Thursday, June 2, 2016

ஆயிரத்தில் ஒருவன்: திருவிளந்தூர் பாலு...


இவ்வருடம் பஹ்ரைன் நவராத்திரியில் 'பாஹுபலி' இடம்பெற்ற கொலு இவர் வீட்டில் மட்டும் தான் என நினைக்கிறேன். குட்டி குட்டி மலைகள்...மலையின் மேல் ஒரு குட்டியான பெண் பொம்மை. உற்றுப்பார்த்தால் படு நேர்த்தியாக ஒட்டப்பட்ட தமன்னாவின் முகம். இந்தப்பக்கம் கையில் வில்லுடன் மலையிலிருந்து தாவும் ப்ரபாஸ். கீழே உயரமான வீரன் பொம்மை (அட நம்ம கட்டப்பா!) அந்தப்பக்கம் கருப்பான முரட்டு பொம்மை (காலகேயா)..சண்டை போடும் போர்க்களம்.. பல்லால்தேவா...நடுவே தண்ணீர் விட்டு சிறிய குளம் செய்திருக்கிறார்கள். தண்ணீரிலிருந்து வெளியே மேலே வரும் கையில் (ரம்யா கிருஷ்ணன்) குழந்தை பொம்மை... பிரமிப்பாக இருந்தது.
கொலு பார்த்த பின் அந்தப் பக்கம் நகர்ந்தால் சுவற்றில் ஒரு காகிதத்தை ஒட்ட வைத்திருந்தார் Jayashree Balu . அதில் அவர்கள் வீட்டு கொலுவிலிருந்து சில கேள்விகள். 'ஔவையார் முன் நிற்கும் சிறுவன் கையில் என்ன?'..போன்ற பத்து கேள்விகள். கொலுவை மறுபடியும் பார்க்காமல் நாம் பதில் தரவேண்டுமாம். அற்புதம்.
பஹ்ரைனின் மிகப்பெரிய வங்கி ஒன்றின் compliance பிரிவின் தலைவர் நண்பர் பாலு. சென்ற வருடம் Manchester Business school பஹ்ரைன் மத்திய வங்கியுடன் சேர்ந்து நடத்திய IDC(International Diploma in Compliance) பரிட்சையில் உலகளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று இந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்.
சென்னைக்காரரான நண்பர் பாலுவிற்கு பூர்விகம் மாயவரம். ஐம்பது வயது தாண்டியவர் மாதிரியே இல்லாத உருவம்.இந்தியாவில் யூகோ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளில் உதவி பொது மேலாளர் போன்ற பதவிகளில் இருந்துவிட்டு நேராக கரீபியக்கடலில் குதித்தவர். கரீபியத்தீவுகளான, பனைமரங்களும் வெள்ளை மணலும் கொண்ட, Trinidad & Tobago மற்றும் West Indies போன்ற நாடுகளில் வங்கி வேலையிலிருந்து விட்டு பத்து வருடங்களுக்கு முன் பஹ்ரைன் வந்து செட்டிலானவர்.
இரண்டு நாட்கள் முன் நவராத்திரி அழைப்பிற்காக அவரது இல்லத்திற்கு சென்ற எங்களை முதலில் வரவேற்றது 'மும்பை ஸ்பைசஸ்' சாட் கார்னர். பேல்பூரி, பானிபூரி, சேவ்பூரி எல்லாம் முடிந்து ஹாலுக்கு வந்தால் கொலு.. அந்தப்பக்கம் சப்பாத்தி சன்னாவில் ஆரம்பித்து விதவிதமான சாப்பாட்டு ஐட்டங்கள்... டெஸர்ட் வரை.
அலமாரி முழுக்க விசா மற்றும் கிழக்குப்பதிப்பக புத்தகங்கள். தேவனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் ஆயிற்றே! சி.ஐ.டி சந்துரு, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்..மற்றும் நிறைய சுஜாதா நாவல்கள், பொன்னியின் செல்வன் (ஆங்கிலத்தில்).
இவரது மனைவி ஜெயஶ்ரீ டெல்லியில் படித்து வளர்ந்தவர். சென்ற வருடம் நடந்த இவர்களது மகளின் பரதநாட்டிய அரங்கேற்ற விழாவின் ஸ்பான்சர்களில் எங்கள் ட்ராஃப்கோவும் ஒன்று. விழா முடிவில் திருக்குறளை மேற்கோள் காட்டி நண்பர் பாலு ஆற்றிய உரை மிகவும் அருமை.
சடசடவென சதா பேசிக்கொண்டிருக்கும்போது பாலு படார் படாரென ஜோக்குகளை நிறைய உதிர்க்கிறார். முதன்முதலில் வேலையில் சேர்ந்து ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் ட்ரெய்னிங் சென்றபோது சேர்மன் அவர்கள் அளித்த சிறப்புரையில் 'can you all tell why you chose this career?' என கேட்க, ஆளாளுக்கு 'வங்கித்துறைக்கு வரவேண்டுமென்பது எனது passion'...'நிறைய பணம் சேர்க்க'... 'நல்ல career உருவாக்க' என விதவிதமான பதில்கள். கடைசியில் அவர் மர்மப்புன்னகையுடன் சொன்ன பதில்.. ' because you all did not get a better job!'. கூட்டம் கப்சிப். குறும்புக்காரரா இருப்பார் போல. கடைசியாக அவர் மற்றொரு கேள்வி கேட்டாராம். ' ok.. Now tell me why we selected you people out of 3 lacs?'. யாரும் பதில் சொல்ல முன்வரவில்லையாம். 'இந்தாளு கொஞ்சம் வெவகாரமான ஆளு..எதாவது வில்லங்கமா பதில் வச்சிருப்பாரு'. யாரும் வாயைத்திறக்காததால் அவரே கடைசியில் ' because we did not get better candidates!. என ஒரு போடு போட்டார். வெடிச்சிரிப்பு சிரித்து கலகலவென பேசும் பாலுவிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும்போது இரவு மணி பதினொன்று.
மூன்று லட்சம் பேர் எழுதிய ஸ்டேட் பாங்க் ப்ரொபேஷனரி ஆபிஸர்களுக்கான தேர்வில் மூவாயிரம் பேரை நேர்க்காணலுக்கு அனுப்பி கடைசியில் தேர்வான வெறும் முன்னூறு பேர்களில் இவரும் ஒருவர். (அதனால் பதிவின் தலைப்பை மறுபடியும் பார்க்க).

கவிஞர் கா.மு.ஷெரீப்....

ஏரிக்கரையின் மேலே.. போறவளே பெண் மயிலே..
அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை..
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்...
என்றைக்குமே நெஞ்சில் நிறைந்திருக்கும் இப்பாடல்களை எழுதியவர் கவி.கா.மு.ஷெரிஃப் அவர்கள்.
தஞ்சைக்கு அருகே அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில் பிறந்த இவர் அந்த காலத்தில் 'ஒளி', 'சாட்டை', 'தமிழ் முழக்கம்' போன்ற பத்திரிக்கைகள் நடத்தி வந்தார். நிறைய நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தாராம்.
