Sunday, June 22, 2025

பெங்களூர்-பம்பாய்-ஷீரடி!

பம்பாய் நண்பன் ரெங்குவின் மகளது திருமணம் முடிந்ததும், பெங்களூர் திரும்ப ஒரு நாள் இடையில் இருந்ததால் ஷிரிடி சாய்பாபா கோவில் போய் வந்து விடலாமா என யோசனை உதிக்க, உடனே பெரியவன் வாடகைக்கார் ஏற்பாடு செய்துவிட்டான்.
நாமே கார் ஓட்டிக்கொண்டு போய் வந்துவிட முடிவு செய்தோம். வண்டி நாங்கள் தங்கியிருந்த துர்பே பகுதிக்கே வந்து விட, அங்கிருந்து ஷிர்டி கிளம்பினோம். தொழிற்பேட்டை பகுதியென்பதால் சுற்றிலும் பெரிய டிரெய்லர்கள் மற்றும் கரடுமுரடான சாலைகள். தானே, கல்வா, மும்ப்ரா என சிறிய டவுன்களையடுத்து கல்யாண் தாண்ட, சாலைகள் ஓரளவு பரவாயில்லை.
பிவாண்டி பகுதி கடக்கும்போது சரிய்யான வெயில். பல வருடங்கள் முன் சிவசேனைக்காரர்கள் மஹாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே எனும் போராட்டத்தை துவங்க, கிளர்ச்சி வெடித்து முதலில் பற்றி எரியத்தொடங்கியது பிவாண்டி தான். ஆடிட்டுக்கு ஒரு முறை அங்கே போயிருக்கிறேன். பசித்தால் சாப்பிட சரியான உணவகங்கள் இருக்காது அப்போது. தற்போது நெடுஞ்சாலை தாபாக்கள் வந்து விட்டன. இருந்தாலும் மராட்டியர்களுக்கு மாலை நாலு மணி வாக்கில் கொறிக்கவோ, சாய் குடிக்கவோ பிடிக்காதோ என்னவோ நெடுஞ்சாலையில் டீக்கடைகள் அதிகம் காணோம்.
பம்பாய்-நாக்பூர் நெடுஞ்சாலை 2022இல் சீரமைக்கப்பட்டது. அடுத்த 3 மணி நேரத்தில் கொஞ்சம் மலைப்பகுதி மற்றும் சிறிய குகைப்பாதையை அடுத்து இகத்பூரி தாண்ட, பாலாசாஹெப் தாக்கரே சம்ருத்தி மஹாமார்க் எனப்படும் உயர்தள நெடுஞ்சாலை (elevated highway) ஆரம்பம். 105 கிமீ தூரத்திற்கு ஒரே நேர் ரோடு, அட்டகாசமாக போக்குவரத்தே இல்லாத நெடுஞ்சாலை. 120 கிமீ வேகம் வரை அனுமதிக்கிறார்கள். வழியில் வண்டியை சாலை ஒரத்தில் நிறுத்தவும் தடை. ஒவ்வொரு 20,30 கிமீ தாண்டி அங்கங்கே எமர்ஜென்சி பார்க்கிங் மட்டும் இருந்தது.
மனைவி சாய் தீர்த் எனும் தீம் பார்க்குக்கு பெங்களூரிலிருந்தே முன்பதிவு செய்தருந்தார். மாலை 6.30க்குள் மூடி விடுவார்கள் என்பதால் வண்டியின் வேகத்தை கூட்டி அங்கே சென்றடைந்து கார் பார்க் செய்யும்போது 6.25. உஷா ஓடிப்போய் டிக்கெட்டை காண்பித்து ‘ந்தா எங்கூட்டுக்கார்ரு கார் நிறுத்திட்ருக்கார். வந்துட்டே இருக்கார்’ என அவர்களிடம் கெஞ்சி, ஒரு வழியாக நான் அங்கே வந்து சேரும்போது நேரம் சரியாக 6.30, எங்களை உள்ளே விட்டதும் கேட்டை சாத்தினார்கள். எல்லாமே யாரோ செய்யும் செயல் போலிருந்தது.
இருண்ட குகைப்பாதையில் சிறிய ரயில் வண்டி தண்டவாளத்தில் விடுகிறார்கள். நாங்கள் ஒரு பெட்டியில். இந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்களான துவாரகாநாத், பத்ரிநாத், பூரி ஜகன்னாத், மதுரை மீனாட்சியம்மன், அம்ரித்சர் பொற்கோவில் என ஒவ்வொரு கோவிலின் மாடல்களை அதே பொலிவுடன் அமைத்திருந்தார்கள். ஒவ்வொரு கோவிலின் முன்பும் அந்த குட்டி ரயில் நிற்க ஒலிபெருக்கியில் கோவிலைப்பற்றிய சுறுக்கமான தகவல்கள்.
அடுத்து 3D ஷோ. அனுமன் இலங்கை எரித்த கதை. கடலில் பெரிய்ய மலைப்பாம்பு ஊஊஊஊவென 3D கண்ணாடி வழியாக நம் முகத்துக்கு நேரே வரும்போது ஜில்லென தண்ணீரை நம் முகத்தில் பீய்ச்சியடித்து, பாம்பு வாயிலிருந்து உஸ்ஸென காற்றையும் நம் மேல் அடித்து, போதாதைக்கு நம் இருக்கையையும் கடாமுடாவென ஆட்டுகிறார்கள். சிமுலேஷன் அபாரம்.
சரியாக 9 மணிக்கு கோவிலுக்குள்ளே போய் கார் பார்க்கிங்கை தேட, யாரோ ஒரு இளைஞன் ஓடி வந்து ‘கார் பார்க்கிங் நான் காட்றேன்… வாங்க! என்றபடி முன்னால் ஓட, அவன் பின்னாலேயே வாகனத்தை செலுத்தினேன். ‘நிறைய ஏஜென்ட்டுகள் டிக்கெட் வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றுவார்கள், ஜாக்கிரதை!’ என அங்கங்கே அறிவிப்பு சுவரொட்டிகள். இவனை நம்புவதா என யோசித்தபடியே அவன் பின் செல்ல, சுமார் 200 மீ தொலைவில் கார் பார்க் இடத்தை காட்டினான் மூச்சு வாங்கியபடியே. அடுத்து பிரசாத கடைக்கு கூட்டிப்போய் பால்கோவா, சாய்பாபாவிற்கு சாத்த வண்ண வஸ்திரம் இத்யாதி வாங்க வைத்தான். ‘உங்க மொபைல் போனை இங்க விடுங்க’ என மற்றொரு கவுண்ட்டர் கூட்டிப்போனான். ‘ஆரத்தி பார்க்க ரிசர்வேஷன் பேப்பர் வாங்கி பார்த்து ‘இது ஸ்க்ரீன் ஷாட்டாச்சே! இது செல்லாது. QR கோடையும் காணமே!’ என்றபடி இன்னொரு கடைக்கு கூட்டிப்போய் எங்கள் மொபைல் நம்பரைச்சொல்ல, ஏதோ வெப்சைட்டில் எங்கள் டிக்கெட்டை தரவிறக்கம் செய்வித்து கொடுத்து 20௹ கொடுக்கச்சொன்னான்.
