பம்பாய் மெரைன் டிரைவை அடுத்து சர்னி ரோடு பகுதி.. சௌபாத்தி எனும் கடற்கரையை ஒட்டி பேருந்து நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் மிகப்பழைய ஐந்தடுக்கு மாடி கட்டிடம். பழங்கால லிஃப்ட்டின் கிரீஸ் பூசப்பட்ட கொலாப்சபிள் கேட்டை விரலால் தொட்டிழுத்து வெண்ணை போல அது வழுக்கிக்கொண்டு மூடிக்கொள்ள ஐந்தாம் மாடி சென்றேன்.
எங்கள் அலுவலகம் அது. உள்ளே நுழையும்போதே ரெமிங்டன், ஃபேசிட் டைப்ரைட்டர்கள் சத்தம். சுவரே தெரியாத அளவிற்கு மர அலமாரிகளில் ஃபைல்கள். பெரிய வட்ட வடிவ ஹாலின் நடுவே டைப்பிஸ்டுகள், கிளார்க் மற்றும் அக்கவுண்டன்ட்கள்..நடுவே நானும். சுற்றிலுமுள்ள தனித்தனி அறைகளில் நிர்வாக இயக்குநர் கேஜர்வானி மற்றும் இதர இயக்குநர்கள், சீனியர் வைஸ் பிரெசிடென்ட்கள், என்னுடைய பாஸ் ஜோஷி உட்பட.
அது ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம். தானே பகுதி வாக்லே எஸ்டேட்டில் எரெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரித்து இந்தியா முழுவதுமுள்ள தங்கள் துணை நிறுவனங்களுக்கு அனுப்பி விற்பனை செய்பவர்கள். பெரும் லாபம் ஈட்டிக்கொண்டு அடுத்த சில வருடங்களில் காணாமல் போன நிறுவனம்.
எம்.டி கேஜர்வானியோ மற்ற இயக்குநர்களோ யாரும் அதிகம் பேசமாட்டார்கள். மிடுக்காக உடையணிந்து தலை முடியை செல்லமாக கோதிவிட்டபடி அவர் பேசும் ஸ்டைலை ரசிப்பேன். மற்ற இயக்குநர்களான பாண்டே, ஜோக்ளேகர், யாதவ் எல்லோருமே அங்கே பங்குதாரர்கள். நம்மை விரட்டி வேலை வாங்குவார்கள். அதிலும் என் பாஸ் ஜோஷி முசுடு. மாங்கு மாங்கு என நான் வேலை செய்தாலும் தினம் இரண்டு முறையாவது அவரிடம் டோஸ் வாங்குவேன்.
வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள், விற்பனை வரி இன்ஸ்பெக்டர்கள் என தினமும் வருபவர்கள் ஏராளம். பதினோறு மணி வாக்கில் கவிழ்த்த டபரா காபியை கொண்டு வரும் ஷெட்டிக்காக காத்திருப்போம். மதியம் நாலைந்து பேர் சேர்ந்து உட்கார்ந்து டிபன் டப்பாவை திறந்து சாப்பிடுவோம். மதிய உணவின்போதும் அதிகம் சத்தம் போட்டு அரட்டை அடிக்க முடியாது. எம்.டி கேஜர்வானி ஒன்றும் சொல்லமாட்டாரென்றாலும் பாண்டேக்கள் செய்யும் களேபரம் தான் அதிகம்.
திடீரென ஒரு அக்கவுண்டன்ட்டை கூப்பிட்டு ஒரே நாள் நோட்டீஸில் வீட்டிற்கு அனுப்புவது, காலையில் நன்றாக பேசிக்கொண்டிருந்த ஜோக்ளேகர் மாலை மலையாளி டைப்பிஸ்டை ஒருவனை கூப்பிட்டு ‘நீ அதிகம் பேசுகிறாய். உன் டைப்ரைட்ரிலிருந்து சத்தம் வருவதில்லை. இன்னியோடு கடைசி நாள் உனக்கு’ என சொல்லி அனுப்புவது ரொம்ப சாதாரணம். அதற்குப்பின் வேலையே இல்லையென்றாலும் வெறும் டைப்ரைட்டரை டகடகவென தட்டி வேலையை தக்க வைத்துக்கொண்ட சேட்டன்கள் பலர்.