கவிஞர் கண்ணதாசன் இருந்த காலத்திலேயே இவரும் புகழ் பெற்றவர்.
"பாட்டும் நானே பாவமும் நானே' பாடலை எழுதியவர் இவர் தான் என்றும், ஆனால் இவரது ஒப்புதலுடனே ஏ.பி.நாகராஜன் அவர்கள் கண்ணதாசன் பெயரை போட்டுக்கொண்டார்" போன்ற வதந்திகள் முன்பு வந்தபோது இவரே விளக்கமளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்.
'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' (டவுன் பஸ் )
'பொன்னான வாழ்வு மண்ணாகலாமா?' (மாங்கல்யம்)
'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' (பணம் பந்தியிலே)
'வானில் முழு மதியைக்கண்டேன்.. வனத்திலொரு பெண்ணைக்கண்டேன்' (சிவகாமி)
'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா' (மக்களைப்பெற்ற மகராசி)
'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்' (நான் பெற்ற செல்வம்)
அநேகமாக அவர் எழுதிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் தான்.
பெரியதாக சொத்து ஏதும் சேர்க்காமல் கடைசி வரை வாடகை வீட்டிலேயே குடியிருந்தவராம். அன்றைய முதல்வர் எம்ஜியாருக்கு நெருக்கமானவராக இருந்தும் தனக்கோ தன் குடும்பத்தவருக்கோ எந்தவொரு ஆதாயத்தையும் இவர் தேடியதில்லை. ('ராமாவரம் போகாவரம் வாங்கிவிட்டேன்' என்பராம்). கலைஞரின் உயிர் நண்பர்.
தத்துவப்பாடல்கள், சோகப்பாடல்கள், மனதிற்கினிய காதல் பாடல்கள் எழுதிய இவர் ஆபாசமான பாடல்களோ டப்பங்குத்துப்பாடல்களோ எழுதியதே இல்லை. “கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்” என்று சொன்னவர் அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் மறைந்தவர்.
கவி.கா.மு.ஷெரீப் அவர்கள் மறைந்த தினம் இன்று.
பி.கு: சென்ற வருடம் நவராத்திரி விழாவிற்காக எனது இல்லத்திற்கு வருகை தந்திருந்த கவிஞர்.அப்துல் கையூம்(தலைவர்-பாரதி தமிழ் மன்றம், பஹ்ரைன்) அவர்களுடன் அன்றைய திரைப்படங்களைப்பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருக்கும்போது ஜாம்பவான் கவிஞர்களான மருதகாசி, உடுமலை நாராயண கவி, நாமக்கல் கவிஞர், தஞ்சை ராமையாதாஸ், கா.மு.ஷெரிஃப் போன்றவர்களது பிரபலமான பாடல்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது கவி.கா.மு.ஷெரிஃப் பற்றி தனது blog (kavikamu.wordpress.com) இல் நிறைய சுவையான தகவல்களை தாம் எழுதியிருப்பதாகவும், அவரது ஓவியத்தை வரையமுடியுமாவெனவும் திரு.அப்துல் கையூம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தமையால் இன்று கா.மு.ஷெரிஃப் அவர்களின் ஓவியம் (அவரது மறைவு தினத்தையொட்டி) வரைந்து முகநூலில் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன். நன்றி திரு.கையூம்.
மேலே நான் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் நண்பர் திரு.கையூம் அவரகளது blogஇலிருந்து திரட்(திரு)டியவையே..😀

பிச்சை சார்....

90களில் பம்பாயில் பங்குச்சந்தை பற்றி தெரிந்தவர்களை விட தெரியாதவர்களே அதிகம் அதைப்பற்றி பேசிக்கொண்டும் வர்த்தகம் செய்துகொண்டும் இருந்த நேரம். செம்பூரில் இருந்து காலை 8.11 லோக்கலில் ஏறினால் 'சங்கம் அலுமினியம் படுத்துடுச்சாமே.. நீ வித்துட்டியா' போன்ற சம்பாஷனைகளை சகஜமாக கேட்கலாம்.
ஒரு நிதி நிறுவனத்திலிருந்து வேலையை விட்டுவிட்டு பம்பாயின் மிகப்பெரிய கப்பல் சேவை நிறுவனத்தில் சேர்ந்திருந்திருந்தேன். இரண்டு கப்பல்கள் சொந்தமாக வைத்திருப்பவர்கள். பங்கு வர்த்தகமும் செய்பவர்கள். பம்பாய்த்தமிழர்களுக்கு சொந்தமான கம்பெனி அது. பூர்வீகம் நாகர்கோவில்/திருநெல்வேலி அவர்களுக்கு. துறைமுகங்கள் உள்ள அனைத்து நகரங்களிலும் அவர்களுக்கு கிளைகள். எம்.டி முதல் பியூன் வரை தமிழும் மலையாளமும் தான். 70 வயதான பிச்சை என்பவர் தான் எனக்கு பாஸ். எம்.டி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சித்தப்பாவாம். கனரா வங்கியில் பொது மேலாளராக ரிடையராகி இங்கே அட்வைசராக இருக்கிறார். சரளமான மலையாளமும் நெல்லைத்தமிழும் கலந்து பேசுவார். எப்போது கோபம் வருமென்று கணிக்க முடியாது. கோபம் வந்தால் கொலவெறி தான்.
'எலே.. ரமணி! இன்னிக்கி காபால் வரக்காங்கலியே. மங்களூர்ல என்ன மயித்துக்கு உக்காந்துண்டிருக்கே?' போனை எடுத்து அவர் உச்ச ஸ்தாயியில் கத்தும்போது பக்கத்திலிருந்த பாலக்காட்டுப்பையன் 'புள்ளி.. ச்சூடாயி' என யாருக்கோ விளக்கிக்கொண்டிருந்தான். எல்லா கிளை அலுவலகங்களிலிருந்து CABAL (cash bank balance) தினமும் காலை அவரது மேசைக்கு வந்துவிடவேண்டும். தாமதமானால் ரணகளம் தான்.
சில வேலைகளை எனக்குக்கொடுத்துவிட்டு அவர் வெளியூர் போயிருந்தார். தாய் மற்றும் துணை நிறுவனங்களுக்கு இடையேயான பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நான் கணக்கில் எழுதி அவர் திரும்பி வந்ததும் காண்பித்தபோது மனைஷன் அகாசத்துக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்தார்.
' உங்கள நா இந்த ஜோலிய செய்யச்சொல்லலியே.. ஆரைக்கேட்டு செய்தீரு?'
' இல்ல சார்.. பாங்க் ரிகன்சிலியேஷன் செய்யிறப்போ இந்த என்ட்ரியெல்லாம் போட்டாத்தான் டேலியாகும். அப்பறம் ஆடிட்டு பண்றப்போ ப்ராப்ளம் இல்லிங்களா?' (இப்ப என்னை பாராட்டுவார் என நினைக்க)
' நீங்க ஆடிகிட்டோ ஆடாமலோ ஒன்னத்தயும் சறைக்க வேணாம்.. மொதல்ல பேப்பர எடுத்துகிட்டு இங்கேர்ந்து போங்கேன்' என விரட்டினார். மனுஷனுக்கு BP எகிறிவிட்டது.
