சென்னை வந்திறங்கி ஓரிரு நாள் கழித்து பெங்களூர் சென்ற ஒரே வாரத்தில் பையனுக்கு முழங்காலில் மறுபடியும் காயம் என அவசரமாக போன் வந்து, பஸ் பிடித்து, மறுபடியும் சென்னை திநகர் தனிகாசலம் ரோடு மத்ஸ்யா ஹோட்டல் சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் பெட்டியை போட்டுவிட்டு, மகாலிங்கபுரம் டாக்டர், மெடிப்ளஸ் மருந்துக்கடை என அலைந்து, ரகுவரன் மாதிரி முழங்கைகளில் இரண்டு கவட்டைக்குச்சிகளுடன் பையன் ஹாஸ்டலுக்கு திரும்ப, சாவகாசமாக பாண்டிபஜார் பாலாஜி பவனில் உட்கார்ந்து ஆப்பம் தே.பால் சாப்பிடும்போது..ஸ்ஸப்பாடா! மூச்சு விட ஆரம்பித்தோம்.
மறுநாள் காலை 'சார் மணி எட்டாச்சு.. நீங்க செக்கவுட் பண்ணனுமே' என போனில் விளித்த பெண்ணிடம் கெஞ்சி அடுத்த ஒரு மணி நேரத்தில் அறையை காலி செய்து இன்டிகாவில் பெட்டியை அடைத்துவிட்டு மத்ஸ்யாவில் நுழைந்து காலை புஃபே சிற்றுண்டிக்கு மஞ்சள் கலர் அர்ச்சனைச்சீட்டைக்காட்ட...
அரிசி (134) பாசிப்பருப்பு (89) மிளகு(8) சீரகம்(1).. கிட்டத்தட்ட தமிழக தேர்தல் முடிவுகளின் அதே விகிதாச்சாரத்தில் அநியாயத்துக்கு நெய் சொட்டச்சொட்ட நெய்ப்பொங்கல்... பச்சை பட்டானி ஆங்காங்கே உடன்பிறப்புகள் மாதிரி தலைதூக்க அரைகுறையாக வெட்டப்பட்ட பெரிய வெங்காயத்துடன் எண்ணெயில் மிதக்கும் ரவ உப்புமா , நேரடி சமையல் தோசா (live cooking) , க்ரிஸ்ப்பியான உளுந்து வடை, ஸ்டீமரில் வைக்கப்பட்ட தலையனை சைஸ் உடுப்பி இட்லி (இடுக்கியை அகலப்படுத்தி இட்லியில் மாட்டி எடுக்க வேண்டியிருந்தது), தேங்கா மற்றும் தக்காளி சட்னி, பூரி கிழங்கு, அந்தப்பக்கம் பெரிய பேஸினில் டால்டாவில் மிதக்கும் அன்னாசி பழ கேசரி, டோஸ்டரில் ப்ரெட் மற்றும் ஜாம் (ஒருத்தர் தொடனுமே!) எலுமிச்சம்பழச்சாறு, மேலன்னத்தில் ஒட்டும் காபி, தண்ணீர் கலக்காத பாலில் தேநீர்..
இதென்னடா! வயிறா.. வண்ணாந்தாழியா? என அடிக்கடி சொல்லும்
Ganapathi Subramanian ஞாபகத்திற்கு வந்தான். வயிறார சாப்பிட்டும் கண்களில் இன்னும் பசி. 'இன்னும் கொஞ்சம் கேசரி போட்டுக்கொண்டிருக்கலாமோ' என எண்ண வைக்கும்படியாக ஒரு தெலுங்கு பெண்மணியின் தட்டு நிறைய கேசரி..நடந்து போய் உட்கார்வதற்கு முன்பே ஸ்பூனால் கேசரியை கெந்தி லபக்கென உள்ளே தள்ளினார்.. ச்சே அவசரமா இட்லியை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டோமே!
அடுத்த நான்கு மணி நேரத்துக்கு டாக்சி கையிலிருந்ததால் மாம்பலம், தி நகர் பகுதிகளில் ஃபான்ஸி ஷாப்பிங், லினன் சட்டை (சுறுங்காது சார்! நெப்போலியனே இங்க தான் வாங்குவாரு!), ஃபோரம் மாலில் குர்த்தி, காதிம்ஸ் செறுப்பு, கல்மனேயில் காபி குடித்து, எக்மோர் வாசல் அடையார் ஆனந்த பவனில் மதிய சாப்பாட்டு பொட்டலம் வாங்கிக்கொண்டு பல்லவனில் ஏறி உட்கார்ந்தோம். ரயில் மெல்ல நகர ஆரம்பித்தது.
