QFR-320
Friday, June 20, 2025
QFR-320 சந்தோஷ சுப்ரமணியன்
ஹசீன் தில்ருபா (Hindi)..(அழகான காதலி)
மைனஸ் 30 அல்லது 40 டிகிரி குளிர் சாதன அறையில் வைக்கப்பட்டிருக்கும் மிருதுவான உணவுப்பண்டங்கள் உறைந்த நிலையில் பாறாங்கல் போல இருக்கும். பார்த்திருக்கிறீர்களா? அதிருக்கட்டும்…கதைக்கு வருவோம்.
பாயசம்..
'காப்பி' in Guru's Coffee House..
சிறுவயதில் காலை எழுந்தவுடன் கோபால்/பயோரியா பற்பொடியில் பல் தேய்த்த கையோடு காப்பி குடித்தாக வேண்டும் எங்கள் வீட்டில். 60, 70 களில் எங்கள் அம்மா அகன்ற பாத்திரத்தில் காப்பி பொடி, வெந்நீர் கலந்து தெளிய வைத்தெடுத்த டிகாக்ஷனில் கலந்து கொடுக்கும் காப்பி அமிர்தமாக இருக்கும், கொஞ்சம் கூடுதல் சர்க்கரையுடன்.
டாகடர் மாலா
குவெய்த் அவென்யூவிலிருந்து உம்மல்ஹாசம் பகுதி நுழைந்தவுடன் இரண்டாவது குறுக்கு ரோட்டில் திரும்பினால் இவர் வசிக்கும் பில்டிங். மிகப்பெரிய ஹாலின் ஒரு பக்கம் விளக்கேற்றி வைத்து பாபா படம். வாப்பா ஶ்ரீதர்! என வரவேற்பார்.
கணபதி சுந்தரம்
படுத்துக்கொண்டே தேர்தலில் ஜெயித்தவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் படுத்துக்கொண்டே படித்து சிஏ பரிட்சையில் பாஸ் செய்தவர் இவர் மட்டுமே இருக்க முடியும். இவர் Ganapathi Avsr
இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது? வேற யாரு! நம்ம Ganapathi Subramanian தான். இருவரும் திருச்சியில் ஒரே ஆபிஸில் சிஏ ஆர்டிகிள்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் பெயர் கணபதி. இவர் செட்டியார் சமூகத்தைச்சேர்ந்தவர். பக்கா திமுக கட்சிக்காரர். கடவுள் நம்பிக்கை? கடவுளா? கடவுள்னு ஒருத்தர் இருந்தாத்தானே கடவுள் நம்பிக்கையே என்பார். நம்ப கணபதி எப்பவும் நெற்றி, கையெல்லாம் விபூதி மணக்க, ‘மணிகண்டா மணிகண்டா! மாமலை வாசா மணிகண்டா’ என முனுமுனுத்தபடி உலவும் பக்கா ‘அய்யிரு’. Poles apart என சொல்லும்படியாக இருவருக்கும் அரசியல், ஆன்மிகம் என எதிலும் கருத்தொற்றுமை இல்லாவிடினும் மிக நெருங்கிய நண்பர்கள். பாதி நேரம் ஆபிஸில் அரசியல் & ஆன்மிகம் தொடர்பாக பெருத்த ஆர்கியூமென்ட்களுக்கு நடுவே நந்தி கோயில் தெரு ரமணாசில் டீ குடிப்பவர்கள்.
முசிறி கல்லூரியில் பி.காம் முடித்து செவனேன்னு பாங்க் வேலைக்கு பரிட்சை எழுத நினைத்த இவரை சட்டென கல்யாணம் பண்ணி வைத்து ஜெயங்கொண்டத்தில் அப்பா நடத்தும் நகைக்கடையை பார்த்துக்க சொன்னால் புள்ள என்ன செய்யும் பாவம்! நகைக்கடை-வீடு-நகைக்கடை-வீடு என இரண்டு இடத்திலும் உரசி சேதாரமில்லாமல் அடுத்த வருடம் ஒரு குட்டி உதயசூரியன்.. 22..23 வயதில்.
