Thursday, January 31, 2013

சினிமா தியேட்டர்


எல்லா அம்மாக்களும் இப்படித்தான் சினிமாவுக்கு கூட்டிப்போகாமல் படுத்தியிருக்கிறார்களா......
பாதி நாட்கள் நானும் என் தம்பியும் தென்னூர் பாப்பு செட்டி தெருவில் ஆரம்பித்து அம்மா மற்றும் சித்தி பின்னாலேயே(சினிமாவுக்கு கூட்டிப்போக ) கெஞ்சிக்கொண்டே போவோம். தென்னூர் வண்டி ஸ்டாண்டு,அக்ரஹாரம், ஹிந்தி ப்ரசாரசபா,ரயில்வே கிராஸ் வழியாக போய் ராமகிருஷ்ணா தியேட்டர் அல்லது ஜுபிடர் அல்லது பேலஸ் தியேட்டர் போய் டிக்கெட் வாங்கி இரக்கமே இல்லாமல் எங்களை விட்டு விட்டு பல்லாண்டு வாழ்க,மீனவ நண்பன்,உழைக்கும் கரங்கள் போன்ற திராவ படங்களுக்கு அவர்கள் போனதும் நாங்கள் வந்த வழியே திரும்பும் போது கோவிந்தராஜ் கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஏதோ ஆர்க்கெஸ்ட்ரா பார்த்து விட்டு அமிருதீன் ஆஸ்பிடல் அருகே உள்ள மைதானத்திர்க்கு போவோம்.பெரிய கூட்டத்திற்கு நடுவே ஒருவன் தரையில் படித்திருப்பான்(வாயில் நுரை) இன்னொருவன் 'அய்யாமாருங்க..அப்பாமாருங்க...இந்த ஒடம்பு இப்போ 4 அடி மேலே போகும்...எல்லாம் இந்த வாய்க்கு ..வயித்துக்குத்தான்' என்று சொல்வான். அது எதற்கு இருந்தாலும் சரியென்று நாங்களும (1 மணி நேரத்திற்கு மேல்) அவன் கீழே படுத்திருப்பவன் மேல் துணிகளை போட்டு மூடி கையை உயர்த்தினால் அந்த உடல் 3 அடிக்கு (மெய்யாலுமே) உயர்ந்ததை பார்த்து விட்டு தான் கிளம்புவோம்.(பாதியில் எழுந்து போனால் பேதியில் போகுமென்று வேறு பயமுறுத்தியிருக்கிறான்)
ஒருவழியாக இதெல்லாம் முடிந்து இருட்டும் நேரம் வீடு திரும்பினால் வாசலில் அம்மா(மீனவ நண்பன் முடிந்து). அப்புறமென்ன... 'பளார்' தான்

தியேட்டரில் படம் பார்க்கும் போதே என்ன பதார்த்தங்கள் சாப்பிடலாம் என்ற கட்டுப்பாடு எங்கள் வீட்டில் இருந்ததுண்டு. அதாவது கடலை மிட்டாய் SAFE என்று அவர்கள் நினைக்க, நாங்கள் பீடா (கலர் தேங்காய் தூள் தூவியது) வாங்கினால், 'காசுனி வேஸ்ட் சேஸ்திவேரா ' என்று சொல்லி நடு தொடையில் கன்னிப்போகும் அளவிற்கு ஒரு non stop கிள்ளு. அதை நிறுத்த ஒரே வழி எனக்கும் என் தம்பிக்கும் தெரியும். அந்த பட இண்டர்வல்லில் (வலி இல்லையென்றாலும்) 'லேது..லேது .. ஒத்து...' என்று காட்டுக்கத்தல் போடுவோம்.எல்லோரும் பார்க்கிறார்கள் என்று வெட்கப்பட்டு அம்மா (நுவ்வு இன்டிக்கி ரா.. என்று சன்னமாக மிரட்டி) விட்டுவிடுவார்கள்.
முக்கோண காய்கறி சமோசா, 8 track முறுக்கு,முட்டைகோசு வடை(பிளாசா தியேட்டரில் மட்டும்),டிர்ரிங்க் என்று சாவியால் ஒலிஎழுப்பியபடி காளி மார்க் கலர் , இதெல்லாமல் சாப்பிடாமல் தமிழ் படமா?( அப்போது எங்களுக்கு MGR ராதா சலூஜாவை கல்யாணம் செய்தால் என்ன,செய்யாட்டி என்ன

Wednesday, January 30, 2013

P.B.ஸ்ரீநிவாஸ்

ஒவ்வொரு வருடம் மயிலாப்பூர் நியூ வூட்லண்ட்சில் தங்கும்போது அங்கே பிரபல பின்னணிப்பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் அவர்கள் சிற்றுண்டி உண்ண வருவதை பார்க்கும்போது அவர் அங்கு வரும் ரெகுலர் வாடிக்கையாளர் என்பது தெரிந்தது.

 மற்றவர்கள் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. நான் மட்டும் அவரை அதிசயமாக பார்த்தேன். அருகே போய் பேச தயக்கம் மற்றும் பயம் கலந்த மரியாதை. எத்தனை பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனித்துவம் அமை...த்து legendry singer ஆக வலம் வந்தவர்.