அங்கிருந்து கிளம்பும்போது 'ராமசாமி சார் தான் செய்யச்சொன்னார்' என நான் லேசாக முனுமுனுத்து தான் தாமதம்... அவர் உடனே போனை எடுத்து ' ராமசாமி எங்கடே.. வரச்சொல்லு அந்த தாயோளிப்புள்ளய'. பாண்ட்டை மேலே இழுத்துக்கொண்டு அவரது அறைக்கு ஓடிய ராமசாமி அடுத்த பத்து நிமிடத்தில் வெளியே வரும்போது என்னைப்பார்த்த பார்வையிலேயே கெட்டவார்த்தைகள் தெரிந்தன. படுகுள்ளமான ராமசாமி தான் ஃபைனான்ஸ் மானேஜர் அங்கே. டோம்பிவிலியிலிருந்து வருபவர். ஹிண்டு பேப்பரும் டிபன் டப்பாவும் கொண்ட சின்ன ப்ரீஃப்கேஸுடன் ஸ்டேஷனில் ட்ரெயின் வந்து நிற்கும்முன் ஓடித்தாவி ஏறி இடம் பிடிப்பவர்.
மறுநாள் கோபத்தையெல்லாம் மறந்து பிச்சை சார் சகஜமாக பேசிக்கொண்டு காபியும் கொடுத்தார். சாதாரணமாக நல்ல மூடில்தான் இருப்பார். ஆனால் இன்கம் டாக்ஸ், ஆடிட்டர், சி.ஏ, அல்லது ஆடிட் சம்மந்தமான அலர்ஜி வார்த்தைகளை கேட்டாலே கெட்ட கோவம் வந்துவிடும். அதை சரியாக கவனிக்காமல் நானும் 'என் ஃப்ரெண்டு ஒருத்தன் சார் இப்பிடித்தான்.. அவனும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ' என ஆரம்பிக்க.. " சரி சரி.. சீட்டுக்கு போங்க.. ச்சார்ட்டர்ட் அக்கவுன்டு.. சானி திங்கிற அக்கவுட்டு... " என முனுமுனுத்தார்.
நிறுவனத்தின் நிதி நிலை நன்றாக இருந்ததால் பங்கு வர்த்தகத்தில் நல்ல முதலீடு அவர்களுக்கு. பிச்சை சார் ஒரு நாள் பங்குத்தரகர் ஒருவரிடம் என்னை அனுப்பி....
'அவங்க உங்களுக்கு short selling சம்மந்தமான சில ட்ரான்சாக்‌ஷன் சொல்லித்தருவாங்க.. போய் கத்துகிட்டு வாங்க.. நல்லா கவனிங்க.. ஊட ஊட கேள்வி கேக்காதீய.. வெளங்கா?'
' ஓகே சார்.. ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..ராமசாமி சாரையும் கூட்டிகிட்டு போட்டுமா சார்.. அவருக்கும் வரனும்னு...' என இழுத்தேன.
' ராமசாமியப்பத்தி உங்களாண்ட நாங்கேட்டனா? உள்ளூர்லயே அவன் ஓணான் புடிக்கல..இனி உடையார்பாளையத்துலயா உடும்பு புடிக்கான்?'
எது கேட்டாலும் திட்டு தான். தலைதெறிக்க பங்குத்தரகர் ஆபிசுக்கு ஓடினேன். அந்த புரோக்கருக்கு பெருத்த சரீரம். முதல் இரண்டு மூன்று நாட்கள் தனது பெண் சோனாலி சொல்லிக்கொடுப்பாளென அவர் என்னை அடுத்த அறைக்கு அனுப்ப, ஓரிரண்டு பணியாளர்களுக்கு மத்தியில் பளிச்சென இருந்த அவரது மகள் சோனாலியை கண்டு நான் பிரகாசமடைந்தேன். ரோஸ் நிறம், அழகான விழிகள் மற்றும். உதடுகள், சுருள் இல்லாத நேரான கேசம், குஜராத்திப்பெண். பூனம் தில்லோன் சாயல். ஆனா செம்ம குண்டு.
பங்குச்சந்தையில் short selling பற்றி சோனாலி விளக்க ஆரம்பிக்க, அவளது அழகு என்னை சித்ரவதை செய்துகொண்டிருந்தது. தலையை மட்டும் புரிந்தமாதிரி அவ்வப்போது ஆட்டி வைத்தேன்.
ஷார்ட் செல் செய்ய பங்குச்சந்தை இறங்குமுகமாக இருத்தல் அவசியம். குறிப்பிட்ட அளவு பங்குகளை (இறுப்பில் அப்பங்குகள் இல்லையென்றாலும்) அன்றைய விலையில் விற்க ஆர்டர் செய்து, செட்டில்மென்ட் திகதிக்குள் அதே அளவு பங்குகளை மேலும் குறைந்த விலையில் வாங்கி நமது கணக்கை நிகர் செய்ய வேண்டும். மார்க்கெட் இறங்கினால் தான் இதில் லாபம். நிகர லாபத்தில் தரகர்களது வட்டி மற்றும் கமிஷனை கழித்துக்கொள்வார்கள். இதற்கு மார்ஜின் மணி என முன்பணம் கட்டவேண்டும். ஷார்ட் சேல் செய்தவுடன் பங்குகளை திரும்ப வாங்கும் முன் மார்க்கெட் திடீரென உயர்ந்தால் தலையில் துண்டு தான்.
சோனாலி படு சீரியஸாக விளக்கிக்கொண்டிருக்க, அவளது அருகாமை.. கமகம வாசனை.. திருச்சிக்கார பிரம்மச்சாரிக்கு ரசிக்க சொல்லியா தரவேண்டும். கனவில் அவளுடன் 'கண்மணி அன்போடு காதலன்' டூயட் பாடிக்கொண்டிருந்த எனக்கு 'சமஜ்கயானா?' என நடுவே அவள் கேட்டபோதுதான் பிரக்ஞையே வந்து...'ம்.. பில்குல்' என நான் தலையை ஆட்டியதிலேயே அவளுக்கு தெரிந்துவிட்டது, பையன் செம்ம ஜொள்ளென்று.
அடுத்த நொடி 'பப்பா...தமே ஹ்யா ஆவ்னெ' என அவள் கத்த கடோத்கஜன் மாதிரி அவளது அப்பா அசைந்து வந்தார். அப்போதைக்கு ஏதாவது சந்தேகம் கேட்க வேண்டுமே! ' அது சரி சார்.. இறுப்பிலில்லாத பங்குகளை ஷார்ட் சேல் செய்தபின் செட்டில்மென்ட்டுக்குள் ஆண்டிறுதி நாள் வந்துவிட்டால் எப்படி அதை கணக்கில் காட்டுவது?' என நான் கேட்க அவர் கொஞ்சம் காட்டமானார். அதை கவனிக்காமல் நான் 'ஆடிட்டுக்கு இது முக்கியமாச்சே! ஹ்ஹெ...என்ன நாஞ்சொல்றது?' என பாக்யராஜ் பாணியில் தொடர அவர் சுட்டெறிப்பது போல என்னை முறைத்து, மகள் பக்கம் திரும்பி குஜராத்தியில் ஏதோ கத்த, அவள் என்னை கனிவான பார்வை பார்த்து, கண்களால் கெஞ்சி, அவரையும் சமதானப்படுத்தி அனுப்பினாள்.
