கையில் இரண்டு பெட்டிகளுடன் தாதர் ஸ்டேஷனில் ரயில் மாறி வெஸ்டர்ன் ரயில்வே பம்பாய் சென்ட்ரலில் ப்ளாட்ஃபார்ம் நெ. ஒன்றில் காத்திருந்த ரயிலில் ஏறி அமரவும் ரயில் மெதுவாக நகரத்துடங்கியது. சுற்றிலும் வெள்ளை ஜிப்பா, பெருத்த சரீரமுள்ள, பான்பராக் குட்கா ஆசாமிகள். குஜராத்திகள். பே லாக் (2 லட்சம்), த்ரன் லாக் (3 லட்சம்) என வளவளவென வியாபாரம் பற்றி பேச்சு. என்னுடைய இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்திருந்த ஆசாமி சற்றும் கவலையே இன்றி என்னை இன்னும் நெறுக்கி, கொல்லென இருமும்போது என்னையும் சேர்த்து உலுக்கி நகர்த்தினார். வாப்பி, வல்சாட், நவ்சாரி என ஸ்டேஷன்களில் மக்கள் ஏற ஏற, பக்கத்து ஆசாமி என் முதுகுக்கு பின்னால் சரிந்து தூங்க, நான் சீட் நுனியில்.
தூக்கம் வரவில்லை. மனசும் சரியில்லை. பங்குச்சந்தை சரிவால் வேலை போய் இரண்டு மாதங்கள் பம்பாய் முலுண்டில் அண்ணன் வீட்டில் ஜாகை. மனைவி பிரசவத்திற்கு போயிருந்த நேரத்தில் இந்த புதிய வேலை கிடைத்து, 8 வருட பம்பாய் வாழ்க்கையை விட்டு குஜராத் பக்கம் போகிறேன்.
கம்பெனியின் தலைமை அலுவலகம் பம்பாய் வொர்லி பகுதியில். ஆருயிர் பால்ய நண்பன் Ganapathi Subramanianனின் சிபாரிசால் அங்கே க்ரூப் ஃபைனான்ஸ் கன்ட்ரோலராக இருந்த ஜம்புநாதன் ஒரு வார்த்தை சொல்லி விட்டதால் இன்டர்வியூவில் எந்த கேள்வியும் கேட்காமல் வேலை கிடைத்தது.
ஜம்புநாதனும் திருச்சிக்காரர். தென்னூர் சுப்பையா ஸ்கூல் தாண்டி ஹிந்தி பிரச்சார சபா எதிரே உள்ள அக்ரஹாரத்தில் அவருக்கு வீடு. அவரது மைத்துனர் சங்கர் என் செயின்ட் ஜோசப் பள்ளித்தோழன். கோபால் புக் டெப்போ புத்தகக்கடையை மலைவாசல் எதிரே வைத்திருந்தவர்கள்.
ரயில் மூச்சிரைத்தபடி சூரத் ப்ளாட்ஃபாரத்தில் நுழைய, 'ச்சாய் .. ச்சாய்வாலா' என சத்தம். ஒரு கும்பல் தபதபவென வண்டியில் ஏறி நெருக்கித்தள்ள, குண்டு ஆசாமி வெகுண்டு எழுந்தான். இப்போது சரியாக அவன் மடியில் உட்கார்ந்திருந்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்க்லேஷ்வர் ஸ்டேஷன் வர, முட்டித்தள்ளி நீந்தி பெட்டிகளோடு ப்ளாட்ஃபாரத்தில் குதித்து கம்பெனி காருக்காக காத்திருந்தேன். காற்றில் ஏதோ வாடை மற்றும் புகை. . மூக்கு நமநமவென அரித்தது. காரணம் அங்க்லேஷ்வரில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் மருந்து, சாயம் மற்றும் ரசாயனக்கழிவுகள். சுகாதாரக்கேடு அதிகம். ஆஸ்த்துமா நோய் வருமாம்.
இந்த ஊர்ல எத்தினி நாள் இருப்பமோ என யோசிக்கும்போதே அம்பாசடர் கார் ஒன்று வந்து நின்றது. வாய்நிறைய பான்பராக்குடன் வந்த ஆசாமி நேராக மதராஸியான என்னை அடையாளம் கண்டு சதானந்த் ஹோட்டலில் இறக்கிவிட்டான். குளித்துவிட்டு டிபனை முடித்துக்கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர் படுத்த கூட்டிப்போகும் கைதி போல கம்பெனிக்கு அழைத்துப்போனார்கள்.
