Tuesday, March 13, 2018

வெங்கடேஷ்

டோல்கேட்டிலிருந்து செந்தண்ணீர்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் வலதுபுறம் ஜி-கார்னர் திரும்பி ‘பேய் தொங்கிட்ருக்குமோ!’ என பயத்துடன் அந்த புளிய மரங்களை பார்ப்பதை தவிர்த்து, அடர்ந்த மரங்கள் இருபுறமும் உள்ள சாலை உள்ளே நுழைந்தால் பொன்மலை. பொன்மலை ரயிலடி எதிரே ‘அவன் தான் மனிதன்’ சிவாஜி வீடு மாதிரி பெரிய வீடு. உள்ளே நுழைய ஒரு கேட். வெளியே வர ஒரு கேட். வெள்ளைக்காரன் கட்டிய, டிவிஷனல் இஞ்சினீயர் சப்தரிஷி வீடு.
பெரியவன் வெங்கடேஷ். சின்னவன் வைத்தி. நான், வைத்தி, கணபதி மூவரும் சேர்ந்து சி.ஏ பரீட்சைக்கு படிக்க ரயில்வே ஸ்டேஷன் போகும் முன் வைத்தி வீட்டில் காபி. வெங்கடேஷ் எம்.ஏ முடித்து மனிதவளம் சார்ந்த (DPMIR) படிப்பு. வாசலில் நாலைந்து சேர் போட்டு எல்லோரும் அரட்டை. அந்தப்பக்கம் அவர்கள் அம்மாவும், சில சமயம் டூர் முடிந்து ஜீப்பில் வந்திறங்கிய அப்பா சப்தரிஷியும் பனியனுடன்.
பேச்சின் நடுவே ‘அப்பா நேத்து ரயில்ல ஏ.சி சலூன்ல வற்ரச்சே’ என வெங்கடேஷ் சொல்ல, நான் குறுக்கிட்டு ‘ஏசி சலூனா! அப்ப முடி வெட்டறவருக்கு ஜாலி தான்.. அவருக்கும் ஏசி இல்ல!’ என சொல்ல பெருங்குரலுடன் நண்பர்களின் வெடிச்சிரிப்பு அந்த இடமே ஒலிக்கும். டி.ராஜேந்தர், பாரதி ராஜா, பாக்யராஜ் படங்கள், ராதா, அம்பிகா என நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம்.
சில்க் ஸ்மிதா, ப்ரிமிளா என பேச்சு ஒரு மார்க்கமாக திரும்பும்போது குரலை கம்மி குசுகுசுவென நாங்கள் பேச ஆரம்பிக்க, ‘போதும்பா! நாழியாச்சு! படிக்க கிளம்புங்க!’ என அம்மா விரட்டியும் கேட் அருகே நின்று கொண்டு ஶ்ரீப்ரியா ஜோக் (இங்க எழுத முடியாதுங்க) பற்றி இன்னும் கொஞ்ச நேரம்..
இன்கம் டாக்ஸ் சப்ஜெக்டில் ‘ஏம்ப்பா! அந்த க்ளப்பிங் ஆஃப் இன்கம் டாக்ஸ் ஆஃப் ஸ்பௌஸ்.. என்ன செக்‌ஷன் அது!’ என நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே இருந்து ‘செக்‌ஷன் 64(1)!’ என வெங்கடேஷ் கத்துவான். இன்கம்டாக்ஸ் அமென்ட்மென்ட் பற்றி எங்களுடன் நிறைய விவாதிப்பான் வெங்கடேஷ். அசாத்தியமான ஞாபக சக்தி அவனுக்கு.
நெடுநெடுவென உயரம் வெங்கடேஷ். ஞாயிரன்று அவன் பெரிய வெள்ளை ஜிப்பா+ஜீன்சுடன் தம்பி வைத்தி சகிதம் தனது லூனாவில் சோனாமீனா தியேட்டரில் கன்னிராசி படம் பார்க்க போகும் வழியில் சர்க்யூட் ஹவுஸ் காலனியில் குடியிருக்கும் என்னை பார்க்க வரும்போது அங்கங்கே மாணவிகள் பால்கனியிலிருந்து இவர்களை சைட் அடிப்பது பார்க்க எனக்கே பொறாமையாக இருக்கும். ‘ஹும்! எல்லாத்துக்கும் மச்சம் வேணுமே!’ என பெருமூச்சுடன், தண்ணி லாரி பின்னால் குடத்துடன் ஓடுவேன்.
1986இல் இப்படியான திருச்சியின் சொர்க்கமான இளமைக்காலத்தை அப்படியே விட்டுவிட்டு பம்பாய் சென்றதும், வெங்கடேஷ், வைத்தி போன்ற நண்பர்கள் தொடர்பு அற்றுப்போனதும், கணபதியுடன் பம்பாய், இந்தோர், பஹ்ரைன் என ஊர் ஊராக மாறியது.. 31 வருடங்கள் உருண்டு ஓடியது தெரியவில்லை.
சில வருடங்கள் முன் கணபதி மூலம் வைத்தியின் (Vaidya Rishi) தொடர்பு கிடைக்க 25 வருடங்களுக்குப்பிறகு பெங்களூரில் அவனை சந்தித்தேன். நிதிஷ் எஸ்டேட்ஸ் எனும் புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ED யாக இருக்கிறான். பலால் ரெசிடென்சியில் முறுகல் ரவா தோசைக்கு நடுவே மறக்காமல் வெங்கடேஷின் நம்பரை வாங்கிக்கொண்டு, அப்போதிலிருந்து வெங்கடேஷுடனும் மீண்டும் தொடர்பு கொண்டாலும் அவனை நேரில் சந்திக்க இயலாமல் தள்ளிப்போனது. முகநூலில் நட்பு தொடர்ந்தது.
சென்ற மாதம் சென்னையில் நண்பர் வீட்டு
விஷேசத்திற்கு போகவேண்டியிருந்தது. ‘ஶ்ரீதரா! வெங்கடேஷை வரச்
சொல்லியிருக்கேன்!’ என கணபதி சொல்ல மனம் குதூகலமானது. மண்டபத்தில் நுழையும்போது கூட்டத்தின் நடுவே உயரமான வெங்கடேஷ் தான் தெரிந்தான். அப்படியே இறுக்க கட்டிக்கொண்டான். இப்பவும் அதே சிரிப்பு, பொன்மலை தெனாவெட்டு, குறும்பு, அரட்டை.. நெற்றியில் குங்குமம்.
HR Consultancy, இன்டெலிஜென்ட் என வெங்கடேஷைப்பற்றி கணபதியின் முகநூல் பதிவு பார்த்தேன்.
இன்று வெங்கடேஷுக்கு பிறந்தநாள். ‘ஶ்ரீதரா! அவம்படத்தையும் வரஞ்சு போட்ரு’ என்ற கணபதியின் கட்டளையை மீறுவேனா!
நமக்கு நண்பர்கள் தானே வாழ்க்கையே!
Image may contain: 1 person, smiling, drawing

