Tuesday, October 1, 2019

ஜியார்ஜியா

'
ஜியார்ஜியா போறீங்களா?அங்கே அப்பிடி என்ன விசேஷம் !' என கேட்கும் நண்பர்களுக்கு...
குறைந்தது பத்து பேர் சேர்ந்தால் அதிக செலவில்லாமல் ஜியார்ஜியாவை சுற்றிப்பார்க்கலாமென எங்கள் பஹ்ரைன் சி.ஏ சாப்டர் அங்கத்தினர்களுக்கு அழைப்பு விடுத்தும் குழந்தைகள் பரிட்சை நேரமென்பதால் யாரும் முன் வரவில்லை. நானும் நண்பன் விவேக் கபூரும் குடும்பத்துடன் போக முடிவு செய்தோம். ஃப்ளைதுபாய் விமானத்தின் ஆஃபர் கட்டனம் தெரிந்தால் மலைத்துப்போவீர்கள்.
கிரெடிட் கார்டு சகிதம் உட்கார்ந்து அவசரமாக டிக்கெட் புக் செய்து, சட்டென சகாயமான விலையில் நான்கு நட்சத்திர நோவோடெல் விடுதியில் அறையும் கிடைத்தது. அறை வாடகையை கேட்டால் மயக்கமே வந்துவிடும் அளவிற்கு குறைவு. ஜியார்ஜிய செலாவணி 'லேரி' நிறைய பஹ்ரைனிலேயே வாங்கிக்கொண்டோம்.
முக்கா பேண்ட், டிஷர்ட், கருப்பு கண்ணாடி, தொப்பி என் பெட்டியை நிரப்பி நண்பன் கபூர் குடும்பத்தை ஜுஃபேர் பகுதியிலிருந்து பிக்கப் செய்துகொண்டு பஹ்ரைன் விமானதளத்தில் ஏகத்துக்கும் செல்ஃபி எடுத்துக்கொண்டு சீட் பெல்ட் மாட்டிக்கொண்டு துபாய் பறந்தோம்.
துபாய் லவுஞ்சில் அரேபிய ஹம்மூஸ், மற்றும் முத்தாபில் சாப்பிட்டு மூன்று மணி நேரம் கைப்பேசியை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். அதென்ன ஹம்மூஸ்.. முத்தாபில்? வேகவைத்த காபூலி சன்னா மற்றும் வெள்ளை எள்ளை விழுதாக அரைத்து ஆலிவ் எண்ணையை அள்ளித்தெளித்து பூண்டு தொகையல் மாதிரி ஸ்பூனால் அள்ளி சாப்பிட ஹம்மூஸ் ருசியாக இருக்கும். ஆனால் ஜாக்கிரதை! இரவில் வாயுத்தொல்லையுடன் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நிச்சயம் உண்டு. எண்ணெய் கத்தரிக்காயில் செய்யப்படும் பைங்கன் பர்த்தாவின் தூரத்து சொந்தம் தான் முத்தாபில். சாலட் வகைகள் இவை. நம்மூர் கூட்டு பொறியல் போல அரேபியர்கள் விரும்பி உண்ணும் ஸ்டார்ட்டர்கள். விமானம் பிடிக்கும் முன் கொஞ்சம் ஜியார்ஜியாவைப்பற்றி...
மேற்காசியாவும் கிழக்கு ஐரோப்பாவும் உரசிக்கொள்ளுமிடத்தில் உள்ள ஜியார்ஜியா ஒரு அழகிய நாடு. துருக்கி, ரஷ்யா, அர்மேனியா, அசர்பெய்ஜான் மற்றும் கருங்கடல் சூழ, 50 சதவீதம் மலைகள், காடுகள் மற்றும் இயற்கை மற்றும் கணிம வளங்கள் நிறைந்த நாடு. 91இல் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனியாட்சி பெற்ற குடியரசானது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த அந்நாடு நிறைய பொருளாதார சீர்திருத்தங்களுடன் ஐரோப்பாவுடன் நல்லுரவு வைத்துக்கொள்ள ஆரம்பித்ததும் அவ்வப்போது ரஷ்யா சீண்ட ஆரம்பித்து போர் தொடுத்தது.
பழங்கதை பேசிக்கொண்டிருந்தால் விமானம் போய்விடும். குட்டி விமானம் அது. உள்ளே நுழைந்ததும் அங்கங்கே நமக்கு தெரிந்த நண்பர்களை பார்த்ததும் குதூகலம். சளசளவென பேச ஆரம்பித்து விட்டோம். சுமார் 3 மணி நேரத்தில் ஜியார்ஜியாவின் தலைநகரான டிப்லிஸி வந்திறங்கினோம். 'முதல் தடவை வறீங்களா?' என மிகப்பணிவுடன் கேட்டு ஸ்டாம்ப் அடித்து கொடுத்தார் பாஸ்போர்ட் கண்ட்ரோல் பெண் அதிகாரி.
நாம் கொண்டு வந்திருந்த சுமார் 40 தண்ணீர் பாட்டில்கள் கொண்ட பெட்டி சிவப்பு மையினால் X குறியிடப்பட்டு கன்வேயர் பெல்ட்டில் வந்தது. ‘இது தண்ணி தானே! இதுல என்ன இருக்குன்னு கஸ்டம்ஸ் செக் பண்றான்!’ என நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஆன்ட்ரியா சாயலில் சுங்கத்துறை பெண் அதிகாரி ஓடி வந்து ‘இது குடி தண்ணீர் தானே! குடி(😃) தண்ணீர் இல்லியே?’ என விஜாரித்து அனுப்பினார்.
வெளியே கூஜா (Guja) என்ற இளைஞன் தயாராக தன் 13-சீட்டர் பென்ஸ் வேனுடன் காத்திருந்தான். பஹ்ரைனில் நண்பர்கள் நிறைய பேருக்கு
பரிச்சயமானவன் கூஜா. முன்கூட்டியே போன் செய்து சொல்லிவிட்டால் விமான தளத்தில் உங்களை வரவேற்று நாலைந்து நாட்கள் ஊர் சுற்றிக்காட்டி திரும்ப ஏர்போர்ட்டில் இறக்கிவிட்டு சொற்ப தொகையே வாங்கும் நம்பகமான ஆர்மேனிய இளைஞன்.
கூஜா எங்களை ஹோட்டலில் இறக்கிவிட்டு கிளம்ப, அறையில் பெட்டியை போட்டுவிட்டு வெளியே வந்தோம். ரோட்டில் அதிகம் மெர்சிடீஸ் பென்ஸ் கார்களை மட்டும் பார்க்க முடிந்தது. ரஷ்யாவிலிருந்தும், துருக்கியிலிருந்தும் அதிகம் பாவிக்கப்பட்ட பழைய பென்ஸ் கார்களை ஜியார்ஜியாவில் இறக்கி நல்ல விலைக்கு விற்கிறார்களாம். டாக்ஸி ஓட்டி அந்த வண்டியை 12ஆயிரம் லேரிக்கு (ரூபாய் மூன்றரை லட்சம்) வாங்கினாராம். பக்கத்தில் டிப்லிசி மால் போய் கொஞ்சம் பக்ஷ்ணங்கள் வாங்கிக்கொண்டு அறைக்கு திரும்பினோம். விவேக்கின் மனைவி ஜானு, பனீர் பட்டர் மசாலா டெட்ராபேக் பொட்டலத்தை பிரிக்காமல் கெட்டில் கொதிநீரில் போட அடுத்த 5 நிமிடத்தில் மணக்கும் கறி ரெடி. குஜராத்தி மேத்தி தாப்லாவுடன் அருமையான இரவு உணவு.
மறுநாள் காலை டிப்லிசி நகரிலிருந்து ஒரு மணிநேர மலைப்பிரதேசம் நோக்கி பயணம். சுற்றிலும் மலை, அடர்ந்த மரங்கள், பள்ளத்தாக்கு, சாலையை ஒட்டி சலசலக்கும் நதி, மலைச்சரிவில் மேயும் கொழுத்த ஆடுகள். மலை உச்சியிலிருந்து டிப்லிசி நகரை பார்க்க ரம்மியமாக இருந்தது. ஜியார்ஜிய தேன் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த பெண் ஸ்பூனால் தேனை எடுத்து கொடுக்க ருசி பார்த்து சிறிய பாட்டில்களில் வாங்கிக்கொண்டோம்.
பசி எடுக்க ஆரம்பிக்கவே மலை உச்சியிலேயே சிறிய கடை ஒன்றில் நுழைந்தோம். ஜியார்ஜிய பாரம்பரிய உணவான கச்சாபூரி அங்கு கிடைத்தது. இளம் பெண்ணொருத்தி கச்சாபூரி செய்வதை வேடிக்கை பார்த்தோம். கை கொள்ளாத அளவிற்கு ஆல் பர்பஸ் ஃப்ளோர் (நம்மூர் மைதா) உருண்டைக்குள் டென்னிஸ் பந்து சைஸ் சீஸ் உருண்டையை பூரணமாக வைத்து சப்பாத்தி கல்லில் தேய்த்து சூடான தவாவில் போட்டு தாராளமாக பெரிய வெண்ணைக்கட்டியை அவள் வெட்டிப்போட்டதும் ரஜினி, பிரமீளா (மதனோர்ச்சவம் ரதியோடு தான்... ரதி தேவியோ பதியோடு தான்) போல ரொட்டியும் வெண்ணையும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து, உருகி, சுடச்சுட பொன்னிறமான கச்சாபூரி தயாராகும் வரை கண்கொட்டாமல் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.. அவளை😄.
