Tuesday, July 17, 2018

திருச்சி கதைகள்-2


(சகோதரியின் பெண்ணுடன் திருச்சியில் அரட்டை அடிக்கும்போது மற்றொரு குட்டி கதைக்கான கரு கிடைக்க, பெயர்கள், ஊர், வீதிகள் மாற்றப்பட்டு சில பாத்திரங்கள் சேர்க்கப்பட்டு..... கதையை படித்த அவள் சொன்னது: பாதிக்கு மேல இதெல்லாம் நான் சொல்லவேயில்லியே..மாமா!..)
இனி கதை..
தென்னூர் பட்டாபிராம்பிள்ளை தெரு பெருமாள் கோவில் எதிரே குறுகலான சௌராஷ்ட்ரா தெரு. பட்டுநூல் காரத்தெரு என்றால் எல்லோருக்கும் தெரியும். சங்கர் பட செட்டிங் போல நெருக்கமான வீட்டு வாசல்களில் வேட்டியுடன் சௌராஷ்ட்ர இளைஞர்கள் சடசடவென ‘ஊசிபட்டாசு’ போல சதா பேசிக்கொண்டிருப்பார்கள். அடிதடி தப்புத்தண்டா என எதிலும் சேராத அமெரிக்கையான மக்கள்.
புத்தூர் சின்ன மைதானத்தில் கால் பந்தாட்டம் ஆடிவிட்டு சௌராஷ்ட்ரா தெரு வழியாக சைக்கிள் இளைஞர்கள் எத்தனை தடவை தேடித்தேடி சுத்தி வந்தாலும் கண்ணில் படாத இளம் பெண்கள். இரத்த சோகை மாதிரி வெள்ளை வெளேர் சருமம் மற்றும் பூனை விழிகள் கொண்ட பெண்கள் அநேகம் பேர் அந்த தெருவில். அதில் ஒரு பெண் தான் இப்பதிவின் நாயகி ரேணுகா.
கொஞ்சம் பூசின மாதிரி தேகம். பெரிய வட்ட முகம். அழகிய கண்கள். கீழ் தாடை கொஞ்சம் முன்னுக்கு தள்ளி, சட்டென ஜெயசித்ரா மாதிரி இருப்பாள் ரேணுகா. தைலா முதலியில் அரை மீட்டர் அதிகமெடுத்து தைத்த பாவாடை தாவணியில் காலை 9 மணிக்கு உருமு தனலட்சுமி கல்லூரிக்கு அவள் கிளம்பினால் அந்த தெருவில் பல இளைஞர்களுக்கு அன்று தூக்கம் கெடும்.
டவுன் பஸ்ஸில் ஒரு ரூபாய் கொடுத்து 60 பைசா டிக்கெட் எடுக்கும்போது, 10 காசு இருக்கா என கண்டக்டர் கேட்டால் சட்டென மண்டையில் ஏறாமல் பேந்த பேந்த அவள் முழிப்பதே அழகு. அவசரப்படாமல் ஆற அமர ஐந்து வருடங்களில் அவள் பாட்டனி பட்டப்படிப்பு முடித்து சென்னையில் HCL நிறுவனத்தில் கார்டு பஞ்ச்சிங் வேலை. கம்ப்யூட்டர் வருவதற்கு முந்தைய காலம். வேலைக்குச்செல்லும் பெண்டிர் விடுதியில் ஜாகை. ஞாயிறன்று ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ பார்த்துவிட்டு அன்னபூர்னாவில் பரோட்டா விஜிடபிள் குருமா சாப்பிட்டு மேலும் ஓரிரண்டு கிலோ கூட்டியிருந்தாள்.
மீண்டும் திருச்சிக்கு வருவோம். சௌராஷ்ட்ரா தெரு கொஞ்சம் தாண்டி மூலைக்கொல்லை தெரு பகுதியில் ‘தட்டி போட்ட திருச்சி லோகநாதன் வீடு எங்கேங்க?’ போன்ற விசாரிப்புகளுக்கு அடுத்து அதிகம் கேட்கப்படுவது ‘ஆசாரி வீடு எங்கேங்க?’ தான்.
விசாலமான வீட்டுத்திண்ணையில் நகைபட்டறை. ஆறேழு இளைஞர்கள் அரிசி உமி கரியடுப்பு சகிதம் நகைகளை உருக்கி டன்டன் என சுத்தியலால் அடித்து கம்பியை நீட்டிக்கொண்டிருக்க (தங்க கம்பிங்க!) , பெரியவர் வேலாயுத ஆசாரி ஊதுகுழாயை நெருப்பில் ஊதி வளைவி செய்துகொண்டிருப்பார். அக்கம்பக்கத்தார் ‘திருகாணி, சங்கிலி அறுந்து போச்சுங்க’ என சின்னச்சின்ன வேலைகளுடன் அங்கே வருமுன் சங்கிலியின் குண்டுமணிகளை முன்கூட்டியே எண்ணிவைத்துக்கொண்டு கொடுப்பார்கள். அந்த வீட்டுப்பையன் சுப்பையா தான் இப்பதிவின் நாயகன்.
சுப்பையாவிற்கு அப்பாவின் பொற்கொல்லர் தொழில் இஷ்டமில்லை. தலைக்கு எண்ணெய் வைத்து படிய வாரி வெள்ளிக்கிழமை விரதம் சிவகுமார் மாதிரி டைட் பாண்ட்டில் இருப்பான். டோல்கேட் ராதாஸில் டிபன் பண்ணிக்கொண்டு, நடுவே பக்கத்தில் ஜமாலில் தலையை காண்பித்து பௌதிகம் படித்து, கல்லூரி ஆர்க்கெஸ்ட்ராவில் ட்ரிபிள் காங்கோ, டிரம்ஸ் வாசிப்பவன்.
அப்பாவின் நகை பட்டறை மற்றும் உடம்பிலிருந்த பூணுல் இரண்டையும் கடாசிவிட்டு சென்னையில் HCL நிறுவனத்தில் ரேணுகா வேலை செய்யும் அதே கார்டு பஞ்ச்சிங் பிரிவில் சூப்பர்வைசராக சேர்ந்து அவனும் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ பார்த்து தொலைத்தான்.
பாட்டனியும் பௌதிகமும் சேர்ந்து வேதியியல் ஆனது. கார்டு பஞ்ச்சிங் வேலை காலதாமதமானது. அன்னபூர்னா பரோட்டா குருமா அமோக விற்பனையானது. பருவமே.. புதிய பாடல் பாடியது. சௌராஷ்ட்ரமும் ஆசாரியும் சேர்ந்த கதை நாடார் (ஷிவ்) வரை போனது. வார்னிங் மெமோக்கள் பறந்தன. வேலை போகவில்லை. வார/மாத இறுதியில் இருவரும் சேர்ந்து KPN புஷ்பேக் சீட்டில் திருச்சி பயணம்.. டெக்கில் அன்புள்ள ரஜினி காந்த். உளுந்தூர்பேட்டையில் ‘பஸ் பத்து நிமிசம் நிக்கும்’ என கண்டக்டர் சொல்லியும் பதினைந்து நிமிடம் மசாலாப்பால் சாப்பிட்டார்கள்.
ஆக, பஸ் திருச்சி போகும் முன் மேட்டர் போய்ச்சேர்ந்தது. அவ்ளதான்..பட்டுநூல் கார தெருவெங்கும் ஊசி பட்டாஸ் வெடி. மூலைக்கொல்லைத்தெரு முழுக்க ஊதுகுழாய் சத்தம். இரு வீட்டு பெரியவர்கள் கூடினார்கள். ஜாதி சங்கங்கள் கலந்து பேசின. கண்டனங்கள் பறந்தன. பாட்டனியும் பௌதிகமும் பாதர் செய்யவில்லை. அடுத்த எட்டு வருடமும் அன்னபூர்னா, KPN, உளுந்தூர்பேட்டை என காதல் கொடிகட்டி பறந்தது, ரேணுகாவின் மதுரை அத்தை ஒருவர் வந்து சேரும்வரை.
மதுரை அத்தை, சி.கே. சரஸ்வதிக்கே அத்தை. திருச்சி வந்து பூரா விபரங்களையும் தெரிந்து கொண்டார். விஷயம் முற்றிப்போனாலும், வெத்தலை சீவலை வாயின் ஒரு பக்கம் ஒதுக்கி, இதை வேறு மாதிரி கையாள வேண்டும், அவசரப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டு சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் நன்னாரி சர்பத் குடித்து அண்ணா பேருந்தில் ஒரு முடிவோடு பஸ் ஏறினாள் மதுரை அத்தை.
அடுத்த வாரம் ஒரு நாள் ‘அம்மினி! கார்டு பஞ்சிங் போறும். அமெரிக்காவில் உனக்கு டிரெய்னிங்’ என ஆர்டர் வந்தது ரேணுகாவிற்கு. அவளுக்கு இஷ்டமில்லையெனினும் அமெரிக்கா போகச்சோல்லி சுப்பையா வற்புறுத்தினான். நம் எதிர்காலத்திற்கு இந்த டிரெய்னிங் முக்கியம் என சுப்பையா நம்பினான் பாவம்!.
‘சுப்பையா! நம்ம கல்யாணம் எப்பையா?’ என இவள் கேட்டுக்கோண்டே அமெரிக்கா கிளம்ப, அவன் பான் வாயேஜ் சொல்லி அனுப்பி வைக்க, அங்கே மதுரை அத்தை விஷமப்புன்னகையுடன் யாருக்கோ போன் போட்டு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.
அடுத்த ஆறு மாதத்தில் அத்தையின் நெருங்கிய நண்பர் ஒருவரின் பிள்ளை அமெரிக்காவில் ரேணுகாவை சுற்றி சுற்றி வந்ததும், ரேணுகா அவனை தவிர்க்க முற்பட்டதும், அவன் தான் ரேணுகாவின் புதிய காதலன் என அத்தை மூலமாக சுப்பையாவிற்கு பொய்யான தகவல் தரப்பட்டதும், அதை உண்மையென நம்பி, சுப்பையா அவளுக்கு டார்ச்சர் கொடுத்ததும், தேவையில்லாத சந்தேகத்தினால் எட்டு வருட காதல் முறிந்ததும், சந்தேகப்படும் இவனைவிட அந்த அமெரிக்கா பையனே மேல் (male) என கல்யாணம் செய்துகொள்ள ரேணுகா சம்மதித்ததும், அதனால் தனக்கு ஒன்றும் பெரிய நஷ்டமில்லையென கோபாவேசத்துடன் தன் முறைப்பெண்ணையே சுப்பையா மணந்ததும்...
எல்லாமே சரஸ்வதி அத்தை சாமர்த்தியமாக நகர்த்திய காய்கள்..
அப்புறம் உளுந்தூர்பேட்டையில் KPN பஸ் பத்து நிமிடத்திற்கு மேல் நிற்பதில்லை.
சட்டென வரைந்த காதல் வாகனத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