பார்சிலோனா

ஃபிரான்ஸும் ஸ்பெயினும் உரசிக்கொள்ளுமிடத்தில் உள்ள அழகிய பெர்பியான் (Perpignan) நகருக்கு அலுவல் நிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. அந்நகரம் பிரான்ஸில் இருந்தாலும் பாரிஸ் வெகு தொலைவு. ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து இரண்டே மணி நேர பஸ் பிரயாணம் தான். கூடவே மனைவி Usharani Sridhar .
நாங்கள் தங்கிய மெர்க்யூர் விடுதி முழுக்க பெண்களால் இயக்கப்படுவதால் அங்கங்கே பளிச்சென மலர் கொத்துகள், வண்ண விளக்குகள், சுவர்களில் பிங்க் வர்ணம். வரவேற்பறை பெண்கள் பகுதி நேர சிப்பந்திகளாம். கல்லூரியில் படிக்கும் கீர்த்தி சுரேஷ்கள். மலர்ந்த முகம், இனிமையான பேச்சு. சின்ன குழந்தைகள் பென்சிலை செங்குத்தாக இறுக்கி பிடித்து முட்டை முட்டையாக எழுதுவது போல ஃப்ரெஞ்ச் மொழியில் அவர்கள் எழுதுவதை ரசித்தேன் (கூட இருந்த உஷாவும்தான்).
பெர்பியான் கிட்டத்தட்ட கரூர் மாதிரி. எக்கச்சக்கமாக பணம் புழங்கும் சிறிய வியாபார நகரம். உலகின் மற்ற பாகங்களுக்கு பழங்கள், பூக்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்கிறார்கள். எங்கும் பச்சை பசேலென ஊரே அழகு. நகருக்குள் விபத்தே ஏற்பட முடியாத அளவு நூற்றுக்கணக்கில் சிக்னல்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களுடன் வளைந்து வளைந்து செல்லும் குறுகிய சாலைகள். வாகனங்கள் நாற்பது கி.மீ வேகத்தில் அசைந்து மெதுவாக செல்வது மறக்க முடியாத அனுபவம். பஹ்ரைனில் அதிகம் போனியாகாத சிட்ரோயென், ஓபல், ரிநோ மற்றும் வோக்ஸ்வேகன் கார்கள் இங்கே ரோடு முழுக்க.
பல்வேறு உணவுப்பொருட்களை பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பஹ்ரைன் சந்தை, அரசாங்கம், ராணுவம் மற்றும் அமெரிக்க கடற்படைக்கு விநியோகிக்கிறது எங்கள் நிறுவனம். நாங்கள் இறக்குமதி செய்யும் நெதர்லாந்து பால் பவுடர், பாகிஸ்தானிய/இந்திய பாசுமதி அரிசி, மலேஷிய உணவு எண்ணெய், இந்திய மற்றும் ஜெர்மானிய சர்க்கரை, எகிப்திய பாலாடைக்கட்டி (cheese) போன்ற பொருட்கள் இங்கு அதிகம் பாவிக்கப்படுகின்றன. அதனால் நிறைய food exhibition களுக்கும், புதிய தரமான உணவுப்பொருட்களை ஆ(பீ)ராய்ந்து தேடியும் நான் செய்யும் பயணங்களில் இதுவொன்று.
நான்கு நாட்களில் வேலை முடிந்து பெர்பியானிலிருந்து பார்சிலோனாவிற்கு இரண்டு மணி நேர பஸ் பயணம். சீராக வெண்ணை போன்ற சாலையில் பஸ் ஊர்வது போல இருந்தாலும் சுமார் 120 கி.மீ வேகமே தெரியவில்லை. இது போல நெடுந்தொலைவு பயணமென்றால் உறவினர்கள் நண்பர்கள் பற்றி மனைவியுடன் பேசிக்கொண்டு போவதால் பயணக்களைப்பு தெரிவதில்லை. அதிலும் குடும்ப அரசியல் பேச்சென்றால் போதும், பஸ்ஸாக இருந்தாலும் உஷா சம்மனங்கால் போட்டுக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவாள். மாலை இருள் மெல்ல சூழ, தூரத்தில் மங்கியதோர் நிலவினிலே பார்ஸிலோனாவை கண்டேன்.
ஐரோப்பாவின் பார்சிலோனா என்றால் முதலில் நினைவுக்கு வருவது கால் பந்தாட்டமும் ஒலிம்பிக் போட்டியும் தான். எஸ்பானியா (ஸ்பெயின்) நாட்டின் முக்கிய நகரமான பார்சிலோனா சமீபத்தில் தன்னாட்சி பெற்ற காட்டலூனியாவின் தலைநகரமாகும். ஐரோப்பியாவின் பெரிய விமானநிலையங்களில் பார்சிலோனா ஒன்றாம்.
ஸ்டெஃபி க்ராஃப் சாயலில் செம்பட்டை கேசத்துடனிருந்த விடுதிப்பெண் எங்களுக்கு அறையை ஒதுக்க, இரவு 7 மணிக்கு பெட்டியை போட்டு விட்டு மனைவி கெட்டிலில் போட்டுக்கொடுத்த பச்சை தேநீர் மற்றும் பஹ்ரைனிலிருந்து கொண்டு சென்ற க்ராய்ஸ்ஸோன் பசியை ஓரளவு அடக்க, விடுதியை விட்டு வெளியே வந்து காலாற தெருவில் நடந்தோம்.
நிறைய சர்தார்ஜிகளை பார்க்க முடிந்தது. பஞ்சாபி கவுரின் சிறிய கடை (convenient store)
உள்ளே நுழைந்து சாப்பிட பக்ஷ்ணம் தேடினோம். Ready to eat பஞ்சாபி கறி, புலாவ் என டெட்ராபேக் உணவு பொட்டலத்தை கொதிக்கும் நீரில் அப்படியே போட்டு சில நிமிடங்களில் வெளியே எடுத்து சாப்பிட்டால், மறுநாள் dரிப் ஏற்றும் அளவிற்கு வயிறு உபாதை வருவது சாத்தியம்.
வளைகுடா நாடுகள் போல இல்லாமல் ஐரோப்பிய விடுதிகளில் எப்போதும் சிறிய அறைகள் தாம். அறையில் கெட்டில், காபி, டீ, சர்க்கரைப்பைகள் இலவசம். ஆனால் பக்கத்தில் சிறிய ஃப்ரிட்ஜ்ஜில் உள்ள சீமைச்சாராயம், பீர், வறுகடலை, பிஸ்கோத்து வகையாக்கள் எல்லாம் தொட்டு பார்த்தாலே காசு. அழகான சிறிய குளியலறை. நான்கு பக்கமும் கண்ணாடி. ச்சீ! நமக்கே வெட்கமாக இருந்தது. கழிவறையில் டிஷ்யூ பேப்பர் தான். அரை லிட்டர் காலி பாட்டில்கள் ஏழெட்டை மனைவி எதனால் பெட்டியில் வைத்திருந்தாள் என இப்போது புரிந்தது.
பார்சிலோனாவை சுற்றிப்பார்க்க மொத்தம் இரண்டே நாட்கள் இருந்தன. பொதுவாக டூர் ஏஜென்ட் போன்றவர்கள் மூலம் நான் ஊரை சுற்றிப்பார்ப்பதில்லை. செலவு அதிகம். நாமே உள்ளூர் வரைபடம் மற்றும் கைப்கேசியில் கூகிள் மேப் வைத்துக்கொண்டு டாக்சி, மெட்ரோ ரயில் அல்லது ‘ஹாப் இன் ஹாப் ஆஃப்’ என சுற்றிக்கொண்டிருக்கும் சைட் சீயிங் ரெட் பஸ்களை வேண்டுமிடத்தில் பிடித்து மொத்தம் 18 ஸ்தலங்களில் நமக்கு பிடித்த இடங்களில் மட்டும் இறங்கி சுற்றி பார்த்து விட்டு மறுபடியும் அதே பஸ் பிடித்து திரும்பி வந்து விட்டோம்.
நகரில் அங்கங்கே பஸ்ஸிலோ ரயிலிலோ மாலிலோ உணவகங்களிலோ அகஸ்மாத்தாக பேசிக்கொண்டிருக்கும் கணவன் மனைவியர் திடீரென மூடு வந்து பச்ச்ச்சக்கென உதடுகளை கவ்வி உறிஞ்சி.. யப்பா! பார்க்கும் நமக்கே உதடு வலித்தது. லைட்டா பொறாமையும் கூட. எல்லோரும் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது ஒரு ஜோடி மட்டும் இன்னும் ‘லிப்லாக்’கில் இருக்க அந்த பெண் அவனை விடுவிக்க முயல ‘நம்மவர்’ விடுவதாக இல்லை.
கேடலூனியா அரண்மனை, சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம் (கதீட்ரல்), உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட மைதானம் (camp nuo), ஒலிம்பிக் ஸ்டேடியம் என ஒரே நாளில் நிறைய இடங்களை சுற்றிப்பார்த்தோம்.
மறுநாள் விலா டி’கார்ஸியா என்ற பகுதிக்கு டாக்சி பிடித்து ‘ஸ்வாகதம்’ இந்திய உணவு விடுதி வந்தோம். குல்ஷன் குரோவர் சாயலிலிலிருந்த லூதியான்வி மேலாளர் ‘ஹாஞ்சி நமஷ்கார்’ என வரவேற்றார். அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் பெரும்பாலோர் எஸ்பானியரே. நாங்கள் வாலன்ஸியா ஆரஞ்சு பழச்சாறு, லார்டு நெல்சன் புதினா எலுமிச்சை தேநீருடன் வெறும் பருப்பு சாதம் மட்டுமே சாப்பிட முடிந்தது. மீதி ஐட்டங்கள்?.. ஏற்கனவே சொன்னமாதிரி மறுநாள் dரிப் தான். அந்தப்பக்கம் ஒரு டியூனிசிய தாத்தா தந்தூரி சிக்கனையும் காந்தா பஜியாவையும் கபளீகரம் செய்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்க, மேலே உதித் நாராயணும் அல்கா யக்னிக்கும் கால் கால் என கத்திக்கொண்டிருந்தார்கள்.
மாலை ‘லா ரம்லா’ (Las Ramblas) தெருவுக்கு வந்த போது பிரமிப்படைந்தேன். தெருவின் இருபுறமும் ஏராளமான கடைகள். தெருவின் நடுவே ப்ளாட்ஃபாரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓவியர்கள். கரிக்கட்டி (charcoal), பென்சில், மார்க்கர் கொண்டு விதவிதமாக வரைந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். சுமார் 5 யூரோக்களுக்கு நம் உருவப்படத்தை சில நிமிடங்களில் வரையும் காரிகேச்சரிஸ்ட்டுகள். ஒருவர் கருப்பான பொடியை ப்ரஷ்ஷில் தொட்டு பேப்பரில் பதித்தவுடன் கை விரல்களால் பூசி பூசி வடிவமைத்த ஓவியம் பிரமிப்பாக இருந்தது.
கடைசியாக ஒருவரிடம் போனோம். அவர் எங்களை எதிரே நிற்க வைத்து, கையில் வைத்திருந்த கருப்பு வெள்ளை தாளை கத்தரிக்கோல் கொண்டு வெட்டி சில நிமிடங்களில் எங்கள் இருவரின் நிழற்படத்தை அற்புதமாக வெட்டி வடிவமைத்து கொடுத்தார் (படம் பார்க்க!)
அதே தெருவில் ISKCON கோயில் இருப்பது கேள்விப்பட்டு இடத்தை விஜாரித்தோம். பத்து கட்டிடங்கள் தள்ளி பிளாசா ரியால் (Royal Plaza square)இல் கோயில் இருப்பதாக பங்காலி இளைஞன் சொன்னான். பிளாசா ரியால் மிகப்பெரிய சதுர வளாகம். கீழ் தளத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இருட்டான சாராய மற்றும் இரவுநேர கேளிக்கை விடுதிகள், கண்ணாடி குவளையில் மொந்தை மொந்தையாக சாராயம் பருகும் லெபனீய பெருசுகள், அலட்சியமாக ஹெனிக்கன் பியர் கேனை திறந்து வாயில் கவிழ்த்து நுரையைத்துடைக்கும் அரேபிய இளைஞர்கள்.. பின்னால் ஈனசுரத்தில் ஜியார்ஜ் மைக்கலின் ‘கேர்லெஸ் விஸ்பர்’. அங்குமிங்கும் ஓடும் துக்குனியூண்டு அரை நிஜார் பிலிப்பினோ பணிப்பெண்கள்.
மேலே முதல் தளத்தில் உள்ள வீடுகள் ஒன்றில் கோயிலாம். படிகளில் ஒரே இருட்டு. தட்டுத்தடுமாறி படியில் ஏறி இரும்பு கேட் ஒன்றின் முன் நின்றோம். அருகே அழைப்பு மணி மாதிரி தெரிந்தது. இருட்டில் தடவி மணியை அழுத்த ஒரு நிமிடம் கழித்து கர்ரர்ர்ரென இரும்பு கேட் திறந்தது. பயந்துகொண்டே கேட் கதவை திறந்து உள்ளே கால் எடுத்து வைக்.. ‘தொபக்’கென் பள்ளம். நல்ல வேளை.. கீழே விழவில்லை. ‘இதி ஒத்து மனக்கு.. பயங்கா உந்தி’ என உஷா தயங்க, நான் அவளை இழுத்துக்கொண்டு இருட்டில் முன்னேற, வெளிச்சமில்லா தாழ்வாரத்தில் மிகப்பெரிய கனமான மரக்கதவு. சக்தி முழுவதையும் திரட்டி க்ற்ற்றீச்சென கதவை தள்ள உள்ளே இஸ்கான் பிரபு ஒருவர் கருப்பு சால்வையை போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜியார் ஜப்பானிய கோவில் உள்ளே நுழையும்போது முக்காடு போட்டு குத்த வைத்து உட்கார்ந்து கண்களை உருட்டிபடி ‘தோஷிகா, கிமோகா’ என ரகசிய வார்த்தைகள் சொல்லும் தெற்றுப்பல் நம்பியார் நினைவுக்கு வந்தார்.
‘என்ன ப்ரபுஜி! கோயிலுக்குள்ளே வருவதற்கு இவ்வளவு கட்டுப்பாடா? பாஆஆன்னு கதவை திறந்து வைக்கலாமே!’ என நான் கேட்க முக்காடை விலக்கிய நம்பியார் பிரபு அமைதியாக சொன்னது: ‘இது அமைதியான ஊர்னு நினைக்காதீங்க பிரபு!. ஐரோப்பா முன்ன மாதிரி இல்ல. அல்ஜீரியா, மொராக்கோ, சிரியா ன்னு எல்லா நாட்டுக்காரனும் இங்க இருக்கான். அரபி, பிரெஞ்சு, எஸ்பானிய, கேடலான் மொழி சகஜமா பேசுவானுங்க. தீவிரவாதி யாருன்னே கண்டு புடிக்க முடியாது. கல்லூரி பேராசிரியரா இருப்பான். கால்நடை மருத்துவராவும் இருப்பான். திடீர்னு தாக்குதல் நடத்துவான். இடுப்புல வெடிகுண்டு பெல்ட்டோட கூட்டத்துல புகுந்து துப்பாக்கில சுடுவது, போலிஸ் புடிக்க வந்தா வெடிகுண்டை ட்ரிக்கர் பண்ணி தானே அபீட் ஆயிருவான். தற்கொலை அவங்களுக்கு தக்காளி சோறு மாதிரி. அவங்களுக்கு அமைதியை குலைச்சி அப்பாவி மக்களை கொல்லனும். உங்கள சிசி டீவில பாத்தாவுட்டுத்தான் கதவ தொறந்தோம். ஹரே கிருஷ்ணா!’
அவர் சொன்னது முற்றிலும் சரி என்பது அடுத்த சில நாட்களில் பஹ்ரைன் வந்ததும் தெரிந்தது. கோயில் இருக்கும் அதே ‘லா ரம்லா’ பகுதியில், அந்த ஓவியர்கள் தங்கள் பிழைப்புக்காக தம் படைப்புக்களை விற்றுக்கொண்டிருந்த அதே தெருவில், உஷாவை நிற்க வைத்து அவளது ஓவியத்தை வடித்த அதே இடத்தில் தீவிரவாதி ஒருவன் படு வேகத்தில் ரினோ (Renault) வேனை கூட்டத்தினர் மீது மோதி சுமார் 100 பேரை காயப்படுத்தி, 14 பேரை அநியாயமாக கொன்ற பின், நிதானமாக நடந்து போய் மற்றொரு ஃபோர்டு காரை திறந்து காரோட்டியை கத்தியால் குத்தி கொன்று, இறந்த உடலோடு காரை ஓட்டிச்சென்று ஒரு போலீஸ் செக் போஸ்ட்டை இடித்து விட்டு மறைந்து, அடுத்த நான்கு நாட்களில் போலீசாரால் சுடப்பட்டு இறந்தானாம்.
இறந்த 14 பேரில் தன் பெற்றோருடன் 6 வயது சிறுவனும். அதே நேரத்தில் அவனது 5 வயது தங்கை வேறு பகுதியில் பாட்டு வகுப்பு முடிந்து மற்றொரு வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாளாம்..
ஹரே கிருஷ்ணா!