'அந்நியர் தரும் திண்பண்டங்களையோ குளிர் பாணங்களையோ உட்கொள்ளாதீர். அவற்றில் மயக்க மருந்து கலந்திருக்கலாம்' ...ரயிலிலிருந்த அந்த வாசகத்தை சத்யாவின் கணவர் பிரகாஷ் பார்த்திருந்தால் அதை 'அண்ணியார்' என திருத்தியிருப்பார்.
கடைசி நேர தத்கால் வெயிட்டிங் லிஸ்ட் கன்ஃபர்ம் ஆகி ரயில் முழுக்க நல்ல கூட்டம்.மேல்மருவத்தூர் தாண்டுவதற்குள் 'காபே! காப்பே! சூடா தக்காளி சூப்பே!'... கவிதை நடையில் கூவினான் காண்டீன்காரன்.
'எக்ஸ்க்யூஸ் மி! நீங்க 68 க்கு போய்க்கிட்டீங்கன்னா நானும் இவரும் (கணவர்) சேர்ந்து உட்காருவோம்.' என்ற பெண்ணிடம் நான் 'ரொம்ப சாரிங்க! அப்ப நானும் இவங்களும் (மனைவி
Usharani Sridhar ) சேர்ந்து உக்கார முடியாதே!' என்றதும் வழிந்தார் பாவம். கணவர் அந்தப்பக்கம் தலைக்கு மேலே போனை சார்ஜ் செய்ய போராடிக்கொண்டிருந்தார். போன் சார்ஜ் ஆகாததால் ப்ளக்கையும் வொயரையும் இழுத்து இழுத்து குத்திக்கொண்டிருந்தார்.
'ஏ..காளிப்பளவர் பக்கோடா.. சூடா காளிப்பளவர் பக்கோடா..' பலகாத தூரத்தில் இருந்தாலும் இரத்தச்சிகப்பு நிறத்தில் பக்கோடா கண்ணை பறித்தது. கமகம வாசனை.
நாங்கள் இருந்த ஏ.சி. பகுதியின் தடுப்புக்கதவு அருகே நின்றுகொண்டு சத்தமாக பேசிக்கொண்டிருந்த இரண்டு ஆண்களின் சம்பாஷனையை இந்த லோகமே கேட்டுக்கொண்டிருந்தது...
"தெரியுமே! கருத்த ஆளு தானே! அவம்புள்ளக்கி தானே பொண்ணு கொடுத்துச்சு! அவன் ரிடையர் ஆயிட்டானா? டாஸ்மாக்ல தானே அவம்புள்ளக்கி வேல?.. வேலையெங்க செஞ்சான்! பாதி நேரம் குடி தான்.. வளர்ப்பு சரியில்லீங்க.. அவங்க ஆயி போயி பத்து வருஷமாகுது.."(அதாவது ஆயின்னா அம்மா!😃)
ஒரு வழியாக 68க்கு வேறு யாரையோ விரட்டிவிட்டு கணவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு போனில் யாரையோ பேசவிடாமல் விஜயதாரினி மாதிரி கத்திக்கொண்டிருந்தார். கணவர்? இன்னும் சார்ஜ், ப்ளக், வொயர்.. முடிந்தபாடில்லை.
தாம்பரம், செங்கல்பட்டு தாண்டி விழுப்புரம் தாண்டுவதற்குள் 'ஏ.. சுக்கு காபே..ஏ.. மிளகா பஜ்ஜே.. ஏ.. ப்ரட் ஆம்லெட்டே..ஏ.. கூல் ட்ரிங்ஸே'..என விற்றுத்தள்ளிவிட்டார்கள்.. எழுந்து நின்று, ஏ.. கொலஸ்ட்ராலே.. ஏ.. ட்ரைக்ளிசரைடே.. ஏ.. டயாபடீசே.. என கத்தவேண்டும்போலிருந்தது.
சின்ன குழந்தை ஒன்று அடிக்கடி சினுங்க, பக்கத்திலிருந்தவர் குழந்தையை தூக்க கை நீட்டினார். குழந்தையின் அம்மா: மாமா கூப்புற்ராங்க போடா கண்ணு!... புடிக்கலயா அவர.. அதுக்கு ஏன் அளுவுற...ச்சேரிடா குட்டி..(மாமா என்ற வாலிபர் முகத்தை அந்த பக்கம் திருப்பிக் கொண்டார். தேவையா அவருக்கு!)
