திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்த ஓட்டி நந்தி கோயில் தெருவுல ஆடிட்டர் முகுந்தன் ஆபிஸுல சி.ஏ ஆர்டகிள்ஸ் பண்ணிட்ருந்தான் இவன். பேரு Aloysius James. இவங்களும் எங்க ஆடிட்டரோட பார்ட்னர் ஃபர்ம்ங்கறதால நாங்க எல்லா ஆடிட்டும் சேந்து செய்வோம். இங்க தான் ஆருயிர் நண்பன் Ganapathi Subramanian எனக்கும் அலாஷியஸுக்கும் சீனியர். Ayyampillai Ponnusamy, Rajaseharan Subramanian மற்றும் Ganapathi Avsr எல்லோரும் இதே ஆபிஸல தான் சிஏ படிச்சாங்க.
அந்த காலத்து திருச்சி செல்லா ஸ்டோர்ஸ் ஞாபகம் இருக்கா? இவங்க குடும்பத்துக்குச்சொந்தமானது. ஸ்வெட்டருக்கு உல்லன் நூல், எம்பராய்டரி வளையம் வாங்க அங்க தான் ஓடுவோம். பெரிய்ய டிபார்ட்மென்ட் ஸ்டோரு. இப்ப அங்க என்ன கடை இருக்கு தெரியாது, ஆனா ரோட்டுல காது குடையற பஞ்சும் நைட்டியிம் கூவிக்கூவி விக்கிறாங்க. அப்ப திருச்சி சாவித்ரி வித்யாசாலா ஸ்கூலோட ஹெட் மிஸ்ட்ரஸ் இவங்க பெரியம்மா தான். மேல புலிவார்ட் ரோட்டுல கே.கே நகர் பஸ் ஸ்டாப்புக்கு நேர் எதிர இருந்த ஜெகன்னாதன் புக் டெப்போவும் இவங்களோடது தான்.
பெரிய குடும்பம் இவங்களுக்கு. பூர்விகம் திருச்சியா இருந்தாலும் இவன் காலேஜ் வரை படிச்சது கேரள கொச்சின், எர்ணாகுளம் பக்கம். அப்பாக்கு டிரான்ஸ்ஃபர் உத்தியோகம். நல்லா தமிழ் பேசினாலும் ‘ர’ வை ‘ற’ ன்னு தான் அழுத்தி உச்சரிச்சி மலையாள வாடையை வீச்சுவான். டிகிரியில இவனோட பேட்ச் மேட் உன்னிமேரிங்கற பொண்ணு. காலேஜையே கலக்குவாளாம். பாதி பசங்க அவ பின்னாடி சுத்தி, மானசீகமாக காதலிச்சு, கல்யாணம் பண்ணி, அப்பிடியே.. போதும் நிறுத்திக்கலாம். இவன் மட்டும் கண்டுக்க மாட்டானாம் (கதை விடறான்). அந்த உன்னிமேரி தான் அடுத்த ஒன்னு ரெண்டு வருசத்துல மடிசார் புடவைல மீன்டும் கோகிலா ஶ்ரீதேவியையே கலங்கடிச்சு, கமலையே தடம் புறள வச்சு (சினிமாவுல தாங்க), முந்தானை முடிச்சு பாக்யராஜ் கண்ணுல பட்டுத்தொலச்ச நடிகை தீபா. இப்பவும் வாயை துடைச்சுக்கறேன்.
நண்பன் அலாஷியஸ் மேட்டருக்கு வருவோம். இவனோட அப்பா மத்திய சர்க்கார் (மீன் வளத்துறை) உத்தியோகம்ங்கறதால பம்பாய்க்கு டிரான்ஸ்ஃபர் ஆகி இவனும் அங்க சி.ஏ படிப்ப தொடர்ந்தான். சொல்லி வச்ச மாரி நானும் பம்பாய் பக்கம் போயட்டதால எங்க நட்பு அங்க தொடர்ந்துச்சு. அப்பா,அம்மா கண்டிப்பானவங்க. வீட்ல பயந்தமாதிரியே இருப்பான்.. ஆனா திருட்டுப்பய!
பம்பாய் கோலிவாடா பக்கம் இவங்க குவார்டர்ஸ். இவன சந்திக்க அடிக்கடி அங்க போவேன். அந்த ஏரியால எங்க பாத்தாலும் சர்தார்ஜி தான். செகப்பு கலர்ல கிரில் சிக்கன் விக்கிறவங்க. கோலிவாடா ஸ்டேஷன் முழுக்க டர்பன் தான் தெரியும். பஞ்சாபி சர்தார்ஜி பொண்ணுங்க சோளக்கருது மாதிரி. நெடுநெடுன்னு நல்ல உசரம். திருச்சி மாதிரி வழியாம டீஸன்ட்டா சைட் அடிச்சோம். மாட்டுனா உரிச்சி கிரில் சிக்கன் மாதிரியே தொங்க வுட்ருவாங்க. அப்பப்ப சி.ஏ படிக்கறதயும் ஞாபகப்படுத்திக்கிட்டோம்.
கொலாபா சிஏ இன்ஸ்ட்யூட் லைப்ரரில எங்கூட சேந்து படிச்சான் அலாஷியஸ். மணிக்கணக்கா படிக்க நல்ல கம்பெனி தருவான். படிப்புக்கு நடுவுல பக்கத்துல இராணி டீக்கடைல பன் மஸ்கா சாப்பிடுவோம். ஒரு வழியா பாஸும் பண்ணுனோம். மாப்ள, மாப்ளன்னு கூடவே இருப்பான். கல்யாணமும் ஆச்சுது.
இன்கம்டேக்ஸ்ல அத்தாரிட்டி இவன். பம்பாய்ல இவன் வேலை செஞ்ச Esab, Pidilite கம்பெனில எல்லாம் இன்கம் டேக்ஸ், அசெஸ்மென்ட், அப்பீல்னு டேக்சேஷன் மேட்டர்ல புகுந்து வெளியே வந்தவன். நான் பஹ்ரைன் பக்கம் கிளம்பிப்போக, இவனும் ஒமான், கத்தார்னு கல்ஃப் பக்கம் போய் பல வருசம் வேல செஞ்சிட்டு, இந்தியா திரும்பி வந்துட்டான். இப்ப நாலஞ்சு வருசமா சென்னை கம்பெனில Vice President Financeஆ இருக்காப்டி.
60 வயசு ஆன மாதிரி இல்லாம இப்பவும் மாப்ள மாதிரி இருப்பான். நான் கார்ட்டூன் வரைஞ்ச டெல்லி கணேஷ் சார் புத்தக வெளியீட்டு ஃபங்ஷனுக்கு ஓடி வந்துட்டான். மெட்ராஸ்ல சந்திச்சுக்கறோம்.
No comments:
Post a Comment