கடோத்கஜன் போனபிறகு 'ஹையா! சோனாலி எனக்கு சப்போர்ட் பண்ணிட்டா! ' என புளகாங்கிதமடைந்து இவள் பக்கம் திரும்பினால், 'புத்தூ!.. எல்லா டவுட்டும் உனக்கு ஒரே நாள்ல..அதுவும் அவர் கிட்டத்தான் கேக்கனுமா... நா இல்லியா?' என செல்லமாக கோபித்துக்கொண்டபோது இன்னும் அழகாக தெரிந்தாள்.
'அவருக்கு ஏற்கனவே ஹார்ட் ப்ராபரளம், BP வேற அதிகம். அதான் உங்ககிட்டே கோவிச்சுக்கிட்டேன்.. நீங்க நாளைக்கும் வாங்களேன் சொல்லித்தர்றேன்' என கண்களை அகலத்திறந்து தலையை சிலுப்பி தலைமுடியை பின்னுக்குத்தள்ளி கேட்ட மறுநிமிடம் மானசீகமாக 'நினைவோ ஒரு பறவை..' ஸ்டார்ட் ஆனது.
மறுநாள் திரும்ப ஆபீஸ் போகும் வரை ஒரே கனவு மயம் தான். தலை முடியெல்லாம் ஒழுங்காக சீவி ஆபிஸ் போனவுடன் அதிர்ச்சி. பிச்சை சார் கூப்பிட்டு ' நீங்க அங்கெ போகண்டா..ராமசாமிக்கு அந்த அபய்பாய் போன் பண்ணியிருக்காப்ள.. ஆமா அதென்ன..அந்த புரோக்கருக்கே நீங்க க்ளாஸ் எடுத்தீயளாமே!... அவன் நேமிஷ் ஷாவுக்கு அடுத்தபடியா பெரிய புரோக்கர் தெரியுமோல்லியோ?'
'இல்ல சார்... சும்மா டவுட்டு கேட்டேன்..'
' என்னவே பெரிய டவுட்டு... எலே ராமசாமி! உனக்குத்தானே போன் வந்துச்சி... என்னாங்கான் அவன்?'
ராமசாமி ஏதோ பெரியதாக விளக்க பிச்சை சார் உஷ்ணமாகிக்கொண்டே போனார் கிடுகிடுவென முகம் நடுங்க...அப்படியும் நிறுத்தாமல் ராமசாமி நீட்டி முழக்கி ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, 'எலே.. சுறுக்க சொல்லுலே! காளமாட்டு மூத்தரம் மாதிரி நீண்டுகிட்டே போவாத' என கோபத்துடன் என் பக்கம் திரும்ப,
' இல்ல சார்..ஆடிட் சம்மந்தமா டவுட்டு கேட்டேன்' என சொல்லி முடிக்கும் முன் பிலுபிலுவென என்னை உலுப்பியெடுத்துவிட்டார். ஆடிட்டே அவருக்கு பிடிக்காதென்பது.. சனியன்.. எனக்கும் அப்பப்போ மறந்து போகிறது.
அடுத்த மாதம் நான் வேறிடத்தில் வேலைக்கு சேர்த்தேன். சோனாலி கனவும் நின்றுபோனது..

Norwich Union ஶ்ரீனிவாசன்

சிலருக்கு இவர் 'Norwich Union ஶ்ரீனிவாசன்' .....சிலருக்கு 'Kanoo ஶ்ரீனிவாசன்'. எங்களுக்கு எப்பவும் 'சுதா ஶ்ரீனிவாசன்' (Sudha Srinivasan)...
80களில் பஹ்ரைன் வந்தவர்களுக்கு பெரும்பாலும் சுதா ஶ்ரீனிவாசன் தம்பதிகளை தெரியாமலிருக்காது. Kanoo எனப்படும் குழுமத்தின் நார்விச் யூனியன் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் (தற்போது Axa Insurance) 25 வருடங்களுக்கு மேல் இருந்தவர் ஶ்ரீனிவாசன்.
94இல் நான் பஹ்ரைன் வந்த புதிதில் டிரைவிங் லைஸென்ஸ் மற்றும் ஃபேமிலி விசா கிடைப்பதென்பது கனடாவுக்கு குடியுரிமை கெடச்ச மாதிரி. உடனே நண்பர்களுக்கு இனிப்பு வழங்குவார்கள். (தற்போது கனடா விசா என்பதே டிரைவிங் லெசென்ஸ் எடுப்பது மாதிரி 😃). சுமார் 9 மாதங்கள் ஃபேமிலி விசா கிடைக்காமல் பிரம்மச்சாரிகளுடன் தங்கியிருந்தபோது சக ரூம்மேட்கள் ஸ்வாமி Narayanaswamy Iyerr), மூர்த்தி (Rk Murthyy ), மற்றும் பீக்கோ(Bahrain India Exchange Co) லக்ஷ்மி நரசிம்மன், மற்றும் கணேஷ் Krishnamurthy Ganesamurthyy , Bhawani Narayanann) மூலமே எங்களுக்கு சுதா & ஶ்ரீனிவாசன் தம்பதிகளின் நட்பு கிடைத்தது.
பிறகு அவர்கள் வீட்டில் நடக்கும் வைபவங்களுக்கும், வார இறுதியிலும் வீட்டு சாப்பாடு சாப்பிட பிரம்மச்சாரிகள் நாங்கள் ஐந்தாறு பேர் அஜராகிவிடுவது வழக்கம். இவர்கள் மூலம்Hariharan Subramaniann,Sudha Hariharann போன்ற அருமையான நண்பர்களின் அறிமுகமும் அப்போது கிட்டியது.
குடும்ப விசா கிடைத்து பெரியவனுடன் (இரண்டு வயது) உஷா பஹ்ரைன் வந்திறங்கிய அன்றே சுதா ஶ்ரீனிவாசன் வீட்டில் சாப்பாடு. புதிய ஊருக்கு வந்திறங்கிய மனைவிக்கு என் நண்பர்களின் ஆதரவும் சுதாவின் கரிசனமும் மிகவும் பிடித்துப்போனது. சுதாவும் உஷாவும் ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை செய்தவர்கள்.