'ஹலோ.. யாரு புகலா?' (புகழேந்தியா இருக்கும்).. ஒரு வழியாக அந்த கணவருக்கு சார்ஜ் கிடைத்துவிட, விஜயதாரினி மேல் நன்றாக சாய்ந்து கொண்டு சத்தமாக பேச ஆரம்பித்துவிட்டார்...
"புகல்! எங்க வேகன்ஸி இருக்கோ அங்க தான் போடுவாங்க.. (வேறெங்க போட முடியும்!) சீனியர் டிவிஷனல் கோஆர்டினேட்டர்.. ஆமா.... கேக்குதா? குறிச்சுக்கோ..கோஆர்டினேட்டர்..'கோ' பக்கத்துல டேஷ் போடு..போட்டியா? என்னது பேனாவை கீழ போட்டியா!.. சரி சரி.. இங்கயும் சார்ஜ் இல்ல" (உங்களுக்கு நேரமும் சரியில்ல!)
ரயில் சீராக ஓடிக்கொண்டிருக்க, சுவர்களில் ஏராளமான விளம்பர வாசகங்கள்..நடுவே பளிச்சென 'மதுரை அம்மா மெஸ்' போர்டு... 'அனைத்து உணவு வகைகளும் எங்கள் தரமான தயாரிப்பில்..இடிச்ச நாட்டுக்கோழி ரோஸ்ட் (இடிச்சது அவ்வள பெரிய குத்தமாடா!)
நடுவே கழிப்பறை போகவேண்டியிருந்தது. படுசுத்தமாக இருந்தாலும் தண்ணீருக்காக அந்த இரும்புப்பிடியை அழுத்த போதிய பலம் இல்லை. வழக்கம்போல உள்ளே 'தடாம்..புடாம்' என தண்டவாள சத்தம்..இனம்புரியா பயம் வேறு. வெளியே வாஷ்பேசினில் இன்னும் அந்தக்கால கூர்மையான குழாய். தண்ணீர் வர கீழே இருந்து மேல்பக்கம் அழுத்தினால் கடகடகடவென பைப் அதிர நமது சப்தநாடிகளும் அதிர்ந்து, பீச்சியடித்த தண்ணீர் சட்டை பேண்ட்டெல்லாம்.
ஶ்ரீரங்கம் நெருங்க நெருங்க மக்களுக்கு இருப்பு கொள்ளவில்லை.. படபடவென பெட்டிகள் எடுக்கும் சத்தம்.
'ட்ராலிய மேலர்ந்து எடு.. பாத்து வீலு மாட்டிகிட்ருக்கு பாரு'
'ஹலோ..ஹலோ. சிக்னல் சரியா இல்ல.. நா பல்லவன்ல வர்றேம்ப்பா..நீ பல்லேரோவ கொணாந்திரு'
'கருணாநிதிங்ளா! ஸ்டேட்ஸ் போய்ட்டு எப்ப வந்தீங்க? எய்ட்த்தா? ச்சேரி...அதான் சும்மா போனடிச்சேன்..'
'நீ பாத்து எறங்கு.. நா ஜாமான பாத்துக்கறேன்' (ஶ்ரீரங்கம் ஸ்டேஷன்)
அடுத்த நாலைந்து நாட்கள் திருச்சி, காரைக்குடி, விராலிமலை என அலைச்சல்..திருச்சியில் எங்கு பார்த்தாலும் ஜனத்திறள். அக்னி நட்சத்திரம்.. சுட்டெறிக்கும் வெய்யிலிலும் மக்கள் பஸ்ஸிலும், ரயிலிலும் பயணம் செய்கிறார்கள். பஜ்ஜி, வடை, அப்பமுடன் டீக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம்,
ரோடெங்கிலும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், இளநீர் வெட்டுபவனைச்சுற்றி நாலு பேர் (சார்! கஞ்சியா?), ஐஸ்கட்டியை ரப்பர் டியூப்பில் போட்டு கதற கதற நடுரோட்டில் அடித்து விற்கும் நன்னாரி சர்பத் வாங்க கூட்டம், தேன்மொழி இரத்த பரிசோதனை நிலையத்தின் பெஞ்சில் ஆறேழு பேர்,
புடவைக்கு மேல் நீலக்கலர் சட்டையணிந்து கண்டக்டர் மாதிரி தோல்ப்பையுடன் 'பெட்ரோலா.. டீசலா.. ஐந்நூறுக்கே போட்றவா' என கேட்கும் பெட்ரோல் பங்க் பெண்கள், 'மூன்னாளைக்கி நைட்ல இந்த மாத்தரைய போட்டுக்கோங்க.. வலி நல்லா கேக்கும்' (நீ மொத டாக்டர கேட்டியா!) என இலவச ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுக்கும் மருந்து கடைக்காரர், 'பாஸ்புக்ல என்ட்ரி இப்ப போடமுடியாதுங்க..சிஸ்டம் டௌன்' என்பவரைச்சுற்றி எட்டு பேர் பாங்க்கில், அவருக்கு பக்கத்தில் 'பணம் எடுக்கவா.. போடவா?' எனக்கேட்டு ஸ்லிப் கொடுக்கும் துப்பாக்கியேந்திய செக்யூரிட்டி, 'சார் வழில நிக்காதீங்க பெரிய டாக்டர் வற்ர நேரம்' என்றதும் அசுபத்திரி காரிடாரிலிருந்து கலைந்து ஓடும் ஐந்தாறு பேர், 'எய்ட்டி டொன்ட்டி இல்லீங்க.. சிக்கிரி இல்லாத ப்யூர் நரசுஸ் காபி தான் இருக்கு' என சொல்லும் மளிகைக்கடைக்காரர் முன் பத்து பேர்..எங்கு பார்த்தாலும் கூட்டம்..
