Sunday, April 27, 2014

Joyful Singapore

க்வீன்ஸ் நெக்லெஸ் என்று சொல்லப்படும் பம்பாய் மரைன் டிரைவ் பகுதி சர்ச்கேட் ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம் தான். வரிசையாக பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயும் அந்தப்பக்கம் தான் இருக்கிறார் என கேள்விப்பட்டேன். பெரிய கட்டிடம் முன் கொழுகொழுவேன நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. பழங்கால ஒட்டிஸ் லிஃப்ட்டில் நுழைந்ததும் கிர்ரீச்சென இரு இரும்புக்கதவுகளையும் மூடிய லிஃப்ட் அன்பரிடம் 'தீஸ்ரா மாலா' என சொல்லி மூன்றாவது தளத்துக்கு போய் ஒரு ப்ளாட்டின் கதவை தட்டியதும் வயதான பெண்மணியொருவர் கதவை திறந்தார். அவர் பெயர் ஸ்மிதாபென் மெர்ச்சன்ட். 'ஆவ் ஷிரிதர்பாய்' என என்னை வரவேற்று முன் ஹாலில் உள்ள டைனிங் இருக்கையில் அமரச்சொன்னார். அவரது கண்ணசைவை ஏற்று மராட்டிய வேலைக்காரி உடனே என் முன் குளிர்ந்த நீரை வைத்தார்.

"அதுல்பாய் சொன்னார் உன்னைப்பற்றி.." என அந்த பெண்மணி சொல்ல அடுத்த சில நிமிடங்களில் என் முன் டீயும் பிஸ்கட்டும்.. 90 களில் நாரிமன் பாய்ண்ட்டில் CIFCO குழுமத்தில் நான் வேலை செய்துகொண்டிருந்தபோது கம்பெனி ஆடிட்டர் அதுல் பன்டியா தனக்கு தெரிந்த குஜராத்தி குடும்பத்தவர்களின் பங்குகள் சம்மந்தப்பட்ட கணக்கு வழக்குகளை பகுதி நேரத்தில் பார்த்துக்கொள்ள ஒரு இளம் சார்ட்டட் அக்கவுண்டன்ட் தேவைப்பட்டதால் என்னை அங்கு அனுப்பினார். 'பெரும்பணக்காரர்கள்.. Part time job..நல்ல சம்பளம்' என்றும் சொல்லி அனுப்பினார்.2000 சதுரடிக்கு மேலிருக்கும் அந்த ஃப்ளாட். மொத்தம் 3 வேலைக்காரர்கள். சமையலறையில் கடி மற்றும் தால்கிச்சடி வாசனை.

'சாய் டன்டா ஹோஜாய்கா ஷிரிதர்பாய்..' திடுக்கென திரும்பி எதிரில் இருந்த அந்த வயதான பெண்மணியை ப்பார்த்தேன். முழுவதும் வெள்ளை உடையில் இருந்த அவருக்கு சுமார் 65 வயதிருக்கும். பெரும் சரீரம். பழம்பெரும் ஹிந்தி நடிகை தீனா பாட்டக் சாயல்.இடுப்பில் பெரிய சாவிக்கொத்து. சர்க்கரை வியாதி மற்றும் முழங்கால் வலி நிச்சயம் அவருக்கு இருக்குமென்பது என் ஊகம்.

டீயில் படிந்திருந்த ஆடையை ஊதி விலக்கிவிட்டு அருமையான குஜராத்தி மசாலா டீயை உறிஞ்சினேன். தன் கணவர் கட்டாவ் மில்‌ஸில் நல்ல பதவியில் இருந்ததாகவும் நிறைய சம்பாதித்து அந்தக்காலத்தில் குறைந்த விலையில் நல்ல பங்குகளை வாங்கிப் போட்டாராம். சில வருடங்கள் முன் திடீரென அவர் மறைந்துவிட எங்கெங்கு முதலீடு செய்திருந்தார் என கண்டுபிடிக்கவே ஒரு வருடமாகிவிட்டதாம். வாசல் கதவு மணியடிக்க தபால்காரர் கொண்டுவந்த அன்றைய தபாலில் மட்டும் 50 க்கும் மேற்ப்பட்ட டிவிடென்டு வாரன்ட்டுகள்.

