Sunday, April 27, 2014

Joyful Singapore

க்வீன்ஸ் நெக்லெஸ் என்று சொல்லப்படும் பம்பாய் மரைன் டிரைவ் பகுதி சர்ச்கேட் ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம் தான். வரிசையாக பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயும் அந்தப்பக்கம் தான் இருக்கிறார் என கேள்விப்பட்டேன். பெரிய கட்டிடம் முன் கொழுகொழுவேன நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. பழங்கால ஒட்டிஸ் லிஃப்ட்டில் நுழைந்ததும் கிர்ரீச்சென இரு இரும்புக்கதவுகளையும் மூடிய லிஃப்ட் அன்பரிடம் 'தீஸ்ரா மாலா' என சொல்லி மூன்றாவது தளத்துக்கு போய் ஒரு ப்ளாட்டின் கதவை தட்டியதும் வயதான பெண்மணியொருவர் கதவை திறந்தார். அவர் பெயர் ஸ்மிதாபென் மெர்ச்சன்ட். 'ஆவ் ஷிரிதர்பாய்' என என்னை வரவேற்று முன் ஹாலில் உள்ள டைனிங் இருக்கையில் அமரச்சொன்னார். அவரது கண்ணசைவை ஏற்று மராட்டிய வேலைக்காரி உடனே என் முன் குளிர்ந்த நீரை வைத்தார்.

"அதுல்பாய் சொன்னார் உன்னைப்பற்றி.." என அந்த பெண்மணி சொல்ல அடுத்த சில நிமிடங்களில் என் முன் டீயும் பிஸ்கட்டும்.. 90 களில் நாரிமன் பாய்ண்ட்டில் CIFCO குழுமத்தில் நான் வேலை செய்துகொண்டிருந்தபோது கம்பெனி ஆடிட்டர் அதுல் பன்டியா தனக்கு தெரிந்த குஜராத்தி குடும்பத்தவர்களின் பங்குகள் சம்மந்தப்பட்ட கணக்கு வழக்குகளை பகுதி நேரத்தில் பார்த்துக்கொள்ள ஒரு இளம் சார்ட்டட் அக்கவுண்டன்ட் தேவைப்பட்டதால் என்னை அங்கு அனுப்பினார். 'பெரும்பணக்காரர்கள்.. Part time job..நல்ல சம்பளம்' என்றும் சொல்லி அனுப்பினார்.2000 சதுரடிக்கு மேலிருக்கும் அந்த ஃப்ளாட். மொத்தம் 3 வேலைக்காரர்கள். சமையலறையில் கடி மற்றும் தால்கிச்சடி வாசனை.

'சாய் டன்டா ஹோஜாய்கா ஷிரிதர்பாய்..' திடுக்கென திரும்பி எதிரில் இருந்த அந்த வயதான பெண்மணியை ப்பார்த்தேன். முழுவதும் வெள்ளை உடையில் இருந்த அவருக்கு சுமார் 65 வயதிருக்கும். பெரும் சரீரம். பழம்பெரும் ஹிந்தி நடிகை தீனா பாட்டக் சாயல்.இடுப்பில் பெரிய சாவிக்கொத்து. சர்க்கரை வியாதி மற்றும் முழங்கால் வலி நிச்சயம் அவருக்கு இருக்குமென்பது என் ஊகம்.

டீயில் படிந்திருந்த ஆடையை ஊதி விலக்கிவிட்டு அருமையான குஜராத்தி மசாலா டீயை உறிஞ்சினேன். தன் கணவர் கட்டாவ் மில்‌ஸில் நல்ல பதவியில் இருந்ததாகவும் நிறைய சம்பாதித்து அந்தக்காலத்தில் குறைந்த விலையில் நல்ல பங்குகளை வாங்கிப் போட்டாராம். சில வருடங்கள் முன் திடீரென அவர் மறைந்துவிட எங்கெங்கு முதலீடு செய்திருந்தார் என கண்டுபிடிக்கவே ஒரு வருடமாகிவிட்டதாம். வாசல் கதவு மணியடிக்க தபால்காரர் கொண்டுவந்த அன்றைய தபாலில் மட்டும் 50 க்கும் மேற்ப்பட்ட டிவிடென்டு வாரன்ட்டுகள்.

பங்குகள் வாங்கி விற்கும் டீல் ஸ்லிப்புகள், போனஸ் அறிவிப்புகள், ரைட்ஸ் இஷ்யூ மற்றும் மாதாந்திர வங்கி ஸ்டேட்மெண்டுகள் என எல்லா கோப்புகளையும் என் முன் மலை போல் குவித்து விட்டார். 'அடக்கடவுளே!இவ்வளவு வேலையா' என மலைத்து கோப்புகளுக்கு அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தால் ஒரு தட்டில் ஏலக்காய் பொடி தூவிய சிவப்பு வர்ண ஜிலேபி மற்றும் கமகமவென வாசனையுடன் கச்சோரி..நாக்கில் ஜலம் ஊர 'நாளைக்கே வேலையை ஆரம்பிக்கலாம்' என் நான் சொன்னபோது சின்ன வயசில் 'பக்கி.. பக்கி' என திட்டும் என் அம்மா நினைவுக்கு வந்தார்கள்.