ஜியார்ஜிய பெண்கள் பெரும்பாலும் ஆலியா பட் போல அழகு. செம்பட்டை முடி, கூர்மையான நாசி, கொஞ்சம் தாட்டியான உருவம். அசரி, (Azerbeijan), ஆர்மேனிய மற்றும் ரஷ்ய பெண்களும் நிறைய ஜியார்ஜியாவில் வசிக்கிறார்கள். 90களுக்கு பிறகு கம்யூனிஸ்ட்களின் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தைப்பொருளாதாரத்திற்கு மெதுவாக ஜியார்ஜியா மாற, சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிக்க ஆரம்பித்தார்கள். மருத்துவம், ராணுவம், கல்வி என எல்லா துறைகளிலும் விமான பைலட் வரை பெண்கள். விவசாயம் செய்யும் பெண்களும் உணவுக்கடை கச்சாபூரி விற்கும் பெண்களும் நிறைய. இப்ப எதுக்கு ஜியார்ஜிய பெண்கள் பற்றி இவ்வளவு தகவல்? ஹாங்... அந்த கச்சாபூரி பெண்! ஒரு கச்சாபூரி நாலைந்து பூரண்போளிக்கு சமம். சாப்பிட்டதும் வயிறு நிரம்பியது. டிரைகிளிசரைடு எகிற ஏகப்பட்ட சாத்தியக்கூறுகள் உள.
மறுநாள் காலை டிப்லிசி நகரிலிருந்து மலைகளுக்கு நடுவே நான்கு மணி நேர பயணம். பச்சை கம்பளம் போர்த்திய மாதிரி கஸ்பேகி மலைத்தொடர் பார்க்க மிக அழகு. அங்கங்கே அருவிகள். ஒவ்வொரு 20 கி.மீ தொலைவிலும் ஒரு சிறிய கிராமம். அக்கிராமத்து மக்கள் மற்ற கிராமங்களுக்கோ நகரங்களுக்கோ போக வேண்டிய அவசியமில்லாமல் பள்ளி, மருத்துவமனை, கடைகள், விளையாட்டு மைதானம் என சகல வசதிகளும் கூடிய கிராமங்கள். மதியம் ரஷ்ய எல்லையை கடும் பாதுகாப்பு சோதனை கடந்து அடைந்தோம். தூரத்தில் ரஷ்ய வீரர்கள் துப்பாக்கி ஏந்தி நிற்பது தெரிந்தது. நிறைய சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
திரும்பவும் தலைநகர் டிப்லிசி நெருங்கும் முன் கூஜா தனது பெரியப்பாவின் பண்ணை வீட்டுக்கு எங்களை அழைத்துச்சென்றான். வெளியே பெயிண்ட் இல்லாமல் சிமென்ட் பூச்சு மட்டுமே. வீட்டின் உள்ளே அழகிய வண்ணங்களுடன் சுவர்கள். வீட்டைச்சுற்றி ஆப்பிள், கொய்யா, ஸ்ட்ராபெர்ரி மரங்கள். வாசலில் திராட்சைக்கொடி. வயதான பெரியம்மா தயாரித்த ஜியார்ஜிய தேநீர் அருமை. தேநீர் செய்வதெப்படி என்பதையும் அவர் விளக்க, தங்கபாலு போல அழகாக மொழிபெயர்த்து விளக்கினான் கூஜா. இந்திய ரூபாய் சுமார் 25-50 லட்சத்திற்குள் பண்ணை வீட்டுடன் கூடிய ஒரு கிரவுண்டு நிலம் கிடைக்கிறதாம். ஜியார்ஜியாவில் முதலீடு செய்தால் குடியுரிமை கிடைக்கிறதாம். நிறைய பஹ்ரைனிகள் ஜியார்ஜியாவில்.
மறுநாள் மறுபடியும் ஐந்து மணி நேர பயணத்திற்குப்பின் துறைமுக நகரம்
பதூமி. ஜியார்ஜிய ஆட்டிறைச்சி மற்றும் மதுபானங்கள், பாலாடைக்கட்டி என கப்பல்களில் மற்ற அன்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாம். வழி நெடுக சாலைகளில் வேனில் சிவப்பு ஒய்ன் விற்கிறார்கள். Wine tasting... free என கூவி அழைத்தார்கள். மதியம் துருக்கி எல்லையை அடைந்தோம். நம் பாஸ்போர்ட்டில் அமெரிக்க விசா ஸ்டாம்ப் இருந்தால் துருக்கியில் நுழையலாமாம். மதிய சாப்பாடு அங்க வச்சுக்கலாமாவென கூஜா கேட்க, ‘தம்பி நாங்க பத்திரமா ஊர் போகனும்! ’ என அவனை இழுத்துக்கொண்டு திரும்பினோம். போனவாரம் தான் துருக்கியில் உள்ளூர் கலவரம், கன்னிவெடி என செய்தி. Martvili Canyan எனப்படும் பிரம்மாண்டமான மலை பள்ளத்தாக்கு, 150 அடி ஆழ நதியில் படகு சவாரி முடிந்து பாகிநிதி எனும் கிராமத்திற்கு இரவு வந்து சேர்ந்தோம்.
பழங்கால வீட்டைப்போல விடுதி (Inn). கீழ்த்தளத்தில் சமையலறை, சின்ன அலுவலகம் மற்றும் இரு அறைகள். மேல் தளத்தில் நான்கு அறைகள். வயதான தம்பதி தான் அந்த விடுதியை நடத்துபவர்கள். புழக்கடைப்பக்கம் ஓரிரண்டு வீடுகளில் அவர்களது மகன், மகள், பேரன், பேத்தி என குடும்பங்கள். எல்லோருமே ஊத்துக்குளி வெண்ணெய் போல புஷ்டி.
‘அதென்னப்பா உங்க ஊர்ல எல்லா பெண்களும் அந்தக்கால குஷ்பு மாதிரி குண்டா இருக்காங்களே! என கூஜாவை கேட்டேன். ‘கொழுப்பு நீக்காத பால், தயிர், வெண்ணெய், சீஸ் (பாலாடைக்கட்டி), ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றியிறைச்சின்னு எல்லாத்தையும் வஞ்சனையில்லாமெ சாப்பிடறோமே! அதான்..’ என விளக்கிய ரோஸ் நிற கூஜாவே சுமார் 110 கிலோ எடையாம். வயது முப்பதுக்கும் குறைவாம். கைப்பேசியில் தன் ஆறு மாத குழந்தை போட்டோவை காட்டினான். ஒரு முழு உருண்டை தான் தெரிந்தது. ஜியார்ஜியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறதாம்.
‘சீக்கிரம் தூங்க போங்க! வெள்ளன எழும்பி எங்கூட வாங்க!’ என அந்த அங்கிள் சொல்ல அவசரமாக மாடிக்கு விரைந்து கம்பளிக்குள் புகுந்ததும் சட்டென தூக்கம். மறுநாள் காலை 6 மணிக்கு ஸ்வெட்டர் குல்லாயுடன் அங்கிள் (70) தயாராக இருந்தார். ஆங்கிலம் தெரியாது. எல்லாம் சைகையில் தான். அருகே சிறிய மலையுச்சி தேவாலயம் வரை போய் திரும்பினோம். ஆளரவமற்ற கிராமத்து வீதிகளில் நடந்தோம். மக்கள் மெல்ல எழ ஆரம்பிக்கிற நேரம். எதிரே வந்த கிராமத்து மேயர் ‘நீங்க இந்தியாவா? மேரா ஜூத்தா ஹெ ஜப்பானி’ என ஹிந்தி பாட்டை பாடினார். அந்தக்கால ரஷ்யர்களுக்கு ராஜ்கபூர் பிடிக்குமாம். இப்போது ஷாருக்கான் படங்கள் பார்க்கிறார்களாம். அருகே பூங்கா ஒன்றில் அந்த அங்கிள் பைப் தண்ணீரை திறந்து விட்டு நாய் ஒன்றுக்கு வர்க்கி போட, அது வாலை ஆட்டியபடியே தின்று விட்டு, ஓடிப்போய் பக்கத்து மின் கம்பம் அருகே போய் காலைத்தூக்கி.... அட! எல்லா நாட்டிலும் நாய்கள் ஒரே மாதிரியா!
திரும்ப விடுதிக்கு திரும்பியதும் குளித்துவிட்டு கீழே வந்தோம். எதிரே பேக்கரியிலிருந்து சூடான ரஷ்யன் ப்ரெட் வாங்கி வந்தார் அங்கிள். கிட்டத்தட்ட புடலங்காய் அளவு நீளம் கொண்டது. நீளமாகவோ உருண்டையாகவோ இல்லாமல் வைரக்கட்டிகள் போன்ற ஜியார்ஜியன் அரிசியை வடித்து எங்கள் எதிரே வைத்து, ஃப்ரிட்ஜை திறந்து ஊறுகாய் பாட்டில் போல நாலைந்து பாட்டில்களில் கட்டித்தயிரை வெளியே எடுத்தார். ரப்பரால் டைட்டாக மூடப்பட்ட பாட்டில்களிலிருந்து கரண்டியால் எடுத்து.. ஆஹா! ஜியார்ஜிய அரிசி தயிர் சாதம் செம்ம ருசி. வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி போன்ற உபாதைகளுக்கு அந்த அரிசி மிக நல்லதாம். ஃபுல் கட்டு கட்டினோம்.
கடைசி நாள் முழுவதும் டிப்லிசி நகரம் தான். கேபிள் காரில் நகரை ஒரு மணி நேரம் சுற்றி, கார்னிவல் ஒன்றில் நுழைந்தது இரண்டு மணி நேரம் கடைகளை வேடிக்கை பார்த்து, கச்சாபூரி சாப்பிட்டு, வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த குட்டி வின்ட்டேஜ் கார்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, ஹோட்டல்காரன் கட்டிக்கொடுத்த உணவு பொட்டலத்துடன் விமான தளத்திற்கு விரைந்தோம்.

