Friday, July 19, 2013

ரயில்வே TXR…

பால்ய நண்பன் கணபதி ஒரு முறை சென்னையில் இருந்து போன் செய்து 'டேய் ஸ்ரீதரா! உனக்கு தெரியுமா.. நம்ம பொன்மலை ராஜசேகர் செத்து போய்ட்டான்.. "
"  அய்யய்யோ.. எப்பிடிப்பா..அவனுக்கு 50 வயசு தானே ஆவுது?"
"இல்லடா.. 2 வருஷமா அவனுக்கு கிட்னியில ப்ராப்ளம்  தெரியுமில்ல..  திருச்சி ஜன்ஷன்ல தானே வேல அவனுக்கு.."
"ஞாபகம் இருக்குப்பா..நம்ப தானே அவன் வீட்டுக்கு போனவருஷம் போனோம்?"

சென்ற வருடம் ஆண்டு விடுமுறைக்கு திருச்சி போயிருந்தபோது நானும் கணபதியும் KK  நகரில் ராஜசேகர் வீட்டுக்கு போயிருந்தோம். ராசாராம் சாலையில் புதிய வீடு கட்டிகொண்டிருந்தான். கீழ் போர்ஷன் கட்டி முடிந்து உடனே பொன்மலையில் இருந்து அங்கே குடி புகுந்தான். பிறகு மெதுவாக லோன் போட்டு மாடி கட்டிக்கொண்டிருந்தான். வீட்டை சுற்றி பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அந்த வீடு கட்டப்படுகிறது என்பது நன்றாக தெரிந்தது. சிமென்ட்டுக்காக காத்திருக்கும் சீராக அடுக்கப்பட்ட      செங்கல். பணமுடையால் அங்கங்கே பாதியில் நிற்கும் அரைகுறை வேலைகள்...

"திடீர்னு அடி வயித்துல வலி.. டாக்டர் டெஸ்ட் செஞ்சுட்டு ஒன்னும் பெரிய்ய ப்ராப்ளம் இல்லைங்கறார் .. சிறுநீரக கல்லு தான் பிரச்சனையாம். நெறையா தண்ணி குடிக்க சொல்றார். கைல காசு வேற இல்ல.. இந்த மாடி வீடு லோன் போட்டு தான் கட்டறேன். ரயில்வே டிபார்ட்மெண்ட்டுன்னு பேரு தாண்டா.. வெய்யில்ல வேல செய்யறதால ஒத்துகல போல"  என்று  சிரித்துக்கொண்டே சொல்லிகொண்டிருந்தான்.
 ராஜசேகர் திருச்சி ரயில்வேயில் டிரெயின் எக்ஸாமினர் (TXR ) பணியில் இருந்தான். TXR என்பது மிகவும் பொறுப்பான பணி. ரயில் பிளாட்பாரம் வந்து சேர்ந்ததும் ஒவ்வொரு பெட்டிக்கு கீழே குனிந்து தண்டவாளம் மற்றும் ரயில் பெட்டியின் சில பகுதிகளை ஒரு இரும்பு கழியால் 'டக்...டக்..' என்று தட்டி சோதனை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட வண்டிகளை சோதனை செய்ய வேண்டும். நிறைய நடக்க வேண்டும். வெயில் காலத்தில் பணி செய்வது கஷ்டம். தொண்டை வற்றிப்போகும். 
இந்த வருட விடுமுறைக்கு  திருச்சி போயிருந்தபோது, கணபதி சென்னையில் இருந்து மறுநாள் காலை  ராக்போர்ட்டில் வருவதாக சொன்னான், இறந்துபோன ராஜசேகர் வீட்டுக்கு போய் துக்கம் விசாரிக்க..  மறுநாள் விடிகாலை 5 மணிக்கு முன் திருச்சி ஜங்க்ஷன் போய் விட்டேன். 30 வருடங்களுக்கு முன் வெறும்  IRR கான்டீன் மட்டும் தான் இருந்தது. இப்போது அடையார் ஆனந்தபவன்... ஜே.. ஜே.. என கூட்டம்.  வித விதமான சாதங்கள் ஸ்பூனுடன் சிறிய டப்பாவில் விற்கிறார்கள். எவ்வளவு  ஜாங்கிரி மைசூர் பாக் கொண்டு வந்து வைத்தாலும் அதை வாங்க காத்திருக்கும் கூட்டம்.  'அந்த மிக்சர் 3 கிலோ  குடுங்க' என்ற பெரியவரை மேலும் கீழும் பார்த்தேன்.... 'அடப்பாவி 3 கிலோவா' என்று வியந்து.  அவரும் பதிலுக்கு என்னை முறைத்து பார்த்துவிட்டு சரட்டென்று வேட்டியை தூக்கி  தன் 'ராஜ்கிரண்' அண்ட்ராயரில் இருந்து கைக்கொள்ளாத 500 ருபாய் கட்டிலிருந்து அனாயாசமாக ஒரு நோட்டை உருவி கவுண்ட்டர் பையனிடம் கொடுத்தார். முதல் நாள் அடித்த சரக்கு வாசனை அவரிடம். ஹ்ம்ம்... பணம் ரொம்பத்தான் புழங்குகிறது  என்று எண்ணிக்கொண்டே பிளாட்பாரத்தை நோக்கி நடந்தேன். 

