Sunday, February 2, 2014

வாடிகன்

நேற்று மதியம் சுமார் 3 மணி நேரம் வாடிகன் அரண்மணையை எங்களுக்கு சுற்றிக்காண்பித்த அந்த guideக்கு வயது 70க்கு மேல் இருக்கும். அமெரிக்கர். ஏதோ திருச்சி அல்லிமால் தெரு முனையில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருப்பது போல் வாஞ்சையுடன் பேசினார். ...நாங்கள் மொத்தம் 12 பேர் அவரது குழுவில்.

ரோம் நகரம் மற்றும் ஒருங்கிணைந்த இத்தாலி உருவான கதை, வாடிகனில் (தனி நாடாவதற்கு முன்) போப்பாண்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடியது, பிறகு அரண்மணை கட்டியது, ஸீஸர் மற்றும் அகஸ்டஸ் பற்றிய விபரங்கள், மைக்கல் ஆஞ்சலோ முதன்முதலில் ரோமுக்கு வந்தது, அவரை யாருக்கும் ஆரம்பத்தில் தெரியாதது, அவர் தனியாக தீவு ஒன்றில் சில வருடங்கள் தங்கியிருந்து அரண்மணையின் வரைப்படத்துக்கு (plan) ஏற்றவாறு தன் ஓவியங்கள் வரைய அளவுகள் மற்றும் themes தயார் செய்தது, பிறகு அரண்மணை முழுவதும் ஓவியங்கள் வரைந்தது, அவரது சீடர்கள் தண்ணீரில் வர்ணங்களை கலந்து 20 மீட்டர் உயரத்தில் இருக்கும் மைக்கலுக்கு கயிறு மூலம் அனுப்ப அவர் வானம் பார்த்தவாறு படுத்துக்கொண்டே ceilingஇல் Jesus, Moses, vergin Mary, last supper போன்ற உலகப்புகழ் பெற்ற படங்களை வரைந்த விபரங்கள்....

Guide சளைக்காமல் பேசிக்கொண்டிருந்தார். மனுஷனுக்கு கை, கால் கொடைச்சலே வராது என நிணைக்கிறேன். எங்களுக்குத்தான் அப்பப்ப பசி, தண்ணித்தாகம், இயற்கையின் அழைப்பு எல்லாம் வரிசையாக....
ஒரு மணி நேரத்திற்கு மேல் விலாவாரியாக guide விளக்கியபோது நமக்கு விலா எலும்பு வலித்தது.

எவ்வளவு நேரம் தான் மோட்டு வளைகளையும் விட்டத்தையும் பார்ப்பது? தோளுக்கு மேல் வளர்ந்த என் சின்னவன் மெல்ல என் தோளின் மேல் சாய்ந்து கொண்டு ' does he have any break in his job?' என கேட்ட போது அவருக்கு ஏதோ அசரீரி சொல்லி விட்டது மாதிரி புரிந்து விட்டது போலும். ஆசாமி படு உஷார். "At the end of my session I will be asking questions to some one I choose from you guys" என ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அது வரை வெறுமனே தலையை ஆட்டிக்கொண்டிருந்த என் பார்யாள் கலவரத்துடன் என்னை பார்த்து "ஏமி போடுஸ்தாமா" என கேட்க, கூட வந்திருந்த மற்றொரு இங்கிலாந்துக்காரர் "oh gaad" என சலித்துக்கொண்டார். அடுத்து அவர் 'next one and half hours, I will be briefing you on the functioning of pope's office and his powers' என்றதும் நாங்கள் கீழே விழாமலிருக்க ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டோம். Guide இங்கே விளக்கிக்கொண்டிருக்கும்போது மற்றொரு நிர்வாண ஓவியத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெங்காலிக்காரரைப் பார்த்து "are you with me?" என கோபமாக நம்ம guide அதட்ட, எண்ணை மூஞ்சியுடன் இருந்த பெங்காலிக்காரர் நறநறவென பல்லைக்கடித்து அம்ரீஷ் பூரி மாதிரி பதிலுக்கு முறைத்தார்.

அந்த guideஐ குறை சொல்வது சரியல்ல. மதியம் 4 மணிக்கு மேல் எல்லோருக்கும் டீ தேவைப்பட்டது. மிக அழகாக அவர் தன் கடமையை செய்து கொண்டிருந்தார். கடைசியாக பிரம்மாண்டமான Sistine chapel கொண்டு சென்று காட்டியபோது பிரமிப்படைந்தோம். அதற்கு முன் இந்த வெள்ளைக் கோட்டிற்கு அந்த பக்கம் வாடிகன் இந்த பக்கம் ரோம் போன்ற சமாசாரங்கள், உலகத்தில்
உள்ள எல்லா கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவர் போப் என்றும், போப் தங்கும் இல்லம், வாடிகன் அலுவலகங்கள், பரப்பளவில் ஶ்ரீரங்கத்தை விட சிறியதான(என் ஊகத்தில்)அந்நாட்டிற்கு தனி நாணயம் மற்றும் பாஸ்போர்ட் போன்ற விபரங்கள், அங்கே அலுவலகத்தில் பணி புரியும் மக்கள் எல்லோரையும் காண்பித்தார்.

சிப்பந்தி ஒருவர் சிரத்தையுடன் போப் மற்றும் அவரது glergymen, கார்டினல்களுக்கு புதிய உடைகள் தைத்து அழகாக சுவற்றில் மாட்டி வைத்துக்கொண்டிருந்தார்.அத்தனை guardsம் உம்மனாம் மூஞ்சிகள்...Swiss நாட்டவர்களாம். நமக்கு வத்தல் வடாம் மாதிரி swiss guardsக்கு சாக்லேட் தான் மதியம் தொட்டுக்கொள்ள..போன்ற தகவல்கள்,
சிலர் Greece மற்றும் எகிப்து நாட்டவர்களாம்.(முன்பு கிரீஸ், எகிப்து நாடுகள் இத்தாலியின் காலனி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்ததால்)...முந்தைய போப் பெனடிட்டோ ஜெர்மானியர் என்பதால் நிறைய ஜெர்மானியர்கள் பணிபரிகின்றனர் என்பது உபரித்தகவல்...நம் அமெரிக்க guide கொஞ்சம் விஷமப்பேர்வழி. அங்கு நடக்கும் அரசியலையும் நமக்கு கொஞ்சம் விளக்கினார்.(அப்போது மட்டும் எங்களுக்கு களைப்பே தெரியவில்லை)

அது சரி... அங்கு கர்ம சிரத்தையுடன் போப் மற்றும் கார்டினல்களுக்கு உடைகள் தைக்கும் அந்த அன்பருக்காகத்தான் இந்த பதிவையே எழுதுகிறேன். அவர் ஒர் இந்தியர் என guide சொன்னபோது எங்களுக்கு பெருமிதம் தாங்கவில்லை. உலகத்தின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான வாடிகனில் ஒரு இந்தியர் என எங்களுக்கு புல்லரித்தது.அவர் எந்த மாநிலத்தவர்?

புள்ளி..மலையாளியானு...

சூப்ஸ் என்கிற சுப்ரமணியன்....

