Thursday, June 2, 2016

சார்... தபால்.....!

25.08.1991
பம்பாய்
அன்புள்ள அம்மாவிற்கு,
அநேக நமஸ்காரம். இங்கு நான் நலம். இதுபோல் அங்கு உங்கள் இருவரது ஷேமத்தையும் தெரியப்படுத்தவும். காய்ச்சல் எப்படி உள்ளது. சொக்கலிங்கம் டாக்டரிடம் போனீர்களா? மருந்து மாத்திரை ஒழுங்காக சாப்பிடவும். நான் அனுப்பிய ட்ராஃப்ட் கிடைத்ததா? காரைக்குடி ஜாதகம் வந்ததா? எனக்கு வரவர இங்கு மெஸ் சாப்பாடு ஒத்துவரவில்லை. உடன் பதில் போடவும்.
இப்படிக்கு,
ஶ்ரீதர்.
---------------------------------
11.09.1991
திருச்சி
அன்புள்ள ஶ்ரீதருக்கு உன் அம்மா ஆசிர்வதித்து எழுதிக்கொண்டது.
இங்கு நாங்கள் நலம். நீ பாம்பே வந்து அஞ்சு வருஷமாகப்போகிறது. இத்தனை வருடமில்லாமல் திடீரென்று இப்போது மட்டும் எப்படி மெஸ் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை? (யாரு கிட்ட!)
காரைக்குடிக்காரர்கள் நேற்று வந்திருந்தார்கள். ஜாதகம் பொருத்தியிருக்கிறது. பெண் போட்டோ இத்துடன் அனுப்பியுள்ளேன். பெண் லட்சணமாக இருக்கிறாள். பி.ஈ படித்துவிட்டு அதே காலேஜில் (காரைக்குடி அழகப்பா எஞ்சினீயரிங் காலேஜ்) லெக்சரராம். பெண் பிடித்திருக்கிறதா என பதில் போடவும்.
தற்போது எனக்கு காய்ச்சல் தேவலை. ராத்திரி கால் குடைச்சல் மட்டும் தாங்கமுடியவில்லை. நீ பாம்பேயிலிருந்து வாங்கி வந்த இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் அடுத்தமுறை மற்றொன்று வாங்கி வரவும். எதிர் வீட்டு மாமிக்கு வேண்டுமாம்.
இப்படிக்கு,
உன் அம்மா.
------------------------------
15.09.1991 (எவ்ள சீக்கிரம் பதில் போவுது பாருங்க)
பம்பாய்
அன்புள்ள அம்மாவிற்கு,
பெண் போட்டோ பார்த்தேன். எனக்கு பிடித்துள்ளது. ஏன் சின்னதாக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மட்டும் அனுப்பியிருக்கிறீர்கள்? ( அடி செறுப்பால!). பெண்ணின் உயரம் தெரிந்து கொள்ளத்தான். நீங்கள் வரதட்சினை எதுவும் வாங்க வேண்டாம். என் ஃப்ரெண்ட்ஸ் கணபதி, Paddu, சந்துரு, மகாதேவன் யாரும் டௌரி வாங்கவில்லையாம்.
இப்படிக்கு ஶ்ரீதர்.
--------------------------------
01.10.1991
திருச்சி.
அன்புள்ள ஶ்ரீதர்,
பெண்ணின் உயரம் 150 செ.மீட்டராம். வேற போட்டோ எதுவுமில்லையாம். ஏழு வயசு போட்டோ மட்டும் தான் உள்ளதாம். (😢😢). உன் நண்பர்கள் வரதட்சினை வாங்காததால் தான் நீயும் வாங்கமாட்டேன் என்கிறாயா? வாங்கக்கூடாது என உனக்கே சுயமாக தோன்றவில்லையா? (செம்ம அடி..யப்பா!).
நேரத்திற்கு ஒழுங்காக சாப்பிட்டு தூங்கவும். சீத்தா மரம் நன்றாக வளர்ந்து ஒன்றிரண்டு காய் வந்துள்ளது.
இப்படிக்கு அம்மா.
------------------------------
12.10.1991
பம்பாய்
அன்புள்ள அம்மா,
பெண் வீட்டுக்காரர்களுக்கு பாம்பேயில் யாரோ இருக்கிறார்கள் போலிருக்கிறது. எங்கள் ஆபிஸ் ரிஸப்ஷனில் 'பையன் எப்படி' என வந்து விசாரித்திருக்கிறார்கள். ரிஸப்ஷனில் இருக்கும் பெண் லஞ்ச்சுக்கு போயிருந்ததால் வேறு யாரோ 'பையன் நல்லவன் தான்' என சொல்லியனுப்பினார்களாம். (அப்பாடா! சொன்னவன் நம்ம தோஸ்த் தான்).
ஜாதகம் பொருந்தியிருப்பதால் இந்த இடத்தையே முடித்துவிடவும். எனக்கு இரண்டு நாளாக வயிறு சரியில்லை. டாக்டர் வெளியே அதிகம் சாப்பிடவேண்டாம் என சொன்னார்கள்.
இப்படிக்கு,
ஶ்ரீதர்.
-----------------------------
25.10.1991
திருச்சி
அன்புள்ள ஶ்ரீதருக்கு உன் அம்மா எழுதியது. நீ சாயங்காலம் ஆபிஸ் விட்டு நேராக ரூமுக்கு வராமல் ஜுஹு பீச், சினிமா என சுற்றுவதாக சந்துருவின் அப்பா சொன்னார். கண்ட இடங்களில் பாவ் பாஜி, பட்டாடா வடா சாப்பிடுவதால் தான் உனக்கு வயிறு கெட்டிருக்கும். ஒழுங்காக மெஸ்ஸில் மட்டும் சாப்பிடவும்.
உன்னைப்பற்றி உன் ஆபிஸ் ரிஸப்ஷனில் விஜாரித்தார்கள் என்பது உண்மை தான். அந்த ரிஸப்ஷன் பெண் கூடத்தான் நீ மதியம் லஞ்ச்சுக்கப்பறம் ஐஸ்க்ரீம் சாப்பிடப்போயிருப்பதாக சொன்னார்களாம்.(போட்டுக்குடுத்துட்டானா!)
பெண்ணின் அம்மாவின் பூர்விகம் பெங்களூராம். அப்பா காரைக்குடி. பெண்ணின் தாத்தாவும் அப்பாவும் தங்கம், வைரம் வியாபாரம் செய்தவர்களாம். அப்பா தற்போது ஃபைனான்ஸ் மற்றும் அடகுக்கடை வைத்திருக்கிறாராம். காரைக்குடியில் பனியாரக்கல்லும் ஜல்லிக்கரண்டியும் வாங்கினோம்.
இப்படிக்கு அம்மா.
----------------------------------
(நான் பதில் போடும் முன் அடுத்த கடிதமும் அம்மாவிடமிருந்து..)
-----------------------------------
30.10.1991
திருச்சி
அன்புள்ள ஶ்ரீதர்,
முடிந்தால் லீவு எடுத்துக்கொண்டு வரவும். சாங்கியத்துக்கு பெண்ணை நீ வந்து பார்த்துவிடலாம்.
பெண்ணுக்கும் வயது கூடிக்கொண்டே போவதால், பையன் பார்க்க சுமாராக இருந்தாலும் பரவாயில்லை முடித்துவிடலாமென பேசிக்கொள்கிறார்களாம். (ஙே!)
எனக்கு அந்த கடைசி பல்லும் நேற்று விழுந்துவிட்டது.
இப்படிக்கு அம்மா.
----------------------------------
பி.கு: நான் பிறகு பதில் எதுவும் போடவில்லை. நம்மள யாராரு கவுக்க ரெடின்னு வெளிய எல்லாம் தேடிப்போவேணாங்க!

ம.வெ.சிவகுமார்

எழுத்தாளர் ம.வெ.சிவகுமார் மரணம்..
1980 என நினைக்கிறேன். டிகிரி முடித்து CA சேரும் முன் திருச்சியிலிருந்து சென்னை சென்றிருந்த சமயம். இராஜாஜி சாலையில் பீச் ரோடு கிளை பாங்க் ஆஃப் பரோடாவில் 'ஷ்ராஃப் கம் கிளர்க்' காக வேலை செய்து கொண்டிருந்த என் மூத்த அண்ணனை பார்க்கச்சென்றிருந்த சமயம்... 'இவன் தான் MV சிவகுமார். கூட வேலை செய்யறான். நிறைய எழுதுவான்' என எனக்கு அறிமுகப்படுத்தியதோடு லஞ்ச்சுக்கும் அவருடன் என்னை அழைத்துச்சென்றான் அண்ணன்.
