Monday, August 5, 2013

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் ...


 சுமார் 7 மணிக்கு மேல் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் பயங்கர  களை கட்டும். உறையூர், புத்தூர், தில்லைநகர்,தென்னூர் என்று எல்லா பக்கங்களில் இருந்தும் மாணவர்கள் ஈசல் போல் வந்து குவியும் இடம். 83, 84ஆம் வருடம் என நினைக்கிறேன். 'ஒரு தலை ராகம்' பெல்பாட்டம்,ஸ்டெப் கட்டிங், சிகப்பு ரோஜாக்கள் பெல்ட் எல்லாம் போய் விட்டது. அப்போது எல்லாம்  'சட்டம்' கமல் போடும் டைட்டான பேண்ட், சன்னமான பெல்ட், கூரான ஷூ தான். அதற்கு காரணமானவர்கள்   சமஸ்பிரான் தெரு ஆல்பா டைலர்ஸ், சிங்காரத்தோப்பு ஜோதி டைலர்ஸ், மலைவாசல் மார்கரெட் சலூன்  போன்ற புண்ணியவான்கள் .  சிகையலங்காரம் செய்துகொள்ள  மார்கரெட் சலூன் போகும்போது நமக்கு ஏதோ தாழ்வு மனப்பான்மை.. மலை வாசலில் இருந்து மூன்றாவது கடை. மற்ற கடைகளை விட மும்மடங்கு கட்டணம்.கடையில் உள்ள 3,4 இளைஞர்கள் நாம் உள்ளே நுழைந்ததும் நம்மை ஏற இறங்க பார்த்து 'வாங்க புள்ள...' என வரவேற்பார்கள். முக்கால்வாசி அங்கு பெண்கள் பற்றிய பேச்சு தான். வருடாவருடம் அவர்கள் சிங்கபூர் மலேசியா  போய் வந்த அனுபவத்தை விவாதிப்பார்கள்.

 சமஸ்பிரான் தெரு ஆல்பா டைலர் அப்போதே பெரிய வீடு கட்ட ஆரம்பித்து விட்டார்.   கடை மாஸ்டர்   நாம் சட்டையை போட்டு ட்ரயல் பார்த்ததும்  நம் முன்னே அந்த சட்டை தையலை டர்ர்ரென்று பிரித்து டைலர் பையன் மீது வீசி 'என்னடா தெச்சிருக்க..அர இஞ்சு புடி..' என்று அடுத்த 15 நிமிடத்தில் ரெடி செய்து சுளையாக 60 ருபாய் வசூலிப்பார். பேண்ட் அளவு கொடுக்க  போனால் தோளில் உள்ள டேப்பை  தன்  வலது கையால் நமக்கு பக்க வாட்டில் வீசி நம் இடுப்பில் சுற்றி இடது கையால் மறுமுனையை ஸ்டைலாக பிடிப்பார். பிடித்த கையோடு வயிற்றை டேப்பால்  டைட்டாக பிடித்து 30 என்று சொன்னதும் எங்கோ மூலையில் காஜா எடுக்கும் சிறுவன் ஒரு அட்டையில் குறிப்பான். அடுத்து நம் துடைகளுக்கு இடையே டேப்பை விட்டு நம்மை லேசாக ஒரு இஞ்சு உயரத்திற்கு தூக்கி 7 என்று சொல்லி நம்மை இறக்கி விடுவார். தைத்து முடிந்து பேண்ட் போட்டு பார்க்கும்போது நமக்கு  'வாழ்வே மாயம்' கமல் ஆனது போல் உணர்வு(படத்தின் முன்பாதி கமல் மட்டும்.. பின்பாதி இல்லை..). புதிய பேண்ட்டை மாட்டிக்கொண்டு  சனிக்கிழமை நேரே கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் தான்

