Sunday, February 2, 2014

சூப்ஸ் என்கிற சுப்ரமணியன்....

செம்பூர் செட்டா நகருக்குள் நுழையும்போதே ஜிலுஜிலுவென காற்று.. ஏராளமான மரங்கள். அமைதியான சூழல். பரபரப்பான பாம்பே தானா இது என சந்தேகம். சுமார் 60, 70 அடுக்குமாடி வீடுகள். நடுவே முருகன் கோவில். அங்கே வசிக்கும் முக்காவாசி பேர் தமிழர்கள். பல வருடங்களுக்கு முன் பம்பாய்க்கு குடியேறி அங்கேயே படித்து, மணமுடித்து, புத்திர சந்தானத்துடன் செட்டிலான பாலக்காட்டுக்காரர்கள். அல்லது நம்மூரிலிருந்து வேலை கிடைத்து வந்து சில பல வருஷங்களாக இருப்பவர்கள். திடீரென்று என்னை மாதிரி பம்பாய் விட்டு ஓடக்கூடியவர்கள்.
பம்பாய் தமிழ்ப்பெண்கள்? சுத்த வேஸ்ட் ஸார். ஆண் வர்க்‌கமே பிடிக்காத மாதிரி சீன் போடுவார்கள். சரி, தமிழ்ப்பொண்ணாச்சே என்று ஒருத்தியுடன் தமிழில் பேசினால் பதில் ஆங்கிலத்தில் வரும். அவள் தம்பி அதுக்கு மேல... பார்க்க மதமதவென்று போக்கிரி அசின் தம்பி கிட்ட விஜய் சொல்ற மாதிரி "குடும்பமே உப்புமா சாப்ட்டு" வளர்ந்த ஸ்தூல சரீரி. தமிழோடு ஹிந்தி கலந்து வெறுப்பேற்றுவார்கள். ("அந்த பங்க்காவ பந்து பண்ணு.. எட்டு மணிக்கு ப்ரோக்ராம் சாலு பண்ணுவாங்க.."). அதிலும் சில எக்ஸ்‌ட்ரீம்கள்... இந்த காஸ்ஸெட் அங்கே கிடைக்குமாவென்று கேட்டால் "அங்கே தோடி(ஹிந்தி) கிடைக்கும்" என பதில். 'அதுசரி..உங்கக்கா என்னடா பண்றா' என கேட்டால் 'தெர்லடா’ என பட்டென பதில் வரும், வயது வித்தியாசம் தெரியாமல் 'டா' போடும் தம்பிகள். ‘அதுசரி! அவங்க அக்காவை நீ எதுக்கு விஜாரிக்கனும்?’ என என்னை கேட்க நினைப்பவர்கள் அடுத்த பாரா போய்விடலாம். 😃
தமிழ்க்கார அப்பாக்கள் பலவகை. ஒன்று காலை 6 மணிக்கு காண்ட்ராக்ட் பஸ்ஸில் ஐய்ரோலி, தூர்பே, முலுன்டு பகுதியில் உள்ள PIL அல்லது ஏஷியன் பெயிண்ட்ஸில் வேலை செய்யும் சீனியர் ஸ்டேனோக்ராபர்கள். அல்லது டிபன் டப்பாவில் சப்பாத்தி எடுத்துக்கொண்டு 8.13 லோக்கலை பிடிக்க ஓடும் ரயில்வே சிப்பந்திகள், இன்கம்டாக்ஸ்/சச்சிவாலயா ஊழியர்கள். அல்லது மனைவியிடம் சள்ளென்று எறிந்து விழும் கொஞ்சம் கடுகடுவென முகத்துடன் சம்மந்தமில்லாத கலரில் பாண்ட் சட்டை, கழுத்தில் படு ஒல்லியான டை, சூட்கேசில் ஹிந்து பேப்பர், ரவுண்டு டிபன் டப்‌பா, ட்ரெயினில் படிக்க வென்ச்சர் காபிடல் மானேஜ்மெண்ட் புத்தகம் சகிதம் பர்ஸ்ட் க்ளாஸ்ஸில் பயணம் செய்யும் 'ஐ ஆம் shawreng pawni' என கை குலுக்கும் வைஸ் பிரெஸிடெண்டுகள். வந்தாரை எப்படியும் வாழ வைக்கும் பம்பாய்..