 உறவினர்கள் புடைசூழ சாதாரண பொதுஜனமாய் ஜரிகை தலைப்பாகை, பஞ்சகச்சம்,அங்கவஸ்திரத்துடன் பொங்கல் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

 Action மற்றும் angry youngman ஹீரோக்களுக்கு பாடாமல் குடும்பஸ்த ஜெமினிகளுக்கும், குறும்புக்காரமுத்துராமன்களுக்கும் ரவிச்சந்திரன்களுக்கும் , கண்ணை உருட்டி காதல் செய்து பிறகு காதலியை கழட்டி விடும் பாலாஜிகளுக்கும்,அவ்வப்போது நாகேஷுக்கும், ஆனந்தன் போன்றோருக்கும், நீட்டிமுழக்கி வாயை குவித்து பேசும் ஸ்ரீகாந்த்களுக்கும், TMS போன்றோருக்கு ஜுரம் வரவைத்த 'என்னருகே நீயிருந்தால், பால்வண்ணம் பருவம் கண்டேன் என்று MGR க்கே பாடி அசத்தி ஒரு பெரிய சகாப்தத்தை உருவாக்கி, நிரந்தர ஓய்வு பெற்ற பின்னும் மனோஜ் கியானுக்காக 'தோல்வி நிலையென நினைத்தால்' என்று சாதனை படைத்தவர் ஆயிற்றே...

பொன்மலை


இரவு உணவுக்குப்பின் சுமார் 9 மணிக்கு சைக்கிளின் கேரியரில் MC.Shukla வின் Accountancy book வைத்ததால் பின் சக்கர காற்று இறங்கி விட்டதா என்று  ஒரு முறை சரிபார்த்த பின்,திருச்சி மன்னார்புரம் circuit house காலனியிலிருந்து கிளம்பினேன். சிலீர் என்றடித்த காற்றில் மெல்ல பெடலை அழுத்தி TVS tollgate தாண்டி G-Corner வழியாக பொன்மலை ரயில்வே  காலனி வந்து சேர்ந்தேன். ஏதோ IIT Compusக்குள் நுழைந்தது போல் உணர்வு. பெரிய மரங்களுக்கு நடுவே தள்ளி தள்ளி பெரிய வீடுகள். ஒலியும் ஒளியும் முடிந்து TV யை அனைத்து வீடுகளில் பாத்திரம் துலக்கும் சப்தம். மாடியில்லாத ஒட்டு வீடுகள்.முன்புறம் பெரிய தோட்டம்,திண்ணை, விசாலமான ஹால்,சமையலறை, 2 படுக்கைஅறை,பின்புறம் சிறிய தோட்டம் என்று வில்லா போன்ற வீடுகள். எல்லோரும் ரயில்வேயில் பணிபுரிபவர்கள். சிவில் இஞ்சினீயர் வீட்டுக்கு extra கூரை மற்றும் கேட், டிவிஷனல் இஞ்சினீயர் வீட்டில் எப்போதும் 2 தோட்டக்காரர்கள். அக்கவுன்ட்ஸ் சூப்பர்வைசர் வீட்டில் குழந்தைகளுக்கு ரயில்வே பில் புத்தகம் தான் ரஃப் நோட்புக். எல்லாமே ரயில்வே மயம்தான்.ஆருயிர் நண்பன் கணபதி சுப்பிரமணியன் வீடு வந்து சேர்ந்தேன்.  அதாவது CA exams combined studyக்காக.

வாசலில் அவனது அப்பா. மர பெஞ்சில் அமர்ந்து துடையில் கட்டியிருக்கும் காவி வேட்டியில் துடைத்த ஈர வெத்திலையை  புகையிலை சகிதம்உள்ளே தள்ளி 'வாங்கோ.. preparations எல்லாம் எப்பிடி போய்ண்டிருக்கு' என்று வரவேர்ப்பதற்குள் நம் அம்பி (வீட்டில் கணபதியின் nick name) குளித்து முடித்து கமகமவென விபூதி வாசனையுடன் வருவான். அப்பா முன்பு அவ்வளவு மரியாதை.அவனது சைக்கிளில் Rathinam's Costing  advisor புத்தகம்.

நேராக பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் போனால் அங்கே வைத்தி, ஜோசப் மற்றும் சுந்தரம் காத்திருந்தார்கள். கணபதியைத்தவிர எல்லோரும் இன்டர்மீடியட் எக்ஸாம்... கணபதி பைனல் எழுதுகிறான்.எல்லோரும் 2வது பிளாட்பாரத்தில் 2,3 விளக்கு கம்பங்களுக்கு கீழே புத்தக சுமைகளை இறக்கி படிக்க ஆரம்பித்தோம்.