செம்பூர் செட்டா நகருக்குள் நுழையும்போதே ஜிலுஜிலுவென காற்று.. ஏராளமான மரங்கள். அமைதியான சூழல். பரபரப்பான பாம்பே தானா இது என சந்தேகம். சுமார் 60, 70 அடுக்குமாடி வீடுகள். நடுவே முருகன் கோவில். அங்கே வசிக்கும் முக்காவாசி பேர் தமிழர்கள். பல வருடங்களுக்கு முன் பம்பாய்க்கு குடியேறி அங்கேயே படித்து, மணமுடித்து, புத்திர சந்தானத்துடன் செட்டிலான பாலக்காட்டுக்காரர்கள். அல்லது நம்மூரிலிருந்து வேலை கிடைத்து வந்து சில பல வருஷங்களாக இருப்பவர்கள். திடீரென்று என்னை மாதிரி பம்பாய் விட்டு ஓடக்கூடியவர்கள்.
பம்பாய் தமிழ்ப்பெண்கள்? சுத்த வேஸ்ட் ஸார். ஆண் வர்க்‌கமே பிடிக்காத மாதிரி சீன் போடுவார்கள். சரி, தமிழ்ப்பொண்ணாச்சே என்று ஒருத்தியுடன் தமிழில் பேசினால் பதில் ஆங்கிலத்தில் வரும். அவள் தம்பி அதுக்கு மேல... பார்க்க மதமதவென்று போக்கிரி அசின் தம்பி கிட்ட விஜய் சொல்ற மாதிரி "குடும்பமே உப்புமா சாப்ட்டு" வளர்ந்த ஸ்தூல சரீரி. தமிழோடு ஹிந்தி கலந்து வெறுப்பேற்றுவார்கள். ("அந்த பங்க்காவ பந்து பண்ணு.. எட்டு மணிக்கு ப்ரோக்ராம் சாலு பண்ணுவாங்க.."). அதிலும் சில எக்ஸ்‌ட்ரீம்கள்... இந்த காஸ்ஸெட் அங்கே கிடைக்குமாவென்று கேட்டால் "அங்கே தோடி(ஹிந்தி) கிடைக்கும்" என பதில். 'அதுசரி..உங்கக்கா என்னடா பண்றா' என கேட்டால் 'தெர்லடா’ என பட்டென பதில் வரும், வயது வித்தியாசம் தெரியாமல் 'டா' போடும் தம்பிகள். ‘அதுசரி! அவங்க அக்காவை நீ எதுக்கு விஜாரிக்கனும்?’ என என்னை கேட்க நினைப்பவர்கள் அடுத்த பாரா போய்விடலாம். 😃
தமிழ்க்கார அப்பாக்கள் பலவகை. ஒன்று காலை 6 மணிக்கு காண்ட்ராக்ட் பஸ்ஸில் ஐய்ரோலி, தூர்பே, முலுன்டு பகுதியில் உள்ள PIL அல்லது ஏஷியன் பெயிண்ட்ஸில் வேலை செய்யும் சீனியர் ஸ்டேனோக்ராபர்கள். அல்லது டிபன் டப்பாவில் சப்பாத்தி எடுத்துக்கொண்டு 8.13 லோக்கலை பிடிக்க ஓடும் ரயில்வே சிப்பந்திகள், இன்கம்டாக்ஸ்/சச்சிவாலயா ஊழியர்கள். அல்லது மனைவியிடம் சள்ளென்று எறிந்து விழும் கொஞ்சம் கடுகடுவென முகத்துடன் சம்மந்தமில்லாத கலரில் பாண்ட் சட்டை, கழுத்தில் படு ஒல்லியான டை, சூட்கேசில் ஹிந்து பேப்பர், ரவுண்டு டிபன் டப்‌பா, ட்ரெயினில் படிக்க வென்ச்சர் காபிடல் மானேஜ்மெண்ட் புத்தகம் சகிதம் பர்ஸ்ட் க்ளாஸ்ஸில் பயணம் செய்யும் 'ஐ ஆம் shawreng pawni' என கை குலுக்கும் வைஸ் பிரெஸிடெண்டுகள். வந்தாரை எப்படியும் வாழ வைக்கும் பம்பாய்..
வேலைக்குப்போகும் பேச்சிலர்ஸ்...? தமிழ் நாட்டிலிருந்து வேலைக்கு வந்த பேச்சிலர்ஸ் 2,3 வருஷம் யாராவது ஒருத்தியுடன் தாதர் சிவாஜி பார்க், ஜூஹூ பீச்சென ஊரெல்லாம் சுற்றி, ப்ரீத்தி உண்டாக்கி, ஒருமாத லீவுக்கு ஊருக்குப்போய் திரும்பி வரும்போது 'மாயவரத்துப்பொண்ண வீட்ல நிச்சயம் பண்ணீட்டாங்க' என்று வந்து நிற்பார்கள்.
என் அண்ணனின் மாமனார் சொன்னாரென்று யாரோ ஒருவர் தன் பெண்ணின் ஜாதகத்துடன் என்னை பார்க்க ஆபீசுக்கு வந்துவிட்டார். ஜாதகத்தை வாங்கி ஊருக்கு அனுப்பிவிட்டேன். அப்படியும் மனுஷன் என்னை விடுவதாக இல்லை. சரியாக ஒவ்வொரு சனியன்றும் மதியம் ஆபீசுக்கு (ஃபோர்ட் ஏரியா) வந்து பக்கத்தில் உடுப்பி ஹோட்டலுக்கு கூட்டிப்போய் கல்யாணத்தப்பத்தியே பேசுவார். தாலியும் வாங்கித்தருவார்(இது நார்த் இன்டியன் தாலி..வயத்துக்கு). 'யாரைக்கேட்டு நீயே பெண் பார்க்கிறாய்' என திட்டி ஊரிலிருந்து லெட்டர் வந்ததும் பயந்து போய் அடுத்தவாரம், அவருடன் நல்லா சாப்பிட்டவுடன் மெதுவாக 'வீட்ல அவங்களே பெண் பாத்துப்பாங்க மாமா' என நான் சொன்னதும் கரகாட்டக்காரன் ஷண்முகசுந்தரம் மாதிரி உஷ்ணமாகி ஜீரகத்தை வாயில் அள்ளி போட்டுக்கொண்டார்.
முருகன் கோவிலுக்கு சற்று எதிரே விஜயா பில்டிங்கில் நாங்கள் ஐந்தாறு பிரம்மச்சாரிகள் தங்கியிருந்தோம். வீட்டுக்கு போய் குளித்துவிட்டு நானும் ரங்குவும் முதலில் கோவிலுக்கு போவோம். சுவாமி தரிசனத்திற்கு மட்டும் தான்!. எல்லா குருக்களும் எங்களுக்கு தோஸ்த்.. கீழ் தளத்தில் தங்கியிருக்கும், சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்கும் 25 வயது கூட நிரம்பாத அர்ச்சகர் சதாசிவம் ரங்குவுக்கு நண்பர். 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா' பாட்டு கேட்டுக்கொண்டு இருந்த அவருடன் அவர் ரூமில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த போது சந்துரு Balasubramaniam Chandrasekaran வந்திருந்தான்.

