நாங்கள் சகோதரர்கள் 3 பேர். பெரியவன் பாபு பரமசாது, கூச்ச சுபாவமுள்ளவன். சின்ன வயதில் ரொம்ப கண்டிப்பானவனா இருப்பான். இப்ப செம்ம கூல். தம்பி ரவி என்னைப்போல அராத்து. பெரியவன் ஏவியெம் ராஜன் மாதிரியென்றால் சின்னவன் ஆனந்தராஜ்.
பள்ளி நாட்களில் எங்கள் இருவருக்கும் பாபுவிடம் கொஞ்சம் பயம். ரெண்டு தடவை தான் திட்டுவான். மூன்றாவது தடவை பொளிச்சென அறைவான். திருச்சி செஞ்சோசப்ஸில் ஃபாதர் சீ.கே. சாமியிடமும் வாழப்பள்ளியிடமும் படித்தவன். என்னை கூட்டிக்கொண்டு போய் க்ளைவ்ஸ் ஹாஸ்டல் அடிதடியையும், மாணவர்கள் பஸ்ஸில் கல்லை விட்டெறிந்ததையும் நேரில் காட்டி, வீட்டில் செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டான்.
70 களில் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் தெருவில் இருந்தோம். ஏதாவது கலியாணமென்றால் லௌட் ஸ்பீக்கரில் 'ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் (மாணிக்கத்தொட்டில்)... கேட்டுக்கோடி உறுமி மேளம்..(ப.காடா பட்...)... ' என பாடல்களும் முழு சினிமாப்பட வசனமும் ஓடிக்கொண்டிருக்கும். படம் பார்க்காமலேயே வசனங்கள் எங்களுக்கு அத்துப்படி. அதிலும் ‘தத்திச்செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு’ எந்த இடத்தில் வரும், நடுவே வீச் வீச்சென வீகே ராமசாமி வசனம் (த.பதக்கம்) என எல்லாமே அத்துப்படி.
அடிக்கடி சினிமாவும் போகும் குடும்பம் ஐம்பது பைசா டிக்கட் எங்களுடையது. பேலஸ் தியேட்டரில் 'கோமாதா என் குலமாதா', அருணா தியேட்டரில் 'பாபி', ராமகிருஷ்ணாவில் 'சிரித்து வாழ வேண்டும்', பத்மாமணியில் 'தீபம்', ஜுபிடரில் 'நீதிக்குத்தலை வணங்கு'.. என எக்கச்சக்கமான படங்கள்.
ராக்ஸி வெலிங்டனில் பட்டிக்காடா பட்டனமா படத்துக்கு ஒரு நாள் எங்களை கூட்டிப்போனான் பாபு. சரியான கூட்டம். ஐம்பது பைசா டிக்கட் கியூவில் நாங்கள் முன்னால் நின்றாலும் கவுன்ட்டர் திறந்தவுடன் திடீரென வரிசை கடைசியிலிருப்பவர்கள் மேலே ஏறி தலைக்கு மேல் இருக்கும் கூண்டின் இரும்புக்கம்பியை பிடித்துக்கொண்டு பல்லி மாதிரி தலைகீழாய் ஊர்ந்து முன்னால் வர, "டாய்.. எறங்குடா.." வென கூச்சல். கசகசவென கூட்டம், பீடி நாற்றம் எல்லாம் சேர்ந்துகொள்ள பாபுவுக்கு திடீரென மூச்சு முட்டி கண்கள் சொறுகி.. மயக்கம் வர, "
பாபு..பாபு.." என நானும் ரவியும் கத்தினோம். " டேய்.. இவனுக்கு மயக்கம்டா என ஏக காலத்தில் சத்தங்கள் வர..அடுத்த நிமிடம் வரிசையிலிருந்து மூவரும் வெளியேற்றப்பட்டோம். 'ச்சே..படம் பார்க்க வந்த சமயத்திலயா இவனுக்கு மயக்கம் வந்துத்தொலையனும்?...சில நிமிடங்களில் அவனுக்கு குடிக்க தண்ணீரெல்லாம் கொடுத்ததும் எழுந்து உட்கார்ந்தான். 'அப்பாடா.. ஒரு வழியா எந்திரிச்சுட்டான்..திரும்பவும் கியூவில் நிற்கலா'மென நாங்கள் நினைக்கும்போது ' வாங்கடா.. வீட்டுக்கு போலாம்' என எங்களை வெறுப்பேற்றி வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனபோது ஈஸ்வரியின் 'ஓ..மை ஸ்வீட்டி.. ஓ குடுமி அங்கிள்..' பாட்டு தூரத்தில் கேட்கும். மாலை 6 மணிக்கு ராக்ஸி தியேட்டர்காரன் கதவுகளை பாஆஆவென திறந்து வைத்து விட மூத்திர நாத்தத்துடன் படம் ஓடும்.