திருமதி Usha Seturaman

பஹ்ரைன் வந்த புதிது. ஹூரா பகுதியில் நாங்கள் குடியிருந்தோம். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் அங்கே. சிறுக சிறுக காசு சேர்த்து செக்கன்ட்-ஹேண்ட் கார் வாங்கினாலே மைசூர் ரெஸ்ட்ரோன்ட்டில் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுப்போம். தாழ்வு மணப்பானமையுடன் யாரைப்பார்த்தாலும் வணக்கம் சொல்லத்தோன்றும். பிரதி வெள்ளியன்று சின்மயா மிஷன் சத்சங்கிற்கு போவது வழக்கம்.
நான், நண்பன் Ganapathi Subramanian, மாமாஜி (கணபதியின் மாமா) மற்றும் எங்கள் பில்டிங்கில் வசிக்கும் 2 பிரம்மச்சாரி நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து போவோம். காலை 6 மணிக்கு எழுந்து குளித்து அரக்க பறக்க கிளம்பி, கணபதி என்னை பிக்கப் செய்து 7 மணிக்குள் மனாமா குஜராத்தி சமாஜ் வளாகத்திற்கு ஓடுவோம்.
நிறைய தொழிலாளர்கள் வருவார்கள்.சத்சங் முடிந்து இட்லி, வடை சாம்பார், கேசரி, பூரி என மஹா பிரசாதம். வெள்ளிக்கிழமை சத்சங் என்றால் மஹாபிரசாதம் தான் நினைவுக்கு வரும். 6 மணிக்கு தானாகவே முழிப்பு வரும். ரமதான் நோன்பு மாதத்தில் மஹாபிரசாதம் கிடையாது. வெறும் முந்திரி கிஸ்மிஸ் மினி பிரசாதம் தான். அந்த மாதம் கூட்டம் குறைவாக இருக்கும்😃. படுக்கையில் இருந்து நமக்கும் எழ மனசு வராது. டான் என கணபதி வந்து இழுத்துக்கொண்டு போவான்.
சத்சங் முடிவில் சமாஜின் தலைவர் கிஷோர் அசர்போட்டா உரையாற்றுவார். வயதில் மூத்தவர். ஏதோ கம்பெனியில் அக்கவுண்டன்ட். அவர் காலை தொட்டு வணங்குவோம். அங்கத்தினர் யாராவது வேலையை விட்டு இந்தியா திரும்ப போவதாக இருந்தால் சத்சங் நடுவே மேடைக்கு அழைத்து பாராட்டி பரிசு (சின்மயா புத்தகம்) கொடுப்பார். மறக்காமல் ‘நீயே போறியா.. இல்ல அவங்க உன்னை அனுப்பறாங்களா?’ என கேட்டு வைப்பார். வேலை போன ஆட்கள் சத்சங் வராமல் சத்தம் போடாமல் மஹாபிரசாத்தில் கலந்து கொண்டு அவரை பார்க்காமல் ஓடிவிடுவாரகள்.
‘அகண்ட மண்டலாகாரம்.. வியாப்தம் யேன ச்சராச்சரம்.. தத்பதம் தர்ஷிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ..’ என கணீரென குரு ஸ்தோத்ரம் சொல்வோம். மத்தவங்களை விட நம்ம சத்தம் ஜாஸ்தியா கேக்கனும்’ என்ற முனைப்போடு எல்லோரும் கத்தி பாடுவோம்.
சுமார் ஒரு மணி நேரம் கீதா ஸ்லோகங்கள் சொல்லி முடித்ததும் பங்களாதேஷி இளைஞன் தபலாவை வெளியே எடுக்க, பன்வாரி லால் என்பவர் ஹார்மோனிய பெட்டியை திறந்து ‘மது சூதனா.. ஹே மாதவா’ என ஆரம்பிக்க மெய் மறந்து கண்களை மூடி கூட சேர்ந்து பாடுவோம். பங்காளா தேஷிக்கு பின்னால் நானும் சில நாட்கள் தபலாவுடன். சுமாராக வாசிப்பேன். பங்களாதேஷி சத்தத்திற்குள் நான் அமுக்கி வாசிப்பேன். என்றைக்காவது அந்த பங்களாதேஷிக்கு கை வலித்து நடுவே நிறுத்தி விடக்கூடாது என வேண்டிக்கொள்வேன்.
சத்சங்கின் நடுவே சின்ன இடம் கிடைத்தாலும் ஜனங்கள் முன்னேறி துள்ளி குதித்து யாரோ மடியில் உட்காராத குறை. வெங்கோப ராவ் என்பவர் ‘விட்டலா... விட்டலா.. பாண்டுரங்க விட்டலா.. பண்டரிநாதா விட்டலா..’ என பாட ஆரம்பித்தால் புல்லறிக்கும்.... அவருக்கு. கணீர் குரல். மைக்கை பின் பக்கமிருந்து அவரிடம் அனுப்புவதற்குள் மைக்கே வேண்டாமென பாட ஆரம்பித்து விடுவார். பெரிய சரீரம் கொண்ட அவருக்கு பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து நின்றாலும் சுவாமி சின்மயானந்தா போட்டோ மறைக்கும். மாமாஜி (60) எப்பவும் அவரை கிண்டல் செய்வார். ‘ஈயாளு ராவ் ஒரு மாசம் ச்சுட்டி எடுத்து ஊருக்கு போனேங்கில் மனாமாவுல அத்தற அரிசிக்கடையும் அடைச்சுடுவான்கள்’ என மாமாஜி மெதுவாக சொல்ல, கணபதி மற்றும் நண்பர்கள் சத்சங் நடுவில் சிரிப்பை அடக்க கடும் முயற்சி செய்வோம்.
சத்சங்கில் கடைசியாக திருமதி Usha Seturaman அவர்களின் பஜன் கேட்பதற்கே நிறைய பேர் தவறாமல் வருவார்கள். அந்த பஜனுக்கு முன் 4 வரிகள் அவர் பாடும் ஸ்லோகத்தில் மெய் மறந்து கண்களை மூடி ரசிப்போம். சுமார் ஏழெட்டு நிமிடம் சாய் பஜன் அல்லது ஶ்ரீராமர் பஜன் என வாரா வாரம் அவர் பாட, அந்த சூழலே தெய்வீகம் தான்.
பஹ்ரைனில் இந்திரன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் முக்கிய உறுப்பினர். நிறைய கச்சேரிகள் செய்வார். வருடா வருடம் தியாகராஜ ஆராதனையன்று சுமார் பத்து இருபது பாடகர்கள் சூழ அவர் பாடும் அழகே தனி. தீவிர சாய் பக்தை. அவரது வீட்டில் வியாழனன்று சாய் பஜன் உண்டு. பையன்களையும் புட்டபர்த்தியில் படிக்க வைத்தார். கணவர் சேதுராமன் சிஏ. உயர் பதவியில் இருக்கிறார். பஹ்ரைனில் எல்லோருக்கும்
பரிச்சயமானவர். எங்கள் சிஏ சாப்டரின் அங்கத்தினர். கணபதிக்கு மிகவும் நெருக்கமான தம்பதி..
உஷா அவர்கள் நிறைய பாடல்கள் பாடி காசெட், சிடி வெளியிட்டிருக்கிறார். அவ்வப்போது பஹ்ரைன் இந்தியன் க்ளப் மேடையில் ‘முல்லை மலர் மேலே’ என சினிமா பாடல்களும் அருமையாக பாடுவார்.
இன்று பிறந்த நாள் காணும் உஷாஜி அவர்களுக்கு எனது ஓவியத்துடன் வாழ்த்துக்கள்.

நமக்கு நண்பர்கள் தானே வாழ்க்கையே!

பம்பாய் செட்டாநகர் இருப்பது ஒரு ரெண்டுங்கெட்டான் இடம். செம்பூர் என சொல்லிக்கலாம் ஆனால் இருப்பது காட்கோபர் பெஸ்டம் சாகர் சமீபம். ‘செம்பூர் ஆலி!’ என பஸ்ஸில் யாரோ பேசிக்கொள்ள, அவசரமாக நாம் செட்டாநகரில் இறங்கினால் மறுபடியும் ஆட்டோ பிடித்து தான் செம்பூர்
செல்ல வேண்டியிருக்கும்.
ரயிலை விட்டிறங்கி மேலே பாலம் வழியாக ஸ்டேஷனுக்கு வெளியே வரும் வழக்கம் நிறைய பேருக்கு கிடையாது. ப்ளாட்ஃபார்மிலிருந்து தொப்.. தொப்பென குதித்து தண்டவாளங்களை தாண்டி வெளியே வந்து காந்தா பஜியா, ‘கன்னே கா ரஸ்’ (கரும்புச்சாறு) கடைகளை தாண்டி மேம்பாலத்துக்கு கீழே ‘சௌதாகர்’ சினிமா போஸ்டர்களை பார்த்துக்கொண்டே கோழிமுட்டை கடைகளை மூக்கை பிடித்துக்கொண்டே கடந்து முலுண்டு ஹைவேயை ஒட்டிய ரோட்டில் விடுவிடுவென கால்களை வீசி ஆறேழு நிமிடங்கள் நடந்தால் செட்டாநகர்...