திருச்சி கதைகள்-1


மனைவி Usharani Sridhar ன் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக பஹ்ரைனிலிருந்து கிளம்பி திருச்சி வந்து பத்து நாட்கள் ஓடியது தெரியவில்லை. ஆசுபத்திரி, அனஸ்தீசியா, ஐசியூ இத்யாதிகளுக்கு நடுவே உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது கிடைத்த சுவாரசியமான சில திருச்சி குட்டிக்கதைகள்..(நிற்க! மனைவி தற்போது நலமே!)
இடம்: நலம் மருத்துவமனை, சுப்ரமணியபுரம்.
கதை சொன்னவர்: நம் உறவினர் பார்த்தசாரதி பாவா (கீர்த்தி சுரேஷ் மாதிரி பாதி தெலுங்கு பாதி தமிழில் பேசுவார்)
‘மஞ்ச்சி ஃபாமிலி.. ஶ்ரீதர்!’
‘யாரு பாவா?’
‘தோ.. எதுத்த வார்டுல இருக்காங்களே! அந்தம்மா..’
‘அப்படியா?’
‘ ஆமா.. சுமாரான வசதி உள்ள குடும்பம். ஓரே பையன். அப்பா சீக்கிரம் எறந்துட்டாரு. மனவாளு! பையன் பிஷப் ஹீபர்ல தான் படிச்சான். ஓரளவு மார்க்கு வாங்கி காரைக்குடி கிட்ட ராயவரம் பாலிடெக்னிக்ல டிப்ளமோ படிச்சான்’
‘சரி..’
‘’தரவாத்த.. பசங்க நாலஞ்சு பேரை சேத்திக்கிட்டு பெல்லு (BHEL) கிட்ட ஒரு யூனிட் போட்டான். நெறைய பெல்லு சப்-கான்ட்ராக்ட் கெடச்சது. நல்லா சின்சியரா வேலய முடிச்சு கொடுப்பான். அதனால அவனுக்கு பெல்லுலயே வேல போட்டு கொடுத்தாங்க. யூனிட்ட மத்த பசங்களுக்கு வித்துட்டு வேலைல சேந்தான்’
‘சுவாரசியமா இருக்கே!’
‘வீடு சீரங்கத்துல தான். ஒத்திக்கி வீடெடுத்தான். அம்மாகாரி சமச்சி போட, பையன் திருவெறும்பூருக்கு தெனம் பைக்குல வேலக்கி போவான்’
‘சரி..’
‘வீட்டு ஓனரு மதுரக்காரங்க, மாடில உண்ட்டாரு. ரெண்டு பொண்ணு. இத்துருனி பெத்த பில்லலு. பெரியவள உள்ளூர்ல கட்டிக்கொடுத்து அவங்க புருசன் உறையூர்ல டீக்கடை. நல்ல வசதி’
‘டீக்கடைல அவ்ளோ காசா?’
‘மரி ஶ்ரீதர்! ஒரு கடை தொறந்து நல்ல காசு சேத்து, எம்பது லச்சத்துக்கு வீடு. புத்தூர்ல இன்னொரு கடையும் தொறந்தாங்க.. அத விடு. ரெண்டாவது பொண்ணு பக்கத்துல காலேஜ் போய்ட்ருந்தாப்டி.. கீழ் வீட்டுல ஒத்தக்கி இருந்த நம்ம பையன் ஆபிசுக்கு கெளம்பற சமயம் இவளும் காலேஜ்க்கு கெளம்புவா’
‘லவ்வா?’
‘அவ்னு! (கொஞ்சம் வெட்கத்துடன்).. வீளு தெலுங்கு..ஆ பில்ல அரவம்.. தேவர்வாளு.’
‘ரெண்டு வீட்லயும் ஒத்துக்கிட்டாங்களா!’
‘அவ்னு. அவங்களுக்கு பையன ரொம்ப பிடிக்கும். இருவத்தெட்டு வயசுல பின்னோடு ச்சால பொடுவு (பையன் நல்ல உயரம்) ஓரளவு நல்ல வேலை. ஒத்திக்கு கொடுத்த வீட்டை இவங்க விக்கலாம்னு இருக்கறப்ப பையனே வெலைக்கி வாங்க ரெடின்ட்டான். ஒத்திக்கி மேல கொஞ்சம் பணத்த லோனு போட்டு கட்டி வாங்குனான். அஞ்சு பத்து பாக்கி இருந்து லவ்வு வேற வந்துடுச்சா! கல்யாணத்த பண்ணி வச்சுட்டா அம்மாகாரி. பெல்லி பாக சேஸினாரு ஶ்ரீதர்!’
‘பரவால்லியே. சாதி பிரச்சனை ஒன்னுமில்லியே?’
‘அதி சினிமா, பாலிடிக்ஸ்லோ தா பா!’
‘ரொம்ப சந்தோஷம்’
‘பையன் காலைல ஆபிஸ் போயிடுவான். பொண்ணு தில்லைநகர்ல எதோ டிராவல்சுல வேல’
‘சரி..’
‘அம்மாகாரி அப்பப்ப பஸ் புடிச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலுக்கு போய்டுவா. கெட்டிக்கார பொம்பள. வாராவாரம் அவங்களுக்கு மைக்கேல்ல ஐஸ்கிரீமும் சிரப்பும் சாப்புடனும். அப்படியே சினிமா போயினுவா. வர்றப்ப சாஸ்திரி ரோடு அடயார் ஆனந்தபவன்ல சாப்ட்டு பையனுக்கும் கோடாலுக்குனி (மருமகளுக்கும்) பார்சல் வாங்கிட்டு வந்துடுவா. நேரங்கெடச்சா ஜங்ஷன் பக்கம் பையனுக்கு இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டறது, லோனு இம்மய் அது இதுன்னு அலைவா பாவம். நல்லா தெம்பா இருப்பா. எளநீ, பாலக்கரை பிரம்மானந்தால சர்பத், ஜிகர்தண்டா வாங்கி குடிக்கும்’
‘சரி அப்பறம்..’
‘பையன் ஒருநா காட்டூர்ல இருந்து இந்தப்பக்கம் வர்றான். அரியமங்கலம் மேம்பாலத்துல ஏறுனான். சீரங்கம் தானே! பைப்பாஸ் ரோட்ட புடிச்சான்’
‘அப்பறம்?’ (பைக்னு சொன்னப்பவே பக்குன்னு எதோ ஒரு பயம் எனக்கு)
‘டிரைய்லர் பின்னாடி ஒழுங்காத்தான் வந்துட்ருந்தான் பைக்குல. டிரெய்லர் என்ன தலதெறிக்கவா ஓட்டுவான்?’
‘சரி.. விசயத்துக்கு வாங்க பாவா’
‘அவசரம்.. சைட்ல ஓவர்டேக் பண்ண பாத்தான் பையன்’
‘ஓவர்டேக் பண்ணானா?’
‘லேது.. எதுத்தாப்ல மெட்ராஸ் பஸ் ஒஸ்துந்தி கதா! பையன் சுதாரிச்சு ஸ்பீடை கொறச்சு டிரைய்லர் பின்னாடி திரும்ப வரலாம்னு...’
‘ஐய்யய்யோ.. ஒன்னும் ஆகலயே!’
‘பின்னாடி அவனால வர முடியல. ஏதோ ஒன்னு அவன இழுத்துச்சு. எதுத்தாப்ல பஸ் கிட்ட வந்துடுச்சு’
‘என்னாச்சு.. சட்னு சொல்லுங்க பாவா’
‘டிரெய்லரோட சைடு பக்கம் கயிறு சுத்திக்கட்ட இரும்பு கொக்கி இருக்குமே! அதுல பையன் சட்டையோ காலரோ மாட்டி பைக்கோட உள்ளாற போய்ட்டான்’
‘ஐயோ! ஒன்னும் ஆபத்தில்லே!’
“பையன் தொடைல பின்வீலு எக்கிந்தி. நெத்துரு (இரத்தம்) ஒக்கட்டி லேது. பையன் முழிச்சிக்கிட்டு தான் ரோட்ல கெடந்தான். படுத்த வாக்குலயே அம்மாகாரிக்கு போன் போட்டு ‘அம்மா! இட்டவேல அய்ப்பொய்ந்தி. பயம் லேது! நா ஆபிஸ் போன் சேசி ச்செப்பு’ன்னு சொல்லிட்டு மயக்கமாயிட்டான்”
‘கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்களேன் பாவா! பையன் பொழைச்சிக்கிட்டானா இல்லியா?’
‘ஆபிஸ் காரங்க ஸ்பாட்டுக்கு வர்றதுக்குள்ளாற பின்னாடி வந்த பெல்லுகாரங்க யாரோ அவன் யூனிஃப்ர்மை பாத்துட்டு வண்டிய நிறுத்தி போன் செஞ்சி ஆம்புலன்ஸ் வந்துடுச்சு’
‘ ஐயோ..’
‘ ஆசுபத்திரில சேத்து ரெண்டு நாள்ல போய்ட்டான்’
‘ஐயோ பாவம். பயங்கர அதிர்ச்சியா இருக்கே! கல்யாணம் ஆயி மூன்னாலு மாசந்தானே ஆச்சு!’
‘ சும்மா சொல்ல கூடாது ஶ்ரீதர்.. அம்ம கத்த போல்டு தா!. பையனுக்கும் நல்ல தைரியம். அந்த ரெண்டு நாள்ல அம்மாவையும் பொண்டாட்டியையும் பயப்பட வேண்டாம்னு சொன்னான். இன்ஷீரன்ஸ் உந்தி காதா! தான் இறந்துட்டா வீட்டு லோன் கட்டவேண்டியதில்லைனு முன்கூட்டியே சொல்றான் பாத்துக்க!’
‘அப்படியா! அவ்ளோ வெவரம் தெரிஞ்சவனா?’
‘அவ்னு! இன்டெலிஜென்ட் வாடு! ஷிஃப்ட்க்கு ஒரு மணி நேரம் முன்னயோ பின்னயோ, வேலை செய்ற எடத்துக்கு பதினஞ்சு கி.மீ சுத்தி எங்க ஆக்சிடென்ட்ல செத்தாலும், அது டூட்டில செத்த மாதிரி.. ஆபிஸ்ல பணம் முழுசும் கெடைக்கும்னு சொல்லிட்டு செத்துப்போனான். பசிவாடு.. பாப்பம்..சச்சியே பொய்னாடு!’
‘இதெல்லாம் நடந்து எத்தினி நாளாவுது?’
‘ஒக்கட்டினார சம்வச்சரம் (ஒன்னறை வருடம்) அய்ந்தி..’
‘சரி.. இப்ப அந்தம்மா எதுத்த வார்டுல எதுக்கு இருக்காங்க?’
‘ஆ அம்மக்கு இப்புடு ஹை ஃபீவர்.. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் சேஸ்தாரு.. நாலு மணிக்கு அவங்களோட மருமக தன் புருஷனோட டீ கொண்டாருவாங்க’
‘ என்ன! அந்த பொண்ணுக்கு கல்யாணமாயிடுச்சா?’
‘மரி! பையன் செத்த கொஞ்ச நாள்லயே தேனி பக்கத்துலர்ந்து நல்ல பையனா பாத்து அந்தம்மாவே கல்யாணம் செஞ்சி வச்சிருச்சு. அவனுக்கும் திருச்சியில தான் வேலை’
‘தேனியா? பையன் தேவரா.. தெலுங்கா?’
‘அதி மனக்கு எந்துக்கு இப்புடு? டீ சாப்டலாமா ஶ்ரீதர்?..இப்ப அதே வீட்ல நாலு பேரும் இருக்காங்கல்ல!’
‘நாலு பேரா?’
‘ஆமா.. பேரன் பொறந்துட்டான்ல! மொகுடு பென்லாம் பாக உண்ணாரு. மன செய்லோ ஒக்கட்டி லேது ஶ்ரீதர்.. தேவுடு தா சேஸ்தாடு காதா! ’
கதையை நீட்டி சொன்ன பார்த்தசாரதி பாவாவுக்கு நன்றி..
சட்டென வரைந்த பத்து நிமிட ஓவியத்துடன்...
(சீதாபதி ஶ்ரீதர்)