சந்துருவுக்கு திருச்சி சுந்தர் நகரில் எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடு. கம்பெனி செகரடேரி. ரோஷக்காரன். மானஸ்தன். அப்பாவின் கடனை அடைக்க காலை டிபனுக்கு பிறகு ஒன்றும் சாப்பிடாமல் இரவில் உ.பி.பைய்யா கடையில் பால் மட்டும் குடித்து கடனை அடைத்தவன். வேலையில் இருந்துகொண்டே ACS பைனல் பாஸ் செய்து என்னுடைய உபயத்தால் ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டவன். (அந்த கதை என் 'செம்பூர் ஸ்டேஷன்' என்ற தனிப்பதிவில்..) சரியான லூட்டி... நாகேஷின் காமெடிக்காக என்னை பலமுறை 'சோப்பு சீப்பு கண்ணாடி' பார்க்க வைத்தவன். சந்துரு இன்ஸ்டன்ட் ப்ரூ காபி போட்டு குடுத்தான்.
அடுத்து துபே (வடநாட்டுக்காரன்), மற்றும் சத்யன் (IT) ஆபிசிலிருந்து வந்தார்கள். கடைசியில் ஸ்ரீரங்கத்துக்காரனான முரளி வந்தான். இரவில் வீட்டு சாப்பாடு தான். அந்த ரூமில் முன்பு சாம்பார், தக்காளி ரசம், தயிர்சாதம், பொறியல்..மட்டும் தான். நான் இவர்களுடன் சேர்ந்தவுடன், "இதெல்லாம் பத்தாதுடா... " என்று சொல்லி அடுத்த சில நாட்களில் ராவா தோசை(ஞாயிறு காலை டிபன்), பூண்டு ரசம், மோர்குழம்பு, தக்காளி சாதம், லெமன் ரைஸ், புளியோதரை, சப்பாத்தி, ஆலு கோபி, பைங்கன் மசாலா என எனக்குத் தெரிந்த வெரைட்டியுடன் சமையலில் பிரதான இடம் என்னுடையதாகியது.
அடுத்தடுத்த பில்டிங்குகளிலும் நிறைய பேச்சிலர்கள். எல்லோரும் நள மகாராஜாக்கள். கிச்சனிலிருந்து வெளியே வந்து பால்கனியில் நின்றுகொண்டு பக்கத்துவீட்டு பெண்ணிற்கு கேட்கும்படி "'மணி!... put some காரப்பொடி'...என கத்தி அலப்பறை செய்யும் கணேசன்கள்..
பிரம்மச்சாரிகளின் வாழ்க்கை வெகு சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் நண்பரின் சிபாரிசின் பேரில் BITS Pilaniயிலிருந்து சுப்ரமணியன் என்ற மாணவன் 3 மாதம் மட்டும் தங்க எங்களுடன் சேர்ந்துகொண்டான். வங்கியில் தன் ப்ராஜெக்ட் செய்ய பம்பாய் வந்திருந்தவன் சூப்ஸ் என்ற நாமகரணம் எங்களால் சூட்டப்பட்டான்.
ஒடிசலான உருவம், திக்கான சோடாபுட்டி கண்ணாடி. சின்ன மீசை.. முள் தாடி.. சட்டையை இன் செய்யாமல் முழங்கை வரை மடித்து சாதாரண பாண்ட் மற்றும் ரப்பர் செருப்பு, அலட்சியமாக வாரிய தலை முடி. மண்டை முழுக்க மூளை. அவன் படிக்காத ஆங்கில நாவல்களே இல்லை. இடதுகையில் சதா புகைந்து கொண்டிருக்கும் ஃபோர் ஸ்கொயர் சிகரெட். வயது 20. பார்க்க கண்ணாடி போட்ட தனுஷ் மாதிரி இருக்கும் சூப்ஸ்சுக்கு இந்திய, உலக அரசியலாகட்டும், தமிழ், ஆங்கில இலக்கியமாகட்டும் எல்லாம் அத்துப்படி. சினிமா அறிவு அறவே கிடையா. பார்க்க மூடியாக இருப்பான். அவ்வப்போது தனது டைரியில் ஆங்கில கவிதைகள் எழுதுவான். எங்கே..படித்துக்காமிடா என்றால் வெட்கப்படுவான். ஆனால் பழகப்பழக சில நாட்களில் அவனது நட்பு எங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. சமையல் தெரியாததால் காபி குடித்த தம்ளர்களை சிங்க்கில் போட்டு அலம்புவான். போட்டிருக்கும் சட்டை பாண்ட்டுடன் அப்படியே சட்டென் தூங்கிப்போவான்.
இவனுடன் மற்றொரு ரூம்மேட் ஸ்ரீராமும் சிகரெட் வலிப்பதால், அடூர் கோபாலகிருஷ்ணன் ஜாடையிலிருக்கும் பக்கத்து வீட்டு மாமா திருட்டு தம்மடிக்க எங்கள் வீட்டிற்கு அப்பப்போ வருவார்.அவரை தேடிக்கொண்டு வந்த மாமி ஒருமுறை எங்கள் ரூமை பார்த்ததும் தன் மராட்டிய வேலைக்காரியை விட்டு எங்கள் வீட்டை சுத்தம் செய்ய அனுப்ப, அந்த மராட்டி பாயி எங்கள் வீடு இருக்கும் நிலையை பார்த்து சரமாரியாக திட்டித்தீர்த்து விட்டாள். அங்கங்கே அவுத்துப்போட்ட பாண்ட் சர்ட்டுகள், உலர்த்தாத கப்படிக்கும் ஈரத்துவாலைகள், ஸ்ரீராம் , அடூர் மாமா மற்றும் சூப்ஸ் விட்டெரிந்த சிகரெட் துண்டுகள், எங்கு பார்த்தாலும் CA,ACS சம்மந்தப்பட்ட புத்தகங்கள். கட்டிலுக்கு அடியில் போட்டுத்தள்ளப்பட்டிருக்கும் வாழைப்பழத்தோல்.. எங்கெங்கு காணினும் ஜட்டியடா!
ஒரு சனிக்கிழமை ஸ்ரீராம் ஆபிசில் எல்லோரும் கர்ஜத் அருகில் பிக்னிக் போவதாக ப்ளான் செய்து என் ரூம் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். நானும் சந்துருவும் போகவில்லை. மறுநாள் செம்பூர் கீதாபவனில் பைனாப்பிள் தோசா முடித்து வெளியே வரும்போது எதிரே சந்துரு கலவரத்துடன் ஓடி வந்து "ஸ்ரீதர்...சூப்ஸ் செத்து போய்ட்டாண்டா.." என சொல்ல அதிர்ந்து போனோம். சூப்ஸ்சின் பாடி கல்யாண் ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் வந்ததால் நாங்கள் இருவரும் ட்ரெயின் பிடித்து கல்யாண் போனோம்.
ஆசுபத்திரி பின்பக்கம் மார்ச்சுவரியில் பாடி இருப்பதாக சொல்ல அங்கு ஓடினோம். கொஞ்சம் ஒதுக்குப்புறமான பழைய சிறிய கட்டிடம். சுற்றிலும் மரங்கள். ஊஊஊவென காற்றடிக்க, பகலில் கூட தனியே போக பயமாக இருக்கும் அளவுக்கு ஒரு அமைதி. வாசலில் ஒரு வேன்… மெல்ல அருகே போய் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தோம். சூப்ஸ் லேசாக உடல் ஊதி, கறுத்து விரைத்துப்போயிருந்தான். அடுத்து மற்றொரு மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ் ஒன்றிரண்டு விரைந்து வர, ஒரே சமயத்தில் நாலைந்து பிணங்கள் வந்திறங்கின. சில உடல்களை சதையும் ரத்தமாக கந்தலாக கொண்டு வந்து வைத்தார்கள்.. இல்லை.. போட்டார்கள். டோம்பீவிலி, கல்வா அல்லது சுத்துப்பட்டு ஸ்டேஷன்கள் அருகே ரயிலில் அடித்துச்சென்ற உடல்களாம்.
மார்ச்சுவரியை பார்த்துக்கொள்ளும் மராட்டிய கிழவன் முழு போதையுடன் வந்தான். பிணவரையில் தினம் 16 மணி நேரம் வேலை செய்ய அரசாங்கமே அவனுக்கு மதுவுக்கு பணம் கொடுக்குமாம். சலனமேயில்லாமல் உடல்களை தொட்டு அப்படியும் இப்படியும் உருட்டி தள்ளினான். சில உடல்களை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டியவாறே ‘ஹஸ்த்தே மரா க்யா!’ (சிரிச்சிக்கிட்டே செத்தையாடா?) என கேட்டு வேலை செய்து கொண்டிருந்தான். எனக்கும் சந்துருவுக்கும் வயிறை என்னமோ செய்ய, லேசாக உள்ளே எட்டிப்பார்த்த சந்துரு ‘ஆ’வெனஅலறி பின்வாங்கினான். எனக்கு லேசாக தலை சுற்றியது. அங்கே பக்கவாட்டில் சரிந்தும், சாய்ந்து உட்கார்ந்த நிலையிலும், குப்புறக்கிடந்தும், குடல் மற்றும் சதைக்குவியலோடும் அங்கங்கே …. சில நாட்கள் பிணவறை முற்றிலும் காலியாக இருக்குமாம். அன்று அந்த சிறிய ரூம் கொள்ளாத அளவுக்கு …..( போதும் நிறுத்திக்கிறேன் ஸார்.)
இரவு 12 மணி வரை கல்யாண் போலீஸ் ஸ்டேஷனில் நண்பர்களை போலீஸ் தூண்டித்துருவி விசாரித்தார்கள். கர்ஜத் அருகே எங்கோ கிராமத்தில் அழகிய நீரோடை, பூங்கா மற்றும் காட்டுப்பகுதி…நண்பர்கள் மதியம் 2 மணி வரை பூங்காவில் சுற்றிவிட்டு சாப்பிட்டவுடன் 4 மணி வரை கிரிக்கெட் ஆடி மெதுவாக ஒவ்வொருவராக தண்ணீரில் இறங்கி குளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தெளிவான அமைதியான ஓடை. இடுப்பளவு தண்ணீர் தான். எல்லோரும் குளித்து முடிந்து வெளியே வந்த பிறகும் சூப்ஸ் மட்டும் தண்ணீரில் நின்றுகொண்டிருந்தானாம்..
'போதும் வாடா' என அவனை நண்பர்கள் கூப்பிட அவன் மெல்ல சிரித்துக்கொண்டே கரையை நோக்கி ஓரடி எடுத்து... 'சளக்' கென்று அப்படியே நீருக்குள்ளே போய் உடலை சிலுப்பி.. நண்பர்கள் கூச்சலுடன் துண்டை அவன் பக்கம் வீசியும் பயனில்லை... யாருக்கும் நீச்சல் தெரியாது. உள்ளே முழுவதும் சென்றுவிட்ட சூப்ஸ் அடுத்த நொடி திடீரென மறுபடியும் தண்ணீருக்கு மேலே கழுத்தளவு வெளியே வந்து அதே வேகத்தில் திரும்ப உள்ளே போனான்.. ஒரு கை மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிய அடுத்த நொடி நீர்க்குமிழிகளுடன் தண்ணீருக்குள் மாயமாக மறைந்தான். வெளியே வர போராடுகிறான் என்பது தண்ணீரின் சலசலப்பில் தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நீர்க்குமிழிகளும் நீரின் சலசலப்பும் அடங்கி நீர்ப்பரப்பு அமைதியானது. எல்லோரும் கூச்சலிட யாருக்கும் ஒன்றும் செய்யத்தெரியவில்லை. போலீஸ் வந்து சேர மேலும் இரண்டு மணிநேரம் ஆனது.
போலீஸ் கூட வந்திருந்த கிராமத்தான் 'சாலா! பொழுதன்னைக்கும் உங்களுக்கு இதே வேலயாப்போச்சு? இந்த வாரத்துல இது மூணாவது சாவு!' என சலித்துக்கொண்டு 1500 ரூபாய் பேசி தண்ணீருக்குள் பாய்ந்து செடிகளுக்கிடையே கையை விட்டு பாறைகளை நகர்த்த, ஜிவ்வென உடல் மேலே வர, சூப்ஸ் என்கிற சுப்ரமணியன் வெளியே எடுத்து போடப்பட்டான்.
நண்பர்கள் எல்லோரையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து ஸ்டேஷனுக்கு கூட்டிப்போனார்கள். பஞ்சநாமா போன்ற சம்பிரதாயங்களுக்குப்பின் “வேறெந்த முகாந்திரமும் இல்லை ..சுழலில் சிக்கி இறந்த தற்செயலான விபத்து இதுவென ருசுவாகிறது.. கேஸ் பதிவு செய்யாமலிருக்க 35 ஆயிரம் ஆகும்” என போலீஸ் பேரம் பேச, ஸ்ரீராமின் அண்ணன் 20 ஆயிரத்திற்கு முடித்து நண்பர்களை வெளியே கொண்டு வந்தார்.
அடுத்த 2 நாட்கள் கொடுமையானவை. 13 வயது மகளுடன் வடநாட்டு சுற்றுலா சென்று விட்ட சூப்சின் பெற்றோரை யாரோ பெரியப்பா ஒருவர் தேடி போனில் பிடித்தார். மறுமுனையில் கூச்சல்..அழுகை. உடலையும் அவர்கள் பார்க்கத்தயாராக இல்லை. பெரியப்பா மட்டும் 2 நாளில் வந்து அந்திம காரியங்களை முடித்து விட்டுப்போனார்.
அடுத்த ஒரு மாத காலம் வீட்டில் சமைக்கவில்லை. ஏதோ ஒரு பயத்துடன் சோகமாக உலாவினோம். சூப்ஸ்சின் உடமைகளை பெ
ரியப்பா கொண்டு சென்றுவிட அவனது ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் மட்டும் ரூமில் கிடந்தன.
சில நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு வரத்தொடங்கினோம். ஒருநாள் சந்துரு ஏதோ புத்தகங்களை குடைந்தபோது சூப்ஸ்சின் டயரி கிடைக்க "ஸ்ரீதர்! இங்க வாடா! " என அலறினான். கைகள் நடுங்க டயரியை புரட்டியபோது, இறப்பதற்கு சில நாட்கள் முன்பு கிறுக்கி வைத்த கவிதை மாதிரி சில வரிகள்..... ஒன்றும் புரியவில்லை. ஆனால் படிக்க முடிந்த கடைசி நாலைந்து வரிகள் ….
And I want to dwell..
in some corner…
alone..
surrounded by water…
only water.. 

