Saturday, May 18, 2013

சட்டினியும் சிலோன் ரேடியோவும்


காலை 8 மணிக்கு சோம்பல் முறித்து படுக்கையில் இருந்து எழலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கும்போது, ஹாலில் அப்பா சத்தமாக சிலோன் ரேடியோ போட்டுவிடுவார். C.A . இன்டர்மீடியட் முடிந்து ஆர்டிகிள்சும் முடிந்து பைனலுக்கு   படித்துக்கொண்டிருக்கும் நேரம்..
சமையல்கட்டில் அடுப்பில் இட்டிலி. அம்மா சட்டினி அரைத்துக்கொண்டிருந்தார்கள். சட்டினி என்றால் ஏதோ சுமீத் மிக்சியில் என நினைக்க வேண்டாம். அம்மியில் தேங்கா சில்லு.. குழவியால் இரு புறமும் மாறி மாறி நச் நச்சென்று தேங்கா சில்லை சப்பையாக்கி சர் சர்ரென்று அரைக்கும்போது பொட்டு கடலை, . மிளகாய், புளி எல்லாம் கதறியபடி விழுதாகி விடும்.செங்குத்தாக  குழவியை நிறுத்தி நொடியில் அதை நிர்வாணமாக்கி அம்மியில் உள்ள சட்டினி விழுதை பாத்திரத்துக்கு மாற்றி, தாளித்து  சுருண்ட கருவேப்பிலை சகிதம் கடுகு .பருப்பு  கமகமவென மனத்துடன் தேங்கா சட்டினி ரெடி.
ஒரு நாள் . மிளகாய் என்றால் மறுநாள்  வரமிளகாயில் தேங்கா சட்டினி... மற்றொரு நாள் பச்சை கொ.மல்லி போட்டு... இப்படி தினமும் விதவிதமான சட்டினி வீட்டில்..
அதை சாப்பிடும் விதம் எங்கள் வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி..
சன்னமாகவும் இல்லாமல் திக்காகவும் இல்லாமல் அம்மா வார்க்கும் தோசையை ( சன்னமாக/திக்காக என்று தோசையை சொன்னேன் .. அம்மாவை அல்ல)
அம்மாவுக்கு அப்போது 55 வயதிருக்கும்.. அம்மியில் சட்டினி அரைக்க போதிய பலமிருந்தது.
தோசைக்கு வருவோம்..
என் தம்பி ரவி தோசையை பக்கவாட்டில் இருந்து பிய்த்து சட்டினி மேல் பரப்பி மடித்து வாயில்...
என் அக்கா இட்டிலி விள்ளலை சட்டினி மேல் போட்டு உருட்டி லேசாக பிசைந்து மறுபடியும் உருட்டி பிறகு  வாயில்..(ஒரு கிண்ணம் சட்டினி அவளுக்கு போதாது)  
என் அப்பா ஏதோ 'இட்டிலிக்கும் சட்டினிக்கும் சண்ட வந்துச்சாம்' போக்கில் பேருக்கு தொட்டுக்கொண்டு  ஒரு fiduciary relation  கொடுப்பார்.  
முக்காவாசி நேரம் அம்மா கடைசியாக சாப்பிடும்போது அநேகமாக சட்டினி காலி... மிளகாய் பொடி தான்.
ஹாலுக்கு வருவோம்..
அப்பா அலமாரியில்  பழைய மர்பி ரேடியோ வைத்திருப்பார். அதற்க்கு எர்த் கொடுக்க ஒரு சிறிய  கண்ணாடி கிளாசில் தண்ணீர் ஊற்றி ஒரு ஒயரை நட்டு வைத்திருப்பார்.ரேடியோவில் உருப்படியாக ஒரு ஒளிபரப்பை கேட்கமாட்டார்.   அதன் முன் நின்றுகொண்டு மாறி மாறி எல்லா ஒளிபரப்புகளையும் மாற்றி மாற்றி கேட்பார்.    
நானும் தம்பி ரவியும் ஹாலுக்கு வந்ததும் சிலோன் ரேடியோவுக்கு மாற்றிவிடுவார்.