பங்குகள் வாங்கி விற்கும் டீல் ஸ்லிப்புகள், போனஸ் அறிவிப்புகள், ரைட்ஸ் இஷ்யூ மற்றும் மாதாந்திர வங்கி ஸ்டேட்மெண்டுகள் என எல்லா கோப்புகளையும் என் முன் மலை போல் குவித்து விட்டார். 'அடக்கடவுளே!இவ்வளவு வேலையா' என மலைத்து கோப்புகளுக்கு அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தால் ஒரு தட்டில் ஏலக்காய் பொடி தூவிய சிவப்பு வர்ண ஜிலேபி மற்றும் கமகமவென வாசனையுடன் கச்சோரி..நாக்கில் ஜலம் ஊர 'நாளைக்கே வேலையை ஆரம்பிக்கலாம்' என் நான் சொன்னபோது சின்ன வயசில் 'பக்கி.. பக்கி' என திட்டும் என் அம்மா நினைவுக்கு வந்தார்கள்.

நாளைக்கு வேலை ஆரம்பிக்கும் முன் என் மகள்கள் இருவரையும் நீ பார்ப்பது அவசியம் என அவர் சொன்னதால் மறுநாள் மாலை மறுபடியும் அங்கு போனேன். பெண்கள் இருவரும் வந்திருந்தார்கள். பம்பாயின் பெட்டர் ரோடு, அல்டாமவுண்டு ரோடு பகுதியில் குடியிருப்பவர்கள். இருவரும் தாட்டியான உருவத்துடன் கிட்டத்தட்ட ஆறடி உயரம். பக்கத்தில் தவக்களை மாதிரி நான் அவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நம்மை வரவேற்று தங்கள் பங்கு வர்த்தகம் பற்றி விளக்கினார்கள்.

திருமதி.மெர்ச்சன்ட்டுக்கு ஒரே பையன் இரண்டு பெண்கள். பையன் சிங்கப்பூரில் ஏதோ தொழில் செய்கிறாராம். இந்த இரண்டு பெண்களும் மறைந்த தம் அப்பாவின் பங்கு வர்த்தகத்தை பார்த்துக்கொள்கின்றனராம். எல்லா பங்குகளும் அம்மா பேரில். அம்மா கையெழுத்து மட்டும் போடுவாராம். மற்ற எல்லாவற்றையும் பெண்கள் இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள். பங்குசந்தை பற்றிய எல்லா விபரங்களையும் விரல்நுனியில் வைத்திருந்தார்கள். ஆனால் அதன் கணக்கு வழக்குகள் பற்றியோ, அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது, வருடாந்திர ரிட்டர்ன்கள் போன்ற சமாச்சாரங்கள் எதுவும் தெரியாததால் நம்மை போன்ற கணக்காளர்களுக்கு வண்டி ஓடுகிறது. அம்மாவின் கையெழுத்தையும் அந்த பெண்களே அங்கங்கே போடுவது குஜராத்திகளுக்கு சர்வசாதாரணம். அவர்களது கணவர்கள்? இருவரும் வழக்கறிஞர்கள். பணபலம், அரசு,வங்கிகள்,போலீஸ் போன்ற எல்லா இடத்திலும் செல்வாக்கு அவர்களுக்கு.

என்னென்ன வேலை, எவ்வளவு சம்பளம் போன்ற விபரங்கள் அதிகம் பேசாமல் அலட்சியமாக ஒத்துக்கொண்டார்கள். 'என்ன இன்னைக்கி சாப்பிட/குடிக்க ஒன்னையும் காணோமே' என நினைத்தது தான் தாமதம்.. மராட்டிய வேலைக்காரி ஒரு தட்டில் மேத்தி தேப்லா, மூங்தால் பஜியா, ஆம்ரஸ்.. என தர்லா தலால் கணக்காக கொண்டு வந்து வைக்க, 'நீங்க சம்பளமே தராம மூனு வேள சோறு மட்டும் போட்டா போதும்' என சொல்ல வேண்டும் போல் இருந்தது.

அடுத்த சில மாதங்களில் கணக்கு வழக்குகளை சீர் செய்து ஏகப்பட்ட குஜராத்தி உணவுவகைகளையும் சாப்பிட்டாகிவிட்டது. பங்குவர்த்தகம் மட்டுமல்லாது வேறு ஏதோ தொழிலும் அவர்கள் செய்வது போல் இருந்தது. அது விஷயமாக அடிக்கடி வங்கிகளுக்கு போய் வந்தார்கள்.