சுமார் 50,60 கட்டிடங்கள், காசெட் கடை, ராஜ் ரெஸ்ட்ரோன்ட் எனும் திருநெல்வேலி அன்னாச்சி மெஸ், பக்கத்திலேயே அவர்களது மளிகைக்கடை, வெங்சர்க்காரின் அண்ணா வீடு, நடுவே பெரிய முருகன் கோவில். இது தான் செட்டாநகர். கோவிலைச்சுற்றி ராதா, விஜயா என்ற பெயர்களில் பழங்கால இரண்டு அல்லது மூன்றடுக்கு குடியிருப்புகள். வாசல் கேட் அருகே கைலியை மடித்துக்கட்டி, ஸ்கேல் வைத்து ட்ரிம் செய்தது போல சன்ன மீசையுடன் சிகரெட் வலித்துக்கொண்டிருக்கும் பாலக்காட்டு அப்பாக்கள்.
அந்த விஜயா பில்டிங்கில் தான் நாலைந்து சி.ஏ பிரம்மச்சாரிகளுடன் நான் தங்கியிருந்தேன். ரெங்கு, முரளி இருவருக்கும் ஶ்ரீரங்கம். சந்துருவும் (Balasubramaniam Chandrasekaran) இருந்தான். காலை நாஷ்டா கிடையாது. வெறும் காபியை குடித்துவிட்டு எல்லோரும் ஆபிசுக்கு ஓடிவோம். சாவகாசமாக 9 மணிக்கு பைக்கில் கிளம்பும் ஶ்ரீராமுக்கு ஆபிஸ் ஒர்லி பக்கம். ஶ்ரீராம் எனக்கு ஒரு வருடம் சீனியர். நல்ல உயரத்திற்கேற்ற பருமனுடன் ஆஜானுபாகுவான் தோற்றம். கபீர்பேடி தாடிக்கு பின்னால் அழகான சிரிப்பு.
நெடுநெடுவென உயரம் கொண்ட முரளி ப்ரீஃப்கேசுடன் அந்தேரி சாக்கிநாகாவுக்கு ரிக்ஷா பிடிப்பான். கோலிவாடா பக்கம் அவன் ஒருமுறை ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த போது சிக்னல் ஒன்றில் திருநங்கை ஒருவர் ஆட்டோவில் உட்கார்ந்திருந்த முரளியை அணுகி டப் டப்பென கைகொட்டி ‘காசு குடு ஐய்ரே!’ என கேட்டார். கேட்டுக்கொண்டருக்கும் போதே ஆட்டோ கிளம்ப, சடாரென அவன் சட்டைப்பையில் கையை விட்டு ரூபாய் நோட்டுக்கற்றையை எடுத்துக்கொண்டு ஓட, ‘ஏய்! என் பணம்.. பணம்’ என கத்தியபடியே பின்னால் முரளி ஓட, அடுத்த சில நிமிடங்களில் திருநங்கையை பிடித்து விட்டார்கள். நேராக போலிஸ் ஸ்டேஷன். ஆனால் அதற்குள் பணம் கைமாறி எங்கோ மறைந்து போக, ‘எங்க அப்பா அம்மாவுக்கு அனுப்ப வச்சிருந்த பணம் சார் அது’ என பரிதாபமாக முரளி சொல்ல திருநங்கையை அடி பிண்ணி எடுத்துவிட்டார்கள். அடி வாங்குவதை பார்க்க பரிதாபமாக இருக்கவே, ‘பணம் போனா பரவால்ல.. அடிச்சது போறும்.. அலியை விட்ருங்க!’ என முரளி கேட்டுக்கொண்டதும் விட்டுவிட்டார்கள். கோபம் என்பதே சிறிதளவும் முரளிக்கு கிடையாது. நண்பர்களுக்காக காசுபணம் செலவு செய்ய தயங்க மாட்டான்.
மாலை 7 மணியிலிருந்து வீட்டில் நண்பர்கள் கும்மாளம் தான். அமெரிக்கா விசா கிடைத்து சென்னையிலிருந்து ஶ்ரீரங்கத்து பையன்கள் நேராக எங்கள் அறையில் ஒரு வாரம் தங்கி அமெரிக்காவிற்கு விமானம் பிடிப்பான்கள். நடுவே திரும்ப இந்தியா வரும்போதும் பம்பாய் வழியாகத்தான் பயணம். அமெரிக்க சாக்ஸ், காசெட், சென்ட் என எங்களுக்கு கிடைக்கும். சிடி வந்த புதிது. ‘மீண்டும் மீண்டும் வா!’.... ‘வனிதா மணி’ பாடல்கள் சிடியில் எங்கள் ஹாலில் உரக்க ஒலிக்கும்.
பால்கனில் ஜீன்ஸ் பேண்ட்கள் உலர, பாத்ரூமில் கொழகொழ ரின் சோப், பெர்மனென்டாக ஒரு மூலையில் ஊறிக்கிடக்கும் ஜட்டி, பழுப்பு கலரில் கப்படிக்கும் ஈரத்துவாலை, தரையில் சுட்கேஸ்கள், இறைந்து கிடக்கும் புத்தகங்கள், ஆங்காங்கே காபி தம்ளர்கள்.. இது தான் எங்கள் வீடு.
ஒரு முறை ரெங்குவுக்கு வந்த இன்லேன்ட் லெட்டரை தவறி பிரித்து விட்டேன். (படிக்கவில்லை). ‘இப்ப என்ன பண்றது ஶ்ரீராம்?’ என கேட்டேன். மாலை ரெங்கு அறைக்கதவை திறக்க, தூரத்தில் ஶ்ரீராம் அந்த இன்லேண்ட் லெட்டருடன் ‘டேய்! உனக்கு லெட்டர்டா! பிரிக்கட்டுமா?’ எனக்கேட்டு விரலை விட்டு சரட்டென பிரிப்பது போல செய்ய ரெங்கு ஓடிவந்து லெட்டரை பிடுங்கிக்கொண்டான்.
8 மணிக்கு மேல் சுடச்சுட சாம்பார், தேங்காய் துருவிப்போட்ட கொத்தவரை பொறியல், கட்டித்தயிர் என திவ்யமான சாப்பாடு. சமையலில் பிரதான இடம் எனக்கு. ஞாயிரன்று ரவா தோசையே உண்டு. துபே எனும் வட இந்தியன் ஒரு காலை மட்டும் கிச்சன் மேடையில் வைத்து சப்பாத்தி போடுவான். காபி மற்றும் பத்து பாத்திரம் தேய்ப்பது ரெங்குவின் வேலை. இரவு பத்து மணிக்கு மேல் நடந்து போய் உ.பி பையா கடையில் மசாலா பால் வாங்கித்தருவான் சந்துரு.
பால்கனியில் நின்றுகொண்டு அக்கம்பக்கத்து மாடிகளில் இளம்பெண்களை சைட் அடிக்கும் வழக்கம் எல்லாம் எங்களுக்கு கிடையாது. காரணம் எந்த பெண்ணும் வெளியே வந்து நிற்க மாட்டார்கள். அப்படியே ஏதாவது பால்கனி கதவு திறந்தால் பாலக்காட்டு அப்பா தான் துணி உலர்ந்திக்கொண்டு நம்மை முறைப்பார்.
சென்னையில் ஆடிட்டர் அலுவலகம் புதிய கிளை திறந்து பம்பாயிலிருந்து முரளியை அனுப்பினார்கள். அப்போது தான் தன் காதல் மேட்டரை முரளி மெதுவாக எடுத்தான். பொறாமையுடன் கை குலுக்கினோம். அடுத்து ஶ்ரீராமுக்கு திருமணம் நிச்சயமானது. ரெங்கு அப்ப இன்னும் சின்னப்பையன். அமுக்கமாக அவனும் காதலித்துக்கொண்டிருந்தான். அவள் எங்களது நண்பன் Sridharan Rajaraman இன் தங்கை தான் எனத்தெரியாமல் நானும் ரெங்குவுடன் அவர்கள் வீட்டிற்கு போய் அப்பாவியாக மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, ரெங்கு அவளுக்கு ACS படிக்கலாமா என உபதேசம் செய்துகொண்டிருந்தான். (ACS பண்ணினாளோ இல்லியோ அடுத்த சில வருடங்களில் ரெங்கு அவளை கல்யாணம் பண்ணினான்). எனக்கு 92இல். அடுத்தடுத்து திருமணமாகி எல்லோரும் சட்டென பறந்தோம். அத்துடன் செம்பூர் வாசம் முடிந்தது.
சென்ற மாதம் முரளியிடமிருந்து குறுஞ்செய்தி. எப்படியோ 28 வருடங்கள்
கழித்து என்னையும் ஶ்ரீராமையும் கண்டுபிடித்து விட்டான். பெண்ணுக்கு கல்யாணமாம். அடுத்த சில நாட்களில் மதராஸ் உட்லண்ட்ஸில் இரண்டு நாள் தங்கியிருந்தபோது மூவரும் சந்தித்தோம். நரைமுடி, வழுக்கை, ஹேர்டை போன்ற சில சாமாச்சாரங்களை தவிர எந்தவித மாற்றமுமில்லாமல் அதே முக்கா பேண்ட்டுடன் 28 வருடங்கள் கழித்து சந்தித்தோம். ஶ்ரீகிருஷ்ணாவில் காபியுடன் அரட்டை.. ‘அவன் என்ன பண்றான்.. இவன் என்ன பண்றான்’ என பழைய நண்பர்களைப்பற்றிய விசாரிப்புகள், மறந்து போன கெட்ட வார்த்தைகள்.. அந்த காலத்தில் அடித்த சைட்கள், விட்ட ஜொள்கள், கிச்சன் மேடையில் ஒரு காலை தூக்கி வைத்து சப்பாத்தி இட்ட துபேயின் துர்மரணம், மறக்க முடியாத பழைய சம்பவங்கள்.. தோளுக்கு மேல் வளர்ந்த பையன்களிடம் நண்பர்களை அறிமுகப்படுத்தி.. ஒரு மணி நேரத்திற்கும் மேல் அரட்டை...
நமக்கு நண்பர்கள் தானே வாழ்க்கையே!
சீதாபதி ஶ்ரீதர்