நாளைக்கு வேலை ஆரம்பிக்கும் முன் என் மகள்கள் இருவரையும் நீ பார்ப்பது அவசியம் என அவர் சொன்னதால் மறுநாள் மாலை மறுபடியும் அங்கு போனேன். பெண்கள் இருவரும் வந்திருந்தார்கள். பம்பாயின் பெட்டர் ரோடு, அல்டாமவுண்டு ரோடு பகுதியில் குடியிருப்பவர்கள். இருவரும் தாட்டியான உருவத்துடன் கிட்டத்தட்ட ஆறடி உயரம். பக்கத்தில் தவக்களை மாதிரி நான் அவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நம்மை வரவேற்று தங்கள் பங்கு வர்த்தகம் பற்றி விளக்கினார்கள்.

திருமதி.மெர்ச்சன்ட்டுக்கு ஒரே பையன் இரண்டு பெண்கள். பையன் சிங்கப்பூரில் ஏதோ தொழில் செய்கிறாராம். இந்த இரண்டு பெண்களும் மறைந்த தம் அப்பாவின் பங்கு வர்த்தகத்தை பார்த்துக்கொள்கின்றனராம். எல்லா பங்குகளும் அம்மா பேரில். அம்மா கையெழுத்து மட்டும் போடுவாராம். மற்ற எல்லாவற்றையும் பெண்கள் இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள். பங்குசந்தை பற்றிய எல்லா விபரங்களையும் விரல்நுனியில் வைத்திருந்தார்கள். ஆனால் அதன் கணக்கு வழக்குகள் பற்றியோ, அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது, வருடாந்திர ரிட்டர்ன்கள் போன்ற சமாச்சாரங்கள் எதுவும் தெரியாததால் நம்மை போன்ற கணக்காளர்களுக்கு வண்டி ஓடுகிறது. அம்மாவின் கையெழுத்தையும் அந்த பெண்களே அங்கங்கே போடுவது குஜராத்திகளுக்கு சர்வசாதாரணம். அவர்களது கணவர்கள்? இருவரும் வழக்கறிஞர்கள். பணபலம், அரசு,வங்கிகள்,போலீஸ் போன்ற எல்லா இடத்திலும் செல்வாக்கு அவர்களுக்கு.

என்னென்ன வேலை, எவ்வளவு சம்பளம் போன்ற விபரங்கள் அதிகம் பேசாமல் அலட்சியமாக ஒத்துக்கொண்டார்கள். 'என்ன இன்னைக்கி சாப்பிட/குடிக்க ஒன்னையும் காணோமே' என நினைத்தது தான் தாமதம்.. மராட்டிய வேலைக்காரி ஒரு தட்டில் மேத்தி தேப்லா, மூங்தால் பஜியா, ஆம்ரஸ்.. என தர்லா தலால் கணக்காக கொண்டு வந்து வைக்க, 'நீங்க சம்பளமே தராம மூனு வேள சோறு மட்டும் போட்டா போதும்' என சொல்ல வேண்டும் போல் இருந்தது.

அடுத்த சில மாதங்களில் கணக்கு வழக்குகளை சீர் செய்து ஏகப்பட்ட குஜராத்தி உணவுவகைகளையும் சாப்பிட்டாகிவிட்டது. பங்குவர்த்தகம் மட்டுமல்லாது வேறு ஏதோ தொழிலும் அவர்கள் செய்வது போல் இருந்தது. அது விஷயமாக அடிக்கடி வங்கிகளுக்கு போய் வந்தார்கள்.

ஒருநாள் திருமதி.மெர்ச்சண்ட் என்னிடம் 'ஷிரிதர்பாய்... எங்கள் மகனுக்கு உதவியாக சிங்காப்பூர் (சிங்கப்பூர் அல்ல) அலுவலகத்தைப்பார்த்துக்கொள்ள ஒரு CA தேவைப்படுகிறது. உனக்குத்தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்வாயா' என கேட்க, நான் சற்று யோசித்து ' நானே போகலாமா' என கேட்டதும் அவருக்கு சந்தோஷம் தாக்கவில்லை. மறுநாள் அவரது பெண்கள் என்னிடம் ' எங்களுக்கு உன்னைத்தான் சிங்கப்பூர் அனுப்ப ஆசை... நீ ஒப்புக்கொள்வாயா என யோசித்தோம்' அதனால் தான் கேட்கத்தயங்கினோம் என்றனர்.