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றதே மாணவர்களால் தான். அந்த சமயம்  இளமைக்காலங்கள், பன்னீர் புஷ்பங்கள், மூன்றாம் பிறை, ராஜபார்வை, போன்ற படங்களின் பாடல்கள் மிகவும் முனுமுனுக்கப்பட்டவை. எல்லா பசங்களுக்கும் சுமன், சுரேஷ், கமல் மாதிரி நெனைப்பு வேறு. கோவிலில் மூலவர், உற்சவர்,மற்றும் whichever பக்கம் போனாலும் மாணவர் தான். அதிலும் திருச்சி பசங்களுக்கு கொஞ்சம் கூட சைட் அடிக்கவே தெரியாது. சரி... அந்த பெண்ணுக்கு மட்டும் தெரியும்படியாக ஜொள்ளு விடலாம் என்ற எதிக்ஸ் எல்லாம் கிடையாது. பிரகாரத்தில் பயந்து பயந்து சுற்றி வரும் பெண்ணை ஒரே நேரத்தில் நான்கைந்து தீவிட்டி தடியன்கள்  ' ஙெ' என ராஜேஷ்குமார் ஸ்டைலில் வெறிக்க வெறிக்க பார்த்து அவள் அப்பனை கடுப்பேத்துவார்கள். வடை மாலை சாத்திய  கையோடு  அவனுங்களையும் நாலு சாத்தானும் போல தோன்றும்.

கோவிலின் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் தத்தமது 'ஆள்' வந்தாகி விட்டதா என கண்ணால் தேடி முகத்தில் பக்தி பரவசம் சொட்ட சொட்ட பிரகாரத்தை சுற்றோ சுற்றென்று சுற்றுவார்கள். அந்த பக்கமும் ஒன்னும் குறைச்சல் இல்லை. பசங்கள் தம்மை குறி வைத்து தான் சுற்றி சுற்றி வருகிறார்கள் என தெரிந்து அந்த யுவதிகளும்  பாதி மூடிய கண்களுடன் தம் சிறு பாதங்களால் மணிக்கணக்காக  9 ரவுண்டு சுற்றுவது கண்டு சநீஸ்வரனே பொறுமை இழப்பார்.
 "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னை
படிப்பறை கொண்டு யாம் பெரும் சன்மானம்" ...
ராமர் சன்னதி பக்கம் உபன்யாசகம் கேட்க நல்ல கூட்டம் வந்திருந்தது.
புரியாத 27ஆம் பாசுரத்தை புரிந்த மாதிரி தலையாட்டி  சுற்றிலும் நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்கள்  நாலைந்து கோட்டான்கள். அவர்கள் தேடி வந்த திருப்'பாவை'யே வேறு..
இத்தனை அழிச்சாடியங்களையும் பார்க்க மற்றும் சுவாமியை சேவிக்க சனியன்று கோவிலுக்கு தவறாமல் நானும் கீழ் வீட்டு சீனிவாசனும் வந்து விடுவோம்.

கீழ் வீட்டு சீனிவாசனை பற்றி.. மன்னார்புரம் சர்க்கியூட் அரசு குடியிருப்பு காலனியில் நாங்கள் இரண்டாம் தளம். கீழே DCTO பக்தவத்சலம் வீடுசீனிவாசன், கோவிந்தராஜன், பாலாஜி என 3 பசங்கள்.   எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நானும் சீனிவாசனும் திருச்சி புறநகர் பகுதியில் இருக்கும் எல்லா சினிமா கொட்டகையிலும் (டூரிங் தியேட்டர் உள்பட) MGR  படங்கள் பார்ப்போம். முக்காவாசி நேரம் அவர்கள் வீட்டில் தான் கிரிக்கெட்  மாட்ச் பார்த்துக்கொண்டிருப்போம்ஒரே சிரிப்பு, கும்மாளம் தான். சீனிவாசன் சரியான லூட்டி.. கெட்ட வார்த்தைகளை கூசாமல்  ஸ்பஷ்டமாக சொல்வான்

நேஷனல் காலேஜில் என் தம்பி விஜயரகவனுடன் பி.காம் படித்துக்கொண்டிருந்தான். எப்போதும்  BNV யின் அக்கவுண்ட்ஸ் கிளாசை புகழ்வான்.சில லேக்ச்சரர்களின் பெயர்களுக்கு முன் 'க்காலி' என செல்லமாக அடைமொழி சேர்த்து திட்டுவான்.  அழகான வரிசையான வெண்மையான பற்கள்  என நினைக்க வேண்டாம்.  அப்பிடியே ஆப்போசிட்.. நெற்றியில் திருமண்...எப்போதும் மலர்ந்த முகம். MGR  படம்  என்றால் உயிர். படம் ரிலீஸ் ஆன முதல் நாள் எல்லோரும் முரட்டுக்காளை போகும்போது நானும் சீனிவாசனும் ரகசிய போலிஸ் 115, கு.கோயில், 1000இல் ஒருவன், தெய்வத்தாய், ராணி சம்யுக்தா போன்ற படங்களுக்குத்தான் போவோம்