சரி.. பெண்கள்..காதல் என ஏதாவது? இல்லாமலா பின்னே! பஞ்சாபி ரிஸப்ஷனிஸ்ட் நடாஷா எழுத்து குறுக்கே இங்குமங்கும் நடந்தால் மற்ற பெண்களே அவளைப்பார்த்தால் பெருமூச்சு விடுவார்கள். எங்கோ மூலையில் டைப்படித்துக்கொண்டிருக்கும் டைப்பிஸ்ட் உன்னி எம்பி எம்பி நடாஷாவை பார்த்துக் கொண்டே பக்கத்திலிருக்கும் டீ கிளாசை தட்டி கீழே கொட்டி, ஜோஷியிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொள்வான். யார் எந்த பெண்ணை பார்த்து வழிகிறார்கள் என்பது கேபினிலிருக்கும் சீனியர்களுக்கு உடனை தெரிவிக்கும் புல்லுருவிகள் நிறைய உண்டு. தக்க பலனும் உடனே கிட்டும்.
டைப்பிஸ்ட் உன்னி தன் மேசை டிராயரில் இருபதுக்கும் மேற்பட்ட செக் புத்தகங்கள் வைத்திருப்பான். தினமும் தில்லி, இந்தோர், கல்கத்தா கிளை அலுவலகங்களுக்கு பெரிய தொகைக்கான காசோலைகளை டைப் செய்து எம்.டி. கேஜர்வானியிடம் அனுப்பி அவர் அலட்சியமாக கையொப்பம் செய்து முடித்ததும் கொரியரில் அனுப்புவது அவன் வேலை. கிளை அலுவலகங்களிடமிருந்து தினமும் அங்காடி சர்வீஸில் ஸ்டேட்மென்ட்டுகள் வருவதும், அக்கவுன்டன்ட்கள் கணக்கு வழக்கை சரிபார்த்துக்கொள்வதும் தினமும் நடக்கும் சமாச்சாரங்கள்.
வெளியே ‘கண்பதி பப்பா மோரியா’ ஊர்வலம் சத்தம் கேட்டு ஆபிஸ் பால்கனிக்கு ஓடாமல் இருந்தாலோ, அருண் காவ்லி-சோட்டா ஷகில்- தாவுத் இப்ராஹிம் நிழல் உலக தாதாக்களின் கேங் வார் செய்திகள் பற்றி விவாதிக்காமலிருந்தாலோ, பாம்பே சென்ட்ரல்/கிராண்ட் ரோடு பகுதி விபச்சார விடுதிக்குள் இன்ஸ்பெக்டர் அர்விந்த் இனாம்தார் அதிரடியாக நுழைந்து அழகிகளை கைது செய்த செய்தியை ஆஃப்டர்நூன் பத்திரிக்கையில் படிக்கும்போது ‘ச்சே! எப்பவும் அர்விந்த் இனாம்தார் போட்டோவையே போட்றான்.. அந்த அழகிகள் போட்டோவை போடக்கூடாதா!’ என நினைக்கவில்லையென்றால் பம்பாயில் வாழத்தகுதியில்லாத பிரம்மச்சாரி அவன் எனக்கொள்க.
இப்படியாக போய்க்கொட்டிருந்த கம்பெனியில் தான் அந்த ஃப்ராடு நடந்தது. உன்னி இரண்டு மூன்று நாட்கள் ஆபிஸுக்கு வரவில்லை. எம்.டி அறையில் சத்தம். பாண்டே மற்றும் ஜோக்ளேக்கர் எம்.டி அறையிலிருந்து கலவரத்துடன் வியர்த்த முகத்துடன் வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.