Sunday, April 22, 2018

கலவச்சட்டி.....-2014 மீள்

2 நாட்களுக்கு முன் திருச்சியில் எங்கள் சுந்தர் நகர் வீட்டிற்கு போயிருந்தேன். முன்பு அம்மா அப்பா மாடி போர்ஷனில் குடியிருந்தார்கள். இருவரும் தற்போது இல்லை. வீட்டை விற்க மனமில்லை. வாடகைக்குக்கொடுத்துவிட்டோம்.
சில மராமத்து வேலைகள் இருந்ததால் ஒரு மேஸ்திரி மற்றும் சித்தாள் வைத்து வேலைகளை காலை 9 மணிக்கு ஆரம்பித்தேன். பதினொன்னரை மணியளவில் அவர்களுக்கு வடையும் டீயும் (இன்னுமா இந்த சிஸ்டம்!) வாங்கிக்கொடுத்து விட்டு மெல்ல வீட்டைச்சுற்றி வந்தேன்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் அம்பாசடர் கார் நிறுத்த இடம் போறாததால் எங்கள் பகுதியிலிருந்து ஓரடியை தங்கள் நிலத்துடன் சேர்த்து முள்வேலிக்கம்பி தடுப்பு சுவர் எடுத்ததை நான் 20 வருடங்களுக்கு முன் கண்டித்தபோது அப்பா "இருக்கட்டும்டா..பின்னால பாத்துக்கலாம்..அவங்க ஏமாத்தமாட்டாங்க. மஞ்ச்சி வாளு!" என சொன்னார். இப்போதும் அந்த வேலிக்கம்பி அப்படியே இருந்தது. ஆனால் அம்பாசடர் இருந்த இடத்தில் ஃபோர்டு ஃபிகா. தற்போது இரண்டடி இடம் மிச்சமாக அவர்கள் பக்கம்.
ஆண்டு விடுமுறைக்கு நாங்கள் வரும்போது அம்மா ஒரு ஆளை வைத்து இளநீர், கொய்யா, சீதாப்பழம், மாங்காய் எல்லாம் எங்க வீட்டு மரங்களிலிருந்து பறித்து பேரன்களுக்கு கொடுப்பது நினைவுக்கு வந்தது. தற்போது தென்னைமரம் ஒன்றை காணோம். ஒருமுறை தங்கள் அம்பாசடர் கார் மேல் தென்னை ஓலை விழுந்ததால் மரத்தை பக்கத்து வீட்டுக்காரர்களே தரையோடு தரையாக வெட்டியிருந்தார்கள். அதற்கு முன் பதிவுத்தபாலில் இன்ன திகதிக்கு மரத்தை வெட்டப்போவதாக அறிவித்து சட்டபூர்வமாக கடிதம் வேறு. மற்ற இரு தென்னைமரங்களை பூச்சியரித்து பாதி இளநீரைக்காணோம். மாங்காய் மற்றும் கொய்யா மரங்களும் மொட்டையாக இருந்தன. அம்மா இருந்தவரை 6 மாதங்களுக்கொருமுறை பூச்சிக்கொல்லி மருந்தடித்து உரம் போட்டு வளர்த்த மரங்கள் அம்மாவோடு போய்ச்சேர்ந்துவிட்டன.
"சார்! பின்பக்க காம்பவுன்டு சுவத்த கொத்தி வுட்டு பூசனும். மேல ஏற ஏணி வேனும்" என மேஸ்திரி கேட்க வீட்டின் பக்கவாட்டில் படிக்கட்டின் கீழே முன்பு அப்பா சாய்த்து வைத்திருந்த ஏணியை தேடினேன். முற்றிலும் உடைந்திருத்தது. "பரவால்ல சார்..கடைல எடுத்தரலாம். நா சாப்ட்டு வாங்கியாந்துர்றேன். நாள் வாடக 50 ரூபா தானென மேஸ்திரி கடைக்கு ஓடினார். முன்பு மாதிரி பித்தளை தூக்கில் மதிய உணவெல்லாம் அவர்கள் கொண்டுவருவதில்லை. காசு வாங்கிக்கொண்டு குஸ்கா சாப்பிட ஹோட்டலுக்கு ஓடினார்.
வாசலில் மேல் போர்ஷனுக்குறிய எலெக்ட்ரிக் மீட்டரில் வேப்பங்குச்சி தொட்டு சிவப்புக்கலர் பெயின்ட்டில் எழுதிய ‘சீதாபதி’ என்ற அப்பாவின் பெயர் அப்படியே இருந்தது. எப்போதும்போல் மீட்டர் பெட்டியின் உள்ளேயிருந்து ஒரு பல்லி எட்டிப்பார்த்தது. அருகே முன்பு தொங்கிக்கொண்டிருந்த கொக்கி காணாமல் போயிருந்தது. அதில் மின்கட்டண பில்கள், வீட்டு வரி ரசீது, கேபிள் டீவி கார்டு அனைத்தையும் குத்தி மாட்டி வைத்திருப்போம். வாசல் கேட்டில் பால் பாக்கெட் மஞ்சப்பை மாட்டும் கொக்கியையும் காணோம்.
கேட்டுக்கு பக்கத்தில் தரையில் காவேரி தண்ணீர் மீட்டர் பழுதடைந்திருந்தது. முன்பு அப்பா அந்த இடத்தில் சிறியதாக தொட்டி ஒன்றை கட்டி அதனுள் குழாய் வைத்திருப்பார். அதன் வாயில் வடிகட்ட துணி (வேட்டியில் கிழித்த). நல்ல தண்ணீர் வரும் அந்த இரண்டு மணி நேரம் குடத்தில் பிடித்து மாடியில் தேக்ஸா, தவலை, அண்டாவிலிருந்து சிறிய போவனி வரை ரொப்புவது அவர் வேலை. தற்போது அதற்கெல்லாம் அவசியமில்லை. போன் செய்து விட்டால் பல்சர் பைக்கில் கொண்டுவந்து போடுகிறார்களாம்.
அந்த தொட்டி மூடப்பட்டு அங்கே தற்போது மோட்டர் பைக்.. முன்பு அப்பாவின் ராலே சைக்கிள் இருக்கும். நினைவுகள் மெல்ல பின் செல்ல...சைக்கிள் சீட்டின் அடியில் சொறுகப்பட்டிருக்கும் துணி, அந்த துணியை சக்கரங்களின் இடையே கொடுத்து ஸ்போக்ஸ் மற்றும் ரிம்மை சரட் சரட்டென்று இழுத்து துடைப்பது, டைனமோவை அழுத்தி சக்கரத்தைச்சுற்ற விட்டு முன்புறம் லைட் எறிகிறதாவென அவர் சரிபார்ப்பது, டைனமோ மோட்டரால் டயர் தேயாமலிருக்க அதற்கும் ஒரு சிறிய ரப்பர் கவர், முன்புறம் டைனமோ லைட்டைச்சுற்றி கட்டப்பட்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் மஃப்ளர் மாதிரியான மஞ்சள் துணி, சைக்கிள் செயின் கவர் இடுக்கில் உள்ள ஓட்டையில் எண்ணெய் விட ஒரு சிறிய ஆயில்கேன், பின் காரியரில் சுற்றப்பட்ட சைக்கிள் டியூப்(அரிசி மூட்டை, பழைய பேப்பர் கட்ட), "சார் பஞ்சர் இல்ல.. வால்டியூப் தான் போய்ருச்சு" போன்ற வசனங்கள்...
"சார் எக்ஸ்ட்ரா அரை மூட்ட சிமென்ட் வந்துருச்சு" ..மேஸ்திரி கூப்பிட, சட்டென்று விழித்து வாசலுக்கு விரைந்தேன். மோட்டர் பொறுத்தப்பட்ட பெடல் வண்டியிலிருந்து சிமெண்ட் மூட்டை இறங்கியது. முன்பு மாட்டு வண்டியில் வந்திறங்கும். சிமென்ட் இறக்கி முடியும்வரை மாட்டின் மூக்கனாங்கயிறு சக்கரத்தில் கட்டப்பட்டிருக்கும்.
லூசில் நாலைந்து கிலோ சிமென்ட் மற்றும் மணல் 4 சட்டி அப்பா வாங்கி கொடுத்தால் கலவச்சட்டி கொண்டு வரும் மேஸ்திரி வாசலில் பெயர்ந்திருக்கும் தரையை அழகாக பூசி மட்டப்பலகையில் தேய்த்து சரி செய்யும் அந்த நாள் இனி வருமா!
ஒருவழியாக மாலை 6 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வெளியே இருந்தபடியே குடித்தனக்காரர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன். வீட்டின் உள்ளே போக மனமில்லை. போயிருந்தால் நிச்சயம் கீழ் கண்டவை நினைவுக்கு வந்திருக்கும்:
1. அப்பாவின் பழைய மர்ஃபி ரேடியோ, அதன் பின்புறமிருந்து வயர் எடுத்து ஒரு கண்ணாடி கிளாசில் எர்த்திங் விட்டிருப்பார், ரேடியோவின் தலையில் இரண்டாக மடிக்கப்பட்ட காசி துண்டு.
2. படுத்தவாறு நேஷனல் பானசானிக் டேப் ரெகார்டர். நீட்டிய கால்கள் போல 4 பட்டன்கள்.
3. TDK காஸெட்டுகள்.. பக்கத்தில் அரை பென்சில் (காஸெட் சுற்ற)
4. கேமலின் இங்க் பாட்டில்(blue black) மற்றும் இங்க் ஃபில்லர்.
5. இன்லாண்டு லெட்டர், போஸ்ட் கார்டு.
6. விராலிமலைக்கு பணம் அனுப்ப மணியார்டர் பாரம்.
7. அவசரத்திற்கு தந்தி பாரம்
8. கோபால் மற்றும் பயோரியா பல்
பொடி.
9. ஃபோர்ஹான்ஸ் டூத் பேஸ்ட் (எங்களுக்கு)
10. புலிமார்க் சீயக்காய் மற்றும் அறப்புத்தூள்
11. பொன்வண்டு சோப்பு.
12. மரச்சீப்பு (ஈறு, பேனெடுக்க)
(வேறு ஏதும் நினைவுக்கு வருகிறதா?)
என்னதான் பழமைவாதியாக இருந்தாலும் அப்பாவிற்கு புதிய வாட்சுகள், ஸ்டேட் எக்ஸ்பிரஸ் பெல்ட், பஹ்ரைனில் வாங்கிய சின்ன டிரான்சிஸ்டர், தம்பி Vijay Raghavan ஓமானிலிருந்து வாங்கி வந்த டி.வி.டி ப்ளேயர் (ரஜினி படம் பார்க்க) எல்லாம் பிடிக்கும்.
iPhone பிறப்பதற்கு முன் அப்பா இறந்துவிட்டார். இல்லையென்றால் இன்று காலை திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் பஸ் ஏறியவுடன் ஆரம்பித்து காரைக்குடி இறங்கும்போது இந்தப்பதிவை iPhone இல் தட்டச்சு செய்து முடித்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்...
சட்டென வரைந்த பென்சில் ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