ஒவ்வொரு சனியன்றும் நானும் அவனும் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போனாலும்  சைட் எல்லாம் அடிக்கும் அளவுக்கு விருப்பமில்லை எங்களுக்கு. ஆனால் யார் யார் அன்று வரவில்லை. புதியதாக எந்த பார்ட்டிகள் வந்தது போன்ற கணக்கெடுப்புகள் உண்டு. பொன்மலையில் இருந்து ரங்கநாதன் என்றொருவன் 7 மணிக்கு முன்னால் கல்லுக்குழி முதலாம் குறுக்கு தெருவில் யாரோ ஒருவர் வீட்டிற்கு  வந்து, பின் 8 மணி வாக்கில் அழகான ஒரு பெண் (சங்கராபரணம் ராஜலக்ஷ்மி மாதிரி) மற்றும் அவளது அம்மாவுடன் கோவிலுக்கு வருவான் . பக்கத்தில் பிரகார மண்டபத்தில் கச்சேரி வெகு ஜோராக நடக்கும். தொன்னையில் வெண் பொங்கல் சாப்பிட்டவன்னம் மிருதங்கத்தை ரசித்து விட்டு, 9 மணிக்கு வீடு திரும்புவோம். 'இந்த கோவிலுக்கும் எனக்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்குடா.. என்னால் இங்க வராம இருக்க முடியாது' என்று சீனிவாசன் அடிக்கடி சொல்வான்.

அடுத்த வருடம் நான் திருச்சி விட்டுப்போய் பாம்பேயில் தஞ்சமடைந்ததும் எங்கள் கடித நட்பு  மட்டும் தொடர்ந்தது. அவனும் சென்னைக்கு வேலை தேடி திருச்சி விட்டுப் போய் விட்டான்பிறகு  ஓரிரு வருடங்களில் கடித போக்குவரத்தும் நின்று போனது. அடுத்த 4,5 வருடங்களில் திருச்சிக்கு போகும்போது எப்போதாவது ஒரு முறை கல்லுக்குழி ஆஞ்சநேயர் போனால் சீனிவாசன் நினைவு தான். 'சங்கராபரணம் ராஜலக்ஷ்மி'யுடன் வரும் ரங்கநாதனையும் காணோம். முன்பு மாதிரி கமல் ரஜினி ஸ்டைலில் மாணவர்களையும் அதிகம் பார்க்க முடியவில்லை. ஏன்... கமல்  கூட சிப்பிக்குள் முத்து  போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். கமல் அழுவது மிமிக்ரி செய்பவர்களுக்கு  வசதியாகி விட்டதுரஜினிக்கு ' வேலைக்கார ' னில் முன் வழுக்கை ஆரம்பமாகி விட்டது.. பன்னீர்புஷ்பங்கள் சுரேஷ் தலை மறைவு.. சுமனுக்கு ஜெயில்

திடீரென்று பிரம்மச்சாரி வாழ்க்கையில் ஒரு திருப்பம். வேலைப்பளு, வேலை மாற்றங்கள், பெண் பார்க்கும் படலம், சைக்கிள் ஓட்டும்போது இருந்த குதூகலம் மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது தொலைந்திருந்தது..சட்டைப்பையில் பைசா இல்லாமல் சுற்றும்போது இருந்த சந்தோஷம் மணி பர்சில் இல்லை... சரி.. இது வாழ்க்கையில் அடுத்த phase தான். responsibility அதிகரிக்கும்போது freedom  தொலைவது இயல்பு தானே என்று  தேற்றிக்கொண்டேன். மறுபடியும் 23,24 வயது திரும்ப வராதா என்று சிறிய ஏக்கம்...

 5 வருடங்கள் போனதே தெரியவில்லை ... மீண்டும் வசந்தகாலம் ஆரம்பம்..

பி.கு-1: ஒருநாள் செம்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கறிகாய் வாங்கிக்கொண்டிருந்தான் பொன்மலை ரங்கநாதன். கூட அவன் பார்யாள்.. ஒரு நிமிஷம் யோசித்தேன்.. அவளே தான்....'சங்கராபரணம் ராஜலக்ஷ்மி'.. அவள் இடுப்பில் அழகான குட்டி மஞ்சு பார்கவி …. ரங்கநாதனுக்கு பாபா அட்டாமிக் ரிசேர்ச் சென்டரில் (BARC) வேலையாம்..