தம்பி ரவியைப்பற்றி ... திருச்சி நேஷனல் மாலை கல்லூரி..B .Com மற்றும் ICWA வேறு.. நம்மைப்போல அவனும் வெட்டி தான்....ஏன் என்று ஒரு வார்த்தை அப்பா கேட்கமாட்டார்.அவர் சட்டையில் வெறும் 10 ருபாய் இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு நானும் ரவியும் மன்னார்புரம் வெங்கடேஸ்வரா தியேட்டரில் 'பலே பாண்டியா' போவோம் (ரேய் ...ரேய்..ஒத்துரா.. என்று அவர் கத்துவது தூரத்தில் கேட்கும்)
எங்கே விட்டேன்? ஹாங்... சிலோன் ரேடியோ...    
இலங்கை ஒலிபரப்பு வர்த்தக சேவை என காலையில் தொடங்கி முழு நாளும் (மாலையில் செய்திகள் வாசிப்பது செல்வராஜ், பொன்னருவி, jaroka,மற்றும் இரு விவிதபாரதி தவிர) வீட்டில் ரேடியோதான் ..
'பிறந்த நாள் ... இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகளெல்லாம் மறந்த நாள்'.... TMS இன் கணீர் குரல்.. அனேகம்பேருக்கு  அது எந்த படப்பாடல்  என்று தெரியாது
'உறவு என்ற வானத்திலே நாம் பறவையாகலாம்... உள்ளம் என்ற தோட்டத்திலே நாம் மலர்களாகலாம்' என்று நாம் மூவர் படத்தில் TMS ஜெய் சங்கருக்கு பாடியிருப்பார்  ..
'மாத்தளையிலிருந்து அக்கா, அக்கக்கா... நுவரெலியாவிலிருந்து அப்பா, அப்பப்பா, வவுனியாவிலிருந்து மதனி', என்று விதவிதமான உறவுக்காரர்கள் விரும்பிக்கேட்ட பாடல்கள்..
சிலோன் ரேடியோவில் மட்டும் தான் சில பாடல்களை கேட்க முடியும். விவிதபாரதிக்காரர்களுக்கு அப்படி ஒரு பாட்டு இருப்பதே தெரியாதென நினைக்கிறேன்...
உதாரணத்திற்கு சில:
1)முத்தமா.... கை முத்தமா... (TMS சுசிலா... படம்: விளக்கேற்றி வைத்தவள்)
2)இல் வாழ்வினிலே ஒளி  ஏற்றும் தீபமாய் (பராசக்தி: TS பகவதி, MH ஹுசைன்
3)குளிர்ந்திடும் ஓடையெல்லாம் தேனருவி கண்டதனால்.. (TMS... படம் நினைவிலில்லை)
4)ஜிகு  ஜிகு ஜிகு ஜீயாலக்கடி ஜியாலோ (காத்தவராயன்: சந்திரபாபு, ஜிக்கி)
5) வெண்ணிலா .. வெண்ணிலாவண்ண பூச்சூடவா ..வெண்ணிலா (ராணி சம்யுக்தா : TMS )
6) கொக்கர கொக்கரகோ சேவலே... (TMS , ஜிக்கி... 'இரும்புத்திரை' என்று நினைக்கிறேன் )        
விவிதபாரதிக்காரர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு முறை மன்னாதி மன்னன்  சுசிலாவின் 'கண்கள் இரண்டும் இன்று உன்னைக்கண்டு' போட்டுவிடவேண்டும்..
'நீயா' படம் சூப்பர் ஹிட் ஆனதே  நம் KS .ராஜாவினால்தான்...
'நீங்க யாரு' என்று ராஜாவே கேட்பார் பதிலுக்கு ஏதோ படத்திலிருந்து 'ராஜா' என்று வசனம் வரும்.
லலிதாவின் பாட்டுக்கு பாட்டு... அடக்கமான ஆண் குரலில் அப்துல் ஹமீது.    
'வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே.... ஏனோ அவசரமோ'  ..பாடலில் 'ஏனோ' வுக்கு பதில் 'ஏதோ' என்று சொல்லி விட்டதால் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள் ... தோல்வியை  ஒப்புக்கொள்கிறீர்களா? (மனுஷனுக்கு பழைய பாடல்கள் அத்துப்படி)
மதியத்தில் 'ஹிந்திபாடல்கள்'.. என்று அறிவித்தவுடன்     ஷம்மி கபூர், ராஜ் கபூர்.பாடல்கள்..
