Wednesday, January 30, 2013

பொன்மலை


இரவு உணவுக்குப்பின் சுமார் 9 மணிக்கு சைக்கிளின் கேரியரில் MC.Shukla வின் Accountancy book வைத்ததால் பின் சக்கர காற்று இறங்கி விட்டதா என்று  ஒரு முறை சரிபார்த்த பின்,திருச்சி மன்னார்புரம் circuit house காலனியிலிருந்து கிளம்பினேன். சிலீர் என்றடித்த காற்றில் மெல்ல பெடலை அழுத்தி TVS tollgate தாண்டி G-Corner வழியாக பொன்மலை ரயில்வே  காலனி வந்து சேர்ந்தேன். ஏதோ IIT Compusக்குள் நுழைந்தது போல் உணர்வு. பெரிய மரங்களுக்கு நடுவே தள்ளி தள்ளி பெரிய வீடுகள். ஒலியும் ஒளியும் முடிந்து TV யை அனைத்து வீடுகளில் பாத்திரம் துலக்கும் சப்தம். மாடியில்லாத ஒட்டு வீடுகள்.முன்புறம் பெரிய தோட்டம்,திண்ணை, விசாலமான ஹால்,சமையலறை, 2 படுக்கைஅறை,பின்புறம் சிறிய தோட்டம் என்று வில்லா போன்ற வீடுகள். எல்லோரும் ரயில்வேயில் பணிபுரிபவர்கள். சிவில் இஞ்சினீயர் வீட்டுக்கு extra கூரை மற்றும் கேட், டிவிஷனல் இஞ்சினீயர் வீட்டில் எப்போதும் 2 தோட்டக்காரர்கள். அக்கவுன்ட்ஸ் சூப்பர்வைசர் வீட்டில் குழந்தைகளுக்கு ரயில்வே பில் புத்தகம் தான் ரஃப் நோட்புக். எல்லாமே ரயில்வே மயம்தான்.ஆருயிர் நண்பன் கணபதி சுப்பிரமணியன் வீடு வந்து சேர்ந்தேன்.  அதாவது CA exams combined studyக்காக.

வாசலில் அவனது அப்பா. மர பெஞ்சில் அமர்ந்து துடையில் கட்டியிருக்கும் காவி வேட்டியில் துடைத்த ஈர வெத்திலையை  புகையிலை சகிதம்உள்ளே தள்ளி 'வாங்கோ.. preparations எல்லாம் எப்பிடி போய்ண்டிருக்கு' என்று வரவேர்ப்பதற்குள் நம் அம்பி (வீட்டில் கணபதியின் nick name) குளித்து முடித்து கமகமவென விபூதி வாசனையுடன் வருவான். அப்பா முன்பு அவ்வளவு மரியாதை.அவனது சைக்கிளில் Rathinam's Costing  advisor புத்தகம்.

நேராக பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் போனால் அங்கே வைத்தி, ஜோசப் மற்றும் சுந்தரம் காத்திருந்தார்கள். கணபதியைத்தவிர எல்லோரும் இன்டர்மீடியட் எக்ஸாம்... கணபதி பைனல் எழுதுகிறான்.எல்லோரும் 2வது பிளாட்பாரத்தில் 2,3 விளக்கு கம்பங்களுக்கு கீழே புத்தக சுமைகளை இறக்கி படிக்க ஆரம்பித்தோம்.

எனக்கு CAயில்கணபதி தான் குரு.tax மற்றும் accountancy சந்தேகங்களை  விலாவாரியாக டிஸ்கஸ் செய்து தீர்த்து வைக்கிறேன் என்று ஆரம்பிப்பான். நடுவே "ஆமா... நீ படிச்ச அலகாபாத் யுனிவேர்சியுயிலே பொண்ணுங்கள்லாம் எப்பிட்றா ஸ்ரீதர் ?" என்று மிக வெகுளியாய் ஆரம்பிப்பான். நாமும் இதற்குத்தானே காத்திருந்தோம்.அலகாபாத் யுனிவெர்சிட்டி யுவதிகளைப்பற்றி மானாவாரியாக நேரமே போவது தெரியாமல் பேசி முடிக்க ஒரு மணி நேரம் போதாது.

