Wednesday, January 30, 2013

P.B.ஸ்ரீநிவாஸ்

ஒவ்வொரு வருடம் மயிலாப்பூர் நியூ வூட்லண்ட்சில் தங்கும்போது அங்கே பிரபல பின்னணிப்பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் அவர்கள் சிற்றுண்டி உண்ண வருவதை பார்க்கும்போது அவர் அங்கு வரும் ரெகுலர் வாடிக்கையாளர் என்பது தெரிந்தது.

 மற்றவர்கள் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. நான் மட்டும் அவரை அதிசயமாக பார்த்தேன். அருகே போய் பேச தயக்கம் மற்றும் பயம் கலந்த மரியாதை. எத்தனை பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனித்துவம் அமை...த்து legendry singer ஆக வலம் வந்தவர்.

 உறவினர்கள் புடைசூழ சாதாரண பொதுஜனமாய் ஜரிகை தலைப்பாகை, பஞ்சகச்சம்,அங்கவஸ்திரத்துடன் பொங்கல் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

 Action மற்றும் angry youngman ஹீரோக்களுக்கு பாடாமல் குடும்பஸ்த ஜெமினிகளுக்கும், குறும்புக்காரமுத்துராமன்களுக்கும் ரவிச்சந்திரன்களுக்கும் , கண்ணை உருட்டி காதல் செய்து பிறகு காதலியை கழட்டி விடும் பாலாஜிகளுக்கும்,அவ்வப்போது நாகேஷுக்கும், ஆனந்தன் போன்றோருக்கும், நீட்டிமுழக்கி வாயை குவித்து பேசும் ஸ்ரீகாந்த்களுக்கும், TMS போன்றோருக்கு ஜுரம் வரவைத்த 'என்னருகே நீயிருந்தால், பால்வண்ணம் பருவம் கண்டேன் என்று MGR க்கே பாடி அசத்தி ஒரு பெரிய சகாப்தத்தை உருவாக்கி, நிரந்தர ஓய்வு பெற்ற பின்னும் மனோஜ் கியானுக்காக 'தோல்வி நிலையென நினைத்தால்' என்று சாதனை படைத்தவர் ஆயிற்றே...

பொன்மலை


இரவு உணவுக்குப்பின் சுமார் 9 மணிக்கு சைக்கிளின் கேரியரில் MC.Shukla வின் Accountancy book வைத்ததால் பின் சக்கர காற்று இறங்கி விட்டதா என்று  ஒரு முறை சரிபார்த்த பின்,திருச்சி மன்னார்புரம் circuit house காலனியிலிருந்து கிளம்பினேன். சிலீர் என்றடித்த காற்றில் மெல்ல பெடலை அழுத்தி TVS tollgate தாண்டி G-Corner வழியாக பொன்மலை ரயில்வே  காலனி வந்து சேர்ந்தேன். ஏதோ IIT Compusக்குள் நுழைந்தது போல் உணர்வு. பெரிய மரங்களுக்கு நடுவே தள்ளி தள்ளி பெரிய வீடுகள். ஒலியும் ஒளியும் முடிந்து TV யை அனைத்து வீடுகளில் பாத்திரம் துலக்கும் சப்தம். மாடியில்லாத ஒட்டு வீடுகள்.முன்புறம் பெரிய தோட்டம்,திண்ணை, விசாலமான ஹால்,சமையலறை, 2 படுக்கைஅறை,பின்புறம் சிறிய தோட்டம் என்று வில்லா போன்ற வீடுகள். எல்லோரும் ரயில்வேயில் பணிபுரிபவர்கள். சிவில் இஞ்சினீயர் வீட்டுக்கு extra கூரை மற்றும் கேட், டிவிஷனல் இஞ்சினீயர் வீட்டில் எப்போதும் 2 தோட்டக்காரர்கள். அக்கவுன்ட்ஸ் சூப்பர்வைசர் வீட்டில் குழந்தைகளுக்கு ரயில்வே பில் புத்தகம் தான் ரஃப் நோட்புக். எல்லாமே ரயில்வே மயம்தான்.ஆருயிர் நண்பன் கணபதி சுப்பிரமணியன் வீடு வந்து சேர்ந்தேன்.  அதாவது CA exams combined studyக்காக.