கம்பெனியின் அடிமட்ட கணக்காளனான என்னையும் 'சொல்லுப்பா ஶ்ரீதர்.. வா இப்பிடி பக்கத்துல வந்து உக்காரு ..' என வஞ்சையோடு அழைத்து பேசும் ஶ்ரீனிவாசன் படாடோபமில்லாத மனிதநேயமிக்கவர். எனது ஓவியங்களின் பரம ரசிகர். பல வருடங்கள் யோகா பயிற்சி செய்பவர். ஏராளமான பஹ்ரைனி நண்பர்கள் அவருக்கு. அலுவலகத்தின் சக-அலுவலர்களான பஹ்ரைனிகளும் அவரிடம் யோகா கற்றுக்கொள்ள வருவது வழக்கம். நிறைய இளைஞர்களுக்கு அவரால் வேலை வாய்ப்பு. ஆர்ப்பாட்டமில்லாத, அளவான, அமைதியான, தெளிவான பேச்சு. கம்பெனியின் உயர்பதவியிலிருந்து ரிடையராகி சில வருடங்கள் முன் புனே திரும்பினார்கள்.
பஹ்ரைனிலிருக்கும் தமிழர்களின் ஜனத்தொகையை தெரிந்துகொள்ள விரும்புவோர் நவராத்திரி கொலுவின்போது சுதா வீட்டிற்கு வந்ததாலே போதும்.
தற்போது குழந்தைகள் இருவரும் பஹ்ரைனிலேயே வேலை கிடைத்து இங்கே இருப்பதால் மறுபடியும் இத்தம்பதிகளை கடந்த இரு வருடங்களாக சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு. பெரியவன் சுஷில் உஷாவின் மாணவன். பைலட் படிப்பு முடித்து தனியார் விமான கம்பெனியில் வேலை.
பெண் ஶ்ரீரஞ்சனி பஹ்ரைனில் படித்தவள். அதிகம் வாய்திறக்காத கூச்ச சுபாவமுள்ளவள். எப்போதாவது வாயைத்திறந்து பேசினாலும் 'நச்' என அறிவுபூர்வமான பதில் வரும். (உதாரணத்திற்கு: பல வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் பஹ்ரைன் ஜல்லாக் கடற்கரையில் கழித்தபோது நண்பரின் மனைவி எல்லா குழந்தைகளுக்கும் பலூன் அல்லது பொம்மை போன்ற ஏதோ ஒரு பரிசு கொடுக்க, பத்தே வயதான ஶ்ரீரஞ்சனி தன் வயதிற்கு அந்த பரிசு சிறியது என்பதை 'Aunty.. I am too big to get this gift' என்று சொல்லி அசத்தினாள்). பூனே சிம்பயாசிஸ் சட்டக்கல்லூரியில் படித்து தற்போது பஹ்ரைனின் சிறந்தவொரு சட்ட ஆலோசகர்களிடம் வேலை. எங்கள் கம்பெனி Trafcoவிற்கான வழக்கு ஒன்றையும் பார்த்துக்கொள்கிறாள் என்பதை நம்பவே முடியவில்லை. அவளுடைய பாணியில்: she is too small to get such a good job.
சென்றவாரம் அவர்களில்லத்தில் ஒரு மணி நேரமும், நேற்று மாலை எங்கள் இல்லத்திலும் சுதா ஶ்ரீனிவாசன் தம்பதியருடன் பழைய பஹ்ரைன் நாட்களை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த இரண்டு மணி நேரத்தில் நிறைய தொலைபேசி அழைப்புகள். அவரது பழைய CEO மற்றும் அரபி நண்பர்களிடமிருந்து இல்லத்திற்கு வரவேண்டி விடுத்த சில அழைப்புகளுக்கு அரபிய பாஷையில் சுறுக்கமாக பதில் சொல்லிவிட்டு, செல்ஃபி எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
வளைகுடா நாடுகளில் பல வருடங்கள் இருந்துவிட்டு ஓய்வுபெற்றவுடன் தாயகம் திரும்புவோர் எப்படி மீதி நாட்களை ஆரோக்யமாக கழிப்பது என்பதை பத்து நிமிடத்தில் அழகாக விளக்கிய ஶ்ரீனிவாசனிடம், நேற்றும் 'சொல்லுப்பா ஶ்ரீதர்... இப்பிடி கிட்டே வா.. உக்காரு' என்ற தனக்கே உரிய பாணி....

குஜராத்தி ரெஸ்ட்டுரன்ட்

சென்ட்ரல் கஃபே தாண்டி அமெரிக்கன் மிஷன் ஆஸ்பத்திரி சிக்னலுக்கு முன் இடது புறம் திரும்பினால் மனாமாவின் குறுகலான சந்துகள் ஆரம்பம்....வரிசையாக பளபளவென ஜொலிக்கும் நகைக்கடைகள்..'கால் இந்தியா-250 ஃபில்ஸ்' பலகையுடன் கடைகள், பங்களாதேஷிகளின் காய்கறி/பழ வண்டிகள்... வேர்க்கடலை, அவல்,பொறி தானியங்கள் மூட்டையுடன் ரோட்டில் வைத்து விற்கும் ஈரானி மளிகைக்கடைகள்..
சற்றுத்தள்ளி குறுகலான ஒரு சந்துக்குள் நுழைந்தால் பிரம்மாண்டமான கட்டிடமொன்று. உள்ளே மாடியில் கிருஷ்ணன் கோவில்..பக்கத்தில் சுமார் ஐந்நூறு பேர் அமரக்கூடிய 'தட்டாய் ஹிந்து மெர்கன்டைல் கமிட்டி' மண்டபம். தியானங்களும், சத்சங்கங்களும், ஐயப்ப பூஜை, நவராத்திரி துர்கா பூஜை, குஜராத்தி கர்பா/டான்டியா, கணேஷ் சதுர்த்தி விழா மற்றும் பரதநாட்டிய அரங்கேற்றங்கள் நடத்த ஏதுவான பெரிய இடம். மண்டபத்தையொட்டி அகண்ட வெற்றிடம்.
ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் பஹ்ரைன் அரசு இந்தியர்களுக்கு இலவசமாக கொடுத்த இடங்கள் அவை. தங்களது வியாபார நிறுவனங்கள் மூலம் பஹ்ரைனின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் பாட்டியா, கேவல்ராம், தேவ்ஜி, கஜ்ரியா,அசர்போட்டா, காவலானி போன்ற குஜராத்தி, மார்வாடி குடும்பங்களுக்கு நன்றியை தெரிவிக்கவே அப்போதைய அமீர் அவர்கள் அந்த இடங்களை இலவசமாக வழங்க, நம்மவர்கள் அங்கே பிரம்மாண்டமான கோவில் மற்றும் இரண்டு பெரிய மண்டபங்களை கட்டிக்கொண்டார்கள்.
சுமார் ஐந்நூறு அறுநூறு பேர் ப்ளாஸ்டிக் தட்டுடன் வரிசையில் நிற்க ராட்சத சைஸ் பாத்திரங்களில் ப்ரசாதம் பரிமாறும் சேவக்குகள். போதும் என சொல்ல சொல்ல வெள்ளை அரிசி முதலில் நம் தட்டில் விழும். சற்றே நகர அடுத்தவர் ஒரு பெரிய்ய்ய்ய கரண்டியில் உருண்டை வரமிளகாய் மிதக்கும் சாம்பாரை விட, அதற்கடுத்தவர் காரசேவு கலந்த இனிப்பு பூந்தியை சாம்பார் மேல் தூவி இறைக்க, சுடச்சுட இனிப்பும் காரமும் கலந்த மகாபிரசாதத்தை கலந்து கட்டி, கண்களை உருட்டி, மூக்கில் ஜலம் சொட்ட ஜனங்கள் சாப்பிடுவார்கள்.