பெரிய்ய தொகை ஒன்றை கமிஷனாக கேட்கப்போகிறான் என நினைத்த எங்களிடம் எந்த காசும் கேட்காமல் ‘அதோ அந்த கேட்டுக்கு போங்க, ஆரத்திக்கு கூட்டிப்போவாங்க’ என்றபடி கிளம்ப எத்தனித்த அந்த இளைஞனிடம் ‘அது சரி.. நீ யாருப்பா? எல்லா உதவியும் செய்சிட்டு கிளம்பறே, காசும் வேணாங்கறே!’ என்ற என்னிடம் அவன் சொன்னது ‘அந்த பிரசாத கடைக்கு கஸ்டமர்களை கூட்டிப்போவது மட்டும் என் வேலை. உபரியாக கார் பார்க்கிங் காண்பிப்பது, மொபைல் போன் டெபாசிட் கவுண்ட்டர் காண்பிப்பது என எல்லா உதவியும் செய்கிறேன்’ என்றபடி ஓடி மறைந்தான். நான் வாங்கிய பிரசாதம், வஸ்திரம், கார்பார்க் டிக்கெட் என எல்லாம் சேர்த்து ரூ. 450 தான் செலுத்தியிருந்தேன். எல்லாமே இயந்திரகதியில் நடப்பதுபோல இருக்க, எங்கிருந்தோ யாரோ ஆட்டுவிப்பது போன்ற பிரமை.
முன்பதிவுச்சீட்டைக்காட்டி சாய் சன்னதி முன் ஆஜரானோம். ஓரளவு கூட்டம். பத்து மணிக்கு ஆரத்தி ஆரம்பமாகி மெய்சிலிர்க்க வைக்கும் இருபது நிமிடங்கள். அமர் அக்பர் ஆண்டனி படத்தில் சாய்பாபா கோவில் ஆரத்தியின்போது வில்லன் ரஞ்சித்தால் விரட்டப்பட்ட கண்ணில்லாத நிரூபா ராய் ஊர்ந்து ஊர்ந்து சன்னதி பக்கம் வர ‘ஷிர்டி வாலே சாயி பாபா’ பாடல் அந்த காட்சியை மன்மோகன் தேசாய் செம்மையாக பில்டப் செய்தது நினைவுக்கு வந்தது.
ஊரில் எல்லா கடைகளுக்கும் சாய் பெயர். இரவு பதினோறு மணிக்கு மேல் சேஃபாக தால் கிச்சடி முடித்து அறைக்கு தூங்கிப்போனோம்.
மறுநாள் சாய் சாகர் எனும் ஓட்டலில் காலை உணவு. அவர்கள் வாங்கும் 60 ரூபாய்க்கு இரண்டு பேர் சாப்பிடும் அளவு தாராளமாக பொங்கல், 60 ரூபாய்க்கு மிகப்பெரியதாக 2 பூரி மசால், 30 ரூபாய்க்கு அட்டகாசமான ஃபில்டர் காபி என எல்லாமே தாராளமயம்.
பைத்தானி புடவைகளுக்கு ஷிர்டி பிரசித்தம் என கேள்விப்பட்டு அதையும் தேடிப்பிடித்து வாங்கி மதியம் 12.30க்கு வண்டியை எடுத்தோம். வாடகை வண்டியான ப்ரெஸ்ஸா நன்றாக இருந்து. டீசல் வண்டி என்பதால் இஞ்சினின் சத்தம் இயக்குநர் சுந்தர்ராஜன் குரல் போல. ஷிர்டி, நாசிக், கசாரா, ஷஹாபூர், தானே என சீரான சாலைகள். தாபா ஒன்றில் பஞ்சாபி லஸ்ஸி (சுமார் தான்) அடித்து கல்யாண் தாண்டும்போது அப்படியே தானே பகுதி நண்பர்களை பார்த்து விட்டுப்போகலாமா என ஆசை. 5 மணிக்குள் ஏர்போர்ட் சென்றடையவேண்டுமென்பதால் வேகத்தை கூட்டி பாண்டுப் LBS மார்க்கையடுத்து வலதுபுறம் திரும்பி பொவாய் ஏரி கடந்து அந்தேரி பகுதி நுழைய, பம்பாய் உள்ளூர் போக்குவரத்தில் உ.பி பையாக்களின் டாக்சிகளினூடே வண்டி ஓட்டுவது சுகானுபவம்.
4.45க்கு டெர்மினல் 1 இல் புகுந்து, அங்கே காத்திருந்த ரென்ட்ட கார்காரனிடம் வண்டியை ஒப்படைத்து விட்டு, டிஜி யாத்ரா கௌண்ட்டரில் என் முகத்தை அடையாளம் பார்க்க முடியாத உபகரணத்தை சபித்து விட்டு, அடுத்த கேட்டில் ஆதார் கார்டை காட்டிவிட்டு உள்ளே மும்பய் மசாலாச்சாய் குடித்தவுடன் உடலில் தெம்பு சேர்ந்து பெங்களூருக்கு செக்கின் செய்தோம்.
இன்டிகோ பணிப்பெண் ஷ்ருதி பா(B)ட்டியா வெந்நீர் ஊற்றிக்கொடுத்த மேகி நூடுல்ஸை சுவைத்தபடி, கடந்த நான்கு நாட்களில்.. அமெரிக்க ஶ்ரீரங்கத்துப்பெண் அமெரிக்க பட்னா இளைஞனை நவி மும்பயில் கரம்பிடித்த வைபவம், நிறைய பம்பாய் நண்பர்களுடன் அரட்டை, விலேபார்லேயிலிருந்து பைக்கில் வந்து ஓரிரவு எங்களுடன் தங்கிய பெரியவன், ஒரே நாளில் முடித்த நான் விரும்பிய ஷிர்டி யாத்திரை, நான் ரசித்த பம்பாய் சாலைகளில் வாகனம் செலுத்திய அனுபவம்.. என நினைவுகளை அசை போட்டபடியே … தடக்கென ரன்வேயில் விமானம் தொட, நினைவுகளிலிருந்து மீண்டேன்.