அடுத்த சில நாட்களில் சிங்கப்பூரில் இருந்து என் தற்காலிக வேலை பெர்மிட்டுடன் அவரது பையன் யோகேஷ் மெர்ச்சண்ட் வந்தார். பம்பாயில் இவர்களது வங்கிகள் சம்மந்தப்பட்ட வேலைகளை பார்த்துக்கொண்டிருந்த அவரது நண்பன் சைலேஷ்பாயும் என்னை வந்து பார்த்தார். பையன் பார்க்க டிவி தொகுப்பாளர் சாஜித்கான் போல கட்டையாக குண்டாக இருந்தார். கூடவே பான் ப்ராக், குட்கா மென்றவாறு சைலேஷ்பாய். நேரே கொலாபா பகுதியில் 'daffodil' என்ற க்ளப்புக்கு போனோம். ரிசப்ஷனில் இருந்த ரிஜிஸ்தரில் யோகேஷ்பாயும், 'பான்பராக்'கும் தங்கள் பெயரை எழுதாமல் வேறு பெயரை எழுத நான் அழகாக 'ஶ்ரீதர் சீதாபதி' என எழுதியதை பார்த்து விட்டு அடுத்தமுறை வேறு பெயரில் கையொப்பமிடச்சொன்னார்கள். ' எதுக்கு வேற பெயர எழுதனும் ' என கேட்ட என்னை ' சட்டுனு உள்ள வா' வென இழுத்துக்கொண்டார்கள்.

உள்ளே போனால் ஒரே சாராயவாடை, புகைமண்டலம். நிறைய தொழிலதிபர்கள் மற்றும் பங்குத்தரகர்கள் கலைந்த தலையுடன் மது, சிகரெட் சகிதம் தங்கள் வர்த்தகம் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். உயரமான ஸ்டூலின் படியில் ஏறி அவர்களுடன் உட்கார்ந்தபோது கவனித்தேன்...யோகேஷ்பாயின் இரண்டு பின்புறங்களின் பாதி மட்டும் தான் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தது. 'ப்ளக்'கென பாட்டிலின் கார்க்கை அனாயசமாக அகற்றி மேற்படி வஸ்துவை கடகடவென சிந்தாதாமல் கோப்பையில் அவர் விடும் ஸ்டைலை ரசித்துப்பார்த்தேன். ஆரஞ்சு பழச்சாறு போதும் என்ற என்னிடம் சம்பிரதாயமாக சில கேள்விகள் கேட்டுவிட்டு 'சூ கபர் ச்சே' என பேசியபடி குடியில் மூழ்கினர்.

சிங்கப்பூர் இன்னும் ஒருமாதத்திற்குள் போகத்தயாராக இருக்கச்சொன்னார்கள். திருமதி.மெர்ச்சன்ட் என்னிடம் ' சிங்காப்பூர்மே மெர்சிடீஸ் பென்ஸ் காடி சலானா.. ஐஸே சான்ஸ் தும்கோ அவுர் கிதர் மிலேகா' என கேட்டபோது நான் அனில்கபூர் மாதிரி மெர்சிடீஸில் 150 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துகொண்டிருந்தேன். கனினிகள் ஏற்றுமதி செய்கிறார்களாம்.

மறுநாள் ஒரு அரசுடமை வங்கிக்கு வரச்சொன்னார்கள். தாயார், பையன், இரு மகள்கள், பான்பராக் ஆசாமி மற்றும் நான் எல்லோரும் வங்கி மேலாளர் முன் அமர்ந்ததும் பம்பாயின் மிகப்பெரிய கனினி கம்பெனிகளில் ஒன்றின் சேர்மன் மற்றும் MD உள்ளே நுழைந்தார். "ஓ.. இவரா... "என ஆச்சரியத்துடன் அவரைப்பார்த்தேன். மெர்ச்சன்ட் குடும்பத்தினருக்கு நல்ல நெருங்கிய நண்பர் போலும். பையன் சிங்கப்பூரிலிருந்து ரஷ்யாவிற்கு கனினிகள், அதன் உதிரி பாகங்களான PC board மற்றும் 50க்கும் மேற்பட்ட பாகங்களை ஏற்றுமதி செய்ய உதவுவது தரகு நிறுவனமான சகோதரிகள் இயக்கும் இந்தியக்கம்பெனி. ரீசேல் என்கிற பெயரில் வங்கி LC அல்லது refinance மூலம் முழு பணத்தை ரஷ்யர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தரம் குறைந்த அல்லது ஒப்புக்கொண்டதைவிட குறைவாக பொருட்களை ஏற்றுமதி செய்வது, பிரச்னை வந்தால் வழக்குகளை சந்திப்பது..பல லட்ச ரூபாய் பரிவர்த்தனைகள்... வங்கி, கனினி நிறுவனம், சகோதரனின் சிங்கப்பூர் மற்றும் சகோதரிகளின் இந்திய நிறுவனங்கள் எல்லோரும் beneficiaries.