சிறிலங்கன் ஏயரில் கொழும்பு வழியாக பஹ்ரைன் வந்திறங்கி, காலியாக இருந்த இம்மிக்ரேஷனில் மெல்லிய புன்முறுவலுடன் ஸ்டாம்ப் அடித்த பஹ்ரைனி அன்பருக்கு 'ஷுக்ரன்' சொல்லி, அடுத்த பத்தே நிமிடங்களில் ட்ராலி நிறைய பெட்டியுடன் வெளியே வரும்போது இந்த அழகிய பஹ்ரைன் நகரம் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடியிருந்தது. ஹார்ன் சத்தமேயில்லாத சாலைகளில் இலக்கில்லாமல் ஓடும் கார்கள்.
ச்சே! சரட்டென குறுக்கே வரும் பல்சர்கள் எங்கே! பக்கவாட்டிலிருந்து முந்தும் ஆட்டோக்களும், கும்பகோணம் அரசுப்பேருந்துகளின் பாம்.. பாம் ஹார்ன் ஒலிகளும் எங்கே! இளநீர்.. காபி க்ளப் டிபன் சென்டர்கள்.. பூக்கடைகள்.. கோவில்கள்.. பழமுதிர்ச்சோலை..ஃபாஸ்ட் ட்ராக் மற்றும் ஓலாக்கள் ஒன்றையும் காணோம்! எனக்கு இப்பவே இடியாப்பம் தேங்காய்ப்பால் வேணும்..
சாவியை செக்யூரிட்டியிடமிருந்து வாங்கி பூட்டிய வீட்டை திறந்து, மணிப்ளாண்ட்டுக்கு தண்ணீர் ஊற்றி, சோஃபா டிவியின் மேல் போர்த்தியிருந்த பெட்சீட்டுகளை உருவி, குக்கிங் ரேஞ்ச் காஸ் ஸிலின்டரை திறந்து, சீடை தட்டை முறுக்கு மற்றும் திருச்சி ஏர்போர்ட்டில் வாங்கிய இருட்டுக்கடை அல்வாவை டப்பாவில் அடைத்து, பாஸ்போர்ட், இந்திய கரன்சி, ஏடியெம் கார்டுகள் மற்றும் இந்திய வாகன ஓட்டுநர் உரிமத்தை பீரோவுக்குள் பத்திரமாக வைத்து... வெறும் தயிர்சாதம் மற்றும் தொட்டுக்க தட்டை முறுக்குடன் டீவி-அர்னாப் கோஸ்வாமி முன் உட்காரும்போது.. 'ச்சே! எவ்வளவு சுகங்களை இழந்துவிட்டு இங்கே உட்கார்ந்திருக்கிறோம்! மறுபடியும் இந்தியாவுக்கே போய்விடலாமா' எனத்தோன்றும்.
அதுசரி..போனமுறை ஊருக்கு போய் வந்தபோதும் இப்படித்தான் தோன்றியது. போனமுறை மட்டுமா.. ஒவ்வொரு விடுமுறைக்குப்பிறகும் இதே கதை தான்.
எல்லாம் ஒரே நாள் தான் சார், மறுநாள் ஏடியெம்மில் எடுத்த தினார்கள் பர்ஸுக்குள் போகும் வரை...
என்னைப்போல நிறைய 'பதிபக்தி' பாண்டியன்கள் 'வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே' பாட காத்திருக்கிறார்கள் இங்கு.. ஆச்சு 22 வருடங்கள்..