முரளி சீதாராமன் சேலம்

 


முகதூலில் இவர் பதிவு தென்பட்டால் டாய்லெட் போகும் அவசரத்திலும் அதை படித்து விட்டுத்தான் ஓடுவேன். படு சுவாரசியமான பதிவுகள் எழுதுபவர்.

பல்கலை வித்தகரான இவரது எழுத்தாற்றல், தமிழ்ப்புலமை, பொது அறிவு, ஆழமான அரசியல் ஞானம் எல்லாமே நம்மை வியக்க வைக்கும்.
நடப்புக்கால அரசியல் நிகழ்வுகள் பற்றி இவர் எழுதும் பதிவுகளில் மடேர் மடேர் என சம்மட்டியால் மண்டையில் அடிப்பது போல இருக்கும் இவரது ரெப்யூட்டல் கருத்துக்களுடன் இவர் திரட்டிஅளிக்கும் அரசியல் புள்ளி விபரங்கள் நம்மை மலைக்க வைக்கும்.
சிறந்த பொன்மொழிகளை தொகுத்து ஒரு தனி நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார் (சாம்பிளுக்கு: ‘சொற்கள் இலைகள் போன்றவை. அதிகமாக இருந்தால் அறிவு என்ற கனிகளை மறைத்து விடும்’- பிளேட்டோ)
இவரது தமிழ்ப்புலமை பற்றி குறிப்பிட்டிருந்தேனல்லவா! நாம் புத்தகம் படிக்கும்போதை நமது ஆர்வத்தைத் தூண்டும் வரிகளை கோடிட்டு வைத்திருப்போமே, அதற்கு ‘ஞான உழவு’ என்று பெயராம்.
பற்றில்லாதவனாகிய இறைவனைப் பற்றிக் கொண்டால், நாம் நமது பற்றுக்களிலிருந்து மீளலாம் என்பதற்கு இவர் குறிப்பிடும் திருக்குறள் ஒன்று:
பற்றுக பற்றற்றான் பற்றை - அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
இக்குறளின் சிறப்பே ஒவ்வொரு சொல்லிலும் உதடுகள் ஒட்டி ஒட்டி விலகும் என்கிறார்.
இதே போல் சாட்சி பாவமாக நாம் எல்லாவற்றிலிருந்தும் நீங்கி நின்றால் துன்பம் இல்லை என இவர் குறிப்பிடும் இந்த இன்னொரு குறளில் நம் உதடுகளும் ஒட்டாதாம்:
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்!"
வார்த்தைகளில் அற்புதமாக வித்தை காட்டும் திருவள்ளுவரின் குறள்களை பிரித்து மேய்த்து விடுவார் இவர்.
நகைச்சுவை, நையாண்டியிலும் இவர் விற்பன்னர். உதாரணத்திற்கு பாருங்க:
"போன மார்கழி மாசம்தான் நானும் அவளும் காதலிக்க ஆரம்பிச்சோம்! அவள் சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறாள்!"
"கூடாரவல்லினு சொல்லு!"
சேலம் மாவட்ட சேவாபாரதி எனும் தன்னார்வ அமைப்பின் அங்கத்தினரான இவர் நிறைய சமூக சேவையாற்றுகிறார். அவர்களது சமூக விழா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி அறிமுக உரை மற்றும் தொகுப்புரையும் திறம்பட வழங்குகிறார்.
முகநூல் ரெற்றோ க்ரூப்பில் காதலனும் காதலியும் சம்சாரிப்பதாக இவர் எழுதிய எசப்பாட்டுக் கவிதை இதோ:
அவன்: "காதல் என்ற நல்ல பாட்டு
கடிதம் எழுதியது கணக்கு நோட்டு
ஓடிப்போலாமா எனக் கேட்டு..."
அவள்: ஓ! தாராளமா!
"நானும் நீ சொன்னதைக் கேட்டு,
தாண்டினேன் வீட்டு கேட்டு!
என் டாடி புகார் மனு போட்டு
கடைசியில் போலீஸில் மீட்டு..."
அவன்: "போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு!
என் முதுகிலே கோடு போட்டு
சுழன்றது ஏட்டுவின் பெல்ட்டு!"
"ஏறி மிதித்தது இன்ஸ்பெக்டர் பூட்சு!
அத்தோட என் காதல் பறந்து பூட்ச்சு!
மைனர் பொண்ணைக் கடத்தின கேசு!
அதனால படிப்பு ஆச்சு டப்பாசு!"
கனரா வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு நேற்று பிறந்தநாள். எனது ஓவிய காட்சிக்கூடத்தை (gallery) அலங்கரிக்க வேண்டி இவரது ஓவியத்தை தாமதமாக வரைந்தாலும் பெருமை எனக்கு.

இந்தோனேசிய பாலி காபி

 ஒரு பக்கம் உயர உயரமான தென்னை மரங்களுடன் அழகிய தோட்டம். அந்தப் பக்கம் ஆழமான பள்ளத்தாக்கு. இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவே ஸ்திரமான தாம்புக்கயிறு கட்டி ராட்சத ஊஞ்சல். பெண்களை ஊஞ்சலில் உட்கார வைத்து, பாதுகாப்பாக பெல்ட் போன்று கயிற்றில் கட்டி அவர்கள் ஊஞ்சலை நன்றாக இழுத்து விட, பள்ளத்தாக்கின் மேல் ஊஞ்சல் ஜிவ்வென பறக்கிறது. ஏதோ படத்தில் ரம்பா இது போல பறப்பார். Bali Swing எனும் இடத்தில் இது போல அருமையான பொழுதுபோக்கு விளையாட்டு. நிறைய படங்கள் பிடித்தோம்.