Tuesday, January 21, 2014

நண்பேன்டா ....


1986 ஆம் வருடம் ஒரு நாள்..அதிகாலை மணி 3... பம்பாய் மெயில் கல்யான் ஸ்டேஷனை தான்டியதும் மெதுவாக எழுந்து உட்கார்ந்து கொண்டேன். கையில் ஒரே பெட்டி. முதல்முறை பம்பாய் வருகிறேன். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படித்ததால் கற்ற சரளமான ஹிந்தி, பள்ளிப்பருவத்தில் திருச்சி செயின்ட் ஜோசப்ஸில் விரல்கள் ஒடிக்கப்பட்டு imposition எழுதி grammer படித்தால் ஓரளவு சுமாரான ஆங்கிலம்......குடும்ப சூழ்நிலை காரணமாக CA மற்றும் ICWA இன்டர்மீடியட் பாஸ் செய்தவுடன் வேலை…பின் அடுத்த சில வருடங்களில் final பரிட்சை பாஸ் செய்ய வேண்டிய கட்டாயம்..இதுதான் சார் அப்ப நம்ம ப்ரொஃபைல். தண்டவாளங்கள் மாறும் ரயிலின் 'தடாம்...தடாம்' சப்தம் வெளியே கேட்டது....

திருச்சியில் ஆடிட்டர் குமாரராஜிடம் ஆர்டிகிள்ஸ் படிக்கும்போது அவரது partner ஆடிட்டர் முகுந்தன் ஆபிஸ் மாணவர்களுடன் வெளியூர் ஆடிட்கள் நான் போவதுண்டு. ஒருநாள் அவர்கள் ஆபிசில் இருந்து கணபதி சுப்ரமணியன் எனும் மாணவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். நெடுநெடுவென உயரம், சோடாபுட்டி கண்ணாடி, சம்மந்தமில்லாத ஒரு டி.சட்டை, ஓரிரண்டு நாள் தாடி.. இதுதான் இந்த பதிவின் நாயகன் கணபதி. அன்று மாலையே மன்னார்புரம் ஹவுசிங் காலனி எங்கள் வீட்டிற்கு கணபதி வந்துவிட்டான். எங்கள் குடும்ப நண்பர் ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் சுபான்கான்' னீடம் தனக்கு accountancy பேப்பருக்கு டியூஷன் சேர உதவி கேட்டான்.