பாக்யராஜ் கண்ணாடி.. நீண்ட தலைமுடி.. ஸ்டெப் கட்.. பெல்பாட்டம் பேண்ட், ஓவியர் ஜெயராஜ் மாதிரி மீசைக்கு நடுவே சரியாக மூக்குக்கு கீழே முடி முளைக்காத இடைவெளி.... பின்னால் இந்த MV சிவகுமார் தான் பிரபல எழுத்தாளர் ம.வெ.சிவகுமார் ஆவார் என்பது தெரியாமல் பருப்பை பிசைந்து நெய்க்காக காத்திருந்தேன். அந்த ஹோட்டலில் எல்லோரும் திரும்பிப்பார்க்கும்படி கலகலவென சப்தமுடனும் நடுவே ஹாஹ்ஹா என இடிச்சிரிப்பு சிரித்தும் செம்மையாக அரட்டையடித்துக்கொண்டு 'டேய் தம்பி! கொஞ்சம் மோர் விடப்பா' என கத்திக்கொண்டிருந்தார் MV சிவக்குமார் . அதே வங்கியின் சூளைமேடு கிளையில் பாலகிருஷ்ணன் என்ற இளைஞரும் இருந்தார். ( அவரும் பாங்க் ஆஃப் இந்தியா சுரேஷும் சேர்ந்து 'சுபா' என்று பின்னாளில் பிரபலமடைந்த இரட்டை எழுத்தாளர்கள்)
எக்மோர் கன்னிமரா நூலகம் அருகே இயங்கிக்கொண்டிருந்த பரீக்ஷா (ஞானி சங்கரன்) வுடன் இனைந்து நிறைய நாடக வசனங்கள் எழுத ஆரம்பித்த சிவக்குமார் அந்த நாடக அனுபவங்களினால் 'வட்டம்' என்ற சிறுகதையை முதன்முதலில் கனையாழியில் எழுதினார். பின் விகடன், கல்கி (பாப்கார்ன் கனவுகள்), குங்குமம் (குதிரைகள்) என வரிசையாக அவரது கதைகள் வரத்தொடங்கின.
எழுத்துலகில் பிரபலமடைந்ததும் மெல்ல சின்னத்திரையிலும் சினிமா உலகிலும் நுழைந்தவுடன் தான் அவருக்கு சோதனைகள் ஆரம்பம்.
தேவர் மகன் படத்தில் சரியான பெயர் மற்றும் சம்பளம் வரவில்லையென நிறைய பிரச்சினைகள். சின்னத்திரையில் பிரபல சினிமா இயக்குநரின் சீரியலுக்கு கதை எழுதி அதில் பெயர் மட்டுமல்ல... சம்பளமும் சரியாக வரவில்லை. இயக்குநரின் வீட்டு வாசல் முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சத்தம்போட்டு கத்தியதும் ஓரளவு பணம் கிடைத்ததாம். பிறகு 'என்னாச்சுப்பா?' என கேட்ட நடிகர் ஒருவரிடம் 'உங்க குருவாச்சே! உங்கள மாதிரி தான் இருப்பார்' என முகத்திற்கு நேரே தயங்காமல் சொல்லும் சிவகுமார் கொஞ்சம் முன்கோபி.
இதய நோயால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்தில் pace maker பொருத்தப்பட்டிருந்தது. சினிமா படமெடுக்க வீட்டை விற்றதுடன், கடன், பணப்பிரச்னை. அதிக மன உளைச்சல். மகளின் திருமணம் ஒரே வருடத்தில் முறிந்தாலும் உடனே மறுமணம் செய்து வைத்தது ஓரளவு அவருக்கு நிம்மதியை கொடுத்தது. மகளின் திருமணத்தை சக்கர நாற்காலியிலிருந்தவாறே நடத்தினார் என்பது வேதனை. மகனும் TCSஇல் நல்ல வேலையில் அமர்ந்தான்.
ஆனால் உடல் உபாதை பல வருடங்கள் நீடித்திருந்தது என்பது மிகவும் வேதனை.
பல வருடங்கள் முன் பாங்க் ஆஃப் பரோடாவிலிருந்து முதல் பாட்சில் பென்ஷன் இல்லாமல் VRSஇல் ரிடையர் வாங்கிக்கொண்டபோது இவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓரளவு பென்ஷன் கொடுக்க மேலிடத்தில் ஒப்புக்கொண்டார்களாம்.
இன்று காலை நண்பர்கள் மூலம் இவர் இறந்த விபரம் என் அண்ணனுக்கு தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட, எப்படி இறந்தார் என கேள்விப்பட்டபோது இன்னும் அதிர்ச்சி... வீட்டிலிருப்பவர்கள் காலை இவரது அறைக்குச்சென்றபோது நாற்காலியில் உட்கார்ந்தவாறே இறந்திருப்பது தெரிய வந்ததாம், டீ.வி இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்.
இரண்டு வருடங்கள் முன் பஹ்ரைனில் எங்களது ICAB (Indian Chartered Accountants Bahrain) Toastmasters எனப்படும் public speaking ஃபோரம் வருடாந்திர ஆங்கில பேச்சுப்போட்டியில் 'touching story' என்ற தலைப்பிலான எனது பேச்சு பரிசு பெற்றதற்குக்காரணம் எழுத்தாளர் ம.வெ.சிவகுமார் தான். டில்லி செல்லும் இவரை அனுப்ப ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்த தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தபோது அப்பாவின் கை மேல் இவரது கை உரச, அந்த ஸ்பரிசத்தினால் இவருக்கு நல்ல கரு கிடைக்க, தந்தை-மகனின் உன்னதமான உறவைப்பற்றி இவர் 'ஸ்பரிஸம்' என்ற கதை எழுதியிருப்பதைப்பார்த்ததும் எனது பேச்சுப்போட்டிக்கும் நல்ல கரு கிடைத்தது. கொஞ்சம் சுட்டுவிட்டேன்.. கொஞ்சமென்ன 'கட் அன்ட் பேஸ்ட்' தான்.
CA படித்து முடித்து பம்பாயில் நல்ல வேலையில் சம்பாதித்துக்கொண்டிருத்தாலும் சினிமாவிற்கும் ஜீன்ஸ் பாண்ட்டிற்கும் சினிமாப்பாடல் காசெட்டுகளுக்கும் சிலவு செய்துகொண்டு, அப்பாவிற்கு பணம் அனுப்பாமல், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு திரிந்த என்னை ஒரு முறை வழியனுப்ப அப்பா திருச்சி ஜங்ஷன் வந்திருந்தபோது ஜன்னல் கம்பியை பிடித்தவாறே ரயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அவரது கை விரல்களுடன் என் கைகள் உரச (கட் அன்ட் பேஸ்ட் இந்த இடத்தில் முடிந்தது), வெடுக்கென இருவரும் கைகளை இழுத்துக்கொள்ள ( இதெலேந்து நம்ம சரக்கு) , சட்டென்று என்னை ஏறிட்டு நோக்கிய அப்பாவின் கண்களை நான் தவிர்க்க, சில நொடிகள் விசித்திர மௌனம்... பிறகு 'பென்ஷன் பத்தலை...அப்பப்போ ஏதாவது முடிஞ்ச அளவு பணம் அனுப்புப்பா' என்று சொல்லி சட்டைப்பையில் ப்ளாட்ஃபார்ம் டிக்கட் இருக்கிறதாவென சரிபார்த்து அப்பா சரேலென நகர்ந்த நொடியில் அவரின் அந்த 'ஸ்பரிசம்' என்னை எப்படி மாற்றியது, பின் பார்க்கின்சன் நோயால் அவர் பேசும் திறன் இழந்து (இனி உண்மைச்சம்பவங்கள்) வருடாவருடம் அவரைப்பார்க்க பஹ்ரைனிலிருந்து நான் போகும்போது அவரது கைகளை ஆதரவாக பற்றிய நிலையில் அவருடன் பேசுவது, 'மதராசபட்டினம்' பட இடைவேளையில் கைத்தாங்கலாக அவரை கூட்டிக்கொண்டு போய் அவருக்குப்பிடித்த முக்கோன வடிவ காய்கறி சமோசா வாங்கித்தந்தபோது அவரது கண்களில் (பச்சை நிற விழிகள் அவருக்கு) நான் கண்ட ஒளி....அடுத்த வருடம் 82 வயதில் அவர் இறந்தாலும் அந்த 'ஸ்பரிசம்' இன்னும் என் மனதில் உயிருடன் இருப்பதாகச்சொல்லி முடித்த எனது உரைக்கு சந்தேகமில்லாமல் முதலிடம் கிடைத்து போது கவனித்தேன், ஃபிலிப்பினோ ஜட்ஜ் பெண்மணி கண்களை துடைத்து டிஷ்யூ பேப்பரில் மூக்கை சிந்தினார்.
