காமல் முழு சாலையும் தன்னுடையதாக கருதி, உரத்த குரலில் ஆஸாமுடன் சம்வாதம் செய்தபடி தலைதெறிக்க வண்டியை ஓட்ட, நான் சீட் நுனியில் சஷ்டி கவசம் முனுமுனுக்க ஆரம்பித்தேன்.
பழங்கால எகிப்திய பொருட்கள் விற்கும் கான்-அல்-கலிலி மார்க்கெட் பகுதிக்குப்போய் 'நோ பார்க்கிங்' பகுதியில் வண்டியை நிறுத்தவும் நேராக எங்களை நோக்கி வந்த போலீஸ்காரர் டாக்சி டிரைவரை குசலம் விசாரித்துவிட்டு 10 பவுண்டுகள் வாங்கிக்கொண்டு நகர்ந்தார். எல்லாமே இயந்திர கதியில் ஒரு மார்க்கமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது அங்கே...லஞ்சம் தலைவிரித்தல்ல.. குத்தாட்டமே போடுகிறதாம்.
குறுகிய சந்துகளில் ஏராளமான கடைகள். பாப்பிரஸ் எனப்படும் எம்பிராய்டரி போன்ற படங்கள், காபி கோப்பைகள், பாசி மாலைகள், கண்ணாடி சிலைகள், பழைய டைப்ரைட்டர்கள், உபயோகித்த டெலிபோன்கள்...கூவி கூவி நம்மை அழைத்தார்கள்.. விலையைப்பற்றி கேட்டால் மாட்டினோம். நடுவே ஒரு தேநீர் விடுதி... வெளியே சின்ன நாற்காலியில் நாங்கள் அமர, எங்கள் முன் சிறிய சுலைமானி கோப்பையில் கருப்பு டீ.. அதில் ஒரு சிறிய கொத்து புதினா....அருமை.
மற்றபடி சொல்லிக்கறமாதிரி வேறு ஒன்றும் விசேஷமில்லை அந்த மார்க்கெட்டில்.
மற்றபடி சொல்லிக்கறமாதிரி வேறு ஒன்றும் விசேஷமில்லை அந்த மார்க்கெட்டில்.
குஷாரி ரைஸ் எனப்படும் எகிப்திய மஞ்சள் அரிசி, காபூலி சன்னா, தக்காளி விழுது, எள்ளு மற்றும் வறுத்த வெங்காயம் தூவிய அரிசி உணவு சாப்பிட்டு திரும்ப விடுதி வந்து சேர்ந்தோம். சாதாரண வீட்டு உணவுக்கே வாயு உபாதை உள்ள எனக்கு எகிப்திய மஞ்சள் அரிசியும் காபூலிச்சன்னாவும் சேர்த்து வயிற்றில் 'மானாட மயிலாட' நடத்தின.
சில வருடங்களுக்கு முன் எழுந்த புரட்சி, கலவரங்கள், சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றங்கள் அங்கு அமைதியை பறித்துக்கொண்டதற்கு அடையாளமாக அங்கங்கே பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் நம்மை நிற்க வைத்து கையை தூக்கச்சொல்லி கிச்சு கிச்சு மீட்டினார்கள். சுற்றுலாத்துறை முடங்கி, வெளிநாட்டவர்களே வருவது குறைந்து தங்கும் விடுதிகள் பாதி காலியாம்.
மறு நாள் காலை 6.30 க்கு டானென்று கமால் வரவே, டாக்ஸியில் பிரமிடுகள் பார்க்க போனோம். அரபி மற்றும் ஆங்கிலம் பேசும் ஒரு இளைஞனின் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்தோம். அவனே கைடு. மொத்தம் ஏழெட்டு பிரமிடுகள், ஒன்று ராஜா தனக்கு கட்டிக்கொண்டது, ஒன்று அவர் மனைவிக்கு, ஒன்று இரண்டாம் மனைவிக்கு என ஏக காலத்தில் பெண்களையும் பிரமிடுகளையும் கட்டிக்கொண்ட அரச கதையை சுவாரசியமில்லாமல் கேட்டோம்.
பிரமிடுகள் கட்டப்பட்ட சுண்ணாம்பு கற்கள் ஒவ்வொன்றும் இரண்டு மூன்று டன் எடையாம். வெளிநாடுகளிலிருந்து கற்கள், நைல் நதி மூலம் மரங்கள், குதிரைகள் மூலம் பாலை வனப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அவ்வளவு உயர்த்திற்கு கயறுகளால் உயர்த்தப்பட்டு, முப்பத்தைந்தாயிரம் தொழிலாளிகள் மற்றும் பதினைந்தே பொறியாளர்களுடன் இருபது வருடங்களில் கட்டப்பட்ட பிரமிடுகளாம். உயரம் சுமார் 150 அடி. கொஞ்சம் நகர்ந்து அடுத்த பிரமிடுக்கும் அதே மாதிரி கற்கள், மரங்கள், நைல் நதி...என ஆரம்பித்தவனை ' போதுண்டா ராசா.. மொத்தம் ஒம்பது பிரமிடையும் அப்பிடித்தான் கட்டினாங்க இல்லியா' என கேட்டு அவனுக்கும் கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுத்தேன்.