இவரது அப்பா கவிஞர் சுபா திமுக அரசியல் பிரமுகர். பஞ்சாயத்து யூனியன் தலைவர். கலைஞருக்கு நெருக்கமானவர். இவரோ ஆ. ராசா மற்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். இவரது தம்பியும் வட்ட/மாவட்ட செயலாளர் என அரசியல் வாழ்க்கை. குளித்துவிட்டு தலை துவட்டுவது கூட கரைதுண்டில் தான். அய்யரில்லாத இவரது கல்யாணம் அரசியல் மாநாடு மாதிரி தான் நடந்தது அன்பழகன் முன்னிலையில். ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் என அப்பாவுடன் அரசியல் கூட்டங்களுக்கு போவதிலும் நகைக்கடை தொழிலிலும் அதிக ஆர்வம் இல்லாமல், ஆடிட்டராக விரும்பி சி.ஏ படிக்கும் முடிவுடன், மனைவியையும் குழந்தையையும் தன் அப்பா அம்மாவிடம் விட்டு விட்டு, திருச்சி கிளம்பி வந்தவர். மாதமொரு முறை ஜெயங்கொண்டம் விஜயமுண்டு.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக திருச்சி மன்னார்புரம் பேர்ட்ஸ் லாட்ஜில் இவர் 80களில் தங்கியிருந்தார். லாட்ஜ் என் வீட்டிற்கு மிக சமீபம் என்பதால் இவருடைய அறையில் இவருடன் கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்துகொண்டிருந்தேன். நிற்க! என்னுடன் கம்பைண்ட் ஸ்டடீஸ் செய்து சி.ஏ பாஸ் செய்தவர்கள் அப்போ ஏகத்தும் இருந்தார்கள். சிவப்பு/வெள்ளை வர்ண சோனி காஸட் ப்ளேயர் அப்போது பிரபலம். படிப்பு ஒரு பக்கம். ‘பனி விழும் மலர்வனம்’ பாடல் ஒரு பக்கம். லாட்ஜில் எதிரே வரும் பேச்சிலர் விடும் ஏப்பத்தில் மெஸ் புரோட்டா குருமா வாசனை. மன்னார்புரம் நால்ரோட்டில் சமோசா பஜ்ஜி டீ. ‘நைட்டு சனந்தேரி கசம் ஹிந்திப்படம் போலாமா?’ என சுகமாக போய்க்கொண்டிருந்த நாட்கள். ஹிந்தி எதிர்ப்பாவது.. மண்ணாங்கட்டியாவது.
கணித வாசனையே இல்லாமல் சி.ஏ படிக்க வந்த கணபதிக்கு பெரிய சேலஞ்சே சி.ஏயில் கடினமான கணிதப்பாடம் ஒன்று இருந்தது தான். பிஎஸ்ஸி கணிதம் படித்து வந்தவர்கள் கூட சி.ஏ கணிதத்தில் 40க்கும் குறைவான மார்க்குகள் வாங்கி ஃபெயிலாகி மலைவாசல் அருகே பேஸ்தடித்த முகத்துடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். செஞ்சோசப்ஸ் குப்புசாமியிடம் கணிதம்
டியூஷன் சேர்ந்து அடுத்த சில மாதங்களில் ‘ஏஸ்கொயர் ப்ளஸ் பீஸ்கொயர் இசீக்வல்டு’ என கணிதத்தை பிச்சி உதற ஆரம்பித்தார். படிப்பில் மனுஷன் புலி தான்.
படுத்துக்கொண்டே படிப்பார் என பகுதியின் ஆரம்பத்தில் சொன்னேனல்லவா! அக்கவுண்டன்சி மற்றும் கணித நோட்ஸ்களை மார்பில்
போட்டுக்கொண்டு தலைக்கு 2 தலகாணி முட்டு கொடுத்து, தரையில் பாய் விரித்து படுத்துக்கொண்டு ராஜேஷ்குமார் நாவலை படிப்பது போல கணித பாடத்தையும் அக்கவுண்டசியையும் கண்களை மேயவிட்டே படிப்பது கண்டு நாங்கள் வியந்தோம். தவிர ரேடியோ செய்தி, பத்திரிக்கைகள் வாசிப்பு, உலக நடப்பு, அரசியல் போக்குவரத்து என எல்லாமே விரல் நுனியில். சி.ஏ ரிசல்ட் வந்து எக்கச்சக மார்க்குகளுடன் பாஸ் செய்து ஜெயங்கொண்டத்தில் தன் நகைக்கடைக்கு மேலேயே ‘கணபதி சுந்தரம், B.Com, ACA, Chartered Accountants’ என போர்டு போட்டு ஒரு வழியாக தன் ஆடிட் ப்ராக்டிஸை வெற்றிகரமாக ஆரம்பித்தார். பணபலம், சொத்து, வியாபாரம், அரசியல் செல்வாக்கு என சகலமும் இருந்தும் தலைக்கணமில்லாது அடக்கமாக இருப்பது இவரது சிறப்பு.
தன்னம்பிக்கையும் அயராத உழைப்பும் வெற்றி மீது கவனமும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதை இவரை பார்த்து தெரிந்துகொள்ளலாம். அவ்வப்போது ஊரிலிருந்து போனில் தொடர்பு கொள்வார்.
கோட்டோவியத்துடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணபதி சுந்தரம்!
பி.கு: ‘இப்ப இவரோட ஆடிட் பிராக்டிஸ் எப்பிடி போகுது என கேட்பவர்களுக்கு.. ஆடிட்டராக விசிட்டிங் கார்டுடன் ஆடி ஓடி அல்லாடி சம்பாரிப்பதை மூட்டை கட்டிவிட்டு, வாடிக்கையாளர்கள் நம்பிக்கைக்காக உழைத்து குடும்ப தொழிலில் கவனம் செலுத்தி சகோதரர்களுடன் மூன்றோ நான்கோ நகைக்கடைகள் திறந்து விட்டார். மாடியில் இருந்த இவரது ஆடிட்டர் ஆபிஸ் இப்போ வெள்ளி பாத்திரங்கள் பகுதி...
மலபார் உணவகம்
ஒரு வெள்ளிக்கிழமை..