 நாலாவது பிளாட்பாரம் போய் ஒரு பென்ச்சில் உட்கார்ந்தேன். 20, 30 வருடம் கழித்தும் அதே பெஞ்சு..பெஞ்சுக்கு அடியில் நாய்... தொங்கிகொண்டிருக்கும் புத்தகங்களுக்கு நடுவே தலையை காட்டும் ஹிக்கின் பாதம்ஸ் கடைக்காரர்... ஏராளமான ராஜேஷ்குமார், ராஜேந்திர குமார் புத்தகங்கள்..  அதே கேன்டீன்....தூரத்தில் மேம்பாலத்தில் பஸ்சுகள், ஆட்டோக்கள் போய்க்கொண்டிருந்தன.. தண்டவாளத்தை எட்டிப்பார்த்தேன். வண்டி  நிற்கும்போது ரயில் பெட்டிக்குள் கழிவறைகள் உபயோகிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை ஜனங்கள் எவ்வளவு மதிக்கிறார்கள் என்று தண்டவாளத்தை பார்க்கும்போது தெரிந்தது. அதில்லாமல் சகட்டு மேனிக்கு குப்பைகள், டிபன் பொட்டலங்கள், வாழைப்பழ தோல், காலி  பிஸ்லேரி பாட்டிகள்..

ரயில் வர ஒரு மணி நேரம் தாமதமாகும் என தமிழ், ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த ஹிந்தியில் 'கிருப்பியா த்யான் தீஜியே' ஒரு பெண்மணி  7, 8 முறை அறிவித்துக்கொண்டிருந்தார்.  அவர் "ரவானா ஹோகி".. "தேர்சே ஆயேகி".... போன்ற பாமரர்களுக்கு விளங்காத ஹிந்தியில் அறிவுப்புகள் செய்து, அடுத்து தமிழில் சொல்லும்போது தான் எல்லாம் புரிந்தது. இத்தனை வருடம் கழித்தும் அதே 'கர.. கர..அறிவிப்பு பெட்டிகள். ரயில் வருவதற்கு முன் இறந்து போன ராஜசேகர் பற்றி கொஞ்சம்...

பொன்மலை கிறித்துவ மேனிலை பள்ளியில் (சாமியார் ஸ்கூல் என்பார்கள்) கணபதி, ராஜசேகர், ஜேம்ஸ் மூவரும் படித்தார்கள். ராஜசேகர் ரயில்வே TXR .. ஜேம்ஸ் ஜுபிடர் தியேட்டர் எதிரே உள்ள சையது முர்துசா  அரசு உயர்நிலை பள்ளியில் வாத்தியார்.. கணபதி CA மற்றும் அதை சார்ந்த CISA போன்ற படிப்புகள் படித்து பல வருடங்கள் என்னுடன்  பஹ்ரைனில் இருந்து விட்டு சென்னையில் ஒரு ஆடிட் firm  இல் பார்ட்னர் மற்றும் அதே குழுமத்தில் இயக்குனராக இருக்கிறான். பொன்மலை பூங்காக்கள், ரயிலடி, ஆர்மரி கேட், ரயில்வே ஷெட்போன்ற இடங்களில் நாங்கள் சேர்ந்து CA பரீட்சைக்கு படிப்போம். அவ்வப்போது ராஜசேகர் அங்கு வருவான். "டேய்.. டேய்.. அந்த கட்டபொம்மன் வசனத்தை கொஞ்சம் சொல்லேன்டா" என கணபதி கேட்டதும் "ஹ..ஹ..ஹா ..வானம் பொழிகிறது.." என்று ராஜசேகர்  கர்ஜித்து வீர வசனம் பேசுவான். பள்ளியில் வாத்தியார் வருவதற்கு முன் வகுப்பில் நிறைய இது மாதிரி வசனங்கள் பேசுவான் ராஜசேகர். ஒரு முறை வகுப்பில்  "என்ன சொன்னான் கலிங்க நாட்டான்?" என்று அவன் கர்ஜித்துக்கொண்டிருக்கும்போது அவசரமாக உள்ளே வந்த கணித ஆசிரியர்... "ம._..ற..புடுங்கச்சொன்னான்.. நோட்டுபுக்க எடுங்கடா"  என்று ஓலைமிட்டதை சொல்லி பொன்மலையே அதிரும்படி சிரித்து கொண்டு சொன்னான் ராஜசேகர்.