வாடிகன்-2014 மீள்

...
நேற்று மதியம் சுமார் 3 மணி நேரம் வாடிகன் அரண்மனையை எங்களுக்கு சுற்றிக்காண்பித்த அந்த கைடுக்கு வயது 70க்கு மேல் இருக்கும். அமெரிக்கர். சவரப்பச்சை முகம். நம்மை ஊடுருவி பார்க்கும் விழிகள். ஏதோ திருச்சி அல்லிமால் தெரு முனையில் வேட்டியை மடித்துக்கொண்டு கதைத்துக்க்கொண்டிருப்பது போல் வாஞ்சையுடன் பேசிக்கொண்டிருந்தார். ...நாங்கள் மொத்தம் 12 பேர் அவரது குழுவில்.
வெளியே நல்ல குளிர். ஐரோப்பா போவதற்காக வாங்கிய ஸ்கெட்சர் ஷூ, லைஃப்ஸ்டைலில் வாங்கிய தெர்மல்வேர் என எல்லோரும் எக்ஸ்ட்ரா ஒரிரண்டு கிலோ கூடுதல் எடையுடன் இருந்தாலும் நம்மூர் மங்கி குல்லா மஃப்ளருக்கும் ஈடாகுமா!
ரோம் நகரம் மற்றும் ஒருங்கிணைந்த இத்தாலி உருவான கதை, தனி நாடாவதற்கு முன் வாடிகனில் போப்பாண்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடியது, பிறகு பிரம்மாண்டமான தேவாலயத்தை கட்டியது போன்ற பழங்கதைகளை அவர் எடுத்து விட, ஒவ்வொருவராக கொட்டாவி விட ஆரம்பித்தோம். ஆனால் சிலர் மட்டும் (என்னைத்தவிர) படு சீரியஸாக அவர் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தார்கள். காரணம், அவருக்கு பின்னால் அந்தப்பக்கம் கூந்தலை அள்ளி முடித்து, முழு மஞ்சள் முதுகையும் காட்டியபடி நின்று கொண்டிருந்த அரை நிக்கர் சீனப்பெண். ‘அதை நீயும் தானே பார்த்தாய்!’ என கேட்பவர்கள் அடுத்த பாரா போய்விடுவது உசிதம்.
ஸீஸர் மற்றும் அகஸ்டஸ் பற்றிய விபரங்கள், மைக்கல் ஆஞ்சலோ முதன்முதலில் ரோமுக்கு வந்தது, ஆரம்பத்தில் அவரை யாருக்கும் தெரியாதென்பது, அவர் தனியாக தீவு ஒன்றில் சில வருடங்கள் தங்கியிருந்து அரண்மனையின் வரைப்படத்துக்கு (plan) ஏற்றவாறு ஓவியங்கள் வரைய அளவுகள் மற்றும் themes தயார் செய்தது, பிறகு அரண்மனையில் சீடர்கள் தண்ணீரில் வர்ணங்களை கலந்து 20 மீட்டர் உயரத்தில் இருக்கும் மைக்கலுக்கு கயிறு மூலம் அனுப்ப அவர் வானம் பார்த்தவாறு படுத்துக்கொண்டே உட்கூரை சுவற்றில் ஏசு கிருஸ்து, மோசஸ், கன்னி மரியாள், கடைசி விருந்து போன்ற உலகப்புகழ் பெற்ற ஓவியங்களை நான்கு வருடங்களில் வரைந்த விபரங்கள்.. கேட்க சுவாரசியமாக இருந்தாலும் கைடு நீட்டிக் கொண்டு போனார்.
மைக்கலாஞ்சலோ சிற்பம், ஓவியம், கவிதை என பன்முகத்திறன் கொண்டவராம். திருமணமே செய்து கொள்ளவில்லையாம். (இருக்காதா பின்னே!) ...கைடு மூச்சு விடாமல் பேச, நாங்கள் அடிக்கடி மணிக்கடிகாரத்தை பார்ப்பதை அவர் கவனிக்கத்தவறவில்லை. ஒரு உ.பி. பைய்யா கைடின் கடிகாரத்தையே உற்று பார்த்து தொலைத்தான். கைடின் காது லேசாக சிவக்க, அவரை திருப்தி படுத்த அவரைப்பார்த்து கூடுதலாக தலையை அசைத்தது என் குற்றம்! அடுத்த அரை மணி நேரம் என்னையே பார்த்துக் கொண்டு அவர் விளக்க, பல்லை கடித்துக் கொண்டு கொட்டாவியை அடக்க முயன்றேன்.
மனுஷனுக்கு கை, கால் கொடைச்சலே வராது என நினைக்கிறேன். எங்களுக்குத்தான் அப்பப்ப பசி, தண்ணித்தாகம், இயற்கையின் அழைப்பு எல்லாம் வரிசையாக....
ஒரு மணி நேரத்திற்கு மேல் விலாவாரியாக அவர் விளக்கியபோது நமக்கு விலா எலும்பு வலித்தது. எவ்வளவு நேரம் தான் மோட்டு வளைகளையும் விட்டத்தையும் பார்ப்பது?
தோளுக்கு மேல் வளர்ந்த என் சின்னவன் மெல்ல என் தோளில் சாய்ந்து கொண்டு 'does he not have any break in his job?' என கேட்ட போது அவருக்கு ஏதோ அசரீரி சொல்லி விட்டது மாதிரி புரிந்து விட்டது போலும். ஆசாமி படு சூட்டிகை. தொண்டையை கனைத்துக்கொண்டு ‘at the end of my briefing I will be asking questions to some one I choose from you guys’ என ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அது வரை தலையை அசைத்துக்கொண்டிருந்த மனைவி Usharani Sridhar கலவரத்துடன் என்னை பார்த்து "ஏமி போடுஸ்தாமா" என கேட்க, கூட வந்திருந்த மற்றொரு இங்கிலாந்துக்காரர் "oh gaad!" என சலித்துக்கொண்டார்.
அடுத்து அவர் 'next one hour I will be briefing you, the functioning of pope's office and his powers' என்றதும் நாங்கள் கீழே விழாமலிருக்க ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டோம். அரை நிக்கர் சீனாக்காரி படியேறி எப்போதோ அடுத்த அரண்மனை போய்விட்டிருந்தாள். வாடிகனை எவன் கண்டுபிடிச்சான்! என சிலர் சலித்துக்கொண்டனர்.
கைடு பக்கமே திரும்பாமல், அந்தப்பக்கம் ஏதோ நிர்வாண சிற்பத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெங்காலிக்காரரைப் பார்த்து ‘are you with me?’ என கோபமாக நம்ம கைடு அதட்ட, பெங்காலிக்காரர் அதிர்ந்து, நறநறவென பல்லைக்கடித்து அம்ரீஷ் பூரி மாதிரி ‘yes! I am’ என பதிலுக்கு முறைக்க எங்களுக்கு இன்னும் சுவாரசியம் கூடியது. ச்சே! அவர்கள் சண்டை ஒன்றும் போட்டுக்கொள்ளவில்லை.
அந்த கைடை குறை சொல்வதற்கில்லை. மிக அழகாக விளக்கி அவர் தன் கடமையை செய்து கொண்டிருக்க, அது வாடிகனோ வாடிப்பட்டியோ, மதியம் 4 மணிக்கு மேல் ஆனதால் எல்லோருக்கும் டீ தேவைப்பட்டது. பாவிகள்! எங்கேயும் ஜனங்கள் உட்கார முடியாதபடி நாற்காலியோ, திண்ணையோ இல்லை. கூட்டம் நகர வேண்டுமல்லவா!
கடைசியாக பிரம்மாண்டமான Sistine chapel எனப்படும் சிற்றாலயம் வந்தபோது பிரமிப்படைந்தோம். எங்கு பார்த்தாலும் ஓவியங்களும் சிற்பங்களும்..
அடுத்து ‘இந்த வெள்ளைக் கோட்டிற்கு அந்த பக்கம் வாடிகன், இந்த பக்கம் ரோம்’ போன்ற சுவாரசியமான சமாசாரங்கள்.
உலகத்தில் உள்ள எல்லா கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவர் போப் என்றும், அவர் தங்கும் இல்லம், வாடிகனில் அலுவலகங்கள், பரப்பளவில் ஶ்ரீரங்கத்தை விட சிறியதான(என் ஊகத்தில்)அந்நாட்டிற்கு தனி நாணயம், பாஸ்போர்ட் போன்ற விபரங்கள், அங்கே பணி புரியும் அலுவலர்கள் எல்லோரையும் காண்பித்தார் கைடு.
சிப்பந்தி ஒருவர் மிகவும் பொறுப்புடன் போப் மற்றும் அவரது glergymen, கார்டினல்களுக்கு சிகப்பு வண்ணத்தில் புதிய உடைகள் தைத்து அழகாக கண்ணாடி அல்மேராவில் மாட்டி வைத்துக்கொண்டிருந்தார். அங்கங்கே காவலுக்கு நிற்கும் அத்தனை guardsம் உம்மனாம் மூஞ்சிகள். எல்லோரும் சுவிஸ் நாட்டவர்களாம். நமக்கு வத்தல் வடாம் மாதிரி சுவிஸ் நாட்டவர்களுக்கு சாக்லேட் தான் மதியம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள..போன்ற தகவல்களை கைடு அளித்து பசியை மேலும் தூண்டினார்.
அரண்மனையில் பணிபுரியும் சிலர் க்ரீஸ் மற்றும் எகிப்து நாட்டவர்களாம்.(முன்பு கிரீஸ், எகிப்து நாடுகள் இத்தாலியின் காலனி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்ததால்). முந்தைய போப் பெனடிட்டோ ஜெர்மானியர் என்பதால் வாடிகனுக்கு நிறைய ஜெர்மானியர்களை கொண்டு வந்தார் என்பது உபரித்தகவல். நம் அமெரிக்க கைடு கொஞ்சம் விஷமப்பேர்வழி. தாழ்ந்த குரலில் அரண்மனையில் நடக்கும் அரசியலையும் குறும்புத்தனத்துடன் நமக்கு கொஞ்சம் விளக்கினார்.(அட! அப்போது மட்டும் எங்களுக்கு களைப்பே தெரியவில்லையே!)
அது சரி! அங்கு கர்ம சிரத்தையுடன் போப் மற்றும் கார்டினல்களுக்கு உடைகள் தைக்கும் அந்த அன்பருக்காகத்தான் இந்த பதிவையே எழுதுகிறேன். அவர் ஒர் இந்தியர் என கைடு சொன்னபோது எங்களுக்கு பெருமிதம் தாங்கவில்லை. உலகத்தின் மிகப்பெரிய தேவாலயம் கொண்ட வாடிகனில் ஒரு இந்தியரா என எங்களுக்கு புல்லரித்தது. அது சரி! அவர் எந்த மாநிலத்தவர்?
புள்ளி..மலையாளியானு..!
(சட்டென வரைந்த பென்சில் ஓவியத்துடன்..)
சீதாபதி ஶ்ரீதர்
2014 மீள்

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்...