சென்ற வருடம் திருச்சியிலிருந்து தொலைபேசியில் ம.வெ.சிவகுமாருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது 'ஸ்பரிசம்' கதையின் கருவையும் தாக்கத்தையும் கொண்டு ஆற்றிய என் உரையைப்பற்றி குறிப்பிட்டபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்த அவர் 'பாத்து எத்தனையோ வருஷமாச்சுப்பா.. உங்கண்ணாவைப்பத்தி கூட விகடன்ல ஒரு கதை எழுதினேன். அடுத்த வருஷம் வர்ற போது நேர்ல சந்திக்கலாம் வா' என்று முடித்தவர் தான் பாவம்.
சென்ற அக்டோபர் மாதம் 60 வருடங்கள் பூர்த்தி...இந்த வருடம் உயிருடன் இல்லை.
'விதிப்படி தான் நாம இறப்போம்.. அதனால மருந்து மாத்திரை சாப்பிட மாட்டேன். I am not scared of my death' என விவாதிப்பரிடம் என்ன சொல்வது?
'நீ எவ்வளவு பெரிய ஆளானாலும் ஒரு நாள் பூஜ்யமாத்தான் போய்ச்சேருவே... அத மனசுல வச்சித்தான் என் முதல் கதைக்கு 'வட்டம்'னு பேர் வச்சேன்' என்று சொன்ன அவர் சரியாகத்தான்....,ஹ்ம்..

சாதனா

அலகாபாத்... 1979.. அக்கா வீடு..தர்பாங்கா காலனி..பஞ்சாபி கத்ரி, சர்தார்ஜி மற்றும் உ.பி. காயஸ்த் குடும்பங்கள் எங்களைச்சுற்றி..
அக்கா வீட்டுக்காரர் எனக்கு தாய் மாமா..பத்ரி மாமா..
அவசரம் அவசரமாக நைனி ஆபிசிலிருந்து மாலை தன் ஜாவா மோட்டார் பைக்கில் வருவார்.
வரும்போதே பையில் சுடச்சுட சமோசா, மீட்டா சட்னி, கச்சோரி அல்லது ஜிலேபி தஹி...
அவசரமாக வாய் கொள்ளாத அளவு சமோசாவை அடைத்து அத்ரக் ச்சாய் குடித்த பின் கிளம்பி ஓடுவோம். மாமா அக்கா பின்னால் நானும் ஜாவாவில் தொங்கிக்கொண்டு...
சிவில் லைன்ஸ் ஏரியா தாண்டி விஷ்வம்பர் தியேட்டர் வாசலில் மாமா பைக்கை நிறுத்தும் சமயத்தில் நான் ஓடிப்போய் டிக்கெட் வாங்குவேன்..
படம் waqt...இளம் அப்பா பால்ராஜ் சாஹ்னி..ஆக்சுவல்லி அவரு அப்பவே வயசானவர் தான்.. முதல் காட்சியில் மன்னாடே குரலில் மனைவி ஆஷா சச்தேவவை நோக்கி காதலுடன் 'அய் மேரி ஜோஹ்ரா ஜபீன்' கவ்வாலி பாடி முடிக்கும்போது பூகம்பம்... அந்த ஊரே அழிந்து அவரது குழந்தைகள் சொல்லி வைத்து விரட்டின மாதிரி திசைக்கொன்றாக காணாமல் போக, நான் மும்ஃபோலியை (வேர்க்கடலை) உரித்து காலா நமக்கில் தொட்டு ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருப்பேன். கடைசி காட்சியில் தான்..சாலா..எப்படியும் குடும்பம் ஒன்னா சேருமே!
இந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு? விஷயத்துக்கு வர்றேன். அந்த நடிகையை இந்த படத்தில் தான் முதன்முதலாக பார்க்கிறேன். நெற்றியில் எப்போதும் ஏழெட்டு கற்றை முடி...திருச்சி ஹோலி க்ராஸ் காலேஜ் வாசலில் சாயங்காலம் ஶ்ரீரங்கம் போக TST பஸ்ஸுக்காக காத்து நிற்கும் முப்பது முப்பத்தைந்து பெண்களின் நடுவே பளிச்சென தெரியும் அழகான முகம் நினைவுக்கு வரும்..
'கௌன் ஆயே கி நிகாஹோன்' என ஆஷா போன்ஸ்லே குரலில் பாடி, கண் முழுக்க மையை ஈஷி, பூகம்பத்தில் தப்பித்த குட்டிப்பையன் ராஜு இன்டர்வெல் மட்கா ச்சாய்க்குப்பின் ராஜா என்கிற சுமாரான மூஞ்சி இளைஞனாகி, பல்லை கடித்துக்கொண்டு வாயே திறக்காமல் வசனம் பேசும்... வேற யாரு! ராஜ் குமார் தான்.. அவனை இந்த பெண் காதலிக்கிறார்..அருமையான நடிப்பு..
அடுத்த வாரமோ மாதமோ மறுபடியும் மாமா அக்காவுடன் நிரஞ்சன் தியேட்டரில் 'மேரி மெஹ்பூப்' படம். முதுகில் நாலு சாத்து சாத்தி சத்தம் போட்டு, கடைசியில் நாம் கெஞ்சினாலும் நடிக்கவே வராத ராஜேந்திர குமாருடன் பாடி ஆடி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் வளையவருகிறார் அதே கதாநாயகி... நெற்றியில் அதே கற்றை முடி.. திருச்சி ஹோலி க்ராஸ் சாயல்...
அடுத்த மாதம் லக்ஷ்மி டாக்கீஸில் 'வோ கௌன் த்தீ' ....
பிறகு ' ஏக் ஃபூல் தோ மாலி'.....நிறைய படங்கள்..
சுனில் தத்(தி), சஞ்சய் கான், ஷம்மி கபூர், மனோஜ் குமார் என நிறைய நடிகர்களுடன் படங்களில் கதாநாயகி...
80 இல் டிகிரி முடிக்கும் முன் மூன்று வருடத்தில் இவரது படங்கள் நிறைய பார்த்தாகி விட்டது..
இரண்டு நாட்களுக்கு முன் மறைந்த பழம்பெரும் ஹிந்தி நடிகை சாதனா சிவ்தாசினி...
நெற்றியில் முடிக்கற்றை இன்னும் மனதில்.

சின்னத்திரை ஆராவமுதன்

12 வயதிருக்கும் எனக்கு அப்போது. இவர்களது மன்னார்குடி வீட்டில் என் தாய் மாமாவின் திருமணம். இவரது மூத்த சகோதரி தான் மணப்பெண். என்னைவிட ஓரிரு வயது இளையவர். அந்த திருமண வைபவத்தில் சின்ன பசங்களான நாங்கள் முதல் நாள் மட்டும் தான் பட்டும் படாமல் இருந்தோம். மறுநாள் முதல் அடுத்த நான்கு நாட்கள் இவருடன் சரியான லூட்டி. இவரது மற்ற மூன்று சகோதரர்களும் செம்ம அரட்டை.
வீட்டிலேயே ஒரு கலியாணம் நடத்தும் அளவுக்கு அவ்வளவு பெரிய முற்றத்தில் நலுங்கு மற்றும் மற்ற சடங்குகள் தினமும் நடக்கும். பெண் வீட்டாருக்கு பூர்வீகம் சிங்கப்பூர் என்பதால் ஒரே சிங்கப்பூர் கும்பல். தினமும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்.
"நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா..