தினமும் எம்.டியிடம் வங்கி செக்குகளில் கையெழுத்து வாங்கும் உன்னி, நடுவே வேறொரு பேருக்கான ஓரிரண்டு காசோலைகளை திணித்து அந்த தொகையை தனியாக லவட்டிக்கொண்டான். சுமார் ஒன்பது லட்சத்துக்கும் மேல். டோம்பிவிலியில் 500 சதுரடிக்கு ஐந்தாறு ஃப்ளாட்டுகள் வாங்கலாம்.
அடுத்த சில நாட்களில் மராட்டிய போலீசார் உள்ளங்கையில் புகையிலை தேய்த்தவாறு விசாரணை நடத்த ஆபிஸே திமிலோகப்பட்டது. கவனக்குறைவை காரணம் காட்டி என் பாஸ் ஜோஷியை வேலையிலிருந்து தூக்கினார் எம்.டி கேஜர்வானி. ‘பணத்தை கேரளாவில் யாருக்கோ கடனாக கொடுத்துட்டேன். அவசரத்தேவைக்காக பணத்தை கையாடி இப்போது பைசா இல்லை என்னிடம் என சாதித்து கையெயெடுத்து கும்பிட்ட உன்னியின் கையில் புதிய டைட்டன் வாட்ச்சு.
எப்படி அவன் பணத்தை அடித்திருக்கக்கூடும் என எம்.டி மற்றும் மற்ற இயக்குநர்களுக்கு ஆடிட்டர்கள் டெமோ கொடுத்துக்கொண்டிருக்க, இன்னும் எப்படியெல்லாம் அடிக்க முடியும்
என்பதையும் சிலர் தெரிந்துகொண்டார்கள். கம்பெனி வக்கீல் காம்தார் உள்ளே நுழைந்தார். உன்னியை கஸ்டடியில் எடுத்து அடுத்த பதினைந்து நாளில் அவன் பெயிலில் வந்த கையோடு வக்கீல் நாயருடன் கோர்ட்டுக்கு வர ஆரம்பித்தான். ஓரிரு வருடங்கள் ஓடி அந்த சம்பவத்தை எல்லோரும் மறக்க ஆரம்பித்தோம்.
என்பதையும் சிலர் தெரிந்துகொண்டார்கள். கம்பெனி வக்கீல் காம்தார் உள்ளே நுழைந்தார். உன்னியை கஸ்டடியில் எடுத்து அடுத்த பதினைந்து நாளில் அவன் பெயிலில் வந்த கையோடு வக்கீல் நாயருடன் கோர்ட்டுக்கு வர ஆரம்பித்தான். ஓரிரு வருடங்கள் ஓடி அந்த சம்பவத்தை எல்லோரும் மறக்க ஆரம்பித்தோம்.
கஞ்சூர்மார்க் பகுதியில் கௌரி பார் & ரெஸ்ட்ருவன்ட் எனும் சாராய விடுதியின் இருட்டான ஒரு மூலையில் கல்யாணி பியரை உறிஞ்சி மேலுதட்டிலிருந்த நுரையை துடைத்துக்கோண்டே காலடியிலிருந்த லெதர் பையிலிருந்து நோட்டுக்கட்டுக்களை வெளியே எடுத்த உன்னி எதிரே இருந்த நபரிடம் கொடுக்க அடுத்த சில நாட்களில் டோம்பிவிலி வெஸ்ட்டில் 500 சதுர அடி ஃப்ளாட் ஒன்றுக்கு சொந்தக்காரனானான் உன்னி.
அதுசரி! உன்னியோட ஃப்ளாட் ரெண்டு லட்சத்துக்குள் தானே! மீதி ஏழெட்டு லட்சம்? யாருக்கு தெரியும்! காட்கோபர் பகுதியில் முப்பது லட்சம் மதிப்புள்ள ஃப்ளாட் ஒன்றுக்கு திருமதி. நடாஷா கேஜர்வானி பெயரில் அட்வான்ஸ் தொகை கொடுக்கப்போகும் எம்.டியைத்தான் கேட்க வேண்டும்.
No comments:
Post a Comment