க்வீன்ஸ் நெக்லெஸ் எனப்படும் பம்பாய் மரைன் டிரைவ் பகுதி முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வசித்த இடம். சர்ச்கேட் ஸ்டேஷனிலிருந்து பொடி நடையாய் அந்த பகுதி வந்து பெரிய அடுக்குமாடி கட்டிடம் முன் நின்றேன்.
பழங்கால ஒட்டிஸ் லிஃப்ட்டின் இரும்புக்கதவுகளை கிர்ரீச்சென இழுத்து மூடிய மராட்டிய லிஃப்ட் கிழவர் என்னை பார்க்க நான் 'தீஸ்ரா மாலா' என்றேன்.
மூன்றாவது தளத்தின் ஒரு ஃப்ளாட்டில் வயதான பெண்மணியொருவர் 'ஆவ் ஷிரிதர்பாய்..' என வரவேற்றார். அவர் திருமதி. ஸ்மிதாபென் மெர்ச்சன்ட்...அவரது கண்ணசைவை ஏற்று மராட்டிய பாயி (வேலைக்காரி) என் முன் குளிர்ந்த நீரை வைத்தார்.
"ஷிரிதர்பாய்! உன்னைப்பற்றி ஜதின்பாய் நிறைய சொன்னார்.."என அவர் பேச ஆரம்பிக்க என் கவனம் எதிரே இருந்த தேநீர் மற்றும் பிஸ்கோத்தை..
90 களில் நாரிமன் பாய்ன்ட்டில் நிதி மற்றும் பங்குகள் சார்ந்த எங்கள் குழுமத்தின் ஆடிட்டர் ஜதின் ஷராஃப் தனக்கு தெரிந்த பணக்கார குஜராத்தி குடும்பத்தாரின் பங்குகள் சம்மந்தப்பட்ட கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்ள ஒரு இளம் CA தேவையென்றும், 'பார்ட் டைம் ஜாப்..நல்ல சம்பளம்' என்றும் சொல்லி என்னை இங்கே அனுப்பினார். 2000 சதுரடிக்கு மேலிருக்கும் அந்த ஃப்ளாட்டில் பழங்கால விலை உயர்ந்த சோஃபாக்கள். செந்தில் டவுசர் அணிந்த 3 வேலைக்காரர்கள். சமையலறையில் கடி மற்றும் தால்கிச்சடி வாசனை மூக்கை துளைக்க ‘நல்ல சாப்பாடு கெடைக்கும் போலிருக்கே!’ என நான் யோசித்துக்...
'ச்சாய் டண்டா ஹோஜாய்கா ஷிரிதர்பாய்..!' திடுக்கென திரும்பி எதிரில் நின்ற திருமதி.மெர்ச்சன்ட்டை பார்த்தேன். சுருக்கமில்லாமல் இஸ்திரி போட்ட பண்டரிபாய் வெள்ளை உடை. 65 வயது இருக்கலாம். இடுப்பில் பெரிய சாவிக்கொத்து. சர்க்கரை வியாதி மற்றும் மூட்டு வலி நிச்சயம் அவருக்கு உண்டென சூடம் அணைத்து சத்தியம் செய்வேன்.
ஆடையை ஊதி விலக்கி அருமையான குஜராத்தி மசாலா டீயை உறிஞ்சியபடியே கண்ணை உயர்த்தினேன். பண்டரிபாய் இப்போதைக்கு பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை. கணவர் கட்டாவ் மில்ஸில் நிறைய சம்பாதித்தாராம். இருக்கட்டும்! அந்தக்காலத்தில் குறைந்த விலையில் நல்ல பங்குகளை வாங்கிப் போட்டாராம். போடட்டும்! சில வருடங்களுக்கு முன் பக்கெட்டை உதைத்தாராம். போய்ட்டாரா! அப்பறம்? அவருக்குப்பின் அவரது முதலீட்டை தன் இரு பெண்களுடன் இந்தம்மா பார்த்துக்கொள்கிறாராம். சந்தோஷம்! மொறுமொறுப்பான உப்பு பிஸ்கெட்... வாய் ஓரத்தை துடைத்துக்கொண்டு அசுவாரசியமாக அவர் கதையை நான் கேட்டுக்கொண்டிருக்க, வாசல் கதவு மணியடித்து தபால்காரர் கொண்டுவந்த அன்றைய தபாலில் நிறைய டிவிடென்டு வாரன்ட்டுகள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பங்குகள் வாங்கி விற்கும் டீல் ஸ்லிப்புகள், போனஸ் அறிவிப்புகள், மாதாந்திர வங்கி ஸ்டேட்மெண்டுகள் என எல்லா கோப்புகளையும் மராட்டிய வேலைக்காரி என் முன் மலை போல் குவித்து விட, 'என்னது! இவ்ளோ வேலையா!' என மலைத்து கோப்புகளுக்கு அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தால்...புண்ணியவதி.. ஒரு தட்டில் ஏலக்காய் பொடி தூவிய பளபளக்கும் சிவப்பு வர்ண ஜிலேபி மற்றும் கமகமவென வாசனையுடன் சூடான கச்சோரி..நாக்கில் ஜலம் ஊர 'நாளைக்கே வேலையை ஆரம்பிச்சுடலாங்க' என அறிவித்தேன்.
'மொதல்ல என் மகள்கள் இருவரையும் நீ பார்ப்பது அவசியம்' என அவர் சொல்ல, மறுநாள் அவரது தாட்டியான இரு பெண்கள் முன் நான். பம்பாயின் பெட்டர் ரோடு, அல்டாமவுண்டு ரோடு போன்ற பகுதியில் குடியிருக்கும் மேல்தட்டு வர்க்கத்தினர். பெண்கள் இருவருமே SV ரங்காராவின் தங்கைகள் போல ஆறடி உயரம். பக்கத்தில் தவக்களை மாதிரி நான் அவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருக்க தங்கள் குடும்பத்தின் பங்கு வர்த்தகம் பற்றி விளக்கினார்கள்.
திருமதி.மெர்ச்சன்ட்டுக்கு ஒரே பையன் மற்றும் அந்த இரண்டு பெண்கள். பையன் சிங்கப்பூரில் தொழில். இரண்டு பெண்களுடன் அம்மா பங்கு வர்த்தகம். அடியாத்தி! அம்மா கையெழுத்தை அவர் முன்னால் பெண்களே அசால்ட்டாக போடுகிறார்கள். பங்குசந்தை பற்றிய விபரங்கள் விரல்நுனியில் அவர்கள் வைத்திருந்தாலும் அதன் கணக்கு வழக்குகள், அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது, வருடாந்திர ரிட்டர்ன்கள் போன்ற சமாச்சாரங்கள் எதுவும் தெரியவில்லை. அதனால் தான் நம்ம வண்டி ஓடுகிறது! பார்க்க முரட்டு ஷாஃபி இனாம்தார் மாதிரி அவர்களது கணவர்கள் இருவரும் வழக்கறிஞர்களாம். பணபலம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. தவிர அரசு,வங்கிகள்,போலீசில் செல்வாக்கு.
அதிகம் பேசாமல் சம்பளத்தை அலட்சியமாக ஒத்துக்கொண்டார்கள். 'என்ன இன்னைக்கி சாப்பிட/குடிக்க ஒன்னையும் காணோமே' என கண்கள் மராட்டிய வேலைக்காரியை தேட...மவராசி..ஒரு தட்டில் எண்ணை சொட்டச்சொட்ட மேத்தி தேப்லா , வறுத்த மூங்தால், ஆம்ரஸ்(மாம்பழச்சாறு).. என கொண்டு வந்து வைக்க, 'அம்மா! நீங்க சம்பளமே தராம மூணு வேள சோறு மட்டும் போட்டா போதும்' என சொல்ல வேண்டும் போல் இருந்தது.
ஒருநாள் திருமதி.மெர்ச்சண்ட் என்னிடம் 'ஷிரிதர்பாய்... எங்கள் மகனுக்கு உதவியாக சிங்காப்ப்பூர் (சிங்கப்பூர் அல்ல) அலுவலகத்தைப்பார்த்துக்கொள்ள ஒரு CA தேவைப்படுகிறது. யாராவது இருந்தால் சொல்லேன்!' என கேட்க, நான் சற்று யோசித்து 'நானே போகலாமா' என கேட்டதும் அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. 'ஆஹா.. எங்களுக்கு உன்னைத்தான் சிங்கப்பூர் அனுப்ப ஆசை... நீ ஒப்புக்கொள்வாயா என கொஞ்சம் யோசித்தோம்' என்றனர் பெண்கள்.
அடுத்த சில நாட்களில் சிங்கப்பூரில் இருந்து என் தற்காலிக வேலை பெர்மிட்டுடன் அவரது பையன் யோகேஷ் மெர்ச்சண்ட் வந்தார். கண்களுக்கு கீழே பைகளுடன், கட்டையாக குண்டாக, அறையில் பாதியை அவரே ஆக்கிரமித்திருந்தார். . பம்பாயில் இவர்களது வங்கிகள் சம்மந்தப்பட்ட வேலைகளை பார்த்துக்கொள்ளும் அவரது நண்பன் துஷார்பாயும் கூட இருந்தான். ஒல்லி வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரியிருந்த துஷார்பாயின் பார்வையில் போக்கடாத்தனமே அதிகம் தெரிந்தது. சதா பான்பராக், குட்கா மென்ற பிஜேபி பற்கள்.
இருவரும் அன்று மாலை கொலாபா பகுதியில் ஒரு க்ளப்புக்கு என்னை கூட்டிப்போனார்கள். ரிசப்ஷனில் இருந்த ரிஜிஸ்தரில் யோகேஷ்பாயும், 'பான்பராக்'கும் வேறு பெயர்களை எழுத, நான் மட்டும் அழகாக ‘சீதாபதி ஶ்ரீதர்’ என முட்டை முட்டையாக எழுதியதை பார்த்து விட்டு 'தேக்கோ ஶ்ரீதர்பாய்! அடுத்தமுறை நீ வேற பேர்ல கையெழுத்த போடனும்..தெர்தா?' என காதில் கிசுகிசுக்க, 'ஹாங்! அதெப்படி! நா எதுக்கு வேற பேர்ல கையெழுத்து போடணும்? ' என உச்ச ஸ்தாயியில் கேட்ட என்னை சட்டென கோழியைப்போல அமுக்கி உள்ளே இருட்டுக்குள் இழுத்துக்கொண்டார்கள்.
உள்ளே... சீமைச்சாராய வாடை, புகைமண்டலம், அதிரும் இசை, கண்ணாடி கோப்பைகள் உரசும் க்ளிங் சத்தம். ‘அதிசய உலகம்.. ரகசிய இதயம்’ க்ளப் டான்ஸுக்கேற்ற சூழல். மேற்கத்திய இசைக்கு நம்மையறியாமல் தலை ஆடியது. தொழிலதிபர்கள் மற்றும் பங்குத்தரகர்கள் கலைந்த தலையும் காட்டன் சட்டையுமாய் மது, சிகரெட் சகிதம் தங்கள் வர்த்தகம் பற்றி சம்பாஷித்துக்கொண்டிருந்தனர். அந்த பப்(b)பில் உயரமான ஸ்டூலின் படியில் ஏறி அவர்களுடன் நானும் உட்கார்ந்தபோது தான் கவனித்தேன், யோகேஷ்பாயின் இரண்டு பின்புறங்களின் பாதி மட்டும் தான் ஸ்டூலில் உட்கார முடிந்தது. தவிர க்ளீவேஜுடன் அவன் ஜட்டி வேறு அந்த இருட்டிலும் தெரிந்து தொலைத்தது. 'ப்ளக்'கென பாட்டிலின் கார்க்கை அனாயசமாக அகற்றி மேற்படி வஸ்துவை அவன் சிந்தாதாமல் கோப்பையின் பக்கவாட்டு சுவற்றில் சரித்து, நுரை வர விடாது மட்டத்தை உயர்த்தும் இலகுவான ஸ்டைலை ஆச்சரியமாக பார்த்தேன். தப்புத்தண்டாவைக்கூட தடியன்.. எவ்ளோ திருத்தமா செய்றான்! ஆரஞ்சு பழச்சாறு மட்டும் போதும் என்ற என்னை ‘அடச்சீ’ என எகத்தாளமாக பார்த்து சம்பிரதாயமாக சில கேள்விகள் கேட்டுவிட்டு முந்திரியை அள்ளி வாயில் போட்டு 'சூ கபர் ச்சே' இருவரும் குடியில் மூழ்கி திளைத்தனர்.
“சிங்காப்பூழ் இன்னொம் ஒழு மாசத்துக்குழ்ள போக தயாழா இழ்ழுக்கனு”மாம்!
மறுநாள் ஒரு அரசுடமை வங்கிக்கு வரச்சொன்னார்கள். தாயார், பையன், இரு மகள்கள், பான்பராக் பிஜேபி எல்லோரும் வங்கி மேலாளர் முன் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்ததும் பம்பாயின் பிரபல கணினி கம்பெனி அதிபர் உள்ளே நுழைந்தார். பையன் சி.பூரிலிருந்து ரஷ்யாவிற்கு கனினிகள், அதன் உதிரி பாகங்களான PC board என ஏற்றுமதி செய்ய உதவுவது தரகு நிறுவனமான சகோதரிகளின் இந்தியக்கம்பெனி. வங்கி LC அல்லது refinance மூலம் முழு பணத்தை ரஷ்யர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தரம் குறைந்த அல்லது ஒப்புக்கொண்டதைவிட குறைவாக பொருட்களை ஏற்றுமதி செய்வது, பிரச்னை வந்தால் 'ஷாஃபி இனாம்தார்' கணவர்கள் மூலம் வழக்குகளை சந்திப்பது. பல லட்ச ரூபாய் பரிவர்த்தனைகள். வங்கி மேலாளர், கணினி நிறுவனம், சகோதரனின் சி.பூர் மற்றும் சகோதரிகளின் இந்திய நிறுவனங்கள் எல்லோருமே சுருட்டிய பணத்தின் பெனிஃபிஷியரிகள். இதெல்லாமே இஸ்திரி பண்டரிபாய் ஆசியுடன்..
' டாகுமென்ட்கள் ரெடி செய்யப்போவது யார்?’ என கணினி MD கேட்டு எல்லோரும் என்னை கைகாட்ட, அடக்கமாக SV சுப்பையா மாதிரி நான் தானுங்க என கழுத்தை முன்னே நீட்டிய என்னை ‘இவனா?’ என விஷ ஜந்துவை பார்ப்பதுபோல் அவர் பார்க்க, கழுத்தை பின்னே இழுத்துக்கொண்டேன். அடுத்து வங்கி மேலாளர் காட்டிய தஸ்தாவேஜுக்களில் சகோதரிகள் கிடுகிடுவென கையொப்பமிட, கணினி MD டையை தளர்த்தி கையை நீட்ட, வங்கி மேலாளர் பாக்கெட்டில் கைகளை விட்டு பேண்ட்டை ஜிகுஜிகுவென மேலே இழுத்துக்கொண்டு அவர் கையை பிடித்து குலுக்கினார்.
பயம் லேசாக பற்றிக்கொள்ள, மறுநாள் பான்பராக் ஆசாமி துஷார்பாயை தனியே தள்ளிக்கொண்டு போய் மெதுவாக கேட்டேன் 'என்னடா நடக்குது? இதெல்லாம் என்னா யாவாரம்ப்பா?' என.
துஷார்பாய் கொஞ்சம் உஷார்பாய். முதலில் ஏதோ பூசி மெழிகினான். அப்புறம் 'அரே ஷிரிதர்பாய்! சப் காலா தந்தா ஹை.' என நாசூக்காக சொல்லிவிட்டு குட்கா பொட்டலத்தை கிழித்தான். 'பின்னே எதுக்குடா அவங்கூட வெத்திலை போட்டுக்கிட்டு சுத்தறே?' என கேட்ட கேள்விக்கு அந்தப்பக்கம் திரும்பி பொளிச்சென எச்சிலைத்துப்பிவிட்டு, அதனால் தான் வேலையை விடப்போவதாக சொன்னான்.
எனக்கு பயம் அடிவயிற்றில் இறங்க உடனே கழிவறை போகவேண்டும் போலிருந்தது. சாதாரணமாக திருச்சி NSB ரோட்டில் எதிரே போலீஸ்காரர் வந்தாலே ரோட்டை க்ராஸ் செய்யும் ஆசாமி நான். அடுத்து என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்த ஜதின்பாய்க்கு போன் செய்தேன். 'உன்னை பங்கு வர்த்தக வேலைக்கு part time மட்டும் தானே போகச்சொன்னேன்? ஏன் சி.பூர் வேலையை ஒப்புக்கொண்டாய்? அவர்கள்மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன' என அவர் சொன்னபோது எனக்கு தலையைச்சுற்றியது.
ஏதோ பகுதி நேர வருமானம் மற்றும் நாக்குக்கு பிடித்த குஜராத்தி தின்பண்டங்கள் என ஆரம்பித்த நம் வேலை ஜெயிலில் முடிவதா? நல்ல வேளை ..எங்கோ பெரிய ப்ரச்னையில் மாட்டிக்கொள்ள இருந்தேன். இப்போது என்ன செய்வது?
இவ்வளவு பயம் தேவையா என நண்பர்கள் கேட்டார்கள். 'ஶ்ரீதரா... நீ சி.பூரில் தானே இருக்கப்போகிறாய்... இந்தியாவில் உனக்கு பிரச்னை எதுவும் வராது.. பேசாமல் அந்த வேலையில் சேர்ந்துவிடு' என அட்வைஸ்.
அதிகம் குழம்பிக்கொள்ளாமல் சட்டென முடிவு செய்தேன். பம்பாயிலேயே தப்புத்தண்டா பண்ணாமல் நல்ல வேலையில் இருக்கும்போது பாழாய்ப்போன பார்ட் டைம் மற்றும் சி.பூர் வேலை தேவையா? இந்தியா வரும்போதெல்லாம் வேறு பெயர்களில் கையெழுத்திட வேண்டுமா? என்றாவது மாட்டிக்கொண்டால்?
கைதி உடையில் 'என் அண்ணன்' MGR ஜெயிலில் கல்லுடைத்துப்பாடும் 'கடவுள் ஏன் கல்லானார்.. மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே' பாட்டு நினைவுக்கு வந்தது. எம்ஜியார் வெளிய வந்துடுவாரு.. நாம வருவமா? 'நஹீஈஈ...' என அலறியடித்து ஜிதேந்திரா எழுந்து உட்காரும் இந்தி கெட்டகனவு எனக்கும் வந்தது.
அடுத்த சில நாட்களுக்கு திருமதி.மெர்ச்சன்ட் என் ஆபிசுக்கு செய்யும் எல்லா போன்களையும் தவிர்த்தேன். ஒரு மாதம் கழித்து சி.பூர் தடியன் ஊருக்குப்போனதும், தாயார் மற்றும் சகோதரிகளை நேரில் பார்த்தேன். 'கல்யாணம் முடிவு செய்து விட்டதாலும், என் ஜாதகத்தில் நான் வேலை செய்யும் கம்பெனிக்கு இப்போதைக்கு என்னால் நேரம் சரியில்லை' என ஏதோ ஒரு பொய்யை அவிழ்த்து விட, அவர்களும் பயந்து போய் 'அப்ப சி.பூர் வேலை மட்டுமல்ல, பார்ட் டைம் வேலைக்கும் வரவேண்டாம்' என சொன்ன கையோடு பெரிய வட்டமான தட்டில் குஜராத்தி தாலி பரிமாற, மசாலா லஸ்ஸியை கடைசி சொட்டு விழும் வரை வாயில் கவிழ்த்து விட்டு கிளம்பினேன்.
அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஜில்லென காற்று முகத்தில் வீச, பரவசம்.. நீண்ட மூச்சை இழுத்து விட்டேன். தூரத்தில் மராட்டிய கிழவர் க்றீச்சென இழுத்து மூடும் லிஃப்ட் சத்தம். பம்பாய் முன்னை விட அழகாகத்தெரிந்தது. சர்ச்கேட் ஸ்டேஷனில் ஒரு சாய் வாங்கி மெதுவாக ருசித்துக்குடித்தேன். மனசு லேசானது. அப்பாடா... இனி வேறு பெயர்களில் கையெழுத்து போட வேண்டியதில்லை. உள்ளூரில் தைரியமாக இனி நம் பெயரிலேயே கையெழுத்து போடலாம்!.
ரயில் சீசன் டிக்கெட் பத்திரமாக இருக்கிறதாவென பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து பார்த்தபோது அதில் 'சீதாபதி ஶ்ரீதர்' என்ற பெயரே அழகாக இருந்தது.
கோட்டோவியத்துடன்,
சீதாபதி ஶ்ரீதர்