நேற்று கோவிலில் சரியான கூட்டம். நீண்ட வரிசையில் நின்றோம். மண்டபம் முழுவதும் அப்துல் கலாம் போட்டோக்கள் மற்றும் ராக்கெட் படங்கள். மேடையில் பெரிய பிள்ளையார் சிலை. விநாயகர் சதுர்த்தியன்று மகாராஷ்டிரா மன்டல் காரர்கள் அவ்விடத்தில் பூஜை செய்து பொது மக்கள் வந்து வணங்க பெரிய விநாயகர் சிலையை வைத்திருப்பார்கள். நாற்காலி மீது ஏறி நின்றபடி 'கண்பதி பப்பா மோரியா' கோஷமிட்ட கையோடு 'விவா காலிங் கார்டு ஏக் தினார்... ஆஜ் ஏக் ஹி தீன் கேலியே' என ஒருவர் கத்திக்கொண்டிருத்தார். சற்று நேரம் சாமி கும்பிடுவதை மறந்து ஜனங்கள் 'எவ்ளோ டாக் டைம் தர்றானாம்' என விசாரிக்க, 'ஆகே படோ' என வரிசையை விரட்டினார்கள்.
கோவிலை விட்டு வெளியே வந்து நேரே குஜராத்தி ரெஸ்ட்டுரன்ட் உள்ளே நுழைந்தால் அங்கேயும் செம்ம கூட்டம். என்னுடன் நண்பர் Hariharan Subramanian மற்றும் Sudha Hariharanஇருந்தனர். அந்த உணவகத்திற்கு வயது சுமார் ஐம்பது வருடங்கள் இருக்கும். இன்னும் பழைய மேசை நாற்காலிகள்.. மராமத்து எதுவும் செய்யாமல் பழைய கட்டிடமாக இருத்தாலும் அங்கே உணவு பிரசித்தம் என்பதால் எப்போதும் கூட்டமிருக்கும்.
உட்கார்ந்த சில நிமிடங்களில் கீ (ghee) தடவி சுடச்சுட ஃபுல்க்கா, எண்ணெயில் புரண்டு ஓடும் ஆலு சப்ஜி, கடி, பச்சை சட்னி வகைகள், கேரட்/சர்க்கரை/க.மாவு கலந்த ஏதோ ஒரு பதார்த், சன்னாமசாலா, உந்தியா, கேலாபாஜி.. நிமிடத்திற்கொரு தரம் சுடச்சுட ஃபுல்க்கா ரொட்டிகள் தட்டில் விழும். 'பினா கீ..' சொன்னால் தான் சுக்கா ரோட்டி..
'ராத்திரிக்கி நானெல்லாம் ஸ்ட்ரிக்ட்டா மூனு சப்பாத்தி தான்' என பீற்றிக்கொள்ளும் ஆசாமிகள் கூட சத்தம் போடாமல் எட்டு ஒன்பது ரொட்டிகளை மொசுக்குவார்கள். 'பஸ் கரோ பையா' என வெட்கத்துடன் பெண்கள் சொல்ல சொல்ல 'ஏக் ஔர் ரோட்டி லேலோ பெஹன்ஜி' என கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பார்கள். அடுத்து சூடான மூங்தால் கிச்சடி, அதன் மேல் மொண்டு ஊற்றப்படும் நெய்..கடியுடன் கிச்சடி தொண்டையில் வழுக்கிக்கொண்டு இறங்க சடுதியில் நமக்கு ட்ரைக்ளிசரைடு எகிறும்.
சற்றே புளித்த 'ச்சாஸ்' (மோர்) குடித்தபின் 'ஏவ்' என எழுந்து கல்லாவில் காசு கொடுக்கும்போது அங்கேயும் கச்சோரி, டோக்ளா, பாக்கர்வாடி, சேவ், தூத்பேடா, மலாய் பர்ஃபி, ஏலக்காய் பொடி தூவிய மஞ்சள் வர்ண ஜிலேபி..என அநியாயத்துக்கு நம் பசியை மறுபடியும் தூண்டுவார்கள்.
நண்பர் ஹரியிடம் விடைபெற்றுக்கொண்டு காரை நோக்கி நடக்கும்போது ' இனி ஒரு மாசத்துக்கு ஹோட்டல்லயே சாப்புடக்கூடாது.. ஆமா' என மனைவி சொன்னபோது சிரிப்பை அடக்கமுடியவில்லை.

சப்தரிஷி வைத்யநாதன்..

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் தாண்டி தஞ்சாவூர் ரோட்டிலிருந்து வலது பக்கம் திரும்பினால் பொன்மலை ரயில்வே காலனி ஆரம்பம். அடுத்த நூறு மீட்டருக்குள் பொன்மலை ரயிலடி..எதிரே மரங்களடர்ந்த பெரிய பங்களா வீடு. உள்ளே நுழைய ஒரு கேட்....வெளியே வர மற்றொரு கேட். பல நாட்கள் மணிக்கணக்காக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்த வாசல் கேட் அல்லவா! ரயில்வே டிவிஷனல் இஞ்சினீயர் சப்தரிஷி அவர்களின் வீடு அது. அவரது பையன் வைத்தி, நான், கணபதி (Ganapathi Subramanian) , கணபதி சுந்தரம், ஜோசப் எல்லோரும் CA பரீட்சைக்கு சேர்ந்து படிப்போம்.
இஞ்சினியரிங் கிடைக்காமல் கோபமாக திருச்சி செயின்ட் ஜோசப்ஸில் பி.எஸ்ஸி பௌதிகம் படித்து பிறகு CA படிக்க வந்தவர்கள். ரயில்வே ப்ளாட்ஃபார்ம், பொன்மலை ஆர்மரி கேட், ஜோசப் வீடு அல்லது ஏதாவது ஒரு ஷெட் என ஒவ்வொரு இடத்திலும் தினமும் சேர்ந்து படிப்போம். என்னை விட ஆரேழு மாதங்கள் சிறியவனான வைத்தி தான் எங்கள் குழுவில் முதலில் CA பாஸ் (1985) செய்தது.. அடுத்து கணபதி..கடைசியில் நான்.
தேவர் ஹால் எதிரே ஆடிட்டர் குமாரசாமியிடம் CA ஆர்ட்டிகிள்ஸ் செய்த வைத்தி, 80களில் முழுக்கை சட்டையை இன் செய்து கருகருவென சுருள் முடி மற்றும் பட்டை மீசையுடன் கோவார்டிஸ் அணிந்து லூனா மொப்பைட்டில் எங்கள் வீட்டிற்கு வரும் ஸ்டைலே தனி.