ஒருநாள் திருமதி.மெர்ச்சண்ட் என்னிடம் 'ஷிரிதர்பாய்... எங்கள் மகனுக்கு உதவியாக சிங்காப்பூர் (சிங்கப்பூர் அல்ல) அலுவலகத்தைப்பார்த்துக்கொள்ள ஒரு CA தேவைப்படுகிறது. உனக்குத்தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்வாயா' என கேட்க, நான் சற்று யோசித்து ' நானே போகலாமா' என கேட்டதும் அவருக்கு சந்தோஷம் தாக்கவில்லை. மறுநாள் அவரது பெண்கள் என்னிடம் ' எங்களுக்கு உன்னைத்தான் சிங்கப்பூர் அனுப்ப ஆசை... நீ ஒப்புக்கொள்வாயா என யோசித்தோம்' அதனால் தான் கேட்கத்தயங்கினோம் என்றனர்.

அடுத்த சில நாட்களில் சிங்கப்பூரில் இருந்து என் தற்காலிக வேலை பெர்மிட்டுடன் அவரது பையன் யோகேஷ் மெர்ச்சண்ட் வந்தார். பம்பாயில் இவர்களது வங்கிகள் சம்மந்தப்பட்ட வேலைகளை பார்த்துக்கொண்டிருந்த அவரது நண்பன் சைலேஷ்பாயும் என்னை வந்து பார்த்தார். பையன் பார்க்க டிவி தொகுப்பாளர் சாஜித்கான் போல கட்டையாக குண்டாக இருந்தார். கூடவே பான் ப்ராக், குட்கா மென்றவாறு சைலேஷ்பாய். நேரே கொலாபா பகுதியில் 'daffodil' என்ற க்ளப்புக்கு போனோம். ரிசப்ஷனில் இருந்த ரிஜிஸ்தரில் யோகேஷ்பாயும், 'பான்பராக்'கும் தங்கள் பெயரை எழுதாமல் வேறு பெயரை எழுத நான் அழகாக 'ஶ்ரீதர் சீதாபதி' என எழுதியதை பார்த்து விட்டு அடுத்தமுறை வேறு பெயரில் கையொப்பமிடச்சொன்னார்கள். ' எதுக்கு வேற பெயர எழுதனும் ' என கேட்ட என்னை ' சட்டுனு உள்ள வா' வென இழுத்துக்கொண்டார்கள்.

உள்ளே போனால் ஒரே சாராயவாடை, புகைமண்டலம். நிறைய தொழிலதிபர்கள் மற்றும் பங்குத்தரகர்கள் கலைந்த தலையுடன் மது, சிகரெட் சகிதம் தங்கள் வர்த்தகம் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். உயரமான ஸ்டூலின் படியில் ஏறி அவர்களுடன் உட்கார்ந்தபோது கவனித்தேன்...யோகேஷ்பாயின் இரண்டு பின்புறங்களின் பாதி மட்டும் தான் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தது. 'ப்ளக்'கென பாட்டிலின் கார்க்கை அனாயசமாக அகற்றி மேற்படி வஸ்துவை கடகடவென சிந்தாதாமல் கோப்பையில் அவர் விடும் ஸ்டைலை ரசித்துப்பார்த்தேன். ஆரஞ்சு பழச்சாறு போதும் என்ற என்னிடம் சம்பிரதாயமாக சில கேள்விகள் கேட்டுவிட்டு 'சூ கபர் ச்சே' என பேசியபடி குடியில் மூழ்கினர்.

சிங்கப்பூர் இன்னும் ஒருமாதத்திற்குள் போகத்தயாராக இருக்கச்சொன்னார்கள். திருமதி.மெர்ச்சன்ட் என்னிடம் ' சிங்காப்பூர்மே மெர்சிடீஸ் பென்ஸ் காடி சலானா.. ஐஸே சான்ஸ் தும்கோ அவுர் கிதர் மிலேகா' என கேட்டபோது நான் அனில்கபூர் மாதிரி மெர்சிடீஸில் 150 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துகொண்டிருந்தேன். கனினிகள் ஏற்றுமதி செய்கிறார்களாம்.