பாலி காபி மிகவும் பிரசித்தமாம். வழக்கம்போல மற்ற நாடுகளில் செய்வது போல நம்மை காப்பித்தோட்டம் கூட்டிப்போய் விதவிதமான ஃப்ளேவர்களில் காபி பருக வைத்த பின் காப்பிப்பொடியை நம்மிடம் விற்க அவர்கள் எடுத்த முனைப்பு பயனில்லாமல் போனது.
ஆனாலும் நாங்கள் 50 பேரும் அங்கேயே சுடச்சுட காபி ஆர்டர் செய்து பருகினோம் என அவர்களுக்கு சந்தோஷம்.
Kopi Luwak எனப்படும் உலகிலேயே விலை உயர்ந்த காபிகளில் ஒன்று பாலியின் லுவாக் காபி. அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை படிக்கும்போதே உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரலாம். அதாவது புனுகுப்பூனை போன்ற காட்டுப்பூனையோ, கீறிப்பிள்ளையோ.. அது காபிப்பழங்களை விரும்பி உண்ணுமாம். அதன் குடல் வழியாக காப்பிக்கொட்டைகள் செரிமானம் மற்றும் ரசாயண மாற்றங்களுக்குப்பின் மலத்துடன் வெறியேறிதும், அந்த கொட்டைகளை சேகரித்து சுத்தம் செய்து வறுத்து அரைக்கப்படும் காபித்தூள் செம்ம டேஸ்ட்டாம்.
‘காபி டேஸ்ட்டிங்’ என சின்னச்சின்ன கிண்ணங்களில் விதவிதமான காபிகளை கொண்டு வந்து ருசி பார்க்கச்சொன்னார்கள். அராபிகா, ரொபஸ்டா, சினாமன் (பட்டை), கேரமல் என எல்லாவற்றையும் ருசி பார்த்தோம். ‘அந்த லுவாக் (ஊவேக்) காபி மட்டும் கொண்டு வராதீங்க’ என நாங்கள் சொல்லியும் எங்கள் குழுவில் ஒருவர் தைரியமாக ‘சரி! அதையும் கொண்டு வாங்களேன் பாப்பம்!’ எனவும், உடனே அவர்கள் எங்கள் கண் முன்னால் பெர்கொலேட்டரில் அந்த லுவாக் காபியை தயாரித்துக்கொடுக்க அந்த நண்பர் அதை ரசித்து குடித்தார். நாங்கள் ஓரிரண்டு பேர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு வாய் சாப்பிட்டு பார்த்தோம். உலகிலேயே அதிக விலை என அவர்கள் சொன்னது சரிதான். செம்ம டேஸ்ட். அதிக விலைக்கு காரணம் அந்த அரியவகை காபிக்கொட்டைகளை சேகரிப்பது கடினமாம்.
மாரியட் ஸ்தலா ஹோட்டலில் காலை உணவிலும் அந்த லுவாக் காபி இருந்தது. நிறைய ஜனங்கள் அதை ஆசையாக பருகினார்கள்.
மனைவி Usharani Sridharஇன் 85-86 இஞ்சினீயரிங் பாட்ச் பழைய மாணவர்களுடன் செம்ம அரட்டை. அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் மற்றும் எங்களைப்போல தாயகம் திரும்பிய நண்பர்கள் எல்லோரும் சின்ன பசங்களாகி விட்டது போன்ற உணர்வுடன் கரோக்கி பாடல்கள் பாடிக்கொண்டு.. இரவு எட்டு மணிக்கு இந்தியன் உணவகத்தில் டின்னருக்குப்பின் மாரியட்டில் இறக்கி விட்டார்கள்.
பாலியில் இன்னும் 2 நாட்களுக்கு நிறைய ப்ரொக்ராம்கள் இருப்பதாக ஐடிர்னரி காட்டியது.

மாமியார் வீடு

 காரைக்குடியில் மாமியார் வீட்டில் டேரா! கொளுத்தும் வெயில் வெளியே. வீட்டிலேயே எவ்வளவு நேரம் தான் அடைந்து கிடப்பது!

‘வாங்க ஜனப்ரியா மளிகை போகலாம்!’ என மனைவி உஷா Usharani Sridhar என்னை இழுத்துக்கொண்டு போனார். காரைக்குடி வரும்போதெல்லாம் தன் அம்மாவிற்காக மருந்து, மளிகை சாமான்களை வாங்கிப்போட்டு விடுவார். டிரைவர் வேலை மட்டுமேயென்றாலும் நான் எனக்குப்பிடித்த ஜில்லெட் மாக்-3 ரேசர் பிளேடு, காப்பித்தூள் என எடுத்து போட்டுவிடுவேன். தரமான மளிகை சாமான்கள் மட்டுமில்லாமல் கடுக்காய் பொடி, திரிபலாதி பொடி போன்ற தமிழ் மருந்துகள் கூட கிடைக்கிறது இந்த சூப்பர் மார்க்கெட்டில்.
சரக்குகளை வந்திறங்கிய கையோடு சிஸ்டத்தில் என்ட்ரி செய்கிறாள் ஒரு பெண். கண்ட்ரோலுக்கு ஒரு நோட்டுப்புத்தகத்திலும் குறித்து வைக்கிறாள். சாதனங்கள் இருப்பு குறைய குறைய ஸ்டாக்கை ரிப்ளெனிஷ் செய்கிறார் ஒரு பாய். பாய்ன்ட் ஆஃப் சேல்ஸ் (POS) கௌண்ட்டர்கள் நாம் வாங்கிய சாதனங்களை துரிதமாக ஸ்கேன் செய்து செக்அவுட் செய்கிறார்கள். கடைசி நேரத்தில் இது வேண்டாமே என மக்கள் கவுண்ட்டரில் ஒதுக்கி விடும் சாமான்களை அள்ளி இன்னொரு பெண் அந்தந்த ஷெல்ஃப்களில் திரும்ப வைக்கிறார்.
பெர்பெச்சுவல் இன்வென்ட்டரி சிஸ்டம் இங்கே அபாரம். வாசலில் செக்யூரிட்டி நம் இன்வாய்சை வாங்கி ரேண்டமாக செக் செய்து அனுப்புகிறார். ஷாப் லிஃப்ட்டிங் எனப்படும் பில்ஃபெரேஜுக்கே (திருட்டு) இடமில்லை. பஹ்ரைன் ட்ராஃப்கோ குழுமத்தின் அங்கமாக ஒரு சூப்பர் மார்கெட் சங்கிலி செயல்படுகிறது. அதற்குத் தேவையான நிறைய ஐடியாக்கள் காரைக்குடியில் இன்று கிடைத்தது.
கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் உஷா அடுத்து ஒரு காய்கறிக்கடை போய் காய்கறிகள் வாங்கி டிக்கியில் போட்டார். அங்கே ஹாட்சன் மோர் ஜீரா கலந்து செம்ம ருசி.
மாமியாரை பார்த்துக்கொள்ளும் கேர் டேக்கர் பெண் சமையலும் செய்கிறார். அருமையான மோர் குழம்பு, காரம் குறைவாக வாழைக்காய் வறுவல், கேரட்+கோசு பொறியல், ரசம் மற்றும் ஆரோக்யா தயிர் என திவ்யமான மதிய உணவு முடிந்து வழக்கம்போல பெட்ரூமுக்குள் புகுந்து கொண்டேன்.
மாமியாருக்கு டீவி ஆனில் இருக்க வேண்டும். அம்மா, பெண் மற்றும் கேர்டேக்கர் பெண் மூவரும் பேசிக்கொண்டிருக்க நமக்கு கண்ணை சொழட்டியது. மூன்று மாதத்திற்கொரு முறையாவது இங்கே வரும் எனக்குத்தான் பொழுது போகாது. இந்த பதிவே அதனால் தாங்க.
மதியம் நாலு மணிக்கு எழுந்து ஹாலுக்கு வந்தேன். டீவியில் ஏதோ படம். மாடு ஒன்றுக்கு(ம்) பிரமிளா முத்தம் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருந்தார். அட இது கோமாதா என் குலமாதா ஆச்சே! 72 அல்லது 73இல் திருச்சி பேலஸ் டாக்கீஸில் பார்த்த படம். ‘மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன்’ என சங்கர் கணேஷ் இசையில் பாடல். ‘விருந்துண்ண வந்தேன் நான் விருந்தாகிப்போனேன்’ என கண்ணதாசன் போதையூட்டுவார். கிளைமாக்ஸ் சீனில் ஶ்ரீகாந்த் தேங்காய் ஶ்ரீனிவாசனுடன் ஜீப்பில் தப்பி ஓட, மாடு அவர்களை விரட்டும். அவர்களை குறுக்கு வழியிலெல்லாம் ஓடிப் பிடிக்க முடியாமல் மா.. மா.. என அந்த மாடு கத்தி ஓட, உடனே அந்தப்பக்கம் மேய்ந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மாடுகள் ‘நம்ம ஃப்ரெண்டு கூப்புடறான்.. வாங்க.. வாங்க!’ என கூட்டமாக ஏதோ ஒரு திசையில் ஓட காளிமார்க் கலர் மற்றும் கடலை மிட்டாய் சாப்பிட்டவாறே சின்ன பசங்களாக நாங்கள் பார்த்த படம். நாலு கேமராக்களில் தனியாக மாடுகளை படம் எடுத்து ஒன்று சேர்த்து திரை முழுக்க மாடுகள். இன்றைக்கும் அதே சுவாரசியத்துடன் இருந்த படத்தை, மனைவிடமிருந்து ரிமோட்டை பிடுங்கி நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஶ்ரீகாந்த் தரையில் விழுந்து கிடக்க, அவரைக்கொல்ல மாடு ஒடி வரும்போது ‘லச்சுமி! என் புருசனை கொண்ணுடாதே!’ என பிரமிளா இந்தப்பக்கமிருந்து ஓடி வருவார். அப்படியும் மாடு அவரை நெருங்கும் முன், ‘என் புருசனை கொல்றதுக்கு முன்ன என்னய கொண்ணுடு!’ என்றபடிவே மல்லாந்து கிடக்கும் ஶ்ரீகாந்த் மேலேயே குறுக்காக தாட்டியான பிரமிளா ப்ளஸ்(+) வடிவத்தில் பச்சக்கென அவர் மேல் குப்புற விழுந்து கிடக்க, மாடு இன்னும் ஓடி வந்துகொண்டிருக்கும். ‘அவசரமில்ல.. மெதுவாகவே ஓடி வரட்டும்!’ என என்னுடன் சேர்ந்து ஶ்ரீகாந்த்தும் வேண்டிக்கொண்டிருப்பார் போலும். அந்த படத்திற்கு சம்பளமே வேணாமெனக் கூட சொல்லிருப்பார்😃. படம் நல்லபடியாக முடிந்து மற்ற மாடுகள் ‘வறேன் ப்ரோ!’ என கிளம்ப, பிரமிளாவும் எழுத்துகொள்ள, தேவரின் பாலதண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் என முருகன் படத்தைக் காட்டி படத்தை முடிப்பார்கள். வெகு நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி பார்த்த திருப்தி.
மாலை காரைக்குடி மல்லீஸ் கிச்சனில் ஆப்பம்+தே.பால் என டின்னருடன் இன்றைய தினம் இனிதே முடிந்தது.