ஆட்டமாடி தம்பி பாட்டுப்பாடி அழகான கோமாளி வந்தேனய்யா"
போன்ற பாடல்களை நான் மற்றும் என் சகோதரன் ரவி (Vijay Raghavan ) பாட, அடுத்து எங்கள் தங்கம் எம்.ஜி.யாரின் "தமிழ் நாடு நல்ல தமிழ்நாடு.. சட்டசபை போற்றும் தமிழ் நாடு" என இவரும் இவரது சகோதரன் அபோன்டுவும் ( Gopi Krishnan )கதாகாலட்சேபம் செய்வார்கள்.
பிறகு வருடாவருடம் ஆண்டு விடுமுறையில் சென்னையில் கூடி இவரது சகோதரர்களுடன் பட்டனத்தை சுற்றிப்பார்ப்பது..இவரது மூத்த அண்ணன் ராஜுவுடன் எக்மோர் ஸ்டேஷன் எதிரே புஹாரி ஹோட்டல் காபி, லைட் ஹௌஸ், கடற்கரை என கழித்த நாட்கள் மறக்க முடியாது.
மூத்த அண்ணன் ராஜு ( Rajagopal Venkatesan) தற்போது மன்னார்குடியில் பிரபல தொழிலதிபர், இன்டேன் கேஸ் ஏஜென்சி, அரிமா சங்கத்தில் உயர்பதவி, மேடை நாடக நடிகர்,அவரது நண்பர் டெல்லி கணேஷுடனும் ட்ராமா போட்டு நடித்துவிட்டார். மற்ற சகோதரர்கள் மாலத்தீவில் (Maldives) கல்லூரி பேராசிரியர், வங்கியில் மானேஜர் என செட்டிலாகிவிட, இவர் சினிமா கல்லூரியில் படித்து, பிரசாத் ஸ்டுடியோவில் இருந்துவிட்டு சின்னத்திரைக்கு வந்து விட்டார். டீவி சீரியல்களில் (தற்போது 'குலதெய்வம்') பிரபலமாகிவிட்டார். மறக்காமல் இந்த சகோதரர்கள் இன்னும் எங்களது பழைய நாட்களை அவ்வப்போது அசைபோடுவதுண்டு.
ப்ரோ' என என்னை வாஞ்சையுடன் அழைத்து என் முகநூல் பதிவுகளை மறக்காமல் படிப்பவர்.
'ஆரா' என செல்லமாக எல்லோராலும் 'ஆரா மாமா' என எங்கள் குடும்பத்து சிறுசுகளாலும் அழைக்கப்படும் தம்பி ஆராவமுதனுக்கு இன்று பிறந்த நாள்.
இறைவன் அருளால் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
சின்ன வயசு குறும்பு மட்டும் இன்னும் போகவில்லை (சீரியல்ல தான் பாக்கறோமே!)
ஹாங்... சொல்ல மறந்து விட்டேன்..அந்த மன்னார்குடி கல்யாணம் முடிந்து சில நாட்களில் எங்கள் மாமா புத்தம்புது ஸ்டான்டர்டு-20 கார் வாங்கி அத்தையின் பிறந்தகம் (இவரது வீடு) போய் தங்கிவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மதராஸ் திரும்பும் முன் யதேச்சையாக காரை பார்த்தபோது கார் கதவில் 'ஆராவமுதன்' என ஆணியால் கீறி அழுத்தி எழுதப்பட்டிருந்தது. 😄😄

மாநாடு

சென்ற வருடம் துருக்கியில் நடந்த வருடாந்திர ரெயின்போ விநியோகஸ்தர்கள் கூட்டம் இம்முறை துபாயில். எங்கள் விற்பனை மேலாளருடன் அந்த மாநாட்டுக்கு போயிருந்தேன். நாங்கள் பஹ்ரைனில் விநியோகிக்கும் உணவுப்பொருட்களில் ஒன்று நெதர்லாந்து நாட்டில் 'ரெயின்போ' என்ற பெயரில் தயாராகும் பால் பவுடர் மற்றும் ஆவியாக்கப்பட்ட (evacuated milk) பால். நட்சத்திர ஹோட்டல்கள், ஹைப்பர்/சூப்பர் மார்க்கெட்டுகள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் இந்நாட்டு இராணுவம் அனைவரும் எங்களிடம் கொள்முதல் செய்வதால் அமோக விற்பனை எங்களுக்கு.
மாநாடு நடத்திய நெதர்லாந்து மற்றும் துபாய் அலுவலகத்து சிப்பந்திகள் அனைவரும் பாகிஸ்தானிய இளைஞர்கள் மற்றும் நடுத்தர வந்து ஹாலந்தியர்கள். ஆண் பெண் வித்தியாசமின்றி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து வரவேற்கும் வழக்கம், இத்தனை வருடங்கள் கழித்தும் திருச்சி தென்னூரில் வளர்ந்த எனக்கு வருவதில்லை. கூச்சத்துடன் கையை மட்டும் கொடுத்தேன். 'தொடாமெ பேசுடா' என அம்மா அதட்ட, வீட்டில் அக்கா, தங்கைகளுடன் கூட தொடாமல் பேசி வளர்ந்தவன் நான். பஹ்ரைன், ஒமான், கதார், சவுதி,குவெய்த் என எல்லா நாடுகளிலிருந்தும் வந்திருந்தனர்.
எங்கள் விற்பனையை ஃபார்முலா-1 கார் பந்தயத்துடன் ஒப்பிட்டு பளீரென விளக்குகள், அரங்கமே அதிர ஆடியோ,வீடியோ மற்றும் பவர்பாயின்ட் விஷுவல்கள் கொண்டு கடந்த வருடம் எப்படி செயலாற்றினோம், அடுத்த வருடம் விற்பனை எப்படி இருக்கும், உலகளவில் என்னென்ன சவால்கள், அதை எப்படி அடுத்த வருடம் சமாளிக்கலாம் என பாகிஸ்தானிய இளைஞன் சல்மான் கார் ரேஸ் உடையில் அழகாக விளக்க, அழகிய லெபனீய யுவதி ஒருத்தி சிக்கனமான மேலுடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபின் தழைய தழைய மேடையை சுத்தமாக பெறுக்கியெடுத்துவிட்டு உயரமான குதிகால் காலணியுடன் கவனமாக மேடையை விட்டிறங்கி மறைந்தாள்.
'சென்ற வருடம் நீங்க இத்தனை மெட்ரிக் டன் விற்பனை செஞ்சீங்க, அடுத்த வருடம் இரண்டிலக்க வளர்ச்சி காட்டலாமே' போன்ற அவர்களின் ஈமெயில்களுக்கு 'அதுசரி.. போன வருஷத்துக்கும் முந்தின வருஷம் நாங்க கேட்ட அளவு கொடுக்க முடியாம அதை போன வருஷத்தோடு சேர்த்து தலையில் கட்டிட்டு , அதையே பெஞ்ச்மார்க்கா எடுத்துக்கறது நாயமா?' போன்ற எங்களது பதில்கள் (யாரு கிட்ட?)...இதெல்லாம் மாநாட்டுக்கு முன் தான். ஆனால் மாநாட்டில் எல்லா நாடுகளிலிருந்தும் வந்திருந்த விநியோகஸ்தர்கள் முன் குறைகளை தனிப்பட்ட முறையிலும் நிறைகளை அனைவர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டி,பாராட்டி, பரிசு வழங்கிய அவர்களது உத்தி பாராட்டும்படியாக இருந்தது.
காலை உணவு, இரண்டு மணி நேர மாநாடு, தேநீர் இடைவேளை, மதிய உணவு, எல்லாம் முடிந்து மாலை கொண்டாட்ட உடை விருந்து (gala dinner) கருப்பு உடை அல்லது கருப்பு டை என்ற டிரெஸ் கோடுடன். இரவு ஏழு மணியில் இருந்து பதினோரு மணி வரை வட்ட மேசைகளில் உட்கார்ந்து அரட்டை. அரட்டையில்லாத விருந்தா! உங்களுக்கு 'சிவப்பு திராட்சை சாராயமா' என என்னிடம் கேட்ட சீனப்பெண்ணிடம் வெட்கத்தோடு 'நான் தண்ணியடிக்கறதில்லைங்க' என சொல்ல பக்கத்திலிருந்த ஹாலந்துக்காரன் 'all Indians are vegitarians and teetotalers.. right?' என கேட்டான். 'உன் உலக ஞானத்துல தீய வெய்க்க...இதெல்லாம் உனக்கு இப்பசத்திக்கி விளக்க முடியாது' என சொல்ல நினைக்கும் முன் அவன் ஸ்பார்க்கிள் வாட்டரை மடக்கென குடித்து முடித்தான். உயரமான கிளாஸில் அவள் சிகப்பு வொய்னை ஊற்ற 'சியர்ஸ்' சொல்லி மற்றவர்கள் தங்கள் கிளாசை உயர்த்த நானும் கையிலிருந்த மினரல் வாட்டரை உயர்த்தும்போது ஹாலந்துக்காரன் மட்டும் என்னை வினோதமாக பார்த்தான்.