கொஞ்சமும் மாறாத அதே ஸ்டைலை இன்று காலை நாங்களிருவரும் பெங்களூர் Ballal ரெஸிடென்ஸியில் காலை உணவுக்காக சந்தித்தபோது கண்டேன். அரைக்கை லினன் சட்டை, ஜீன்ஸ், அதே பட்டை மீசை, குளிர் கண்ணாடி மற்றும் கட் ஷூவுடன் சினிமா நடிகன் போல வந்த வைத்தியிடம் எனக்கு பிடித்தது டான் என 9.30 க்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஆஜர் ஆனது.
பல வருடங்களுக்கு முன் தான் பெங்களூரில் ரியல் எஸ்டேட் கம்பெனி தொடங்கி, பப்ளிக் இஷ்யூ மற்றும் பங்குச்சந்தை லிஸ்டிங் போன்றவைகளுக்குப்பின், பல பெரிய குடியிருப்பு கட்டிடங்கள், ஹோட்டல் மற்றும் மால் போன்ற ப்ராஜெக்டுகள் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் அது.
எக்ஸிக்யூடிவ் டைரக்டராக வெற்றிகரமாக தனது நிறுவனத்தை நடத்தும் வைத்தியுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தபோது நான் கண்டது நேர்மை, கடும் உழைப்பு, தரமான கட்டுமானம், அதிக லாப நோக்கமின்மை, வர்த்தகத்தை நிலைநாட்டுதல் (sustainability). வியாபாரத்தை பேராசையில்லாமல் ஆர்வமுடன் செய்தாலே அதிக இலாபமீட்டமுடியும் என்பது வைத்தியின் கருத்து.
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நிதி மற்றும் அதன் பின்புலம் சார்ந்த CAவின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை வைத்தி விளக்க முறுகல் ரவா தோசை சாப்பிட்டுக்கொண்டே நான் கேட்டுக்கொண்டிருந்தேன். நாம் படித்த கணிதம் மற்றும் பொருளாதாரம் எந்த அளவிற்கு நிதி சார்ந்த வடிவமைப்புக்கள் (financial models) அமைக்க உதவுமென்பதையும் விவாதித்துக்கொண்டிருந்தோம்.(ஒந்து மிசி நீரு கொடி..)
திருச்சியின் பழைய நண்பர்கள் எல்லோரைப்பற்றியும் பேசிக்கொண்டிருப்பதில் என்னவொரு சுகம். குறிப்பாக கணபதி, பல்லடம் ஶ்ரீதர் (வேற யாரு.. நம்ம Sridharan Srinivasan தான்), வைத்தியின் அண்ணன் வெங்கடேஷ் (.L.s. Venkatesan ), ஶ்ரீரங்கம் ஶ்ரீதர் (ஓவியர் மாருதி இவரின் தாய்மாமன்)...
80களில் சின்ன பையனாக வலம் வந்த, தனது ஆடிட்டர் குமாரசாமியின் மகன் நளன் தான் 'சூது கவ்வும்' பட இயக்குநர் என்பது கூடுதல் தகவல்.
மேலும் நாலைந்து மணி நேரங்கள் பேச நிறைய சமாசாரங்கள் இருந்தாலும், நாங்களிருவரும் தற்போது பிள்ளைக்குட்டிக்காரர்களாகிவிட்டதாலும், மற்ற அலுவல்கள் இருப்பதாலும், கிளம்ப மனமில்லாமல் பழைய நினைவுகளை அசைபோட்டவாறே விடை பெற்றுக்கொண்ட என்னை தனது காரிலேயே இறக்கி விட்ட சப்தரிஷி வைத்தியநாதனை ( Vaidya Rishi ) நினைக்க பெருமையாக இருந்தது.

ராயர் மெஸ்...


காலை ஆறு மணிக்கு கணபதி போன் செய்து'ஶ்ரீதரா! பல்ல மட்டும் தேச்சுட்டு கெளம்பு... வாக்கிங் போகலாம்.' என்று சொன்ன அடுத்த அரை மணியில், உட்லண்ட்ல ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன். சிக்னலை கடந்து எதிரே பி.எஸ்.சிவசாமி சாலையை பிடித்தேன். ஜன நடமாட்டம் அதிகமில்லை. அதிகாலையில் துப்புரவுத்தொழிலாளர்கள் மட்டும் அங்கங்கே. ஶ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமி குரு பாதுகா மண்டபம் தாண்டும்போது எம்மெஸ்ஸின் குரல் அந்த காலை வேளையில் மனதிற்கு இதம்..
மஹாலக்ஷ்மி அபார்ட்மென்ட் வாசலில் காத்திருந்த கணபதி என்னுடன் சேர்ந்துகொள்ள மெல்ல நடத்தோம். இடது புறம் இந்திராணியம்மாள் தெரு, பாலூர் கன்னியப்பன் தெரு என குறுக்கு தெருக்கள். பழ வியாபாரிகள் கடை திறக்க பழங்களை அடுக்கிக்கொண்டிருந்தார்கள்.
"இதாண்டா வீணை பாலச்சந்தர் வீடு.." கணபதி காட்டிய வீட்டின் வாசல் பெயர்ப்பலகையில் வீணை வடிவத்தில் பாலச்சந்தர் என்று எழுதப்பட்டிருந்தது. 'நாலு பக்கம் ஏரி.. ஏரியில தீவு.. தீவுக்கொரு ராணி...ராணிக்கொரு ராஜா..' ஈஸ்வரி பாடும், அவர் இயக்கி நடித்த 'நடு இரவில்' படப்பாடல் நினைவுக்கு வந்தது.
ராயப்பேட்டை மெயின் ரோடு பிடித்து சுவாரசியமாக பேசியபடி நடந்தோம். பேச்சு நமது முகநூல் நண்பர்களைப்பற்றித்தான். கணபதி ஃபேஸ்புக் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருந்தான் போலும்.
"அதென்னமோடா ஶ்ரீதர்.. மாஞ்சு மாஞ்சு கஷ்டப்பட்டு பகவத் கீதாவையெல்லாம் கோட் பண்ணி எழுதினா நாலைஞ்சு கமென்ட்டும், ஏழெட்டு லைக்ஸும் தான் விழறது. ஆனா நீ பஹ்ரைன்ல ஃப்ரெண்ட்ஸோட குல்ஃபி சாப்ட்டுண்டு 'செல்ஃபி...குல்ஃபி' ன்னு தலைப்பை போட்டு எழுதினதுக்கு நூறு கமென்ட்டு கவனிச்சியா?"...
"சரி... அது யாருப்பா அந்த சிங்கை சிவா?"....
"கடசீல நம்ம சப்தரிஷி வைத்திய ஃபேஸ்புக்ல புடிச்சிட்டேம்ப்பா"..
"ஶ்ரீதரா... சில பேருக்கு பயமே இல்ல பாத்தியா... அந்த திருமலை சா என்னமா எழுதறாரு பாரு!.. என்.டி.டி.வி 'பரக்காவெட்டி தத்'தாம்". கணபதி சமீபத்தில் முகநூலுக்கு அடிக்ட்டாகிவிட்டான் என்பது தெரிந்தது.