'சைலேஷ்பாய் இந்தமுறை மட்டும் documents ரெடி பண்ணுவான் என்றால் அடுத்தமுறை யார் செய்வது' என கனினி நிறுவன MD கேட்டவுடன் எல்லோரும் என்னைக்காட்டினார்கள். மிக அடக்கமாக SV.சுப்பையா மாதிரி 'நான் தானுங்க எசமான்' என்று மனதிற்குள் சொல்லியபடி குனிந்து கழுத்தை முன்னே நீட்டியபடி எழுந்த என்னை ஏதோ தீய சக்தியைப்பார்ப்பதுபோல் அவர் பார்த்ததும் கழுத்தை பின்னே இழுத்துக்கொண்டேன். அடுத்து, தாய், மற்றும் சகோதரிகள் வங்கி மேலாளர் காட்டிய தஸ்தாவேஜுக்களில் கிடுகிடுவென கையொப்பமிட பல லட்சங்கள் இடம்மாறின. கனினி MD தன் டையை தளர்த்தி கையை நீட்ட வங்கி மேலாளர் தன் பேண்ட்டை மேலே இழுத்து விட்டுக்கொண்டு அவர் கையை பிடித்து குலுக்கினார். 'குலதெய்வம் ராஜகோபால்' மாதிரி நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு முழித்துக்கொண்டிருந்தேன். ஏதோ தப்பு நடக்கிறது எனத்தெரிந்தது.

இதெல்லாம் எங்கு போய் முடியும் என்ற பயம் லேசாக பற்றிக்கொள்ள, மறுநாள் அந்த பான்பராக் ஆசாமி சைலேஷை தனியே தள்ளிக்கொண்டு போய் மெதுவாக கேட்டேன் 'இதெல்லாம் என்னா யாவாரம்ப்பா' என. கொஞ்சநாள் பழகியதால் ஓரளவு நெறுக்கமானதால் அவன் ' அரே ஷிரிதர்பாய்! ஏ சப் காலா தந்தா ஹை...' என நாசூக்காக சொல்லிவிட்டு அந்தப்பக்கம் திரும்பி எச்சிலைத்துப்பினான். 'பின்னே எதுக்குடா அவன்கூட பான்பராக் மென்றுகொண்டு இன்னும் சுற்றுகிறாய்' என கேட்ட கேள்விக்கு பதிலில்லை.

எனக்கு உடனே டாய்லெட் போகவேண்டும் போலிருந்தது. சாதாரணமாக நடந்துபோகும்போது எதிரே போலீஸ்காரர் வந்தாலே ரோட்டை க்ராஸ் செய்யும் ஆசாமி நான். அடுத்து என்னை அவர்களுக்கு introduce செய்த அதுல்பாய்க்கு போன் செய்து கேட்டபோது ஸ்வாமிநாராயன் குங்குமப்பொட்டுக்காரரான அவர் 'உன்னை பங்கு வர்த்தக வேலைக்கு part time ஆகத்தானே போகச்சொன்னேன்? ஏன் சிங்கப்பூர் வேலையை ஒப்புக்கொண்டாய்? அவர்கள்மீது ஏற்கனவே COFEPOSA act ( conservation of foreign exchange and prevention of smuggling activities) மற்றும் FERA (foreign exchange regulations act) சட்டத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.' என சொன்னபோது எனக்கு தலையைச்சுற்றியது.

ஏதோ பகுதி நேர வருமானம் மற்றும் நாக்குக்குப்பிடித்த குஜராத்தி தின்பண்டங்கள் என ஆரம்பித்து...நல்ல வேளை ..எங்கோ பெரிய ப்ரச்னையில் மாட்டிக்கொள்ள இருந்தேன். இப்போது என்ன செய்வது? சிங்கப்பூர் போக இன்னும் ஒரு மாதம் இருப்பதால் ஊருக்குப்போய் பெண் பார்த்து முடித்து வந்துவிட்டேன். அதற்குள் என வருங்கால மாமனார் காரைக்குடியிலிருந்தே அந்த சிங்கப்பூர் கம்பெனி நிஜமாகவே சிராங்கூன் ரோட்டில் தான் இருக்கிறதாவென விசாரித்துவிட்டார்.பாதி காரைக்குடிக்காரர்கள் சி.பூரில் இருப்பது அப்போதுதான் எனக்குத்தெரிந்தது. கல்யாண தேதியும் ஜனவரி(1992)யில் வைத்தாகிவிட்டது. சில நண்பர்கள் ' ஶ்ரீதரா... நீ சிங்கப்பூரில் தானே இருக்கப்போகிறாய்... இந்தியாவில் உனக்கு பிரச்னை எதுவும் வராது.. பேசாமல் சேர்ந்துவிடு' என அட்வைஸ்.

அதிகம் குழம்பிக்கொள்ளாமல் சட்டென யோசித்துப்பார்த்தேன். பம்பாயிலேயே தப்புத்தண்டா பண்ணாமல் நல்ல வேலையில் இருக்கும்போது சி.பூர் வேலை தேவையா? 'ஶ்ரீதர் சீதாபதி' என்ற அழகான பெயரிருக்கும்போது, இந்தியா வரும்போதெல்லாம் 'கோனி', மனுஷ்யசகோதரன்' என வேறு பெயர்களில் கையெழுத்திட வேண்டுமா? என்றாவது மாட்டிக்கொண்டால்?....திடீரென கைதி உடையில் 'என் அண்ணன் MGR' பாடும் 'கடவுள் ஏன் கல்லானார்.. மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே' பாட்டு நிணைவுக்கு வந்தது. பாதி தூக்கத்தில் "நஹீஈஈ...' என ஜிதேந்திரா கெட்டகனவோடு எழுந்து உட்கார்ந்த மாதிரி எனக்கு இருந்தது.