அடுத்து கொஞ்ச தூரத்தில் மிக பிரம்மாண்டமான ஒரே கல்லில் செதுக்கிய மனிதத்தலை மற்றும் சிங்க உடலுடன் கூடிய ஸ்ஃபிங்ஸ். மினி ஃப்ராக்குடன் கமல் பாடும் 'பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்' காக்கிச்சட்டை பாடல் ஞாபகத்துக்கு வந்தது.
சாதாரணமாகவே எகிப்தியர்கள் வளவளவென பேசும்போது, அந்த கைடு கடைசியில் எங்களிடம் பணம் கறக்கும்போது சுறுக்கவா பேசுவான்? அவன் என்னென்னவோ அரபியில் விடாமல் பேசினாலும் ஆஸாம் சாந்தமாக ஓரிரு வார்த்தைகளே சொல்லி அவனை அன்போடு அனுப்பி வைத்தான். 'அப்பிடி என்னதான் அவன் கிட்ட சொன்னே?' என கேட்டேன்..'தொலைச்சுப்புடுவேன் படவா' என்றான். கைடை..
காலை பதினோரு மணிக்கு விடுதி வந்து சேர்ந்தோம். எங்கள் குழுமத்தின் கம்பெனி ஒன்றிற்கு எகிப்திய கால்நடை மருத்துவர் ஒருவரை சமீபத்தில் எங்கள் சேர்மன் பஹ்ரைனில் நேர்க்காணல் செய்து, பிறகு கெய்ரோவில் நான் தங்கியிருந்த விடுதிக்கு அவர் வந்து offer letter வாங்கிக்கொள்வதாக ஏற்பாடு. அந்த vet என்னை போனில் அழைத்தார். சுத்தமாக ஆங்கிலம் தெரியாது அவருக்கு. 'அய்யா.. நான் ஆபிஸ் வேலையா வெளியே போகனும்.. நீங்கள் சாயங்காலம் தானே வருவதாக இருந்தது?' என்பதை நானும் ஓரிரு அரபி வார்த்தைகள் கலந்து முழுக்க ஆங்கிலத்தில் பேச, பதிலுக்கு அவர் ஓரிரு ஆங்கில வார்த்தைகள் கலந்து முழுக்க அரபியில் பேசினார். வீ.பா. கட்டபொம்மன் மற்றும் பராசக்தி வசனங்களை அரபியில் பேசினால் அப்படித்தான் இருக்கும். Lobby, reception போன்ற வார்த்தைகளை அவருக்கு சொல்லி புரியவைப்பதற்குள் எனக்கு தொண்டை வற்றி கண்ணில் நீர் முட்டி, அடுத்த அரை மணிக்குள் அவரே என் முன் வந்து நின்றார்.
என்ன ஆச்சரியம்! சுமார் முப்பதே வயது மதிக்கத்தக்க இளைஞர். ஆங்கிலேயரைப்போன்று சிவந்த நிறம், தூக்கி படிய வாரிய தலைக்கு மெழுகு ஜெல், முழு சவரம் செய்த பச்சை முகத்துடன் சுகந்தம் வீச, ஜியார்ஜியோஅர்மானி சூட்டில் படு ஸ்மார்ட்டாக வந்த அவரா அரபியில் கட்டபொம்மன் வசனம் பேசியவரென வியந்தேன். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு, லெட்டரை வாங்கிக்கொண்ட அவர் மிகவும் சௌஜன்யமாக பேசினார். என்னை தனது விருந்தினராக ஒரு நாள் முழுவதும் கெய்ரோவை சுற்றிக்காட்டி மாலை காசினோ (சூதாட்டம்) மற்றும் பப்புக்கு(pub) அழைத்துப்போவதாக அன்போடு கேட்டுக்கொண்டதை நானும் அன்போடு மறுத்தேன்.
பஹ்ரைனிலிருந்து கிளம்பும்போதே எனது காரியதரிசி, 'ஶ்ரீதர்.. அங்கே லைஃப் ஸ்டைல் கொஞ்சம் வேற மாதிரி... பஹ்ரைன் மாதிரியில்ல... சினிமா தயாரிப்பு ரொம்ப பிரபலம்.. பாப்பிசை கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், மாடலிங், சூதாட்ட காசினோக்கள் போன்ற இரவு வாழ்க்கை க்ஷஏத்ரங்கள் அதிகமென சொல்லியனுப்பியிருந்தது நினைவுக்கு வந்தது.
90களில் பஹ்ரைன் வந்த புதிதில் சில பிரம்மச்சாரிகளுடன் தங்கியிருந்த போது தினமும் டீவியில் நாங்கள் எகிப்திய அரபிப்படங்கள் பார்ப்பதுண்டு. கிட்டத்தட்ட யதார்த்தமான இந்தியப்படங்கள் மாதிரி தான். முக்காவாசி படங்களில் நம்மூர் அனுமந்து சாயல் ஹீரோ. அம்மா அப்பா,குழந்தைகள், டூயட், கௌரவம் பட 'அதிசய உலகம் ரகசிய இதயம்' போன்ற க்ளப் டான்ஸ், வில்லன் அடிதடிகளுடன் படம் சுபமாக முடியும். ஆண்கள் பாடும் எல்லா பாப்பிசை பாடல்களும் கிட்டத்தட்ட'அழகிய லைலா..இது அவளது ஸ்டைலா' டைப் .... பெண் பாடகர்கள் பிரசவ வலி வந்தது போல பாடுவார்கள்.