டாக்டர் மனோகர்.

தஞ்சை மருத்துவ கல்லூரியில் MBBS.. பின் சில வருடங்களில் MD படிப்பு.. தென்னர் ஹிந்தி பிரச்சார சபா சமீபம் காஞ்சிப்பெரியவரால் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கிய ஹிந்து மிஷன் ஆசுபத்திரயில் தன் பணியை துவங்கினார் இவர். எனக்கு மைத்துனர். டாக்டர் மனோகர்.
என் மூத்த சகோதரி ஹேமலதா(Hemalatha Manohar)வின் கணவர். உறையூர், தென்னூர் சாஸ்திரி ரோடு அருகே, மலைவாசல் கிலேதார் தெரு என அங்கங்கே க்ளினிக் துவங்கினார்.
பகலில் இரண்டு மூன்று மணி நேரங்கள் மட்டும் சாப்பிட வீட்டுக்கு வருவார். மற்றபடி காலை பத்து முதல் இரவு பன்னிரண்டு மணி வரை ஆசுபத்திரி மற்றும் தன் க்ளினிக்கில் இருப்பார். எதற்காக இரவு பன்னிரண்டு வரை? மையின்கார்டு கேட், சிங்காரதோப்பு, பெரியகடை மற்றும் சின்ன கடை வீதியில் இருக்கும் பெரும்பாலான கடைக்காரர்கள் இவரது பேஷன்ட்டுகள். பத்து மணிக்கு கடையடைத்த பிறகே இவரிடம் அவர்கள் வருவதால் இரவு பன்னிரண்டு வரை வைத்தியம் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு ஊசிக்கு ஐந்து பத்து, தெரிந்தவர்களுக்கு இலவசம், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு பணம் இல்லையென்றால் இலவசமாக என இருந்தவரை என் சகோதரி சொல்லி சொல்லி பிறகு ஃபீசை உயர்த்தினாலும் காசு விஷயத்தில் கராராக இல்லாமல் இருப்பவர்.
சுப்பரமணியபுரத்தில் இவருக்கு வீடு. பொதுவாக வீட்டில் இவர் மருத்துவம் செய்வதில்லை. அப்படியும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலசமயம் அவசர சிகிச்சைக்கு வந்து விட்டால் இல்லையென்று திருப்பி அனுப்பாமல் இலவசமாகவே ட்ரீட் செய்துவிடுவார்.
பக்கத்து குடிசைப்பகுதியில் ஒரு பெண் சூடான வடித்த கஞ்சியை குடிசைக்குள்ளிருந்து வெளியே ஓங்கி வீசும்போது தனது 3 வயது குழந்தை குறுக்கே ஓடி வர, சூடான கஞ்சி பட்டு குழந்தையின் நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதியில் முழுக்க தோல் பிய்ந்து ரணமாகிப்போக, பக்கத்து மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு முன்பணமாக கட்ட பத்தாயிரம் ரூபாய் இல்லாத்தால் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ஒரு பைசா கூட அவரிடம் வாங்காமல் அடுத்த பத்து நாட்கள் தினமும் காலை மருத்துவம் பார்த்து குழந்தையை பூரண குணமடையச்செய்தவர்.
சுற்றுப்புற ஆட்டோ டிரைவர்கள் எல்லோருக்கும் டாக்டர் நண்பர். ரமலான், கிருஸ்துமஸ், பொங்கல் என எல்லா பண்டிகைகளுக்கும் இவருக்கு வாழத்துக்களும் அன்பளிப்புக்களும் குவியும்.
தலையனை மெத்தை தைக்க, வாட்ச் ரிப்பேர், போட்டோ ஃப்ரேம், கல்யாண மண்டபம், விசேஷங்களுக்கு வேன், பஸ் வாடகை, திருமண அலங்காரம், கல்யாண பாத்திரம் மற்றும் ஷாமியானா வாடகை, கார் ரிப்பேர், ரியல் எஸ்டேட் என எல்லா துறைகளிலும் இவருக்கு ஆட்கள் மற்றும் செல்வாக்கு.
நானும் என் சகோதரனும் வெளிநாட்டில் இருப்பதால் என் அம்மா அப்பா இருவரையும் நன்றாக பார்த்துக்கொண்டவர். எளிமையான மனிதர். கோபமே வராதொரு நிதானம்.. அளவான பேச்சு..வாட்சப் மற்றும் முகநூல் இல்லாமல் இன்னமும் சாதாரன கைப்பேசி..
திருச்சியில் ஒரு குறுநில மன்னன் போல வலம் வரும் என் மைத்துனர் டாக்டர் மனோகருக்கு இன்று பிறந்த நாள்.
நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நிம்மதியான வாழ்க்கை இவருக்கு அருள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை வேண்டுகிறேன்.
Image may contain: 4 people, including Keerthi Shri, Hemalatha Manohar and Sadana Mano, people smiling, people standing