டைம்பாஸ் கதைகள்-3

ஷார்ஜா நகரம். விடியற்காலை 5 மணி. ‘ஸ்கிப் ரிமூவல்’ எனப்படும் குப்பை அள்ளும் கனரக எந்திர லாரிகள் சாலைகளில் இயங்கிக்கொண்டிருக்கும் நேரம். அல்வாஹ்தா சாலை காலிகட் கஃப்டீரியாவின் பரோட்டா மாஸ்டர் எண்ணெய் தெளித்து ஈரத்துணியில் மூடி வைத்திருந்த மைதா மாவு உருண்டைகளை காற்றில் சுழற்றி வீசி தேய்த்து ச்சொத்தென சூடான கல்லில் போட சட்டென 20,30 பரோட்டாக்கள் ரெடி.
சமோவர் ச்சாய் எனப்படும் பாய்லர் டீ அருந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக கடைக்குள் நுழைந்தார்கள். ஷார்ஜா மற்றும் துபாயில் பெரும்பாலும் அரபிகள் விரும்பும் ஜாஃப்ரா (குங்குமப்பூ) மற்றும் கரக் டீக்கடைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே நம்மூர் பாய்லர் டீக்கடைகள் மிக பிரசித்தி பெற்றவை. அல்ரவாபி பால் லாரியிலிருந்து லபான்(தயிர்) மற்றும் யோகர்ட்(கட்டித்தயிர்) ட்ரேக்களை இறக்கி வைத்த மலையாளி டிரைவர் ஒரு கட்டாஞ்சாய் அடித்தான். சோள எண்ணெய் டின்கள் இறக்கிய பாகிஸ்தானிய சேல்ஸ்மேன் சூடான பரோட்டாவை சுருட்டி டீயில் முக்கி சாப்பிட்டு கல்லாவில் 6 திர்ஹாமை வைத்துவிட்டு மால்ப்ரோ பத்தவைத்தபடி மிட்சுபிஷி வேனில் கிளம்பினான்.
உளுந்நு வடா, உல்லி வடா, உண்டாம் பொறி, பழம்பொறி, எல அடா, சுகியன் என மஞ்சள் மஞ்சளாக சுடச்சுட பக்ஷ்ணங்கள் தயாராகி கடை வாசல் கண்ணாடி கூண்டில் வைக்கப்பட அடுத்த ஓரிரு மணி நேரத்தில் எண்ணை ஊறிய செய்தித்தாள் மட்டுமே மிஞ்சும். பாசுமதி அரிசி, ரெயின்போ பால் டின், டிஷ்யூ டப்பா, தக்காளி விழுது, மினரல் தண்ணீர் பாட்டில், ஈஸ்டர்ன் காரப்பொடி என மளிகை சாமான்கள் சப்ளை செய்யும் கம்பெனி சேல்ஸ்மேன்கள் மற்றும் கட்டுமான தொழிலாளிகளை நம்பி இயங்கும் உணவகம் அது. இட்லி, தோசை, பரோட்டா, ஆட்டா சப்பாத்தி, பாலப்பம், பத்திரி, புட்டு கடலகறி, பிரியாணி,குஸ்கா என இரவு 11 மணி வரை வியாபாரம் ஓடும்.
காலை 9 மணிக்கு கடைக்கு வந்து இன்றைய ஸ்பெஷல் போர்டில் ‘கேமல் பிரியாணி, மரவள்ளி கப்பா-மத்தி மீன் கறி, போ(B)ட்டி, ஆட்டின் தல’ என எழுதினான் ஷிபு, கடையின் முதலாளி. முப்பது வயதை எட்டியிருந்தாலும் சின்ன பையன் போல தெரிந்தான். சிவந்த ஒடிசலான தேகம். 20X 20 அடிக்கு சிறிய உணவகம், தடுப்பிற்க்கப்பால் அடுக்களையில் மூன்று ஃப்ரீ விசா லேபரர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தினான் ஷிபு.
12ஆம் வகுப்பிற்குப்பின் மேற்படிப்பு இல்லாமல் ஐக்கிய அரபு குடியரசு (UAE) வந்த ஷிபு அங்குமிங்கும் வேன் சேல்ஸ் மேனாக இருந்து விட்டு இந்த உணவகத்தை ஆரம்பித்து கடந்த ஆறேழு வருடத்தில் ஓரளவு முன்னுக்கு வந்தவன். கலியாணம் செய்துகொள்ள அம்மா வற்புறுத்தியும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தான் சாபுவை சந்திக்கும் வரை.
யார் இந்த சாபு!
துபாய் ஜுமேய்ரா கடற்கரை பகுதியில் 20 வருடங்களுக்கு முன் சின்ன கீத்துக்கொட்டாயில் அவன் வறுத்து விற்கும் மீன்களை கடைக்கு எதிரே டொயோட்டோ கிரெசிடாவில் உட்கார்ந்தபடியே சாப்பிடும் அரபி வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி, இன்று சுமார் 40 வாகனங்கள் அடைத்துக்கொண்டு நிற்க, உள்ளே 50 மற்றும் வெளியே 70 ஆள்கார் இருந்நு கழிக்க விசாலமான உணவகத்திற்கு அர்பாப் (முதலாளி) ஆனான் சாபு.
கஸ்டமர்கள் வரிசையில் இடித்துக்கொண்டு முன்னேறி கவுன்ட்டருக்கு அப்பால் பெரிய தாம்பாளத்திலிருக்கும் மீன்களை தேர்வு செய்து பணம் கொடுத்து விட்டு டிவி திரையில் தெரியும் டோக்கன் நம்பருக்காக இருக்கையில் காத்திருக்க, கத்தியால் அங்கங்கே கோடு கிழித்து மசாலை தடவிய, குறைந்தது இரண்டு முழ நீளம் கொண்ட ஹமூர், ஷாரி, சாஃபி மீன்கள் உடனடியாக நீச்சல் குளம் போன்ற ராட்சத கடாயில் கொதிக்கும் எண்ணெயில் செல்லமாக இறக்கப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் நீர்மூழ்கி கப்பல் போல வெளியே எடுக்கப்பட்டு, எலுமிச்சை மற்றும் கிரீன் சாலட் படுக்கையில் கிடத்தி மேசைகளுக்கு போக, ஷார்ஜா, உம்அல் குய்ன், அல் அய்ன், ராசல் கைமா, அபுதாபி பக்கமிருந்து லெக்சஸ் மற்றும் லாண்ட் க்ரூசரில் வரும் எமராட்டிகள், துருக்கிய, சிரிய, லெபனீய அரேபியர்கள், இந்தியர்கள் மற்றும் நெஞ்சுக்கு மேல் இறுக்கிக்கட்டிய குட்டை பாவாடையுடன் வரும் வெள்ளைக்கார யுவதிகள் எல்லோரும் டிஷ்யூ பேப்பரில் மூக்கை துடைத்துக்கொண்டு, பெப்சி கோக்குடன் முள் கரண்டியால் குத்தி எடுத்து கார மீனை சுவைப்பார்கள். கூடவே கேரள மைதா பரோட்டா மற்றும் மீன் குழம்பு. மாரினேட் செய்யப்பட்ட இறால் மீன்களை இரண்டு ஜல்லிக்கரண்டிகளால் அள்ளி எண்ணெயில் வீசி வறுத்து கிலோ 150 திர்ஹாமுக்கு (சுமார் ரூ 3000) விற்க, மலையாளி சாபுவின் கல்லா அரபிகளாலும் ஐரோப்பியர்களாலும் நிரம்பி வழிந்தது.
கேரள வடகராவில் பெரிய நவீன மங்களூர் ஓடுகள் கொண்ட வீடுகளையும் நிலங்களையும் வளைத்துப்போட்டு பெரும்புள்ளியான சாபு வீட்டு வாசலில் தேர்தல் நிதி கேட்டு அனைத்து கட்சிகளும் நில்குந்நது தாங்ஙள் அறியோ?
காலிகட் கஃப்டீரியா ஷிபுவும் ஃபிஷ் ஃப்ரை சாபுவும் சந்தித்தது தற்செயலாக. பத்தனம்திட்டாவில் ஒரு கலியாண வைபவத்தில் சந்தித்த போது இருவரும் ஷார்ஜா/துபாயில் இருப்பது தெரிந்து கொண்டார்கள். தத்தம் வியாபாரத்தைப்பற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது ‘சேட்டா! ஈ போட்டோவில் யாரானு... ஓர்மையுண்டோ?’ என பழைய ஆல்பத்தை சாபுவிடம் ஓடி வந்து காட்டிய அந்த பெண்ணை ஷிபு பார்த்த மாத்திரத்தில் சட்டென வியர்த்தான்.
வாளை மீன் போல சீராக வளைத்து த்ரெட்டிங் செய்யப்பட்ட புருவங்கள். இயற்கையிலேயே அடர்த்தியான கண் இமை முடிகள், ஓரளவு தடித்த சுண்டுகளால் (அதரங்கள்) கழுத்திலிருக்கும் டாலரை அவள் கடித்துக்கொண்டே பேச எச்சிலை விழுங்கினான் ஷிபு. அந்தக்கால வனிதாவை நினைவுபடுத்தும் பொதக்கென உருவம். அவள் கட்டியிருந்த புசுபுசு புடவை அவளை மேலும் குண்டாக்கி காட்டியது. டங்ங்...கென அண்ணன் சாபு பக்கத்தில் பெஞ்ச்சில் உட்கார்ந்து ஷிபுவின் மனத்தையும் சேர்ந்து அதிர வைத்தாள். அந்த நொடியே ‘ஈ பெண்குட்டி எனிக்கானு!’ என முடிவு செய்தான் ஷிபு. சாபுவின் தங்கையாம். பெயர் ஷைனி. பெயரைப்போலவே மின்னித்தொலைத்து ஷிபுவை ஏகத்துக்கும் சித்ரவதை செய்தாள்.
பரோட்டாவுக்கு ஊறவைத்த மைதா போல மிருதுவான சருமம். ஆவியில் வேகமாக வைத்த மரவள்ளி கால்கள். விரல் நகங்களுக்கு சர்வ ஜாக்கிரதையாக பிசிறில்லாமல் லேசான பிங்க் கலர் பாலிஷ் இட்டிருந்ததை கவனித்த ஷிபு, இவளை இரு கைகளால் அப்படியே அலேக்காக தூக்கினால் எப்படியிருக்குமென கற்பனை செய்து தன்னையுமறியாமல் சிரிப்பதை ஷைனி மட்டுமல்ல அவளது அண்ணன் சாபுவும் பார்த்தான்.
கலியாணமே வேண்டாமென தள்ளிப்போட்ட ஷிபுவா உடனே திருமணம் வேண்டுமென்கிறானென அம்மை வியந்தாள். கிறுஸ்துவப்பெண்ணாயிற்றே..ஏற்றுக்கொள்வார்களா என இவர்கள் யோசிக்க, இந்துவா! வேணாம்ப்பா! என்றது மற்ற தரப்பு. முடிவு எடுக்கத்தெரியாத சேஃபர் சைட் உறவினர்கள் சிலர் ‘பாத்து யோசிச்சு முடிவு எடுங்க’ என அட்வைஸ் (?) கொடுத்து ஒதுங்கிக்கொண்டார்கள்.
ஷைனி படித்தவள், கொல்லஞ்சேரி செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் உதவி பேராசிரியை. தன் ஒரே தங்கைக்கு படித்த பையன் தான் வேண்டுமென்று சாபு கட்டன்ரைட்டாக சொன்னது ஷிபுவிற்கு ஏமாற்றத்தை அளித்தாலும் துபாயில் அவனை சந்திக்கும்போதெல்லாம் பெண் கேட்டு ஷிபு நச்சரிக்க ஆரம்பித்தான். ‘ஏம்ப்பா! அவனும் உன்னை மாதிரி ஹோட்டல் வச்சி நடத்தறான். நல்லா போய்ட்டிருக்கு! உந்தங்கைய அவனுக்கு கொடுத்தா என்ன?’ என மற்ற நண்பர்கள் சொல்லியும் சாபு மறுத்தான்.
‘வளைகுடாவுல ஹோட்டல் தொழில் ஓரளவு லாபகரமாக இருந்தாலும் நிரந்தர வருமானம் என சொல்ல முடியாது ரவியட்டா! .. தவிர அரசு விதிமுறைகள் அதிக கெடுபிடி.. வியாபாரத்தில் போட்டி.. திடீரென உணவு சுகாதாரத்துறையினரின் அதிரடி சோதனையில் சிறிய குறைகளிருந்தாலும் உரிமம் ரத்து.. நெறைய பிரச்னைகள் உண்டு.’ இந்த தொழில் செய்யும் பையனே வேண்டாமென தீர்க்கமாக சொல்லிவிட்டான் சாபு.
ஞாயிறன்று தேவாலயத்திற்கு வரும் படித்த இளம் ஜோடிகளை பார்க்கும் போதும், மாலை 6 மணிக்கு மேல் துபாய் பாலைவனம், ஜுமெய்ரா பீச், சினிமா என சுற்றும் குடும்பங்களின் சந்தோஷம், இரவு பன்னிரண்டு வரை உழைக்கும் ஹோட்டல்காரர்களுக்கு இல்லையென்பதை சாபு உணர்ந்தாலும், தானும் படிக்காததால் இத்தொழிலை விட்டுவிட முடியாமல் இருந்தான். வருமானம் குறைவாக இருந்தாலும் படித்த மாப்பிள்ளையே தங்கைக்கு பார்க்க வேண்டுமென்பதில் கறாராக இருந்தான். ஷிபு பொறுமை இழக்க ஆரம்பித்தான்.
முகநூலில் ஷிபுவின் நடவடிக்கைகள், போட்டோக்கள் என அவனைப்பற்றிய விபரங்களனைத்தும் கண்டறிந்த ஷைனியின் தோழிகள் ‘புள்ளி ஓக்கேயானு.. கொள்ளாம்’ என சிபாரிசு செய்ய, ஷைனியும் அவனை ஏற்றுக்கொள்ள இசைந்து, ஷிபுவின் அம்மா முயற்சி செய்தும் பயனில்லை. சாபு மட்டுமே இந்த கலியாணத்திற்கு குறுக்கே இருந்தான்.
சாபுவை காண ஒருநாள் இரவு 9 மணிக்கு உணவகத்திற்கு வந்த ஷிபு நேராக பின்கட்டிற்கு விரைந்தான். மீன்களை வெட்டிக்கொண்டிருந்த சாபுவிடம் மறுபடியும் கலியாண விஷயத்தைப் பற்றி பேச, சாபு வழக்கம்போல மறுக்க, வார்த்தை முற்றி சட்டென சாபுவிடமிருந்து கத்தியை பிடுங்கினான். நல்லவேளை கடை ஊழியர்கள் வந்து இருவரையும் விலக்கி, ஷிபு அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.
பின் குறிப்பு:
சாபு எதிர்பார்த்தபடியே ஒருநாள் சுகாதாரத்துறையினரின் அதிரடி சோதனையில் விதிமுறைக்கு மாறாக இருந்த ஏதோ ஒரு சிறு காரணத்திற்காக ஷிபுவின் கடை உரிமம் இரத்தானது. சாபுவிற்கு பெருத்த சந்தோஷம். இதை காரணம் காட்டி கல்யாணத்திற்கு மறுப்பு சொல்லிவிடலாம் என நிம்மதியாக சரிந்து உட்கார்ந்த மறு நிமிடம் தொலைபேசி.. உரிமம் ரத்தான மறுநாளே ஷிபுவும் ஷைனியும் திருமணம் செய்துகொண்டார்களாம்.