அடுத்த சில நாட்களுக்கு அந்த 'தீனா பாடக்'ஆபிசுக்கு செய்யும் எல்லா போன்களை தவிர்த்தேன். ஊருக்குப்போய்விட்டதாக தகவல் அனுப்பி ஒரு மாதம் கழித்து அந்த சி.பூர் ஆசாமி ஊருக்குப்போனதும், அவரது தாயார் மற்றும் சகோதரிகளை நேரில் பார்த்தேன். 'கல்யாணம் முடிவு செய்து விட்டதாலும், என் ஜாதகத்தில் நான் வேலை செய்யும் கம்பெனிக்கு இப்போதைக்கு என்னால் நேரம் சரியில்லை' என சொல்ல அவர்களும் பயந்து போய் ' சிங்கப்பூர் வேலை இருக்கட்டும்...நீ இப்போதைக்கு shares சம்மந்தப்பட்ட பார்ட் டைம் வேலைக்குக்கூட வரவேண்டாம்' என சொல்லி பெரிய வட்டமான தட்டில் குஜராத்தி தாலி பரிமாறி சுமூகமாக என்னை அனுப்பி வைக்க மசாலா லஸ்ஸியைக்குடித்துவிட்டு கிளம்பினேன்.

அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் சர்ச்கேட் ஸ்டேஷனில் ஒரு சாய் வாங்கி ரசித்துக்குடித்தேன். மனசும் கொஞ்சம் லேசானது. ட்ரெயின் சீசன் டிக்கெட் பத்திரமாக இருக்கிறதாவென வெளியே எடுத்துப்பார்த்தபோது அதில் 'ஶ்ரீதர் சீதாபதி' என்ற பெயரும் பார்க்க அழகாக இருந்தது.

Saturday, March 8, 2014

பட்டாபி ……….('பாம்பே டு இந்தோரி'ன் தொடர்ச்சி)



முன் கதை சுறுக்கம்:
நண்பன் கணபதி பாம்பேயிலிருந்து இந்தோருக்கு வேறு வேலை கிடைத்து போனபோது நானும் அவனுடன் கிளம்பி விட்டேன். அங்கே கம்பெனி செக்ரட்டரி ஆனந்த் ராவ் என்பவர் மூலம் ஒரு பிஸ்கட் கம்பெனியில் என்னை சேர்த்துவிட்டான். ஏனோ தெரியவில்லை ஆனந்த ராவுக்கு என்னைக்கண்டாலே பிடிக்கவில்லை. கம்பெனியில் பிரச்சனைகள் ஏராளம், சம்பள பாக்கி வேறு..கணபதி மறுபடியும் பாம்பே மாற்றிக்கொண்டு போனதும் எனக்கும்  இந்தோர் பிடிக்கவில்லை. ஆனந்த ராவின் நண்பர் பாம்பேயில் சிஃப்கோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ் என்ற பெரிய கம்பெனியில் உயர்பதவியில் இருப்பதாக கணபதி சொன்னதால் அங்கே எப்படியாவது சேர்ந்துவிட முடிவு செய்தேன்... ஆனால் ஆனந்த ராவுக்குத்தெரியாமல்... அவர் பெயரையே சொல்லி.. அது எப்படி?


இனி பட்டாபி ....

1986
இல் கணபதி மூலம் நான் சேர்ந்த முந்தைய  CA firm இன் பார்ட்னர்கள் அஜய் ஆஷர் மற்றும் ஹேமந்த் கபாடியா இருவரையும் தொடர்பு கொண்டு பட்டாபி இருக்கும் சிஃப்கோ க்ரூப் பற்றி விசாரித்தேன். குஜராத்தி குடும்பத்தினராம். பாம்பேயின் மிகப்பெரிய மர்ச்சன்ட் பாங்கர்ஸாம். அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் சிஃப்கோவில் இல்லையாம். அங்கிருக்கும் சில குஜராத்தி ஷேர் புரோக்கர்கள் பெயர்களை  மட்டும் ஹேமந்தபாய் மூலம் தெரிந்து கொண்டாயிற்று.  