பழைய மாணவரகள் சந்திப்பு

 மனைவி Usharani Sridharஇன் அலும்னை எனப்படும் பழைய மாணவர்கள் சந்திப்பு காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் கோலாகலமாக நடந்தது. 40 வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக நிகழும் இந்த சந்திப்பில் பெரும்பாலோர் பேரன் பேத்தி எடுத்தவர்கள் என்றாலும் சட்டென இருபது வயது குறைந்தது போல பழைய நண்பர்களை கலாய்த்துக்கொண்டு இருந்தார்கள்.

தமிழ்நாட்டில் அப்போதெல்லாம் திருச்சி REC, கோவை GCT, சேலம், காரைக்குடி என ஐந்தோ ஆறோ பொறியியல் கல்லூரிகள் மட்டுமிருந்தன. இந்த சந்திப்பில் சுமார் 25 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஓல்ட் ஸ்டூடன்ட்ஸாம்.
எல்லோரும் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய், ஒமான், அபுதாபி மற்றும் பெங்களூர், சென்னையிலிருந்து வந்திருந்தனர். பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் போன்ற அரசுத்துறையின் சீஃப் இஞ்சினீயர்கள் மற்றும் பல இதர பொதுத்துறை நிறுவனங்களின் ஓய்வு பெற்ற சீஃப் ஜெனரல் மேனேஜர், மத்திய அரசின் இராணுவ அமைச்சகத்தில் ப்ராஜெக்ட் டைரக்டர்கள், சொந்த கட்டுமானம் மற்றும், மென்பொருள் நிறுவனங்களின் ஸ்தாபகர்கள் & சீஇஓக்கள் என உயர் பதவியில் இருந்தாலும் அன்றைய மாணவர்களைப்போல இன்றும் ஆட்டம் பாட்டத்துடன் வாடா, போடா என அரட்டை.
காலை 8 மணிக்கு கல்லூரி வாசலில் தாரை தப்பட்டையுடன் பட்டாசு வெடித்து, மாணவர்கள் சேர்ந்து கட்டிய மெமோரியல் கட்டிடத்தில் கூடி ஒரே மாதிரியாக டி-ஷர்ட் அணிந்துகொண்டு ஊர்வலமாக சென்று அழகப்பச்செட்டியாருக்கு மாலை அணிவித்து தங்கள் நன்றியை தெரிவித்தார்கள்.
அடுத்து இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஏற்பாடு செய்து மேற்பார்வையிடும் எனது நண்பர் ஆனந்தன் சொக்கலிங்கம் தனது கல்லூரி நாட்கள் அனுபவங்களை பகிர்ந்ததுடன், கல்லூரி முதல்வர் மற்றும் பழைய பேராசிரியர்கள் ஆற்றிய தொண்டினை குறிப்பிட்டு அவர்களை மேடைக்கு அழைத்து பாராட்டி கௌரவித்தார்.
மதியம் ஹாஸ்டல் வளாகத்தில் வாழையிலை சாப்பாடு, மாலை செட்டிநாடு வெல்னெஸ் & ஹெரிட்டேஜ் எனும் ரிசார்ட்டில் நாட்டுப்புற நடனங்களான மயிலாட்டம், ஒயிலாட்டம், பெரிய கருப்பன் சாமி கோயில் முன் கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தேறியது. பாரம்பரிய செட்டிநாட்டு பலகாரங்கள் வெள்ளையப்பம், சுகியன் மற்றும் பரவலான இரவு உணவு வகைகள்.
அந்த ரிசார்ட்டிலேயே அறைகள் ஒதுக்கி எல்லோருக்கும் தங்கும் வசதியும் செய்திருந்தார் நண்பர் ஆனந்தன்.
மறுநாள் காலை உணவிற்குப்பின் காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி 81-85 பேட்ச் பழைய மாணவர்கள் மலரும் நினைவுகளுடன் ஊருக்கு கிளம்பினர்.