அடுத்த சில தினங்களில் டியூஷன் சேர்ந்து எனக்கும் நெருங்கிய நண்பன் ஆனான். என்னை விட ஒரு வருடம் சீனியர் வேறு. தினமும் நான் பொன்மலைக்கு போய் அவனுடன் படிக்கும் வழக்கமானது. நண்பன் மட்டுமில்லாது நமக்கு taxation, accountancy மற்றும் costing பாடங்களுக்கு அவன் தான் குரு. 'B' List of Contributories பற்றி விளக்கும்போது 'ஸ்ரீதரா.......நம்ம வீட்டு கல்யாணத்து பந்தியில நாம முதல்ல ஒக்காந்து சாப்பிடுவோமாடா.. அதுமாதிரி தான் ஒரு கம்பெனியை லிக்விடேட் செய்யும்போது…மொதல்ல யாராருக்கு பணத்த திருப்பி கொடுப்பா...'' என புரியும்படியான சில உதாரணங்களை சொல்லி accountancy இல் நம்ம டவுட்டுகளை க்ளியர் செய்வதில் கில்லாடி. படிக்கும் நேரத்தில் பாதி நேரம் பேச்சு தான். ('பொன்மலை' என என்னுடைய தனி பதிவில் இதைப்பற்றி எழுதிவிட்டேன்).

அவன் படித்த பொன்மலை சாமியார் ஸ்கூலில் (கிறுஸ்துவ நண்பர்கள் மன்னிக்க..அப்படித்தான் சொல்வார்கள்) ஆங்கில இலக்கணம் சொல்லித்தரும் வாத்தியார் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள நிறைய tips கொடுப்பார்களாம். ….
"ஐவி வந்தா ஷல்லு (I,WE,SHALL), மத்ததெல்லாம் வில்லு (WILL), மாத்தி போட்டா கொல்லு……….."மூனாவது பையன் தனியே வந்தா செருப்பால(S) அடி" (third person singular)...
மற்ற உள்ளூர் வாத்தியார்கள் சீக்கிரம் வீட்டுக்கு போகும்போது தினமும் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் பூகோள வாத்தியார் (ஸ்கூலில் 'அய்யிரு') லேட்டாகத்தான் போவாராம். யாராவது பையன்கள் அவரை சைக்கிளில் பொன்மலை ஸ்டேஷனில் விட்டு விட்டால் அங்கேயே சந்தியவதானம் செய்து விட்டு ஸ்ரீரங்கத்துக்கு ரயிலை பிடிப்பாராம்.பஞ்சகச்சம் அங்கவஸ்திரத்துடன் வரும் அவர் " இந்த பூமியே அய்யரு மாதிரி தாண்டா.. அங்கவஸ்திரத்த இப்பிடி போட்டா அட்ச ரேகை.. இப்பிடி மாத்தி போட்டா தீர்க்க ரேகை.. புரியுதா?" என அவர் மாணவர்களுக்கு புரியும்படி விளக்குவாராம்.
தினமும் படிக்கிறேன் பேர்வழி என்று பொன்மலை ரயில்வே கான்டினில் ராவா தோசை, மைசூர் பாக், பில்டர் காபி, காசி அல்வா என வாழ்க்கை சந்தோஷமாக போனது. கணபதி CA பாஸ் செய்து பாம்பேயில் வேலையில் சேர்ந்து பிறகு இரண்டே வருடங்களில் அவனது உபயத்தில் நானும்…இதோ வந்துவிட்டேன்..

ச்சாய்.... ச்சாய்... சத்தம் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன். விடியற்காலை 4 மணிக்கு பம்பாய் வி.டி. ரயிலடியை ரயில் அடைந்த போது எனக்கு லேசான பயம் தொற்றிக்கொண்டது. மிரள மிரள விழித்தபடி நின்ற என்னை நோக்கி கணபதி கொஞ்ச நேரம் கழித்து வந்தான். 'வாடா... எப்பிடி இருக்கே..' என வலி உயிர்போகும்படி தோளில் அடித்தான். செம்பூர் போக உள்ளூர் ட்ரெயின் ஒன்றை பிடித்தோம். '6 மணிக்கு மேல டிரெயின்ல கூட்டத்த பாத்தேன்னா அசந்துடுவே' என்று அவன் சொன்னது ட்ரெயின் சத்தத்தில் என் காதில் விழவில்லை. ஓரளவு கூட்டமாகத்தான் இருந்தது.

ட்ரெயினில் எங்கு பார்த்தாலும் 'Abortion-Only Rs.70'..டிரான்ஸ் எலெக்ட்ரா கம்பெனியின் 'டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திசுருள்' விளம்பர வாசகங்கள். காந்தி குல்லா ஜீப்பா பைஜாமா உடுத்தி பக்கத்தில் அமர்ந்த மராட்டிக்காரன் ஒருவனை மிக மரியாதையுடன் பார்த்தேன். மெல்ல ஜிப்பாவில் கை விட்டு ஒரு சிறிய டப்பாவில் இருந்து கொஞ்சம் புகையிலை தூளை எடுத்து இடது கையில் வைத்தான். அதே டப்பாவை தலைகீழாக திருப்பி மூடியை திறந்து ஆள்காட்டி விரல் நகத்தால் சுண்ணாம்பை கீறி எடுத்து புகையிலை தூளுடன் சேர்த்து பெருவிரலால் தேய்த்து டப்...டப்பென்று தட்டி தோலை பறக்கவிட்டு மீதிப்பொடியை விரலால் செல்லமாக அள்ளி தன் கீழ் உதட்டுக்கு கீழே அவன் அடைத்த பொழுது எனக்கு நெஞ்சை அடைத்தது. என்னோடு சேர்ந்து இன்னும் இரண்டு பயணிகள் தும்மினார்கள். அதற்குள் காந்தி குல்லாக்காரன் ஆள்காட்டி மற்றும் நடுவிரலை உதட்டில் வைத்து விரல் gap இல் சீராக 'ப்பச்ச்ச்சத்தூ' என ஜன்னலை பார்த்து துப்ப.. சில துளிகளுடன் ஜில்லென என் முகத்தில் அடித்த ஈரக்காற்றில் "மலைச்சாரலில்.. இளம் பூங்குயில் " பாடலை நான் பாடாத குறைதான். திடீரென ஆர்மோனிய சத்தம்..கண்ணில்லாத வயதான கிழவர் ஆர்மோனியம் வாசிக்க கூடவே ஒரு சிறுமி 'ஔலாது வாலோன்.. பூலோங் கிலோன்' என பாடியவாறே நம் தொடையை தட்டி தட்டி உரிமையாக பிச்சை கேட்டாள். மற்றவர்கள் இல்லையென்று சொல்லாமல் ஸலாம் மட்டும் வைத்தார்கள். சுத்தமான ஹிந்தி பேசும் எனக்கு பம்பாயின் 'ஏ பாஜூ... ஓ பாஜூ..' மற்றும் 'அபன் கோ நை மாலும்' போன்றவை வித்தியாசமாக இருந்தது.