அரையிருட்டில் மெல்லிய வெளிச்சம், கண்ணாடி தம்ளர்களின் ஒலி, சாரங்கி மாதிரி ஏதோ அரபிய/வயலின் இசை, எதிரே 'லைவ் குக்கிங்' சத்தம்.... தத்தம் நாட்டு கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள், குழந்தை வளர்ப்பு, உணவுப்பழக்கம் பற்றி கஜகஜவென எல்லோரும் ஒரே நேரத்தில் எச்சில் தெறிக்க அடுத்தவர் காதுக்குள் பேசிக்கொண்டிருக்க, எதிரே இருந்த விஷமக்கார ஜோர்டானியன் ஒருவன் மனைவியரின் நச்சரிப்பு பற்றி சொல்ல ஆரம்பித்தது தான் தாமதம்...அரட்டை படு சுவாரசியமாகப்போனது. ஹஹ்ஹா என பலத்த சிரிப்பு...சரக்கை இன்னும் அடுத்த இரண்டு சுற்றுக்கு கொண்டு போனார்கள், மனைவியிடமிருந்து தற்காலிக நிவாரணம் பெற்ற சிலர்.
நடு நடுவே வித்தியாசமான மெனுவை எல்லோருக்கும் பரிமாறினார்கள். உருண்டையான ஏதோ ஒரு வஸ்து தட்டில் வைக்கப்பட அடுத்த நொடி அதை இரண்டு குச்சிகளால் எடுத்து டயட் கோக்குடன் சேர்த்து உள்ளே தள்ளினாள் நமிதா சாயலில் இருந்த எகிப்து நாட்டுக்காரி. பச்சையாக மீனை மசித்து துவையல் ஆக்கி ஜப்பானிய 'சூஷி' எனச்சொல்லி சமயபுரம் மாவிளக்கு உருண்டை மாதிரி தட்டில் வைக்க அந்த சுற்றுப்பிரகாரமே கப்பு. மைதாவில் முக்கியெடுத்து எண்ணெயில் பொறித்தெடுத்து தட்டில் வைக்கப்பட்ட இறால் மீன்களை ஜோர்டான், எகிப்து மற்றும் ஹாலந்து மூன்றும் சடுதியில் கபளீகரம் செய்தன. அடுத்து கின்னங்களில் ஆவியில் வேகவைத்த பச்சை சோயாபீன்ஸ்...துக்கம் தொண்டையை அடைக்க உரித்து வாயில் போட்டுக்கொண்டேன்.
எதிரே இருந்த மற்றொருவர் ஹாலந்துக்காரர் தான் ஐரோப்பிய நாடொன்றில் முன்பு ப்ராக்டர் & காம்பிள் கம்பெனியின் சி.இ.ஓவாக இருந்தபோது நாட்டின் பொருளாதாரம் இறங்குமுகமாக இருந்தபோதும்கூட குறிப்பிட்ட ஒரு பொருளின் விற்பனை மட்டும் அவ்வருடம் இருமடங்காகும் அளவிற்கு மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு படையெடுத்தனர் என குறிப்பிட்டபோது எல்லோரும் அவரை உற்றுப்பார்த்தோம். ஜப்பானிய 'ஆசாஹி' பியரை வாயில் கவிழ்த்து மேலுதட்டை மறைத்த நுரையை துடைத்தபடி அவர் 'அந்த பொருள் வேறொன்றுமில்லை.. தலைமுடி கலரிங் (ஹேர் டை) தான் என்றதும் 'அதெப்பிடி!' என நாம் ஆவலுடன் அவரை பார்க்க, அவர் 'ஏன்னா தலைமுடி கலரிங் செய்ய சலூனுக்கு போனா செலவு நான்கு மடங்காகுமே... எனச்சொல்லி வெடிச்சிரிப்பு சிரிக்க, ஏக காலத்தில் எல்லோரும் 'வாவ்' என ஒலியெழுப்ப, சிறிலங்க இளைஞன் ஓடிவந்து போத்தலில் மிச்சமிருந்த சாராயத்தை கோப்பைகளில் ஆச்சமனீயம் செய்துவிட்டுப்போனான். எதிரே வைக்கப்பட்ட பெரியர் சோடா வாட்டரை எவ்வளவு நேரம் தான் நான் உறிஞ்சுவது?
அடுத்த சில நிமிடங்களில் ஐஸ்க்ரீம், பழ வகைகள் வைத்து இனிமேல் தான் மெயின் கோர்ஸ் வருமென காத்திருந்த என் நினைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு விருந்தை முடித்தார்கள்.
மறுநாள் காலை துபாயிலிருந்து பதினைந்து கி.மீ தொலைவில் பாலைவனத்தின் நடுவே உள்ள ஒரு துப்பாக்கி சுடுதல் மையம் ஒன்றிற்கு எங்களை அழைத்துச்சென்று பல அணிகளாக பிரித்து குறி பார்த்து சுடுதல் மற்றும் வில்-அம்பெய்யும் திறனுக்கான போட்டியும் வைத்து பரிசுகளுடன் தலைமுழுக்க ஐஸ் வைத்து ஊருக்கு அனுப்பினார்கள்.
பெரும்பாலும் பாகிஸ்தானியர்களும் ஹாலந்தியர்களும் நடத்திய மாநாட்டில் அதிக விற்பனையில் சாதனை செய்த கத்தார் மற்றும் ஒமானிய விநியோகஸ்தர்களுக்கு முதலிரண்டு இடங்கள்..பாராட்டுக்கள், பரிசுக்கோப்பைகள். பரிசு பெற்றதில் பெரும்பான்மை நமது இந்தியர்கள் தான்...வட இந்திய மார்வாடிகள். ஒருவர் மட்டும் மறக்காமல் என்னிடம் வந்து 'சுகந்தன்னே? ஓர்மையுண்டோ? கழிஞ்ச வருஷம் கண்டு..' என கேட்க நான் 'ண்டு' என்றேன்.
'ஶ்ரீதர்! உங்க ஃப்ளைட் ஐடினெரரியை அனுப்புங்க, ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பறோம் என் அன்புடன் அழைப்பு விடுத்து துபாய் டெர்மினல்-3இல் இருந்து எங்களை பிக்கப் செய்து எல்லோருக்கும் ஜுமெய்ரா பகுதியின் பா(ல்)ம் தீவில் அட்லான்டிஸ் எனப்படும் ஆடம்பர ஹோட்டலில் தங்க வைத்து, எங்கள் நிறுவனத்திற்கு நேர்மறையான கருத்துக்களைச்சொல்லி பாராட்டி, பரிசுகள் கொடுத்து திரும்ப அனுப்பி வைத்த இளம் பாகிஸ்தானிய கன்ட்ரி மானேஜர்களின் அன்புமழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடி பஹ்ரைன் திரும்பும்போது யோசித்தேன்...இந்திய பாகிஸ்தானிய பிரச்னை எல்லாம் தொலைகாட்சி/பத்திரிக்கை ஊடகங்களில் மட்டும் தானோ!

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு...

