சுமார் 30 வருடங்களுக்கு முன் வடிவமைப்பு மற்றும் மேப்பாட்டுத்துறையில் (Design & Development) காலடி எடுத்து வைத்த இவர் அடுத்து 15 வருடங்கள் அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவுடன் விப்ரோ நிறுவனம் இவரை கொத்திக்கொண்டு போனது.
அங்கும் 8 வருடங்களுக்கு மேல் கோலோச்சியவர். வணிக செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகிக்க நிறுவன மென்பொருளை உருவாக்கும் SAP எனப்படும் ஜெர்மனியைச்சார்ந்த மென்பொருள் கொண்ட ப்ராஜெக்ட்டுகளை தாயக்கட்டை போல அநாயசியமாக உருட்டி விளையாடி விப்ரோ கம்பெனிக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய இவர் அடுத்து எடுத்த முடிவு அபாரம்.
ஆம்! பலருக்கும் வேலை வாய்ப்பை அளிக்கும் NextGEN3DTech எனும் தனது சொந்த நிறுவனத்தை துவங்கினார்.
3D printing, Vacuum casting, Injection moulding போன்ற நவீன தொழில்நுட்பங்களை பிரயோகித்து வடிவமைப்பு முதல் மொத்த உற்பத்தி வரை வாடிக்கையாளர்களுக்கு முன்மாதிரி தீர்வுகளை வழங்குகிறது இவரது நிறுவனம்.
தொழில்நுட்ப கண்காட்சிகளா! அங்கே ஒரு விற்பனையகம் (Stall) அமைத்து தனது சேவையை சந்தைப்படுத்துவார். 3D பிரிண்டர் மூலம் மகாபலிபுர கோவிலை அழகாக வடிவமைத்திருப்பார் பாருங்கள், அழகு!
பல கல்வி நிறுவனங்களிலும், பெறு நிறுவனங்களிலும் உரையாற்றி இளைய தலைமுறையை ஊக்குவிப்பவர். பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் இவரை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், என்னவொரு மேதாவி இவரென.
இதுவரை சொன்னதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கர்நாடக சங்கீதம் கற்ற இசை வல்லுநர் இவர் என்பது கூடுதல் தகவல். வலைத்தளத்தை பீராய்ந்து ராகங்கள் பற்றியும் நிறைய தெரிந்துகொண்ட வித்தகரும் கூட இவர். சினிமா பாடல்களை விரும்பி கேட்பதுடன் அந்த ஆராய்ச்சியிலும் குதித்து அது சார்த்த சுவாரசியமான பதிவுகளையும் போட்டு நம்மை மலைக்க வைப்பவர்.
நிரம்ப படித்த இளைஞர். இஞ்சினீயரிங் மற்றும உலகப்புகழ் பெற்ற IIM இல் Executive General Management Programme போன்ற உயர்படிப்புகள் படித்தவர்.
சில வருடங்கள் முன் நண்பன் Ganapathi Subramanian இல்லத்திருமணத்தில் இவரை சந்தித்தபோது என்ன வியக்க வைத்தார். பந்தா, படாடோபம் ஏதுமின்றி எளிமையாக பேசிக்கொண்டிருந்தார்.
தான் கற்ற படிப்பையும், வேலை அனுபவத்தையும், தனது சொந்த நிறுவன உழைப்பையும் முதலீடு செய்து அதை பணமாக மாற்றும் வல்லமை கொண்டதுடன், இசை எழுத்து என பல துறைகளில் வெற்றிகரமாக வலம் வரும் இவர் இளைய தலைமுறை மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் ஒரு முன்மாதிரி (Role model) யாகத்திகழ்கிறார் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
No comments:
Post a Comment