செம்பூர் ரயிலடியிலிருந்து 5 நிமிடத்தில் கணபதியின் ஃப்ளாட். அவனது நண்பர்கள் என்னை மேலும் கீழும் வினோதமாக பார்த்தார்கள். நாகராஜனுக்கு (CA மற்றும் ICWA) திருச்சி திருவானைக்காவல் கோவில் சமீபம் வீடாம். ஃபோர்ட் பகுதியில் A.F. பெர்குசன்னில் ஆடிட்டர் வேலை. கிருஷ்னரத்னம் (ICWA மற்றும் ACS ஆம்) சென்ட்ரல் வங்கி ப்ரொபெஷனரி ஆபீசர். நாகராஜன் நடு வகிடெடுத்து நெற்றியில் முடி புரள பேசிக்கொண்டிருந்த அந்த 10 நிமிடத்தில் 5 கெட்ட வார்த்தைகள். அதுவும் ஸ்பஷ்டமான உச்சரிப்புடன் சூடான பாலை டம்ளரில் ஊற்றி முட்டையை அடித்து கலக்கி குடித்துக்கொண்டே பம்பாய் பெண்களைப்பற்றிய சில புள்ளி விபரங்களை அவன் எடுத்து விடும்போது கிருஷ்னரத்னம் குளிக்கப்போக மனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். நமக்கும் கொஞ்சம் பயம் போய் இயல்பு நிலைக்கு வர முடிந்தது. சப்ஜெக்ட் அப்படி.. அந்தப்பக்கம் பாத்ரூமில் 'மணிகண்டா மணிகண்டா… மாமலை வாசா மணிகண்டா'.... பாடிக்கொண்டு கணபதி குளித்துக்கொண்டிருந்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் நானும் கணபதியும் ட்ரெயின் பிடிக்க செம்பூர் ஸ்டேஷனில் நின்றிருந்தோம். சுமார் 20 பேர் வெளியே தொங்கியவாறு ஒரு ட்ரெயின் வந்தது. "ரொம்ப கூட்டம் போல.. அடுத்த ட்ரெயின் பிடிக்கலாமா கணபதி?" என அப்பாவியாக நான் கேட்கும் முன், கணபதி என்னை ட்ரெயின் நுழை வாயில் அருகே தள்ளியவாறு நிற்க, பின்னாலிருந்து ஒரு கூட்டம் எங்களை அலாக்காக உள்ளே கொண்டுபோனது. நுழைவாயில் அருகிலேயே பீடிக்கட்டு மாதிரி நெருக்கமான கூட்டம். நானும் கணபதியும் கமல் ஸ்ரீதேவி மாதிரி பச்சக்கென்று ஓட்டிக்கொண்டு நின்றோம்.

நிறைய பேசினோம்..இனிமையான பாம்பே வாழ்க்கையின் ஈடு கொடுக்க முடியாத வேகம், 'மெஷினரி லைஃப்' என மற்ற மாநிலத்தவர் சொன்னாலும் அங்கு நிலவி வரும் அமைதியான வாழ்க்கை, பயமின்றி நடமாடும் இளம் பெண்கள், எத்தனை சம்பளமாக இருந்தாலும் அதற்கென வகுக்கப்பட்ட வாழ்க்கை முறைகள்.. அரசாங்கத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழ் CA க்கள் பெரும் பதவிகளில் கோலோச்சுவது… இப்படிப்போன எங்கள் பேச்சு மெல்ல அவ்வூர் பெண்டிர் பக்கம் தாவியபோது திருச்சியில் காய்ந்து கிடந்த நமக்கு உற்சாகம் கரைபுரண்டது. அதுபற்றி அப்புறம் தனியாக பேசுவோம்…. வெளியே குர்லா, சுன்னாபட்டி, கோலிவாடா, வடாலா, காட்டன் க்ரீன் போன்ற வித்தியாசமான பெயர்களில் ஸ்டேஷன்கள்.

கணபதி நேராக என்னை நாரிமன் பாய்ன்ட்டில் A.P.ஆஷர், சார்டர்ட் அகௌன்டென்ட்ஸ் என்ற இடத்தில் சேர்த்தான். வேலையில் இருந்துகொண்டே நான் CA ஃபைனல் பாஸ் செய்து வேறு 2 ,3 வேலைகள் மாறினேன். தினமும் மதியம் அரை மணிநேரம் கணபதியை நேரில் பார்த்து அரட்டை… மாலை சேர்ந்து ரயில் பயணம்….சனி ஞாயிறு முழுவதும் அவனுடன் முலுன்டு மற்றும் செம்பூரில் இருக்கும் அவனது அக்காக்கள் வீடு, மாதுங்கா கோவில், உடுப்பி க்ரிஷ்னா, கன்செர்ன் மற்றும் சொசைட்டியில் அருமையான இரவு சாப்பாடு, ஞாயிறு மதியம் சயான் மணீசில் வெ.சாம்பார், உ.கி. கறி, செம்பூர் அஹோபில மடம், செம்பூர் முருகன் கோவில் கீழ் தளத்தில் நெய்வேலி சந்தானம் கச்சேரி, என நிறைய ஊர் சுற்றினோம்.

அடுத்த சில வருடங்களில் கணபதி பஹ்ரைனுக்கு வந்து விட 8 வருட பம்பாய் வாசத்தை விட்டு நானும் 1994இல் பஹ்ரைன் வந்திறங்கினேன் கணபதியின் கைங்கரியத்தில்.. இன்றுவரை அதே கம்பெனி. நம்மை மாதிரியே கணபதிக்கும் 2 பையன்கள். குழந்தைகளும் எங்களை மாதிரியே லூட்டியடிப்பவர்கள். நாங்கள் 'பஹ்ரைன் ஸ்லோகா க்ரூப்' ஆரம்பித்து சுமார் 10 குடும்பங்கள் குழந்தைகளுடன் வாரமொருமுறை பஜன் மற்றும் ஸ்லோகங்கள் சொல்லி வாழ்க்கையை அடுத்த 20 வருடங்களுக்கு நகர்த்தினோம் .

தற்போது கணபதி சென்னையில் ஒரு பெரிய ஆடிட் நிறுவனத்தில்... CA மட்டுமல்லாது CISA, SAP போன்ற படிப்புகள் முடித்து ஆடிட்டில் இருந்து ITக்கு தாவி சைனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் டியூ டெலிஜன்ஸ் மற்றும் இம்பிளிமெண்டேஷன் என்று கலக்குகிறான். வாரமொருமுறை குறைந்தது அரை மணி நேரம் என்னுடன் தொலைபேசியில் அரட்டை.. வருடமொருமுறை நான் ஒருவாரம் வுட்லாண்ட்ஸில் தங்கும்போது, பக்கத்தில் நீல்கிரீசுக்கு அருகிலே தங்கியிருக்கும் கணபதி விடிகாலை 6 மணிக்கு வந்து என்னை கடற்கரைக்கு கூட்டிப்போவது வழக்கமாகி விட்டது.

சென்ற வருடம் எங்கள் ஸ்லோகா க்ரூப்பின் குட்டீஸ் சென்னையில் கூடினார்கள். சென்னை IIT இல் M.Tech முடித்து தற்போது stanford பல்கலைக்கழகத்தில் Ph.D பயிலும் கணபதியின் பையன், அவனது இரண்டாம் பையன் மற்றும் நண்பர் ராஜகோபாலின் பையனுடன் சேர்ந்து C.A final படிக்கும் என் பையன், மற்றும் MBBS, MBA, BE படிக்கும் மற்ற வாண்டுகள் எல்லோரும் கூடியது எங்களை வியக்க வைத்தது.

ஆருயிர் நண்பன் கணபதியின் பிறந்த நாளான இன்று... அவனது குலதெய்வம் தஞ்சை கணபதி அக்ரஹாரம் மஹாகணபதியின் அருள் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ என் வாழ்த்துக்கள். 