பி.கு-2: திடீரென்று ஒருநாள் திருச்சி ஜங்க்ஷன் அருகே நம்ம சீனிவாசனை பார்த்தேன். பார்த்ததும் ஆசையாக இறுக கட்டி பிடுத்துக்கொண்டான். சபார்டிநெட் அக்கவுண்ட் சர்வீஸ் பரிச்சையில் தேறி தேனாம்பேட்டை பக்கம் AG s ஆபிசில் ஆடிட்டர் வேலையாம்.
உபரி தகவல்: அந்த கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் குருக்கள் …. இப்போது அவனுடைய  மாமனார்.


பி.கு-3: கமலுக்கு மைக்கேல் மதன காமராஜன்  போன்று சூப்பர் ஹிட்டு படங்கள்.. ரஜினியும் முக்கா வழுக்கையில் தளபதி, மன்னன்,   என்று கலக்க ஆரம்பித்தார்.... சுமனுக்கு ஜாமீன்…  

Friday, July 19, 2013

வைத்ய ரத்னா ஆயுர்வேதா மெடிகல் செண்டர்

பஹ்ரைன் வைத்ய ரத்னா ஆயுர்வேதா மெடிகல் செண்டர் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன். நாலு நாளாக முதுகும் இடுப்பும் ஒரே வலி..சாதாரண இடுப்பு வலி தான்.. 8 தினாருக்கு பகுதி (மலையாளத்தில்) மசாஜ் என்றார்கள். அதாவது பாதி மசாஜாம். புல் மசாஜ் 15 தினார். 

உள்ளே ஒரு ரூமுக்குள் போய் அவர்கள் கொடுத்த கோவணத்தை சுற்றிக்கொண்டு தயங்கி தயங்கி வந்த என்னை நடு ஹாலில் போடப்பட்டிருந்த ஒரு பெரிய மேசையின் மேல் குப்புற படுக்க சொன்னார் அந்த சாஜன் என்ற நபர். 'நாட்ல எவ்வடே' என்று பரிவுடன் விசாரித்தார். 'அடப்பாதகா! இடுப்புல வலி எவ்வடேன்னு கேக்காம ஊரைப்பத்தி விசாரிக்க இதுதான் நேரமா' என்று நினைத்துக்கொண்டு 'திருச்சி' என்று சொன்னேன். மறுபடியும் 'நாட்ல எவ்வடே' என்று அவர் கேட்டபோது எனக்கு காது சூடானது. இப்பத்தானே பதில் சொன்னேன்? அப்புறம் தான் புரிந்தது மலையாளத்தில் 'திருச்சி' என்றால் 'மறுபடியும்' என்று அர்த்தம். ஒருவழியாக இந்த சம்பாஷனை முடிந்து பணியை ஆரம்பித்தார். தேநீர் போடும் கெட்டிலை எடுத்தார். பரவாயில்லையே குடிக்க டீயெல்லாம் கொடுப்பார்கள் போல என்ற என் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டார். கற்பூராதி தைலம் கலந்த எண்ணையை கெட்டிலில் விட்டு சூடாக்கி இடுப்பில் மிக தாராளமாக கொட்டி ஒத்தடம் என்கிற பேரில் முதுகையும் இடுப்பையும் துவம்சம் செய்யத்துடந்கினார். பரோட்டா மாஸ்டர் வேலை பார்த்தவர் போலிருக்கும்.
அடுத்தடுத்த ரூம்களில் இதே மாதிரி இஷ்டமித்திர பந்துக்களுடன் மசாஜ் வைபவங்கள்..ஒருவழியாக உடை மாற்றிக்கொள்ள வேறு அறைக்கு போனால் எங்கெங்கு காணினும் ஜட்டியடா...

எல்லாம் முடிந்து ரிஷப்ஷனுக்கு வந்து பணத்தை கட்டும்னோது அவர் சொன்னார் ' சாரே ஈ மாசம் offer இண்டு ' என்றார். மசாஜுல என்னப்பா offer என்று கேட்டேன். 'இன்னு மசாஜ் செய்யுங்கில் 10 தெவசம் கழிந்க்னு 50% சார்ஜிலே மற்றொரு மசாஜ் கிட்டும்' என்றாரே பார்க்கலாம். இன்று ஒரு 'தெவசம்' போதும் என்று சொல்லி வெளியே வந்தேன்...