கனகபுரா ரோட்டில் ஒரு திருமணம்


 பெங்களூர் கனகபுரா ரோட்டில் உள்ள அந்த உல்லாச ரிசார்ட்டில் நம்மை பிரமிக்க வைக்கும் விசேஷம் என்னவென்றால் அகழி போன்ற அமைப்புடன் முகூர்த்த மேடையைச்சுற்றி தண்ணீர், எதிர் மற்றும் பின் பக்கம் உயரமான கேலரியில் மக்கள் உட்கார்ந்துகொண்டு திருமணத்தை காணும்படி வித்தியாசமான ஏற்பாடு.

டென்ஷனுடன் ஓடிக்கொண்டு இல்லாமல் படு கூலாக சம்மந்திகள், குறைந்த அளவு உறவினர்கள், ஏராளமான நண்பர்கள் என அந்த திருமணம் நடந்தது. பஹ்ரைன் நண்பன் சுரேஷ்/லதா (Suresh Kv & Latha Suresh) தம்பதியின் மகள் ஷ்ரேயாவின் destination wedding எனப்படும் 2 நாள் கோலாகல வைபவத்தைப்பற்றி தான் இப்போது பேசுகிறோம். சுரேஷ்/லதா எங்களது நெருங்கிய நண்பர்கள். ‘இதோ உங்க வீட்டுக்கு வர்றோம்’ என போனில் சொல்லிவிட்டு கிளம்பினால் மாலை டிபன் காபியுடன் எங்களது அரட்டை துவங்கி டின்னர் கழிஞ்ஞு ( அவனுக்கு கல்பாத்தி பூர்விகம்) பாதி ராத்திரி வீடு திரும்புவோம். அவர்கள் இல்லத்திருமணம் என்றால் சும்மாவா! பஹ்ரைனில் 25 வருடங்களுக்கு மேலாக வங்கிகளில் சீனியர் வைஸ் பிரெசிடென்ட் போன்ற பதவிகளில் இருந்துவிட்டு தாயகம் திரும்பி பெங்களூரில் செட்டிலான சுரேஷின் நண்பர்கள் பெரும்பாலோர் வளைகுடா நாடுகளான பஹ்ரைன், துபாய், ஒமானிலிருந்து திருமணத்திற்கு வந்திருந்தார்கள்.
பஞ்சவடி எனும் அந்த விஸ்தாரமான ரிசார்ட்டில் ஏராளமான வாகனங்களுக்கான நிறுத்தம், ஒரே நேரத்தில் 500 பேர் அமர்ந்து சாப்பிட உணவுக்கூடம் என வசதிகள். மாப்பிள்ளை வட இந்தியர் என்பதால் மாப்பிள்ளை அழைப்பு/பராத் நடத்த நீண்ட பாதை, மலர் அலங்கார மேடையில் மணமக்களின் வரவேற்பு என ஏற்பாடுகள். அங்கங்கே மலர்த்தோட்டங்களில் நண்பர்கள் குழுக்களாக போட்டோ எடுத்துக்கொண்டோம்.
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு சுரேஷின் ஜெயநகர் இல்ல மாடியில் மெஹந்தி எனப்படும் மருதாணி விழாவில் எல்லா பெண்களும் இரண்டு கைகளிலும் மருதாணி பூசிக்கொள்ள, அவர்களின் கணவர்கள் ஆசையாக மனைவியருக்கு பானிபூரி, பேல்பூரி ஊட்டி விட்டது கண்கொள்ளா காட்சி. அப்படியும் சில கணவர்கள் சரியாக ஊட்டி விடாமல் மீட்டா சட்னியை மனைவியரின் சுடிதாரில் சிந்தி விட ‘எப்பனாச்சும் ஹெல்ப் செஞ்சா கூட உருப்படியா செய்யாம சரியா ஊட்டி விடமாட்டீங்களே!’ என டோஸ் வாங்கிக்கொண்டார்கள்.
முதல் நாள் மதியமே சாப்பாடு களை கட்டியது. வட/தென்னிந்திய பதார்த்தங்கள் கலந்த தால் பட்டி சுர்மா, பதாம் கத்லி, ரஸ்மலாய், இளநீர்ப்பாயசம், பர்வா பெண்டி (வறுத்த வெண்டைக்காய்), கல்யாண ரசம் என சாப்பிட்டு உண்ட மயக்கத்தில் அங்கங்கே சரிந்து உட்கார்ந்திருந்தோம். மாலை பராத் நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன் நம்மவர்கள் எல்லோருக்கும் வட இந்திய பாணியில் தலைப்பாகை கட்டிவிட்டு ‘சிரித்து வாழவேண்டும்’ எம்ஜியார் காபூலிவாலா போல சுற்றிக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். என் தலையில் அந்த மார்வாடிப்பையன் சுமார் 30 சுற்றுக்கள் சுற்றி தலைப்பாகையை இறுக்கிக் கட்டி கண்களை சிவக்க வைத்தான். வட இந்திய ஆண்கள் பெண்களுடன் ஷ்ரேயாவும் ஆஷிஷும் பராத்தில் ஆடித்தீர்த்து விட்டார்கள். பையன் கொஞ்சம் சாதுவாகவும் ஷ்ரேயா இயற்கையாக செம்ம அரட்டையுடன் நடனங்கள், குத்தாட்டம் என கலக்குகிறாள்.
‘ஜும்கா கிரா ரே பரேலி கா பஜார் மே’ பாடல் ஒன்று போதும் நம்மவர்கள் ஹிந்திப்பாடலுக்கு வெளுத்துக்கட்டி ஆடக்கூடியவர்கள் என. ‘லுங்கி டான்ஸ்’ பாடலுக்கு வடக்கர்கள் சிந்தாதிரி பேட்டை ஸ்டைலில் டப்பாங்குத்து ஆடி அசத்தினார்கள். ஆடிய களைப்பில் செம்ம பசி. டின்னருக்கு சில்லி சீஸ் பந்துகள், ஆறு வகை பதாம் அல்வாக்கள், லைவ் ஜிலேபி ரப்டி, டோக்ளா, பாஸ்தா, நூடுல்ஸ், கார்லிக் நான், தால் மக்னி என்பவை முக்கியமான ஐட்டங்கள் தவிர ஏராளமான உணவுவகைகள்.
விசேஷம் என்னவென்றால் இளைஞன் ஒருவன் கொசு மருந்தடிக்கும் மிஷின் போல ஒன்றை முதுகில் சுமந்துகொண்டு கையில் குழாயுடன் வலம் வந்தான். அது என்னவென உற்றுப்பார்த்தால் பானிபூரிக்காரனாம் அவன். முதுகில் புளித்தண்ணீர் கேனிலிருந்து வரும் டியூப் வழியாக எல்லோருக்கும் பானியை சர்ரென பூரியில் பீய்ச்சி நிரப்பி கொடுத்துக்கொண்டு வந்தான். சந்தீப் வஷிஷ்ட்டின் சாக்ஸஃபோன் மற்றும் குழல் இசை லேசாக காற்றில் மிதந்து வர ரம்மியமாக இருந்தது.