எது உன்னுடையதோ..2014 மீள்

அந்த பதிவாளர் அலுவலகம் திருச்சி நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முன்கூட்டியே போனில் சொல்லி வைத்திருந்ததால் கம்பெனி பிரதிநிதி (க.பி) என்னையும் மனைவி Usharani Sridhar ஐயும் காலை எங்கள் வீட்டிலிருந்து தன் இன்டிகா காரில் ஏற்றிக்கொண்டார்.
நிலம் தொடர்பான பதிவு செய்ய நாங்கள் அங்கு சென்றதும் பத்திரம் எழுதும் கடை முன் கார் நிற்க, க.பி மட்டும் உள்ளே ஓடினார். "ஒன்னும் பெரிய வேலை இல்ல சார். அக்ரிமென்ட் கம்ப்யூட்டர்ல ரெடியா இருக்கு. ஆயிர்ருவாய்க்கு பத்திரத்தாள் வாங்கி அதுல ப்ரின்ட் எடுக்கனும்" என சொல்லி ஓடிய க.பி.க்கு சுமார் 25 வயது தான் இருக்கும். மாதத்தில் முக்காவாசி நாட்கள் தமிழ்நாட்டின் பல பாகங்களுக்கு வாடிக்கையாளர்களை கூட்டிச்சென்று அவர்கள் கம்பெனி மூலம் வாங்கிய நிலத்தை அந்தந்த மாவட்ட/ஊர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுப்பது அவர் வேலை. அவரே 'செல்லர்' மற்றும் ‘கம்பெனி இயக்குநர்’ என கையொப்பமிடுவார்.
பதிவு செய்ய முன்கூட்டியே எல்லா செலவுகளுக்கும் சேர்த்து கனிசமான தொகையை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்கள். நமக்கு அதிகம் வேலையில்லை. இளநீர் சாப்பிட்டுக்கொண்டே (பைசா அவர் குடுத்துட்டார்) அவர்கள் கை காட்டுமிடத்தில் கையொப்பமிடவேண்டும். எல்லாம் முடிந்தபின் திருச்சி பஸ் ஸ்டாண்டில் பெரிய ஓட்டல் ஒன்றில் மதிய சாப்பாடு வாங்கிக்கொடுத்து வாழைப்பழம் பீடாவுடன் நம்மை வீட்டில் ட்ராப் செய்துவிடுவார்கள்.
"பதிவு செஞ்சவுடன ஒரு வில்லங்கம் எடுக்கனுமே" என தயங்கி கேட்கும் நம்மிடம் "இன்னும் 10 நாள்ல சிஸ்டத்துல ஏத்திடுவாங்க.. அப்பறமா நீங்க ஆன்லைன்ல போட்டு வில்லங்கம் எடுத்துறலாம்" என டக்கென பதில் வரும்.
"ஏம்ம்பா..நெலத்தை சுத்தி காம்பவுன்டு செவுரெடுத்து இரும்பு கேட் போட்டு கேட்டான்ட 'இந்த நிலம் இன்னாருக்கு சொந்தம்..மீறி உள்ளே வருபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'னு போர்டு வைக்கனுமே என வெள்ளந்தியாக கேட்ட நம்மிடம் அவர் "சார் நான் ரிஜிஸ்ட்ரேஷன் டீம். அதெல்லாம் மார்க்கெட்டிங் டீம் பாத்துப்பாங்க" என சொல்லிவிட்டு '10 கிலோமீட்டருக்கு சுத்திலும் வெறும் நெலந்தான் இருக்கு.. கல்லு நட்டதே பெருசு.. இவுருக்கு காம்பவுன்டு செவுராம்" என அவர் முனுமுனுத்தது நம் காதில் லேசாக விழுந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அந்த பக்கம் திரும்பிக்கொண்டோம் .
பக்கத்தில் இன்னொரு இளைஞர். அவரும் கஸ்டமராம். கத்தார் பார்ட்டி. சம்பிரதாயத்துக்கு அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தேன் தமிழில். வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே பதில் சொன்ன அவர் பிசியாக தினமணி படித்துக்கொண்டிருந்தார். இதற்குள் பத்திரங்கள் ரெடி செய்து நம்மிடம் வந்தார்கள். எல்லா பக்கங்களிலும் கருப்பு மையில் கையொப்பமாம். போட்டோம்.
"சார்.. நீங்க கத்தார் பார்ட்டிக்கு சாட்சி கையெழுத்து போடுங்க.. அவுரு உங்களுக்கு சாட்சி கையெழுத்து போடுவார்" என இவர் சொன்னதும் எனக்கு சுள்ளென கோபம் வந்தது. "அதெப்பிடிப்பா? அவர இப்பத்தான் நா பாக்கறேன். எந்த நெலத்த எப்பிடி வாங்கறார்னு எனக்குத்தெரியாம நா எப்பிடி சாட்சிக்கையெழுத்த அவருக்கு போடமுடியும்" என எகிற, அவர் உடனே கூலாக "பரவால்ல சார்.. நம்ம டிரைவர் போடுவார்" என சொல்லவும் தயாராக காத்திருந்த டிரைவர் கிடுகிடுவென சாட்சி கையெழுத்து போட்டார்.
" என்னப்பா! மணி ஒன்ற.. எப்ப முடியும்?" பொறுமையிழந்து கேட்ட என்னிடம் அவர் "மொத்த டாக்குமென்ட்ட ரெடி பண்ணி மேடம் டேபிள்ள வெக்கனும். அவங்க வந்து சுறுக்க ரெண்டு , ரெண்ட்ரைக்குள்ளாற முடிச்சுடுவாங்க" என்றார். பதிவாளர் ஒரு பெண்ணாம்.
இரண்டு மணிக்கு மேடம் வந்ததும் அவர் மேசையைச்சுற்றி யார் யாரோ நின்று கொள்ள எங்களை வெளியே நிற்க வைத்தார்கள். துண்டு பேப்பர்கள் சொறுகி பல ரிஜிஸ்தர்களை அவர் முன் வைக்க அவர் ஏதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.
'இந்த அலுவலகம் கண்காணிப்பு கேமிராவுக்குட்படுத்தப்பட்டுள்ளது' என்ற போர்டை ஆச்சர்யத்துடன் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே "செல்வம் வாங்க சார்!" என குரல் கேட்டதும் கத்தார் பார்ட்டி உள்ளே ஒடினார். குனிந்தவாறு இருந்த பதிவாளர் பெண்மணியின் கண்கள் மட்டும் தன் மூக்குக்கண்ணாடிக்கு மேல் வெளியே வந்து தீர்க்கமாக அவரை பார்த்து ஏதோ கேட்க கத்தார் பார்ட்டி திருப்பதி லட்டு மாதிரி இருந்த தன் மோட்டா மணி பர்ஸிலிருந்து சுமார் 10 க்ரெடிட் கார்டுகளுக்கு நடுவே இருந்த பான் கார்டை வெளியே எடுத்துக்காட்ட கிஷ்ணமூர்த்தி என்ற குமாஸ்தா "இந்தாண்ட வாங்க சார்" என அவரை கூப்பிட்டார். வெள்ளை வேட்டி சட்டையணிந்த கருப்பான கிராமத்து முதியவர் கிஷ்ணமூர்த்தி. கி.ராஜநாராயணன் சாயல். முரட்டுத்தோற்றம்.
அடுத்து நாங்கள். "மேடம் உங்க பான் கார்டெங்க?" என என் மனைவியை கிஷ்ணமூர்த்தி கேட்க கூட வந்திருந்த க.பி. உடனே அவர் காதில் ஏதோ சொல்ல, என் பான் கார்டை மட்டும் பதிவாளர் பெண்மணி பரிசோதித்தார். மேலும் ஆறேழு சிப்பந்திகள் எதற்காக எங்களைச்சுற்றி நிற்கிறார்களென தெரியவில்லை. டொம் டொம் அந்த பிரதேசமே அதிர அவர்கள் சீல் அடிக்க நாங்கள் கோத்ரொஜ் பீரோவை ஒட்டி பவ்யமாக நின்றோம்.
"அங்க நேரா பாருங்க சார்"- கிஷ்ணமூர்த்தி கை காட்ட அந்த திசையில் உள்ள கவுன்டர் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு வெப்கேமிரா நாகப்பாம்பு போல நம்மை படமெடுத்தது. திருப்தியுடன் நான் மனைவியை பார்க்க புடவையை சரி செய்துகொண்டு அவளும் போஸ் கொடுத்தாள்.
அடுத்து கட்டைவிரல் பதிவு. நம் கை கட்டை விரலை கிஷ்ண மூர்த்தி இறுக்க பிடித்து மையில் தொட்டு பத்திர தாளில் மாறி மாறி அழுத்த உயிர் போகும் வலி. ரிஜிஸ்ட்ரேஷன் கட்டன ரசீதையும் நம் படமெடுத்த காகிதத்தையும் வெளியே எடுத்து அதில் நாம் கையொப்பமிடவேண்டுமாம்.
பிரின்ட்டர் கக்கிய காகிதத்தை பார்த்தேன். இந்த போட்டோவுல இருக்கற ஆசாமிக்கு கிட்டத்தட்ட நம்ப மொக ஜாடை இருக்கே என நான் வியந்து மறுபடியும் போட்டோவை.. அடச்சீ! அது நம்முடைய போட்டோ தான்! கிட்டத்தட்ட ஒற்றைக்கண் சிவராசு மாதிரி ஆக்கிவிட்டார்கள் பாவிகள்..
அதற்குள் வேறு ஏதோ தவறு நடந்துவிட 'செல்வம்' என்று பிரின்ட் செய்யப்பட்டுள்ள ரசீதை என் முன் நீட்டினார்கள். ‘அய்யா! நா சீதாபதி ஶ்ரீதருங்க!’ என ஏவியெம் ராஜன் மாதிரி பரிதாபமாக சொல்ல ரசீதை கையால் அடித்து பேரை மாற்றி எழுதினார் கிஷ்ணமூர்த்தி. ‘சார்..,பேரு மாறி இருக்கே... அத கைல திருத்தலாமுங்களா? சிஸ்டத்துல மாத்த வேணாமுங்களா?‘ என்ற என்னிடம் "ரசீதுல பேரை விட நம்பரு தான் முக்கியம்...நாங்க பாத்துக்கிடுவம்" ... கிஷ்ணமூர்த்தி லேசாக உஷ்ணமூர்த்தியானார்.
அந்த வெப் கேமிரா, தம்ப் இம்ப்ரெஷன் பார்ட்டிகள் எல்லோரும் அரசாங்க ஊழியர்கள் கிடையாதாம். அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட சர்வீசாம் அது. அதற்கென்ற தனியாக சார்ஜ் கொடுக்கவேண்டுமென கிஷ்ணமூர்த்தி சொல்ல நம் க.பி. மறுபடியும் அவர் காதில் ஏதோ சொல்ல கிஷ்ணமூர்த்தி முகத்தில் மலர்ச்சி. "நீங்க வெளிய இருங்க சார் " என நம்மை அனுப்பிவிட்டார்கள்.
ஒருவழியாக முடிந்து வெளியே வந்தோம். எல்லாமே ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் அங்கு ஓடுகிறது. பதிவாளர் பெண் நம் அடையாள அட்டை, தஸ்தாவேஜுக்களை அலட்சியமாக பார்வையிடுகிறார். நம்பரை சரி பார்க்கிறார். உடனே கிடுகிடுவென கையொப்பமிடுகிறார். நடுவே பிஸ்லேரி அருந்துகிறார். எப்போதாவது ஏதோ கேள்வி கேட்க கிஷ்ணமூர்த்தி போன்றவர்கள் முன்னே பாய்ந்து உடனே பதில். தள்ளி நிற்கும் நமக்கு இனம்புரியாத பயம். தேவையில்லாமல் சுற்றிலும் கூட்டம். 'லீகல் சர்வீஸ் சார்ஜஸ்' என மொத்தமாக நம்மிடம் ஏற்கனவே வசூலித்த பணத்திற்கு விளக்கமெல்லாம் கிடையாது. கேட்டால் வெடுக்கென பதில்.
பதிவாளர் பெண் இருக்கையின் பின்புறம் லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் படங்கள். அந்தப்பக்கம் பெரிய கிருஷ்ணர் படம்... பக்கத்தில் கீதோபதேசம்..மெல்ல வாசித்தேன்...
"எது நடந்தோ அது நன்றாகவே நடந்தது" ( ஆஹா.. அப்ப நிலம் வாங்கியது நல்லது தான்)
அடுத்த சில வரிகளுக்குப்பின்...
" இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது" (ஐயோ! நாராயணா! விசு ஜோக் ஞாபகத்துக்கு வருதே!)
(சீதாபதி ஶ்ரீதர்)
2014 மீள்