ரயில்வே TXR…

பால்ய நண்பன் கணபதி ஒரு முறை சென்னையில் இருந்து போன் செய்து 'டேய் ஸ்ரீதரா! உனக்கு தெரியுமா.. நம்ம பொன்மலை ராஜசேகர் செத்து போய்ட்டான்.. "
"  அய்யய்யோ.. எப்பிடிப்பா..அவனுக்கு 50 வயசு தானே ஆவுது?"
"இல்லடா.. 2 வருஷமா அவனுக்கு கிட்னியில ப்ராப்ளம்  தெரியுமில்ல..  திருச்சி ஜன்ஷன்ல தானே வேல அவனுக்கு.."
"ஞாபகம் இருக்குப்பா..நம்ப தானே அவன் வீட்டுக்கு போனவருஷம் போனோம்?"

சென்ற வருடம் ஆண்டு விடுமுறைக்கு திருச்சி போயிருந்தபோது நானும் கணபதியும் KK  நகரில் ராஜசேகர் வீட்டுக்கு போயிருந்தோம். ராசாராம் சாலையில் புதிய வீடு கட்டிகொண்டிருந்தான். கீழ் போர்ஷன் கட்டி முடிந்து உடனே பொன்மலையில் இருந்து அங்கே குடி புகுந்தான். பிறகு மெதுவாக லோன் போட்டு மாடி கட்டிக்கொண்டிருந்தான். வீட்டை சுற்றி பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அந்த வீடு கட்டப்படுகிறது என்பது நன்றாக தெரிந்தது. சிமென்ட்டுக்காக காத்திருக்கும் சீராக அடுக்கப்பட்ட      செங்கல். பணமுடையால் அங்கங்கே பாதியில் நிற்கும் அரைகுறை வேலைகள்...

"திடீர்னு அடி வயித்துல வலி.. டாக்டர் டெஸ்ட் செஞ்சுட்டு ஒன்னும் பெரிய்ய ப்ராப்ளம் இல்லைங்கறார் .. சிறுநீரக கல்லு தான் பிரச்சனையாம். நெறையா தண்ணி குடிக்க சொல்றார். கைல காசு வேற இல்ல.. இந்த மாடி வீடு லோன் போட்டு தான் கட்டறேன். ரயில்வே டிபார்ட்மெண்ட்டுன்னு பேரு தாண்டா.. வெய்யில்ல வேல செய்யறதால ஒத்துகல போல"  என்று  சிரித்துக்கொண்டே சொல்லிகொண்டிருந்தான்.
 ராஜசேகர் திருச்சி ரயில்வேயில் டிரெயின் எக்ஸாமினர் (TXR ) பணியில் இருந்தான். TXR என்பது மிகவும் பொறுப்பான பணி. ரயில் பிளாட்பாரம் வந்து சேர்ந்ததும் ஒவ்வொரு பெட்டிக்கு கீழே குனிந்து தண்டவாளம் மற்றும் ரயில் பெட்டியின் சில பகுதிகளை ஒரு இரும்பு கழியால் 'டக்...டக்..' என்று தட்டி சோதனை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட வண்டிகளை சோதனை செய்ய வேண்டும். நிறைய நடக்க வேண்டும். வெயில் காலத்தில் பணி செய்வது கஷ்டம். தொண்டை வற்றிப்போகும். 
இந்த வருட விடுமுறைக்கு  திருச்சி போயிருந்தபோது, கணபதி சென்னையில் இருந்து மறுநாள் காலை  ராக்போர்ட்டில் வருவதாக சொன்னான், இறந்துபோன ராஜசேகர் வீட்டுக்கு போய் துக்கம் விசாரிக்க..  மறுநாள் விடிகாலை 5 மணிக்கு முன் திருச்சி ஜங்க்ஷன் போய் விட்டேன். 30 வருடங்களுக்கு முன் வெறும்  IRR கான்டீன் மட்டும் தான் இருந்தது. இப்போது அடையார் ஆனந்தபவன்... ஜே.. ஜே.. என கூட்டம்.  வித விதமான சாதங்கள் ஸ்பூனுடன் சிறிய டப்பாவில் விற்கிறார்கள். எவ்வளவு  ஜாங்கிரி மைசூர் பாக் கொண்டு வந்து வைத்தாலும் அதை வாங்க காத்திருக்கும் கூட்டம்.  'அந்த மிக்சர் 3 கிலோ  குடுங்க' என்ற பெரியவரை மேலும் கீழும் பார்த்தேன்.... 'அடப்பாவி 3 கிலோவா' என்று வியந்து.  அவரும் பதிலுக்கு என்னை முறைத்து பார்த்துவிட்டு சரட்டென்று வேட்டியை தூக்கி  தன் 'ராஜ்கிரண்' அண்ட்ராயரில் இருந்து கைக்கொள்ளாத 500 ருபாய் கட்டிலிருந்து அனாயாசமாக ஒரு நோட்டை உருவி கவுண்ட்டர் பையனிடம் கொடுத்தார். முதல் நாள் அடித்த சரக்கு வாசனை அவரிடம். ஹ்ம்ம்... பணம் ரொம்பத்தான் புழங்குகிறது  என்று எண்ணிக்கொண்டே பிளாட்பாரத்தை நோக்கி நடந்தேன். 