மறுநாள் காலை தென்னிந்திய வழக்கப்படி ஊஞ்சல் நலுங்கு, காசி யாத்திரை மற்றும் எல்லாம் அமர்க்களமாக நடந்தன. காலை டிபனுக்கு காசி அல்வா, ஜிலேபி+ மசாலா பால், தாவங்கரே பெண்ணெ தோசே போன்ற பிரதான ஐட்டங்கள் தவிர இட்லி, மெதுவடை, பொங்கல், நிலக்கடலை சட்னி என பெரிய்ய லிஸ்ட். சக்க பிரதமன், அடப்ரதமன், இளநீர் பாயச வகைகள். முதல் நாள் முழுக்க வட இந்திய உணவுவகைகள் மற்றும் மறுநாள் தென்னிந்தியர்களுக்கென ப்ரத்யேகமாக ஏராளமான உணவு வகைகள் இருந்தாலும் வட இந்தியர்களுக்காகவும் நிறைய ஐட்டங்கள்.
திருமண வைபவங்களை இரண்டு தொகுப்பாளினிகள் நகைச்சுவையுடன் தொகுத்து அளித்தனர். முதல் நாள் வட இந்திய ஜெயின் முறைப்படி சடங்குகள் நடந்ததால் முகூர்த்தம் தென்னிந்திய முறைப்படி நடந்தது. நாங்கள் உயரமான கேலரிகளில் ஆராம்சாக உட்கார்ந்திருக்க, சுரேஷ் லதா தம்பதி படு கூலாக உலா வந்து சாப்டீங்களா, காபி குடிச்சீங்களா என கவனித்துக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிதானமாக முகூர்த்த சடங்குகள் திருப்திகரமாக நடைபெற்றன.
ரிசார்ட்டின் ஒரு பகுதியில் இஞ்சி, செம்பருத்தி, சங்குபுஷ்பம், எலுமிச்சை, இலவங்கம் மசாலா, புதினா, பைனாப்பிள், ரோஸ், துருக்கி என விதவிதமான ஃப்ளேவர்களில் டீ தயாரித்து கொடுத்தார்கள். தவிர பழரசங்கள், இளநீர், கோலி சோடா, காலாகட்டா சர்பத் என தனி கௌண்ட்டர்கள். பழங்கள் மற்றும் காய்கறி துண்டங்களுடன் சலாட் வகைகளுக்கென தனி கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
திருமணத்திற்கு பல மாதங்கள் முன்பே சுரேஷ்/லதா பட்டியல்கள் தயார் செய்து, புடவைகள், வேட்டிகள் என உறவினர்களுக்கு ரிடர்ன் கிஃப்ட்டுக்கு துணிமணிகள் வாங்குவது, பல கல்யாண மண்டபங்கள் மற்றும் ரிசார்ட்டுகள் பார்வையிட்டு தேர்வு செய்வது, எத்தனை பேர் நிச்சயமாக வருவார்கள் என்ற லிஸ்ட் தயார் செய்து, ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு, சாப்பாடு வகைகளின் பட்டியல், குறிப்பாக ஜெயின் மக்களுக்கென பட்டு கலக்காத புடவை வேட்டிகள், வெங்காயம், பூண்டு கலக்காத உணவு வகைகள் என பார்த்து தேர்வு செய்தது பாராட்டுக்குறியது.
விருந்தினர்கள் தங்கும் வசதிக்காக கனகபுரா ரோடு பகுதியில் நிறைய அறைகள் புக் செய்திருந்தான் சுரேஷ். பையன் வீட்டாருக்கு ஏர்போர்ட்/ரயில்வே/ஹோட்டலிருந்து ரிசார்ட்டுக்கு போக வர டாக்சிகள் ஏற்பாடு என எல்லாமே கச்சிதம். இரண்டு நாட்கள் ஆடல் பாடல், விதவிதமான உணவுவகைகள் சாப்பிட்டு, நீண்ட நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து, பேசி, சிரித்து மகிழ்ந்து, புகைப்படங்கள் பகிர்ந்து தத்தம் இல்லத்திற்கு திரும்பினோம்.
ஸ்பஷ்டமாக தமிழ் பேசும், வட இந்திய ஜெயின் சமூகத்தைச்சேர்ந்த சௌக்கார் பேட்டைவாசியான ஆஷிஷ்ஷும் தென்னிந்திய பிராமணப்பெண்ணான ஷ்ரேயாவும் திருச்சி NITயில் இஞ்சினீயரிங் ஒன்றாக படித்து பிறகு அமெரிக்க Duke பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு முடித்தபின் அங்கேயே பணியில் சேர்ந்த பால்ய நண்பர்களாம். சுமார் 40 நண்பர்கள் அமெரிக்காவிலிருந்தும் நாலைந்து பேர் இங்கிலாந்திலிருந்தும் திருமணத்திற்காக வந்திருந்தனர்.
சனாதன முறைப்படி சாதிமத பேதமின்றி கலப்புத்திருமணங்கள் தற்போதெல்லாம் நிகழ்வது வரவேற்புக்குறியது. காரணம் நமது தலைமுறை போல இல்லாமல் நம் குழந்தைகள் அமெரிக்கா மற்றும் பிற வெளிநாடுகளில் பணியிலிருக்கும்போதும் இந்தியாவிலிருக்கும்போதும் சரி, தாம் இந்தியர் என்ற ஒரே அடையாளத்துடன் மட்டுமே பழகுகிறார்களே தவிர ஜாதி மதங்கள் பார்ப்பதுமில்லாமல், அதுபற்றி தெரிந்துகொள்ளவும் முனைப்பதில்லை என்பது பாராட்டிற்குறியது.

பெங்களூரில் மழை

பெங்களூரில் மழை ஆரம்பித்துவிட்டது. பொதுவாக மதிய உணவுக்குப்பின் மனைவி Usharani Sridhar நெட்ஃப்ளிக்ஸ், அமசான் ப்ரைம், ஜீ-5 என சினிமாப்படங்கள் பார்க்க ஆரம்பிக்க, நானும் கூடவே உட்காருவேன். ஆனால் டைட்டில் முடிந்து சில நிமிடங்களில் லேசாக கண் சுழட்டி அப்படியே செட்டிலாயிடுவேன். நடுவே கண் விழிக்கும்போது ‘இவன் யாரு?.. அவளை யாரு கல்யாணம் பண்ணிக்கிறாங்க?’ போன்ற கேள்விகளை தூக்கத்தின் நடுவே கேட்டு அவரை வெறுப்பேற்றுவேன்.