வேலைக்குப்போகும் பேச்சிலர்ஸ்...? தமிழ் நாட்டிலிருந்து வேலைக்கு வந்த பேச்சிலர்ஸ் 2,3 வருஷம் யாராவது ஒருத்தியுடன் தாதர் சிவாஜி பார்க், ஜூஹூ பீச்சென ஊரெல்லாம் சுற்றி, ப்ரீத்தி உண்டாக்கி, ஒருமாத லீவுக்கு ஊருக்குப்போய் திரும்பி வரும்போது 'மாயவரத்துப்பொண்ண வீட்ல நிச்சயம் பண்ணீட்டாங்க' என்று வந்து நிற்பார்கள்.
என் அண்ணனின் மாமனார் சொன்னாரென்று யாரோ ஒருவர் தன் பெண்ணின் ஜாதகத்துடன் என்னை பார்க்க ஆபீசுக்கு வந்துவிட்டார். ஜாதகத்தை வாங்கி ஊருக்கு அனுப்பிவிட்டேன். அப்படியும் மனுஷன் என்னை விடுவதாக இல்லை. சரியாக ஒவ்வொரு சனியன்றும் மதியம் ஆபீசுக்கு (ஃபோர்ட் ஏரியா) வந்து பக்கத்தில் உடுப்பி ஹோட்டலுக்கு கூட்டிப்போய் கல்யாணத்தப்பத்தியே பேசுவார். தாலியும் வாங்கித்தருவார்(இது நார்த் இன்டியன் தாலி..வயத்துக்கு). 'யாரைக்கேட்டு நீயே பெண் பார்க்கிறாய்' என திட்டி ஊரிலிருந்து லெட்டர் வந்ததும் பயந்து போய் அடுத்தவாரம், அவருடன் நல்லா சாப்பிட்டவுடன் மெதுவாக 'வீட்ல அவங்களே பெண் பாத்துப்பாங்க மாமா' என நான் சொன்னதும் கரகாட்டக்காரன் ஷண்முகசுந்தரம் மாதிரி உஷ்ணமாகி ஜீரகத்தை வாயில் அள்ளி போட்டுக்கொண்டார்.
முருகன் கோவிலுக்கு சற்று எதிரே விஜயா பில்டிங்கில் நாங்கள் ஐந்தாறு பிரம்மச்சாரிகள் தங்கியிருந்தோம். வீட்டுக்கு போய் குளித்துவிட்டு நானும் ரங்குவும் முதலில் கோவிலுக்கு போவோம். சுவாமி தரிசனத்திற்கு மட்டும் தான்!. எல்லா குருக்களும் எங்களுக்கு தோஸ்த்.. கீழ் தளத்தில் தங்கியிருக்கும், சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்கும் 25 வயது கூட நிரம்பாத அர்ச்சகர் சதாசிவம் ரங்குவுக்கு நண்பர். 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா' பாட்டு கேட்டுக்கொண்டு இருந்த அவருடன் அவர் ரூமில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த போது சந்துரு Balasubramaniam Chandrasekaran வந்திருந்தான்.

சந்துருவுக்கு திருச்சி சுந்தர் நகரில் எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடு. கம்பெனி செகரடேரி. ரோஷக்காரன். மானஸ்தன். அப்பாவின் கடனை அடைக்க காலை டிபனுக்கு பிறகு ஒன்றும் சாப்பிடாமல் இரவில் உ.பி.பைய்யா கடையில் பால் மட்டும் குடித்து கடனை அடைத்தவன். வேலையில் இருந்துகொண்டே ACS பைனல் பாஸ் செய்து என்னுடைய உபயத்தால் ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டவன். (அந்த கதை என் 'செம்பூர் ஸ்டேஷன்' என்ற தனிப்பதிவில்..) சரியான லூட்டி... நாகேஷின் காமெடிக்காக என்னை பலமுறை 'சோப்பு சீப்பு கண்ணாடி' பார்க்க வைத்தவன். சந்துரு இன்ஸ்டன்ட் ப்ரூ காபி போட்டு குடுத்தான்.
அடுத்து துபே (வடநாட்டுக்காரன்), மற்றும் சத்யன் (IT) ஆபிசிலிருந்து வந்தார்கள். கடைசியில் ஸ்ரீரங்கத்துக்காரனான முரளி வந்தான். இரவில் வீட்டு சாப்பாடு தான். அந்த ரூமில் முன்பு சாம்பார், தக்காளி ரசம், தயிர்சாதம், பொறியல்..மட்டும் தான். நான் இவர்களுடன் சேர்ந்தவுடன், "இதெல்லாம் பத்தாதுடா... " என்று சொல்லி அடுத்த சில நாட்களில் ராவா தோசை(ஞாயிறு காலை டிபன்), பூண்டு ரசம், மோர்குழம்பு, தக்காளி சாதம், லெமன் ரைஸ், புளியோதரை, சப்பாத்தி, ஆலு கோபி, பைங்கன் மசாலா என எனக்குத் தெரிந்த வெரைட்டியுடன் சமையலில் பிரதான இடம் என்னுடையதாகியது.