வாசலில் அவனது அப்பா. மர பெஞ்சில் அமர்ந்து துடையில் கட்டியிருக்கும் காவி வேட்டியில் துடைத்த ஈர வெத்திலையை  புகையிலை சகிதம்உள்ளே தள்ளி 'வாங்கோ.. preparations எல்லாம் எப்பிடி போய்ண்டிருக்கு' என்று வரவேர்ப்பதற்குள் நம் அம்பி (வீட்டில் கணபதியின் nick name) குளித்து முடித்து கமகமவென விபூதி வாசனையுடன் வருவான். அப்பா முன்பு அவ்வளவு மரியாதை.அவனது சைக்கிளில் Rathinam's Costing  advisor புத்தகம்.

நேராக பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் போனால் அங்கே வைத்தி, ஜோசப் மற்றும் சுந்தரம் காத்திருந்தார்கள். கணபதியைத்தவிர எல்லோரும் இன்டர்மீடியட் எக்ஸாம்... கணபதி பைனல் எழுதுகிறான்.எல்லோரும் 2வது பிளாட்பாரத்தில் 2,3 விளக்கு கம்பங்களுக்கு கீழே புத்தக சுமைகளை இறக்கி படிக்க ஆரம்பித்தோம்.

எனக்கு CAயில்கணபதி தான் குரு.tax மற்றும் accountancy சந்தேகங்களை  விலாவாரியாக டிஸ்கஸ் செய்து தீர்த்து வைக்கிறேன் என்று ஆரம்பிப்பான். நடுவே "ஆமா... நீ படிச்ச அலகாபாத் யுனிவேர்சியுயிலே பொண்ணுங்கள்லாம் எப்பிட்றா ஸ்ரீதர் ?" என்று மிக வெகுளியாய் ஆரம்பிப்பான். நாமும் இதற்குத்தானே காத்திருந்தோம்.அலகாபாத் யுனிவெர்சிட்டி யுவதிகளைப்பற்றி மானாவாரியாக நேரமே போவது தெரியாமல் பேசி முடிக்க ஒரு மணி நேரம் போதாது.

'சரி... சரி... ரொம்ப பேசிட்டோம்.. rockfort எக்ஸ்பிரஸ் போனபின் ஸ்டார்ட் செய்யலாம்'  என்று முடிவெடுத்து அருகே காண்டீனில் டீ சாப்பிடுவோம்.rockfort வந்ததும் மேலும் கீழும் ஒரு ரவுண்ட் போய், பிறகு படிக்க ஆரம்பிப்பதற்குள் இரவு 11 மணி தாண்டிவிடும்.

அதற்குள் 'எவண்டா இந்த Holding company' அக்கௌன்ட்சை கண்டு பிடிச்சது'  என்று சலித்துக்கொண்டு மெல்ல வைத்தி,ஜோசப் சேர்ந்து கொள்வார்கள். பேச்சு மெதுவாக பாரதிராஜா படங்கள், இளையராஜா இசை என்று திசை மாறும். மீண்டும் கோகிலாவில் ஸ்ரீதேவியை விட தீபாவே யௌவனமாக இருப்பதை ஏகமனதாக முடிவெடுத்து , 'வாடா என் மச்சி.. வாழக்கா பச்சி' TR இன் வசனங்களை ரசித்து, ராஜநாகம் பட கடைசி சீனில் 'வாத்தியார் சார்..நா வர மாட்டேன்.. ஏன்னா….' என்று நீட்டி வசனம் பேசும் ஸ்ரீகாந்தை கலாய்த்துநேரம் 12 மணி 30 நிமிடம்..

 ஒரு 10, 15 நிமிடம் சீரியஸாக படிப்பு போகும். பிறகு மெதுவாக பேச்சு…..  .. 'திருநாவுக்கரசு ஆடிட்டர் பரவாயில்லடா கண்டுக்க மாட்டார்... ஆனா..எங்காளு ஆடிட்டர்  இருக்கானே .. செட்டியாருன்னா தான் அவங்களுக்கு புடிக்கும்...அது சரி.... உங்க ஆபிசிலே அந்த ஸ்ரீநிவாசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லீனாவுக்கு மட்டும் எப்பிடி எக்ஸாம் லீவு தர்றான்.' நாம கேட்டா சட்டம்பேசறான் ...”.