மணி நாலு.. வெளியே மழைன்னா என்ன சாப்பிடத்தோனும்! கரெக்ட் பஜ்ஜி போண்டாவே தான். பஹ்ரைன் நண்பர்கள் ஶ்ரீனி-கவிதா (Srinivasan Rathinam & Kavitha Srinivasan ) தம்பதி விடுமுறைக்கு பெங்களூரில் தான் தொம்லூரில் தங்கியிருக்கிறார்கள். ‘டேய்! நீ செந்தூர் காபி போனதில்லை தானே! இப்ப கெளம்பி வறோம்.. ரெடியா இரு!’ என போனில் சொல்லிவிட்டு கிளம்பினோம்.
பானஸ்வாடி மெயின் ரோடு பாதி பாலத்தில் இடதுபுறம் சரிவாக இறங்கி SMVT ஸ்டேஷன் வழியாக விவேகானந்தா ரோடு தாண்டி இந்திரா நகர் வந்து, ஓரிரண்டு க்ராஸ்களை கடந்து தொம்லூரில் ஶ்ரீனி-கவிதாவை பிக்கப் செய்துகொண்டோம்.
பெங்களூரின் எல்லா பகுதிகளிலும் செந்தூர் காபி இயங்குகிறது. திருச்சி நாகநாதர் டீ ஸ்டால் போல தரமான உணவகம். அவர்கள் போடும் பொடி வெங்காய ஊத்தப்பம் ஒராள் சாப்பிட முடியாது. ஆய்ந்த வெங்காயத்தை கை நிறைய அள்ளி ஊற்றிய மாவின் மேல் தாராளமாக பரத்தி, பொடியை அள்ளித்தூவுவான். கூடவே சொழட்டி சொழட்டி தோசைக்கரண்டியால் எண்ணெய் விடுவான். தோசையை திருப்பிப்போடாமலேயே கீழ்ப்பக்கம் ரோஸ்டாகிறதா என மேல் பக்கம் பார்த்தே தெரிந்துகொள்வான். இந்திரா நகர் திப்ப சந்த்ரா குடியிருப்பு பகுதியில் ப்ளாட் ஒவ்வொன்றும் எட்டாயிரம் பத்தாயிரம் சதுரடியில் ஹெக்டேக்கள் மற்றும் கௌடாக்களின் வீடுகள். அந்த வீடுகளின் மத்தியில் அந்த ஹோட்டல் முன் மாலை 3இலிருந்து இரவு 10 வரை டீ, காபி, பஜ்ஜி, மசால்வடைக்காக கூட்டம் அம்மும். இளம் பெண்களெல்லாம் தற்போது தைரியமாக தனியே வந்து ஸ்டைலாக இடது கையில் டீ களாஸ், வலது கையில் தம் என… கலிகாலம்!
அவ்வளவு பெரிய பாய்லரில் இருந்து கொதிக்கும் வெந்நீரை கிளாஸ்களில் ஊற்றிக்கழுவி, 10 கிளாஸ்களை வரிசையாக நிற்க வைத்து, டீ டிகாக்‌ஷனை சர்ரென விடுகிறான் பையன். ‘சுகர் கம்மியா.. லைட்டா.. எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்’ என எல்லாவித தேவைகளையும் மனதில் வைத்து டீ, காபியை தயார் செய்கிறான். செம்ம டேஸ்ட்.
நல்ல மழை வேறயா! சுட சுட வாழக்கா & மிளகா பஜ்ஜி, தால் வடாவுக்காக மக்கள் கூட்டமாக காத்திருக்க, இரண்டு வித சட்னிகளுடன் பஜ்ஜி, டீ, காபி ஆயிற்று.
திப்பசந்த்ரா மார்க்கெட் வந்தோம். நம்மூர் ரங்கநாதன் தெரு போல நிறைய பூஜை சாமான் கடைகள். ரோட்டில் பழங்கள், சுடிதார் கடைகள், மெடிகல் ஷாப், மிக்சி ரிப்பேர், எலெக்ட்ரிகல், குக்கர், பாத்திரங்கள், நடுவே பல் டாக்டர்கள், சலூன் என சகலமும் இங்கே வாங்கலாம்.
குறுகலான சாலை வேறு.. கார்கள் நிறுத்த முடியாது. மனைவியரை கடை முன் இறக்கி விட்டு கணவர்கள் கார் இஞ்சின் ஆனிலேயே வைத்துக்கொண்டு போனை நோண்டிக்கொண்டிருக்க, ‘சார்! ஹோகி ஹோகி!’ என பெண் போலிஸ்காரர்கள் வந்தால் பயப்பட வேண்டியதில்லை. வண்டியை லேசாக முன்னால் நகர்த்தி மறுபடியும் ஓரங்கட்டினால் அடுத்த 20 நிமிடம் போலிஸ்கார பெண்மணி வர மாட்டார்.
அப்படியே நேராக பெமல் (BEML) கேட் சிக்னல் வந்தோம். இந்தியன் ரயில்வேக்காக ரயில் பெட்டிகள் தயாரிக்கிறார்கள் அங்கே. மெட்ரோ ரயில் பெட்டிகளும் தயாராகின்றனவாம் அங்கே. மல்லேஷ்பாள்யா விக்யான் நகர் பக்கம் வந்து புடவை சமிக்கி கடைப்பக்கம் வந்தோம். எதிரே ரோட்டி சத்கர் என புதிய உணவகம் துவங்கியுள்ளார்கள். உருண்டையான குட்டி கத்திரிக்காய் போட்ட வடநாட்டுக்கறி, சும்மா தேங்கா அறைத்துவிட்டு கமகமவென குருமா மணம். அதனுடன் ஆனியன் பராட்டாவாம். என்னா ருசி!
சரியான மழை பிடித்துக்கொள்ள, அப்படியே காகதாஸ்புரா ரோட்டில் சி.வி ராமன் நகர் வந்து சேர்ந்தோம். ஶ்ரீனி-கவிதா ஒலா பிடித்து கமர்ஷியல் ஸ்ட்ரீட் கிளம்ப நாங்கள் மழையுடனே காரை செலுத்தி ஓல்டு மெட்ராஸ் ரோடு, கஸ்தூரி நகர், ராம்மூர்த்தி நகர் எல்லாம் கடந்து வீடு வந்து சேர்ந்தோம்.
இனி மால்குடி, கோத்தாஸ், ஹட்டி, சிக்மகளூர் ஃபில்டர் காபியுடன் மே, ஜூன், ஜூலை முழுக்க தினமும் விட்டு விட்டு சொம்பேறித்தனமான மழை உண்டு.