Mythili Varadarajan

சில மாதங்கள் முன் பெங்களூர் சென்றிருந்த சமயம் இவரை நேரில் சந்திக்கலாமென இருந்தேன். இவரும் வீட்டிற்கு வரும்படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
ஒரு மதிய வேளை போகலாமென முடிவு செய்து மல்லேஷ்பாளையா என பிக்கப் இட்டு ஓலா டாக்ஸி தேடினேன். அடுத்த விநாடி ஓலா வரைபடத்தில் கரப்பான் பூச்சி மாதிரி ஏழெட்டு டாக்சிகளில் ஒன்று பொம்மை கார் மாதிரி சரட் சரட்டென முன்னே பின்னே நகர்ந்து திடீரென வீடு நோக்கி வர என் கைப்பேசியில் உடனே மெசேஜ். வெளியே ஓடிப்போய் டாக்சியில் அமர்ந்து ஓட்டுநரிடம் ஓட்டிபி கொடுத்த கையோடு ஓலா வரைபடத்தில் சர்ஜாபூர் அம்பாலிபுரா ரோடு எங்கேயென தேடினேன். சின்ன புள்ளியொன்று என் டாக்சி போகும் தடத்தை அழகாக காட்ட, வெளியே நல்ல டிராஃபிக்.
கரடுமுரடான பெங்களூர் சாலைகள் இன்னும் எத்தனை வருடத்திற்கென தெரியவில்லை. 80, 90 களில் எவ்வளவு அழகாக இருந்த நகரம்!. முன்பெல்லாம் அகண்ட சாலைகள் இருமருங்கிலும் மரங்கள். சிக்பேட்டில் பஸ் விட்டிறங்கி 'சிவாஜி நகர் ஹோகி' என ஆட்டோ பிடித்தால் சில்லென குளிர் காற்று நம் முகத்தில் வீச ஸ்வெட்டர் போட்ட ஆட்டோக்காரர் பத்தே நிமிடத்தில் சிவாஜி நகரில் இறக்கி விட்டு நம் முகம் கூட பார்க்காமல் காசு வாங்கிக்கொண்டு திரும்ப சிக்பேட்டுக்கே போவார். இப்ப அதெல்லாம் சாத்தியமில்லை.
பெங்களூரில் ரோட்டில் போகும்போது தலையை தூக்கினாலேயே மெட்ரோ ரயில் பாலங்கள் கட்டுமானம் தான் எங்கு பார்த்தாலும். 24 மணி நேரமும் பானி பூரி சாப்பிடும் நகரம். மோட்டார் பைக்குகளும் ஸ்கூட்டிகளும் ஆட்டோக்களும் தலை தெறிக்க ஓட்டுகிறார்கள். டிராஃபிக்கிற்கு பயந்து முதல் நாள் பய்யப்பன்னஹள்ளியில் மெட்ரோ ரயில் பிடித்து மஹாலக்ஷ்மி போய் இஸ்கான் கோவில் தரிசணம் முடித்த கையோடு கோவில் பிரசாத உணவகத்தில் கோகோனட் ஹோளிகே (தேங்காய் போளி), பெண்ணெ (வெண்ணெய்) தோசா மற்றும் காஃபின் நீக்கப்பட்ட வேதிக் காபி சாப்பிட்டது சுகானுபவம் (காபி தவிர).
ஓலா வரைபடத்தில் புள்ளி சர்ஜாபூர் ரோட்டைக்காட்ட அதற்குள் இவரிடமிருந்து குறுஞ்செய்தி.. 'எங்கே இருக்கீங்க' என. தொடர்ந்து தொலைபேசி அழைப்பு. 'இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேங்க' என சொல்லி ரோட்டை பார்த்தேன். கார்களுக்கிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் வரிசையாக ஸ்கூட்டிகளும் பைக்குகளும் புகுந்து முன்னேற, ஓட்டுநர் தொலைபேசியில் 'ஹொரகடே இல்லப்பா..ஒளகடே..நானு ஹேளிதே.. அவ்தா? அவ்தா?' என யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
பிக் பஜார் தாண்டி டோமினோ பீட்ஸா முன்னால் இடது பக்கம் திரும்பி ஶ்ரீரெட்டி கட்டிடம் நுழைந்து நேபாளி செக்யூரிட்டி காட்டிய ரிஜிஸ்தரில் கையொப்பமிட்டு முதல் தளத்தில் நாலைந்து ஃப்ளாட்டுகள் தாண்டி அழைப்புமணியை அழுத்த, கதவைத்திறந்து புன்முறுவலோடு வரவேற்றார். சென்ற ஆண்டு என் முகநூல் நண்பரானவர்.
இவரது முகநூல் பதிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில். அபாரமாக எழுதுபவர். அப்பா, சகோதரிகள் என இவரது குடும்பத்தில் எல்லோரும் புத்தகம் சார்ந்த துறைகளில் (மாக்மில்லன்) பணியாற்றியவர்கள்.
தன் குடும்பத்தைப்பற்றி சுறுக்கமாக சொல்லி, எனது குடும்பத்தாரைப்பற்றியும் விஜாரித்தவுடன்,
பணிப்பெண்ணை காபி கலக்கச்சொன்னார். காபியை உறிஞ்சியவாறே வீட்டை சுற்றி வந்தேன். அழகான இரண்டு பெட்ரூம் ஃபளாட். முன் அறை, பெட்ரூம் என எங்கு பார்த்தாலும் ஏராளமான புத்தகங்கள். எனக்கு எதிரே அமர்ந்திருந்த அவரின் கைக்கெட்டும் தூரத்தில் சோஃபாவிலேயே கொஞ்சம் புத்தகங்கள்.
புத்தகம் அதிகம் படிப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். ரயிலில் கடலை வாங்கி சாப்பிட்டாலும் கடலை பொட்டலத்தின் பேப்பரை முழுவதும் படிக்க விரும்புவேன்.
அடுத்த அரை மணி நேரம் இவருடன் பேசும்போது நிறைய மெசேஜ்கள் எனக்கு கிடைத்தன. வயதான காலத்தில் அடுத்தவருக்கு உபத்திரவமோ தொந்தரவோ கொடுக்காமல் கூடியவரையில் நம்மை நாமே பார்த்துக்கொள்வது, கவலையோ வருங்காலத்தைப்பற்றியோ நினைத்துக்கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழ்வது, பாசிட்டிவ் மனப்பான்மை, எந்த வித கஷ்டத்தையும் புன்முறுவலுடன் ஏற்று அதனுடனே பயணிப்பது, சிரமங்களை தவிர்க்க நம் நினைவுகளை திசை திருப்பி (diversion) புத்தகம் படித்தல், நண்பர்களை சந்திப்பது போன்று நமக்கு பிடித்தவற்றை செய்வது.. இவையெல்லாம் இவரிடம் கற்றுக்கொண்டேன்.
தனக்கு பிடித்தவர்கள் லிஸ்ட்டில் இவரது பேத்தி முதலிடம் என்பதை தெரிந்து கொண்டேன். அவ்வப்போது இவருடைய பதிவுகளில் பேத்தியின் புகைப்படத்தை பார்க்க முடிகிறது.
இவரின் இனிய பிறந்த நாளான இன்று பேத்தியுடனிருக்கும் இவரது பென்சில் ஓவியத்தை வரைந்து பதிவிடுவதில் எனக்கு மகிழ்ச்சி.

