அப்பா இருந்திருந்தால் இன்றோடு 90 வயது பூர்த்தியாகியிருக்கும். சுறுசுறுப்பாக சைக்கிள், ஹீரோ மெஜஸ்டிக் மொபெட் என திருச்சி சுந்தர் நகர், கேகே நகர் பக்கம் தைலா முதலி மஞ்சள் பையுடன் சுற்றிக்கொண்டிருப்பார்.
பஹ்ரைனிலிருத்து நானோ அல்லது தம்பி ரவி Vijay Raghavan (மஸ்கட்) திருச்சிக்கு விடுமுறைக்கு போனால் சட்டென சட்டையை மாட்டிக்கொண்டு சப்போட்டா வாங்க பழமுதிர்ச்சோலை பக்கம் ஓடுவார். அல்லது எங்களையும் கூட்டிக்கொண்டு குமுதா ஸ்டோர் வாசலில் டீ வாங்கி கொடுப்பார். அதில் ஒரு சந்தோஷம் அவருக்கு. உஷாவுக்கு Usharani Sridhar எதுனா வாங்கிக்கனுமா என மறக்காமல் கேட்பார். பாட்டா செருப்பு தனக்கு வாங்கிக்கொள்வார். ரிடையர் ஆகியிருந்தாலும் பல வருடங்கள் பாண்ட் தான் போடுவார். பெல்ட்டில் எக்ஸ்ட்ரா ஓட்டை போடனும்பார். அப்போது தான் நாங்களும் கவனித்து ஏன் சரியா சாப்புடறது இல்லியா என கேட்போம்.
சப் ரெஜிஸ்ட்ராராக ரிடையர் ஆனவர். SSLC படிப்புடன் நிறுத்திக்கொண்டாலும் அவரது ஆங்கில எழுத்தாற்றல் வியக்க வைக்கும். இருபது வயதில் உடுமலைப்பேட்டை முன்சீப் கோர்ட் பெஞ்ச் கிளார்க்காக அவரை தாத்தா ராமசாமி சேர்த்து விட்டவுடன், புத்தகங்கள் வாசிப்பது என ஆரம்பித்து ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ், அகதா கிறிஸ்டி என நிறைய நாவல்கள் படிப்பதுடன் நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பார். க்ரிகாரி பெக், யூல் ப்ரின்னர், க்ளின்ட் ஈஸ்ட்வுட் என ஆங்கில கதாநாயகர்களைப்பற்றி பேசி சிலாகிப்பார். கடைசி சில வருடங்கள் ரஜினி ரசிகராக்கும். கூட்டுறவு, வீட்டு வாரியம், பஞ்சாயத்து யூனியன் என டெபுடேஷனில் இருந்து 87இல் ரிடையரானார்.
என் வெஞ்சமடை சித்தப்பா அந்த காலத்தில் தன் பஞ்சாயத்து யூனியன் மேலதிகாரி ஏதோ கோபமாக சொல்லிவிட்டாரென அவர் முன் ஆபிஸ் கடிதமொன்றை கசக்கி எறிய, உடனே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். தென்னூரில் காலை வீட்டு வாசல் படியில் பாண்ட்ஸ் பவுடர் டப்பா மேல் கண்ணாடியை சாய்த்து வைத்து முகச்சவரம் செய்துவிட்டு படிகாரக்கல்லை முகத்தில் தேய்த்துக்கொண்டிருந்த அப்பா முன் ‘நாக்கு பணி போயிந்திண்ணா!’ என பதறியடித்து ஓடிவந்து நின்றார் சித்தப்பா. உடனே அப்பா வெள்ளைத்தாளை எடுத்து ‘அப்ரபோ’ (apropos) என எழுத ஆரம்பித்து அடுத்த மூன்று மாதத்தில் நிறைய விளக்கங்களுடன் சென்னை மேலிடத்திற்கு பல கடிதங்கள் எழுதி ஒரு வழியாக சித்தப்பா மீண்டும் பணியிலமர்த்தப்பட்டார்.
மாதாமாதம் நாம் அனுப்பும் பணத்தை சிக்கனமாக சேமித்து 25, 30 ஆயிரமென மொத்தம் சுமார் மூன்று லட்சத்திற்குள் ஏழெட்டு வைப்பு நிதி ரசீதுகளை ஜிப் வைத்த ஜியார்டி நகை மாளிகை பையில் வைத்து பத்திரமாக கோத்ரேஜ் பீரோவில் வைத்திருப்பார். அம்மாவுடன் ஜாயின்ட் அக்கவுன்ட் அல்லது தன் பெயரில் உள்ள டெபாசிட்களுக்கு அம்மா பெயரில் நாமினி என சகலமும் திருத்தமாக செய்துவிட்டு அசால்ட்டாக போய்ச்சேர்ந்தார்.
அவரது பழைய சிட்டி கோஆபரேடிவ் பாங்க் டைரியை புரட்டினால்.. பசங்க அனுப்பிய பண விபரங்கள், யார் யார் கலியாணத்திற்கு எவ்வளவு மொய், வீட்டு வரி, மாடி வீடு கட்ட மேஸ்திரிக்கு கொடுத்தது (டீ வடை உள்பட) என ஏகப்பட்ட குறிப்புகள்.
‘என்னடா இது! வாக்கிங் போனவர் இன்னும் வரக்காணோமே!’ என கவலையுடன் அம்மா என் அக்கா Hemalatha Manohar வீட்டுக்கு போன் செய்தால் அங்கே டீ குடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். மகள் மீது ரொம்ப பாசம். கடைசி சில வருடங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு அக்கா வீட்டிற்கு கீழேயே குடியிருந்தார்.
8 வருடம் முன் வயிற்றுப்போக்கு என ஆரம்பித்து, பல்ஸ் ரேட் இறங்கி, ஒரு நாள் மட்டும் ஆசுபத்திரியிலிருந்து விட்டு அதிகம் சிரமப்படாமல், வழக்கம்போல சட்டென சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்புவது போல போய்ச்சேர்ந்தார். கூட இருந்த பெரியவன் Prashanth Sridhar அலாக்காக அவரை தூக்கி காரில் உட்கார வைத்தது, கைத்தாங்கலாக அவரை கழிப்பறையில் உட்கார வைத்தது என பார்த்துக்கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
‘ஶ்ரீதர்! வென்டிலேட்டரை எடுத்து வுடப்போறாங்களாம்.. நீ கெளம்பு!’ என தகவல் கிடைத்து சிறிலங்கன் விமானம் பிடித்து கொழும்பு வழியாக திருச்சி அக்கா வீடு போய் அவரை ஐஸ் பெட்டியில் பார்த்தேன்.
ஐஸ் பெட்டிக்கு அந்தப்பக்கம் மேசை மேல் எக்ஸ்ட்ரா ஓட்டை போட்ட அந்த பெல்ட்...
இன்று அப்பாவுக்கு பிறந்த நாள்..
No comments:
Post a Comment