Thursday, November 21, 2013

ஆவேரெஜ்…


திருச்சி பெரிய மார்க்கெட் வளைவில் ஆரம்பித்து அப்பாய் மளிகை, பார்மசிகள், இரும்புக்கடைகள், மிட்டாய் கடைகள், வங்கிகள், ஜானகிராம், பாட்டா செருப்புக்கடை,.. கடைசியில் கிருஷ்ணா ரெடிமேட்சில் முடியும் பெரிய கடை வீதியில் உள்ளது எங்கள் ஆபிஸ்.   ஜாபர்ஷா தெரு சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தின் கீழே போட்டோ பிரேம் கடை. முதல் மாடியில் பில்டிங் ஓனர் வீடு. இரண்டாவது தளத்தில் எங்கள் ஆபீஸ். சய்யத் & செல்வகுமார், சார்ட்டட் அக்கவுண்டன்ட்ஸ் இல் தான் நான் CA படிக்க ஆர்டிகில்ஸ் சேர்ந்தேன். ஆடிட்டர் குமாரராஜ்க்கு அப்போது 30 வயதுக்குள் இருக்கும். CA பாஸ் செய்தவுடன் அந்த ஆபீசை துடங்கினார். சில வருடங்கள் கழித்து என்னை தனது முதல் ஆர்டிகிள்ட் கிளேர்க்காக சேர்த்துக்கொண்டார்.   
தெலுங்குக்காரர். ஆளும் பார்க்க தெலுங்கு பட ஹீரோ மாதிரி இருப்பார். எப்போதும் முழுக்கை சட்டை, பெரிய பெல்பாட்டம் பேன்ட், ஷூ, நீளமான தலைமுடி, கூலிங் கிளாஸ், விரல்களுக்கிடையே சிகரெட் என்று பந்தாவுடன் விஜய்பாபு மாதிரி வலம் வருவார். எனக்கு தூரத்து உறவுஎன் அப்பா கோ-ஆபரேடிவ் டிபார்ட்மெண்டில் தணிக்கை துறை அதிகாரி. லஞ்சம் வாங்காமல் இருந்தது பெரிதில்லை. வரும் லஞ்சங்களை உதறிதள்ளி அதனால் கெட்ட பெயர் வாங்கி, நிறைய இடங்களுக்கு பந்தாடப்பட்டு சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டிலேயே ஓய்வு பெற்றவர். ஆடிட்டரிடம் என்னை சேர்ப்பதற்கு  பிரீமியம் ரூபாய் 3000 கொடுக்க என்  அம்மாவின் நகையை அடகு வைத்து அந்த ரூபாய் நோட்டுக்களின் நம்பரை பேப்பரில் குறித்துக்கொண்டு (அவரும் ஆட்டீட்டராயிற்றே) குமாரராஜிடம் கொடுத்து என்னை CA  சேர்த்தார். .  

ஆடிட்டர் வீடு பக்கத்தில் சமஸ்பிரான் தெருவில். ராக்சி, வெலிங்க்டன் பின்புறம் சினிமா வளாகத்தை ஒட்டிய ஸ்டோர் வீடு. சுமார் 10 குடித்தனங்கள் அங்கே அவர்களிடம் வாடகைக்கு இருக்கிறார்கள்.  ஏதாவது 'குடியிருந்த கோவில்' மாதிரி பட வசனங்கள் அவர்கள் வீட்டு அடுக்களையில் கேட்கும். பண்டரிபாய் பேசும் 'என்ன கட்டிக்குடுத்த மறுவருசம் நீங்க ஒட்டிப்பிறந்த ரெட்டக்குழந்தைங்க.. உங்கள வெட்டிப்பிரிச்சு கட்டிக்காத்து வளத்த நான் விட்டுப்பிரிஞ்சு இனி வாழ முடியாதுப்பா ' என முழு நீள வசனம் கேட்கலாம்ஆடிட்டர் குமார்ராஜ் காலை 10.30 மணிக்கு கமகமவென சென்ட் போட்டு வருவார். உடனே இன்கம்டாக்ஸ் அலுவல் நிமித்தம் வெளியே கிளம்பி விடுவார். நான், அருண்மொழி, ரமேஷ்பாபு மூன்று பேர் மட்டும் ஆபிசில் இருப்போம். காலை முதல் மாலை வரை வெறும் அரட்டை தான். ரமேஷ் மதுரைக்காரன். அருண்மொழி பெரம்பலூர் பக்கம் செந்துரை. கொஞ்சம் கோபக்காரன். தப்பு செய்தால் தட்டி கேட்பான். பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் தலைவராக இருந்து எல்லோரையும் கதி கலங்க வைத்தவன். பி. எஸ்சி. யில் 80%க்கும் மேல் மார்க்கு வாங்கி CA  படிக்க வந்தவன். படு ஷார்ப்.  சப்ஜெக்டுகளில் டவுட் இருந்தால் ஒரு பேப்பரை எடுத்து "அது வந்து மாப்ள!" என ஆரம்பித்து   வட்டம் சதுரம் எல்லாம் வரைந்து எழுதி, விளக்கி  முடித்த கையேடு ஒரு வில்ஸ் பில்டரை பத்தவைப்பான். CA முடித்து பெங்களூரில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் இன்டெர்னல் ஆடிட்டராக சில வருடங்கள் இருந்துவிட்டு 15 வருடங்களுக்கு மேலாக தற்போது சிங்கப்பூரில் இருக்கிறான். 

மெதுவாக ஆடிட்டரின் நண்பர்கள் ஜெயப்பிரகாஷ், அய்யப்பன் என்று கூட்டமாக வருவார்கள். ஒரே அரட்டை.. சிரிப்பு. BE படித்திருந்தாலும் அவர்கள் சேர்ந்து சினிமா டிஸ்டிரிபியூஷன் தொழில் செய்பவர்கள். . எப்போதும் சினிமா பற்றி பேச்சு, விமரிசனம் தான். ஜெயப்ரகாஷ் திருச்சி REC யில் படித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் கணிதம் டியூஷன் எடுப்பவர். நடுநடுவே எங்களிடம் வந்து 'நீ என்னா எழுதறே? 'செக்கூஸ் issued but not presented'... என படிப்பார். அருண்மொழி பல்லை கடிப்பான். “செக்கூசாவது கக்கூஸாவது... அது cheques டா தடியா”.அய்யப்பனுக்கு உச்சந்தலை முழுக்க  வழுக்கை.. பக்கவாட்டில் மட்டும் சுருள் சுருளாக முடி... சுருக்க சொன்னால் 'ஆதினம்' போல் இருப்பார். 
நாங்கள் மூவரும் அவர்களை வேடிக்கை பார்த்தபடி வேலை(இருந்தால்) செய்வோம். ஜெயப்பிரகாஷுக்கும் அய்யப்பனுக்கும் அடிதடிதான் பாக்கி.  ஏன் பாக்கியராஜ் இன்ன படத்தில் அந்த வசனத்தை எழுதினார் என ஜெயப்ரகாஷ் புட்டு புட்டு வைக்க, அய்யப்பன், கல்லுக்குள் ஈரத்தில் கடைசி சீன் பாரதிராஜா எதை மனதில் வைத்து முடித்தார் என ஏதோ பாரதிராஜாவே இவர்களிடம் கேட்டு முடிவு செய்த மாதிரி விவாதிப்பார்கள்.  அந்த 7 நாட்கள் கடைசி சீன் பற்றி ஒருவாரம் டிஸ்கஷன்.  நடுவே ஒரே சண்டை, கத்தல்,வாக்குவாதம் நடக்கும்.