 நாலாவது பிளாட்பாரம் போய் ஒரு பென்ச்சில் உட்கார்ந்தேன். 20, 30 வருடம் கழித்தும் அதே பெஞ்சு..பெஞ்சுக்கு அடியில் நாய்... தொங்கிகொண்டிருக்கும் புத்தகங்களுக்கு நடுவே தலையை காட்டும் ஹிக்கின் பாதம்ஸ் கடைக்காரர்... ஏராளமான ராஜேஷ்குமார், ராஜேந்திர குமார் புத்தகங்கள்..  அதே கேன்டீன்....தூரத்தில் மேம்பாலத்தில் பஸ்சுகள், ஆட்டோக்கள் போய்க்கொண்டிருந்தன.. தண்டவாளத்தை எட்டிப்பார்த்தேன். வண்டி  நிற்கும்போது ரயில் பெட்டிக்குள் கழிவறைகள் உபயோகிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை ஜனங்கள் எவ்வளவு மதிக்கிறார்கள் என்று தண்டவாளத்தை பார்க்கும்போது தெரிந்தது. அதில்லாமல் சகட்டு மேனிக்கு குப்பைகள், டிபன் பொட்டலங்கள், வாழைப்பழ தோல், காலி  பிஸ்லேரி பாட்டிகள்..

ரயில் வர ஒரு மணி நேரம் தாமதமாகும் என தமிழ், ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த ஹிந்தியில் 'கிருப்பியா த்யான் தீஜியே' ஒரு பெண்மணி  7, 8 முறை அறிவித்துக்கொண்டிருந்தார்.  அவர் "ரவானா ஹோகி".. "தேர்சே ஆயேகி".... போன்ற பாமரர்களுக்கு விளங்காத ஹிந்தியில் அறிவுப்புகள் செய்து, அடுத்து தமிழில் சொல்லும்போது தான் எல்லாம் புரிந்தது. இத்தனை வருடம் கழித்தும் அதே 'கர.. கர..அறிவிப்பு பெட்டிகள். ரயில் வருவதற்கு முன் இறந்து போன ராஜசேகர் பற்றி கொஞ்சம்...

பொன்மலை கிறித்துவ மேனிலை பள்ளியில் (சாமியார் ஸ்கூல் என்பார்கள்) கணபதி, ராஜசேகர், ஜேம்ஸ் மூவரும் படித்தார்கள். ராஜசேகர் ரயில்வே TXR .. ஜேம்ஸ் ஜுபிடர் தியேட்டர் எதிரே உள்ள சையது முர்துசா  அரசு உயர்நிலை பள்ளியில் வாத்தியார்.. கணபதி CA மற்றும் அதை சார்ந்த CISA போன்ற படிப்புகள் படித்து பல வருடங்கள் என்னுடன்  பஹ்ரைனில் இருந்து விட்டு சென்னையில் ஒரு ஆடிட் firm  இல் பார்ட்னர் மற்றும் அதே குழுமத்தில் இயக்குனராக இருக்கிறான். பொன்மலை பூங்காக்கள், ரயிலடி, ஆர்மரி கேட், ரயில்வே ஷெட்போன்ற இடங்களில் நாங்கள் சேர்ந்து CA பரீட்சைக்கு படிப்போம். அவ்வப்போது ராஜசேகர் அங்கு வருவான். "டேய்.. டேய்.. அந்த கட்டபொம்மன் வசனத்தை கொஞ்சம் சொல்லேன்டா" என கணபதி கேட்டதும் "ஹ..ஹ..ஹா ..வானம் பொழிகிறது.." என்று ராஜசேகர்  கர்ஜித்து வீர வசனம் பேசுவான். பள்ளியில் வாத்தியார் வருவதற்கு முன் வகுப்பில் நிறைய இது மாதிரி வசனங்கள் பேசுவான் ராஜசேகர். ஒரு முறை வகுப்பில்  "என்ன சொன்னான் கலிங்க நாட்டான்?" என்று அவன் கர்ஜித்துக்கொண்டிருக்கும்போது அவசரமாக உள்ளே வந்த கணித ஆசிரியர்... "ம._..ற..புடுங்கச்சொன்னான்.. நோட்டுபுக்க எடுங்கடா"  என்று ஓலைமிட்டதை சொல்லி பொன்மலையே அதிரும்படி சிரித்து கொண்டு சொன்னான் ராஜசேகர்.