பாபு படிப்பில் எப்போதும் பயங்கர புலி. காலை 4 மணிக்கு படக்கென எழுந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பான். தீபாவளியன்று நானும் ரவியும் பாம்பு மாத்திரை விடும்போது இவன் மட்டும் புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு எங்களை கடுப்பேத்துவான்.
அலகாபாத்தில் நானும் அவனும் படித்தோம். குல்பூஷண் ஆஷ்ரம் டிகிரி கல்லூரியில் (கான்பூர் யுனிவர்சிட்டி) அவன் இளங்கலை பாட்டனி மற்றும் எம்.ஏ படித்தான். இலங்கை பொப்பிசை பாடகர்கள் (நித்தி கனகரத்தினம் நண்பர்கள்) இவனது நண்பர்
கள் நாலைந்து பேர் அங்கே படித்து வந்தார்கள். அவர்களது அறைக்கு போனால் அலுமினிய தட்டில் மணக்க மணக்க சூடான கொட்டை புழுங்கல் அரிசி சாம்பார் சோறு கிடைக்கும்.
கள் நாலைந்து பேர் அங்கே படித்து வந்தார்கள். அவர்களது அறைக்கு போனால் அலுமினிய தட்டில் மணக்க மணக்க சூடான கொட்டை புழுங்கல் அரிசி சாம்பார் சோறு கிடைக்கும்.
குடும்ப சூழ்நிலையால் பாங்க் எக்ஸாம் எழுதி சீக்கிரம் பாங்க் வேலைக்குப்போனாலும், உடனே அலகாபாத்திலிருந்து சென்னைக்கு மாற்றிக்கொண்டு, ராவ்ஸ் கோச்சிங்கில் சேர்ந்து சிவில் சர்வீஸ் (IAS & IPS) தேர்வுக்கு கடுமையாக உழைத்து, ப்ரிலிமினரி மற்றும் மெயின் பரிட்சைகள் பாஸ் செய்து டெல்லி இன்டர்வியூ வரை போய், சுமார் 15 ராங்க்குகள் பின் தங்கியதால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் அருமையான வாய்ப்பை இழந்தான். கட் ஆஃப்க்கு அடுத்த லிஸ்டில் வந்த கஸ்டம்ஸ் இலாகா பதவிகளை வேண்டாமென ஒதுக்கியவன்.
எந்த படிப்பாக இருந்தாலும் லட்டு லட்டாக நோட்ஸ் எழுதி புத்தகங்களை கடாசி விட்டு அந்த நோட்ஸை படித்து அதிக மார்க்குகள் வாங்குவான். நானும் ரவியும் முக்கியமான இருபது கொஸ்டின் தேர்வு செய்து கடைசி நேரத்தில் புஸ்தகத்தை தொட்டு சான்ஸ் எடுப்போம்.
பின் பம்பாயில் ரிசர்வ் வங்கியில் வேலை செய்து கொண்டு ICWA, CFA போன்ற படிப்புகளை அசால்ட்டாக பாஸ் செய்து MBAவும் முடித்து பம்பாய் பங்கு மார்க்கெட்டுக்குத்தாவி, Head of Compliance என நல்ல பதவிகளில் இருந்து விட்டு, தற்போது கொயட்டாக Practicing Cost Accountant, Cost Audit என அமைதியான வாழ்க்கை, டைம்ஸ் ஆஃப் இந்தியா Crossword puzzleஐ பொறுமையாக உட்கார்ந்து பூர்த்தி செய்து, இன்னபிற Quiz contest களில் கலந்துகொண்டு கார் பரிசு பெற்று, வளைகுடாவில் ஜல்லியடிக்கும் என்னை பொறாமைப்பட வைப்பவன் என் அண்ணன் பாபு.
கடின உழைப்பு, பொறுமை, அடக்கம், அபரிதமான அறிவு, நேர்மை, நிறைகுடம் என சொல்வதற்கு நிறைய உள இவனிடம்.. இவனைப்போலவே அண்ணி Latha Sureshஉம் பெண்கள் Mrinalini Suresh மற்றும் Yashika Suresh மூவரும் அதிகம் பேசாத சுபாவமுள்ள எளிமையானவர்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Suresh Babu ..
No comments:
Post a Comment