சுமார் 11 மணியளவில் நாங்கள் மூவரும் காபி குடிக்க கிளம்புவோம். கீழே இறங்கினால் 10க்கு 10 சதுர அடியில் ஒரு காபி கடை. சரியான கூட்டம். அந்த ஏரியாவே  போண்டா வாசனை தூக்கும். வெற்றுடம்புடன் பூணூல், காசி துண்டு சகிதம் மணி அய்யர். .. நொடிக்கொருதரம் துண்டை தண்ணீரில் நனைத்து பிழிந்து தோளில்  போட்டுக்கொள்வார். சிறிய டம்ளரில் டிகாஷனை எடுத்து 3 டபராவில் ஒரே அளவாக கொட்டி, சூடான பாலை கலக்கி டபரா மேல் ஊற்றி நுரையுடன் அவர் கொடுக்கும் கள்ளிசொட்டு காபி தேவாமிர்தமானது. எட்டில் ஒரு பகுதியாக கிழிக்கப்பட்ட தினத்தந்தி பேப்பரில் சுற்றிய போண்டாவுடன் காபியை குடித்து விட்டு மேலே ஆபிசுக்கு போவோம்.

ஆபிஸ் அங்கே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது.   காச் மூச்சென்று சத்தம். "ஒடம்புல ஒண்ணுமே இல்லாம பாரதிராஜா எப்பிடி  கார்த்திக்,ராதாவ  மலர் படுக்கைல போட்டு அந்த சீன எடுக்கலாம்?" என ஐயப்பன் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான் . "அட  கசு மாலமே.. .. பாரதிராஜாவே ஒன்னும் போட்டுக்கலையா?" என காதருகில் வந்து கேட்ட அருண்மொழியை 'சும்மா இருடா' என  நான் அதட்ட, மறுநிமிடம்  சிரிப்பை அடக்க முடியாமல் அருண்மொழி " எலேய் இவனுங்களுக்கு பொண்டாட்டி புள்ளைங்களே கெடயாதா. பொழுதன்னைக்கும் அந்த பாழாப் போன சினிமா பேச்சு தானா?" என  அங்கலாய்த்துக்கொண்டான் . அடுத்த சில மாதங்களில் 'காதல் ஓவியம்' விநியோக உரிமை எடுத்து ,படம் ஊத்திக்கிட்டவுடன் எல்லோரும் குடியில் மூழ்கினார்கள்.

மணி மதியம் 12 ஆனதும் 'ஸ்ரீதர்! மோர் சொல்லுங்க' என அந்த கூட்டம் சொன்னதும் பால்கனிக்கு ஓடி அங்கிருந்து கை தட்டி சைகை மூலம் எதிர் ஹோட்டலுக்கு ஆர்டர் கொடுத்த சில நிமிடங்களில் கருவேப்பிலை மணக்க ஜில்லென மோர் வந்ததுநீர்மோர் குடித்தபின் ஒருவழியாக அந்த சினிமா கும்பல் போனதும் லஞ்சு டப்பாவை திறந்தோம்.

4 மணிக்கு ஆடிட்டர்  கமகம சென்டுடன் அவசரமாக வந்தார். St ' Joseph 's   மற்றும் உருமு தனலக்ஷ்மி கல்லூரிகளில் B.Com  மாலை வகுப்பு பாடம் எடுக்க அவசரமாக ஓடினார். "அவ்வள அவசரத்திலும் சென்ட்டு போட்டுக்காம போக மாட்டாரு தொர ... பொண்ணுங்களுக்கு இல்ல கிளாஸ்  எடுக்கறார்" என்ற  அருண்மொழியின்  கமெண்ட்  அவருக்கு  கேட்டிருக்க வாய்ப்பில்லை. .

எப்படியோ ஜமால் முகமது காலேஜ் ப்ரொபசர் சுபான்கானிடம் அக்கவுன்ட்ஸ் மற்றும் செயின்ட் ஜோஸெப்ஸ் குப்புசாமியிடம் மேத்ஸ் டியூஷன் போய் இன்டர்மிடியட் பாஸ் செய்து பாம்பே பக்கம் போய் விட்டேன். அடுத்த சில வருடங்களில் ஃபைனல் பாஸ் செய்து நான் அருண்மொழி எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் சிதறிவிட்டோம்.

1991ல் ஒருமுறை திருச்சி வரும்போது ஆடிட்டரை பார்க்கலாம் என்று போனேன். அதே ஆபீஸ். நிறைய சின்ன பையன்கள் ஆர்டிகில்ஸ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். நம்மை பார்த்ததும் 'வாங்க.. ஸ்ரீதர்' என வரவேற்றார். அடுத்து எல்லா பசங்களையும் பார்த்து 'இவரு தாங்க ஸ்ரீதர்.. நம்ம பர்ஸ்ட் ஆர்டிகில்ட் க்ளார்க்…CA பாஸ் பண்ணிட்டு பாம்பெல வேல’ என ஒரு இன்ட்ரொ கொடுத்தார்எனக்கு ஒரே பெருமிதம். அடுத்து என்ன சொல்லப்போறார் என ஆவலாய் அவரை பார்த்த என் தலையில் இடி விழுந்தது.

"இவரெல்லாம் ரொம்ப ஆவரேஜ் தான்.. இவரே CA பாஸ் பண்றப்ப உங்களுக்கெல்லாம் என்ன கவல" என அவர் தன் ஸ்டூடண்ட்ஸை பார்த்து கேட்க அத்தனை பேரும் (ஒன்றிரண்டு பெண்கள் உள்பட) எல்லோரும் என்னை தீர்க்கமாக பார்த்தார்கள். தலை முதல் வரை கால் வரை கூசி குறுகி அங்கே உட்கார முடியாமல் நெளிந்தேன். அதில் ஒரு பையன் (நேமி குமார்) பிறகு all india 3rd ராங்க் வாங்கினவன். விடை பெற்றுக்கொண்டு முகம் சிறுத்து அவமானத்துடன் வெளியே வந்தேன். ரோட்டில் எனக்கு எதிரே தெரிந்தவர்கள் சிலர் 'என்னப்பா எங்க இருக்க' என கேட்டது கூட காதில் விழவில்லை. "ச்சே... எதுக்கு ஆடிட்டர பார்க்க வந்தோம்னு இருந்தது.

சோகமாக வந்து கொண்டிருந்த என் முகம் திடீரென பளிச்சென ஆனது. கமகமவென பக்கோடா வாசனை... மணி அய்யர் கடை…அதே கூட்டம். அதே பழைய மேசையின் பின்னால் நின்றுகொண்டு அவர் டோக்கன் கொடுத்துக்கொண்டிருக்க அவரது பையன் காபி கலக்கிக்கொண்டிருந்தான்.   . 'வாங்க தம்பி.. ரொம்ப நாளாச்சு.. இப்ப எங்கே ஜோலி?" என விசாரித்தார். நான் தற்போது பாம்பேயில் இருப்பாதாகவும் பாஸ் செய்து விட்டதாக சொன்னதும் " ரொம்ப கஷ்டப்பட்டு உங்கப்பா படிக்க வெச்சார்ரொம்ப சந்தோஷம்ப்பா.. டேய் சீனு! தம்பி நம்ம ஆடிட்டர் ஆபீஸ்ல இருந்தார். இப்ப இவரும் ஆடிட்டர் ஆயிட்டார்." என தன் பையனிடம் சொல்லியவாறே நல்ல காபி ஒன்னும் கொடுத்தார்மணி அய்யரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது மனசு லேசானது போன்ற உணர்வு.

சைக்கிளை தள்ளி ஏறி உட்கார்ந்து பெடலை மிதிக்கும்போது நம்மை தாண்டி ஆட்டோவில் ஆடிட்டர் குமார்ராஜ் போய்க்கொண்டிருந்தார். ஆட்டோ பின்னால் சென்ட்டு வாசனை காற்றில்...