டைம் பாஸ் கதைகள்- 2

அலகாபாத் சிவில் லைன்ஸ்.. மேட்டுக்குடி மக்கள் நடமாடும் பகுதி. ஃபியட், ப்ளைமௌத், அம்பாசிடர் கார்களுக்கு நடுவே கோஹ்லி போட்டோ ஸ்டுடியோ முன் தன் பிரிமியர் பத்மினியிலிருந்து இறங்கிய ஷ்யாம் லால் ஆனந்த்துக்கு எழுபது வயதுக்குள் இருக்கும். சட்டைக்கு மேலே கையில்லா ஸ்வெட்டர் மற்றும் குளிருக்கான கம்பளி கோட் அவரை சற்று பெருத்து காட்டியது.
நகரில் புகழ் பெற்ற போட்டோ ஸ்டுடியோ அது. குறுகலான மரப்படிகளில் தும் தும் என சத்தத்துடன் மேலேறி வரும் வாடிக்கையாளர்கள். அங்கே வேலை செய்பவர்கள் ஏழெட்டு சிப்பந்திகள். எல்லா நாட்களிலும் கூட்டம் இருக்கும். லாகூரில் பிறந்து வளர்ந்த ஆனந்த் பிரிவினையின் போது கையில் சொற்பமான காசுடன் மனைவி கவுர் மற்றும் குட்டிப்பையன் கோவர்தன் லாலுடன் தில்லி ஓடிவந்தவர். பின் அலகாபாத் வந்து உழைத்து முன்னுக்கு வந்து ‘கோஹ்லி ஸ்டுடியோ’ துவங்கி கடந்த பதினைந்து வருடங்களில் நிறைய பணம் பார்த்தவர். மகன் கோவர்தன் லால் ஆனந்த் (36) கடை நிர்வாகம் பார்த்துக்கொள்பவர். அப்பா அருகே வந்தால் எழுந்து நிற்கும் அளவிற்கு மரியாதை.
நகரின் சற்று ஒதுக்குப்புறமான கம்பெனி கார்டன் அருகே தர்பாங்கா காலோனியில் ஆனந்த் குடும்பத்தாருக்கு பெரிய பங்களா. சிந்தி, பஞ்சாபி, பெங்காலி மற்றும் சீக்கியர்கள் வாழும் பகுதி. இரவு 9 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் குறைந்து பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய போலீசார் சாலையில் நிற்பார்கள். டப்டப் என புல்லெட்டில் வரும் பக்கத்து கிராமத்து டாக்கூர்கள் சால்வைக்குள் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியால் பட்பட் என யாரோ ஒரு எதிரியை சுட்டுத்தள்ளி விட்டு போகும் வழியில் கர்னல் கஞ்சில் பனார்ஸி பான் சாவகாசமாக வாங்கி சாப்பிட்டு விட்டு போவதும் அலகாபாத்தில் சகஜம்.
காலோனி மிட்டாய் கா துக்கான் வாசலில் எப்போதும் கூட்டம். மண்சட்டியிலிருந்து சாதக்கரண்டியால் கட்டித்தயிரை வெட்டி மட்காவில் வைத்து சூடான ஜிலேபியுடன் சேர்த்து கொடுப்பார்கள். சமோசா ச்சாய்யுடன் அது தான் காலை நாஷ்டா.
ஞாயிரன்று காலை 9 மணிக்கு ஆங்காங்கே பங்களா கேட்டுக்கு வெளியே மேலாடை இல்லா வெற்றுடம்புடன் விரித்துப்போட்ட நீண்ட கூந்தலில் கட்டித்தயிரை பூசி ஒரு மணி நேரம் சுள்ளென்ற வெயிலில் காய வைக்கும் சீக்கிய இளைஞர்களை பார்க்கலாம் (யப்பா! வேர்த்திருச்சா!). அடுத்த ஞாயிறு தலைக்குளியலுக்கு முன் அவர்கள் கிட்டப்போனால் கப்பு தான். டர்பனிலிருந்து வெளியே தொங்கும் முடியை கூரிய ஊசியால் சரட்டென உள்ளே தள்ளி ஊசியை டர்பனில் சொறுகிக்கொள்வார்கள் சீக்கிய ஆண்களுக்கு கூந்தல் பராமரிப்பு முக்கியம். நீண்ட தாடியை கழுத்தின் கீழ் சுருட்டி முடிச்சு போட்டு பசையை தடவி வைக்கும் இளைஞர்கள்.
மாலை ஏழு மணிக்கு பத்து எருமைகளை ஓட்டி வருவான் பால்காரன் லல்லன். ஆனந்த் வீட்டு வாசலில் வைத்து துணைக்கு ஒரு பையனுடன் பால் கறக்க ஆரம்பிக்க, அக்கம்பக்கத்தார் ஓவ்வொருவராக வந்து பால் வாங்கிக்கொண்டு போவார்கள். எருமை, பாலை கறக்க விடாமல் மடியை இறுக்கி பிடித்துக்கொள்ள, லல்லன் அதன் வாயை குறி பார்த்து மற்றொரு எருமையின் காம்பிலிருந்து பாலை சர்ரென பீய்ச்சி அடிக்க, ஆசையாக ஒரு வாய் பாலை குடித்ததும் எருமை தனது பாலை கறக்க விடும். எருமைகளுக்குள் அப்படியொரு அன்டர்ஸ்டான்டிங்.
அந்த பகுதியில் கோஹ்லி ஸ்டுடியொ ஆனந்த் குடும்பத்தார் வீடு மிகப்பிரபலம். அக்காள் மற்றும் மைத்துனருடன் தங்கிக்கொண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்ஸி படிப்பு எனக்கு. ஆனந்த் குடும்பத்தாரின் பங்களாவின் மாடியில் ஒரு போர்ஷனில் வாடகைக்கு இருந்தோம்.
68 வயது வெள்ளை சல்வார் அம்மா கவுர் தான் குடும்ப நிர்வாகம் எல்லாமே. பாதி நேரம் பஞ்சாபி கலந்த ஹிந்தியில் ‘மாடியில் தொட்டி தண்ணி காலியாயிடுச்சு.. மோட்டரை போடு’ என அவர் கத்துவது மேலே எங்களுக்கு கேட்கும். ( ) போல வளைந்த கால்களுடன் அவர் ஆடி நடந்தாலும் ஓயாமல் வேலை செய்யக்கூடியவர். ஏலம் கலந்த தேநீர் மற்றும் கோதுமை பிஸ்கோத்து தட்டுகளை கொண்டு போய் தோட்டத்தில் வைத்து ‘ஆஜாவ் சப்லோக்’ என குரல் கொடுப்பார்.
நேபாளி சமையல்காரன் பகதூர் சப்பாத்தி மாவு பிசைந்து வைத்திருக்க, மதியம் பன்னிரண்டு மணி வாக்கில் சமையலறையில் நுழையும் மருமகள், மாவை உருட்டி நடுவே ஆலு, லசூ(ன்) பூரணத்தை வைத்து மூடி தாராளமாக நெய் விட்டு சுட்ட கமகம வாசனை பராத்தாவை படுக்கை அறைக்கு கொண்டு செல்ல அங்கே தான் கட்டிலில் அந்த 7 வயது பையன் படுத்திருப்பான். அந்த வீட்டின் கடைக்குட்டி பிட்டூ. ஸ்டுடியோ விட்டு வந்ததும் தாத்தா ஆனந்த் நேராக பேரன் அருகில் கட்டிலில் உட்கார்ந்து தான் ஃபர்சான் (கார வகைகள்) மற்றும் சாய் சாப்பிடுவார். அப்பாவும் அப்படியே.
முதல் நாள் தான் பிட்டுவை கல்கத்தாவிலருந்து டிரெயினில் கூட்டி வந்தார்கள். கடந்த ஒரு வருடமாக அவனது சிறுநீரக கோளாறு சிகிச்சையால் இடிந்து போன குடும்பம் அது. மாதமொரு முறை டயாலிசிஸ் செய்து நோய் முற்றிலும் குணமடைய, தயாராக அடுத்த அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. ரீனல் ஆன்சைகோடோமா (renal oncycotoma) எனப்படும் சிறிய கட்டி திடீரென முளைத்து ஆனந்த் குடும்பத்தையே ஸ்தம்பிக்கச்செய்தது.
ஸ்டுடியோவில் பெரிய சைஸில் இருந்து சின்ன சைஸ் வரை மாடல் போட்டோக்கள் எல்லாமே குட்டிப்பையன் பிட்டூவின் போட்டோக்கள் தான். வெள்ளை வெளேரென வெண்ணைக்கட்டி மாதிரி இருக்கும் பிட்டூவின் உடல் நிலை எப்போதும் கவலைக்கிடம் தான். பிட்டூவின் அம்மா எப்போதோ முகத்தில் சிரிப்பை இழந்திருந்தாள்.
பிட்டூவிற்கு திடீரென முளைத்த சிறுநீரக கட்டிக்கான சோதனைகள் செய்ய மறுபடியும் கல்கத்தா பிரயாணம். புற்று நோயாக இருக்கக்கூடாதென ராம்பாக் ஹனுமான்ஜி மத்திரில் வேண்டிக்கொண்டார்கள். கால்கா அல்லது தின்சுக்கியா மெயிலில் பையனுடன் அம்மா கிளம்பிப்போக, அப்பா,தாத்தா பாட்டி மூவரும் தினமும் கல்கத்தாவுக்கு டிரங்க்கால் போட்டு விசாரிப்பது தொடர்ந்தது.
அன்று காலையிலிருந்தே மகன் ஆனந்த் நிலைகொள்ளாமல் தவித்தார். கல்கத்தாவிலிருந்து போன் வரவில்லை. ஸ்டுடியோ கிளம்பி போகும்போது ஹனுமான் ச்சாலிஸா சொல்லியவாறே காரை செலுத்த அப்பா அமைதியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். பிட்டூவின் எல்லா மருத்துவ சோதனைகளிலும் பாசிடிவ்... பாசிடிவ் என்ற முடிவுகளை படித்து படித்து ‘பாசிடிவ்’ என்ற வார்த்தையே ஆனந்த் குடும்பத்தை கலவரப்படுத்தியிருந்தது.
வண்டியை நிறுத்தி விட்டு அப்பாவும் மகனும் ஸ்டுடியோவை நெருங்க தூரத்தில் கடைப்பையன் வெளியே வந்துகொண்டிருந்தான். கையில் சின்ன மூட்டை நிறைய போட்டோ ஃப்ளிம் சுருள்கள். ஏதோ நினைவுடன் ‘என்னப்பா அது!’ என ஆனந்த் கேட்க, பையன் ‘நெகடிவ்.. பாபுஜி!’ என கத்தினான்.
ஆனந்த்தின் முகம் மலர, மேலே போன் அடிக்கும் சத்தம்.