சூப்ஸ் என்கிற சுப்ரமணியன்-2015 மீள்


செம்பூர் செட்டா நகருக்குள் நுழையும்போதே ஜிலுஜிலுவென காற்று.. ஏராளமான மரங்கள். அமைதியான சூழல். பரபரப்பான பாம்பே தானா இது என சந்தேகம். சுமார் 60, 70 அடுக்குமாடி வீடுகள். நடுவே முருகன் கோவில். அங்கே வசிக்கும் முக்காவாசி பேர் தமிழர்கள். பல வருடங்களுக்கு முன் பம்பாய்க்கு குடியேறி அங்கேயே படித்து, மணமுடித்து, புத்திர சந்தானத்துடன் செட்டிலான பாலக்காட்டுக்காரர்கள். அல்லது நம்மூரிலிருந்து வேலை கிடைத்து வந்து சில பல வருஷங்களாக இருப்பவர்கள். திடீரென்று என்னை மாதிரி பம்பாய் விட்டு ஓடக்கூடியவர்கள்.
பம்பாய் தமிழ்ப்பெண்கள்? சுத்த வேஸ்ட் ஸார். ஆண் வர்க்‌கமே பிடிக்காத மாதிரி சீன் போடுவார்கள். சரி, தமிழ்ப்பொண்ணாச்சே என்று ஒருத்தியுடன் தமிழில் பேசினால் பதில் ஆங்கிலத்தில் வரும். அவள் தம்பி அதுக்கு மேல... பார்க்க மதமதவென்று போக்கிரி அசின் தம்பி கிட்ட விஜய் சொல்ற மாதிரி "குடும்பமே உப்புமா சாப்ட்டு" வளர்ந்த ஸ்தூல சரீரி. தமிழோடு ஹிந்தி கலந்து வெறுப்பேற்றுவார்கள். ("அந்த பங்க்காவ பந்து பண்ணு.. எட்டு மணிக்கு ப்ரோக்ராம் சாலு பண்ணுவாங்க.."). அதிலும் சில எக்ஸ்‌ட்ரீம்கள்... இந்த காஸ்ஸெட் அங்கே கிடைக்குமாவென்று கேட்டால் "அங்கே தோடி(ஹிந்தி) கிடைக்கும்" என பதில். 'அதுசரி..உங்கக்கா என்னடா பண்றா' என கேட்டால் 'தெர்லடா’ என பட்டென பதில் வரும், வயது வித்தியாசம் தெரியாமல் 'டா' போடும் தம்பிகள். ‘அதுசரி! அவங்க அக்காவை நீ எதுக்கு விஜாரிக்கனும்?’ என என்னை கேட்க நினைப்பவர்கள் அடுத்த பாரா போய்விடலாம். 😃
தமிழ்க்கார அப்பாக்கள் பலவகை. ஒன்று காலை 6 மணிக்கு காண்ட்ராக்ட் பஸ்ஸில் ஐய்ரோலி, தூர்பே, முலுன்டு பகுதியில் உள்ள PIL அல்லது ஏஷியன் பெயிண்ட்ஸில் வேலை செய்யும் சீனியர் ஸ்டேனோக்ராபர்கள். அல்லது டிபன் டப்பாவில் சப்பாத்தி எடுத்துக்கொண்டு 8.13 லோக்கலை பிடிக்க ஓடும் ரயில்வே சிப்பந்திகள், இன்கம்டாக்ஸ்/சச்சிவாலயா ஊழியர்கள். அல்லது மனைவியிடம் சள்ளென்று எறிந்து விழும் கொஞ்சம் கடுகடுவென முகத்துடன் சம்மந்தமில்லாத கலரில் பாண்ட் சட்டை, கழுத்தில் படு ஒல்லியான டை, சூட்கேசில் ஹிந்து பேப்பர், ரவுண்டு டிபன் டப்‌பா, ட்ரெயினில் படிக்க வென்ச்சர் காபிடல் மானேஜ்மெண்ட் புத்தகம் சகிதம் பர்ஸ்ட் க்ளாஸ்ஸில் பயணம் செய்யும் 'ஐ ஆம் shawreng pawni' என கை குலுக்கும் வைஸ் பிரெஸிடெண்டுகள். வந்தாரை எப்படியும் வாழ வைக்கும் பம்பாய்..
வேலைக்குப்போகும் பேச்சிலர்ஸ்...? தமிழ் நாட்டிலிருந்து வேலைக்கு வந்த பேச்சிலர்ஸ் 2,3 வருஷம் யாராவது ஒருத்தியுடன் தாதர் சிவாஜி பார்க், ஜூஹூ பீச்சென ஊரெல்லாம் சுற்றி, ப்ரீத்தி உண்டாக்கி, ஒருமாத லீவுக்கு ஊருக்குப்போய் திரும்பி வரும்போது 'மாயவரத்துப்பொண்ண வீட்ல நிச்சயம் பண்ணீட்டாங்க' என்று வந்து நிற்பார்கள்.
என் அண்ணனின் மாமனார் சொன்னாரென்று யாரோ ஒருவர் தன் பெண்ணின் ஜாதகத்துடன் என்னை பார்க்க ஆபீசுக்கு வந்துவிட்டார். ஜாதகத்தை வாங்கி ஊருக்கு அனுப்பிவிட்டேன். அப்படியும் மனுஷன் என்னை விடுவதாக இல்லை. சரியாக ஒவ்வொரு சனியன்றும் மதியம் ஆபீசுக்கு (ஃபோர்ட் ஏரியா) வந்து பக்கத்தில் உடுப்பி ஹோட்டலுக்கு கூட்டிப்போய் கல்யாணத்தப்பத்தியே பேசுவார். தாலியும் வாங்கித்தருவார்(இது நார்த் இன்டியன் தாலி..வயத்துக்கு). 'யாரைக்கேட்டு நீயே பெண் பார்க்கிறாய்' என திட்டி ஊரிலிருந்து லெட்டர் வந்ததும் பயந்து போய் அடுத்தவாரம், அவருடன் நல்லா சாப்பிட்டவுடன் மெதுவாக 'வீட்ல அவங்களே பெண் பாத்துப்பாங்க மாமா' என நான் சொன்னதும் கரகாட்டக்காரன் ஷண்முகசுந்தரம் மாதிரி உஷ்ணமாகி ஜீரகத்தை வாயில் அள்ளி போட்டுக்கொண்டார்.
முருகன் கோவிலுக்கு சற்று எதிரே விஜயா பில்டிங்கில் நாங்கள் ஐந்தாறு பிரம்மச்சாரிகள் தங்கியிருந்தோம். வீட்டுக்கு போய் குளித்துவிட்டு நானும் ரங்குவும் முதலில் கோவிலுக்கு போவோம். சுவாமி தரிசனத்திற்கு மட்டும் தான்!. எல்லா குருக்களும் எங்களுக்கு தோஸ்த்.. கீழ் தளத்தில் தங்கியிருக்கும், சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்கும் 25 வயது கூட நிரம்பாத அர்ச்சகர் சதாசிவம் ரங்குவுக்கு நண்பர். 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா' பாட்டு கேட்டுக்கொண்டு இருந்த அவருடன் அவர் ரூமில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த போது சந்துரு Balasubramaniam Chandrasekaran வந்திருந்தான்.

