Tuesday, July 17, 2018

திருச்சி கதைகள்-2


(சகோதரியின் பெண்ணுடன் திருச்சியில் அரட்டை அடிக்கும்போது மற்றொரு குட்டி கதைக்கான கரு கிடைக்க, பெயர்கள், ஊர், வீதிகள் மாற்றப்பட்டு சில பாத்திரங்கள் சேர்க்கப்பட்டு..... கதையை படித்த அவள் சொன்னது: பாதிக்கு மேல இதெல்லாம் நான் சொல்லவேயில்லியே..மாமா!..)
இனி கதை..
தென்னூர் பட்டாபிராம்பிள்ளை தெரு பெருமாள் கோவில் எதிரே குறுகலான சௌராஷ்ட்ரா தெரு. பட்டுநூல் காரத்தெரு என்றால் எல்லோருக்கும் தெரியும். சங்கர் பட செட்டிங் போல நெருக்கமான வீட்டு வாசல்களில் வேட்டியுடன் சௌராஷ்ட்ர இளைஞர்கள் சடசடவென ‘ஊசிபட்டாசு’ போல சதா பேசிக்கொண்டிருப்பார்கள். அடிதடி தப்புத்தண்டா என எதிலும் சேராத அமெரிக்கையான மக்கள்.
புத்தூர் சின்ன மைதானத்தில் கால் பந்தாட்டம் ஆடிவிட்டு சௌராஷ்ட்ரா தெரு வழியாக சைக்கிள் இளைஞர்கள் எத்தனை தடவை தேடித்தேடி சுத்தி வந்தாலும் கண்ணில் படாத இளம் பெண்கள். இரத்த சோகை மாதிரி வெள்ளை வெளேர் சருமம் மற்றும் பூனை விழிகள் கொண்ட பெண்கள் அநேகம் பேர் அந்த தெருவில். அதில் ஒரு பெண் தான் இப்பதிவின் நாயகி ரேணுகா.
கொஞ்சம் பூசின மாதிரி தேகம். பெரிய வட்ட முகம். அழகிய கண்கள். கீழ் தாடை கொஞ்சம் முன்னுக்கு தள்ளி, சட்டென ஜெயசித்ரா மாதிரி இருப்பாள் ரேணுகா. தைலா முதலியில் அரை மீட்டர் அதிகமெடுத்து தைத்த பாவாடை தாவணியில் காலை 9 மணிக்கு உருமு தனலட்சுமி கல்லூரிக்கு அவள் கிளம்பினால் அந்த தெருவில் பல இளைஞர்களுக்கு அன்று தூக்கம் கெடும்.
டவுன் பஸ்ஸில் ஒரு ரூபாய் கொடுத்து 60 பைசா டிக்கெட் எடுக்கும்போது, 10 காசு இருக்கா என கண்டக்டர் கேட்டால் சட்டென மண்டையில் ஏறாமல் பேந்த பேந்த அவள் முழிப்பதே அழகு. அவசரப்படாமல் ஆற அமர ஐந்து வருடங்களில் அவள் பாட்டனி பட்டப்படிப்பு முடித்து சென்னையில் HCL நிறுவனத்தில் கார்டு பஞ்ச்சிங் வேலை. கம்ப்யூட்டர் வருவதற்கு முந்தைய காலம். வேலைக்குச்செல்லும் பெண்டிர் விடுதியில் ஜாகை. ஞாயிறன்று ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ பார்த்துவிட்டு அன்னபூர்னாவில் பரோட்டா விஜிடபிள் குருமா சாப்பிட்டு மேலும் ஓரிரண்டு கிலோ கூட்டியிருந்தாள்.
மீண்டும் திருச்சிக்கு வருவோம். சௌராஷ்ட்ரா தெரு கொஞ்சம் தாண்டி மூலைக்கொல்லை தெரு பகுதியில் ‘தட்டி போட்ட திருச்சி லோகநாதன் வீடு எங்கேங்க?’ போன்ற விசாரிப்புகளுக்கு அடுத்து அதிகம் கேட்கப்படுவது ‘ஆசாரி வீடு எங்கேங்க?’ தான்.
விசாலமான வீட்டுத்திண்ணையில் நகைபட்டறை. ஆறேழு இளைஞர்கள் அரிசி உமி கரியடுப்பு சகிதம் நகைகளை உருக்கி டன்டன் என சுத்தியலால் அடித்து கம்பியை நீட்டிக்கொண்டிருக்க (தங்க கம்பிங்க!) , பெரியவர் வேலாயுத ஆசாரி ஊதுகுழாயை நெருப்பில் ஊதி வளைவி செய்துகொண்டிருப்பார். அக்கம்பக்கத்தார் ‘திருகாணி, சங்கிலி அறுந்து போச்சுங்க’ என சின்னச்சின்ன வேலைகளுடன் அங்கே வருமுன் சங்கிலியின் குண்டுமணிகளை முன்கூட்டியே எண்ணிவைத்துக்கொண்டு கொடுப்பார்கள். அந்த வீட்டுப்பையன் சுப்பையா தான் இப்பதிவின் நாயகன்.
சுப்பையாவிற்கு அப்பாவின் பொற்கொல்லர் தொழில் இஷ்டமில்லை. தலைக்கு எண்ணெய் வைத்து படிய வாரி வெள்ளிக்கிழமை விரதம் சிவகுமார் மாதிரி டைட் பாண்ட்டில் இருப்பான். டோல்கேட் ராதாஸில் டிபன் பண்ணிக்கொண்டு, நடுவே பக்கத்தில் ஜமாலில் தலையை காண்பித்து பௌதிகம் படித்து, கல்லூரி ஆர்க்கெஸ்ட்ராவில் ட்ரிபிள் காங்கோ, டிரம்ஸ் வாசிப்பவன்.