Thursday, December 28, 2017

ஜம்புநாதன்

கையில் இரண்டு பெட்டிகளுடன் தாதர் ஸ்டேஷனில் ரயில் மாறி வெஸ்டர்ன் ரயில்வே பம்பாய் சென்ட்ரலில் ப்ளாட்ஃபார்ம் நெ. ஒன்றில் காத்திருந்த ரயிலில் ஏறி அமரவும் ரயில் மெதுவாக நகரத்துடங்கியது. சுற்றிலும் வெள்ளை ஜிப்பா, பெருத்த சரீரமுள்ள, பான்பராக் குட்கா ஆசாமிகள். குஜராத்திகள். பே லாக் (2 லட்சம்), த்ரன் லாக் (3 லட்சம்) என வளவளவென வியாபாரம் பற்றி பேச்சு. என்னுடைய இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்திருந்த ஆசாமி சற்றும் கவலையே இன்றி என்னை இன்னும் நெறுக்கி, கொல்லென இருமும்போது என்னையும் சேர்த்து உலுக்கி நகர்த்தினார். வாப்பி, வல்சாட், நவ்சாரி என ஸ்டேஷன்களில் மக்கள் ஏற ஏற, பக்கத்து ஆசாமி என் முதுகுக்கு பின்னால் சரிந்து தூங்க, நான் சீட் நுனியில்.
தூக்கம் வரவில்லை. மனசும் சரியில்லை. பங்குச்சந்தை சரிவால் வேலை போய் இரண்டு மாதங்கள் பம்பாய் முலுண்டில் அண்ணன் வீட்டில் ஜாகை. மனைவி பிரசவத்திற்கு போயிருந்த நேரத்தில் இந்த புதிய வேலை கிடைத்து, 8 வருட பம்பாய் வாழ்க்கையை விட்டு குஜராத் பக்கம் போகிறேன்.
கம்பெனியின் தலைமை அலுவலகம் பம்பாய் வொர்லி பகுதியில். ஆருயிர் பால்ய நண்பன் Ganapathi Subramanianனின் சிபாரிசால் அங்கே க்ரூப் ஃபைனான்ஸ் கன்ட்ரோலராக இருந்த ஜம்புநாதன் ஒரு வார்த்தை சொல்லி விட்டதால் இன்டர்வியூவில் எந்த கேள்வியும் கேட்காமல் வேலை கிடைத்தது.
ஜம்புநாதனும் திருச்சிக்காரர். தென்னூர் சுப்பையா ஸ்கூல் தாண்டி ஹிந்தி பிரச்சார சபா எதிரே உள்ள அக்ரஹாரத்தில் அவருக்கு வீடு. அவரது மைத்துனர் சங்கர் என் செயின்ட் ஜோசப் பள்ளித்தோழன். கோபால் புக் டெப்போ புத்தகக்கடையை மலைவாசல் எதிரே வைத்திருந்தவர்கள்.
ரயில் மூச்சிரைத்தபடி சூரத் ப்ளாட்ஃபாரத்தில் நுழைய, 'ச்சாய் .. ச்சாய்வாலா' என சத்தம். ஒரு கும்பல் தபதபவென வண்டியில் ஏறி நெருக்கித்தள்ள, குண்டு ஆசாமி வெகுண்டு எழுந்தான். இப்போது சரியாக அவன் மடியில் உட்கார்ந்திருந்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்க்லேஷ்வர் ஸ்டேஷன் வர, முட்டித்தள்ளி நீந்தி பெட்டிகளோடு ப்ளாட்ஃபாரத்தில் குதித்து கம்பெனி காருக்காக காத்திருந்தேன். காற்றில் ஏதோ வாடை மற்றும் புகை. . மூக்கு நமநமவென அரித்தது. காரணம் அங்க்லேஷ்வரில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் மருந்து, சாயம் மற்றும் ரசாயனக்கழிவுகள். சுகாதாரக்கேடு அதிகம். ஆஸ்த்துமா நோய் வருமாம்.
இந்த ஊர்ல எத்தினி நாள் இருப்பமோ என யோசிக்கும்போதே அம்பாசடர் கார் ஒன்று வந்து நின்றது. வாய்நிறைய பான்பராக்குடன் வந்த ஆசாமி நேராக மதராஸியான என்னை அடையாளம் கண்டு சதானந்த் ஹோட்டலில் இறக்கிவிட்டான். குளித்துவிட்டு டிபனை முடித்துக்கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர் படுத்த கூட்டிப்போகும் கைதி போல கம்பெனிக்கு அழைத்துப்போனார்கள்.
ஆன்ட்டிபயோடிக் மருந்துகளான அமாக்ஸிஸிலின், செஃபலாக்ஸின் தயாரிப்பவர்கள். கம்பெனியில் என்னைத்தவிர எல்லோருமே குஜராத்திகள். ஒருவரும் அடக்கமாகவோ பதவிசாகவோ பேசமாட்டார்கள். ஃபாக்டரியில் வேலை செய்யும் முக்காவாசிப்பேர் பரூச், படோதா பகுதியிலிருந்து தினமும் ரயிலில் அப்டௌன் செய்பவர்கள். பெண்கள் சதா நொறுக்குத்தீனி அசை போட்டுக்கொண்டிருக்க, ஆண்கள் நொடிக்கொரு முறை தாய் மற்றும் சகோதரியை குறிப்பிட்டு சொல்லும் ஹிந்தி கெட்டவார்த்தைகளை பிரயோகித்தார்கள். (நிற்க..! அது என்ன கெட்ட வார்த்தையாக இருக்கும் என இப்ப யோசிக்காமல் அடுத்த பாராவுக்கு போகவும்)
சிரிக்காதீர்கள்! கம்பெனி உள்ளே நுழையும்போதே 'ஏண்டா சாலே! ஆறுமாதமா பணம் தராமெ என்னடா கம்பெனி நடத்தறீங்க! என கர்ஜித்தவாரே நம்மிடம் வரும் சப்ளையர்கள்.. மணிக்கொருமுறை சாய் குடித்து குட்கா பொட்டலத்தை கிழித்து வாய்க்குள் போட்டு எச்சில் வழியாமலிருக்க தலையை தூக்கி பேசும் மானேஜர்கள்..படோதாவிலிருந்து வரும் கர்னாவதி எக்ஸ்பிரஸ் இன்று ஏன் லேட் என வெட்டிப்பேச்சு பேசும் மேத்தாக்கள், தேசாய்கள், படேல்கள்..
அவர்களுடன் மதிய உணவு சாப்பிடும்போது கவனிப்பேன்.. சீராக அடுக்கப்பட்ட, அப்பளம் போல ஒரே சைஸில் பத்து பன்னிரெண்டு சன்னமான சப்பாத்திகளை டிபன் பாக்ஸிலிருந்து மொத்தமாக எடுத்து அப்படியே முறுக்கி பிய்த்து, எண்ணெய் நிரம்பிய ஆலு சப்ஜியில் முக்கி எடுத்து சாப்பிடுவார்கள். பொதுவாக குஜராத்திகள் எல்லோரும் உணவுப்பிரியர்கள். காலை உணவு டோக்ளா சாபுதானா வகையரா. மதியமும் இரவும் ரோட்டி, எண்ணெய் சொட்ட சப்ஜிகள், கிச்சடி, நடுவே சமோசா, கச்சோரி, ஶ்ரீகண்ட், வேர்க்கடலை (பரூச் கா சிங்தானா பிரபலம்). இரவு பத்து மணிக்கு மேல் வெட வெட குளிரில் ஐஸ் க்ரீம் கடையில் கூட்டம் அம்மும். ஆண்கள் மேல் பாகம் பெருத்து ஒல்லியான கால்களில் முடிய, பெண்கள் எப்படி ஆரம்பித்தாலும் அகலமாகவே முடிவார்கள்.
மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான penicillin-Gயை (Pen-G) எங்கள் நிறுவனம் அரசாங்க அனுமதியுடன் இறக்குமதி செய்வார்கள். அது கிடைப்பதற்கரிய வஸ்து என்பதால் அரசாங்கம் கோட்டா விதித்திருத்தது. பென்ஜி எவ்வளவு உபயோகப்படுத்தினோம் என்ற கணக்கை தணிக்கை செய்ய food and drugs administration துறையிலிருந்து மாதமொரு முறை அதிகாரிகள் வந்துவிடுவார்கள். தவிர அவ்வப்போது விற்பனை வரி அலுவலகத்திலிருந்தும் வந்து நிற்பார்கள். ஃபாக்டரி அக்கவுண்ட்ஸ் இன் சார்ஜான நான் தான் அவர்களை சமாளிக்க வேண்டும். பொழுது விடிந்தால் பிரச்சனை தான்.
கம்பெனியிலிருந்து பத்தே நிமிடத்தில் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ். கிட்டத்தட்ட இரண்டாயிரம் சதுர அடியில் விசாலமான ஃப்ளாட். பெரிய பால்கனி. நான், மனைவி உஷா, இரண்டுமாத குழந்தை பிரஷாந்த் மற்றும் குறை பிரசவ குழந்தை சைஸில் இரண்டு பல்லிகள் அந்த ஃப்ளாட்டில் குடியிருந்தோம். மாலை ஆபிஸிலிருந்து வந்து ஃபளாட்டில் நுழையும்போது உஷா சோஃபா மீது ஏறி நின்று கொண்டிருப்பாள், அறை ஒரத்தில் தரையில் பல்லி நின்று கொண்டிருப்பதால். சிலசமயம் சுவற்றிலிருந்து ச்ச்ச்சப்ப்ப்பென சப்தத்துடன் பல்லி தரையில் குதிக்கும்போது உஷா அலறாமல் இருந்தால் அதிசயம் தான்.
காலை மாலை பான்பராக் அம்பாசடர் வந்துவிடும். நாங்கள் ஐந்து மானேஜர்கள் ஒரே பில்டிங்கில் வசித்தாலும் ஆபிசில் எலியும் பூனையுமாக இருப்பவர்கள். எதை கேட்டாலும் குதர்க்கமாகவே பதில் சொல்லும் ஸ்டோர்ஸ் மானேஜர் படேலுக்கு என்னை பிடிக்கவில்லை போலும்.
'என்னங்க படேல்சாப்.. ரெண்டு நாளா ஆபிஸ் வரலியே நீங்க?' வாஞ்சையோடு கேட்பேன்.