'சரி... சரி... ரொம்ப பேசிட்டோம்.. rockfort எக்ஸ்பிரஸ் போனபின் ஸ்டார்ட் செய்யலாம்'  என்று முடிவெடுத்து அருகே காண்டீனில் டீ சாப்பிடுவோம்.rockfort வந்ததும் மேலும் கீழும் ஒரு ரவுண்ட் போய், பிறகு படிக்க ஆரம்பிப்பதற்குள் இரவு 11 மணி தாண்டிவிடும்.

அதற்குள் 'எவண்டா இந்த Holding company' அக்கௌன்ட்சை கண்டு பிடிச்சது'  என்று சலித்துக்கொண்டு மெல்ல வைத்தி,ஜோசப் சேர்ந்து கொள்வார்கள். பேச்சு மெதுவாக பாரதிராஜா படங்கள், இளையராஜா இசை என்று திசை மாறும். மீண்டும் கோகிலாவில் ஸ்ரீதேவியை விட தீபாவே யௌவனமாக இருப்பதை ஏகமனதாக முடிவெடுத்து , 'வாடா என் மச்சி.. வாழக்கா பச்சி' TR இன் வசனங்களை ரசித்து, ராஜநாகம் பட கடைசி சீனில் 'வாத்தியார் சார்..நா வர மாட்டேன்.. ஏன்னா….' என்று நீட்டி வசனம் பேசும் ஸ்ரீகாந்தை கலாய்த்துநேரம் 12 மணி 30 நிமிடம்..

 ஒரு 10, 15 நிமிடம் சீரியஸாக படிப்பு போகும். பிறகு மெதுவாக பேச்சு…..  .. 'திருநாவுக்கரசு ஆடிட்டர் பரவாயில்லடா கண்டுக்க மாட்டார்... ஆனா..எங்காளு ஆடிட்டர்  இருக்கானே .. செட்டியாருன்னா தான் அவங்களுக்கு புடிக்கும்...அது சரி.... உங்க ஆபிசிலே அந்த ஸ்ரீநிவாசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லீனாவுக்கு மட்டும் எப்பிடி எக்ஸாம் லீவு தர்றான்.' நாம கேட்டா சட்டம்பேசறான் ...”.

அப்படியே பேச்சு லீனாவை பற்றி போகும். "பேருதான் லீனா .. பாக்க அய்யராத்து பொண்ணு மாதிரி இருக்காப்பா" இது நான்.

"மாதிரி இல்லடா... அவ அய்யருதான்".இது கணபதியின் விளக்கம்.

"எப்பிடிப்பா அவங்கப்பா ஆரோக்யராஜ் (ஜமால் முகமது காலேஜ்ல HOD) கிறிஸ்டியனாசே"

 "ஸ்ரீதரா..அந்த செயின்ட் மேரீஸ் தோப்புல இருக்குற அத்தன familyயும் கன்வெர்டட் பிராமின்ஸ் தான்... வீட்ல இப்பவும் ஆச்சாரமா இருப்பாங்க... ஒன்னு ரெண்டு மொட்ட பாட்டிய கூட அங்க பாக்கலாம்"

கணபதியின் நீஈஈஈஈண்ட விளக்கத்தை நாங்கள் வாய் பிளந்தவண்ணம் கேட்டுக்கொண்டிருப்போம். அப்ப அக்கவுன்ட்ஸ் புக்,காஸ்டிங் புத்தகங்கள் எல்லாம்... ? அதே மின் கம்பங்களுக்கு கீழே திறந்து கிடக்கும்..
.....நேரம் 2 மணி..

"ச்சே! நாளைல இருந்து உன்கிட்ட டவுட்டே கேக்க மாட்டேம்பா.. ஒழுங்கா படிச்சு இந்த தடவ பாஸ் பண்ற வழிய பாக்கணும்.." போன்ற சபதங்களுக்குப்பின் எல்லோரும் தத்தம் புத்தகமூட்டைகளுடன் சைக்கிளை மிதிக்கத்தொடங்குவோம். வீடு போய் படுக்க 3 மணியாகும்.

மறுநாள் இரவு 9 மணிக்கு 'ஒஸ்தாம்மா' என்று சொல்லி படிக்க கிளம்பும்போது வாசலில் என் அம்மா பக்கத்து வீட்டு கல்பனாம்மாவிடம்   " பாவம் புள்ள ..தெனமும் விடிய விடிய படிக்குது.. இந்த தடவ CA பாஸ் பண்ணா சரி" என்று சொல்வது காதில் விழுவது கேட்டு பெடலை சற்று வேகமாக அழுத்தினேன்..

 

No comments:

Post a Comment