மறுநாள் ஒரு அரசுடமை வங்கிக்கு வரச்சொன்னார்கள். தாயார், பையன், இரு மகள்கள், பான்பராக் ஆசாமி மற்றும் நான் எல்லோரும் வங்கி மேலாளர் முன் அமர்ந்ததும் பம்பாயின் மிகப்பெரிய கனினி கம்பெனிகளில் ஒன்றின் சேர்மன் மற்றும் MD உள்ளே நுழைந்தார். "ஓ.. இவரா... "என ஆச்சரியத்துடன் அவரைப்பார்த்தேன். மெர்ச்சன்ட் குடும்பத்தினருக்கு நல்ல நெருங்கிய நண்பர் போலும். பையன் சிங்கப்பூரிலிருந்து ரஷ்யாவிற்கு கனினிகள், அதன் உதிரி பாகங்களான PC board மற்றும் 50க்கும் மேற்பட்ட பாகங்களை ஏற்றுமதி செய்ய உதவுவது தரகு நிறுவனமான சகோதரிகள் இயக்கும் இந்தியக்கம்பெனி. ரீசேல் என்கிற பெயரில் வங்கி LC அல்லது refinance மூலம் முழு பணத்தை ரஷ்யர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தரம் குறைந்த அல்லது ஒப்புக்கொண்டதைவிட குறைவாக பொருட்களை ஏற்றுமதி செய்வது, பிரச்னை வந்தால் வழக்குகளை சந்திப்பது..பல லட்ச ரூபாய் பரிவர்த்தனைகள்... வங்கி, கனினி நிறுவனம், சகோதரனின் சிங்கப்பூர் மற்றும் சகோதரிகளின் இந்திய நிறுவனங்கள் எல்லோரும் beneficiaries.

'சைலேஷ்பாய் இந்தமுறை மட்டும் documents ரெடி பண்ணுவான் என்றால் அடுத்தமுறை யார் செய்வது' என கனினி நிறுவன MD கேட்டவுடன் எல்லோரும் என்னைக்காட்டினார்கள். மிக அடக்கமாக SV.சுப்பையா மாதிரி 'நான் தானுங்க எசமான்' என்று மனதிற்குள் சொல்லியபடி குனிந்து கழுத்தை முன்னே நீட்டியபடி எழுந்த என்னை ஏதோ தீய சக்தியைப்பார்ப்பதுபோல் அவர் பார்த்ததும் கழுத்தை பின்னே இழுத்துக்கொண்டேன். அடுத்து, தாய், மற்றும் சகோதரிகள் வங்கி மேலாளர் காட்டிய தஸ்தாவேஜுக்களில் கிடுகிடுவென கையொப்பமிட பல லட்சங்கள் இடம்மாறின. கனினி MD தன் டையை தளர்த்தி கையை நீட்ட வங்கி மேலாளர் தன் பேண்ட்டை மேலே இழுத்து விட்டுக்கொண்டு அவர் கையை பிடித்து குலுக்கினார். 'குலதெய்வம் ராஜகோபால்' மாதிரி நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு முழித்துக்கொண்டிருந்தேன். ஏதோ தப்பு நடக்கிறது எனத்தெரிந்தது.

இதெல்லாம் எங்கு போய் முடியும் என்ற பயம் லேசாக பற்றிக்கொள்ள, மறுநாள் அந்த பான்பராக் ஆசாமி சைலேஷை தனியே தள்ளிக்கொண்டு போய் மெதுவாக கேட்டேன் 'இதெல்லாம் என்னா யாவாரம்ப்பா' என. கொஞ்சநாள் பழகியதால் ஓரளவு நெறுக்கமானதால் அவன் ' அரே ஷிரிதர்பாய்! ஏ சப் காலா தந்தா ஹை...' என நாசூக்காக சொல்லிவிட்டு அந்தப்பக்கம் திரும்பி எச்சிலைத்துப்பினான். 'பின்னே எதுக்குடா அவன்கூட பான்பராக் மென்றுகொண்டு இன்னும் சுற்றுகிறாய்' என கேட்ட கேள்விக்கு பதிலில்லை.

எனக்கு உடனே டாய்லெட் போகவேண்டும் போலிருந்தது. சாதாரணமாக நடந்துபோகும்போது எதிரே போலீஸ்காரர் வந்தாலே ரோட்டை க்ராஸ் செய்யும் ஆசாமி நான். அடுத்து என்னை அவர்களுக்கு introduce செய்த அதுல்பாய்க்கு போன் செய்து கேட்டபோது ஸ்வாமிநாராயன் குங்குமப்பொட்டுக்காரரான அவர் 'உன்னை பங்கு வர்த்தக வேலைக்கு part time ஆகத்தானே போகச்சொன்னேன்? ஏன் சிங்கப்பூர் வேலையை ஒப்புக்கொண்டாய்? அவர்கள்மீது ஏற்கனவே COFEPOSA act ( conservation of foreign exchange and prevention of smuggling activities) மற்றும் FERA (foreign exchange regulations act) சட்டத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.' என சொன்னபோது எனக்கு தலையைச்சுற்றியது.