அவனது அப்பா பொன்மலை கல்கண்டார் கோட்டை பக்கம் இட்டிலி, பரோட்டா விற்கும் இரவுகடை ஒன்று வைத்திருந்தார். பகலில் ஒரு மேசையில் மைதா மாவை மலை போல் குவித்து நடுவே பள்ளம் செய்து தண்ணீரை ஊற்றி பிசைந்து, மாவு உருண்டைகள் செய்து, பெரிய தட்டில் வைத்து மேலே எண்ணெய் ஊற்றி ஈரத்துணியால் மூடி, ஊற வைத்து இரவு 7 மணிக்கு மேல் வீச்சு பரோட்டா போடுவார்.  அன்றன்றைக்கு முதல் போட்டு சாமான்கள் வாங்கி ஹோட்டலில்  இரவு 1 மணி வரை வியாபாரம் செய்த பின் அன்றைக்கான லாபத்தை கணக்கிடுவார். பெரியதாக ஒன்றும் வருமானம் இருப்பதில்லை. கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி ராஜசேகரை டிப்ளமோ படிக்க வைத்து கணபதியின் அப்பா மூலம் ரயில்வேயில் சேர்த்து விட்டு ஒருநாள்  தூக்கத்திலேயே மேலே போய்ச்சேர்ந்தார்.

 'பாஆஆம் .'. என்ற ராக்போர்ட் எக்ஸ்ப்ரெஸ் பிளாட்பாரத்தில் தூரத்தில் வந்து கொண்டிருந்த சப்தத்தில் நான் திடுக்கிட்டு பெஞ்ச்சை விட்டு எழுந்தேன். 

முதல் வகுப்பில் இருந்து கலைந்த தலையும் கசங்கிய வெள்ளை சட்டையுடன் கணபதி மடிக்கணினியுடன் இறங்கினான். "லால்குடியில... ராஸ்கல்ஸ்... ஒரு மணி நேரம் போட்டுட்டானுங்க.." என்று ரயில்வே நிர்வாகத்தை அந்த அதிகாலையிலும் செல்லமாக திட்டியவாறே ..“ம்ம்ம் சொல்றா ஸ்ரீதராஎன என் தோளில் கையை போட்டவாறே நடந்தான். ஜங்க்ஷன் வாசலில் 4 நிமிடம் வரிசையில் நின்று 8 ரூபாய்க்கு பில்டர் காபி வாங்கி கொடுத்தான். "சூடு பத்தாதுப்பா"  என்று சொல்லி அவர்களிடம் சொல்லி விட்டு நாங்கள் நகர்ந்ததை அவர்களும் சட்டை செய்யவில்லை.  நேராக ஆஷ்பி ஹோட்டல் போனோம்.

'சிவாஜி கணேசன் எப்ப வந்தாலும் இங்க தான் தங்குவாரு..' என்று யாரோ எப்போதோ சொன்னது அப்போது ஞாபகம் வந்தது. நேரில் பார்த்ததாக மட்டும் யாரும் இதுவரை சொல்லவில்லை..  " ஸ்ரீதரா... ஞாபகம் இருக்கா.. இந்த ஹோட்டல்ல."  என்று கணபதி ஆரம்பிக்கும்போதே .. " ஞாபகம் இருக்குப்பா... சிவாஜி தானே?"  என்று நான் சொன்னதும் 'படார்' என்று என் முதுகிலடித்து 'கில்லாடிடா .. நீ' என்று சிரித்தான். அந்த காலை வேளை... வெய்யில் இல்லாமல் நல்ல கிளைமேட்... ரோட்டில் கூட்டமில்லை .. கூட ஆருயிர் தோழன்.. சொல்லவே வேண்டாம் ..சந்தோஷமான தருணம் அது...