அடுத்தடுத்த பில்டிங்குகளிலும் நிறைய பேச்சிலர்கள். எல்லோரும் நள மகாராஜாக்கள். கிச்சனிலிருந்து வெளியே வந்து பால்கனியில் நின்றுகொண்டு பக்கத்துவீட்டு பெண்ணிற்கு கேட்கும்படி "'மணி!... put some காரப்பொடி'...என கத்தி அலப்பறை செய்யும் கணேசன்கள்..
பிரம்மச்சாரிகளின் வாழ்க்கை வெகு சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் நண்பரின் சிபாரிசின் பேரில் BITS Pilaniயிலிருந்து சுப்ரமணியன் என்ற மாணவன் 3 மாதம் மட்டும் தங்க எங்களுடன் சேர்ந்துகொண்டான். வங்கியில் தன் ப்ராஜெக்ட் செய்ய பம்பாய் வந்திருந்தவன் சூப்ஸ் என்ற நாமகரணம் எங்களால் சூட்டப்பட்டான்.
ஒடிசலான உருவம், திக்கான சோடாபுட்டி கண்ணாடி. சின்ன மீசை.. முள் தாடி.. சட்டையை இன் செய்யாமல் முழங்கை வரை மடித்து சாதாரண பாண்ட் மற்றும் ரப்பர் செருப்பு, அலட்சியமாக வாரிய தலை முடி. மண்டை முழுக்க மூளை. அவன் படிக்காத ஆங்கில நாவல்களே இல்லை. இடதுகையில் சதா புகைந்து கொண்டிருக்கும் ஃபோர் ஸ்கொயர் சிகரெட். வயது 20. பார்க்க கண்ணாடி போட்ட தனுஷ் மாதிரி இருக்கும் சூப்ஸ்சுக்கு இந்திய, உலக அரசியலாகட்டும், தமிழ், ஆங்கில இலக்கியமாகட்டும் எல்லாம் அத்துப்படி. சினிமா அறிவு அறவே கிடையா. பார்க்க மூடியாக இருப்பான். அவ்வப்போது தனது டைரியில் ஆங்கில கவிதைகள் எழுதுவான். எங்கே..படித்துக்காமிடா என்றால் வெட்கப்படுவான். ஆனால் பழகப்பழக சில நாட்களில் அவனது நட்பு எங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. சமையல் தெரியாததால் காபி குடித்த தம்ளர்களை சிங்க்கில் போட்டு அலம்புவான். போட்டிருக்கும் சட்டை பாண்ட்டுடன் அப்படியே சட்டென் தூங்கிப்போவான்.
இவனுடன் மற்றொரு ரூம்மேட் ஸ்ரீராமும் சிகரெட் வலிப்பதால், அடூர் கோபாலகிருஷ்ணன் ஜாடையிலிருக்கும் பக்கத்து வீட்டு மாமா திருட்டு தம்மடிக்க எங்கள் வீட்டிற்கு அப்பப்போ வருவார்.அவரை தேடிக்கொண்டு வந்த மாமி ஒருமுறை எங்கள் ரூமை பார்த்ததும் தன் மராட்டிய வேலைக்காரியை விட்டு எங்கள் வீட்டை சுத்தம் செய்ய அனுப்ப, அந்த மராட்டி பாயி எங்கள் வீடு இருக்கும் நிலையை பார்த்து சரமாரியாக திட்டித்தீர்த்து விட்டாள். அங்கங்கே அவுத்துப்போட்ட பாண்ட் சர்ட்டுகள், உலர்த்தாத கப்படிக்கும் ஈரத்துவாலைகள், ஸ்ரீராம் , அடூர் மாமா மற்றும் சூப்ஸ் விட்டெரிந்த சிகரெட் துண்டுகள், எங்கு பார்த்தாலும் CA,ACS சம்மந்தப்பட்ட புத்தகங்கள். கட்டிலுக்கு அடியில் போட்டுத்தள்ளப்பட்டிருக்கும் வாழைப்பழத்தோல்.. எங்கெங்கு காணினும் ஜட்டியடா!