அப்பாவின் நகை பட்டறை மற்றும் உடம்பிலிருந்த பூணுல் இரண்டையும் கடாசிவிட்டு சென்னையில் HCL நிறுவனத்தில் ரேணுகா வேலை செய்யும் அதே கார்டு பஞ்ச்சிங் பிரிவில் சூப்பர்வைசராக சேர்ந்து அவனும் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ பார்த்து தொலைத்தான்.
பாட்டனியும் பௌதிகமும் சேர்ந்து வேதியியல் ஆனது. கார்டு பஞ்ச்சிங் வேலை காலதாமதமானது. அன்னபூர்னா பரோட்டா குருமா அமோக விற்பனையானது. பருவமே.. புதிய பாடல் பாடியது. சௌராஷ்ட்ரமும் ஆசாரியும் சேர்ந்த கதை நாடார் (ஷிவ்) வரை போனது. வார்னிங் மெமோக்கள் பறந்தன. வேலை போகவில்லை. வார/மாத இறுதியில் இருவரும் சேர்ந்து KPN புஷ்பேக் சீட்டில் திருச்சி பயணம்.. டெக்கில் அன்புள்ள ரஜினி காந்த். உளுந்தூர்பேட்டையில் ‘பஸ் பத்து நிமிசம் நிக்கும்’ என கண்டக்டர் சொல்லியும் பதினைந்து நிமிடம் மசாலாப்பால் சாப்பிட்டார்கள்.
ஆக, பஸ் திருச்சி போகும் முன் மேட்டர் போய்ச்சேர்ந்தது. அவ்ளதான்..பட்டுநூல் கார தெருவெங்கும் ஊசி பட்டாஸ் வெடி. மூலைக்கொல்லைத்தெரு முழுக்க ஊதுகுழாய் சத்தம். இரு வீட்டு பெரியவர்கள் கூடினார்கள். ஜாதி சங்கங்கள் கலந்து பேசின. கண்டனங்கள் பறந்தன. பாட்டனியும் பௌதிகமும் பாதர் செய்யவில்லை. அடுத்த எட்டு வருடமும் அன்னபூர்னா, KPN, உளுந்தூர்பேட்டை என காதல் கொடிகட்டி பறந்தது, ரேணுகாவின் மதுரை அத்தை ஒருவர் வந்து சேரும்வரை.
மதுரை அத்தை, சி.கே. சரஸ்வதிக்கே அத்தை. திருச்சி வந்து பூரா விபரங்களையும் தெரிந்து கொண்டார். விஷயம் முற்றிப்போனாலும், வெத்தலை சீவலை வாயின் ஒரு பக்கம் ஒதுக்கி, இதை வேறு மாதிரி கையாள வேண்டும், அவசரப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டு சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் நன்னாரி சர்பத் குடித்து அண்ணா பேருந்தில் ஒரு முடிவோடு பஸ் ஏறினாள் மதுரை அத்தை.
அடுத்த வாரம் ஒரு நாள் ‘அம்மினி! கார்டு பஞ்சிங் போறும். அமெரிக்காவில் உனக்கு டிரெய்னிங்’ என ஆர்டர் வந்தது ரேணுகாவிற்கு. அவளுக்கு இஷ்டமில்லையெனினும் அமெரிக்கா போகச்சோல்லி சுப்பையா வற்புறுத்தினான். நம் எதிர்காலத்திற்கு இந்த டிரெய்னிங் முக்கியம் என சுப்பையா நம்பினான் பாவம்!.
‘சுப்பையா! நம்ம கல்யாணம் எப்பையா?’ என இவள் கேட்டுக்கோண்டே அமெரிக்கா கிளம்ப, அவன் பான் வாயேஜ் சொல்லி அனுப்பி வைக்க, அங்கே மதுரை அத்தை விஷமப்புன்னகையுடன் யாருக்கோ போன் போட்டு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.
அடுத்த ஆறு மாதத்தில் அத்தையின் நெருங்கிய நண்பர் ஒருவரின் பிள்ளை அமெரிக்காவில் ரேணுகாவை சுற்றி சுற்றி வந்ததும், ரேணுகா அவனை தவிர்க்க முற்பட்டதும், அவன் தான் ரேணுகாவின் புதிய காதலன் என அத்தை மூலமாக சுப்பையாவிற்கு பொய்யான தகவல் தரப்பட்டதும், அதை உண்மையென நம்பி, சுப்பையா அவளுக்கு டார்ச்சர் கொடுத்ததும், தேவையில்லாத சந்தேகத்தினால் எட்டு வருட காதல் முறிந்ததும், சந்தேகப்படும் இவனைவிட அந்த அமெரிக்கா பையனே மேல் (male) என கல்யாணம் செய்துகொள்ள ரேணுகா சம்மதித்ததும், அதனால் தனக்கு ஒன்றும் பெரிய நஷ்டமில்லையென கோபாவேசத்துடன் தன் முறைப்பெண்ணையே சுப்பையா மணந்ததும்...
எல்லாமே சரஸ்வதி அத்தை சாமர்த்தியமாக நகர்த்திய காய்கள்..
அப்புறம் உளுந்தூர்பேட்டையில் KPN பஸ் பத்து நிமிடத்திற்கு மேல் நிற்பதில்லை.
சட்டென வரைந்த காதல் வாகனத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

1 comment:

  1. Excellent narration and flow with apt words at the right places.

    Hats off to your pencil drawing skill.

    ReplyDelete