ஏதோ பகுதி நேர வருமானம் மற்றும் நாக்குக்குப்பிடித்த குஜராத்தி தின்பண்டங்கள் என ஆரம்பித்து...நல்ல வேளை ..எங்கோ பெரிய ப்ரச்னையில் மாட்டிக்கொள்ள இருந்தேன். இப்போது என்ன செய்வது? சிங்கப்பூர் போக இன்னும் ஒரு மாதம் இருப்பதால் ஊருக்குப்போய் பெண் பார்த்து முடித்து வந்துவிட்டேன். அதற்குள் என வருங்கால மாமனார் காரைக்குடியிலிருந்தே அந்த சிங்கப்பூர் கம்பெனி நிஜமாகவே சிராங்கூன் ரோட்டில் தான் இருக்கிறதாவென விசாரித்துவிட்டார்.பாதி காரைக்குடிக்காரர்கள் சி.பூரில் இருப்பது அப்போதுதான் எனக்குத்தெரிந்தது. கல்யாண தேதியும் ஜனவரி(1992)யில் வைத்தாகிவிட்டது. சில நண்பர்கள் ' ஶ்ரீதரா... நீ சிங்கப்பூரில் தானே இருக்கப்போகிறாய்... இந்தியாவில் உனக்கு பிரச்னை எதுவும் வராது.. பேசாமல் சேர்ந்துவிடு' என அட்வைஸ்.

அதிகம் குழம்பிக்கொள்ளாமல் சட்டென யோசித்துப்பார்த்தேன். பம்பாயிலேயே தப்புத்தண்டா பண்ணாமல் நல்ல வேலையில் இருக்கும்போது சி.பூர் வேலை தேவையா? 'ஶ்ரீதர் சீதாபதி' என்ற அழகான பெயரிருக்கும்போது, இந்தியா வரும்போதெல்லாம் 'கோனி', மனுஷ்யசகோதரன்' என வேறு பெயர்களில் கையெழுத்திட வேண்டுமா? என்றாவது மாட்டிக்கொண்டால்?....திடீரென கைதி உடையில் 'என் அண்ணன் MGR' பாடும் 'கடவுள் ஏன் கல்லானார்.. மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே' பாட்டு நிணைவுக்கு வந்தது. பாதி தூக்கத்தில் "நஹீஈஈ...' என ஜிதேந்திரா கெட்டகனவோடு எழுந்து உட்கார்ந்த மாதிரி எனக்கு இருந்தது.

அடுத்த சில நாட்களுக்கு அந்த 'தீனா பாடக்'ஆபிசுக்கு செய்யும் எல்லா போன்களை தவிர்த்தேன். ஊருக்குப்போய்விட்டதாக தகவல் அனுப்பி ஒரு மாதம் கழித்து அந்த சி.பூர் ஆசாமி ஊருக்குப்போனதும், அவரது தாயார் மற்றும் சகோதரிகளை நேரில் பார்த்தேன். 'கல்யாணம் முடிவு செய்து விட்டதாலும், என் ஜாதகத்தில் நான் வேலை செய்யும் கம்பெனிக்கு இப்போதைக்கு என்னால் நேரம் சரியில்லை' என சொல்ல அவர்களும் பயந்து போய் ' சிங்கப்பூர் வேலை இருக்கட்டும்...நீ இப்போதைக்கு shares சம்மந்தப்பட்ட பார்ட் டைம் வேலைக்குக்கூட வரவேண்டாம்' என சொல்லி பெரிய வட்டமான தட்டில் குஜராத்தி தாலி பரிமாறி சுமூகமாக என்னை அனுப்பி வைக்க மசாலா லஸ்ஸியைக்குடித்துவிட்டு கிளம்பினேன்.

அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் சர்ச்கேட் ஸ்டேஷனில் ஒரு சாய் வாங்கி ரசித்துக்குடித்தேன். மனசும் கொஞ்சம் லேசானது. ட்ரெயின் சீசன் டிக்கெட் பத்திரமாக இருக்கிறதாவென வெளியே எடுத்துப்பார்த்தபோது அதில் 'ஶ்ரீதர் சீதாபதி' என்ற பெயரும் பார்க்க அழகாக இருந்தது.

No comments:

Post a Comment