ஜாபான்..(ஜப்பான் அல்ல)  லே கை தில்…. குடியா .. ஜா..பானுக்கி..பாகல் முஜே கர்தியா..
பிறகு விளையாட்டு செய்திகள்..(மாத்தளை திடலில் கைப்பந்துப்போட்டி..)
அடுத்து வருவது,.. நித்தி கனகரத்தினம் ...பொப்பிசைப்பாடல்கள்...
சின்ன   மாமியே உன் சின்ன  மகளெங்கே . .பள்ளிக்கு தான் சென்றாள்  படிக்க சென்றாளோ.. .
(நம்ம ஊர் 'நித்தி' சின்ன மகளை நிஜமாகவே தேடுவார்….வேணாம் வம்பு சார்...)  ..
பாட்டி வடை நரி பாடல்... (கடைசியில்  இது   இலங்கைக்காகம் என சொல்லி வடையோடு காகம் பறந்துவிடும்) .   ,
ராஜேஸ்வரி சண்முகமோ சச்சிதானந்தமோ ..  , புவனசுந்தரி, என்ற விதவிதமான அறிவிப்பாளர்கள்.. . .   
பொங்கும் பூம்புனல்... மறுபடியும் பழைய பாடல்கள்...
இரவு 10 மணிக்கு 'இரவின் மடியில்'....
அன்னை இல்லம்... மடிமீது தலை வைத்து விடியும் வரை தூக்கமோ... 
இதயக்கமலம்... மலர்கள் நனைந்தன பனியாலே...
போலீஸ்காரன்  மகள்... பொன்னென்பேன்.. சிறு பூவென்பேன்...
கற்பகம் ... உன்னைக்காணாத  கண்ணும் கண்ணல்ல ...
மாறியது நெஞ்சம் ...மாற்றியது யாரோ  ( . பா)
ஜானகியின் 'தூக்கமுன்  கண்களை தழுவட்டுமே' ....
ஆயிற்று.... 30 வருடங்கள்...
சட்டினியும் சிலோன்  ரேடியோவும் இன்னும் மறக்க   முடியவில்லை...
ரேடியோவை விடுங்கள்... போய் விட்டது.. ஆனால் அந்த சட்டினி இன்னமும் திருச்சி போனால் அம்மாவிடம் கிடைக்கிறது.. அதே சுவை... அதைவிட மிகுந்த அன்புடன்.. 
.

Friday, April 19, 2013

கணபதி அக்ரஹாரம்


பால்ய நண்பன் கணபதி நான் திருச்சி வந்தது தெரிந்து சென்னையில் இருந்து டெலிபோன் செய்து தஞ்சாவூர் வந்துவிடும்படி சொன்னான்.உடனே பஸ் பிடித்து தஞ்சாவூர் கிளம்பினேன்
தஞ்சையில் இருந்து 15 கி.மி. தொலைவில் திருவையாறுக்கு அருகில் 'கணபதி அக்ரஹாரம்' என்றொரு சிறிய கிராமம்.
செல்போன் அலறியது “ஸ்ரீதரா! எங்கடா இருக்கே? நா அரியலூர் கிட்ட வந்துட்டேன்.. குமரேசன் டாக்ஸி வெச்சுண்டு அங்க வெயிட் பண்றான்."கணபதிக்கு எல்லாமே அப்டு டேட்டா இருக்கனும்.  