திருமதி.புலபகா சுசிலாவை (பாடகி சுசிலாம்மா தாங்க!) அவர்கள் இல்லத்தில் (வாசலில் 'சுசிலா மோகன்' பெயர்ப்பலகையாம்) இவர் சந்தித்தது பற்றி முகநூலில் படு சுவாரசியமாக எழுதியிருப்பார். மற்றொரு பாடகியுடன் பேசிக்கொண்டிருந்த சுசிலா அவர்கள் இவரை வரவேற்று, நலம் விசாரிப்பு சம்பிரதாயங்கள் முடிந்தவுடனேயே 'நீங்க என்னை ரொம்பவே புகழ்ந்திருக்கீங்க' என சொல்லி இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். அதாவது பத்மபூஷண் விருது பெற்றதற்கு பாராட்டு தெரிவித்து இவர் முன்பு எழுதிய கட்டுரையை யாரோ சுசிலாம்மாவிடமே சேர்த்திருப்பது அப்போது தான் இவருக்கு தெரிந்ததாம். என்னவொரு இனிய தருணம் அது! ஐம்பதுகளில் சலூரி ராஜேஸ்வர்ராவ், டி.சலபதி ராவ், ஆதிநாராயண ராவ், ஜி.ராமநாதன் போன்ற பத்துக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களிடம் பாடி சுசிலா பிரபலமடைந்தது பற்றியும்,
டி.ஜி.லிங்கப்பாவின் ஒரே பாடல் மூலம் (அமுதை பொழியும் நிலவே) புகழின் உச்சியை அடைந்து பற்றியும், டி.ஆர். பாப்பா வரை (வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே) அத்தனை இசையமைப்பாளர்களைப்பற்றியும் சுசிலாம்மாவுடன் சில மணி நேரங்கள் இவர் நடத்திய சம்பாஷனைகளை பார்த்து அசந்து விட்டார்களாம் அங்கு வந்திருந்த பாடகி சுஜாதா மற்றும் அவரது மகள் ஸ்வேதா மோகன்.
'என்னதான் ரகசியமோ இதயத்திலே', 'மலர்கள் நனைந்தன பனியாலே', 'உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல' பாடல்களைப்பற்றி இவர் சுசிலாம்மாவிடம் விவாதித்தது பற்றி விரிவாக குறிப்பிட்டிருப்பார். 50களில் சுசிலா அவர்களுடன் திரையுலகில் போட்டியிட்ட ML வசந்தகுமாரி, ராதா ஜெயலக்ஷ்மி, பாலசரஸ்வதி, P லீலா, ஜிக்கி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, டி.எஸ்.பகவதி, டி.வி.ரத்தினம், AP கோமளா மற்றும் ஜமுனாராணி அனைவரையும் பின்னுக்குத்தள்ளி 60க்குத்தாவி புகழின் உச்சியை அடைந்ததை இவர் சுசிலாம்மாவிடம் குறிப்பிட்டபோது அவரது முகத்தில் தெரிந்த மலர்ச்சியை அழகாக குறிப்பிட்டிருப்பார். பாடலை பாடுவதற்கு முன் கதையையும் பாடல் காட்சியின் சிச்சுவேஷனையும் இயக்குநர் தனக்கு முழுவதும் விளக்கி விட்டதால் தாய்-மகள் உறவை அப்பாடலில் அழகாக வெளிப்படுத்தியிருப்பதாக சுசிலாம்மா சொன்னார்களாம். பாடல் என்னவென்பதை இந்நேரம் நீங்கள் யூகித்திருக்கலாம் ('ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு'- காவியத்தலைவி). வேறு யாருடனும் இந்த அளவிற்கு சுசிலா அவர்கள் தனது பாடல்களைப்பற்றி கலந்துரையாடியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
இசையமைப்பாளர் மனயங்கத்து சுப்ரமணியம் விஸ்வநாதன் (MSVன்னாத்தான் நமக்கெல்லாம் தெரியும்) இறப்பதற்கு முன் சமீபத்தில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இவர் எழுதிய இரங்கல் பதிவை 'ஆளுக்கொரு தேதி வெச்சி ஆண்டவன் அழைப்பான்' என்று MSVயே பாடிய பாடல் வரிகளிடன் முடித்திருக்கும் விதம் அருமை.
SV சுப்பையா என்றாலே நம்மில் நிறைய பேருக்கு அவர் வி-கழுத்து பனியனுடன், கக்கத்தில் துண்டுடன் குனிந்து 'சொல்லுங்க எசமான்' என வந்து நிற்பதும், துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணில் நீர் தளும்ப, துண்டை வாயில் பொத்திக்கொண்டு அழுகையை அடக்க முயற்சிக்கும் முகம் தான் நினைவுக்கு வரும். ஆனால் சுப்பையா அவர்களைப்பற்றி ஒரு முழு நீளப்பதிவே இவர் எழுதியிருப்பார். குறிப்பாக சுப்பையா அவர்களே தயாரித்து 'சூப்பிரென்டென்ட் ராகவனாக' நடித்த 'காவல் தெய்வம்' படம் பற்றிய பதிவு. எத்தனை பேருக்குத்தெரியும் அல்லது நினைவிருக்கும் அது ஜெயகாந்தன் அவர்களின் 'கை விலங்கு' கதையென்றும், கே.விஜயன் இயக்கத்தில் ஜி.தேவராஜன் இசையமைப்பில் வெளிவந்த சுப்பையா அவர்கள் தயாரித்த படம் என்பது? இப்பதிவில் நான் மிகவும் ரசித்த பகுதி மாணிக்கமும்(சிவகுமார்) கோகிலாவும் (லட்சுமி) பாடும் 'அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்' பாடல் பற்றிய தகவல், பாடலைப்பாடிய தாராபுரம் சுந்தர்ராஜன் மற்றும் பாடலாசிரியரான மாயவநாதன் (அதுவும்..இவரது ஸ்டைலில் 'the forgotten Mayavanathan' னாம்!).. 1969இல் நான் ஈரோட்டில் கைக்காளந்தோப்பில் இருந்து குதிரை வண்டியில் சென்று தியேட்டரில் இப்படத்தை பார்த்து ரசித்த நினைவலைகளுக்கு இவரது இந்த பதிவு என்னை கொண்டு சென்றது என்பது உண்மை.
'கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்' தான் நம்ம KB சுந்தராம்பாள் போன்ற தகவலை இவரது முகநூல் பதிவைத்தவிர எந்த பத்திரிக்கையிலும் நாம் படித்திருக்க வாய்ப்பில்லையென நினைக்கிறேன். சுந்தராம்பாள் சிறு வயதில் ரயிலில் பாட்டுப்பாடி பிழைத்தவர் என்பதும் பிறகு பிரபலமாகி SG கிட்டப்பா அவர்களை காதலித்து மணந்தார் போன்ற தகவல்கள் மட்டும் தான் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர் செங்கோட்டை கங்காதர கிட்டப்பாவை (முழு பெயரெல்லாம் எப்பிடீங்க ப்ரதர் கெடைக்கிது உங்களுக்கு!) எப்படி சந்தித்தார், எப்படி காதலித்தார், பிறகு சூழ்நிலை எப்படி இருவரையும் பிரித்தது, பிரிந்த கணவருக்கு எப்படி அவர் கடிதம் எழுதினார், இக்கடிதத்திற்காவது பதில் போடுங்கள் என KBS கெஞ்சியது, கடிதத்தின் கடைசி வரிகளில் 'தங்கள் அன்பையே ஆபரணமாகக்கொண்ட அடியாள் சுந்தரம்' என கையெழுத்திட்டது, பின் மறுபடியும் இருவரும் இனைந்தது, சேர்ந்து சில நாட்களிலேயே 26 வயதான சுந்தராம்பாளை தனியாக விட்டுவிட்டு 27 வயதிலேயே கிட்டப்பா அவர்கள் அகால மரணமடைந்தது, அதற்குப்பின் ஆண்களுடன் சேர்ந்து நாயகியாக நடிப்பதில்லை என முடிவு செய்து கடைசி வரை வெந்நிற ஆடையிலேயே தன் மீதி நாட்களை கழித்தது....மை காட்! கடந்த 20 வருடங்கள் துபாயில் உட்கார்ந்துகொண்டு எப்படி இவ்வளவு தகவல்கள் திரட்டி வைத்திருக்கிறார்! பிரமிப்பாக இருக்கிறது.
1942இல் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்ததாக குறிப்பிட்டு வயலின் வித்வான் L. வைத்தியநாதனைப்பற்றி இவர் எழுதிய பதிவை படித்து மலைத்துப்போனேன்.
'திலிப் குமார் வைஜயந்தி மாலா நடித்த 'Naya Daur' ஹந்திப்படத்தின் தமிழாக்கமான 'பாட்டாளியின் சபதம்' பற்றி இவர் எழுதிய பதிவில் ஹிந்தித்திரையுலகின் பல அரிய விவரங்களை காணலாம்.
தண்டபாணி ஜெயகாந்தனைப்பற்றி இவர் எழுதிய 'யாருக்காக அழுதான்' மற்றும் பாதை தெரியுது பார்' பதிவுகள் இரண்டும் (அதுவும் இரண்டிரண்டு பாகங்களுடன்) வரிக்கு வரி படித்து முடிக்க குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும்.
சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் PB ஶ்ரீனிவாஸ் அவர்களுடன் இவர் உரையாடியதைப்பற்றி எழுதிய பதிவில் PBS இன் குறும்புப்பாடல்களான 'வாடாத புஷ்பமே' (அடுத்த வீட்டுப்..), 'மாடி மீது மாடி கட்டி' (காதலிக்க நே..), 'ஜாவ்ரெஜா' (குமரிப்..), 'காதல் என்பது எதுவரை' (பாத கா..) என சுமார் பத்து பாடல்களை குறிப்பிட்டும், சரித்திரம் படைத்த பாடல்களான 'நிலவே என்னிடம் நெருங்காதே', 'காலங்களில் அவள் வசந்தம்' போன்ற எக்கச்சக்கமான பாடல்களையும் வரிசைப்படுத்தி இவர் நமக்கு வழங்கியிருப்பார். அடுத்து 'ஏன் சார்! அறுபதுகளின் கடைசியில் உங்கள் திரைப்பயணத்தின் வேகம் திடீரென குறையத்தொடங்கியதே!' என்ற இவரது கேள்விக்கு PBS அவர்கள் புன்முறுவலுடன் நெற்றிக்கு குறுக்கே விரலால் கோடு போட்டுக்காட்டியதை இவர் அழகாக குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த வருடம் (2013) மீண்டும் சந்திப்போமென இவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்ட PBS அவர்களால் தன் வாக்கை காப்பாற்ற முடியவில்லை என உருக்கமாக குறிப்பிட்டு 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் வரிகளுடன் பதிவை முடித்திருப்பார்.
வி.குமாரைப்பற்றி ('உனக்கென்ன குறைச்சல்.. நீ ஒரு ராஜா..') இவர் எழுதிய நீண்ட பதிவு அட்டகாசம். வி.குமாரின் உருவப்படம் வரைய எனக்கு வலைதளத்தில் சரியான புகைப்படம் கிடைக்காதபோது இவரது பதிவில் அருமையான படம் கிடைத்தது. தமிழ் சினிமா உலகம் மறந்த வி.குமாரின் மனைவி பாடகி ஸ்வர்ணா ( 'என்னோடு என்னென்னவோ ரகசியம்') மற்றும் மகன் சுரேஷ் இவருடன் இப்போதும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். வி.குமார் அவர்கள் வீடு இருக்கும் தெருவுக்கும் இவரது பெயர் தானாம்.
பழம்பெரும் மலையாள இசையமைப்பாளர் MB ஶ்ரீனிவாசன் அவர்களைப்பற்றி நமக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. தமிழில் மொத்தம் 8 படங்கள் மட்டும் செய்திருக்கும் இந்த இசையமைப்பாளரைப்பற்றியும் இவர் விரிவாக எழுதியிருக்கிறார் (சிட்டுக்குருவி பாடுது.. தன் பெட்டைத்துணையை தேடுது..தென்னங்கீற்று ஊஞ்சலிலே..)
எந்த ஒரு பிரபலத்தைப்பற்றி எழுதும்போதும் அவர்கள் பிறந்த ஊர், இயற்பெயர், சிறுவயதில் அவர்கள் செய்த சாதனைகள், அவர்களது குரு, அவர்களை யார் ஊக்குவித்தவர்கள், எப்படி திரையுலகில் காலடி வைத்தார், என்னென்ன படங்கள் அல்லது பாடல்கள், ருசிகரமான அல்லது சோகமான சம்பவங்கள் என அவர்களது கடைசி கால சம்பவங்கள் வரை விரிவாக எழுதும் திறன் இவருக்குண்டு. 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற தலைப்பில் நடிகை ஶ்ரீவித்யா பற்றிய பதிவு என்னை பிரமிக்க வைத்தது. சென்னையின் அந்தக்கால எலியட்ஸ் ரோட்டில் (இப்போது ராதாகிருஷ்ணன் சாலையென்று அடைப்புக்குறிக்குள் போட்டுவிட்டார்) அவர்கள் வீடாம். மீனாட்சி(ஶ்ரீவித்யாவின் பெயராம்) தன் தாத்தா அய்யாசாமி அய்யருடன் தினமும் காலை ரிக்‌ஷாவில் காய்கறி வாங்க தண்ணித்துரை மார்க்கெட் ( லஸ் ஆஞ்சநேயர் கோவில் பக்கம்) போவது வழக்கமாம். மறக்கமுடியாத அந்த தினசரிப் பயணமே மீனாட்சியின் இசைப்பயணத்தின் முதல் மைல்கல் என அழகாக குறிப்பிட்டிருக்கிறார். அதாவது வீட்டிலிருந்து போகும்போது தாத்தா சொல்லிக்கொடுக்கும் ராகங்கள் மற்றும் வாய்ப்பாட்டுக்களை திரும்ப வரும்போது அவரிடம் ஒப்பிக்க வேண்டுமாம். பத்தே வயதில் அந்தப்பெண் மேடைக்கச்சேரி செய்யும் அளவிற்கு தயாரானாள் என்பதையும், மதராஸ் லலிதகுமாரி வசந்தகுமாரியின் (MLV) பெண் அவர் என்பதில் ஆச்சரியமில்லை என்பதையும் இவர் குறிப்பிட்டிருந்த விதம் அருமை.
மறைந்த தக்ஷணாமூர்த்தி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு ('ஆண்டவனில்லலா உலகமிது..ஐலசா')
வாணி ஜெயராம், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பற்றிய கட்டுரைகள்.
தெலுங்கு திரையுலகத்தைப்பற்றி முழுக்க எழுதியிருப்பார் 'இப்படியும் ஒரு பெண்ணா' என்ற தலைப்பில் பானுமதி ராமகிருஷ்ணா பற்றிய பதிவில்..
GK வெங்கடேஷ் ('தொடுவதென்ன தென்றலோ மலர்களோ..') பற்றிய இவரது பதிவு மனதை கனக்கச்செய்யும். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அவரது திரையுலக வாழ்க்கை வரலாற்றை வரிக்கு வரி ரசிக்கும்படி எழுதியிருப்பார். அவரது தமிழ், கன்னட, தெலுங்குப்பட பாடல்களை அத்தனையும் வரிசைப்படுத்தி கடைசி காலங்களில் அவர் பட்ட கஷ்டங்களை குறிப்பிட்டு கடைசியில் அவரிடமே பணியாற்றிய இளையராஜாவின் உதவியை பெற்று, பிறகு அவர் மறைந்ததை இவர் 'காலம் வந்தது.. கதை முடிந்தது.. போகிறேன்' என அவரது பாடல் வரிகளுடன் முடித்த அந்த பதிவை நாம் நீண்ட பெருமூச்சுடன் தான் படித்து முடிப்போம்.
நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar இவரைப்பற்றி எழுதிய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது:
"ம‌க்க‌ளைச் ச‌ற்று நேர‌மாவது, அவ‌ர்க‌ளின் க‌வ‌லைக‌ளை ம‌ற‌ந்து ம‌கிழ்வுற‌ச் செய்த‌ சிறிய, பெரிய‌ க‌லைஞ‌ர்க‌ளையும் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ளின் வாழ்வில் பின்னிப்பிணைந்த‌ திரைப் பாட‌ல்க‌ளையும் அத‌ற்கு பின் இருந்த‌ முக‌ம் தெரியாத‌ க‌லைஞ‌ர்க‌ளையும் இன்றும் நினைவில் நிறுத்தும் திரு-----ஐ தாராபுர‌ம் சுந்த‌ர்ராஜ‌னும், கோவை சௌந்த‌ர்ராஜ‌னும் நிச்ச‌ய‌ம் மேலுல‌கிலிருந்து வாழ்த்துவார்க‌ள்".
பி.கு:
அது சரி...யார் இவர்? ஐம்பதுகளில் நடந்த சினிமா செய்திகளையும், நாம் கேள்விப்பட்டிராத வடநாட்டு திரையுலக ஜாம்பவான் நிமாய் கோஷ் அவர்கள் பற்றியும் இன்று எழுதும் இவருக்கு சுமார் 60 வயதாவது இருக்கலாம் என எல்லோரும் நினைக்கலாம். மன்னிக்கவும். சின்னப்பையனாட்டம் இருக்கிறார் சார்.. வயது 40ஐக்கூட எட்டியிருக்க முடியாதென்பது என் ஊகம்.