அவனது அப்பா பொன்மலை கல்கண்டார் கோட்டை பக்கம் இட்டிலி, பரோட்டா விற்கும் இரவுகடை ஒன்று வைத்திருந்தார். பகலில் ஒரு மேசையில் மைதா மாவை மலை போல் குவித்து நடுவே பள்ளம் செய்து தண்ணீரை ஊற்றி பிசைந்து, மாவு உருண்டைகள் செய்து, பெரிய தட்டில் வைத்து மேலே எண்ணெய் ஊற்றி ஈரத்துணியால் மூடி, ஊற வைத்து இரவு 7 மணிக்கு மேல் வீச்சு பரோட்டா போடுவார்.  அன்றன்றைக்கு முதல் போட்டு சாமான்கள் வாங்கி ஹோட்டலில்  இரவு 1 மணி வரை வியாபாரம் செய்த பின் அன்றைக்கான லாபத்தை கணக்கிடுவார். பெரியதாக ஒன்றும் வருமானம் இருப்பதில்லை. கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி ராஜசேகரை டிப்ளமோ படிக்க வைத்து கணபதியின் அப்பா மூலம் ரயில்வேயில் சேர்த்து விட்டு ஒருநாள்  தூக்கத்திலேயே மேலே போய்ச்சேர்ந்தார்.

 'பாஆஆம் .'. என்ற ராக்போர்ட் எக்ஸ்ப்ரெஸ் பிளாட்பாரத்தில் தூரத்தில் வந்து கொண்டிருந்த சப்தத்தில் நான் திடுக்கிட்டு பெஞ்ச்சை விட்டு எழுந்தேன். 

முதல் வகுப்பில் இருந்து கலைந்த தலையும் கசங்கிய வெள்ளை சட்டையுடன் கணபதி மடிக்கணினியுடன் இறங்கினான். "லால்குடியில... ராஸ்கல்ஸ்... ஒரு மணி நேரம் போட்டுட்டானுங்க.." என்று ரயில்வே நிர்வாகத்தை அந்த அதிகாலையிலும் செல்லமாக திட்டியவாறே ..“ம்ம்ம் சொல்றா ஸ்ரீதராஎன என் தோளில் கையை போட்டவாறே நடந்தான். ஜங்க்ஷன் வாசலில் 4 நிமிடம் வரிசையில் நின்று 8 ரூபாய்க்கு பில்டர் காபி வாங்கி கொடுத்தான். "சூடு பத்தாதுப்பா"  என்று சொல்லி அவர்களிடம் சொல்லி விட்டு நாங்கள் நகர்ந்ததை அவர்களும் சட்டை செய்யவில்லை.  நேராக ஆஷ்பி ஹோட்டல் போனோம்.

'சிவாஜி கணேசன் எப்ப வந்தாலும் இங்க தான் தங்குவாரு..' என்று யாரோ எப்போதோ சொன்னது அப்போது ஞாபகம் வந்தது. நேரில் பார்த்ததாக மட்டும் யாரும் இதுவரை சொல்லவில்லை..  " ஸ்ரீதரா... ஞாபகம் இருக்கா.. இந்த ஹோட்டல்ல."  என்று கணபதி ஆரம்பிக்கும்போதே .. " ஞாபகம் இருக்குப்பா... சிவாஜி தானே?"  என்று நான் சொன்னதும் 'படார்' என்று என் முதுகிலடித்து 'கில்லாடிடா .. நீ' என்று சிரித்தான். அந்த காலை வேளை... வெய்யில் இல்லாமல் நல்ல கிளைமேட்... ரோட்டில் கூட்டமில்லை .. கூட ஆருயிர் தோழன்.. சொல்லவே வேண்டாம் ..சந்தோஷமான தருணம் அது...