ஆன்ட்டிபயோடிக் மருந்துகளான அமாக்ஸிஸிலின், செஃபலாக்ஸின் தயாரிப்பவர்கள். கம்பெனியில் என்னைத்தவிர எல்லோருமே குஜராத்திகள். ஒருவரும் அடக்கமாகவோ பதவிசாகவோ பேசமாட்டார்கள். ஃபாக்டரியில் வேலை செய்யும் முக்காவாசிப்பேர் பரூச், படோதா பகுதியிலிருந்து தினமும் ரயிலில் அப்டௌன் செய்பவர்கள். பெண்கள் சதா நொறுக்குத்தீனி அசை போட்டுக்கொண்டிருக்க, ஆண்கள் நொடிக்கொரு முறை தாய் மற்றும் சகோதரியை குறிப்பிட்டு சொல்லும் ஹிந்தி கெட்டவார்த்தைகளை பிரயோகித்தார்கள். (நிற்க..! அது என்ன கெட்ட வார்த்தையாக இருக்கும் என இப்ப யோசிக்காமல் அடுத்த பாராவுக்கு போகவும்)
சிரிக்காதீர்கள்! கம்பெனி உள்ளே நுழையும்போதே 'ஏண்டா சாலே! ஆறுமாதமா பணம் தராமெ என்னடா கம்பெனி நடத்தறீங்க! என கர்ஜித்தவாரே நம்மிடம் வரும் சப்ளையர்கள்.. மணிக்கொருமுறை சாய் குடித்து குட்கா பொட்டலத்தை கிழித்து வாய்க்குள் போட்டு எச்சில் வழியாமலிருக்க தலையை தூக்கி பேசும் மானேஜர்கள்..படோதாவிலிருந்து வரும் கர்னாவதி எக்ஸ்பிரஸ் இன்று ஏன் லேட் என வெட்டிப்பேச்சு பேசும் மேத்தாக்கள், தேசாய்கள், படேல்கள்..
அவர்களுடன் மதிய உணவு சாப்பிடும்போது கவனிப்பேன்.. சீராக அடுக்கப்பட்ட, அப்பளம் போல ஒரே சைஸில் பத்து பன்னிரெண்டு சன்னமான சப்பாத்திகளை டிபன் பாக்ஸிலிருந்து மொத்தமாக எடுத்து அப்படியே முறுக்கி பிய்த்து, எண்ணெய் நிரம்பிய ஆலு சப்ஜியில் முக்கி எடுத்து சாப்பிடுவார்கள். பொதுவாக குஜராத்திகள் எல்லோரும் உணவுப்பிரியர்கள். காலை உணவு டோக்ளா சாபுதானா வகையரா. மதியமும் இரவும் ரோட்டி, எண்ணெய் சொட்ட சப்ஜிகள், கிச்சடி, நடுவே சமோசா, கச்சோரி, ஶ்ரீகண்ட், வேர்க்கடலை (பரூச் கா சிங்தானா பிரபலம்). இரவு பத்து மணிக்கு மேல் வெட வெட குளிரில் ஐஸ் க்ரீம் கடையில் கூட்டம் அம்மும். ஆண்கள் மேல் பாகம் பெருத்து ஒல்லியான கால்களில் முடிய, பெண்கள் எப்படி ஆரம்பித்தாலும் அகலமாகவே முடிவார்கள்.
மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான penicillin-Gயை (Pen-G) எங்கள் நிறுவனம் அரசாங்க அனுமதியுடன் இறக்குமதி செய்வார்கள். அது கிடைப்பதற்கரிய வஸ்து என்பதால் அரசாங்கம் கோட்டா விதித்திருத்தது. பென்ஜி எவ்வளவு உபயோகப்படுத்தினோம் என்ற கணக்கை தணிக்கை செய்ய food and drugs administration துறையிலிருந்து மாதமொரு முறை அதிகாரிகள் வந்துவிடுவார்கள். தவிர அவ்வப்போது விற்பனை வரி அலுவலகத்திலிருந்தும் வந்து நிற்பார்கள். ஃபாக்டரி அக்கவுண்ட்ஸ் இன் சார்ஜான நான் தான் அவர்களை சமாளிக்க வேண்டும். பொழுது விடிந்தால் பிரச்சனை தான்.