நான் தஞ்சாவூர் இறங்கி அய்யம்பேட்டை பஸ் பிடித்தேன். கூட்டம் குறைவு. 'ஊரு சனம் தூங்கிடுச்சு.. ஊத கத்து அடிச்சிருச்சு' பாட்டு பஸ்ஸில் கேட்க இதமாக இருந்தது.( அவ்வளவு  சவுண்டு தேவையா?) கண்டக்டர் கத்தியது யாருக்குமே கேட்கவில்லை "யாருக்காவது சில்ற பாக்கியா?"  ம்ம்ஹும்..அநேகமாக எல்லோர் கையிலும் நோக்கியா.. கிராமத்து மக்கள் கைத்தொலைபேசியில்  பேசும் அழகே தனி.. "அளகேசா! ஆபரேசன் முடுஞ்சுதா? மயக்கங்குடுத்து தானே செஞ்சாக?..போன்ல பணத்த ஏத்தல. பொறவு பேசறேன்.." கிரெடிட் இல்லாதலால் மிகச்சுருக்கமாக பேசிய பெருசு கையில் சிறிய கருப்பான அழகிய நோக்கியா..SMS, CAMERA,GALLERY என்று சகட்டுமேனிக்கு அவர் பார்த்துக்கொண்டிருந்தது, ஐபோன் வைத்திருக்கும் எனக்கு கூச்சமாக இருந்தது.
மெயின் ரோட்டில் இறங்கி மஹாகணபதி கோவிலை  அடையும்போது நண்பன் கணபதி வந்து சேர்ந்திருந்தான். வீதிக்கு 50 வீடு வீதம் மொத்தம் 3 வீதி தான். சிவன் கோவில், பெருமாள் கோவில் மற்றும் மெயின் ரோட்டில் பெரிய மஹாகணபதி கோவில். திண்ணை, முத்தம், ரேழி, பட்டாசாலை, புழக்கடை சகிதத்துடன் நீண்ட வீடுகள். தினம் 8 மணி நேரம் மின் துண்டிப்பு இருப்பதற்கு அறிகுறியாய் பெருமாள் கோவிலில் இருந்து வருபவர்கள் எல்லோர் கையிலும் விசிறி..வெற்றுடம்பு..  ('உத்தமன் பேர்பாடி' ஜோக் நினைவுக்கு வந்தது).  அது அவர்களது சொந்த ஊர். கணபதியின் அப்பா G.K. ராமமூர்த்தி அங்கே நிலங்கள் வைத்திருந்தார். தானமாகவோ அடிமாட்டு விலைக்கோ நிலத்தை அங்கிருப்பவற்கு கொடுத்து விட்டு வீட்டை மட்டும் வைத்துகொண்டார். பிறகு திருச்சி பொன்மலை ரயில்வேயில் உத்தியோகம்  .. அவர் போன பின் கணபதிக்கு ஊரில் நல்ல மரியாதை. சில பேருக்கு பஹ்ரைனில் வேலை வாங்கி கொடுப்பதும், சிலருக்கு பண உதவி செய்வதும், குருக்கள் ஒருவரை காசி, கயா கூட்டிபோனதாலும், கோவிலுக்கு நிறைய நன்கொடை கொடுப்பதாலும், சென்ற வருடம் கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தியதாலும், அவனுக்கு அங்கே ராஜ மரியாதை.                 போனதும் தொண்டைக்கு இதமாக பானாகமும், நீர் மோரும் கொடுத்தார்கள். பிறகு நேரே மகா கணபதிக்கு வெகு அருகே அமர்ந்து பூஜை, முதல் மரியாதை சகிதம் அர்ச்சனை முடிந்து வெளியே வந்தோம். குருக்கள் வீடு பெருமாள் கோவில் தாண்டி நடக்கும் தூரம் தான். இரண்டு பொட்டலங்களில் 'மொதக்' (எண்ணையில் பொரித்த தேங்கா கொழுக்கட்டை)  கொடுத்தார்கள். வாசலில் பச்சை இளநீர் வெட்டி கொடுத்தார்கள். அங்கிருந்து நேராக சிவன் கோவில். குருக்களின் பையன் கார்த்திக் நம்மை வரவேற்று அர்ச்சனை செய்து தொன்னையில் சூடாக கோதுமை நெய்  உப்புமா கொடுத்தார். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பும் முன்  முன் கார் டிக்கியில் ஒரு மூட்டை நிறைய உரித்த தேங்காய், முருங்கைக்காய் வைக்கப்பட்டது.