சந்துருவுக்கு திருச்சி சுந்தர் நகரில் எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடு. கம்பெனி செகரடேரி. ரோஷக்காரன். மானஸ்தன். அப்பாவின் கடனை அடைக்க காலை டிபனுக்கு பிறகு ஒன்றும் சாப்பிடாமல் இரவில் உ.பி.பைய்யா கடையில் பால் மட்டும் குடித்து கடனை அடைத்தவன். வேலையில் இருந்துகொண்டே ACS பைனல் பாஸ் செய்து என்னுடைய உபயத்தால் ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டவன். (அந்த கதை என் 'செம்பூர் ஸ்டேஷன்' என்ற தனிப்பதிவில்..) சரியான லூட்டி... நாகேஷின் காமெடிக்காக என்னை பலமுறை 'சோப்பு சீப்பு கண்ணாடி' பார்க்க வைத்தவன். சந்துரு இன்ஸ்டன்ட் ப்ரூ காபி போட்டு குடுத்தான்.
அடுத்து துபே (வடநாட்டுக்காரன்), மற்றும் சத்யன் (IT) ஆபிசிலிருந்து வந்தார்கள். கடைசியில் ஸ்ரீரங்கத்துக்காரனான முரளி வந்தான். இரவில் வீட்டு சாப்பாடு தான். அந்த ரூமில் முன்பு சாம்பார், தக்காளி ரசம், தயிர்சாதம், பொறியல்..மட்டும் தான். நான் இவர்களுடன் சேர்ந்தவுடன், "இதெல்லாம் பத்தாதுடா... " என்று சொல்லி அடுத்த சில நாட்களில் ராவா தோசை(ஞாயிறு காலை டிபன்), பூண்டு ரசம், மோர்குழம்பு, தக்காளி சாதம், லெமன் ரைஸ், புளியோதரை, சப்பாத்தி, ஆலு கோபி, பைங்கன் மசாலா என எனக்குத் தெரிந்த வெரைட்டியுடன் சமையலில் பிரதான இடம் என்னுடையதாகியது.
அடுத்தடுத்த பில்டிங்குகளிலும் நிறைய பேச்சிலர்கள். எல்லோரும் நள மகாராஜாக்கள். கிச்சனிலிருந்து வெளியே வந்து பால்கனியில் நின்றுகொண்டு பக்கத்துவீட்டு பெண்ணிற்கு கேட்கும்படி "'மணி!... put some காரப்பொடி'...என கத்தி அலப்பறை செய்யும் கணேசன்கள்..
பிரம்மச்சாரிகளின் வாழ்க்கை வெகு சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் நண்பரின் சிபாரிசின் பேரில் BITS Pilaniயிலிருந்து சுப்ரமணியன் என்ற மாணவன் 3 மாதம் மட்டும் தங்க எங்களுடன் சேர்ந்துகொண்டான். வங்கியில் தன் ப்ராஜெக்ட் செய்ய பம்பாய் வந்திருந்தவன் சூப்ஸ் என்ற நாமகரணம் எங்களால் சூட்டப்பட்டான்.
ஒடிசலான உருவம், திக்கான சோடாபுட்டி கண்ணாடி. சின்ன மீசை.. முள் தாடி.. சட்டையை இன் செய்யாமல் முழங்கை வரை மடித்து சாதாரண பாண்ட் மற்றும் ரப்பர் செருப்பு, அலட்சியமாக வாரிய தலை முடி. மண்டை முழுக்க மூளை. அவன் படிக்காத ஆங்கில நாவல்களே இல்லை. வயது 20. பார்க்க கண்ணாடி போட்ட தனுஷ் மாதிரி இருக்கும் சூப்ஸ்சுக்கு இந்திய, உலக அரசியலாகட்டும், தமிழ், ஆங்கில இலக்கியமாகட்டும் எல்லாம் அத்துப்படி. சினிமா அறிவு அறவே கிடையா. பார்க்க மூடியாக இருப்பான். அவ்வப்போது தனது டைரியில் ஆங்கில கவிதைகள் எழுதுவான். எங்கே..படித்துக்காமிடா என்றால் வெட்கப்படுவான். ஆனால் பழகப்பழக சில நாட்களில் அவனது நட்பு எங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. சமையல் தெரியாததால் காபி குடித்த தம்ளர்களை சிங்க்கில் போட்டு அலம்புவான். போட்டிருக்கும் சட்டை பாண்ட்டுடன் அப்படியே சட்டென் தூங்கிப்போவான்.
இவனுடன் மற்றொரு ரூம்மேட் ஸ்ரீராமும் சிகரெட் வலிப்பதால், அடூர் கோபாலகிருஷ்ணன் ஜாடையிலிருக்கும் பக்கத்து வீட்டு மாமா திருட்டு தம்மடிக்க எங்கள் வீட்டிற்கு அப்பப்போ வருவார்.அவரை தேடிக்கொண்டு வந்த மாமி ஒருமுறை எங்கள் ரூமை பார்த்ததும் தன் மராட்டிய வேலைக்காரியை விட்டு எங்கள் வீட்டை சுத்தம் செய்ய அனுப்ப, அந்த மராட்டி பாயி எங்கள் வீடு இருக்கும் நிலையை பார்த்து சரமாரியாக திட்டித்தீர்த்து விட்டாள். அங்கங்கே அவுத்துப்போட்ட பாண்ட் சர்ட்டுகள், உலர்த்தாத கப்படிக்கும் ஈரத்துவாலைகள், ஸ்ரீராம் , அடூர் மாமா விட்டெரிந்த சிகரெட் துண்டுகள், எங்கு பார்த்தாலும் CA,ACS சம்மந்தப்பட்ட புத்தகங்கள். கட்டிலுக்கு அடியில் போட்டுத்தள்ளப்பட்டிருக்கும் வாழைப்பழத்தோல்.. எங்கெங்கு காணினும் ஜட்டியடா!
ஒரு சனிக்கிழமை ஸ்ரீராம் ஆபிசில் எல்லோரும் கர்ஜத் அருகில் பிக்னிக் போவதாக ப்ளான் செய்து என் ரூம் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். நானும் சந்துருவும் போகவில்லை. மறுநாள் செம்பூர் கீதாபவனில் பைனாப்பிள் தோசா முடித்து வெளியே வரும்போது எதிரே சந்துரு கலவரத்துடன் ஓடி வந்து "ஸ்ரீதர்...சூப்ஸ் செத்து போய்ட்டாண்டா.." என சொல்ல அதிர்ந்து போனோம். சூப்ஸ்சின் பாடி கல்யாண் ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் வந்ததால் நாங்கள் இருவரும் ட்ரெயின் பிடித்து கல்யாண் போனோம்.
ஆசுபத்திரி பின்பக்கம் மார்ச்சுவரியில் பாடி இருப்பதாக சொல்ல அங்கு ஓடினோம். கொஞ்சம் ஒதுக்குப்புறமான பழைய சிறிய கட்டிடம். சுற்றிலும் மரங்கள். ஊஊஊவென காற்றடிக்க, பகலில் கூட தனியே போக பயமாக இருக்கும் அளவுக்கு ஒரு அமைதி. வாசலில் ஒரு வேன்… மெல்ல அருகே போய் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தோம். சூப்ஸ் லேசாக உடல் ஊதி, கறுத்து விரைத்துப்போயிருந்தான். அடுத்து மற்றொரு மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ் ஒன்றிரண்டு விரைந்து வர, ஒரே சமயத்தில் நாலைந்து பிணங்கள் வந்திறங்கின. சில உடல்களை சதையும் ரத்தமாக கந்தலாக கொண்டு வந்து வைத்தார்கள்.. இல்லை.. போட்டார்கள். டோம்பீவிலி, கல்வா அல்லது சுத்துப்பட்டு ஸ்டேஷன்கள் அருகே ரயிலில் அடித்துச்சென்ற உடல்களாம்.
மார்ச்சுவரியை பார்த்துக்கொள்ளும் மராட்டிய கிழவன் முழு போதையுடன் வந்தான். பிணவரையில் தினம் 16 மணி நேரம் வேலை செய்ய அரசாங்கமே அவனுக்கு மதுவுக்கு பணம் கொடுக்குமாம். சலனமேயில்லாமல் உடல்களை தொட்டு அப்படியும் இப்படியும் உருட்டி தள்ளினான். சில உடல்களை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டியவாறே ‘ஹஸ்த்தே மரா க்யா!’ (சிரிச்சிக்கிட்டே செத்தையாடா?) என கேட்டு வேலை செய்து கொண்டிருந்தான். எனக்கும் சந்துருவுக்கும் வயிறை என்னமோ செய்ய, லேசாக உள்ளே எட்டிப்பார்த்த சந்துரு ‘ஆ’வெனஅலறி பின்வாங்கினான். எனக்கு லேசாக தலை சுற்றியது. அங்கே பக்கவாட்டில் சரிந்தும், சாய்ந்து உட்கார்ந்த நிலையிலும், குப்புறக்கிடந்தும், குடல் மற்றும் சதைக்குவியலோடும் அங்கங்கே …. சில நாட்கள் பிணவறை முற்றிலும் காலியாக இருக்குமாம். அன்று அந்த சிறிய ரூம் கொள்ளாத அளவுக்கு …..( போதும் நிறுத்திக்கிறேன் ஸார்.)
இரவு 12 மணி வரை கல்யாண் போலீஸ் ஸ்டேஷனில் நண்பர்களை போலீஸ் தூண்டித்துருவி விசாரித்தார்கள். கர்ஜத் அருகே எங்கோ கிராமத்தில் அழகிய நீரோடை, பூங்கா மற்றும் காட்டுப்பகுதி…நண்பர்கள் மதியம் 2 மணி வரை பூங்காவில் சுற்றிவிட்டு சாப்பிட்டவுடன் 4 மணி வரை கிரிக்கெட் ஆடி மெதுவாக ஒவ்வொருவராக தண்ணீரில் இறங்கி குளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தெளிவான அமைதியான ஓடை. இடுப்பளவு தண்ணீர் தான். எல்லோரும் குளித்து முடிந்து வெளியே வந்த பிறகும் சூப்ஸ் மட்டும் தண்ணீரில் நின்றுகொண்டிருந்தானாம்..
'போதும் வாடா' என அவனை நண்பர்கள் கூப்பிட அவன் மெல்ல சிரித்துக்கொண்டே கரையை நோக்கி ஓரடி எடுத்து... 'சளக்' கென்று அப்படியே நீருக்குள்ளே போய் உடலை சிலுப்பி.. நண்பர்கள் கூச்சலுடன் துண்டை அவன் பக்கம் வீசியும் பயனில்லை... யாருக்கும் நீச்சல் தெரியாது. உள்ளே முழுவதும் சென்றுவிட்ட சூப்ஸ் அடுத்த நொடி திடீரென மறுபடியும் தண்ணீருக்கு மேலே கழுத்தளவு வெளியே வந்து அதே வேகத்தில் திரும்ப உள்ளே போனான்.. ஒரு கை மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிய அடுத்த நொடி நீர்க்குமிழிகளுடன் தண்ணீருக்குள் மாயமாக மறைந்தான். வெளியே வர போராடுகிறான் என்பது தண்ணீரின் சலசலப்பில் தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நீர்க்குமிழிகளும் நீரின் சலசலப்பும் அடங்கி நீர்ப்பரப்பு அமைதியானது. எல்லோரும் கூச்சலிட யாருக்கும் ஒன்றும் செய்யத்தெரியவில்லை. போலீஸ் வந்து சேர மேலும் இரண்டு மணிநேரம் ஆனது.
போலீஸ் கூட வந்திருந்த கிராமத்தான் 'சாலா! பொழுதன்னைக்கும் உங்களுக்கு இதே வேலயாப்போச்சு? இந்த வாரத்துல இது மூணாவது சாவு!' என சலித்துக்கொண்டு 1500 ரூபாய் பேசி தண்ணீருக்குள் பாய்ந்து செடிகளுக்கிடையே கையை விட்டு பாறைகளை நகர்த்த, ஜிவ்வென உடல் மேலே வர, சூப்ஸ் என்கிற சுப்ரமணியன் வெளியே எடுத்து போடப்பட்டான்.
நண்பர்கள் எல்லோரையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து ஸ்டேஷனுக்கு கூட்டிப்போனார்கள். பஞ்சநாமா போன்ற சம்பிரதாயங்களுக்குப்பின் “வேறெந்த முகாந்திரமும் இல்லை ..சுழலில் சிக்கி இறந்த தற்செயலான விபத்து இதுவென ருசுவாகிறது.. கேஸ் பதிவு செய்யாமலிருக்க 35 ஆயிரம் ஆகும்” என போலீஸ் பேரம் பேச, ஸ்ரீராமின் அண்ணன் 20 ஆயிரத்திற்கு முடித்து நண்பர்களை வெளியே கொண்டு வந்தார்.
அடுத்த 2 நாட்கள் கொடுமையானவை. 13 வயது மகளுடன் வடநாட்டு சுற்றுலா சென்று விட்ட சூப்சின் பெற்றோரை யாரோ பெரியப்பா ஒருவர் தேடி போனில் பிடித்தார். மறுமுனையில் கூச்சல்..அழுகை. உடலையும் அவர்கள் பார்க்கத்தயாராக இல்லை. பெரியப்பா மட்டும் 2 நாளில் வந்து அந்திம காரியங்களை முடித்து விட்டுப்போனார்.
அடுத்த ஒரு மாத காலம் வீட்டில் சமைக்கவில்லை. ஏதோ ஒரு பயத்துடன் சோகமாக உலாவினோம். சூப்ஸ்சின் உடமைகளை பெரியப்பா கொண்டு சென்றுவிட அவனது ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் மட்டும் ரூமில் கிடந்தன.
சில நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு வரத்தொடங்கினோம். ஒருநாள் சந்துரு ஏதோ புத்தகங்களை குடைந்தபோது சூப்ஸ்சின் டயரி கிடைக்க "ஸ்ரீதர்! இங்க வாடா! " என அலறினான். கைகள் நடுங்க டயரியை புரட்டியபோது, இறப்பதற்கு சில நாட்கள் முன்பு கிறுக்கி வைத்த கவிதை மாதிரி சில வரிகள்..... ஒன்றும் புரியவில்லை. ஆனால் படிக்க முடிந்த கடைசி நாலைந்து வரிகள் ….
And I want to dwell..
in some corner…
alone..
surrounded by water…
only water..
charcoal பென்சிலில் சூப்ஸின் ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)
2015 மீள்