அப்படியே பேச்சு லீனாவை பற்றி போகும். "பேருதான் லீனா .. பாக்க அய்யராத்து பொண்ணு மாதிரி இருக்காப்பா" இது நான்.

"மாதிரி இல்லடா... அவ அய்யருதான்".இது கணபதியின் விளக்கம்.

"எப்பிடிப்பா அவங்கப்பா ஆரோக்யராஜ் (ஜமால் முகமது காலேஜ்ல HOD) கிறிஸ்டியனாசே"

 "ஸ்ரீதரா..அந்த செயின்ட் மேரீஸ் தோப்புல இருக்குற அத்தன familyயும் கன்வெர்டட் பிராமின்ஸ் தான்... வீட்ல இப்பவும் ஆச்சாரமா இருப்பாங்க... ஒன்னு ரெண்டு மொட்ட பாட்டிய கூட அங்க பாக்கலாம்"

கணபதியின் நீஈஈஈஈண்ட விளக்கத்தை நாங்கள் வாய் பிளந்தவண்ணம் கேட்டுக்கொண்டிருப்போம். அப்ப அக்கவுன்ட்ஸ் புக்,காஸ்டிங் புத்தகங்கள் எல்லாம்... ? அதே மின் கம்பங்களுக்கு கீழே திறந்து கிடக்கும்..
.....நேரம் 2 மணி..

"ச்சே! நாளைல இருந்து உன்கிட்ட டவுட்டே கேக்க மாட்டேம்பா.. ஒழுங்கா படிச்சு இந்த தடவ பாஸ் பண்ற வழிய பாக்கணும்.." போன்ற சபதங்களுக்குப்பின் எல்லோரும் தத்தம் புத்தகமூட்டைகளுடன் சைக்கிளை மிதிக்கத்தொடங்குவோம். வீடு போய் படுக்க 3 மணியாகும்.

மறுநாள் இரவு 9 மணிக்கு 'ஒஸ்தாம்மா' என்று சொல்லி படிக்க கிளம்பும்போது வாசலில் என் அம்மா பக்கத்து வீட்டு கல்பனாம்மாவிடம்   " பாவம் புள்ள ..தெனமும் விடிய விடிய படிக்குது.. இந்த தடவ CA பாஸ் பண்ணா சரி" என்று சொல்வது காதில் விழுவது கேட்டு பெடலை சற்று வேகமாக அழுத்தினேன்..

 

Friday, December 28, 2012

ஆதிகுடி காபி கிளப்


எத்தனை சரவணா, சங்கீதா பவன்கள் வந்தாலும் திருச்சி ஆதிகுடி குடிகாபி கிளப்க்கு இணையாகுமா?