எனக்கு CAயில்கணபதி தான் குரு.tax மற்றும் accountancy சந்தேகங்களை  விலாவாரியாக டிஸ்கஸ் செய்து தீர்த்து வைக்கிறேன் என்று ஆரம்பிப்பான். நடுவே "ஆமா... நீ படிச்ச அலகாபாத் யுனிவேர்சியுயிலே பொண்ணுங்கள்லாம் எப்பிட்றா ஸ்ரீதர் ?" என்று மிக வெகுளியாய் ஆரம்பிப்பான். நாமும் இதற்குத்தானே காத்திருந்தோம்.அலகாபாத் யுனிவெர்சிட்டி யுவதிகளைப்பற்றி மானாவாரியாக நேரமே போவது தெரியாமல் பேசி முடிக்க ஒரு மணி நேரம் போதாது.

'சரி... சரி... ரொம்ப பேசிட்டோம்.. rockfort எக்ஸ்பிரஸ் போனபின் ஸ்டார்ட் செய்யலாம்'  என்று முடிவெடுத்து அருகே காண்டீனில் டீ சாப்பிடுவோம்.rockfort வந்ததும் மேலும் கீழும் ஒரு ரவுண்ட் போய், பிறகு படிக்க ஆரம்பிப்பதற்குள் இரவு 11 மணி தாண்டிவிடும்.

அதற்குள் 'எவண்டா இந்த Holding company' அக்கௌன்ட்சை கண்டு பிடிச்சது'  என்று சலித்துக்கொண்டு மெல்ல வைத்தி,ஜோசப் சேர்ந்து கொள்வார்கள். பேச்சு மெதுவாக பாரதிராஜா படங்கள், இளையராஜா இசை என்று திசை மாறும். மீண்டும் கோகிலாவில் ஸ்ரீதேவியை விட தீபாவே யௌவனமாக இருப்பதை ஏகமனதாக முடிவெடுத்து , 'வாடா என் மச்சி.. வாழக்கா பச்சி' TR இன் வசனங்களை ரசித்து, ராஜநாகம் பட கடைசி சீனில் 'வாத்தியார் சார்..நா வர மாட்டேன்.. ஏன்னா….' என்று நீட்டி வசனம் பேசும் ஸ்ரீகாந்தை கலாய்த்துநேரம் 12 மணி 30 நிமிடம்..

 ஒரு 10, 15 நிமிடம் சீரியஸாக படிப்பு போகும். பிறகு மெதுவாக பேச்சு…..  .. 'திருநாவுக்கரசு ஆடிட்டர் பரவாயில்லடா கண்டுக்க மாட்டார்... ஆனா..எங்காளு ஆடிட்டர்  இருக்கானே .. செட்டியாருன்னா தான் அவங்களுக்கு புடிக்கும்...அது சரி.... உங்க ஆபிசிலே அந்த ஸ்ரீநிவாசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லீனாவுக்கு மட்டும் எப்பிடி எக்ஸாம் லீவு தர்றான்.' நாம கேட்டா சட்டம்பேசறான் ...”.

அப்படியே பேச்சு லீனாவை பற்றி போகும். "பேருதான் லீனா .. பாக்க அய்யராத்து பொண்ணு மாதிரி இருக்காப்பா" இது நான்.

"மாதிரி இல்லடா... அவ அய்யருதான்".இது கணபதியின் விளக்கம்.

"எப்பிடிப்பா அவங்கப்பா ஆரோக்யராஜ் (ஜமால் முகமது காலேஜ்ல HOD) கிறிஸ்டியனாசே"

 "ஸ்ரீதரா..அந்த செயின்ட் மேரீஸ் தோப்புல இருக்குற அத்தன familyயும் கன்வெர்டட் பிராமின்ஸ் தான்... வீட்ல இப்பவும் ஆச்சாரமா இருப்பாங்க... ஒன்னு ரெண்டு மொட்ட பாட்டிய கூட அங்க பாக்கலாம்"

கணபதியின் நீஈஈஈஈண்ட விளக்கத்தை நாங்கள் வாய் பிளந்தவண்ணம் கேட்டுக்கொண்டிருப்போம். அப்ப அக்கவுன்ட்ஸ் புக்,காஸ்டிங் புத்தகங்கள் எல்லாம்... ? அதே மின் கம்பங்களுக்கு கீழே திறந்து கிடக்கும்..
.....நேரம் 2 மணி..

"ச்சே! நாளைல இருந்து உன்கிட்ட டவுட்டே கேக்க மாட்டேம்பா.. ஒழுங்கா படிச்சு இந்த தடவ பாஸ் பண்ற வழிய பாக்கணும்.." போன்ற சபதங்களுக்குப்பின் எல்லோரும் தத்தம் புத்தகமூட்டைகளுடன் சைக்கிளை மிதிக்கத்தொடங்குவோம். வீடு போய் படுக்க 3 மணியாகும்.

மறுநாள் இரவு 9 மணிக்கு 'ஒஸ்தாம்மா' என்று சொல்லி படிக்க கிளம்பும்போது வாசலில் என் அம்மா பக்கத்து வீட்டு கல்பனாம்மாவிடம்   " பாவம் புள்ள ..தெனமும் விடிய விடிய படிக்குது.. இந்த தடவ CA பாஸ் பண்ணா சரி" என்று சொல்வது காதில் விழுவது கேட்டு பெடலை சற்று வேகமாக அழுத்தினேன்..