கம்பெனியிலிருந்து பத்தே நிமிடத்தில் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ். கிட்டத்தட்ட இரண்டாயிரம் சதுர அடியில் விசாலமான ஃப்ளாட். பெரிய பால்கனி. நான், மனைவி உஷா, இரண்டுமாத குழந்தை பிரஷாந்த் மற்றும் குறை பிரசவ குழந்தை சைஸில் இரண்டு பல்லிகள் அந்த ஃப்ளாட்டில் குடியிருந்தோம். மாலை ஆபிஸிலிருந்து வந்து ஃபளாட்டில் நுழையும்போது உஷா சோஃபா மீது ஏறி நின்று கொண்டிருப்பாள், அறை ஒரத்தில் தரையில் பல்லி நின்று கொண்டிருப்பதால். சிலசமயம் சுவற்றிலிருந்து ச்ச்ச்சப்ப்ப்பென சப்தத்துடன் பல்லி தரையில் குதிக்கும்போது உஷா அலறாமல் இருந்தால் அதிசயம் தான்.
காலை மாலை பான்பராக் அம்பாசடர் வந்துவிடும். நாங்கள் ஐந்து மானேஜர்கள் ஒரே பில்டிங்கில் வசித்தாலும் ஆபிசில் எலியும் பூனையுமாக இருப்பவர்கள். எதை கேட்டாலும் குதர்க்கமாகவே பதில் சொல்லும் ஸ்டோர்ஸ் மானேஜர் படேலுக்கு என்னை பிடிக்கவில்லை போலும்.
'என்னங்க படேல்சாப்.. ரெண்டு நாளா ஆபிஸ் வரலியே நீங்க?' வாஞ்சையோடு கேட்பேன்.
'என்னங்க படேல்சாப்.. ரெண்டு நாளா ஆபிஸ் வரலியே நீங்க?' வாஞ்சையோடு கேட்பேன்.
'அர்ரே! பீவி புக்கார் ஹெ.. மனைவிக்கு உடம்பு சரியில்லை..'
அத்தோடு நான் விட்டிருக்க வேண்டும்.
'ஆமா.. உங்க வைஃப்க்கு தானே காய்ச்சல்.. நீங்க ஏன் லீவ் எடுத்தீங்க?'
'பின்னே நீயா லீவு எடுப்பே?'
இவன் பட்டேல் இல்லை.. பொட்டேல். சரியாக வாங்கி கட்டிக்கொண்டேன். அன்றிலிருந்து நான் அவனிடம் அதிகம் வைத்துக்கொள்வதில்லை.
கம்பெனியில் எல்லோருமே எகத்தாளமாக பதில் சொல்கிறார்களே! காலை எட்டு மணிக்கு ஃபாக்டரி உள்ளே நுழையும்போது இரும்பு பக்கெட்டில் எதையோ எடுத்துக்கொண்டு எதிரே வந்தான் ஆபிஸ்பாய் மஹிசூரி. பக்கெட்டிலிருந்து பக் பக்கென புகை வேறு. 'அதென்னப்பா?' எனக்கேட்ட என்னிடம் 'இது லிக்விட் நைட்ரஜன் சார். ஒரு கரண்டி மொண்டு உங்க உள்ளங்கைல வச்சாக்க அந்த ரசாயணம் கைய பொத்துக்கிட்டு சதை வழியா கீழே இறங்கும். ஊத்தீறவா?' என பக்கெட்டை பக்கத்தில் கொண்டு வந்தவனை தடுத்து 'ஏம்ப்பா.. மஹிசூரி! யாரு பெத்த புள்ளப்பா நீ! ராவுகாலத்தில் பொறந்தியா?' எனக்கேட்டு அந்தப்பக்கம் ஓடினேன். மரியாதை தெரியாத மணி சங்கர்கள்.
எப்படி இந்த கம்பெனியில் காலத்தள்ளுவது என யோசிப்பேன். அந்த ஊர் காற்றில் நஞ்சு.. அலுவலகத்தில் வேலைப்பளு.. சக சிப்பந்திகள் ஒத்துழைப்பு இல்லை. ஒரே ஒரு ஆறுதல். தலைமை அலுவலகத்தில் ஜம்புநாதன் சார் மட்டுமே பரிவாக பேசக்கூடியவர்.