'அர்ரே! பீவி புக்கார் ஹெ.. மனைவிக்கு உடம்பு சரியில்லை..'
அத்தோடு நான் விட்டிருக்க வேண்டும்.
'ஆமா.. உங்க வைஃப்க்கு தானே காய்ச்சல்.. நீங்க ஏன் லீவ் எடுத்தீங்க?'
'பின்னே நீயா லீவு எடுப்பே?'
இவன் பட்டேல் இல்லை.. பொட்டேல். சரியாக வாங்கி கட்டிக்கொண்டேன். அன்றிலிருந்து நான் அவனிடம் அதிகம் வைத்துக்கொள்வதில்லை.
கம்பெனியில் எல்லோருமே எகத்தாளமாக பதில் சொல்கிறார்களே! காலை எட்டு மணிக்கு ஃபாக்டரி உள்ளே நுழையும்போது இரும்பு பக்கெட்டில் எதையோ எடுத்துக்கொண்டு எதிரே வந்தான் ஆபிஸ்பாய் மஹிசூரி. பக்கெட்டிலிருந்து பக் பக்கென புகை வேறு. 'அதென்னப்பா?' எனக்கேட்ட என்னிடம் 'இது லிக்விட் நைட்ரஜன் சார். ஒரு கரண்டி மொண்டு உங்க உள்ளங்கைல வச்சாக்க அந்த ரசாயணம் கைய பொத்துக்கிட்டு சதை வழியா கீழே இறங்கும். ஊத்தீறவா?' என பக்கெட்டை பக்கத்தில் கொண்டு வந்தவனை தடுத்து 'ஏம்ப்பா.. மஹிசூரி! யாரு பெத்த புள்ளப்பா நீ! ராவுகாலத்தில் பொறந்தியா?' எனக்கேட்டு அந்தப்பக்கம் ஓடினேன். மரியாதை தெரியாத மணி சங்கர்கள்.
எப்படி இந்த கம்பெனியில் காலத்தள்ளுவது என யோசிப்பேன். அந்த ஊர் காற்றில் நஞ்சு.. அலுவலகத்தில் வேலைப்பளு.. சக சிப்பந்திகள் ஒத்துழைப்பு இல்லை. ஒரே ஒரு ஆறுதல். தலைமை அலுவலகத்தில் ஜம்புநாதன் சார் மட்டுமே பரிவாக பேசக்கூடியவர்.
மாதமொரு முறை ஜம்புநாதன் சார் ஃபாக்டரி விசிட்டுக்காக பம்பாயிலிருந்து வந்தால் ஆபீஸே அல்லோகலப்படும். பெனிசிலின்-G இருப்பு எவ்வளவு, எவ்வளவு கொள்முதல் செய்தோம், அந்த மாத உற்பத்தி எவ்வளவு என சில எண்களை பார்த்த ஒரு சில நிமிடங்களிலேயே என்ன தில்லுமுல்லு நடந்திருக்கும் என சட்டென கணிப்பார். இத்தனை டன் பெனிசிலின்-G உபயோகித்தால் இன்ன அளவு அமாக்ஸிஸிலின் தான் உற்பத்தி செய்திருக்க முடியும். இல்லையென்றால் yield குறைய காரணமென்ன என கேள்வி கேட்டு ப்ரொடக்‌ஷன் மானேஜர் சிட்னிஸை நின்ன வாக்கிலேயே உச்சா போக வைப்பார். அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல அக்கவுண்டன்ட்கள் லோட்டஸ் 123யில் தலையை விட்டு தேடுவார்கள்.
மாலை படு காஷுவலாக மானேஜர்களுடன் 'முஜே எக்ஸ்ட்ரா மஸ்கா!' என ஆர்டர் செய்து மூக்கில் ஜலம் வழிய ரசித்து பாவ் பாஜி சாப்பிடுவார். ஆபிஸை மறந்து கிண்டலடித்து அரட்டையடிப்பார். சிகரெட், குட்கா, மது போன்ற லாகிரி வஸ்துக்கள் கிடையா. டை கட்டும் வழக்கம் இல்லை. டிசைன் மற்றும் நிறமில்லா வெள்ளை அரைக்கை சட்டையை பாண்ட்டுக்குள் திணிக்காமல் எடுத்து விட்டிருப்பார். மெல்லிய சட்டைக்குள்ளிருந்து தொப்பையில்லா வயிற்றில் கருப்பு பெல்ட் தெரியும்.
திடீரென பார்த்தால் ஒரு வார லீவில் திருச்சி பட்டர்வொர்த் ரோட்டிலுள்ள தன் வீட்டு வாசல் திறந்த வெளியில் ஈசி சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். அப்பவும் கையில் ஏதோ மானேஜ்மென்ட் புத்தகம். பக்கத்தில் காலி டபரா. அங்கேயும் அவரை விட்டு வைக்காமல் நான் ஆஜர். 'நானும் லீவு சார். ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன். உங்களையும் அப்பிடியே பாத்துட்டு...' என ஏதோ சாக்கு. வந்ததே அவரை பார்க்கத்தான் என அவருக்கு தெரியுமோ இல்லையோ, அருமையான காபி நமக்கு உண்டு.
நிறைய முறை பம்பாயில் அவரது வீட்டிற்கு கணபதி என்னை அழைத்துச்சென்றிருக்கிறான். நான் அவர் மூலம் இந்த வேலைக்கு வந்தவன் என்பது கம்பெனியில் எல்லோருக்கும் தெரிந்தாலும், வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமென கொஞ்சம் கண்டிப்புடன் எதிர் பார்ப்பவர்.
பம்பாய் 'தானே' பகுதியில் வீடு அவருக்கு. டானென்று காலை எட்டு மணிக்கு ப்ரீஃப் கேஸ் சகிதம் நெற்றியில் சிறிய விபூதி கீற்றுடன் தன் ஃபியட் கார் பின் இருக்கையில் ஏறுவார். வண்டியை ஸ்டார்ட் செய்தவுடனே டிரைவர் சஷ்டி கவசம், சஹஸ்ரநாமம் என காசெட்டை தட்டி விட, இவர் ஸ்லோகங்களை உச்சரித்தபடி எகனாமிக் டைம்ஸ், ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைகள், இந்தியா டுடே, சுச்சேதா தலால், சுவாமிநாதன் அங்கலேஸாரிய அய்யர் கட்டுரைகள் என அவர் உலகமே தனி.
விக்ரோலி கொத்ரெஜ் பாய்ஸ் கம்பெனி தாண்டும்போது தண்ணீர் எடுத்து குடிப்பது என எல்லாம் டயத்திற்கு செய்வார். 'வனமாலி கதி சார்ங்கி சங்கி சக்ரீ ச நந்தகி' யின் போது பிரிமியர் பத்மினியிலிருந்து தலையை திருப்பி வெளியே பார்த்தால் வொர்லி சிக்னல் தாண்டும் என சத்தியம் செய்வேன். இது தினமும்..
கம்பெனி முதலாளிகள் காந்தி சகோதரர்கள் ஜம்புநாதன் சொல்வதை தெய்வ வாக்காக மதிப்பவர்கள். பம்பாயிலிருந்து அங்க்லேஷ்வர் பாங்க் மானேஜருக்கு ஒரே போன் காலில் பல லட்சங்களை இன்வாய்ஸ் பில் டிஸ்கௌண்ட் அக்கவுண்ட் மூலம் வரவு வைப்பார். அந்த அளவிற்கு அனுபவமும் இன்ஃப்ளுவென்ஸும் கொண்டவர்.
எப்படியோ ஒருநாள் கணபதி மூலம் எனக்கு பஹ்ரைன் வேலை கிடைத்து விசா வந்து விட்டது. மூன்று மாத நோட்டிஸ் கொடுத்து விட்டு பிறகு நீ போகலாமென ஆபிஸில் சொல்லிவிட விசனத்துடன் வந்து சீட்டில் அமர்ந்தேன். ஏதாவது பிரச்சனை செய்வது என அவர்கள் இருந்ததால் மாலை ஜம்புநாதனுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். 'கம்பெனி விதிமுறைகள் அப்பிடியாச்சேப்பா!.. உன் காண்ட்ராக்ட்ல அப்பிடி போட்டிருந்தா என்ன செய்வே?' என அவர் கேட்க அழுகையே வந்துவிட்டது எனக்கு.
'உடனே ஜாயின் பண்ணலேன்னா பஹ்ரைன்ல விசா கான்சல் பண்ணிருவாங்க சார்' என நான் கெஞ்ச, அவர் 'இப்ப நான் தலையிடுவது சரியில்லப்பா. உன் காண்டிராக்ட் பிரகாரம் மூனு மாச நோட்டீஸ்.. இல்லாட்டி 3 மாச சம்பளத்தை சரண்டர் பண்ணலாமே!. நீ அதை பண்ண மாட்டேன்னு நினைச்சிட்டிருப்பாங்க.. மூனு மாச சம்பளத்த பஹ்ரைன்ல சம்பாரிச்சுக்கலாம்பா! ' என அவர் சொல்ல மறு நாள் காலை லெட்டர் எழுதிக் கொடுத்தேன்.
அடுத்த சில மணி நேரத்தில் எனது 'த்யாக் பத்ர' விஷயம் ஹெட் ஆபிஸுக்கு போனது.. ஜம்புநாதனிடமிருந்து ஃபாக்டரி வொர்க்ஸ் மானேஜருக்கு டெலக்ஸ் வந்தது. ஆபிஸ் மீட்டிங் ரூமில் சமோசா, கச்சோரி, ஜிலேபி வாசனை. ஃபேர்வெல் பார்ட்டியாம். நாற்பது பேர் கூடி என்னை வாயார வாழ்த்த, நானும் இந்த மாதிரி ஒரு அருமையான ஆபிசை பார்த்ததே இல்லையென இரண்டு நிமிடம் புளுகி (இல்லாட்டி விசா போச்சே!) , சிலரின் உருவப்படத்தை (ஜம்புநாதன் உள்பட) கார்ட்டூனாக வரைந்து காட்டி, கைத்தட்டல் பெற்று, ஓரிரு நாளில் பம்பாய் வந்து, விமானம் ஏறும் முன் ஜம்புநாதனிடம் ஆசி பெற்று பஹ்ரைன் வந்திறங்கி 23 வருடங்கள் ஓடியது தெரியவில்லை.
பி.கு: ஜம்புநாதன் சாருக்கு இந்நேரம் 75 வயது பூர்த்தியாகியிருக்கும்,10 ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக புற்று நோய் வந்திராவிட்டால்..