ஆனந்தராவ் உங்களை பார்க்கச்சொன்னார்என்று சொல்லி சிஃப்கோ பட்டாபியின் முன் போய் நின்றேன்.. தலையை படிய சீவி.. கையிலும் சீவி. 'இன்னும் மூன்று மாதங்கள் கழித்து பாம்பே வரும்போது உங்களை வந்து பாக்கறதா ஆனந்த ராவ் சொல்லச்சொன்னார்' என்று சின்னதா ஒரு புழுகல்... பட்டாபி அதை சட்டை செய்யாமல் சிஃப்கோ பற்றி சொல்ல ஆரம்பித்தார். ஆனந்த ராவ் மூலம் வந்தவன் என நினைத்து சம்பிரதாயமாக சில கேள்விகள் மட்டும் என்னிடம் பட்டாபி கேட்டபோது பொய்சொல்லி விட்டோமே என சின்னதாக ஒரு உறுத்தல். சரி.. பின்னால் சமாளிக்கலாம் என தைரியம் வேறு. இப்போதைக்கு ஃபனான்ஸ் டிபார்ட்மென்ட்டில் வேகன்சி இல்லையென்றதும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் சிஃப்கோ குழுமத்தைச்சேர்ந்த சுமார் 15க்கும்மேற்பட்ட சிறிய கம்பெனிகள் எனக்குக்கீழ் இருக்கு...அதன் அக்கவுன்ட்ஸ் பார்த்துக்கொள்ள 
ஒரு குஜராத்தி தேவை... இதுவரை ஆள் கிடைக்கவில்லை. இருந்தாலும்  நமது சேர்மன் பூபேன் தலால் உன்னை பார்க்க விரும்புவார்..”  என அங்கே அனுப்ப அடுத்த சில நிமிடங்களில் சேர்மன் பூபேன் தலால் முன் அமர்ந்திருந்தேன். கிரீஷ் கர்நாட் சாயலில் இருந்தார். நல்ல உயரம். சாதாரண basic லெவல் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் இன்டர்வியூவை கூட கம்பெனி சேர்மனே நடத்துவது கண்டு ஆச்சரியமாக இருந்தது. குஜராத்திகள் பொதுவாக 'சார்.. சாப்மிஸ்டர்'  என்றெல்லாம் விளிக்காமல்  பெயரின் முன் 'பாய்' (பூபேன்பாய்) சேர்ப்பது வழக்கம். பெண்கள் பெயரின் முன் 'பென்' ( ஜோதிபென்) ....


'
பட்டாபி மற்றும் எனது செக்ரட்டரி (மலையாளி) தவிர இங்கு சவுத் இன்டியன்ஸே கிடையாது.... எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் சவுத் இன்டியன்ஸ்' என பூபேன்பாய் ஆரம்பித்தார்.(இது போதாதா நமக்கு!).. அடுத்து நான் ஏற்கனவே கேள்விப்பட்ட அங்கிருக்கும் சில குஜராத்தி புரோக்கர்கள் (அபய்பாய்.. கம்லேஷ்பாய்.. சைலேஷ்பாய்...) பெயர்களை எடுத்து விட்டேன்       (எக்ஸ்-பாஸ் ஹேமந்த்பாய்க்கு நன்றி).. 'ஓ.. அபய்பாயை உனக்குத்தெரியுமா?' என அவர் கேட்டப்போ  ' என் பழைய பாஸ் ஹேமந்த்பாய்க்கு ஃப்ரெண்டாச்சே' என என் பதில்..(கேட்ட கேள்வி வேற. பதில் வேற.). இதெல்லாம் போதாமல் நானும் 'என் அப்பா கோ ஆபரேடிவ் சப்-ரிஜிஸ்ட்ரார்... கோஆபரேடிவ் வங்கிகளுக்கு ஆடிட்டராக இருக்கிறார்'…. (சொன்னதில் இது மட்டும் தான் உண்மை சார்). அவ்வளவு தான்..கையில் அப்பாயின்டமென்ட் லெட்டரே கொடுத்து விட்டார்கள். 


நான் பார்த்தவரை குஜராத்தி முதலாளிகள் நம் படிப்பு பற்றி கண்டுக்க மாட்டார்கள். நம் நடத்தை மற்றும் நம்மை அவர்களுக்கு பிடித்திருந்தால் போதும்..தம் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்பவர்கள். இன்டர்வியூவின் நடுவே சேர்மனின் மனைவி பாருல்பென்  எட்டிப்பார்த்தார்..கூடவே பக்கத்தில் ஆபிஸ'பாய்…(அவனும் பாய்.. அதாவதுஜிதேஷ்பாய்.. சாரி ஜீதேஸ்பாய். இவர்களுக்கு '' வராது '' தான்.). கையில் தட்டு நிறைய அல்பொன்ஸா மாம்பழத்துண்டுகள்.. என்னையும் எடுத்துக்கச்சொன்னார்கள். 


இப்போது என் கவலை எல்லாம் வேறு. திடீரென்று ஒரு நாள் ஆனந்த் ராவ் பட்டாபியை பார்க்க வந்தால் நான் மாட்டிக்கொள்வேன். மறு நாளே இந்தோருக்கு போன்போட்டு ஆனந்த ராவிடம் ' சார் நான் இங்கே சிஃப்கோங்கற கம்பெனியில சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசரா சேர்ந்துட்டேன். நம்ம பாஸ் பட்டாபின்னு ஒருத்தர். உங்கள நல்லா தெரியுங்கறார்' என்று சொல்லி வைத்தேன். அவர் பட்டாபியை பார்க்க வரும்போது சமாளிக்கலாமென இருந்துவிட்டேன்.