மாதமொரு முறை ஜம்புநாதன் சார் ஃபாக்டரி விசிட்டுக்காக பம்பாயிலிருந்து வந்தால் ஆபீஸே அல்லோகலப்படும். பெனிசிலின்-G இருப்பு எவ்வளவு, எவ்வளவு கொள்முதல் செய்தோம், அந்த மாத உற்பத்தி எவ்வளவு என சில எண்களை பார்த்த ஒரு சில நிமிடங்களிலேயே என்ன தில்லுமுல்லு நடந்திருக்கும் என சட்டென கணிப்பார். இத்தனை டன் பெனிசிலின்-G உபயோகித்தால் இன்ன அளவு அமாக்ஸிஸிலின் தான் உற்பத்தி செய்திருக்க முடியும். இல்லையென்றால் yield குறைய காரணமென்ன என கேள்வி கேட்டு ப்ரொடக்ஷன் மானேஜர் சிட்னிஸை நின்ன வாக்கிலேயே உச்சா போக வைப்பார். அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல அக்கவுண்டன்ட்கள் லோட்டஸ் 123யில் தலையை விட்டு தேடுவார்கள்.
மாலை படு காஷுவலாக மானேஜர்களுடன் 'முஜே எக்ஸ்ட்ரா மஸ்கா!' என ஆர்டர் செய்து மூக்கில் ஜலம் வழிய ரசித்து பாவ் பாஜி சாப்பிடுவார். ஆபிஸை மறந்து கிண்டலடித்து அரட்டையடிப்பார். சிகரெட், குட்கா, மது போன்ற லாகிரி வஸ்துக்கள் கிடையா. டை கட்டும் வழக்கம் இல்லை. டிசைன் மற்றும் நிறமில்லா வெள்ளை அரைக்கை சட்டையை பாண்ட்டுக்குள் திணிக்காமல் எடுத்து விட்டிருப்பார். மெல்லிய சட்டைக்குள்ளிருந்து தொப்பையில்லா வயிற்றில் கருப்பு பெல்ட் தெரியும்.
திடீரென பார்த்தால் ஒரு வார லீவில் திருச்சி பட்டர்வொர்த் ரோட்டிலுள்ள தன் வீட்டு வாசல் திறந்த வெளியில் ஈசி சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். அப்பவும் கையில் ஏதோ மானேஜ்மென்ட் புத்தகம். பக்கத்தில் காலி டபரா. அங்கேயும் அவரை விட்டு வைக்காமல் நான் ஆஜர். 'நானும் லீவு சார். ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன். உங்களையும் அப்பிடியே பாத்துட்டு...' என ஏதோ சாக்கு. வந்ததே அவரை பார்க்கத்தான் என அவருக்கு தெரியுமோ இல்லையோ, அருமையான காபி நமக்கு உண்டு.
நிறைய முறை பம்பாயில் அவரது வீட்டிற்கு கணபதி என்னை அழைத்துச்சென்றிருக்கிறான். நான் அவர் மூலம் இந்த வேலைக்கு வந்தவன் என்பது கம்பெனியில் எல்லோருக்கும் தெரிந்தாலும், வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமென கொஞ்சம் கண்டிப்புடன் எதிர் பார்ப்பவர்.
பம்பாய் 'தானே' பகுதியில் வீடு அவருக்கு. டானென்று காலை எட்டு மணிக்கு ப்ரீஃப் கேஸ் சகிதம் நெற்றியில் சிறிய விபூதி கீற்றுடன் தன் ஃபியட் கார் பின் இருக்கையில் ஏறுவார். வண்டியை ஸ்டார்ட் செய்தவுடனே டிரைவர் சஷ்டி கவசம், சஹஸ்ரநாமம் என காசெட்டை தட்டி விட, இவர் ஸ்லோகங்களை உச்சரித்தபடி எகனாமிக் டைம்ஸ், ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைகள், இந்தியா டுடே, சுச்சேதா தலால், சுவாமிநாதன் அங்கலேஸாரிய அய்யர் கட்டுரைகள் என அவர் உலகமே தனி.
