QFR-320
Subhasree Thanikachalam அவர்கள் வழங்கும் QFR தொடர்நிகழ்ச்சியில் 320ஆவது பாகம் ஒரு மைல்கல் எனலாம். ஒரு இசை நிகழ்ச்சியின் தரநிலையை நிர்ணயிக்கும் அளவைக்குறியை (benchmark) இந்நிகழ்ச்சியில் காணலாம்.
சந்தோஷ் சுப்ரமணியனுக்கு மகுடம்
சூட்டும் பாடல் இது. 70,80களை விட 50,60களில் TMS அவர்கள் உச்ச ஸ்தாயியில் பாடும்போது கொஞ்சம் nasal வாய்ஸில் பாடுவார் (நினைந்து நினைந்து நெஞ்சம்…. ஏரிக்கரையின் மேலே..). சந்தோஷுக்கும் nasal வாய்ஸ். ஆனால் TMSஐ imitate செய்யாமல் தனித்துவமான தன் ஸ்டைலில் பாடுகிறார். இப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் அவரது அதீத உழைப்பும் மற்ற எல்லா கலைஞர்களின் மெனக்கிடலும் தெரிகிறது. பாடலுக்கு வருவோம்.
தொடர்ந்து கீழே வாசிக்கும் முன் இப்பதிவின் முதல் கமென்ட்டில் இப்பாடல் லிங்க்கை இணைத்திருக்கிறேன். திரையிசையில் நாட்டமிருப்பவர்கள் மறுபடியும் இந்த QFR-320 பாடலை ஹெட்ஃபோனுடன் கேட்ட பின் எனது பதிவை படிக்கும்போது இசையின் ஆழத்தையும் விசாலத்தையும் ரசிப்பீர்கள்.
பாடல் முதலில் ஆக்ரோஷமான வயலின்கள் மற்றும் ஆர்கன் இசையுடன் ஆரம்பமாகிறது. பின் எழுப்பப்படும் சூராவளி காற்று ஒலி! மை காட்! நம்பவே முடியவில்லை. அடுத்து பெண்களின் ஹார்மனியும் கூடவே ரங்கப்ரியாவின் செல்லோ மற்றும் வயலின் இசையுடன் திரையில் தோன்றும் சிவாஜி.. சாரி! சந்தோஷ்! இந்த இடத்தில் சிவாவுக்கு சபாஷ் சொல்ல வேண்டும். அற்புதமான ஒளிக்கோர்வை மற்றும் பின்புல ஒலியுடன் சந்தோஷை அறிமுகப்படுத்தும் வீடியோ எடிட்டிங் பிரமாதம்.
இந்த 6 நிமிட பாடலில் ஆரம்ப பல்லவி & அனுபல்லவி முடியவே 2 நிமிடங்கள். ‘எங்கே நிம்மதி’ எனும் பல்லவியை முதல் முறை வசனமாக சொல்லி, இரண்டாம் முறை வாத்தியங்களுடன் சத்தோஷ் ஆரம்பிக்கும்போது கூர்ந்து கவனியுங்கள்! முதல் ‘எங்கே நிம்மதி’க்கு பின்னால் இசை கிடையாது. இரண்டாம் ‘எங்கே’யில் சரியாக ‘எ’யில் (7:01) டெரிக்கும் வெங்கட்டும் தாள வாத்தியங்களுடன் சேர்வார்கள், ஒரு மணித்துளி கூட முன்னே பின்னே இல்லாமல்.. என்ன துல்லியம்! மறுபடியும் மூன்றாம் முறை பல்லவி பாடும் முன் சுத்தரேசன் சார் (மேன்டலின்) மற்றும் லலித், செல்வா (குழலோசை) சேர்த்துகொள்ள அத்தனை இசைக்கலைஞர்களும் பாடலை துவங்க எல்லா கலைஞர்களையும் திரையில் சிவா காட்ட, நமக்கு மயிர்க்கூச்செறியும்! உங்க ப்ரில்லியன்ஸுக்கு அளவே இல்லியா சுபஶ்ரீ! அநியாயம்!
ஹார்மனி பெண்களின் அற்புத ஹம்மிங்கை அடுத்து அனு பல்லவிக்கு போவோம். அந்த ‘எங்கே மனிதர் யாரும் இல்லையோ’வில் ‘எங்கு’ என்பதன் ஏகார இடைச்சொல்லான ‘எங்கே’யை TMS அவர்களுக்கிணையாக சந்தோஷ் அதே உறுதி மற்றும் அழுத்தத்துடன் ‘எங்கேஏஏஏ’ என நீட்டி பாடுவது எல்லாம் உண்மையில் வேற லெவல்! பொதுவாக ஏகார இடைச்சொல்லின் அவசியமே அவ்விடத்தில் பொருளை மேலும் வலியுறுத்துவதற்காக. (உதாரணம்: வள்ளுவர் ‘ஆதிபகவன் ‘முதற்றே’ உலகு’ என்று அழுத்தி சொல்லி தன் convictionஐ உணர்த்தினார்). QFR இல் இது போன்ற சிறிய நுணுக்கங்களை(nuances) கூட கவனித்து அதி சிரத்தையாக பாடியிருக்கிறார் சந்தோஷ். வாழ்த்துக்கள் சகோ!