டைம் பாஸ் கதைகள்-1

Image may contain: drawing
பம்பாய் மெரைன் டிரைவை அடுத்து சர்னி ரோடு பகுதி.. சௌபாத்தி எனும் கடற்கரையை ஒட்டி பேருந்து நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் மிகப்பழைய ஐந்தடுக்கு மாடி கட்டிடம். பழங்கால லிஃப்ட்டின் கிரீஸ் பூசப்பட்ட கொலாப்சபிள் கேட்டை விரலால் தொட்டிழுத்து வெண்ணை போல அது வழுக்கிக்கொண்டு மூடிக்கொள்ள ஐந்தாம் மாடி சென்றேன்.
எங்கள் அலுவலகம் அது. உள்ளே நுழையும்போதே ரெமிங்டன், ஃபேசிட் டைப்ரைட்டர்கள் சத்தம். சுவரே தெரியாத அளவிற்கு மர அலமாரிகளில் ஃபைல்கள். பெரிய வட்ட வடிவ ஹாலின் நடுவே டைப்பிஸ்டுகள், கிளார்க் மற்றும் அக்கவுண்டன்ட்கள்..நடுவே நானும். சுற்றிலுமுள்ள தனித்தனி அறைகளில் நிர்வாக இயக்குநர் கேஜர்வானி மற்றும் இதர இயக்குநர்கள், சீனியர் வைஸ் பிரெசிடென்ட்கள், என்னுடைய பாஸ் ஜோஷி உட்பட.
அது ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம். தானே பகுதி வாக்லே எஸ்டேட்டில் எரெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரித்து இந்தியா முழுவதுமுள்ள தங்கள் துணை நிறுவனங்களுக்கு அனுப்பி விற்பனை செய்பவர்கள். பெரும் லாபம் ஈட்டிக்கொண்டு அடுத்த சில வருடங்களில் காணாமல் போன நிறுவனம்.
எம்.டி கேஜர்வானியோ மற்ற இயக்குநர்களோ யாரும் அதிகம் பேசமாட்டார்கள். மிடுக்காக உடையணிந்து தலை முடியை செல்லமாக கோதிவிட்டபடி அவர் பேசும் ஸ்டைலை ரசிப்பேன். மற்ற இயக்குநர்களான பாண்டே, ஜோக்ளேகர், யாதவ் எல்லோருமே அங்கே பங்குதாரர்கள். நம்மை விரட்டி வேலை வாங்குவார்கள். அதிலும் என் பாஸ் ஜோஷி முசுடு. மாங்கு மாங்கு என நான் வேலை செய்தாலும் தினம் இரண்டு முறையாவது அவரிடம் டோஸ் வாங்குவேன்.
வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள், விற்பனை வரி இன்ஸ்பெக்டர்கள் என தினமும் வருபவர்கள் ஏராளம். பதினோறு மணி வாக்கில் கவிழ்த்த டபரா காபியை கொண்டு வரும் ஷெட்டிக்காக காத்திருப்போம். மதியம் நாலைந்து பேர் சேர்ந்து உட்கார்ந்து டிபன் டப்பாவை திறந்து சாப்பிடுவோம். மதிய உணவின்போதும் அதிகம் சத்தம் போட்டு அரட்டை அடிக்க முடியாது. எம்.டி கேஜர்வானி ஒன்றும் சொல்லமாட்டாரென்றாலும் பாண்டேக்கள் செய்யும் களேபரம் தான் அதிகம்.
திடீரென ஒரு அக்கவுண்டன்ட்டை கூப்பிட்டு ஒரே நாள் நோட்டீஸில் வீட்டிற்கு அனுப்புவது, காலையில் நன்றாக பேசிக்கொண்டிருந்த ஜோக்ளேகர் மாலை மலையாளி டைப்பிஸ்டை ஒருவனை கூப்பிட்டு ‘நீ அதிகம் பேசுகிறாய். உன் டைப்ரைட்ரிலிருந்து சத்தம் வருவதில்லை. இன்னியோடு கடைசி நாள் உனக்கு’ என சொல்லி அனுப்புவது ரொம்ப சாதாரணம். அதற்குப்பின் வேலையே இல்லையென்றாலும் வெறும் டைப்ரைட்டரை டகடகவென தட்டி வேலையை தக்க வைத்துக்கொண்ட சேட்டன்கள் பலர்.
சரி.. பெண்கள்..காதல் என ஏதாவது? இல்லாமலா பின்னே! பஞ்சாபி ரிஸப்ஷனிஸ்ட் நடாஷா எழுத்து குறுக்கே இங்குமங்கும் நடந்தால் மற்ற பெண்களே அவளைப்பார்த்தால் பெருமூச்சு விடுவார்கள். எங்கோ மூலையில் டைப்படித்துக்கொண்டிருக்கும் டைப்பிஸ்ட் உன்னி எம்பி எம்பி நடாஷாவை பார்த்துக் கொண்டே பக்கத்திலிருக்கும் டீ கிளாசை தட்டி கீழே கொட்டி, ஜோஷியிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொள்வான். யார் எந்த பெண்ணை பார்த்து வழிகிறார்கள் என்பது கேபினிலிருக்கும் சீனியர்களுக்கு உடனை தெரிவிக்கும் புல்லுருவிகள் நிறைய உண்டு. தக்க பலனும் உடனே கிட்டும்.
டைப்பிஸ்ட் உன்னி தன் மேசை டிராயரில் இருபதுக்கும் மேற்பட்ட செக் புத்தகங்கள் வைத்திருப்பான். தினமும் தில்லி, இந்தோர், கல்கத்தா கிளை அலுவலகங்களுக்கு பெரிய தொகைக்கான காசோலைகளை டைப் செய்து எம்.டி. கேஜர்வானியிடம் அனுப்பி அவர் அலட்சியமாக கையொப்பம் செய்து முடித்ததும் கொரியரில் அனுப்புவது அவன் வேலை. கிளை அலுவலகங்களிடமிருந்து தினமும் அங்காடி சர்வீஸில் ஸ்டேட்மென்ட்டுகள் வருவதும், அக்கவுன்டன்ட்கள் கணக்கு வழக்கை சரிபார்த்துக்கொள்வதும் தினமும் நடக்கும் சமாச்சாரங்கள்.
வெளியே ‘கண்பதி பப்பா மோரியா’ ஊர்வலம் சத்தம் கேட்டு ஆபிஸ் பால்கனிக்கு ஓடாமல் இருந்தாலோ, அருண் காவ்லி-சோட்டா ஷகில்- தாவுத் இப்ராஹிம் நிழல் உலக தாதாக்களின் கேங் வார் செய்திகள் பற்றி விவாதிக்காமலிருந்தாலோ, பாம்பே சென்ட்ரல்/கிராண்ட் ரோடு பகுதி விபச்சார விடுதிக்குள் இன்ஸ்பெக்டர் அர்விந்த் இனாம்தார் அதிரடியாக நுழைந்து அழகிகளை கைது செய்த செய்தியை ஆஃப்டர்நூன் பத்திரிக்கையில் படிக்கும்போது ‘ச்சே! எப்பவும் அர்விந்த் இனாம்தார் போட்டோவையே போட்றான்.. அந்த அழகிகள் போட்டோவை போடக்கூடாதா!’ என நினைக்கவில்லையென்றால் பம்பாயில் வாழத்தகுதியில்லாத பிரம்மச்சாரி அவன் எனக்கொள்க.
இப்படியாக போய்க்கொட்டிருந்த கம்பெனியில் தான் அந்த ஃப்ராடு நடந்தது. உன்னி இரண்டு மூன்று நாட்கள் ஆபிஸுக்கு வரவில்லை. எம்.டி அறையில் சத்தம். பாண்டே மற்றும் ஜோக்ளேக்கர் எம்.டி அறையிலிருந்து கலவரத்துடன் வியர்த்த முகத்துடன் வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.
தினமும் எம்.டியிடம் வங்கி செக்குகளில் கையெழுத்து வாங்கும் உன்னி, நடுவே வேறொரு பேருக்கான ஓரிரண்டு காசோலைகளை திணித்து அந்த தொகையை தனியாக லவட்டிக்கொண்டான். சுமார் ஒன்பது லட்சத்துக்கும் மேல். டோம்பிவிலியில் 500 சதுரடிக்கு ஐந்தாறு ஃப்ளாட்டுகள் வாங்கலாம்.
அடுத்த சில நாட்களில் மராட்டிய போலீசார் உள்ளங்கையில் புகையிலை தேய்த்தவாறு விசாரணை நடத்த ஆபிஸே திமிலோகப்பட்டது. கவனக்குறைவை காரணம் காட்டி என் பாஸ் ஜோஷியை வேலையிலிருந்து தூக்கினார் எம்.டி கேஜர்வானி. ‘பணத்தை கேரளாவில் யாருக்கோ கடனாக கொடுத்துட்டேன். அவசரத்தேவைக்காக பணத்தை கையாடி இப்போது பைசா இல்லை என்னிடம் என சாதித்து கையெயெடுத்து கும்பிட்ட உன்னியின் கையில் புதிய டைட்டன் வாட்ச்சு.
எப்படி அவன் பணத்தை அடித்திருக்கக்கூடும் என எம்.டி மற்றும் மற்ற இயக்குநர்களுக்கு ஆடிட்டர்கள் டெமோ கொடுத்துக்கொண்டிருக்க, இன்னும் எப்படியெல்லாம் அடிக்க முடியும்
என்பதையும் சிலர் தெரிந்துகொண்டார்கள். கம்பெனி வக்கீல் காம்தார் உள்ளே நுழைந்தார். உன்னியை கஸ்டடியில் எடுத்து அடுத்த பதினைந்து நாளில் அவன் பெயிலில் வந்த கையோடு வக்கீல் நாயருடன் கோர்ட்டுக்கு வர ஆரம்பித்தான். ஓரிரு வருடங்கள் ஓடி அந்த சம்பவத்தை எல்லோரும் மறக்க ஆரம்பித்தோம்.
கஞ்சூர்மார்க் பகுதியில் கௌரி பார் & ரெஸ்ட்ருவன்ட் எனும் சாராய விடுதியின் இருட்டான ஒரு மூலையில் கல்யாணி பியரை உறிஞ்சி மேலுதட்டிலிருந்த நுரையை துடைத்துக்கோண்டே காலடியிலிருந்த லெதர் பையிலிருந்து நோட்டுக்கட்டுக்களை வெளியே எடுத்த உன்னி எதிரே இருந்த நபரிடம் கொடுக்க அடுத்த சில நாட்களில் டோம்பிவிலி வெஸ்ட்டில் 500 சதுர அடி ஃப்ளாட் ஒன்றுக்கு சொந்தக்காரனானான் உன்னி.
அதுசரி! உன்னியோட ஃப்ளாட் ரெண்டு லட்சத்துக்குள் தானே! மீதி ஏழெட்டு லட்சம்? யாருக்கு தெரியும்! காட்கோபர் பகுதியில் முப்பது லட்சம் மதிப்புள்ள ஃப்ளாட் ஒன்றுக்கு திருமதி. நடாஷா கேஜர்வானி பெயரில் அட்வான்ஸ் தொகை கொடுக்கப்போகும் எம்.டியைத்தான் கேட்க வேண்டும்.

Monday, June 3, 2019

ஹெல்சிங்க்கி (ஃபின்லாந்து)