Sunday, November 12, 2017

எலி

'Hey! there is a rat in my room' கத்தியபடி ஓடி வந்தான் பெரியவன். மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் எலும்பு முறிவுடன் அதிர்ஷ்ட வசமாக தப்பி, ஓய்வெடுக்க பெங்களூரிலிருந்து பஹ்ரைன் வந்திருக்கிறான்.
'கரெக்ட்! நேத்திக்கி ஏதோ குறுக்கே ஓடுன மாதிரி இருந்தது. அப்ப நம்ம வீட்ல எலி இருக்கு போல'- மனைவி உஷாவும் சொல்ல..
வாட்ச்மேன் சஹதேவ்வை அழைத்தோம். பகல் வாட்ச்மேன் அவன். ஆபத்பாந்தவன் மாதிரி எல்லாவற்றுக்கும் பதட்டமில்லாமல் ஓடி வருவான். காஸ் சிலிண்டர் வாங்கி வைப்பது, பூ பறித்து கொடுப்பது, டியூப்லைட், ஷவர் மாற்றுவது போக மற்ற நேரங்களில் கைப்பேசி, கைராலி, ஏசியாநெட் தான்.
நேரே உள்ளே வந்து வந்து கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்தான். 'ஒந்நும் காணுந்நில்லா! ராத்திரி பொறத்தே வரும்.. பின்னே நோக்காம்' என நகர்ந்தான்.
பெரியவன் அதற்குள் ஒரு அட்டை டப்பாவை கொண்டு வந்து கட்டிலுக்கு கீழே வைத்தான். டப்பாவின் மூடியை இரண்டு பக்கமும் உட்பக்கம் சரிந்த மாதிரி மடக்கி வைத்து, உள்ளே ஏதோ பதார்த்தத்தை வைத்து, எலி டப்பாவின் மேற்பரப்பில் ஏறினால் சரிந்து உள்ளே விழும் ஆனால் வெளியே வர முடியாது என விளக்கமும் அளிக்க அவனை 'அடப்போடா!' என எ(ல்)லி.. சாரி.. எள்ளி நகையாடினோம்.
பொதுவாக எலியை மசால்வடை வைத்து தானே எலிப்பொறியில் பிடிப்பார்கள்!. 70 களில் திருச்சி தென்னூர் பென்ஷனர் கார தெருவில் எங்கள் வீட்டில் எலிகள் நடமாட்டம் அதிகம். அதுவும் பெருச்சாளிகள். கம்பளி மாதிரி தோல். கிச்சன் கதவை மூடிக்கொண்டு கையில் கம்புடன் அப்பா உள்ளே எலியை டமார் டமார் என அடிக்க அண்டா குண்டா தேக்சா எல்லாம் உருளும் சத்தம். பெரிய அடுக்களை அது. பத்து பெண்கள் வட்டமாக கும்மியடித்து ஆடலாம். அதனால் எலி அப்பாவை கபடி ஆட வைக்கும். கதவை லேசாக திறந்து நானும் என் தம்பியும் உள்ளே புகுந்த சில நிமிடங்களில் மறுபடியும் டமார் டமார் சத்தம். அது எலிக்கல்ல. எங்களுக்கு. அடி வாங்கிய படி வெளியே ஓடி வருவோம்.
மூலக்கொல்லை தெரு மளிகைக்கடை கணேசன் எலியை தேங்கா சில்லு வைத்து பொறியில் பிடிப்பான். உடனே கவனமாக கோணிப்பையின் வாயில் எலிப்பொறியை நுழைத்து சாக்கிரதையாக எலியை கொட்டி, பட்டாபிராம பிள்ளை தெருவே அதிர ரோட்டில் சாத்தி, பின் செத்த எலியை கடாசுவான். உண்மையிலே அவன் கில்லாடி! ரிஎலி!
பொதுவாக எல்லா எலிகளும் நைட் டூட்டி தான் பார்க்கும். அதனால் எலிதாக... ச்சீ... எளிதாக நம் கண்ணில் படுவதில்லை. வயல்வெளிகளில் எலிகள் வளை கட்டிக்கொண்டு குடியிருக்கும். இரவில் இரை தேடும் எலிகள் பகலில் பகைவர்களிடமிருந்து பாதுகொள்ள வளையை திறக்காமல் மண்ணால் அடைத்து வைத்திருக்குமாம். எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது உயிர் தப்ப வளையிலிருந்து மேல் பக்கமாக மண்ணை திறந்துகொண்டு ஓடி பிழைத்துக் கொள்ளுமாம். (தகவல்: வளையிலிருந்து.. மன்னிக்க.. வலையில் இருந்து!)
மாலை எங்கள் ஆபிஸ்பாய் லத்தீஃப் எலிப்பொறி கொண்டு வர, பெரியவன் அதை எடுத்து பார்த்தான். இரும்புப்பொறி. கூர்மையான முட்களால் மாட்டும் எலி உடனே இரத்தம் சிந்தி செத்துப்போகும். எலியைக்கொன்று விடும் எலிப்பொறியெல்லாம் வேண்டாமென அவன் சொல்லிவிட, லத்தீஃப் உடனே மரப்பெட்டி பொறியை கொண்டு வந்து வைத்துவிட்டுப்போனான். பிடித்தவுடன் அதை உயிருடன் வெளியே விட்டுவிட வேண்டுமாம். பெரியவன் தீர்க்கமாக சொன்னான்.
அடுத்ததாக வாட்ச்மேன் சஹதேவ் மனாமாவிலிருத்து ஏதோ பசை உருண்டை கொண்டு வந்தான். அது தான் எலியை பிடிக்குமாம். ஒரு பிளாஸ்டிக் தட்டில் அந்த பசையை வைக்க, திரும்ப அதை பிய்த்து எடுக்க முடியவில்லை. கட்டிலுக்கடியில் அதை தள்ளினான். குனிந்து கட்டிலின் அடிப்பாகம் பார்த்தேன். பெரியவன் வைத்த அட்டை டப்பா, லத்தீஃப் வைத்த எலிப்பொறி மற்றும் சஹதேவ்வின் பசை உருண்டை என அந்த இடமே திருச்சி சத்திரம் பஸ்டாண்டு மாதிரி இருந்தது.
அந்த பசை எலியை ஈர்க்குமாம். எலி வந்து அந்த வஸ்துவை ருசி பார்க்கும்போது அதன் காலோ உடலோ பசையில் பச்சக்கென ஒட்டிக்கொள்ளுமாம். ஆனால் எலி சாகாதாம்.
பொதுவாக எலி சுவற்றை ஒட்டி தான் ஓடுமாம். அறையின் குறுக்கே ஓடாதாம். அங்கங்கே துணி வைத்து தடுத்திருந்தான் பையன்.
ஆச்சு.. டெய்(எ)லி பையன் ரூமுக்கு போகும்போதெல்லாம் நானோ, மனைவி உஷாவோ குனிந்து கட்டிலுக்கடியில் பார்ப்போம். இரண்டு நாட்களாகியும் எலி வந்த பாடில்லை. இரவில் மட்டும் கரக் கரக் சத்தம் வருவதாக பெரியவன் சொல்லிக்கொண்டிருந்தான். மரப்பொறியிலும் அட்டை டப்பாவிலும் எலிக்கான பண்டத்தையும் மாற்றினான்.
நேற்று ஆபிஸ் முடிந்து வீட்டின் வாசலில் காரை நிறுத்தும்போது சஹதேவ் அந்த பசைத்தட்டுடன் 'எலி'கன்ட்டாக வெளியே வந்தான். பசையுடன் ஒட்டி படுத்தவாக்கில் எலி.
'எலி கிட்டி...' முகம் நிறைய சந்தோஷம் அவனுக்கு.
'அய்யய்யோ செத்து கித்து போய்டலையே'- பயம் எனக்கு. பெரியவன் வேறு கண்டிப்பாக சொல்லியிருந்தான் எலியை உயிரோடு தான் பிடிக்க வேண்டுமென.
'அல்ல.. மரிச்சிட்டில்லா.. ஜீவனுண்டு'- சஹதேவ் எலியை விரலால் தட்டினான்.
மிகவும் சின்ன எலி..பார்க்க அழகாக துறுதுறுவென இருந்தது. அழகான உருண்டை கண்கள். பிங்க் நிற குட்டிக்கால்கள். வயிற்றுப்பகுதியும் பிங்க் நிறம். கொஞ்சம் சோர்ந்திருந்தது. ஆனால் இன்ட்(எ)லிஜென்ட்! . உடம்பில் மொசமொசவென அதிகம் அடர்த்தியில்லாத ரோமம்.
பெரியவன் ஆசையாக அதை தொட்டுப்பார்க்க, எலி பயத்துடன் துள்ளியது லேசாக கீச் கீச் சத்தத்துடன். பசையை தட்டிலிருந்து எடுப்பதே கஷ்டமாக இருந்தது. பசை உருண்டையை கட்டிப்பிடித்தபடி எலி பரிதாபமாக படுத்துக்கிடந்தது.
'என்னப்பா சஹதேவ்? இப்ப எப்பிடி எலியை பசையிலிருந்து பிரிச்சி எடுப்பே?' என கேட்டேன். பெரியவன் முகத்திலும் கவலை.
'ஒந்நுந்செய்யாம் பற்றில்லா சாரே'- சஹதேவ் ரூமில் சென்ற வாரம் எட்டு இடத்தில் பசையுடன் எலிகளை பிடித்தானாம். 'ஈ எலிய தூக்கிக்களையனும்' என்றவனை தடுத்து..
'ஐயோ! பாவம்பா! வேணாம். பசையை அப்பிடியே எலி உடம்புல இருந்து பிச்சு எடுக்க முடியாதா' - பெரியவன் சோகத்துடன் கேட்டான்.
'அல்ல.. எலியிண்ட தோலும் வரும்'- கேட்கவே பகீரென்றது.
அந்த சின்ன எலி கண்களை பெரிதாக திறந்துகொண்டு ஒருக்களித்து படுத்து கிடக்க வயிறு மட்டும் சீராக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது.
'பேடிச்சுப்போயி!'- சொல்லிக்கொண்டே எலியுடன் கிளம்பிப்போன சஹதேவ் நேராக குப்பைத்தொட்டியில் அந்த குட்டி எலியை உயிரோடு தூக்கியெறிந்தான்.
எலிப்பொறி மரப்பெட்டியை லத்தீஃப் திரும்ப எடுத்துக்கொண்டு போனான்.
சட்டென வீட்டில் ஒரு வித மௌனம் நிலவியது. எலியின் அழகான முகம் அப்பப்ப வந்து போனது.
பி.கு 1: இன்று காலை பெரியவன் அறையில் அவன் வைத்திருந்த அட்டை டப்பா அப்படியே இருந்தது. ஆனால் கவிழ்த்து வைத்திருந்தான். எலி வந்தாலும் இனி மாட்டாதாம்.
பி.கு 2: அநியாயமாக சின்ன எலி ஒன்றை கொன்றதற்கு பிராயச்சித்தமாக, ஓரிரு மணி நேரம் உட்கார்ந்து எலியின் பென்சில் ஓவியம் ஒன்று இதோ!..