முதல் இன்டர்ல்யூட் sumptuous feast என சொல்லும்படியான ஒரு விருந்து. கீர்த்தனா ட்ரம்பெட், சாக்ஸபோனுடன் பல அவதாரங்களுடன் விஸ்வரூபம் எடுக்கிறார். கூடவே வயலின்கள், ஆர்கன், செல்லோ க்ரீச்சிட பாம், பாம் என டெரிக் ட்ரம்ம, படிப்படியாக க்ளைமாக்ஸ் இசை போல மேலே உயர உயர போய்……. சட்டென மழை பெய்து ஓய்ந்த மாதிரி அமைதி.. நிசப்தம்.. மறுபடியும் மேன்டலின், கிடார், ட்ரம், பாங்கோஷ் நால்வரும் துவங்க, குழலோசைகள் மெதுவாக சேர்ந்து ‘எனது கைகள் தீண்டும்போது’ எனும் முதல் சரணம்.
இப்போது கண்ணதாசனின் வரிகளை கவனியுங்கள். இந்த முதல் சரணம் முழுக்க இயலாமை, வெறுப்பு, அழுகை, கோபத்தை வெளிப்படுத்தும் ‘அழுகின்றது, சுடுகின்றது, இறைவன் கொடியவனே’ போன்ற விரக்தியான வரிகள். அதனால் தான் முதல் இன்டர்ல்யூட் இசையும் கொஞ்சம் ஆக்ரோஷமாக உள்ளது. சந்தோஷ் பாடும்போது ‘வீணை அழுகின்றது’, ‘மலரும் சுடுகின்றது’ வரிகளில் அதே உணர்ச்சிகளை காட்டி புருவச்சுறுக்கங்களுடன் பாட, அந்த இடத்தில் அது சிவாஜியா அல்லது சந்தோஷா என நினைக்கும் மனநிலையில் நாம் இல்லை. காரணம் பாடலோடு நாமும் ஒன்றி விடுகிறோம்.
அடுத்த இன்டர்லயூட் நம்மை சாந்தப்படுத்துகிறது. மனதிற்கு ஆறுதல் அளிக்கும் ஹார்மனி, அதை தொடர்ந்து குழலோசைகளின் அமைதியான இசை. காரணம் இரண்டாவது சரணத்தில் (பழைய பறவை போல ஒன்று….) தெளிந்த நிலை, நம்பிக்கை, ஆறுதல் , கெஞ்சுதல் போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடுடன் ‘வணங்குவேன் தாயே, உறங்குவேன் தாயே’ போன்ற வரிகள்.. சந்தோஷ் கை கூப்பி வணங்கும்போது பெரிய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி நம் மனம் இலேசாகிறது.
முதல் ஆக்ரோஷ இன்ரடர்ல்யூட் முழுக்க கீர்த்தனாவின் ஆளுமை என்றால் இரண்டாவது அமைதியான இன்டர்ல்யூட் சு.ரேசன் சார், செல்வா & லலித்தின் ஆளுமை. இரண்டு சரணங்கள் மற்றும் இன்டர்ல்யூட் இசையை கேட்கும்போதும் இசையின் இழைகள் மற்றும் நேர்த்தியான இசைக் கோர்ப்பு, பாடல் வரிகளின் தாக்கம் எல்லாவற்றுடன் நாமும் அந்த உணர்ச்சிக்குவியலில் கலந்து விடுகிறோம். QFRஇன் வெற்றியே இது தான்.
நடுவே வரும் நீண்ட ஹார்மனியில் 17 பாடகர்கள், 10க்கும் மேற்பட்ட ஃப்ரான்சிஸ் சேவியர் குழு, ஸ்ட்ரிங்ஸ் மற்றும் தாள வாத்திய கலைஞர்கள், பிரதான பாடகர் என எல்லா கலைஞர்களையும் கலந்து திரையில் காட்டுவது சிவாவின் ராஜபாட்டை! எப்பிடி சிவா மிக்ஸ் பண்ணி மேனேஜ் பண்றீங்க? எப்பவாவது ஒருநாள் மனைவிக்கு உதவும் போது எங்களுக்கு ஒரு புளியோதரையை கூட சரியா மிக்ஸ் பண்ண வரதில்லையே!
இந்த பாடல் காட்சிக்கு 200 கலைஞர்களை வைத்து மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திருந்தாலும் திரைப்படத்தில் நாம் காண்பது சிவாஜியின் நடிப்பை மட்டும் தான். பின்புல இசையை காதால் மட்டுமே கேட்டு ரசிக்கிறோம். ஆனால் QFRஇல் வெறும் 20 கலைஞர்களைக்கொண்டு அந்த 200 பேர்களின் படைப்பை மீண்டும் நாம் காதால் கேட்டு மட்டுமல்ல, இசைக்கலைஞர்களின் உழைப்பை கண்களாலும் பார்த்து வியக்கிறோம்.
நவீன தொழில் நுட்பம் கலந்து, ஒரிஜினல் பாடலின் தரத்துடன், பன்மடங்கு சுவையுடன் சந்தேகமில்லாமல் அற்புதமாக உருவாக்கப்பட்ட கானம் இது.
Santhosh Subramanian எனது co-professional (சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட் ) என்பதாலும், எனது முகநூல் நண்பர் என்பதாலும் அவரது ஓவியத்தையும் வரைந்து இங்கு பகிர்வதில் பெருமை எனக்கு.
Kudos to the entire team. Way to go! வாழ்த்துக்கள் சுபஶ்ரீ 


No comments:
Post a Comment