இடது பக்கம் தண்ணித்துறை ஆஞ்சநேயர் கோவிலும் வலது பக்கம் கமலம் காபி ஓர்க்ஸ்( சமையல் வெண்ணை நெய் வியாபாரம்) கடந்து கச்சேரி ரோடுக்குள் நுழைந்து அருண்டேல் தெரு கடைசி கோவில் குருக்களிடம் விஜாரித்து வலது பக்க சந்தில் நுழைந்தால் 'ராயர்ஸ் உணவகம்' என்ற பச்சைக்கலர் பெயர்ப்பலகை.
அந்த சந்தில் பத்து பதினைந்து மோட்டர் பைக்குகள் மட்டுமே நிறுத்தலாம். த்ரீ ஃபோர்த் போட்ட வடநாட்டு மாணவர்கள் வாசலில் நின்று காபி குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆண்கள் பெண்கள் வெளியே காத்திருக்க மனோஜ் என்ற பையன் நம் பெயரை காகிதத்தில் குறித்துக்கொண்டான். அடுத்த இருபது நிமிடத்தில் நம் பெயரை கூப்பிட்டதும் உள்ளே நுழைந்தோம்.
தரையில் காபி டபராக்களை சிறுவர்கள் அலம்பிக்கொண்டிருக்க, அவர்களைத்தாண்டி குறுகிய காரிடரில் வழியில் நின்றுகொண்டு காபி ஆற்றிக்குடிப்பவர்களை கடந்து இடது பக்க அறையில் நுழைந்தால் மொத்தம் நான்கே மேசைகள், 16 பேர் மட்டுமே அமரலாம். தலைக்கு மேல் மங்கிய டியூப்லைட்டிற்கு மேல் ஸ்தாபகர்கள் படங்கள். சற்று தள்ளி ஆணியில் மாட்டப்பட்ட விசிறி, அம்பாள் படம், தமிழ் காலண்டர்.
டிபன் இலையில் தண்ணீர் தெளித்ததும் கெட்டி சட்னி (கின்னத்தில்), தே. சட்னி, கார சட்னி. இட்லி வரும்வரை கெட்டி சட்னியை விரல் விட்டு நக்கி பார்த்தேன். அருமை.. செம காரம். பின் வித்தியாசமான டிபன் சாம்பார். கேட்டவர்களுக்கு பொடி எண்ணெய். பிறகு சுடச்சுட இட்லி. பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட குழிக்கரண்டியால் நெய்ப்பொங்கலை பக்கெட்டிலிருந்து வழித்து நம் இலையில் போட்டவரை நன்றியுடன் பார்த்தேன். கருவேப்பிலை, மிளகுடன் வாயில் போட்ட நெய்ப்பொங்கலை ருசி பார்க்க நாக்கு நினைத்தாலும் மனம் முந்திக்கொண்டு அவசரமாக தொண்டையில் வழுக்கிக்கொண்டு இறக்கியது. உள்ளே பெரியவர் ஒருவர் பெரிய்ய கடாயில் உளுந்த வடை போட்டுக்கொண்டிருந்தார்.
பொங்கலையும் இட்லியையும் சட்னிகளில் தோய்த்து சாம்பாரில் முக்கியெடுத்து விழுங்கியபின், இலையிலிருக்கும் கரைந்த பொங்கல் சாம்பாரை ஸ்லர்ப்.. ஸ்லர்ப் என மக்கள் ஸ்வாஹா செய்து கொண்டிருக்க, அடுத்து மெதுவடை... ஆளுக்கு ஒன்று, இரண்டென இலையில் வைக்க, ஹிந்தி பேசும் சிறுவர்கள் சாம்பார் சட்னி அடுத்த ரவுண்டு பரிமாறினார்கள். சட்டென ஓரிரண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டோம். வயிறு நிரம்பினாலும் மேலும் இரண்டு இட்லி சாப்பிட ஆசை.
பத்தே நிமிடத்தில் கிடுகிடுவென பந்தி முடிய நிறைய பேர் எழுந்து கொண்டார்கள். 'இன்னும் மூனு இட்லி பாக்கியிருக்கு' என அந்தப்பெண் அறிவிக்க கூச்சத்துடன் நான் ஒன்று வாங்கிக்கொண்டேன்.
வாஷ்பேஸினில் கையலம்பும்போது கவனித்தேன்... மூன்று நான்கு கிரைன்டர்கள் சட்னிக்கும் வடைக்கும் ஆடி அரைத்துக்கொண்டிருந்தன. பெண்மணி காபி ட்ரேயை நீட்ட அருமையான ஃபில்டர் காபி பருகிய பின் வெளியே வரும்போது, முட்டித்தள்ளியபடி அடுத்த பந்திக்கு உள்ளே வரும் மக்கள்.
கன்னடம் பேசும் ராயர்களாம் அவர்கள். ஐம்பது, அறுபது வருடங்களுக்கு மேல் அந்த மெஸ்ஸை நடத்துகிறார்களாம். உள்ளே வடை போடுபவர் ஸ்தாபகரின் மூத்த மகன். அவரது பையன் மனோஜ் தான் பெயர்களை குறித்துக்கொண்டு நம்மை உட்கார வைப்பவர். மெக்கானிக்கல் இஞ்சினீயராம். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை.வெளியே வாடிக்கையாளர்களை கவனிப்பவர் மூத்தவரின் தம்பி மோகன். 'சார்... சொல்லுங்க' என சுவற்றில் காகிதத்தை வைத்து நாம் சாப்பிட்ட அயிட்டங்களைக்கு கணக்கு போட்டு பணம் வசூலிக்கிறார். பொடி, எண்ணெய், கெட்டி சட்னிக்கு தனியாக சார்ஜ். ஞாயிறு காலை இட்லி, வடை, பொங்கல் மட்டுமே.
எஸ்.வி.சேகர், க்ரேஸி மோகன் போன்ற பல பிரமுகர்கள் அங்கு வருகிறார்களாம். முன்பு எம்.ஜி.ஆருக்காக இங்கே டிபன் ஆர்டர் செய்வார்களாம்.
லாப நோக்கம் இல்லாமல் தரமான சிற்றுண்டியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதையும் ஐம்பது அறுபது வருடங்களாக சம்பாதித்த பெயரை காப்பாற்றும் நோக்கமே ராயர்களின் வெற்றியின் ரகசியம். உரிமையாளர் மோகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது (படம் பார்க்க) எளிமையும் நடுத்தர வர்க்கத்திற்குறிய வறுமையும் அவரிடம் தெரிந்தது. பெரியதாக அவர் ஒன்றும் சம்பாதிக்கவில்லை என்பது சத்தியம். கணபதி கொடுத்த அன்பளிப்பையும் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு ஐட்டமும் பத்து பதினைந்து ரூபாய் மட்டுமே என்றால் என்ன சம்பாதிப்பார் எனத்தெரியவில்லை.
திரும்ப முன்டகன்னியம்மன் கோவில் தெரு வழியாக வரும்போது நாக்கில் காரத்துடன் காபியின் சுவை இன்னும் இருந்தாலும் கனத்த மனதுடன் தான் ஹோட்டல் அறைக்கு திரும்பினேன்.