ஒரு சனிக்கிழமை ஸ்ரீராம் ஆபிசில் எல்லோரும் கர்ஜத் அருகில் பிக்னிக் போவதாக ப்ளான் செய்து என் ரூம் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். நானும் சந்துருவும் போகவில்லை. மறுநாள் செம்பூர் கீதாபவனில் பைனாப்பிள் தோசா முடித்து வெளியே வரும்போது எதிரே சந்துரு கலவரத்துடன் ஓடி வந்து "ஸ்ரீதர்...சூப்ஸ் செத்து போய்ட்டாண்டா.." என சொல்ல அதிர்ந்து போனோம். சூப்ஸ்சின் பாடி கல்யாண் ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் வந்ததால் நாங்கள் இருவரும் ட்ரெயின் பிடித்து கல்யாண் போனோம்.
ஆசுபத்திரி பின்பக்கம் மார்ச்சுவரியில் பாடி இருப்பதாக சொல்ல அங்கு ஓடினோம். கொஞ்சம் ஒதுக்குப்புறமான பழைய சிறிய கட்டிடம். சுற்றிலும் மரங்கள். ஊஊஊவென காற்றடிக்க, பகலில் கூட தனியே போக பயமாக இருக்கும் அளவுக்கு ஒரு அமைதி. வாசலில் ஒரு வேன்… மெல்ல அருகே போய் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தோம். சூப்ஸ் லேசாக உடல் ஊதி, கறுத்து விரைத்துப்போயிருந்தான். அடுத்து மற்றொரு மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ் ஒன்றிரண்டு விரைந்து வர, ஒரே சமயத்தில் நாலைந்து பிணங்கள் வந்திறங்கின. சில உடல்களை சதையும் ரத்தமாக கந்தலாக கொண்டு வந்து வைத்தார்கள்.. இல்லை.. போட்டார்கள். டோம்பீவிலி, கல்வா அல்லது சுத்துப்பட்டு ஸ்டேஷன்கள் அருகே ரயிலில் அடித்துச்சென்ற உடல்களாம்.
மார்ச்சுவரியை பார்த்துக்கொள்ளும் மராட்டிய கிழவன் முழு போதையுடன் வந்தான். பிணவரையில் தினம் 16 மணி நேரம் வேலை செய்ய அரசாங்கமே அவனுக்கு மதுவுக்கு பணம் கொடுக்குமாம். சலனமேயில்லாமல் உடல்களை தொட்டு அப்படியும் இப்படியும் உருட்டி தள்ளினான். சில உடல்களை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டியவாறே ‘ஹஸ்த்தே மரா க்யா!’ (சிரிச்சிக்கிட்டே செத்தையாடா?) என கேட்டு வேலை செய்து கொண்டிருந்தான். எனக்கும் சந்துருவுக்கும் வயிறை என்னமோ செய்ய, லேசாக உள்ளே எட்டிப்பார்த்த சந்துரு ‘ஆ’வெனஅலறி பின்வாங்கினான். எனக்கு லேசாக தலை சுற்றியது. அங்கே பக்கவாட்டில் சரிந்தும், சாய்ந்து உட்கார்ந்த நிலையிலும், குப்புறக்கிடந்தும், குடல் மற்றும் சதைக்குவியலோடும் அங்கங்கே …. சில நாட்கள் பிணவறை முற்றிலும் காலியாக இருக்குமாம். அன்று அந்த சிறிய ரூம் கொள்ளாத அளவுக்கு …..( போதும் நிறுத்திக்கிறேன் ஸார்.)
இரவு 12 மணி வரை கல்யாண் போலீஸ் ஸ்டேஷனில் நண்பர்களை போலீஸ் தூண்டித்துருவி விசாரித்தார்கள். கர்ஜத் அருகே எங்கோ கிராமத்தில் அழகிய நீரோடை, பூங்கா மற்றும் காட்டுப்பகுதி…நண்பர்கள் மதியம் 2 மணி வரை பூங்காவில் சுற்றிவிட்டு சாப்பிட்டவுடன் 4 மணி வரை கிரிக்கெட் ஆடி மெதுவாக ஒவ்வொருவராக தண்ணீரில் இறங்கி குளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தெளிவான அமைதியான ஓடை. இடுப்பளவு தண்ணீர் தான். எல்லோரும் குளித்து முடிந்து வெளியே வந்த பிறகும் சூப்ஸ் மட்டும் தண்ணீரில் நின்றுகொண்டிருந்தானாம்..