RBI மாமி மெஸ்...


1987.. செம்பூர் ரயிலடியிலிருந்து பத்தே கட்டிடங்கள் தள்ளி ரோட்டோர கேலா, சிக்கூ வண்டிகள் கடந்து கொவாண்டி ரோட்டில் பெயின்ட் உதிர்ந்த கொஞ்சம் பழைய 'திருமூர்த்தி பில்டிங்'கில் தான் எனக்கு ஜாகை. சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட். ஆனால் கிச்சன் நமக்கு இல்லை. வீட்டு ஓனர் மாமி தன் வீட்டு சாமான்களை கிச்சனில் வைத்து பூட்டி வைத்திருந்ததால் சமைக்க முடியாது. முதன்முதலில் வேலைக்கு பம்பாய் வந்த புதிது. சொற்ப சம்பளம். சிக்கனமாக இருக்க வேண்டி மெஸ்ஸில் தான் சாப்பிட முடியும்.
காலை செம்பூரில் ரயில் பிடித்து குர்லா மற்றும் தாதரில் ரயில் மாறி மாடுங்கா கன்செர்னில் எட்டு மணி வாக்கில் நுழைந்து என்னைப்போல ஏழெட்டு பேருடன் வாழை இலை முன் அமர்ந்தால் சுடச்சுட சாதத்தில் சேனை விழுது-தேங்காய்-மிளகு அறச்சு விட்ட திக்கான குழம்பும் ஒரு கூட்டும், சற்றே புளித்த மோரும்.. திவ்யமான சாப்பாடு. அப்பத்திக்கி வயிறு நிரம்பி விடும். ஆனால் அங்கிருந்து வெஸ்டர்ன் ரயில்வே வந்து பாம்பே சென்ட்ரல், கிராண்ட் ரோடு அடுத்து சர்னி ரோட்டில் இறங்கி ஆபிஸ் போய்ச்சேரும்போது லேசாக பசி எடுக்க ஆரம்பிக்கும். சாப்பாட்டு விஷயத்தில் என்னை 'பக்கி.. பக்கி' என அம்மா திட்டுவது அவ்வப்போது நினைவுக்கு வரும்.
ஞாயிறன்று சயான் மணிஸில் உ.கி கறி, வெ.சாம்பார் சாப்பாட்டுக்காக மெஸ் வாசலில் வரிசையில் அரை மணி நேரம் தேவுடு காக்க தயங்கியதேயில்லை. சில சமயம் அவசரத்திற்கு செம்பூர் ஜீவன் மெஸ்ஸே உத்தமம். நெய் தெளித்த ரெண்டு சுக்கா சப்பாத்தி, சின்ன தட்டில் அரிசி, சற்றும் அலுக்காத (மெஸ் நடத்தும் ஷெட்டிக்கு) குந்துரு சப்ஜி (கோவைக்காய் பொறியல்), லேசா கிருஷ்ணாயில் வாசனையோடு தால் எல்லாம் சேர்த்து வெறும் நாலு ரூபாய்க்கு. சினிமா பார்த்து விட்டு லேட்டாக வந்தால் திருநெல்வேலி அண்ணாச்சி ரோட்டுக்கடை இட்லி தோசை பரோட்டா தான்.
அப்போது தான் RBI மாமி மெஸ் பற்றி கேள்விப்பட்டோம். சக நண்பன், பார்க்(BARC)கில் வேலை செய்யும் தக்கலை பத்மநாபன் மற்றும் கம்பெனி செக்ரடரி சந்துரு (Balasubramaniam Chandrasekaran) மூலம் மாமி மெஸ்ஸில் சேர்ந்தேன். அதென்ன RBI மாமி? கொஞ்சம் இருங்க..
காலை 8 மணிக்கு கிளம்பி, ரயிலை பிடிக்க எதிரே கூட்டமாக வரும் தேவ்ளேக்கர், ஜோஷி, தேஷ்பாண்டேக்களை தாண்டி, கட்டிங் சாய் கடைகள், உ.பி பை(h)ய்யாக்களின் மாருதி சைஸ் இஸ்திரி (பெட்டி) கடை, தேவி மந்திர், தொளதொள காக்கி ட்ரவுசர் வெள்ளை சட்டை RSS தாத்தாக்களை கடந்து தெருக்கோடியில் RBI குவார்ட்டர்ஸுக்குள் நுழைவோம். எல்லாம் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட்கள். அங்கே தான் மாமி மெஸ் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதான் RBI மெஸ் மாமியென நாமகரணம்.
முதல் மாடியில் ஒரு ஃப்ளாட். சிறிய ஹால். பத்து பதினைந்து பிரம்மச்சாரிகள் சாப்பிட்டுக்கொட்டிருக்க, கிச்சனிலிருந்து எங்கள் தட்டுக்களை எடுத்து அலம்பி ஹாலில் வந்து அமர்வோம். பெரிய பாத்திரத்தில் இட்லி, பக்கத்தில் சாம்பார், சட்னி இருக்க, சர்.. சர் என பாத்திரங்களை தங்கள் பக்கம் இழுத்து இட்லி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.
மாமாவுக்கு ஃபோர்ட் பகுதியில் ரிசர்வ் வங்கியில் சீனியர் ஸ்டெனோக்ராஃபர் ஜோலி. பாலக்காட்டுக்காரர். சிகரெட் வலித்த தடித்த சுண்டு (உதடு). டிட்வாலா ட்ரெயினில் தினமும் 'பத்தா' (சீட்டு) விளையாடும் பார்ட்டி. வீடு வந்து சேர இரவு பத்து மணியாகும். மாதா மாதம் சம்பளம் அவர் கைக்கு வந்தாலும் ஒரு காசு வீட்டிற்கு வராது. அதனால் தான் மாமி மெஸ் நடத்தும் நிலை.மாமி மற்றும் கல்லூரியில் படிக்கும் அவரது பெண் ராஜி அடுக்களையில் தான் இருப்பார்கள். CA படிக்கும் ஒரே பையன் விக்னேஷ் உள்ளே படுக்கையறையில் படித்துக்கொண்டிக்க அந்த வீட்டில் சதா கூட்டமாக இருக்கும்.
சிலர் ஆர்.பி.ஐ. குடியிருப்பு வளாகத்தில் அந்த மெஸ் நடத்தவதை எதிர்த்து புகார் அளித்தும், மாமி வங்கி மேலிடத்தில் போய் அழுது, மாமாவின் செய்கையால் அவர்கள் இரக்கப்பட்டு மெஸ் நடத்த எழுத்தப்படாத அனுமதி கிடைத்தது.
அங்கே சாப்பிடும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகை. பாலக்காடு கொடுந்திரபள்ளி வெங்கடேசன் லோயர் பரேலில் சிந்தி கம்பெனியில் கிரெடிட் கொண்ட்ரோலராக்கும். 'நம்மட அப்ரூவல் இல்லெயெங்கில்.. (இட்லியை சாவகாசமாக முழுங்கி).. சாதனம் ஒந்நும் டெலிவரி செய்யாம்பற்றில்லா.. அறியோ!'.. என அவன் பேச ஆரம்பித்தால் எல்லோரும் தலை தெறிக்க கை அலம்ப ஓடுவார்கள்.
சாத்தபுரம் ராமேந்திரன்(ராமச்சந்திரன்), கவில வாழப்பில் பாலஷ்ணன்(பால கிருஷ்ணன்), சோமட்டா (சோமன் அண்ணா) என விதவிதமான பெயர்கள். கழுத்து எலும்பு துறுத்திக்கொண்டு படு ஒல்லியான பசங்கள். அத்தற ஆள்கார்ரும் ஸ்டெனோ அல்லது அக்கவுண்டன்ட்டுகள். செட்டாநகர் முருகன் கோவிலில் தினமும் நாராயணீயம் படிப்பவர்கள். அதில் ஒருவன் ரொம்ப பயந்த சுபாவம். ஆயாளு வயசுப்பெண்கள் எதிரில் வந்தால், புள்ளி.. வெட்கத்துடன் பட்டந்நு ரோட்டை க்ராஸ் ச்செய்யும்.
புதிதாக வந்த கிருஷ்ண குமார் நம்பூதிரி சாம்பாரை கரண்டியால் கலக்கி கலக்கி பார்க்க, குறும்புக்கார தஞ்சாவூர் பையன்களுக்கு ஒரே சிரிப்பு. 'தம்பி நம்பூதிரி! உன்னோட நம்பிக்கைய பாராட்ரோம். ஆனா நீ எவ்ளோ கலக்குனாலும் சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும்' என வெடிச்சிரிப்பு சிரிக்க, 'ஆமான்டா! நாளைலேர்ந்து பாண்டி பசங்களுக்கு அதுவும் கிடையாது' என மாமியின் சத்தம் கிச்சனிலிருந்து கேட்கும். எப்போதும் கிண்டல், சிரிப்பு தான் அங்கே. இரவு எவ்வளவு லேட்டாக வந்தாலும் மாமி சாப்பாடு வைத்திருப்பார்கள். முகம் சுளிக்காமல் எல்லோரையைம் பார்த்துக்கொள்வார்கள். பேயிங் கெஸ்ட் என நாலு பேர் அங்கேயே தங்கியிருந்தார்கள்.
எல்லோரும் எட்டரை மணிக்குள் அவசரம் அவசரமாக சுவர் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்கள். காரணம் எட்டரை மணிக்கு பிரேமன் வந்து சாப்பிட உட்கார்ந்தால் அப்புறம் மற்றவர்களுக்கு ஒன்றும் மிஞ்சாது. சிவந்த மேனி, நெடுநெடுவென உயரம், திடகார்த்தமாக ஜிம் பாடியுடன் அடர்த்தியான மீசையுடன் மலையாள நாயகன் போல வருவான் பிரேமன். இட்லி பாத்திரத்தை அப்படியே தட்டில் கவிழ்த்து, அட்ய டயத்தில் பத்து பன்னிரண்டு இட்லிகளை கொட்டி, சாம்பார் சட்னியை பாத்திரத்துடன் தட்டில் சாய்த்து, முழு இட்லியை சாம்பாரில் முக்கி, மாயாபஜார் ரங்காராவ் மாதிரி லபக்கென வாயில் போட்டு விழுங்குவான். சி.சி. சோக்ஸி ஆடிட் ஃபர்மில் வேலை செய்யும் இளம் சார்ட்டர்டு அக்கௌண்டன்ட் அவன். யாரிடமும் அதிகம் பேசாமல் சாப்பிட்டவுடன் இடத்தை காலி செய்பவன்.
மதியத்துக்கும் டப்பா கட்டிக்கொண்டு போகும் பேச்சுலர்கள் உண்டு. இரவு சாப்பாடு ஏழு மணியிலிருந்து ஆரம்பம். அறைச்சு விட்ட சாம்பார், ஒரு கூட்டோ பொறியலோ, ரசம், மோரென முழு சாப்பாட்டிற்கு மாத இறுதியில் மாமி வாங்கும் பணம் ரொம்ப சொற்பம். பண்டிகையன்று முளகூட்டல், எரிசேரி, புளிசேரி, ஓலன், மோர்க்குழம்பு, அடப்பிரதமன், பால் பிரதமன் என வெரைட்டியான சாப்பாடு. தனியாக அதற்கு காசெல்லாம் கிடையாது.
இளம் வயசுப்பையன்கள் அங்கேயே உட்கார்ந்து அரட்டை அடிப்பதால் பையன் விக்னேஷுக்கு இதெல்லாம் இஷ்டமில்லை. மாமியின் பெண் ராஜி அடுக்களையிலேயே கிடப்பள். 'இந்த மெஸ்ஸை நீ எப்ப நிறுத்தப்போறாய்?' என அம்மாவிடம் சண்டை போடுவள்.
அடுத்த வருடம் வேலை மாற்றம், தங்குமிடத்தை செட்டாநகருக்கு மாற்றியதால் நாங்கள் மெஸ்ஸில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம். நாரிமன் பாயின்ட் ஆபிசிலிருந்து கிளம்ப லேட்டானால் சில சமயம் நேராக கால்பாதேவியில் பெருமாளை சேவித்து விட்டு பக்கத்தில் குஜராத்தி மெஸ் போவோம். கையிலும் கொஞ்சம் காசு புழங்க ஆரம்பித்த நேரமது. சுடச்சுட ஃபுல்கா ரொட்டிகளை நம் எதிரே பெரிய்ய்ய்ய தட்டில் ஒருவன் போட.. தட்டா அது? சைக்கிளே நிறுத்தலாம். பின்னாலேயே இன்னொருத்தன் வஞ்சனையில்லாமல் நெய்யை சுழட்டி சுழட்டி ஊற்றுவான். அடுத்து எண்ணெய் சொட்ட உந்தியா, பிந்தியா என சப்ஜிகள், பாசுமதி அரிசி வகையரா.. வயிறு முட்டி மூச்சு வாங்க சிரமப்பட்டு எழும்போது ஜீரா சொட்டச்சொட்ட ஜிலேபியை வைப்பான்கள் படுபாவிகள்.
RBI மாமி மெஸ்ஸை சுத்தமாக மறந்து போனோம். ஒருநாள் மாமிக்கு உடம்பு முடியாமல் சீரியசாகி மெஸ்ஸை தற்காலிகமாக நிறுத்தி ஒரு மாதம் பைகுல்லா ஆஸ்பத்திரியில் இருந்ததாக கேள்விப்பட்டோம். அதைக்கேட்டு அத்தற கேரளா பையன்களும் ரொம்ப வருத்தமாம் (மெஸ் இல்லாததால்). ராமேந்திரன், சோமட்டா எல்லோரும் ஜீவன் மெஸ்ஸுக்கு மாற, பிரேமன் ஓரிரு கிலோ குறைந்து விட்டானாம்.
சில வருடங்கள் கழித்து ஒருநாள் செம்பூர் அகோபில மடம் அருகே மாமியின் பையன் விக்னேஷை தற்செயலாக பார்த்தேன்.
' அண்ணா! சௌக்கியமா' என விஜாரித்தான். சி.ஏ பாஸ் செய்து ஜே.எம். பக்‌ஷி கப்பல் சேவை கம்பெனியில் பணியாம்.
அவனுக்கு பின்னால் கைக்குழந்தையுடன் இளம் பெண். அட! அவன் தங்கை ராஜியா இது? மாமி கஷ்டப்பட்டு பெண்ணுக்கும் கலியாணம் செய்து வைத்து விட்டாளே!
'அம்மா அப்பா எப்பிடி இருக்காங்க? மெஸ் எப்பிடி போகுதுப்பா?'
'மெஸ்ஸெல்லாம் பந்து பண்ணியாச்சுண்ணா. அப்பாவால நிக்க முடியல. கழிஞ்ஞ ஆழ்ச்சி அவருக்கு அப்பென்டிசிட்டிஸ் ஓப்பரேஷன். 'பத்தா' வெளையாட்டையும் விட்டூட்டு ரிடையர்மென்ட் வாங்கிண்டாச்சு'
'நின்னுகிட்டே தானே டிரெய்ன்ல பத்தா வெளையாண்டார்! அதான் விதி ஒரேயடியா வெளையாடி அவரை ஒக்கார வச்சிருச்சு. சரி.. பென்ஷன் வர்தா?'
'உம்.. இப்பல்லாம் பென்ஷனையும் அம்மா கிட்ட கொடுத்துடறார்'
கேட்க சந்தோஷமாக இருந்தது. மாமியின் உழைப்பும் நல்ல மனதும் அந்த குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்துவிட்டது.
ராஜி அநியாயத்துக்கு ஒடிசலாக இருந்தாள். ஆனால் குழந்தை நல்ல புஷ்டி.. என்னை பார்த்து கிக்கி என அழகாக சிரித்தது. சட்டென ப்ரீஃப்கேசை திறந்து மாரி பிஸ்கட் ஒன்றை எடுத்து குழந்தையிடம் நீட்....
வெடுக்கென என் கையிலிருந்து பிடுங்கி முழு பிஸ்கட்டையும் லபக்கென வாயில் போட்டுக்கொண்டது.
'பிராந்து.. பிராந்து! மெல்ல சாப்பிடு.. முழு பிஸ்கட்டையும் அப்பிடியே வாயில போட்டுண்டுட்டாய் நீ..!'
செல்லமாக Delhi Ganesh போல குழந்தையை அதட்டினாள் ராஜி.
'குழந்தை பேரென்னம்மா?'
'அஷ்வின்.. அஷ்வின் பிரேமன்'