விக்ரோலி கொத்ரெஜ் பாய்ஸ் கம்பெனி தாண்டும்போது தண்ணீர் எடுத்து குடிப்பது என எல்லாம் டயத்திற்கு செய்வார். 'வனமாலி கதி சார்ங்கி சங்கி சக்ரீ ச நந்தகி' யின் போது பிரிமியர் பத்மினியிலிருந்து தலையை திருப்பி வெளியே பார்த்தால் வொர்லி சிக்னல் தாண்டும் என சத்தியம் செய்வேன். இது தினமும்..
கம்பெனி முதலாளிகள் காந்தி சகோதரர்கள் ஜம்புநாதன் சொல்வதை தெய்வ வாக்காக மதிப்பவர்கள். பம்பாயிலிருந்து அங்க்லேஷ்வர் பாங்க் மானேஜருக்கு ஒரே போன் காலில் பல லட்சங்களை இன்வாய்ஸ் பில் டிஸ்கௌண்ட் அக்கவுண்ட் மூலம் வரவு வைப்பார். அந்த அளவிற்கு அனுபவமும் இன்ஃப்ளுவென்ஸும் கொண்டவர்.
எப்படியோ ஒருநாள் கணபதி மூலம் எனக்கு பஹ்ரைன் வேலை கிடைத்து விசா வந்து விட்டது. மூன்று மாத நோட்டிஸ் கொடுத்து விட்டு பிறகு நீ போகலாமென ஆபிஸில் சொல்லிவிட விசனத்துடன் வந்து சீட்டில் அமர்ந்தேன். ஏதாவது பிரச்சனை செய்வது என அவர்கள் இருந்ததால் மாலை ஜம்புநாதனுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். 'கம்பெனி விதிமுறைகள் அப்பிடியாச்சேப்பா!.. உன் காண்ட்ராக்ட்ல அப்பிடி போட்டிருந்தா என்ன செய்வே?' என அவர் கேட்க அழுகையே வந்துவிட்டது எனக்கு.
'உடனே ஜாயின் பண்ணலேன்னா பஹ்ரைன்ல விசா கான்சல் பண்ணிருவாங்க சார்' என நான் கெஞ்ச, அவர் 'இப்ப நான் தலையிடுவது சரியில்லப்பா. உன் காண்டிராக்ட் பிரகாரம் மூனு மாச நோட்டீஸ்.. இல்லாட்டி 3 மாச சம்பளத்தை சரண்டர் பண்ணலாமே!. நீ அதை பண்ண மாட்டேன்னு நினைச்சிட்டிருப்பாங்க.. மூனு மாச சம்பளத்த பஹ்ரைன்ல சம்பாரிச்சுக்கலாம்பா! ' என அவர் சொல்ல மறு நாள் காலை லெட்டர் எழுதிக் கொடுத்தேன்.
அடுத்த சில மணி நேரத்தில் எனது 'த்யாக் பத்ர' விஷயம் ஹெட் ஆபிஸுக்கு போனது.. ஜம்புநாதனிடமிருந்து ஃபாக்டரி வொர்க்ஸ் மானேஜருக்கு டெலக்ஸ் வந்தது. ஆபிஸ் மீட்டிங் ரூமில் சமோசா, கச்சோரி, ஜிலேபி வாசனை. ஃபேர்வெல் பார்ட்டியாம். நாற்பது பேர் கூடி என்னை வாயார வாழ்த்த, நானும் இந்த மாதிரி ஒரு அருமையான ஆபிசை பார்த்ததே இல்லையென இரண்டு நிமிடம் புளுகி (இல்லாட்டி விசா போச்சே!) , சிலரின் உருவப்படத்தை (ஜம்புநாதன் உள்பட) கார்ட்டூனாக வரைந்து காட்டி, கைத்தட்டல் பெற்று, ஓரிரு நாளில் பம்பாய் வந்து, விமானம் ஏறும் முன் ஜம்புநாதனிடம் ஆசி பெற்று பஹ்ரைன் வந்திறங்கி 23 வருடங்கள் ஓடியது தெரியவில்லை.
பி.கு: ஜம்புநாதன் சாருக்கு இந்நேரம் 75 வயது பூர்த்தியாகியிருக்கும்,10 ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக புற்று நோய் வந்திராவிட்டால்..
No comments:
Post a Comment