மேல புலிவர்ட் ரோட்டில் உள்ள ஆதிகுடி காபி கிளப் அந்த காலத்தில் இருந்து இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் இயங்கி வரும் 'Going Concern'. சுமார் 10 பேருக்கும் குறைவான சிப்பந்திகளுடன் வெற்றிகரமாக இயங்கி வந்த நிறுவனம், தற்போது நிதி நிலையில் தள்ளடிக்கொண்டிருப்பதாக கேள்வி.கல்லாவில் உட்கார்ந்திருக்கும் மாமா சுமார் 70, 75 வயதை தாண்டினாலும், வாடிக்கையாளர்கள் தரும்  50 மற்றும் 100 ருபாய் நோட்டுக்களை அனாயசியமாக உள்ளே போட்டு, சாப்பிட்ட தொகை போக மீதியை அந்த பத்து நொடிகளில் மனக்கணக்கு போட்டு சில்லறை சகிதம் மேசையின்  மேலே ஒரு கையில் வைக்கும் முன், மறு கையால் பில்லை ஆணியில் குத்துவார். அவர் குனிந்து செயல் பட்டுக்கொண்டிருந்தாலும் நடு  நடுவே மூக்கு கண்ணாடிக்கு   மேலே கண்களால் சாப்பாட்டு மேசைகளை நோட்டம்விட்டு  'ன்னங்' என்று மணியடித்து துடைக்கும் சிறுவனை கூப்பிடுவார்.  
தரம்?... அவர்களுக்கென்று தனியே ஒரு தரம் மற்றும் சுவை உண்டு. 'kitchen ல cook ஐ மாத்திட்டாங்க போல ... சாம்பார் வேற மாதிரி இருக்கு' போன்ற பேச்சே இல்லை.
அந்த உணவு விடுதியின் சமையல்கார மாமாவை தற்காலத்து chief operating officer க்கு ஒப்பிடலாம். தனது சமையல் பணியை செவ்வனே செய்வதல்லாது,உணவருந்திக்கொண்டிருப்போரின் எண்ணிக்கையை வைத்து இரவுக்குள் எவ்வளவு பால் தேவைப்படும் என்பதை சில நிமிடங்களில் முடிவெடுத்து மேற்படி ஆர்டர் செய்யும் கலை IIM சென்று படித்தாலும் வருமா என்பது சந்தேகம் தான்.
விடுதிக்கு வருகை தரும் அன்பர்கள் பெருவாரியோர் வெளியூர்காரர்கள் மற்றும் மிதக்கும் ஜனத்தொகையே!(floating population ஐ வேறு எப்படி சொல்வதாம்?)
மாலை 4  மணியில் இருந்து ஹோட்டலுக்கு வெளியே ஒரு கும்பல் நின்று கொண்டு  போண்டா, பஜ்ஜி வகையறாக்களுடன்  காபி குடிக்கும்.  
ஹோட்டலுக்கு உள்ளே மற்றொரு கும்பல் நெய்ரோஸ்ட்,ஆனியன் ரவா,மாவு சாதா,காசி அல்வா, கேசரி என்று ஒரு கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
சிற்றுண்டி சாலைக்கு போகுமுன், நாம் சென்று இருக்கையில் அமர்ந்த பின் நம்மை முதலில் வரவேற்பது வாழை இலையின் வாசனை தான்.
நம் முன்னே இலையை வைத்த பின் நாம் இலையின் நடுவில் உள்ள தண்டை 'பர்ர்ர்ரக்....பர்ர்ர்ரக்' என்று கையால் அமிழ்த்தி இலையை சீராக்கி பெருமிதமுடன் நீரை தெளித்து சர்வர் வருமுன் மேலே உள்ள மரப்பலகையில் உள்ள பதார்த்தங்களை படித்து, எதை சாப்பிடுவது என்று அந்த 1 நிமிடத்தில் முடிவு செய்வது இன்றைய காலத்தில் நடவாத ஒன்று.    
பஹ்ரைன் சங்கீதா பவனில் முதலில் மெனுவை வாங்கியவுடன் க்விக் லஞ்ச் என்பது யாது,அதிலுள்ள இன்னபிற பதார்த்தங்கள் யாவை,அதற்க்கும் executive  லஞ்சுக்கும்  என்ன வித்தியாசம்  என இல்லத்தரசியுடன் ஒரு சிறிய பட்டிமன்றம் நடந்தேரிய பிறகு 'நார்த் இந்தியன் கோம்போ' ஆர்டர் செய்வது இன்றைய  காலம். 
கண்கள் மெதுவாக பக்கத்து மேசையை நோட்டமிடும். அவனைப்பாரு! சும்மா குச்சி மாதிரி இருக்கான்...ஒரு முழு plate கோபி மஞ்சூரியன் சாப்பிர்றான்... அட! அதுதான் ஸ்பெஷல் falooda வா? 'அந்த மாமியைப்பாரு ... இப்பத்தான் ஒரு புல் மீல்ஸ் ஆச்சு... அடுத்து falooda சாப்பிடறாங்க' போன்ற ஆச்சரியங்களுக்கு ஆடிகுடியில் இடமில்லை........ 
முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் திருப்திக்காகவும், நிறுவனத்தின் பெயருக்காகவும் இயங்கிவரும் விடுதி அது. வியாபார நோக்கம் மற்றும் லாபம் இரண்டாம்பட்சமே..