சீனியர் வைஸ் பிரசிடன்ட் பட்டாபிக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். முழுக்க முழுக்க டெல்லியில் வேலை பார்த்தவர். மினிஸ்ட்ரி ஆஃப் காமர்ஸில் இருந்து ரிடையர் ஆனவர். கம்பெனி லா அவருக்கு அத்துப்படி. சிஃப்கோ குழுமத்தின் அட்வைசர். ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ் (ROC), கம்பெனி லா போர்டு (CLB), ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(BSE) சம்மந்தப்பட்ட எல்லா வேலைகளும் அவர் தான் பார்த்துக்கொள்கிறார். அவருக்குக்கீழே அசிஸ்டன்ட் வைஸ் பிரசிடன்ட் ஜோஷி எனும் மராட்டிக்காரன், நான் மற்றும் ஓரிரு ஸ்டாஃப். பிறகு நண்பன் ரங்குவும் என்னுடன் சேர்ந்துகொண்டான்.அத்தனை கம்பெனிகளின் கணக்கு வழக்குகள், வருடாந்திர ROC ரிடர்ன்கள், ஆடிட்கள், மீட்டிங்குகளின் மினிட்ஸ் என பட்டாபியின் ட்ரெய்னிங் படு ஸ்வாரஸ்யமாக போய்க்கொண்டிருந்தது. ஆனந்த ராவ் போன் மட்டும் இன்னும் வந்ததாகத்தெரியவில்லை. 


ROC
அலுவலகத்தில் ஒரே லஞ்ச மயம். பட்டாபிக்கு லஞ்சம் கொடுப்பது பிடிக்காததால் வேலையில் எப்போதும் கறாராக இருந்தார். அங்கே லஞ்சம் வாங்குவது பாதி பெண்கள். டைரக்டர்களை நியமிக்கும்போதும், அவர்கள் ராஜினாமா செய்யும்போதும் கம்பெனிகள் ROC யில் அதுகுறித்து ரிட்டர்ன் ஃபைல் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் அந்த ROC பெண்கள் back- dated ரிட்டர்ன் ஃபைல் செய்யச்சொல்லி பணம் பிடுங்குவதால் நாங்கள் வேலையில் மிக ஜாக்கிரதையாக இருப்போம். நண்பன் ரங்குவின் தூரத்து உறவுக்காரப்பெண் UPSC தேர்வில் பாசாகி 'அஸ்ஸிஸ்டன்ட் ரிஜிஸ்ட்ரார் ஆப் கம்பனீஸ்'ஆக வந்து சேர்ந்திருந்தாள். அதனால் எங்களது வேலை சுலபமாக முடிந்தது. சிறிய முதலீட்டில் நிறைய கம்பெனிகளை form செய்து எங்களில் சிலரையே டைரக்டர்களாக போட்டு live ஆக அவைகளை ஷெல் கம்பெனிகளாக வைத்திருப்பார் பட்டாபி. பிறகு Sandoz , பிராமல் போன்ற பெரிய கம்பெனிகள் ஏதாவது டைவர்சிஃபை செய்யும்போது பட்டாபியிடமிருந்து அந்த கம்பெனிகளை வாங்கி அதில் தங்கள் இயக்குநர்களுக்கு shareகளை மாற்றி புதிய தொழில் துவங்குவார்கள். அவர்களுக்கும் ROC மூலம் புதிய கம்பெனி துவங்க எடுக்கும் நேரம் மிச்சம். பட்டாபியும் நல்ல லாபத்திற்கு கம்பெனிகளை விற்பார். சுவாமி நாராயன் இயக்கத்தைச்சேர்ந்த குங்கும பொட்டு வைத்த கம்பெனி ஆடிட்டர் 'அதுல் பண்டியா'வே பட்டாபியின் திறமையை கண்டு வியந்தவர். ஆனந்தராவ் போன் வந்தபாடில்லை. பட்டாபியும்  என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். இப்போதைக்கு நான் மாட்டிக்கொள்ளும் பயமில்லை. 


சூப்பரான ஆங்கிலப்புலமை பட்டாபிக்கு. கடிதங்கள் எழுதுவது, கம்பெனி லா போர்டு பெட்டிஷன்கள் ட்ராஃப்ட் செய்வது எல்லாம் அவருக்கு ஜுஜூபி.. Gammen India கம்பெனி பங்குகளை சிலர் மார்க்கெட்டிலும் தனியாரிடமும் வாங்கி, கம்பெனியை பின்கட்டில் கைப்பற்ற (backdoor take-over bid) முயன்றபோது தம் ஸ்டாஃப் புடை சூழ கம்பெனி லா போர்டிலையே உட்கார்ந்திருந்து அந்த அக்விசிஷனை வெற்றிகரமாக முறியடித்து gammen சேர்மன் சுப்‌பா ராவின் நன்மதிப்பை பெற்றவர் பட்டாபி.  'நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு மூன்றும் இருந்தால் போதும் அதை வைத்து career இல் முன்னுக்கு வந்துவிடுவேன் என்ற வேட்கை உன் நெஞ்சில் கனல் போல் எறிந்துகொண்டேயிருக்கவேண்டும்'  என பட்டாபி அடிக்கடி சொல்வார்.  