அடுத்த ஒரு மணி நேரம் காரில் பயணம். அம்பாசிடர் கார் மிகவும் வசதியானது. பின் பக்கம் சம்மணமிட்டு உட்கார வசதி, முதல் 15 நிமிடம் முன்சீட்டில் இருந்த குமரேசனுடன் ஸ்டாலின்-அழகிரி பிரச்னை, கலைஞர் குடும்ப அரசியல், 16 மணி நேர மின் வெட்டு... விவாதித்து விட்டு,  கணபதியுடன், என் அம்மாவின் உடல் நிலை, கணபதியின் பஹ்ரைன் நண்பர்கள், அவன் மகன் விக்னேஷ் I .I .T. படிப்பு முடிந்து அமெரிக்கா செல்வது, நானும் கணபதியும் சேர்ந்து C .A  படித்த நாட்கள், அதே போல் தற்போது சென்னையில் அவனது இளைய மகனுடன் சேர்ந்து  C .A  படிக்கும் எனது மூத்த மகன் என்று நிறைய பேசினோம். வெளியே திருவையாறு, உமையாள்புரம், பாபநாசம் என்று ஒவ்வொரு ஊரும் இருட்டில் தெரிந்தது. கும்பகோணம் தாண்டியதும் 'ராஜு.. டிகாஷன் போட்ரு' என்று கணபதி போனில் அக்காவிடம் தெரிவித்து 10 நிமிடத்தில் கோவிந்தபுரம் வந்து சேர மணி இரவு 10 தாண்டியது. கோசாலை வந்து சேர்ந்தோம். .. மிக பிரம்மாண்டமான (வட நாட்டு கோவிலை நினைவு படுத்தும்) கோவில்  தாண்டி உள்ளே கணபதியின் அக்கா தங்கியிருக்கும்  காட்டேஜ் வந்தோம். மும்பை முலுண்ட் பகுதியில் அவர்கள் குடியிருந்தபோதே பல முறை அவர்கள் வீடு போயிருக்கின்றேன். காட்டேஜின் எதிரே கொட்டகையில் 500கும் மேலான பசு மாடுகள். மதுராவில் இருந்து நிறைய பசு மாடுகள் வந்து சேர்ந்தனவாம். பராமரிக்க பண உதவி மிகவும் தேவைப்படுகிறதாம்.  எங்களை வரவேற்று 5 நிமிடம் பேசியவுடன் சுடச்சுட ரவா தோசை தேங்கா சட்னி..பிறகு சூப்பரான பில்டர் காபி…அந்நேரத்தில் பசிக்கு அமிர்தமாக இருந்தது. சரியாக 10.30 க்கு அங்கிருந்து கிளம்பினோம்.               நேரே கும்பகோணம் பஸ் நிலையம். கணபதியிடம் விடை பெற்றுக்கொண்டேன். "புள்ளையார வேண்டிக்கோடா... எல்லாம் சரியாப்போய்டும்.. வருஷப்பிறப்புக்கு நாம மீட் பண்ணுவோம்னு எதிர்பாகவே இல்ல.."                                                              கணபதியுடன் இருந்த அந்த 5 மணி நேரம் போதும்.. ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி இருந்தது. கடந்த 33 வருட நட்பு, சேர்ந்து இருந்த 5 வருட பாம்பே வாழ்க்கை, தான் பஹ்ரைன் வந்து என்னையும் சேர்த்துகொண்டது, எங்களின்12 வருட பஹ்ரைன் நாட்கள்...    பஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த  திருச்சி பஸ்ஸை நிறுத்தி ஏறி அமர்ந்தேன். கடந்த 15 நாட்களின் நிகழ்வுகளை அசை போட்டுக்கொண்டு அடுத்த இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.