பஹ்ரைனிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரம் நான்கு மணி நேரம், பின் அங்கிருந்து நான்கு மணி நேர பயணத்திற்குப்பின் மதியம் 12 மணிக்கு ஹெல்சிங்க்கி விமானத்தை விட்டு இறங்கும் போது வெயிலில்லா இதமான குளிர். கடவுச்சீட்டு கட்டுப்பாடு சம்பிரதாயங்கள் முடிந்து சாமான்களை எடுக்கும் பகுதி வந்து, டெலிநோர் எனும் உள்ளூர் சிம் கார்டு சுமார் முப்பது யூரோக்களுக்கு வாங்கினோம். அட்ரஸ் ப்ரூஃப், அப்ளிகேஷன் என எதுவும் தேவையில்லாமல் ஏர்போர்ட் சூப்பர் மார்க்கெட்டில் சூயிங்கம் போல டெலிபோன் சிப்புகளை விற்றுக்கொண்டிருந்தார்கள்.
கார்டு போட்ட அடுத்த நொடி ‘ஶ்ரீனி! நீ எங்க இருக்கே? பெட்டி கெடைச்சுதா? நா உன்னை பாத்துட்டேன். அப்படியே இடது பக்கம் திரும்பு. Fat burger கடையான்ட நிக்கிறேன் பார்.. ’ என காட்டுக்கத்தலுடன் போனில் பேசி ஒரு வழியாக எல்லோரும் வெளியே வந்தோம். நாங்கள் 22 பேர். பஹ்ரைன் சி.ஏ. சாப்டர் அங்கத்தினர்கள். வருடமொரு முறை இதுபோல உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து செல்லும் உல்லாச பயணம் உண்டு.
‘பஹ்ரைன் சீ.ஏ. சாப்டர்’ பதாகையுடன் எங்களுக்காக காத்திருந்த மங்களூர் காரர் டூர் மானேஜர் சில்வெஸ்டர் எங்களை ஸ்கானியா பஸ்ஸில் ஏற்றினார். பஸ் ஓட்டுனர் எம்ஜியார் போல ரோஸ் கலர். ஃபின்லாந்தில் ஓட்டுனர்களுக்கு அதிக சம்பளமாம். அவரை காப்டன் எனத்தான் அழைக்க வேண்டுமாம். டூர் மானேஜரை விட அதிக அதிகாரம் காப்டனுக்குத்தானாம். டூர் போக தயார் செய்த பயணத்திட்டம் அவர் கையில். அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாதாம். பஸ் கிளம்பும் முன் கண்ணாடியில் எங்களை பார்க்கிறார். எல்லோரும் இருக்கையில் அமரும் வரை பஸ்ஸை கிளப்ப மாட்டாராம். ஓடும் பஸ்ஸில் நாம் நின்றுகொண்டிருந்தால் சடாரென ஓரம் கட்டி நிற்கிறார். தலையை திருப்பி சுத்தமான இங்கிலாந்து ஆங்கிலத்தில் 500 யூரோக்கள் (அதாவது ரூ43,000-மூன்று பூஜ்ஜியம் ) அபராதம்.. ஜாக்கிரதை! என மிரட்டுகிறார்.
வெளியே வோக்ஸ்வாகன், ஔடி, ஓப்பல் ஆஸ்ட்ரா, பென்ஸ் கார்கள். ஏராளமான சைக்கிள்கள். நகரமே சோம்பல் முறித்து இயங்கிக்கொண்டிருக்க, சாலைகளில் போக்குவரத்து அதிகம் இல்லை. அடுத்து ஒரு இந்தியன் உணவகத்தில் மதிய உணவு தயார் செய்து வைத்திருந்தார்கள். அருமையான வட இந்திய உணவுடன் மாம்பழ லஸ்ஸி பருகி ஓஹோஹோ என சத்தம் போட்டு சிரித்து, தோளில் அடித்து, இரண்டு மணிக்கு கிளம்ப வேண்டும் என்ற டூர் மானேஜரை இரண்டே முக்கால் வரை இழுத்தடித்து கிளம்பும்போது ‘மசாலா சாய் கிடைக்குமா?’ என கேட்டு அவர் இரத்த அழுத்தத்தை 130க்கு மேல் கூட்டி பஸ் ஏறும்போது நமது கைடு ஓருவர் எங்களை வரவேற்றார்.
‘என் பெயர் கார்னேலியா. நான் உங்கள் கைடு’ என அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த பெண்மணியை சற்று தள்ளி நின்று அசால்ட்டாக பார்த்தால் 35 வயது. கிட்டப்போய் உற்று பார்த்தால் 45 வயது. அவர் தலை முடி, முக சுறுக்கங்கள், மஞ்சள் பல், அவரது குடும்பம் என கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால் அவருக்கு 55 வயது எனத்தெரியும்.
ஃபின்லாந்து நாட்டின் பெருமைகளை சற்று ஆனவத்துடன் விளக்கினார். சீரியசாக வேறு இருந்தார். இது நமக்கு சரிப்பட்டு வராது என அவரையே கலாய்க்க ஆரம்பித்தோம். மெல்ல ‘இந்த ஊர் பெண்கள் எப்பிடி? காதல் கல்யாணங்கள் உண்டா?’ போன்ற சில கேள்விகளை அவர் முன் போட்டு அவர் முகத்தை பிரகாசமாக்கினோம். அம்மனி குஷியாகி எங்களுடன் அரட்டையே அடிக்க ஆரம்பித்து விட்டார்.
உலகிலேயே சுத்தமான காற்றுள்ள நாடாம். 70 சதம் காடுகளாம். மக்கள் தொகை சுமார் 5 மில்லியன் தானாம். அதை இன்னும் பெருக்க அரசாங்கம் முயல்கிறதாம். ஆண்களின் சராசரி வயது 74 மற்றும் பெண்களின் சராசரி வயது 84ஆம். எப்படிய்யா மக்கள் தொகை பெருகும் 😃! ஒரு குடும்பத்தில் சராசரியாக 1.7 குழந்தைகள் தானாம். அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் பாடுபடுகிறதாம் (அரசாங்கம் பாடு பட்டா போதுமா!). சாயங்காலம் அஞ்சாறு மணிக்கெல்லாம் கடைகளை அடைத்து, சீக்கிரம் சாப்ட்டு சிவப்பு ஒயின் குடித்து சட்டுன்னு தூங்கி விடுவார்களாம். சுத்தம்! சமீபத்தில் ஜனாதிபதியே குழந்தை பெற்றுக்கொண்டாராம். ஒரு நாளைக்கு இத்தினி *த்துணி (டயாபர்) மாத்தினார் என பத்திரிகைகள் பெருமையாக எழுதுகிறார்கள். ஆக எதிர் காலத்திற்கு இளைஞர்கள் தேவை என்ற கவலையாம் அவர்களுக்கு.
சொகுசு பேருந்தில் நகரை சுற்றிக்காட்டியபடியே நிறைய சுவாரசியமான தகவல்களை கொடுத்துக்கொண்டிருந்தார் நம் கைடு.
நடுவே அவரிடம் ‘அது சரி கரோலினா!’ என ஆரம்பித்த என்னை தடுத்து ‘என் பெயர் கார்னேலியா! கரோலினா அல்ல. எங்கள் பெயரை மாற்றி கூப்பிட வேண்டாம் புரிந்ததா?’ என வெடுக்கென கேட்டார். அங்கங்கே வண்டியை நிறுத்தி தேவாலயங்களையும் அருங்காட்சியக்கங்களையும் காட்டினார். வழி நெடுக புராதன கட்டிடங்கள் பார்க்க பிரமிப்பாக இருந்தன.
பெரிய தேவாலயம் ஒன்றில் நுழைந்தோம். உள்ளே ஜெபம் செய்ய நீண்ட பெஞ்சுகள். ஓரத்தில் ஞான ஒளி சிவாஜி மாதிரி ஒருத்தர் மீசையுடன் பியானோ வாசிக்க, பக்கத்தில் இரண்டு பெண்கள் வயலின். மைக், ஸ்பீக்கர் என எதுவும் இல்லாமல் அந்த அரங்கமே மிதமான ஒலியில் மிதக்க காதுகளுக்கு மிக இனிமையான இசை. ‘தலையை அப்பிடியே தூக்கி உட்கூரையை பாருங்க!’ என கார்னேலியா சொல்ல அன்னாந்து பார்த்தால் கூரை முழுவதும் செம்பாலான கம்பிகளை வரிவரியாக பொருத்தியிருந்தார்கள். அதனால் ஸ்பீக்கர் இல்லாமலேயே அரங்கம் முழுவதும் ஒலி. கம்பிகள் முழுவதும் சேர்த்தால் மொத்தம் 22 கி.மீ. நீளமாம். அசந்து போனோம். வட்டமாக நின்று கூரையுடன் படம் எடுத்துக்கொண்டோம். (படம் பார்க்க!)
வெளியே வந்து பஸ்ஸில் அமர்ந்தவுடன் கார்னேலியா தொடர்ந்தார். பெண்களுக்கு பிரசவ விடுப்பு சம்பளத்துடன் 9 மாதங்களாம். அப்பாடி! பிரசவம் முடிந்து குழந்தை பராமரிக்கவும் அரசாங்கம் பணம் கொடுக்கிறதாம். குழந்தையை பேபி சிட்டிங்கில் விட்டால் செலவு அரசாங்கத்தினுடையதாம். ‘வேணாங்க! நா வீட்லயே குழந்தையை பாத்துக்கறேனே!’ என்றாலும் ‘இந்தா அதற்கும் அலவன்ஸ்’ என பணம் கொடுப்பார்களாம். அதுவும் குழந்தையின் 17 வயது வரை.
52 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அளித்தார். ‘ஏன்.. என்னா பிரச்னை இங்க?’ எனக்கேட்டோம். ‘ பொதுவாக இங்கே பெண்கள் ஆண்களை நம்பி இல்லை. தாங்களாகவே சம்பாதிக்க வேண்டும்.. சுதந்திரமாகவும் திடமாகவும் முடிவு எடுப்பது.. ஆண்களின் அடக்குமுறையை எதிர்ப்பது, ( அதனால் தான் நிறைய ஆண்கள் பஸ் ஒட்டிக்கொண்டு தாமதமாக வீட்டிற்கு போகிறார்களா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டோம்.. வம்பு!) இதனால் தான் பாதி திருமணங்கள் முறிந்து விடுகின்றன’ என விளக்கினார்.
‘அப்ப குழந்தைகள்’
‘ அதுங்களை இரண்டு பேரில் யாராவது ஒருத்தர் பார்த்துக்கொள்ளலாம். இல்லையென்றால் அதற்கென காப்பகங்கள் உண்டு. அதற்கான மாதாந்திர தொகை ஆளுக்கு பாதி’
ஏதோ ஒரு பூங்கா சென்றோம். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
உலகிலேயே தரமான கல்வி ஃபின்லாந்தில் தானாம். வீட்டுப்பாடம் (ஹோம் வொர்க்) கிடையாதாம். குழந்தைகளின் மூளை பஞ்சு போல. அதை பத்திரமாக கையாள வேண்டும். கணிதப்பாடம் நிறைய உண்டாம் மூளை வளர்ச்சிக்கு. பாடத்திட்டத்தில் இசை அதிகமாம். 18இலிருந்து 28 வயதிற்குள் 6 மாதம் கட்டாய ராணுவ சேவை உண்டாம். சிறந்த மாணவர்களுக்கு இன்னும் ஒரு வருட ராணுவ சேவையை அதிகரித்தால் ஸ்வீட் எடுத்து கொண்டாடுகிறார்கள்.
கப்பல் கட்டுமான தொழிலில் சிறந்த நாடுகளில் ஒன்றாம். அதிலும் மலை போன்ற பனிக்கட்டிகளை உடைக்கும் ( ice breaker ships) கப்பல்கள் இங்கு பிரசித்தி பெற்றவையாம். 5 மீட்டர் தடிமனான பனிக்கட்டியை வடாம் போல நொறுக்கிச்செல்லுமாம். சொகுசு கப்பல்கள் (cruise) செய்து ஏராளமான ஏற்றுமதியாம்.
சுமார் 80 சதவீத மக்கள் லுத்ரன் என்ற வகையைச்சேர்ந்த கிருத்தவர்கள், 2% பிராடஸ்மென்ட் மற்றும் 1%க்கும் குறைவாக கத்தோலிக்கர்கள், மீதம் மற்ற மதத்தினராம்.
ஃபின்லாந்தில் நாங்கள் இருந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் மட்டுமே எங்களுடன் இருந்த கார்னேலியா ஊரை சுற்றிக்காட்டி நடுநடுவே பகிர்ந்து கொண்ட தகவல்கள் மேற்சொன்னவை.
ரொம்ப கண்டிப்பானவர் போலும். கணவர் எப்பிடி சமாளிக்கிறார் என தெரிந்து கொள்ள ஆவல் எனக்கு. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ‘சார் என்ன செய்யறார்’ எனக்கேட்டேன்.
‘பாலெரினாவுக்கும் ஓப்ராவுக்கும் வித்தியாசம் தெரியலை அவனுக்கு.’
‘சரிங்க. அது அவ்ளோ முக்கியமா? குழந்தைகளை பெருக்கனும்னு அரசாங்கம் சொல்லுது. நீங்க என்னமோ பாலெரினா, ஓப்ரானுகிட்டு!’ என கேட்க நினைத்து வாயை திறக்க எத்தனிக்கும்போது, மனைவி உஷா Usharani Sridhar என்னை தடுத்து ‘நூவ்வு கம்மட்ட உண்டு!’ என அதட்டினார் ( இந்தியா ஒன்னும் ஃபின்லாந்துக்கு குறைச்சல் இல்லை😃)
‘பாலெரினா ஒரு வகை நடனம். ஓப்ரா என்பது நடனத்துடன் பாடல் மற்றும் நாடகம் கூடியது. இது கூடவா தெரியலை அவனுக்கு.. சோம்பேறி ஓநாய்!’ (எங்களுக்கே இப்பத்தாங்க தெரிஞ்சது!)
‘இருக்கட்டும்ங்க.. சரி! அவரு என்ன பண்றாரு இப்ப ?’
‘யாருக்கு தெரியும்? நமக்கு பிறக்கும் குழந்தைகள் புத்திசாலியா இருக்கனும்னு எனக்கு ஆசை. ஆனா அது நடக்காது போலன்னு சொல்லி..’
‘சொல்லி?’
‘அந்த 52 சதவீத திருமண முறிவுன்னு சொன்னேனில்லியா? அதுல எங்களோடதும் ஒன்னு’