'போதும் வாடா' என அவனை நண்பர்கள் கூப்பிட அவன் மெல்ல சிரித்துக்கொண்டே கரையை நோக்கி ஓரடி எடுத்து... 'சளக்' கென்று அப்படியே நீருக்குள்ளே போய் உடலை சிலுப்பி.. நண்பர்கள் கூச்சலுடன் துண்டை அவன் பக்கம் வீசியும் பயனில்லை... யாருக்கும் நீச்சல் தெரியாது. உள்ளே முழுவதும் சென்றுவிட்ட சூப்ஸ் அடுத்த நொடி திடீரென மறுபடியும் தண்ணீருக்கு மேலே கழுத்தளவு வெளியே வந்து அதே வேகத்தில் திரும்ப உள்ளே போனான்.. ஒரு கை மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிய அடுத்த நொடி நீர்க்குமிழிகளுடன் தண்ணீருக்குள் மாயமாக மறைந்தான். வெளியே வர போராடுகிறான் என்பது தண்ணீரின் சலசலப்பில் தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நீர்க்குமிழிகளும் நீரின் சலசலப்பும் அடங்கி நீர்ப்பரப்பு அமைதியானது. எல்லோரும் கூச்சலிட யாருக்கும் ஒன்றும் செய்யத்தெரியவில்லை. போலீஸ் வந்து சேர மேலும் இரண்டு மணிநேரம் ஆனது.
போலீஸ் கூட வந்திருந்த கிராமத்தான் 'சாலா! பொழுதன்னைக்கும் உங்களுக்கு இதே வேலயாப்போச்சு? இந்த வாரத்துல இது மூணாவது சாவு!' என சலித்துக்கொண்டு 1500 ரூபாய் பேசி தண்ணீருக்குள் பாய்ந்து செடிகளுக்கிடையே கையை விட்டு பாறைகளை நகர்த்த, ஜிவ்வென உடல் மேலே வர, சூப்ஸ் என்கிற சுப்ரமணியன் வெளியே எடுத்து போடப்பட்டான்.
நண்பர்கள் எல்லோரையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து ஸ்டேஷனுக்கு கூட்டிப்போனார்கள். பஞ்சநாமா போன்ற சம்பிரதாயங்களுக்குப்பின் “வேறெந்த முகாந்திரமும் இல்லை ..சுழலில் சிக்கி இறந்த தற்செயலான விபத்து இதுவென ருசுவாகிறது.. கேஸ் பதிவு செய்யாமலிருக்க 35 ஆயிரம் ஆகும்” என போலீஸ் பேரம் பேச, ஸ்ரீராமின் அண்ணன் 20 ஆயிரத்திற்கு முடித்து நண்பர்களை வெளியே கொண்டு வந்தார்.
அடுத்த 2 நாட்கள் கொடுமையானவை. 13 வயது மகளுடன் வடநாட்டு சுற்றுலா சென்று விட்ட சூப்சின் பெற்றோரை யாரோ பெரியப்பா ஒருவர் தேடி போனில் பிடித்தார். மறுமுனையில் கூச்சல்..அழுகை. உடலையும் அவர்கள் பார்க்கத்தயாராக இல்லை. பெரியப்பா மட்டும் 2 நாளில் வந்து அந்திம காரியங்களை முடித்து விட்டுப்போனார்.
அடுத்த ஒரு மாத காலம் வீட்டில் சமைக்கவில்லை. ஏதோ ஒரு பயத்துடன் சோகமாக உலாவினோம். சூப்ஸ்சின் உடமைகளை பெ
ரியப்பா கொண்டு சென்றுவிட அவனது ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் மட்டும் ரூமில் கிடந்தன.
சில நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு வரத்தொடங்கினோம். ஒருநாள் சந்துரு ஏதோ புத்தகங்களை குடைந்தபோது சூப்ஸ்சின் டயரி கிடைக்க "ஸ்ரீதர்! இங்க வாடா! " என அலறினான். கைகள் நடுங்க டயரியை புரட்டியபோது, இறப்பதற்கு சில நாட்கள் முன்பு கிறுக்கி வைத்த கவிதை மாதிரி சில வரிகள்..... ஒன்றும் புரியவில்லை. ஆனால் படிக்க முடிந்த கடைசி நாலைந்து வரிகள் ….
And I want to dwell..
in some corner…
alone..
surrounded by water…
only water.. 

No comments:

Post a Comment