பழைய குமுதம் கார்ட்டூனிஸ்ட் சுதர்சன் கேரக்டர்களின் முகங்கள் உருண்டையாக சுறுங்கியிருப்தை நினைவுபடுத்தும் முகம் பட்டாபிக்கு. தலையில் முடி இல்லை. அந்த வயதிலும் கண்ணாடியில்லாமல் தான் படிக்கிறவர். மூக்கிலிருந்து ஓரிரு முடி வெளியே எட்டிப்பார்க்கும். தமிழை விட ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தான் அதிகம் பேசுவார். ரிட்டயராகி டெல்லியிலிருந்து பம்பாய் வந்தபின் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டாராம். நல்ல உயரம். அந்தக்கால பேண்ட்  நெஞ்சு  வரை.. முழங்கை வரை மடித்துவிடப்பட்ட சட்டை. படு சிறியதான ப்ரௌன் கலர் தோல் பெல்ட்.சீட்டுக்குப்பின்னால் எப்போதும் தொங்கும் பழைய கோட்டு.. அந்தேரியில் இறங்கி ஆட்டோ பிடித்து போனால் ஜோகேஸ்வரி பக்கம் அவர் வீடு. சாதாரண 2 பெட்ரூம் ப்ளாட் தான். அவர் பையன் பத்ரி CA.. எனது நண்பன். சாப்பிட டிபன் டப்‌பாவெல்லாம் கொண்டுவரமாட்டார். ஆபிஸ் காண்டினில் தினமும் பஜியா, ஸ்வீட் கச்சோரி போன்ற சமாசாரங்களை விரும்பி சாப்பிடுவார்.


சோதனையான அந்தநாள் வந்தது. ஒரு நாள் பட்டாபிக்கு எதிரே நான் உட்கார்ந்திருந்தபோது ஆனந்த ராவிடமிருந்து போன். பக்கென்றது எனக்கு.. பட்டாபி போனில்,  ம்..ம்...என மட்டும் சொல்லிக்கோண்டிருந்தார். பிறகு போனை வைத்தார். இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீசிங் கம்பெனியில் ஏதோ வேலையாம் ஆனந்தராவுக்கு. அது சம்மந்தப்பட்ட சில கோப்புகளை தயார் பண்ணச்சொல்லி விட்டு  எதிரே மித்தல் கோர்ட்டிலிருக்கும் அந்த கம்பெனிக்கு ஓடினார். அரை மணியில் திரும்ப வந்து வேறு சில வேலைகள் கொடுத்தார். ஆனந்த ராவ் என்னைப்பற்றி எதுவும் சொன்னதாக தெரியவில்லை. அப்பாடாவென இருந்தது.


மாலை வீட்டிற்கு கிளம்பும் முன் பட்டாபி அந்த குண்டைப்போட்டார். ஆனந்த ராவ் மறுநாள் பாம்பே வருகிறாராம். அய்யய்யோ! நாளை அவரும்  பட்டாபியும் சேர்ந்திருக்கும்போது  பொய்சொல்லி நான் வேலையில் சேர்ந்தது இருவருக்கும் தெரிந்து விடுமேயென பயம் என்னை கவ்வ ஆரம்பித்தது.. இருந்தாலும் 6 மாதம் ஓடிவிட்டதால் வெறும் திட்டுடன் முடிந்துவிடலாம். அல்லது சேர்மன் போன்றவர்களுடன் நல்ல பரிச்சயமிருந்ததால் பட்டாபி ஒன்றும் சொல்ல மாட்டாரோவென தைரியமும் எனக்கிருந்தது. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாமென விடு வந்து சேர்ந்தேன்.


மறுநாள் காலை வரை அதே ஞாபகம். பட்டாபியும் ஆனந்தராவும்  தூக்கத்தின் நடுவே வந்து மிரட்டிவிட்டுப்போனார்கள். ச்சே...வேலை போனால் தான் என்ன?’ என சமாதானம் செய்துகொண்டு காலை 9.30 க்கு ரீஜென்ட் சேம்பரை அடைந்து ஆபீசுக்குள் நுழைந்தபோது எல்லோரும் அங்கங்கே கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க பட்டாபி சீட்டில் இல்லை. ..ஜோஷி 'ஓ..வென அழுதவாறு என்னிடம் ஓடி வந்தான். 


அன்று மதியம் காட்கோபர் இடுகாட்டுக்கு நான் போனபோது நல்ல கூட்டம். கூட்டத்தின் நடுவே ஆனந்த ராவ். அடுத்த 3 வருடங்களில் சிஃப்கோ க்ரூப்பில் நான் பதவி உயர்வு பெறுவேனென எனக்கு அப்போது தெரியாது. என்னை காப்பாற்றிய பட்டாபியை மட்டும் கடைசியாக ஒருமுறை பார்க்க நான் கூட்டத்தை கடந்து கொஞ்சம் முன்னே  போய் பார்த்தேன்.
  
'நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு மூன்றும் இருந்தால் போதும் அதை வைத்து career இல் முன்னுக்கு வந்துவிடுவேன் என்ற வேட்கை உன் நெஞ்சில் கனல் போல் எறிந்துகொண்டேயிருக்கவேண்டும்'  என எப்போதும் சொல்லும்  பட்டாபியின் வெற்று மார்பில் சூடம் எரிந்துகொண்டிருந்தது..