பள்ளியில் ஹிந்திப்பாடம் மட்டுமே எடுத்த இவர் தமிழில் சுமாராகவே எழுதமுடியுமென்பதால் திரையுலகம் பற்றிய பதிவுகள் அனைத்தையும் அருமையான ஆங்கில நடையில் எழுதுபவர். இவரது ஆங்கிலப்புலமை மற்றும் எழுத்தின் ஆளுமை பற்றி பாராட்ட வார்த்தைகளில்லை. தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் இசையமைப்பாளர்கள் மற்றும் தெலுங்கு, ஹிந்தி, மலையாள திரையுலக புள்ளிகள் பற்றிய தகவல்களும் ஏராளமாக வைத்திருப்பவர். அவர்களை அவ்வப்போது நேரிலும் சந்தித்து அச்சந்திப்பைப்பற்றி விரிவாக எழுதுவார். சில பிரபலங்கள் தங்களைப்பற்றிய அரிய தகவல்கள் வைத்திருக்கும் இவரையே சந்திக்க விரும்புகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Dhool.com இல் சில வருடங்கள் திருச்செந்துரை ராமமூர்த்தி சங்கருடன் சேர்ந்து சினிமா பற்றி நிறைய கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவர். இவரது பெற்றோருக்கே இவர்Dhool.com இல் எழுதிக்கொண்டிருப்பது நண்பர்கள் மூலம் தான் தெரிந்ததாம். 1963இல் கிண்டி இஞ்சினியரிங் கல்லூரியில் படித்த இவரது தந்தை Bala Natarajan னின் நண்பர் பசுபதி (கனடா)கூறியது: 'தமிழ் திரைப்பாடல்கள் பற்றிய தரமான கட்டுரைகளை படிக்க விரும்புவோர் அவசியம் இவர் எழுதும்Dhool.com வலைதளத்தை பார்க்கலாம்.'
இவர் ஒரு சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் . உலகமெங்கும் பரவி வெற்றிகரமாக இயங்கும் ஜெம் கல்வி நிறுவனத்தின் தலைமை தணிக்கையாளர் (Chief Internal Auditor).
சென்ற வாரம் நான் துபாய் வந்திருப்பதாக இவருக்கு தெரியப்படுத்தியதும் உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மறுநாளே சந்திப்பதாக முடிவு செய்தோம். இரண்டு நாட்கள் முழுக்க எனக்கு அலுவல் சம்மந்தப்பட்ட மீட்டிங்குகள் இருந்தாலும், துபாயின் ஒரு கோடியில் ஜுமேய்ரா பகுதியின் பா(ல்)ம் தீவில் நான் தங்கியிருந்த அட்லான்டிஸ் ஹோட்டலுக்கே 45 நிமிட கார் பயணம் செய்து வந்துவிட்டார். 30 நிமிடங்கள் போதுமென முடிவு செய்திருந்த எங்கள் சந்திப்பு ஒரு மணி நேரத்தைத்தாண்டவே, ஐந்தாவது மாடியறையிலிருந்து கடல்அலைகளை பார்த்துக்கொண்டு நேரம் போவது தெரியாமல் போய்க்கொண்டிருந்த எங்கள் பேச்சை சட்டென முடித்துக்கொண்டோம். பிரிய மனமில்லாமல் காரிடரிலும் சிறிது நேரம் பேச்சு.. எதிரே வந்த பிலிப்பினோ இளம்பெண் உதவியுடன் எங்கள் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு , லவுஞ்ஜ் வரை பேசிக்கொண்டே நடந்து, பின் கட்டியனைத்து விடை பெற்று, அவர் கார் பார்க்கிங் பக்கமும் நான் திரும்ப மீட்டிங் ஹால் பக்கமும் ஓடினோம்.
நன்றி..நன்றி..நன்றி Saravanan Natarajan

வெங்கடேஷ்

'நான் பர்துபாய் வந்தாச்சு..மாஷ்ரெக் பாங்க் முன்னால நிக்கிறேன்' என போனில் சொன்ன அடுத்த ஆறேழு நிமிடங்களில் என் முன் வந்து காரை நிறுத்தினார் நண்பர் Sankaranarayanan Venkatesh . தேசிய விருது பெற்ற 'தங்க மீன்கள்' சாதனா இவரது மகள்.
நான் துபாய் வந்ததை முகநூலில் பார்த்தவுடன் தனது அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது வேண்டுமானாலும் ஹோட்டலுக்கு வந்து என்னை தனது இல்லத்திற்கு கூட்டிப்போவதாக தெரிவித்திருந்தார். 'தலைவரே! வைஃப் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும். நாம அதுக்குள்ளார மசாலா சாய் குடிக்கலாமா?' என கேட்டு வ்ருட்டென்று துபாய் குறுக்கு சந்து ஒன்றில் புகுந்து 'பாம்பே ட்ரீட்ஸ்'முன் வண்டியை நிறுத்தி சாபுதானா வடா, பஞ்சாபி சமோசா மற்றும் மசாலா சாய் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
டீயைக்குடித்துக்கொண்டே வரவேற்பறையை நோட்டம் விட்டேன். கண்ணாடி அலமாரி முழுவதும் நிறைந்திருந்தது. தேசிய விருது, ஏகப்பட்ட மற்ற விருதுகள், சான்றிதழ்கள், புகைப்படங்கள். சென்னையிலும் நிறைய தொண்டு நிறுவனங்களின் விருதுகள். பாடல், ஆடல், வாத்தியஇசை(வீணை), நடிப்பு, படிப்பு என சகலகலாவல்லி சாதனா. துபாய் அரசின் ஹம்தான் விருதிற்கும் விண்ணப்பம் செய்யவிருக்கிறார்கள். மூத்தவள் சஹானாவும் ஆடல் பாடல் படிப்பு என எல்லா துறைகளிலும் திறமைசாலி.
இரண்டு வருடங்கள் முன் பஹ்ரைனில் கலைமாமணி ஜாகிர் ஹுசேன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் வெங்கடேஷை முதன்முதலில் சந்தித்தேன். இரண்டு மணி நேரம் எல்லோரையும் மெய்மறக்கச்செய்த அந்த நிகழ்ச்சிக்கு நட்டுவாங்கம் இவரது மனைவி லக்ஷ்மி வெங்கடேஷ் தான். திரு. ஜாகிர் ஹுசேன் அவர்களின் சிஷ்யை. பரதக்கலைஞர் மற்றும் பாடகி...துபாய் மற்றும் மற்ற நாடுகளில் நிறைய நிகழ்ச்சிகள் செய்பவர்.
தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக தனது சொந்த நிறுவனம் ஒன்றை துபாயில் நடத்தும் வெங்கடேஷ் பழக இனியமையான மனிதர். தனது நிறுவனத்தை பார்த்துக்கொண்டே குழந்தைகளின் நிகழ்ச்சிகளுக்காக ஓடிக்கொண்டும் மனைவியின் பரதம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்துகொண்டும், காரை கர்நாடக இசையை ரசித்தபடி செலுத்திக்கொண்டும், நடுவே 'பாம்பே ட்ரீட்ஸ்' மசாலா சாய்...மனுஷன் பிசியோ பிசி.
அங்கிருந்து கிளம்பி Kannan Nagarajan வீடு வந்து சேர்ந்தோம். கண்ணனின் மகன் அபியின் பிறந்தநாளுக்கு வேண்டிய அலங்காரங்களை அவனுக்கு தெரியாமல் இரண்டே மணி நேரத்தில் சஹானா, சாதனா மற்றும் அனு மூவரும் செய்து, கேக் வெட்டி, பிட்ஸா சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
கண்ணனின் மனைவி ஜானகி தயார் செய்த தோசை, காரகுழம்பு, கார்ன் சூப் எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு, திரும்ப விமான நிலையத்திற்கு தனது காரிலேயே வந்து விடுவதாகச்சொன்ன வெங்கடேஷிடம் அன்போடு மறுத்துவிட்டு டாக்சி பிடித்து ஏர்போர்ட் வந்து சேர்ந்தபோது மணி 8.15. ஆன்லைன் செக்கின் செய்திருந்ததால் அடுத்த சில நிமிடங்களில் விமானத்திற்குள் ஏறி அமர்வதற்குள் வெங்கடேஷிடமிருந்து போன்..'தலைவரே! டாக்ஸி கெடைச்சதா? போய்ட்டீங்களா?'
என்ன அருமையான ஜனங்கள்! இறைவனுக்கு நன்றி..