பண்டைய எகிப்திய நாகரிகத்தின் முக்கிய குறியீடு பிரமிடுகள் தான். ரோமப்பேரரசு போன்ற வெளிச்சக்திகளால் ஆளப்பட்ட நாடு. நைல் ஆற்றுப்பள்ளத்தாக்கு பல அபிவிருத்தி திட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. கணிமவளம், கட்டுமானம், எகிப்திய முறை கணிதம், மருத்துவ முறை, வேளாண்மை, நீர்ப்பாசன முறைகள், முதல் கப்பல்கள், தோல் மற்றும் கண்ணாடித் தொழினுட்பம், வங்கிகள், இலக்கிய வகைகள்... இதெல்லாம் இந்த நான்காயிரம் வருடங்களில் உருவாகி சமூக வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் வழிவகுத்தது.
அடுத்த மூன்று நாட்கள் ஆபிஸ் வேலையாக வெளியே சுற்றியதால் நேரம் போனதே தெரியவில்லை. மாலையில் சில மால்கள் சென்று பார்த்தேன்.. விசேஷமாக ஒன்றுமில்லை. இந்திய ஆட்டோ ரிக்ஷாக்கள், ஸ்கூட்டர்கள் சாலைகளில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
உலகிலேயே நீளமான நதியான நைல் நதியின் கார்னிஷ் பகுதிகளில் மக்கள் நடமாட்டமே இல்லை. மக்களின் பயமே காரணமாம். படகு சவாரிக்காக காத்திருந்த 'நைல் க்ரூஸ்' படகு, திருச்சி பஸ் ஸ்டான்டில் விராலி மலை போகும் பஸ் மாதிரி பரிதாபமாக காலி...GPS மூலம் நைல் நதிக்கரை ஓரத்திலேயே ஒரு லெபனீஸ் உணவகத்தை கண்டுபிடித்து அருமையான உணவு சாப்பிட்டு ஹோட்டலுக்கு திரும்பி வந்தோம்.
நாங்கள் பல நாடுகளிலிருந்து நிறைய உணவு சம்மந்தப்பட்ட பொருட்களை பஹ்ரைனுக்கு இறக்குமதி செய்து உள்ளூர் சந்தையில் விற்கிறோம். நாலைந்து நாட்கள் எகிப்திய பயணத்தில் வெற்றிகரமாக நிறுவனத்திற்கு தேவையான பாலாடைக்கட்டி(சீஸ்), போன்ற சில உணவுப்பொருட்களின் விநியோக உரிமை கிடைத்தது.
கடந்த ஐந்து வருடங்களில் நிறைய அரசியல் நிகழ்வுகள். பல ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து மக்களின் புரட்சி வெடித்து, ஆட்சி கவிழ்ந்து, பிறகு சிறிது காலமேயிருந்த முஸ்ரி ஆட்சியும் அகற்றப்பட்டு தற்போது சிசியின் அரசாங்கம்...அமைதியை இழந்து கொஞ்சம் பீதியில் இருக்கிறார்கள் மக்கள். ஏர்போர்ட், மால்கள், விடுதிகள் என எங்கு போனாலும் பாதுகாப்பு சோதனை. ஹமாஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் வேறு.
பஹ்ரைனிலிருந்து கிளம்பும்போதே எங்கள் அலுவலகத்தில் ஜாக்கிரதையாக போய்ட்டு வாவென எச்சரித்து, பொது இடங்களில் நான்கு விரல்களை உயர்த்தி இப்படி✋🏿 காட்டாதே என சொல்லியனுப்பினார்கள். காட்டினால் என்னாகும்?. கம்பிகளுக்குப்பின்னால் கட்டம்போட்ட சட்டையுடன் நிற்க வேண்டிவருமாம். 'நான்கு விரல்கள்' எதிர்கட்சி சின்னமாம். கெய்ரோ ஏர்போர்ட்டில் தூரத்தில் நிற்கும் ஆஸாமை பார்த்து 'ஹையா! நமக்கு கேட் நம்பர் 4' என ஜாலியாக நான் கையை தூக்கியிருந்தால் இந்த பதிவை நீங்கள் படித்திருக்க முடியாது. முனுக்கென்றால் கோபம் வருகிறது இவர்களுக்கு...
பின்னே இருக்காதா! இராணுவ அணிவகுப்பிலேயே தங்கள் அதிபர் அன்வர் சதாத்தை போட்டுத்தள்ளியவர்களாயிற்றே!
பின்னே இருக்காதா! இராணுவ அணிவகுப்பிலேயே தங்கள் அதிபர் அன்வர் சதாத்தை போட்டுத்தள்ளியவர்களாயிற்றே!
No comments:
Post a Comment