82 வயதில் அம்மாவிற்கு திடீரென்று  (35, 40 வயது பெண்களுக்கு வரும்) உடல் உபாதை, கர்ப்பப்பை கட்டி, oncology ரிப்போர்ட், புற்று நோய், histrectomy, இத்யாதி ….     " இந்த வயசுக்கு சர்ஜரி ரொம்ப ரிஸ்க் தான் சார்.. ஆனா பாட்டி தைரியமா இருக்காங்க.. சான்சு எடுக்கலாம்.." என்று 10 நாட்கள் உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூக்கமில்லாமல் கூட இருந்து உதவிய என் அக்கா, அவளது கணவர் டாக்டர் மனோகர், கொஞ்சமும் பயமே இல்லாமல் சிரித்த  முகத்துடனே மரணத்தை எட்டிப்பார்த்து மறுவாழ்வு பெற்ற என் அம்மா... கடந்த 15 நாட்கள்  ATM,வங்கி, பார்மசி, ஆபரேசன் தியேட்டர், வார்டு,  என்று ஒரு புது உலகத்தில் இருந்து விட்டு, 16 வது நாள் வருஷபபிறப்பன்று அன்று பால்ய நண்பனுடன்  தஞ்சாவூர் கணபதி அக்ரஹாரம் மகா கணபதியை தரிசித்ததும்  உடம்பிலும் மனத்திலும்  ஒரு  புதிய சக்தி கிடைத்த மாதிரி இருந்தது.
மணி காலை 1.15.. பஸ் திருச்சி ஜமால் முகமது கல்லூரி டோல்கேட் ஸ்டாப்பில் நின்றதும் இறங்கினேன். வெளியே தூறல் நின்றிருந்தது (உள்ளேயும் தான்)
நாளை மறுபடியும் பஹ்ரைன் சென்று 10 நாளில்  திருச்சி வரவேண்டும்..அம்மாவிற்கு அடுத்து  ரேடியேஷன் தெரபி செய்ய வேண்டுமாம்..           ,            

Saturday, February 2, 2013

ஏம்ப்பா! நீதான் நல்லா படம் எடுப்பியே! சும்மா ஜாலியா தெனாலி, பஞ்சதந்திரம், மைகேல் மதனகாமராஜன்..ன்னுட்டு எல்லாரையும் காமெடியால சிரிக்க வெச்சுட்டு, நல்ல டூயட் சீன் காமிச்சிகிட்டு, உனக்கு புடிச்ச (மத்த ஹீரோவெல்லாம் தயங்குவாங்க) 'முத்த காட்சி அது இதுன்னு உன் ரசிகர்களுக்கு வேண்டியது நெறையா இருக்கேப்பா!
நீ நல்லவனாச்செப்பா! அத வுட்டுப்புட்டு என்னாத்துக்கு இந்த வம்புதும்புக்கு போறே?
ஜாதி, மதம் பத்தி நீ வாய தொரந்தாவே ஒன்னுகெடக்க ஒன்ன சொல்லி நல்லா வாங்கி கட்டியும் இன்னம் புத்தி வரலையா?
புதுசா ஊரவுட்டு வேற ஓடிப்போவேன்னு பூச்சி காட்டறே!
தம்பி வேணாம்ப்பா! மகாநதி மாதிரி மெசேஜ் சொல்லு போதும்... வயசு வேற ஏறிகிட்டே போகுது... முணுக்குன்னு கோபம் வேற வந்துருது..
உன்ன எல்லாரும் திட்டுனா மனசுக்கு கஷ்டமாக்கீதுபா..
அவனப்பாரு (ரஜினி).... அவனும் உன்னமாதிரி தான் ரசிகர்களுக்கு தேவையானமாதிரி படம் எடுத்து,சின்னபொண்னுங்களோட டான்ஸ் ஆடறான்..நல்ல மெசேஜ் சொல்லி காசும் பண்றான்.சும்மா அரசியல், இமயமல அது இதுன்னு சொல்லி அங்க இங்க போயி,கப்புன்னு கொயட்டாயி, தானுண்டு தன வேலையுண்டுன்னு இருக்கான். 
போரும்பா... எங்கயும் ஓடிப்போகாம உள்ளூர்லேயே இரு..மத்தவங்க மனசுக்கு புண்படற சீன எடுத்துட்டு, சாமி, சிலுவை,ஜாதி பத்தி வாய் தறக்காம ஒடம்ப பாத்துகிட்டு ஆஸ்கர் வாங்கற வேலையப்பாரு.... சும்மா வம்ப வெலைக்கி வாங்கிகிட்டு....திருந்துப்பா..

Thursday, January 31, 2013

சினிமா தியேட்டர்


எல்லா அம்மாக்களும் இப்படித்தான் சினிமாவுக்கு கூட்டிப்போகாமல் படுத்தியிருக்கிறார்களா......