குளித்து விட்டு  ஹோட்டலுக்கு வெளியே வந்தோம். கணபதி பாக்கெட்டிலிருந்து முழு 50 ருபாய் எடுத்து பையனுக்கு கொடுத்தான். டிப்ஸ் அவனைப்போல் தாராளமாக யாரும் கொடுக்க முடியாது. அந்த பையன் அந்த ஒரு நாளில் கணபதிக்கு உயிரையே கொடுத்து விடுவான்.
எதிரே கவிதா ஹோட்டலில் இட்டிலி, ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டோம். "வேற எதாவதுங்க?" என்று சாம்பார் ஊற்றிக்கொண்டே கேட்ட பெண்மணியின் காலர் வைத்த ஊதா கலர் சட்டை முழுக்க அப்பியிருந்த சாம்பாரை பார்த்து விட்டு .. "போரும்மா" என்று சொல்லி வெளியே வந்தோம்.

நேராக KK நகருக்கு போனோம். ராஜசேகர் வீடு புதிய தோற்றத்தோடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அவனது மனைவி பெருங்குரலெடுத்து சப்தத்துடன் அழுது எங்களை வரவேற்ப்பார் என எதிர்பார்த்தது என்  தப்பு.      "நல்லாத்தான் இருந்தாருங்க.. எப்ப பாத்தாலும் வெய்யில்ல வேல.. தண்ணி குடிச்சிட்டே இருக்கணும்னு டாக்டர் சொல்லுவார். சிறுநீரக கல்லு கரைஞ்சிடுச்சுன்னு தான் சொன்னாங்க.. ஆனா அவருக்கு சுகரு இருந்ததால திடீர்னு  என்னமோ ஆச்சு... போயிட்டாரு. பெரியவனுக்கு அவங்க டிபார்ட்மெண்டிலெ வேல போட்டு கொடுப்பாங்களாம். சின்னவள BE சேத்துட்டேன். கொஞ்சம் காசு வந்தது... பாதியில அவரு உட்டுட்டு போன மாடி வீட்ட கட்டி முடிச்சிட்டேன். முந்தாநேத்து யாரோ வாடகைக்கு கேட்டாங்க. ஏதோ ரொம்ப கஷ்டமில்லாம ஓடுது.." என்று மூச்சு விடாமல் அவர் பேசியது கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இறைவன் ஒரு கதவை மூடி மறு கதவை திறந்து எப்படி அந்த குடும்பத்தை கரை ஏற்றுகிறான் என்று எண்ணி வியந்தேன். கணவர் இறந்த துக்கத்தை ஒரு ஓரத்தில்வைத்து விட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களான குழந்தைகள் படிப்பு, வேலை, வருமானத்திற்கு வழி என்று அப்பெண்மணியின்  அடுத்தடுத்த முடிவுகள் எங்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

" என்னாங்க யோசனை.. அட நீங்க எதுக்கு அவர நெனைச்சு வெசனப்பட்டுகிட்டு... காப்பி தண்ணி, பன்னீர் சோடா எதுனா குடிக்கிறீங்களா ''   என்று கேட்ட, படு எதார்த்தமான ராஜசேகரின் மனைவியை கையெடுத்து கும்பிட்டோம்.. கணபதி ஆறுதலான சில வார்த்தைகள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.         

விடை பெற்றுக்கொண்டு சில பழைய நண்பர்களை பார்க்க கிளம்பினோம். அன்று இரவே கணபதி சென்னை புறப்பட்டான். அவனை ரயிலில் ஏற்றி விட்டு நான் பிளாட்பாரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது டிரெயின் எக்சாமினெர் (TXR ) ஒருவர் இரும்புக்கழியால் டிரெயினுக்கு கீழே தட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார் . மெதுவாக அவரிடம் போய் 'எத்தன வருஷமா இந்த வேல பாக்கறீங்க' என்று கேட்டேன். 
'20 வருஷமா' என்றார். 
"கொழந்தைங்க"
"2 சார்.... அது சரி.. சாரு யாருன்னு...." என இழுத்தார்.

" நெறையா தண்ணி குடிங்க" என்று சொல்லி விடுவிடுவென நடந்த என்னை அவர் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். .