குளித்து விட்டு  ஹோட்டலுக்கு வெளியே வந்தோம். கணபதி பாக்கெட்டிலிருந்து முழு 50 ருபாய் எடுத்து பையனுக்கு கொடுத்தான். டிப்ஸ் அவனைப்போல் தாராளமாக யாரும் கொடுக்க முடியாது. அந்த பையன் அந்த ஒரு நாளில் கணபதிக்கு உயிரையே கொடுத்து விடுவான்.
எதிரே கவிதா ஹோட்டலில் இட்டிலி, ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டோம். "வேற எதாவதுங்க?" என்று சாம்பார் ஊற்றிக்கொண்டே கேட்ட பெண்மணியின் காலர் வைத்த ஊதா கலர் சட்டை முழுக்க அப்பியிருந்த சாம்பாரை பார்த்து விட்டு .. "போரும்மா" என்று சொல்லி வெளியே வந்தோம்.

நேராக KK நகருக்கு போனோம். ராஜசேகர் வீடு புதிய தோற்றத்தோடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அவனது மனைவி பெருங்குரலெடுத்து சப்தத்துடன் அழுது எங்களை வரவேற்ப்பார் என எதிர்பார்த்தது என்  தப்பு.      "நல்லாத்தான் இருந்தாருங்க.. எப்ப பாத்தாலும் வெய்யில்ல வேல.. தண்ணி குடிச்சிட்டே இருக்கணும்னு டாக்டர் சொல்லுவார். சிறுநீரக கல்லு கரைஞ்சிடுச்சுன்னு தான் சொன்னாங்க.. ஆனா அவருக்கு சுகரு இருந்ததால திடீர்னு  என்னமோ ஆச்சு... போயிட்டாரு. பெரியவனுக்கு அவங்க டிபார்ட்மெண்டிலெ வேல போட்டு கொடுப்பாங்களாம். சின்னவள BE சேத்துட்டேன். கொஞ்சம் காசு வந்தது... பாதியில அவரு உட்டுட்டு போன மாடி வீட்ட கட்டி முடிச்சிட்டேன். முந்தாநேத்து யாரோ வாடகைக்கு கேட்டாங்க. ஏதோ ரொம்ப கஷ்டமில்லாம ஓடுது.." என்று மூச்சு விடாமல் அவர் பேசியது கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இறைவன் ஒரு கதவை மூடி மறு கதவை திறந்து எப்படி அந்த குடும்பத்தை கரை ஏற்றுகிறான் என்று எண்ணி வியந்தேன். கணவர் இறந்த துக்கத்தை ஒரு ஓரத்தில்வைத்து விட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களான குழந்தைகள் படிப்பு, வேலை, வருமானத்திற்கு வழி என்று அப்பெண்மணியின்  அடுத்தடுத்த முடிவுகள் எங்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

" என்னாங்க யோசனை.. அட நீங்க எதுக்கு அவர நெனைச்சு வெசனப்பட்டுகிட்டு... காப்பி தண்ணி, பன்னீர் சோடா எதுனா குடிக்கிறீங்களா ''   என்று கேட்ட, படு எதார்த்தமான ராஜசேகரின் மனைவியை கையெடுத்து கும்பிட்டோம்.. கணபதி ஆறுதலான சில வார்த்தைகள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.         

விடை பெற்றுக்கொண்டு சில பழைய நண்பர்களை பார்க்க கிளம்பினோம். அன்று இரவே கணபதி சென்னை புறப்பட்டான். அவனை ரயிலில் ஏற்றி விட்டு நான் பிளாட்பாரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது டிரெயின் எக்சாமினெர் (TXR ) ஒருவர் இரும்புக்கழியால் டிரெயினுக்கு கீழே தட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார் . மெதுவாக அவரிடம் போய் 'எத்தன வருஷமா இந்த வேல பாக்கறீங்க' என்று கேட்டேன். 
'20 வருஷமா' என்றார். 
"கொழந்தைங்க"
"2 சார்.... அது சரி.. சாரு யாருன்னு...." என இழுத்தார்.

" நெறையா தண்ணி குடிங்க" என்று சொல்லி விடுவிடுவென நடந்த என்னை அவர் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். .

No comments:

Post a Comment