பாதி நாட்கள் நானும் என் தம்பியும் தென்னூர் பாப்பு செட்டி தெருவில் ஆரம்பித்து அம்மா மற்றும் சித்தி பின்னாலேயே(சினிமாவுக்கு கூட்டிப்போக ) கெஞ்சிக்கொண்டே போவோம். தென்னூர் வண்டி ஸ்டாண்டு,அக்ரஹாரம், ஹிந்தி ப்ரசாரசபா,ரயில்வே கிராஸ் வழியாக போய் ராமகிருஷ்ணா தியேட்டர் அல்லது ஜுபிடர் அல்லது பேலஸ் தியேட்டர் போய் டிக்கெட் வாங்கி இரக்கமே இல்லாமல் எங்களை விட்டு விட்டு பல்லாண்டு வாழ்க,மீனவ நண்பன்,உழைக்கும் கரங்கள் போன்ற திராவ படங்களுக்கு அவர்கள் போனதும் நாங்கள் வந்த வழியே திரும்பும் போது கோவிந்தராஜ் கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஏதோ ஆர்க்கெஸ்ட்ரா பார்த்து விட்டு அமிருதீன் ஆஸ்பிடல் அருகே உள்ள மைதானத்திர்க்கு போவோம்.பெரிய கூட்டத்திற்கு நடுவே ஒருவன் தரையில் படித்திருப்பான்(வாயில் நுரை) இன்னொருவன் 'அய்யாமாருங்க..அப்பாமாருங்க...இந்த ஒடம்பு இப்போ 4 அடி மேலே போகும்...எல்லாம் இந்த வாய்க்கு ..வயித்துக்குத்தான்' என்று சொல்வான். அது எதற்கு இருந்தாலும் சரியென்று நாங்களும (1 மணி நேரத்திற்கு மேல்) அவன் கீழே படுத்திருப்பவன் மேல் துணிகளை போட்டு மூடி கையை உயர்த்தினால் அந்த உடல் 3 அடிக்கு (மெய்யாலுமே) உயர்ந்ததை பார்த்து விட்டு தான் கிளம்புவோம்.(பாதியில் எழுந்து போனால் பேதியில் போகுமென்று வேறு பயமுறுத்தியிருக்கிறான்)
ஒருவழியாக இதெல்லாம் முடிந்து இருட்டும் நேரம் வீடு திரும்பினால் வாசலில் அம்மா(மீனவ நண்பன் முடிந்து). அப்புறமென்ன... 'பளார்' தான்

தியேட்டரில் படம் பார்க்கும் போதே என்ன பதார்த்தங்கள் சாப்பிடலாம் என்ற கட்டுப்பாடு எங்கள் வீட்டில் இருந்ததுண்டு. அதாவது கடலை மிட்டாய் SAFE என்று அவர்கள் நினைக்க, நாங்கள் பீடா (கலர் தேங்காய் தூள் தூவியது) வாங்கினால், 'காசுனி வேஸ்ட் சேஸ்திவேரா ' என்று சொல்லி நடு தொடையில் கன்னிப்போகும் அளவிற்கு ஒரு non stop கிள்ளு. அதை நிறுத்த ஒரே வழி எனக்கும் என் தம்பிக்கும் தெரியும். அந்த பட இண்டர்வல்லில் (வலி இல்லையென்றாலும்) 'லேது..லேது .. ஒத்து...' என்று காட்டுக்கத்தல் போடுவோம்.எல்லோரும் பார்க்கிறார்கள் என்று வெட்கப்பட்டு அம்மா (நுவ்வு இன்டிக்கி ரா.. என்று சன்னமாக மிரட்டி) விட்டுவிடுவார்கள்.
முக்கோண காய்கறி சமோசா, 8 track முறுக்கு,முட்டைகோசு வடை(பிளாசா தியேட்டரில் மட்டும்),டிர்ரிங்க் என்று சாவியால் ஒலிஎழுப்பியபடி காளி மார்க் கலர் , இதெல்லாமல் சாப்பிடாமல் தமிழ் படமா?( அப்போது எங்களுக்கு MGR ராதா சலூஜாவை கல்யாணம் செய்தால் என்ன,செய்யாட்டி என்ன